அகநானூறு வினை உவமையில் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்கவர்கள்

ம.காயத்ரி, முனைவர் பட்ட ஆய்வாளர், என்.ஜி.எம், கல்லூரி, பொள்ளாச்சி.

புலவர்கள் தாம் கூற விழையும் பொருளை மக்களுக்கு உணர்த்த அவர்கள் அறிந்த ஒன்றின் மீது ஒப்புமைப்படுத்திக் கூறுவதுஉவமையாகும்.  உவமைகளின் வழி விளக்கப்பெறும் கருத்துக்கள் மக்கள் மனதில் எளிதில் விரைவாகச் சென்று சேர்வது தனிச்சிறப்பாகும்.

அகநானூறு

அகநானூறு இறையனார் அகப்பொருள் உரையில், ‘நெடுந்தொகை நானூறு’ என்னும் பெயரால் குறிப்பிடப்படுகிறது,  பேராசிரியர், நச்சினார்க்கினியர் போன்றோரும் இதனையே முதல் தொகைநூலாகக் குறிப்பிட்டுள்ளனர்,  மேலும் இந்நூல் நெடுந்தொகை என்னும் பெயருடன் அகம், அகப்பாட்டு என்னும் பெயர்களாலும் வழங்கப்பட்டு வருகிறது. முதற்பொருளும் கருப்பொருளும் இந்நூலில் அமைந்திருத்தலைப் போலப் பிற நூல்களில் காணுதல் இயலாது,

அகம் என்றால் மனம், மனை, வீடு என்று பொருள்படும்,  அகநானூறு 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நானூறு பாடல்களை உடையது, இது அகத்திணையை விளக்கும் முழுமையான பாடல் அடிகளைக் கொண்டதால் இவ்விலக்கியம் ‘அகப்பாட்டு’ என்றும், தொகை இலக்கியங்களிலேயே நீண்ட அடிவரை உள்ளதால் ‘நெடுந்தொகை’ என்றும் அழைக்கப் பெறுகிறது,  முதல், கரு, உரி என்னும் முப்பொருளையும் விரிவாக எடுத்து உரைப்பதனாலேயே நீண்ட பாடல் அடிகளைக் கொண்டுள்ளது எனலாம்,

உவமை

தொல்காப்பியர் ‘உவமை’ என்ற சொல்லை நூற்பா,283-ல் மட்டும் தான் குறிப்பிடுகிறார்,  மற்றபடி அவர் ‘உவமம்’ என்று தான் கூறுகிறார்,  ஆனாலும் ‘உவமை’ ‘உவமம்’ என்ற இரண்டு சொற்களும் ஒன்றே என்பதைப் பேராசிரியர் தம் உரையில் இவை இரண்டையும் உவமையைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளார் என்பதைக் கொண்டு அறியமுடிகிறது.  உவமையை நான்கு வகையாகப்பிரிக்கின்றார் அவை,

“வினை பயன் மெய் உரு என்ற நான்கே

      வகைபெற வந்த உவமத்தோற்றம்” (தொல், நூ,272)

என்ற நான்கும் ஆகும்.

தண்டியலங்கார ஆசிரியர் வினை, பயன்,மெய்,உரு என்ற நான்கினையும் சுருக்கி பண்பு, தொழில், பயன் எனற் முன்று வகைக்குள் அடக்குகிறார்.

     “பண்பும் தொழிலும் பயனுமென் றிவற்றின்

     ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்ந்து

     ஒப்புமைத் தோன்றச் செப்புவது உவமை” (தண்டி,நூ,31)

தண்டியலணுகாரத்திற்குப் பின்னால் தோன்றிய இலக்கண நூல்களான நன்னூல், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சந்திரலோகம் போன்ற நூல்கள் எல்லாம் தண்டியலங்காரம் தருகின்ற விளக்கத்தையே தருகின்றன.

வினை உவமை ஏற்றுவரும் உருபுகளைத் தொல்காப்பியர் கீழ்க்கண்டவாறு குறித்துள்ளார்,

      “அன்ன ஆங்க மான விறப்ப

      என்ன உறழ தகைய நோக்கொடு

      கண்ணிய எட்டும் வினை பால் உவமம்” (தொல்.உவம.1229)

என்பனவாகும்.

கல் போல பிரியலம்

ஆவி என்பான் பொதினி மலைக்குரியவன் அவன் பகுதியில் சிறு தொழில் செய்வோனாகிய சாணைக்கல் இயற்றுவோன் அரக்கொடு சேர்த்துச் செய்த கல்லைப் போல, ‘நின்னை பிரியேன்’ என்று உடன் இருந்த போது சொல்லிய சொல்லைத் தலைவர் மறந்தனரோ? என்று தலைவி எண்ணுவதை,

“சிறு காரோடன் பயினொடு சேர்த்திய

கல் போல பிரியலாம்”  (அகம்.1, 5-6)

என்ற பாடல் அடிகள் வெளிப்படுத்துகின்றன.  ஒரு வகைக் கற்பொடியும் அரக்கும் கூட்டிச்செய்த சாணைக்கல்லை வேறுபிரிக்க இயலாதவாறு போல நம்மையும் வேறுபிரிக்க இயலாது எனத் தலைவன் கூறியதைத் தலைவி எண்ணுகின்றாள். மேலும்,

      ”சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய

      கற்போல் நாவினே னாக,,,”  (அகம், 356 9’10)

என்ற பாடல் அடிகள் இவற்றிற்கு அணி சேர்ப்பதாக அமைகின்றன.

பாழி அன்னயுடை

முகப்படாமணிந்த யானையினையும் ஒளியுடைய அணிகலன்களையுடைய நன்னன் என்னும் குறுநில மன்னனுடைய பாழி என்னுந்தலைநகரம் போன்ற காவல் மிக்க தந்தையது காவலைக்கடந்து தனக்குப் பிடித்த தலைவனுடன் தலைவி சென்றுவிட்ட தன்மையை,

      “சுழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்

      பாழி அன்ன கடியுடை வியல் நகர்ட்

      செறிந்த காப்பு இகந்து (அகம், 15 10-11)

என்ற பாடல் அடிகளில் பாழி என்னும் நகரத்தில் காவல் மிகுதியாக இருக்கும்.  அவற்றைப் போன்றே தலைவியின் தந்தை நகரம் இருக்கின்றது.  அந்நகரினைக் கடந்து உடன்போக்கு மேற்கொண்டுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

ஆதிமந்தி போல

“சங்க காலத்தில் காதல் ஏமாற்றமோ காதலர் இறப்போ நிகழ்ந்ததில்லை என்று கூற முடியாது.  காதலனைப் பிரிந்து வாடிய ஆதிமந்தி, வெள்ளி வீதி போன்ற பெண்பாற் புலவர்கள் உளர்” (நா.செயராமன், ஈன்றதாய்,ப.20) என்னும் வரிகளும் விளக்கி நிற்கின்றன.

வானவரம்பன் பொன்னாலான மாலையையும், நல்ல வேற்படையினையும், கடலிடத்துப் படைநடத்திப் பகைவரைக் கொன்று அழித்த வெற்றியினையும் உடையவன்.  வலிமை பொருந்திய போர்முனையிற் கலங்கிய உடைந்த மதில்களையுடைய ஓர் அரணைப் போல அச்சம் பொருந்திய வருத்தத்தால் துயிலைத் துறந்த யான் ஆதிமந்தியைப் போலக் காதலனைக் காணாத சிறுமையினால் யானும் மிக்க வருத்தமுற்றுத் துன்புற்று உழல்வேனோ? எனத் தலைவனைப் பிரிந்த தலைவி தோழியிடம் கூறுவதை,

“காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து

ஆதிமந்தி போல பேதுற்று

அலந்தனென் உழல்வென் கொல்லோ- பொலந்தார்

கடல் கால் கிளர்ந்த வென்றி நல்வேல்

வானவரம்பன் அடல்முனைக் கலங்கிய

உடை மதில் ஓர் அரண் போல

அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே” (அகம். 45. 13-19)

என்ற பாடல் அடிகளின் வழி அறியமுடிகிறது.   உடை மதிலோர் அரண் போலத் துஞ்சாதவர் என்பதை அறியமுடிகின்றன.

பண்ணன்

தன் முயற்சியால் வரும் பயன் எல்லாம் பிறருக்கே உரிமையுடையனாய்த் திகழ்கின்ற பண்ணன என்பவனுடைய தோட்டத்தில் உள்ள சிறிய இலையினையும் புல்லிய விதையினையும் உடையநெல்லி மரத்திற் காய்ந்த பசிய காயைத் தின்றவர் நீரைக் குடிக்கும் போது பெறுகின்ற சுவையினைப் போல முகிழ்கின்ற நிலவொளியாலே விளங்குகின்ற இளம்பிறையே என்பதை,

“தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்

பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்இலைப்

புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்

நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி” (அகம். 54 13-16)

என்று பாடல் அடிகளால் குறிக்கின்றன.

பண்ணன் என்பவன் சிறுகுடிக் கிழான் என்பதை,

“கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடி” (புறம். 173, 1)

என்ற பாடல் அடியின் வழி ஈகைப்பணியுள்ளவன் என்பதும், பண்ணன் தனக்கேன வாழாது பிறருக்காகவே வாடிந்தவன் என்பதைச்சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

      “யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய” (புறம். 173,1)

என்ற பாடல் அடியில் வாழ்த்துவதையும் காணமுடிகின்றன,

கண்ணபிரான் போல விரைந்து வரும் தலைவன்

பொருள்வயிற் பிரிந்த தலைவன் குறித்தபருவம் வந்தும் வாராமையால், உடல் மெலிந்து வேறுபாடு கொண்ட தலைவியிடம் தோழி யமுனை ஆற்றின் மணலையுடைய அகன்ற துறையில் நீராடிய ஆயர் மகளிர் குளிர்ச்சி பொருந்திய தழையை உடுத்திக் கொள்வதற்காகக் குருத்த மரக்கிளை வளையுமாறு அதனை மிதித்துத் தந்த கண்ணபிரான் போல நம் தலைவரும் விரைந்து வருவார் என்பதை,

“அண்டர் மகளிர் தண் தழைஉட்இயர்

      மரம் சேல மிதித்த மாஅல் போல

      புன் தலை மடப் பிடி உண்இயர், அமகுழை,

      நெடுநிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்

      படி ஞிமிறு கடியும் களிறே” (அகம். 59 5-9)

என்ற பாடல் அடிகளால் தலைவி கூறுவதை அறியமுடிகின்றன.

இவ்வாறு உவமைப்படுத்துவதன் முலம் சங்க இலக்கிய காலங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கையினையும், அவர்களைப் பின் தொடர என்னும் மக்களின் வாழ்வினையும் அறியமுடிகின்றன.  மக்களின் வாழ்வில் உவமையென்பது முக்கிய இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.

துணை நூற்கள்

 

  1. –                         – அகநானூறு

திருநெல்வேலி தென்னிந்திய சைவ     சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,

சென்னை, முதற்பதிப்பு டிசம்பர் 1970/

  1. இளம்பரணார் – தொல்காப்பியம்/ பொருளதிகாரம்,

சாரதா பதிப்பகம், ராயப்பேட்டை,

சென்னை 14,

பதினொராம் பதிப்பு ஜீன் -2011-012,

  1. குருநாதன் வ. – புறநானூறு,

வடிவேல் பதிப்பகம், சென்னை 17,

முதற்பதிப்பு ஜீன் 2010,

  1. செயராமன் நா.           – ஈன்ற தாய்

ஐந்திணைப் பதிப்பகம், சென்னை,

முதற்பதிப்பு செம்பர் 2007.