முனைவர் பொ.மா.பழனிசாமி,

முதல்வர்

என்.ஜி.எம் கல்லூரி

பொள்ளாச்சி

——————————————————————————————————————

அஞ்சலும் அஞ்சாமையும்

அச்சமில்லாமல் மனிதன் வாழ வேண்டுமென்றால் கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் நினைத்து வீணாக மனக்குழப்பம் கொள்ளாமல் இருப்பதே. இதை  கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே” என்கிறது கீதை. கடமை என்பது நிகழ்காலம். பலன் என்பது எதிர்காலம். எனவே எதிர்காலத்தைப் பற்றிய மனக்கவலையும் பதற்றமும் நிகழ்காலச் செயல்பாட்டை நிலைகுலையச்  செய்துவிடும். கடந்த காலம் என்பது துயரம். எதிர்காலம் என்பது புதிர். நிகழ்காலம் மானுடத்திற்கு ஆண்டவன் தந்த பரிசு.(Past is a Misery. Future is a mystery. Present is a Gift. That is why we call it as PRESENT)

“ஒரே நதியில் நீ இரண்டு முறை குளிக்க முடியாது” என்று ஜென் மதத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது நதியில் ஓரிடத்தில் ஓடுகின்ற நீர் அடுத்த நொடியில் வேறு இடத்திற்கு மாறிவிடுவது போல் மானுட வாழ்க்கையும் நொடிக்கு நொடி மாற்றமடைந்து கொண்டே இருப்பது. படிப்பு, அறிவு, ஆற்றல் மட்டும் இருந்தால் போதாது, நிகழ்காலத்திற்கேற்ற விழிப்புணர்வும் வேண்டும். இவ்விழிப்புணர்வு இல்லாதோர் வீண் அச்சம் கொள்ள நேரிடுகிறது. அச்சம், சோர்வு, கோபம், ஐயம், பொறாமை போன்ற தீய பண்புகள் நமது எண்ணங்களில் நிகழ்கின்றன. இந்த எண்ணச்  சிறையில் அடைபடாமல் வெளியே நின்று நிறைகுறைகளைக் கவனிக்கும் போது மனம் தானாகவே அமைதி அடையும். அச்சத்திரைகள் விலகும். வாழ்வு இனிக்கும்.

அச்சம் என்று தோன்றியது ?

‘அச்சமில்லை அச்சமில்லை   அச்சமென்பதுதில்லையே இச்சகத்து உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை  அச்சமில்லை’,‘அச்சம் தவிர்’ (பாரதி) ‘அச்சமென்பது மடமை’ (கண்ணதாசன் ) ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ (திருக்குறள்) ‘அச்சம் ஆண்மையைக் குறைக்கும்’ இவ்வாறு அச்சத்தை நீக்க வழி கூறுபவர்கள் மனிதகுலம் தோன்றியபொழுதே இவ்வச்சகுணம் மானுடத்தை வாட்டி வதைத்திருக்க வேண்டும். அச்ச உணர்வற்ற மனிதன் இதுவரை உலகில் தோன்றியதாகத் தெரியவில்லை. பொதுவாக அச்ச உணர்வு ஒரு வளர்ச்சி ஊக்கியாக அமைய வேண்டும்.சமூகத்தில் ஒருவரோடு ஒருவர் இணைந்து பிணைந்து வாழ அச்ச உணர்வு தேவை. நீதி, சட்டம், சான்றோர், பழிச்சொல் போன்றவற்றிற்கு  அச்சபடுவது  மானுடத்தின் இயல்பு. எனவே அச்ச உணர்வு ஒரு தற்காப்புக் கருவி இவ்வுணர்வை அறவே நீக்க முயல்வது அறிவீனம்.

மெய்ப்பாட்டில்  ஒன்று அச்சம்

மானுட மனம், அகப்புறச் சூழல்களால் பாதிக்கப்படும் போது அப்பாதிப்புகள் உடல்வழியே வெளிப்படும். இதையே தொல்காப்பியர் மெய்ப்பாடுகள் என்று குறிப்பிடும்,

‘நகையே  அழுகை  இளிவரல் மருட்கை

       அச்சம் பெருமிதம் வெகுளி உவகை ‘ (மெய்.3)

என்ற எட்டு வகை மெய்ப்பாடுகளில் ஒன்று அச்சம். இந்த அச்ச உணர்வு ஏற்படும் நிகழ்வுகளை,

‘அணங்கே விலங்கே, கள்வர், தம்இறை என

       பிணங்கல் சாலா அச்சம் நான்கே(மெய்.8)

என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வகைப்படுத்தி உள்ளார்.

அதீத அச்சங்களின் வகை

மேற்கண்ட இயல்பான அச்சங்கள் எல்லா மனிதர்களிடமும் இருந்தாலும் சிலர் சிலவற்றைக் கண்டு மிக அதிகமாக அஞ்சுவதுண்டு.

இத்தகைய அதீத அச்சங்களை ஆங்கிலத்தில் ‘போபியா’ (Phobia) என்பர். அச்சங்கள் மானுடத்தை வாட்டி வதைத்துச் சீரழித்து விடுபவை. பழிச்சொற்களைக் கண்டு அஞ்சுவது ஒநோமோட்டோ போபியா (Onomato Phobia). விலங்குகளைக் கண்டு அஞ்சுவது ஸு போபியா (Zoo Phobia). பறவைகளைக் கண்டு அஞ்சுவது ஒரிந்தோ போபியா (Orintho Phobia). குளிரைக் கண்டு அஞ்சுவது சைக்ரோ போபியா  (PsychoPhobia). கூட்டத்தைக் கண்டு அஞ்சுவது ஒச்லோ போபியா (Ochlo Phobia). இறப்பைக் கண்டு அஞ்சுவது நெக்ரோ போபியா (Necrophobia). பாலைவனத்தைக் கண்டு அஞ்சுவது             ஸ்ரோ போபியா (Xerophobia). இடியைக் கண்டு அஞ்சுவது கெரௌனோ போபியா(Keraono Phobia). இரவைக் கண்டு அஞ்சுவது நிக்டோ போபியா  (Nycto Phobia) தனிமையைக் கண்டு அஞ்சுவது எரிமியோ போபியா (Eremio Phobia).  வயோதிகத்தைக் கண்டு அஞ்சுவது ஜெராஸ்கோ போபியா (Geraco Phobia). பயணம் செய்யும்போது அஞ்சுவது ஹைடோ போபியா (Holdo Phobia) போன்ற அச்ச வகைகளை மருத்துவ உலகம் பகுத்தாய்ந்து வெளிப்படுத்தியுள்ளது.

அச்சத்திற்கான காரணம்

அன்பு இல்லாமையே அச்சத்திற்கான காரணம். அன்பு என்ற விளக்கை ஏற்றி வைத்தால் அச்சம் என்ற இருள் அகன்று விடும். இந்த அன்பு நம்பிக்கையில் பிறக்கிறது. நமக்கு அச்சம் ஏற்படுகிறது என்றால் நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருள்.

மக்களில் சிலர் வாழும்போது என்ன செய்யலாம் என்று சிந்திப்பதை விட்டுவிட்டு எந்த நேரம் இறந்து விடுவோமோ (Necro Phobia)  என்ற அச்சத்திலேயே மனம் உருகி உருக்குலைந்து போகிறார்கள். இதைப்பற்றிதாகூர், “நீ இந்தப் பூமியிலே வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காக உன் தாயிடத்தில் பாலைச்சுரக்க வைத்தவன் இறைவன். நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து வைத்திருக்கக் கூடும். அதனால் நம்பிக்கையோடு இரு” என்றார். மனிதன் விரும்பினால் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளின் நல்ல அம்சங்களைத் தன்னுடையதாக்கிக் கொள்ள முடியும் அச்சத்தை விலக்கிக் கொள்ள முடியும். இதை,

‘ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா   

       மாற்றம் கொடுத்தற் பொருட்டு(725)

என வள்ளுவர், அச்சத்தைப் போக்குவதே கல்வியின் அடிப்படை இலக்கு என விளக்குவார்.

அச்சத்தைப் போக்கும் வழி

மனிதன் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான குறியீடுதான் விநாயகரின் துதிக்கை. மிகப் பருத்த துதிக்கையால், தரையில் இருக்கிற சின்னஞ்சிறு ஊசியையும் எடுத்து விட முடியும். அதோடு ஒரு பெரிய மரத்தையும் வேரோடு சாய்த்து விடவும் முடியும். விநாயகரின் பெரியவயிற்றுக்கு ஒரு சிறப்புப் பொருள் உண்டு. உலகில் உள்ள எத்தனையோ இன்பதுன்பங்களை மனிதன் ஏற்றுச் செரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. மற்றவர் பேசுகிற வார்த்தைகளை உன்னிப்பாக, ஆழமாக, சரியாகக் கவனிக்க வேண்டும் என்பதின் குறியீடுதான் விநாயகரின் பெரிய காதுகள்.

மனிதன் தன் விருப்பு வெறுப்புக்களை உடைத்தெறிந்தால் தான் அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதைத் தெரிவிப்பதுதான் விநாயகரின் உடைந்த தந்தம். தவறான பேராசைகளை வெட்டி எறியச் சொல்வதின் அடையாளமே விநாயகரின் கையில் உள்ள சிறிய கோடரி.

‘அஞ்சாமையே சான்றோன் நலன்” எவ்வாரெனில், சான்றோர் கடந்த காலத்தையும் இனிவரும் காலத்தையும் நிகழ்காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, சீர்த் தூக்கி நல்லவற்றை நாட்டுக்கு ஏற்றவற்றைச் செய்யும் பண்பினர். விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான அனைத்தையும் பகுத்தறிய வல்ல கல்வி அறிவு நிரம்பியவர். செருக்கின்றி அடக்கமே உருவாய் விளங்குபவர். இதனை,

‘சென்ற காலமும் வரூஉம மயமும்

       இன்றிவட் டோன்றிய வொழுக்கமொடு நன்குணர்ந்து

       வானமும் நிலனும் தாமு ழுதுணரும்

       சான்ற கொள்கைச் சாயா யாக்கை

       ஆன்ற டங் கறிஞர்‘ (மதுரைக்  காஞ்சி .477-481)

என அஞ்சாமையுடன் சமூகத்திற்குப் பணி செய்யும் நற்பண்புகளை மதுரைக் காஞ்சி வழி காட்டும்.

இலக்கியங்களில் அஞ்சாமைச் சிந்தனைகள்

தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் வலிமை, படை வலிமையின் மிகுதியைச் சொல்லி, பகைவரை அஞ்சாமையுடன் எதிர்த்து நின்று வெல்வது உனக்கு எளிது என ஒளவையார் உற்சாகப்படுத்துவார்

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

       அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்,

       மறப்புலி உடலின் மான் கணம் உளவோ?

       இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?

       அச்சொடு தாக்கிப் பார் உற்று இயங்கிய

       பண்டச் சாக்காட்டு சூழ்ச்சி சொல்லிய

எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக்கை

       வழுஇல் வன் கை மழவர் பெரும

       இருநிலம் மண் கொண்டு சிலைக்கும்

       பொருநரும் உளரோ நீ களம் புகினே ?  (புறம்- 90)

இப்பாடல் எதிர் நாட்டு மன்னனின் படையைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது. இது ஒச்லோ போபியா என்ற அச்ச வகையைச் சார்ந்தது.

இறப்பைக் கண்டஞ்சுவது, ‘நெக்ரோ போபியா’ என்ற அச்ச வகை. ஒரு வீட்டில் சாக்காட்டுப்பறை ஒலிக்க இன்னொரு வீட்டில் மணப்பறை முழங்க கணவனோடு இருப்பவள் பூ அணிய, கணவனைப் பிரிந்தோர் கண்ணீர் விட,ஒத்தும் ஒவ்வாததுமான இப்பிறப்பைச் செய்தோனான நான்முகன் மிகக் கொடியவன். கொடியது இவ் உலக வாழ்க்கை. எனவே இவ்வுலகில் தன்மை அறிதோர் சொர்க்கத்தை அடைய நல்ல செயல்களைச் செய்க எனப் பக்குடுக்கைநன்கணியார் என்ற கவிஞர் வலியுறுத்துகிறார்.

“ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப

       புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்

       பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,

       படைத் தோன்மன்ற அப்பண்பிலாளன்,

       இன்னாது அம்ம இவ்வுலகம்,

       இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே(புறம் .194)

மேற்கண்ட பாடல் ‘நெக்ரோ போபியா’ என்ற அச்ச வகையை உணர்த்துவது தெளிவாகிறது.

முடிவுரை

கூடி வாழும் சமுதாய அமைப்பால் ஒருவர்க்கொருவர் உதவி செய்தலும், ஒருவர் செய்த நன்மையை மறவாது போற்றும் போதும் சமுதாயத்தில் அச்ச உணர்வு தானாக அகன்று விடும். நட்புச் சூழல் மக்கள் அச்சமில்லாமல் வாழவகை செய்யும். நட்பினால் மனம் விரிவடையும், மனிதநேயம்  மலரும். உயர்ந்த எண்ணங்கள் வழி மக்கள் நடக்கும் போது அச்சஉணர்வு அற்றுவிடும். எனவே இனிய மொழி, ஈகைக்குணம், ஆழ்ந்த சிந்தனை, வினைசெய்யும்  வல்லமை, குற்றமற்ற பண்பு, சிறந்த குணம், நீதி நெறி கடவாமை போன்ற குணங்களோடு மனிதன் வாழ்வானாயின் அச்சத்தால் அவனுக்கு அழிவில்லை.

Leave a Reply