இலங்கையின் அரசியற் சுதந்திரம் பொருண்மிய நிலையிலும், பண்பாட்டு நிலையிலும், தேசிய இனங்களின் நிலையிலும், சமூகத்தின் அடித்தள மக்களின் வாழ்க்கை நிலையிலும் முற்றான விடுதலையாக அமைந்ததா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொதுவாக குடியேற்ற நாடுகள் பெற்ற அரசியற் சுதந்திரம் என்பது ஆட்சி அதிகாரத்தைத் தேசிய உயர்ந்தோர் குழாத்தினருக்கு அதாவது மேட்டுக்குடியினருக்குக் கையளித்த செயற்பாடாகவே காணப்படுக்கின்றது. இவர்களது நோக்கையும், நலங்களையும் அடிப்படையாகக் கொண்டே சுதந்திரத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் பெரும்பாலும் அமைக்கப்பெற்றன.

இலங்கையின் கல்வி தொடர்பான 1950 ஆம் ஆண்டிலே சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளைத் தொடர்ந்து 1951 ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க கட்டளைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பாராளுமன்ற அரசியலில் பொதுமக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளல் என்ற செயற்பாட்டில் உணர்ச்சியூட்டப்பட கூடிய அம்சமாக மொழி இருந்தமையால் கல்விச் சீர்திருத்தங்களில் மொழி முக்கியத்துவம் பெறலாயிற்று. குறித்த கட்டளைச் சட்டத்துக்குக் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் தாய்மொழியைக் குவியப்படுத்தின. உயர்நிலைப் பாடசாலைகளில் தாய்மொழியைக் கல்வி மொழியாகக் கொண்டு வருதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டது. தமிழ் அல்லது சிங்களம் கல்வி மொழியாக இருந்துவரும் பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்பித்தல் என்பது சேர்க்கப்பட்டது. விரும்பின் தேசிய மொழிகளைக் கற்பித்தற்குரிய ஏற்பாடுகளும் முன்மொழியப்பட்டன.

பாடசாலைகள் பின்வருமாறு ஒழுங்கமைக்கப்பட்டன

 1. ஆரம்பப் பாடசாலை அல்லது முதனிலைப் பாடசாலை – பாலர் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரை.
 2. பொதுக்கல்விக்குரிய கனிஸ்ட பாசாலை அல்லது இள இடைநிலைப் பாடசாலைப் பாடசாலை – ஆறாம் வகுப்புத் தொடக்கம் எட்டாம் வகுப்பு வரை.
 3. சிரேஷ்ட உயர்நிலைப் பாடசாலை அல்லது முது உயர் நிலைப்பாடசாலை – இவை இரண்டாண்டுகளைக் கொண்டனவாய் சிரேஷ்ட பாடசாலைத் தகுதிப் பத்திரத்துக்கு (ssc) மாணவர்களைத் தயார் செய்வனவாய் அமையும்.
 4. கல்லூரிகள் – இவை இரண்டு ஆண்டுகளைக் கொண்டவையாகவும், உயர்தரப் பாடசாலைத் தகுதிப் பத்திரத்திற்கு (HSC) மாணவர்களைத் தயார் செய்வனவாகவும் அமையும்.

1951 ஆம் ஆண்டைத் தொடர்ந்து பலதுணைச் சீர்திருத்தங்கள் கல்வியிலே மேற்கொள்ளப்பட்டன. கட்டாயகல்வி 14 வயது என்றும் 16 வயது என்றும் தளம்பல் நிலைகளை அடைந்தது. எட்டாம் வகுப்பு நிறைவடையும் பொழுது மாணவரை கலை, விஞ்ஞானம் என்ற வகைப்படுத்தலுக்குக் கொண்டு செல்லல் 1972 ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தம்  வரை தொடர்ந்து சென்றது.

1956 ஆம் ஆண்டிலே கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் மதக்குழுக்களின் கட்டுப்பாட்டிலிருந்த பாடசாலைகளை அரசு முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்படும் நடவடிக்கைகளைத் தூண்டின. 1960 ஆம் ஆண்டில் சகல தனியார் மற்றும் மதக்குழப்ப பாடசாலைகளையும் அரசு முகாமைத்துவத்தின் கீழ்க்கொண்டு வரும் சட்டமியற்றப்பட்டது. ஒரு சில புகழ்பெற்ற மதக்குழுப் பாடசாலைகள் மட்டும் அரசு நிதி உதவியின்றி சுயமாக இயங்குவதற்கு முடிவெடுத்தன. தொடர்ந்து மதக் குழுக்களால் நடத்தப்பட்டுவந்த ஆசிரியர் கலாசாலைகளும் அரசாங்கத்தினாற் பொறுப்பேற்கப்பட்டன.

அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்றமையைத் தொடர்ந்து, தமிழர்களது கல்வியில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படலாயின. திருநெல்வேலியின் இயங்கி வந்த சைவாசிரிய கலாசாலை நல்லூரில் கிறிஸ்தவ மிசனரின் இயக்கப்பட்டு வந்த ஆசிரியர் கலாசாலை கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலை  ஆகியவை அரசாங்கத்தினால் மூடப்பட்டன.

இந்நிகழ்ச்சியால் அரம்பப் பாடசாலைகளிலே கற்பித்தற்குரிய ஆசிரியர்களின் வழங்கல் பாதிப்புக்குள்ளானது. தொடர்ந்து வந்த காலங்களில் எதுவித உளவியலறிவுமற்ற தொண்டர் ஆசிரியர்களே தமிழ்மொழி மூல ஆரம்பப் பாடசாலைகளிலே கடமையாற்ற வேண்டிய அவல நிலையை ஏற்படுத்தியது. தமிழ் மொழியில் அடிப்படை மொழித்திறன்களில் அந்த நிகழ்ச்சி தொடர்ச்சியான பின்னடைவுகளை ஏற்படுத்தியது.

அரசாங்கப் பாடசாலைகளைப் பொறுப்பேற்றமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாடசாலைகளின் “மீள் ஒழுங்குபடுத்தல்” (Reorganization) என்ற செயற்பாட்டினால் தென்பகுதியிலே பல தமிழ்ப் பாடசாலைகள் மூடப்பட்டன. மேலும் இந்த செயற்பாட்டினால் பெருந்தோட்டத்துறைப் பாடசாலைகளும், கல்வியும் நேர்நிலையான அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை.

1963 ஆம் ஆண்டிலே கல்விச் சீர்திருத்தத்துன்பொருட்டு தேசிய கல்வி ஆணைக்குழு வொன்று அமைக்கபட்டது. இவர்களின் விதப்புரையின்படி பாடசாலைகள் கனிட்ட வித்தியாலயம் எனவும் சிரேஷ்ட வித்தியாலயம் எனவும் பாகுபடுத்தப்படும். கனிஷ்ட வித்தியாலயத்தின் கீழ்ப்பிரிவு ஒன்று தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையும் மேற்பிரிவு ஆறாம் வகுப்புத் தொடக்கம் எட்டாம் வகுப்பு வரையும் அமையும். இதைத் தொடர்ந்து இடம்பெறும் சிரேஷ்ட பாடசாலைகள் நான்கு வகையான கல்வியை வழங்குமாறு ஒழுங்கமைக்கப்படும்.

 1. விஞ்ஞானக்கல்வி
 2. விவசாயக்கல்வி
 3. பொறிமுறைக்கல்வி
 4. மக்கள் பண்பியலும் வர்த்தகமும்.

உயர்ந்தோர் குழாத்தின் (Elite) நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சீர்திருத்தமாகவும் இன்னொரு புறம் இனவாத நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தமாகவும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் அமைந்தன. மேலும் வறுமையிலும் பிந்தங்கிய வாழ்வாதார நிலையிலும் வாழும் சிங்கள மக்கள், தமிழ்மக்கள் மற்றும் பெருந்தோட்டதுறையில் வாழும் தொழிலாளர்களின் நலங்கள் முதலியவற்றை இந்த ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் பெருமளவு கருத்திலே கொள்ளவில்லை.

சுதந்திர இலங்கையின் கல்விச் சீர்திருத்தங்களில் நாட்டின் ஒட்டுமொத்தமான தேசிய நலங்களைக் காட்டிலும் குறுகிய அரசியல்  நலங்களே பெருமளவில் மேலோங்கி நின்றன. சீர்திருத்தங்களை மேற்கொண்டோர் மேலைநாட்டுக்கல்வி மாதிரிகளை இறக்குமதி செய்து இணைக்க முயன்றார்களே அன்றி இலங்கையின் நடப்பியல் நிலவரங்களையும், பன்மை இயல்புகளையும் கருத்திலே கொண்டு அனைத்தையும் உள்ளடக்கிய விளைதிறன் கொண்ட ஆக்கங்களைத் தரத் தவறியமை வரலாற்றின் வழியாக மேலெழுச்சி கொள்கின்றன.

 

1972 ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தங்கள்

இலங்கையின் கல்வி வரலாற்றில் மேற்கொள்ளபட்ட எழுச்சி கொண்ட நடவடிக்கையாக 1972ஆம் ஆண்டின் சீர்திருத்தங்கள் அமைந்தன. பின்வரும் நிகழ்ச்சிகள் இச்சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்குரிய பின்விசைகளாக அமைந்தன.

 1. 1970 ஆம் ஆண்டைத் தொடர்ந்து ஏற்பட்ட இளைஞர் கொந்தளிப்பும், படித்த இளைஞர்கள் அரசுக்கெதிராக ஆயுதமேந்தியமையும்.
 2. படித்த இளைஞர்களிடத்து நிலவிய வேலையின்மைப் பிரச்சினை.
 3. கல்வி உலகத்துக்கும் வேலை உலகத்துக்குமிடையே நிலவிய பாரிய இடைவெளி.
 4. இலங்கை எதிர் கொண்ட சென்மதி நிலுவை நெருக்கடி.
 5. கல்வியிலே தொடர்ந்து கொண்டிருக்கும் குடியேற்றவாத எச்சங்கள் கண்டிப்புக்கு உள்ளாக்கப்பட்டமை.
 6. இடதுசாரிகள் ஆட்சியில் இடம் பெற்றமை.
 7. க.பொ.த. உயர்தரத் தேர்வில் சித்தியடைவோர் அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கப்பெற முடியாத இடைவெளி.
 8. பாடசாலைக் கலைத்திட்டம் முற்றிலும் ஏட்டுக்கல்வி மயப்பட்டதாக இருந்தமை.
 9. நாட்டின் குவியியல் வளங்களை மேம்படுத்துவதற்குக் கல்வி பெருமளவிலே பங்களிப்புச் செய்யாமை.
 10. கல்வி முறைமை முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அதிக விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டமை.

மேற்கூறிய அவதானிப்புக்களை உட்கொண்டும் சோசலிச நாடுகளின் கலைத்திட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டும் 1972 ஆம் ஆண்டின் கலைத்திட்டம் உருவாக்கம் பெற்றது. கல்வியில் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு பாடசாலை செல்லும் வயது ஐந்திலிருந்து ஆறாக உயர்த்தப்பட்டது. பாடசாலைக் கல்விச் செயற்பாடுகள் பின்வருமாறு அமைக்கப்பட்டன.

 1. முதல் ஐந்து ஆண்டுகள் ஆரம்பக்கல்வி 1 தொடக்கம் 5 ஆம் வகுப்புக்கள்.
 2. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு முடிவில் பொதுக்கல்விக்கான தேசிய சான்றிதழ் – HNCE மாணவர்களைத் தயார் செய்தல்.
 3. பத்தாம் மற்றும் பதினொரம் வகுப்பு முடிவில் உயர்பொதுச் சான்றிதழ் கல்விக்கான – HNCE மாணவர்களைத் தயார் செய்தல்.

ஆரம்பப் பாடசாலைக் கலைத்திட்டத்தில் ஒன்றிணைப்பு வலிமையுறுத்தப்பட்டது. சமயம், கல்வி மொழி, சுற்றாடல், கணிதம், இரண்டாம் வகுப்பிலிருந்து ஆங்கிலமொழி முதலியவை ஒன்றிணைந்த வகையிலே கற்பிப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பாட விதான அபிவிருத்தி நிலையம் கொழும்பில் இருந்தவாறே இவற்றை நெறிகை செய்தது.

இடைநிலை (6 முதல் 9 வரை) கலைத்திட்டத்தில் பல புதிய மாற்றங்கள் உட்புகுத்தப்பட்டன. முன்னைய இடைநிலைக் கலைத்திட்டத்திலே காணப்பட்ட கலை – விஞ்ஞானம் என்ற பாகுபாடுகளும் ஒழிக்கப்பட்டன. அனைத்து மாணவர்களும் கலை, விஞ்ஞானம், அழகியல் என்ற அனைத்தையும் கற்கும் “சமநிலைக் கலைத்திட்டம்” அறிமுகப்படித்தப்பட்டது. சமூக விஞ்ஞானப் பாடங்களின் ஒன்றிணைப்பால் உருவாக்கப்பட்ட சமூகக்கல்விப் பாடம் கலைத்திட்டத்திலே வைப்புச்செய்யப்பட்டது. அவ்வாறே இயற்கை விஞ்ஞானப் பாடங்களின் இணைப்பால் உருவாக்கப்பட்ட “ஒன்றிணைந்த விஞ்ஞானமும்” அறிமுகம் செய்யப்பட்டது. சமயம், கல்வி, மொழி, ஆங்கிலம் ஆகியவை தொடந்த்து கற்பிக்கப்படலாயிற்று.

இக்கலைத்திட்டத்தின் சிறப்புப் பண்பாகக் குறிப்பிடப்படுவது இரண்டு முன்றொழிற் பாடங்களின் அறிமுகமாகும். கல்வி உலகை வேலை உலகுடன் ஒன்றிணைப்பதற்கும், தொழில் சார்ந்த புலக்காட்சியை மாணவர்களிடத்து மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. முன்றொழிற் படிப்பு ஒன்றில் இலங்கையின் மரபுவழித் தொழில்கள் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளவும் மற்றைய முன்றொழிற் படிப்பிற் பாடசாலையின் சூழலில் உள்ள பயனுள்ள ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கற்பதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. முன்றொழிற் படிப்புக்களுடன் நாட்டின் வளங்கள் என்ற பாடப்பரப்பும், கேத்திர கணிதப் பொறிமுறை வரைதல் என்ற பாடப்பரப்பும் அறிமுகம் செய்யப்பட்டன. தொழில் ஆற்றல்களை நாட்டின் வளங்களுடன் இணைப்பதற்கு, பொருள் உற்பத்தியின் ஒன்றிணைந்த கூறாக இருக்கும் வடிவமைப்புகளை வரைந்து கொள்வதற்கும் முறையே நாட்டின் வளங்கள் மற்றும் கேத்திர கணிதபொறி முறை வரைதற் பாடங்கள் துணை நின்றன. இந்த முயற்சிகள் இலங்கையின் கலைத்திட்ட வரலாற்றிலே புதிய அனுபவங்களாக அமைந்தன. அவை ஒருவகையில் மார்க்சியக்கல்விச் செயற்பாட்டின் செல்வாக்கினையும் புலப்படுத்தி நின்றன.

பத்தாம், பதினொராம் வகுப்புக் கலைத்திட்டம் உயர்கல்விக்கு மாணவர்களை வேறுவேறாக ஆற்றுப்படுத்தல் செய்யுமாறு ஒழுங்கமைக்கப்பட்டது. எந்தப் பிரிவிலே கற்போரும் உள்ளீடாக அடிப்படைப் பாடங்களைக் கற்க வேண்டுமென கொள்ளப்பட்ட ஏற்பாடு அறிவின் வேறுபட்ட கூறுகளை உட்கருக்கள் வாயிலாக ஒன்றிணைந்து மேம்படுத்துவதற்குரிய கலைத்திட்டம் சார்ந்த நடவடிக்கையாயிற்று.

பல்வேறு புத்தாக்கங்களை உட்பொதிந்த கலைத்திட்டமாக இது அமைக்கப்பெற்றாலும் பல குறைபாடுகளையும் மட்டுப்பாடுகளையும் கொண்டதாகக் காணப்பட்டது. அவை வருமாறு.

 1. பள்ளிக்கூடம் செல்லும் வயது ஐந்திலிருந்து ஆறாக உயர்த்தப்பட்டவேளை முன்பள்ளிக்குரிய ஏற்பாடுகளைச் செய்யாமை குழந்தைகளின் கல்வியிலே பல்வேறு இடர்களைத் தோற்றுவித்தது.
 2. தாய்மொழிக்கல்வி பற்றிய தெளிவற்றநிலை காணப்பட்டது. “தாய்மொழி” என்பதற்குப் பதிலாக “கல்விமொழி” என்ற தொடரே ஆவணங்களிற் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 3. பாடசாலைக் கல்வியின் நீட்சி கருக்கப்பட்டமை. பாடசாலைச் சுற்றுவட்டத்தை முடித்து வெறியேறியவர்களிடத்துப் பல்வேறு இடர்களைத் தோற்றுவித்தது.
 4. புதிய பாடங்களைக் கற்பிப்பதற்குப் போதுமான ஆசிரியர் அணி இல்லாமை, நடைமுறை நெருக்கடிகளைத் தோற்றுவித்து மாற்றீடாக தனியார் கல்வி நிலையங்கள் புற்றீசல்கள் போல வளரத் தொடங்கின.
 5. முன்றொழிற் பாடங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. செயலளவில் அப்பாடங்கள் ஏட்டுக்கல்வியின் விசைகளையே கொண்டிருந்தன.

புதிய மாற்றங்களின் ஒவ்வாமை காரணமாக 1977 ஆம் ஆண்டில் மீண்டும் பழைய க.பொ.த.சாதாராண தரம் மற்றும் க.பொ.த. உயர்தரம் முதலாம் ஏற்பாடுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறான குழப்பமான நிலைகளின் தொகுப்பாக இலங்கையின் கல்வி வரலாறு வளர்ச்சியுறலாயிற்று.

1981 ஆம் ஆண்டின்  கல்வி வெள்ளை அறிக்கை தொடந்தும் இலங்கையின் உயர் குழாத்தினரது புலக்காட்சியை வெளிப்படுத்தியது. கல்வி உள்ளடக்கத்திலே பெரும் மாற்றங்களை மேற்கொள்ளாது தொடர்ந்த இருப்பையே அது வலியுறுத்தியது. பாடசாலை ஒழுங்காமைப்பை அவர்கள் பின்வருமாறு வகைப்படுத்தினர்.

 1. ஆரம்ப நிலை – ஒன்று தொடக்கம் ஐந்து வரை
 2. கனிட்ட இடை நிலை – ஆறு தொடக்கம் எட்டு வரை
 3. சிரேட்ட இடை நிலை – ஒன்பது தொடக்கம் பதினொன்று வரை
 4. கல்லூரி நிலை – பன்னிரண்டு தொடக்கம் பதின்மூன்று வரை

இலங்கையின் கல்வியில் தொடர்ந்து நெருக்கடிகள் நிலவிருதலை 1990 ஆம் ஆண்டில் வெளிவந்த இளைஞர் தொடர்பான சனாதிபதியின் அறிக்கை சுட்டிக்காட்டியது. கல்வியிலே மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆணைக்குழு குறிப்பிட்டது. சிறப்பாக கொழும்பிலுள்ள வளமிக்க பாடசாலைகளுக்குமிடையேயுள்ள வேறுபாடுகள் “கொழும்புக்குப் பால் எங்களுக்குக் கெக்கரிக்காய்” என்ற தொடரின் எடுத்தாள்கையாற் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் ஆங்கில அறிவு என்ற வாளை (கடுவ)ப் பயன்படுத்தி கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றம் தறித்து வீழ்த்தப்படுதலும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆணைக்குழுவின் விதப்புரைகளை அடியொற்றி உருவாக்கப்பட்டது. தேசிய கல்வி ஆணைக்குழு கல்வியின் நோக்கம், கல்வி நிலையங்கள், மாணவர் அனுமதி, ஆசிரியத்துவம் கலைத்திட்டம், கல்வி வளம் முதலாம் துறைகளில் கொள்கைகளை உருவாக்கும் ஆணையுடன் செயற்படுகின்றது. இக்குழுவினரது புலக்காட்சியும் கல்வியில் அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ளாத மிதமான அணுகுமுறைகளையே முன்னெடுப்பதாகவுள்ளது.

1972 ஆம் ஆண்டுக் கலைத்திட்டம் தந்த அனுபவங்களும், தெறிப்புக்களும் முக்கியமானவை. ஆனால் பின்வந்த கலைத்திட்ட ஆக்கங்கள் அந்த அனுபவங்களை எவ்வளவு தூரம் உள்வாங்கிப் புத்தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டன என்பது கேள்விக்குரியதாகவே அமைகின்றது.

அக்கலைத்திட்டதினால் உருப்பெருக்கம் பெறத் தொடங்கிய தனியார் கல்வி நிலையங்கள் இன்றைய கல்விச் செயன்முறையின் தவிர்க்க முடியாத கூறுகளாகிவிட்டன.

1972 ஆம் ஆண்டு கலைத்திட்டத்தினால் தூண்டப்பெற்ற புத்தாக்க முயற்சிகளும், புதிய கண்டுபிடிப்பு உந்தல்களும் கல்வியலாளர் கவனத்தைத் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.

1997 ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருந்தங்கள்

மேற்படி சீர்திருத்தம் பின்வரும் செயற்பரப்புக்களை உள்ளடக்கியதாக அமைந்தது.

 1. ஒழுக்கத்தைக்கட்டி எழுப்பல் அல்லது சீல மேம்பாடு.
 2. தேசத்தைக்கட்டி எழுப்பல் அல்லது தேசிய மேம்பாடு.
 3. பொதுத் தேர்ச்சிகளை மேம்படுத்தல் அல்லது தகைமைகளை கட்டியெழுப்பல்.
 4. குறித்துரைக்கத்தக்க ஆற்றல்களை மேம்படுத்தல் அல்லது சிறப்பான ஆற்றல்களை மேம்படுத்தல்.

சமூகத்தில் மனிதர் என்ற முக்கியத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்புதலும் தேசத்தை மீள் கட்மாணத்துக்கு உள்ளாக்குதலும், பராமரிக்கப்படத்தக்க வாழ்க்கை முறையை வழங்குதலும் புதிய சீர்திருத்தத்தின் சிறப்பார்ந்த உள்ளடக்கங்களாகின்றன. “கற்றலுக்காக கற்றல்” என்பதும் ஒவ்வொருவரையும் தனக்குத்தானே கற்பித்துக்கொள்ளும் ஆசிரியராக்குதலும் முனைப்புப் பெற்றுள்ளன.

கல்வி வாய்ப்புக்களை விரிவாக்குதல் மேலும் முனைப்புப் பெற்றள்ளது. ஐந்து வயது தொடக்கம் பதினான்கு வயது வரை கட்டாயக்கல்வியை வழங்குதலும், முறைசார் கல்வி பெறத் தவறியவர்களும், இடைவிலகியோருக்கும் மாற்று வகையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தலும் முக்கியம் பெற்றுள்ளன். ஆயினும் அவற்றுக்குரிய நடைமுறை வடிவங்கள் போதுமானவையாக இல்லை.

“கல்வித்தர மேம்பாடு” என்ற கருத்து புதிய சீர்திருத்தத்திலே வலியுறுத்தப்பட்டாலும் அவை இன்னமும் நடைமுறை வடிவங்களைப் பெற்றுள்ளனவா என்பது வினாவுக்குரியது. ஆரம்பநிலைக் கலைத்திட்டம் முதன்மை நிலை ஒன்று, இரண்டு, மூன்று என வகுக்கப்பட்டாலும் வாழ்க்கைக்குப் பொருத்தமற்றதும், நவீன உலகின் சவால்களும் ஈடுகொடுக்கமுடியாததுமான ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரீட்சையின் மிகையாதிக்கம் முதன்மை நிலை ஒன்றிலே அரம்பித்து விடுகின்றது.

6 ஆம் 7 ஆம் தரங்களை உள்ளடக்கிய கனிட்ட கலைத்திட்டப் பாட உள்ளடகமும், வழங்கப்படும் அனுபவங்களும் அடுத்து முதன்மை பெறுகின்றது. ஒன்பதாந் தரத்தோடு நியமமான  கல்விச் சுற்றுவட்டத்தையும் கட்டாயக்கல்வி எல்லையையும் விட்டு வெளிச்சென்று நியம உலகின் அறை கூவல்களை எதிர்கொள்ளும். மாணவர்களுக்குப் போதுமானவையாக அக்கலைத்திட்டம் அமையவில்லை. தொடர்கல்வி, மேற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி தொடர்பான உள்ளடக்க அறிமுகங்கள் கனிட்ட இடைநிலைக் கலைத்திட்டத்தில் வறிதாகவேயுள்ளன. உலகின் நவீன வளர்ச்சிக் கோலங்களை அடியொற்றிய தனிநபர் செல்வகுவிப்பையும், வறுமைக் கோட்பாட்டின் கீழ்வாழ்வோரின் எண்ணிக்கை பெருக்கமடைதலையும் அறியாத இருள் நிலையைக் கலைத்திட்டம் உருவாக்கிவிடுகின்றது. முரண்பாடுகளை அறியாத செயலூக்கம் குன்றிய இளைஞர் சமூகத்தையே கலைத்திட்டம் உருவாக்கிவிடுகின்றது.

சிரேஷ்ட இடைநிலைக்கல்வி சாதாரண தர மட்டத்தில் அடிப்படைப் பாடங்களுடன் தெரிவுப் பாடங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளமை 1972 ஆம் ஆண்டுக்கு முந்திய கலைத்திட்ட அமைப்பை நோக்கத் திரும்புவதாகவேயுள்ளது. சிரேஷ்ட இடைநிலைகல்வி உயர்தரத்தில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்ற கற்கை நெறிகள்  முன்மொழியப்பட்டாலும் தொழில்நுட்பப் பாடநெறி  கவனிப்பாரற்ற நிலையிற் காணப்படுகின்றது. இப்பாடநெறியை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் வறிதாகவேயுள்ளன.

புதிய கல்விச்சீர்திருத்தத்தில் முன்மொழியப்பெற்றுள்ள தொடர் தொழில் ஆற்றுப்படுத்தல் மற்றும் சீர்மிய நடவடிக்கைகள் முற்போக்கானவையாகக் காணப்பட்டாலும் அவற்றுக்கான அமைப்பு வசதிகளும், ஆளணி வசதிகளும் உரிய முறையில் உருவாக்கப்படவில்லை. மேலைப்புல சீர்மிய நுட்பங்களை புடமிட்டுப் பயன்படுத்த வேண்டிய தேவையும் முன்னெழச் செய்யபடுதல் காலத்தின் தேவையாக உள்ளது. மேலும் சீர்மியம் என்பது ஒரு வழிமுறையே அன்றி முடிந்த முடிவு அன்று.

பாடசாலையை நிலைக்களனாகக் கொண்ட முகாமைத்துவம், ஆசிரிய மேம்பாடு, பாடசாலை மட்டக் கணிப்பீடு முதலியவை புதிய சீர்திருத்தத்தில் முன்மொழியப்பட்டிருந்தாலும் நடைமுறையில் பொதுப்பாடசாலையின் செயற்பாடுகள், கோட்டக்கல்வி அலுவலகம் மற்றும் வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றின் வலுவான கட்டுப்பாடுகளிங்கீழ் இயங்கும் நிலையே காணப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டில் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றமையை தொடர்ந்து அவை தமது தன்னிலை அதிகார வலுவைப் படிப்படியாக இழ்ந்துவந்துள்ளன. கல்விப் பணியாட்சியின் வலுவான பிடிக்குள் அவை கொண்டு வரப்பட்டுவிட்டன. அதே வேளை இலங்கையில் இயங்கிவரும் சர்வத்தேசப் பாடசாலைகள் பெருமளவு சுயாதீனத்துடன் இயங்கி வருதல் கல்வி நிலையில் முரண்பாடாகவேயுள்ளது.

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து விரிவாக்கம் பெறத்தொடங்கிய உலகமயமாக்கல் இலங்கையின் கல்விச் செயல்முறையிலே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆங்கில மொழி மீண்டும் கல்வி மொழியாதலும், உலக சந்தையினை நோக்கிக் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறுதலும் மேலெழுச்சி கொள்ளத் தொடங்கியுள்ளன.

இலங்கையின் கல்விச் சட்டங்கள்

கல்வியை ஒழுங்கமைப்பதற்குரிய அதிகார மூலவூற்றாக சட்டவாக்கங்கள் அமைகின்றன. இலங்கை வரலாற்றிலே தேவைக்கருதி அவ்வவ்போது பல சட்டங்கள் இயற்றப்பட்டு வந்தன. குடியேற்ற நாட்டு ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டவை. “கட்டளைச் சட்டங்கள்” எனப்படும். சுதந்திரத்தின் பின்னர் (1948) ஆக்கப்பட்டவை ACTS மற்றும் LAWS என்றும் அழைக்கப்படும். நடைமுறை விதிகள் கட்டளைகள் துணை விதிகள் அரசின் நிருவாகப் பிரிவினரால் அவ்வப்போது உருவாக்கப்படுகின்றன.  இலங்கையின் கல்விச் சட்டவியல் வரலாற்றில் இவ்வாறான துணைச்சட்டவாக்கங்கள் பெருமளவிலே காணப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து கல்வி தொடர்பான பல்வேறு கட்டளைச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவை வருமாறு.

 

 

ஆண்டு கட்டளைச் சட்ட இலக்கம் உள்ளடக்கம்
1884 33 பாடசாலைகளின் பராமரிப்பு
1894 7 யாழ்ப்பாணக் கல்லூரியின் பணிப்பாளர் சபை
1900 2 சட்டக்கல்வியன் பேரவை
1902 6 யாழ் இந்துக்கல்லூரி பணிப்பாளர் சபை
1905 3 இலங்கை மருத்துவக் கல்லூரியின் பேரவை
1906 1 நகரப் பாடசாலைகள்
1907 8 கிராமம் மற்றும் பெருந்தோட்ட மாவட்டங்களின் கல்வி
1913 13 பரிதோமஸ் கல்லூரியின் அறங்காவலர் சபை
1914 2 யாழ்ப்பாணக் கல்லூரியின் பணிப்பாளர் சபைத் திருத்தம்
1915 2 செந்தாமஸ் கல்லூரியின் முன்னைய கட்டளைச் சட்டத்திருத்தம்
1916 34 நகரப் பாடசாலைகள் கட்டளைச் சட்டத்திருத்தம்
1917 8 கிராமப் பாடசாலைகள் கட்டளைச் சட்டத்திருத்தம்
1917 14 மிசனெறிமாரின் கல்வி நடவடிக்கை தொடர்பான மேற்பார்வை
1920 1 கல்வி நடவடிக்கைகளும் மேலும் நலவசதிகளை அளித்தல்
1920 15 1920 ஆம் ஆண்டின் முதலாம் இலக்கக் கட்டளைச் சட்டத் திருத்தம்
1925 7 பரமேஸ்வரக் கல்லூரியின் யாப்பு
1926 23 சைவவித்திய விருத்திச் சபை
1927 26 உதவிபெறும் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஓய்வு ஊதியம்
1927 29 மருத்துவம் மற்றும் சுகாதார சேவைத் திளைக்களம்
1931 20 பாடசாலை ஆசிரியர்களுக்களின் ஓய்வு ஊதியம் முன்னைய கட்டளைச் சட்டத்திருத்தம்
1932 13 1920 ஆம் ஆண்டின் முதலாவது கட்டளைச் சட்டத் திருத்தம்
1933 19 பாடசாலை ஆசிரியர்களுக்களின் ஓய்வூதியம் தொடர்பான கட்டளைச் சட்டத் திருத்தம்
1933 28 1920 ஆம் ஆண்டின் முதலாவது கட்டளைச் சட்டத் திருத்தம்
1939 31 இளம் குற்றவாளிகளுக்கு பயிற்சிப் பாடசாலை
1939 56 இலங்கை மருத்துவக் கல்லூரி
1941 10 மாத்தறை இராகுலக் கல்லூரி ஆளுனர் சபை
1941 48 இரத்தினபுரி சிவாலி வித்தியாலயத்தின் ஆளுனர் சபை
1941 53 ஆசிரியர் ஓய்வூதியம்
1942 20 இலங்கைப் பல்கலைக் கழகம்
1942 24 கல்வி அவசரகால உதவி
1943 8 இளம் குற்றவாளிகளுக்கு பாடசாலைத் திருத்தம்
1943 15 வித்தியாலங்காரச் சபை
1943 26 இலங்கைப் பல்கலைக் கழகம் திருத்தம்
1944 2 அனுலா வித்தியாசாலை ஆளுனர் சபை
1945 44  ஸ்ரீ சுமங்கல பாடசாலை முகாமைத்துவம்
1946 19 இலங்கை முஸ்லிம் புலமைப்பரிசில் நிதிய நம்பிக்கைச் சபை
1946 20 மானிப்பாய் இந்துக் கல்லூரி பணிப்பாளர் சபை
1947 26  கல்வித் திருத்தம்

 

இலங்கையின் அரசியற் சுதந்திரத்தின் பின்னர் மேற்கொள்ளபட்ட சட்டவாக்கங்கள் வருமாறு.

ஆண்டு சட்டம் உள்ளடக்கம்
1951 5 கல்வித் திருத்தம்
1952 3 பாடசாலை ஆசிரியர் ஓய்வூதியம் திருத்தம்
1953 43 கல்வித் திருத்தம்
1956 19 முஸ்லிம் மகளிர் கல்லூரி பணிப்பாளர் சபை
1956 20 மகாமந்திந்த வித்தியாலங்கார சபை
1956 36 இலங்கைப் பல்கலைக்கழகம் திருத்தம்

 

1956 ஆம் ஆண்டிலே கல்வி தொடர்பான பலதுணைச் சட்டவாக்கங்களும் இடம்பெற்றன. 1957 ஆம் ஆண்டிலிருந்து பின்வரும் சட்டவாக்கங்கள் கல்வியியலில் இடம்பெற்றன.

ஆண்டு சட்டம் உள்ளடக்கம்
1957 23 பாடசாலை ஆசிரியர் ஓய்வூதியம் திருத்தம்
1958 37 கல்வித் திருத்தம்
1958 45 வித்தியோதய பல்கலைக்கழகம் மற்றும் வித்தியாலங்கார பல்கலைக்கழகம்
1959 17 வித்தியா நிகேத சன்றக்ஸ்க சபை
1960 5 உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளும் ஆசிரியர் கலாசாலைகளும் சிறப்பு வகை
1961 8 உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளும் ஆசிரியர் கலாசாலைகளும் மேலதிக வகை
1961 12 இலங்கைப் பல்கலைக்கழகம் திருத்தம்
1961 38 பாடசாலை ஆசிரியர் ஓய்வூதியம் திருத்தம்
1964 34 பாடசாலை ஆசிரியர் ஓய்வூதியம்
1966 20 உயர் கல்வி
1968 16 புத்த சர்வகதர்மபிதய
1968 25 பரீட்சைத் திணைக்களத்தை சுயாதீனமான ஆணைக்குழுவாக மாற்றுவதற்குரிய சட்டம்

1939 ஆம் ஆண்டின் கல்விக் கட்டளைச் சட்டம் 1937 ஆம் ஆண்டின் பாராளுமன்றச் சட்டத்தினால் மாற்றியமைக்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டுக்கும் 1937 ஆம் ஆண்டுக்குமிடையே மேற்குறிப்பிட்ட பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. கல்விச் செயற்பாடுகள் நிலைத்தவை அன்று. சமூக நோக்கும் தேவைகளும் மாற்றமடைய பொருண்மியக் கோலங்களில் மாற்றங்கள் நிகழ கல்விச் சட்டங்களும் அவற்றிற்கு இயைந்தவாறு மாற்றப்படலாயின. இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் சிறப்பாக இனத்துவம் சார்ந்த அரசியல் விசைகளும் கல்விச்சட்டவாக்கங்களிலே செல்வாக்குச் செலுத்தியுள்ளமை குறிப்பிடப்படுகின்றன.

மேலும் உலக நிகழ்ச்சிகளின் தேவைகளும் அறைகூவல்களும் சட்டவாக்கங்களுக்குப் பின்புலமாக அமைத்து வருகின்றன.

1958 ஆம் ஆண்டில் 28 ஆம் இலக்கச் சட்டம் தேசிய கல்வி நிறுவகம் பற்றிய விபரிப்பைக் கொண்டுள்ளது. இலங்கை அரசின் அதிகாரப் பங்கீடு தொடர்பான 13 வது திருத்தத்தின்படி தேசிய கல்வி நிறுவகம் ஆக்கம் பெற்றது. அந்த நிறுவனத்தின் இலக்குகளாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.

 • கல்வி தொடர்பான திட்டங்கள், செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சருக்கு மதியுரை செய்தல்.
 • கல்வியலில் சிறப்புத்துறைகளில் பின்பட்டப்படிப்பு
 • கல்விச் செயலமைப்புத் தொடர்பான கற்கைகளை மேம்படுத்துதல்.
 • கல்வித் தொழில்நுட்பத்தின் புத்தாக்கங்கள்.
 • தகைமைசார் ஆளணியினரின் மேம்பாடு.
 • சிறப்பார்ந்த சேவை வழங்கல்.
 • அமைச்சரால் அனுமதிக்கபட்ட நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்துதல்.
 • ஒப்புமையான ஏனைய நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்துதல்.

அந்நிறுவனத்தின் புலமை அதிகாரங்களாகப் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன.

 • கல்வியிற் பட்டபடிப்பு மற்றும் தகைமைச் சான்றிதழ் படிப்பு தொடர்பான சட்டவிதிகளை விதித்தல்.
 • இணைந்த கல்லூரிகளின் மாணவர்களைப் பதிவு செய்தல்.
 • தேர்வுகள் நடத்துதல்.
 • பின்பட்டக்கல்வி
 • வாண்மை நிறுவனங்களை நிறுவுதல்.
 • ஆசிரியர் கல்லூரிகளைப் பதிவு செய்தல்.

இச்சட்டத்தின் 7 ஆம் பிரிவில் பேரவை பற்றியும் 10ஆம் பிரிவில் புலமைச் செயற்பாட்டு அவை பற்றியும்  11ஆம் பிரிவில் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் பற்றியும்  12ஆம் பிரிவில் நிறுவாக உத்தியோகத்தர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாடசாலை கலைத்   திட்டச் செயற்பாடுகள் தேசியகல்வி நிறுவகத்தின் அதிகார வரம்புக்குள் அடக்கப்படவில்லை. ஆனால் இன்று அதுவே நிறுவகத்தின் பிரதான தொழிற்பாடாகிவிட்டது. இதனை உள்ளடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

1986ஆம் ஆண்டின் 30ஆம் இலக்கச் சட்டம் கல்வியற் கல்லூரிகளை நிறுவுதல் தொடர்பானதாகும். இவை தேசியகல்வி நிறுவனத்துடன் இணைந்ததாகத் தொழிற்படும். கல்வியியற் கல்லூரிச் சபை ஏழு உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்படும். இச்சபை கல்லூரிகளின் முகாமைக்குரிய அதிகாரங்களைக் கொண்டிருக்கும். கல்வியற் கல்லூரிக்குரிய பலமை அதிகாரங்கள் சட்டத்தின் 12ஆம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளன. தேசியகல்வி நிறுவக சட்டத்தின்படி மேற்படி நிறுவகத்தின் அங்கீகரிப்புக்கு உள்ளான பட்டங்கள், சான்றிதழ்கள் முதலியவற்றை வாழ்க முடியுமாயுனும் அவை ஆசிரியத்துவத்துக்குரிய சான்றிதழ்களாக அந்நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.

இலங்கையில் கல்விச் சட்டவாக்கங்களில் அடுத்து முக்கியத்துவம் பெறுவதில் 1991 ஆம் ஆண்டின் தேசியகல்வி ஆணைக்குழு பற்றிய சட்டமாகும். கல்வி தொடர்பான கொள்கையாக்கங்களைப் பரிந்துரை செய்தல் இந்த ஆணைக்குழுவின் சிறப்பார்ந்த பொறுப்பாகும். கல்வியின் இலக்குகள், குறிக்கோள்கள், கல்வியின் கட்டமைப்பு, முன்பள்ளிக்கல்வி, ஆரம்பக்கல்வி, இரண்டாம் நிலைக்கல்வி, உயர் கல்வி, முறைசார்கல்வி, முறைசாராக்கல்வி, சிறப்புக்கல்வி, வளர்ந்தோர் கல்வி, வாண்மை மற்றும் சமயக்கல்வி தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்குரிய பரிந்துரைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும்.

இந்த ஆணைக்குழுவுக்குரிய உறுப்பினர்கள் பதவி வழியாகவும் சனாதிபதியாலும் நியமனம் பெறுவர். பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது மாகாணசபை உறுபினர்களோ இந்த ஆணைக்குழுவில் உறுப்பினராக இயங்க முடியாது. இவற்றைத் தொடந்து மேலும் பல சட்டவாக்கங்கள் இடம்பெற்றன.

பாடசாலை அபிவிருத்திச்சபை தொடர்பான 1993 ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளை மேற்பார்வை செய்வதற்கென உருவாக்கப்பட்ட 1997 ஆம் ஆண்டின்ன் 32 ஆம் இலக்கச் சட்டம் முதலியவை குறிப்பிடத்தக்கவை.

புதிய சட்டங்களை ஆக்குதலும் பழைய சட்டங்களிலே திருத்தங்களை கொண்டு வருதலும் சமூக வளர்ச்சியோடும் அபிவிருத்தியோடும் இணைந்த நடவடிக்கைகளாகும். இலங்கை போன்ற பன்மைச் சமூகங்கள் வாழும் நாடுகளில் உருவாக்கப்படும் சட்டங்கள் தேசிய இனங்களின் நலன்களுக்கு ஊறு செய்யாதவாறு இருத்தலே மக்களாட்சிப் பண்பின் உன்னத வெளிப்பாடாக இருக்கும். சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது அவற்றுக்கு கொடுக்கப்படும் “பொருள் கோடல்கள்” அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. பொருள் கோடல்களும் தேசிய இனங்களின் நலன்களையோ விளிம்பிலுள்ளோரின் நலன்களையோ பாதிப்பதாக இருத்தலாகாது.

கல்விச் செயற்பாடுகளை வளமாகவும், விளைதிறனுடனும் இயங்கிக்கொள்வதற்குச் சட்டவாக்கங்கள் அடிப்படையானவை. சட்ட வல்லுனர்களதும் கல்விவல்லுனர்களதும் இணைந்த முயற்சிகள் சிறந்த சட்டவாக்கங்களை முன்னெடுப்பதற்கு அடிப்படையாக வேண்டப்படுகின்றன.

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தமும் கல்வியும்

இலங்கை அரசியல் அமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் (1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது) மாகாணசபைகளின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. திருத்தத்தின் மூன்றாவது அனுபந்தம் கல்வி என்ற தலைப்பில் அமைந்துள்ளது. தேசிய பாடசாலைகள் மற்றும் சிறப்புப் பாடசாலைகல் ஆகியவை மாகாணசபைகளின் கீழ்வரமாட்டா என்பது முதற்கண் குறிப்பிடத்தக்கது. அவை தவிர்ந்த ஏனைய பாடசாலைகளையும் முன்பள்ளிகளையும் முகாமை செய்தலும், மேற்பார்வை செய்தலும் என்ற செயற்பாடுகள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டாலும் கல்வியின் தரத்தை உறுதி செய்யும் பொருட்டு கல்வி அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகப் பட்டம் பெற்றோரையும் கல்வியியற் கல்லூரிகளின் டிப்ளோமா சான்றிதழ் பெற்றோரையும் மாகாணசபைகள் ஆசிரிய சேவைக்கு இணைத்துக்கொள்ள முடியும். A,B,C பாடசாலைகளுக்குக்குரிய அதிபர்களை நியமிப்பதற்கோ ஆசிரியர்களுக்குப் பயிற்சிக் கலாசாலைகளை அமைப்பதற்கோ மாகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. கல்வி அமைப்பின் நிபந்தனைகளுக்கு அமைய மாகாணசபைகள் பாடசாலைச் சபைகளை அமைக்கலாம். அவற்றை மேற்பார்வையும் செய்யலாம். அத்துடன், திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தலாம். மேலும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிருவாகப் பணியாளர்களின் செயற்றின்களை மதிப்பீடு செய்யவும் முடியும். தேசியக்கல்வி நிறுவகத்தின் அனுமதியுடன் ஆசிரியர்களுக்குப் பணிக்காலப் பயிற்சியையும் வழங்கலாம்.

பரீட்சைகளைப் பொறுத்தவரை பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் அங்கீகாரத்துடன் உள்ளூர்ப் பரீட்சைகளை நடத்த முடியும். முறைசாராக்கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பப் பாடசாலைக் கலைத்திட்டம் மற்றும் இரண்டாம் நிலைப் பாடசாலைக் கலைத்திட்டத்திலுள் தெரிவு செய்யப்பட்ட பாடங்களில் உள்ளூர் வேறுபாடுகளை தேசிய கல்வி நிறுவகத்தின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ள முடியும்.

பாடசாலைக் கட்டிடங்கள், நூலகங்கள், விளையாட்டுத் திடல்கள் முதலியவற்றை அளக்கும் செயற்பாடுகளில் மாகாண சபைகள் ஈடுபடமுடியும். பாடசாலைத் தளபாடங்கள் மற்றும் கற்றல் கற்பித்தல் சாதனங்களைத் தெரிவு செய்து விநியோகிக்கவும் முடியும். கல்வி அமைச்சரால் குறிப்பிடப்பட்டவை தவிர ஏனைய விஞ்ஞான உபகரணங்களையும் விநியோகிக்க முடியும். கல்வி அமைப்பின் அங்கீகாரத்துடன் பாட நூல்களை ஆக்கவும், வழங்கல் செய்யவும் ஏற்பாடுகள் தரப்பட்டுள்ளன.

தேசிய நூலக சேவையின் வழிகாட்டலுக்கமைய பாடசாலை நூல்களை ஒழுங்கமைக்கவும் மேம்படுத்தவும் முடியும்.

திறனாய்வு நோக்கிலே பார்க்கும் பொழுது மாகாண சபைகளுக்குரிய கல்வி அதிகாரங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலை இருப்பதைக் காண முடிகின்றது. மாகாண சபைகள் தமது பாடசாலைக்குரிய கலைத்திட்டத்தை உருவாக்கவோ செயற்படுத்தவோ முடியாது. கலைத்திட்டம் பரீட்சைகள், உயர்கல்வி நிருவாக நியமனங்கள், ஆசிரியர் பயிற்சி என்றவாறு கல்வியின் பிரதான துறைகள் அனைத்தும் மத்திய கட்டுப்பாட்டிங்கீழ் அமைக்கப்பட்டுள்ளன.

ஆழ்ந்து பார்க்கும்போது கல்வியில் அதிகாரப் பங்கீடு என்பது அறிதாகிய நிலையிலே காணப்படுவதுடன் மத்திய மயப்பட்ட அதிகாரங்கள் மேலும் வலுவூட்டப்பட்டுள்ளதை தெளிவாக புலப்படுகின்றது.

மேலும் இந்த செயற்பாடுகள் கல்வியில் இருமைத் தன்மையையும், முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளன. வளமும் சிறப்பும் புகழும் பெற்ற தேசிய பாடசாலைகளும் சிறப்புப் பாடசாலைகளும் மாகாண சபைகளின் கட்டுப்பாட்டிங்கீழ் இல்லை என்ற நிலை மாகாண சபைகள் தொடர்பான கல்விசார் புலக்காட்சிகளை தாழ்ந்த நிலைக்குத் தள்ளிவிடுகின்றது. காலணித்துவ காலத்திலே காணப்பட்ட பாடசாலை, அந்தஸ்து, ஏற்றத்தாழ்வுகளுக்கு இவை மீண்டும் புத்துயிர்ப்பை வழங்கியுள்ளன.

அரசியல் அமைப்பின்  13 வது திருத்தம் புறவயமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டியுள்ளது. கல்வியியல் போக்கு, அதிகாரப்பங்கீடு தொடர்பான அரசியல் நோக்கு பிரதேசங்களுக்கிடையே காணப்படும் தனித்துவமான இயல்புகள் பண்பாடுகளின் பன்முகத் தன்மைகள் வளங்களின் இயல்புகள் முதலாம் பன்முகமான பரிமாணங்களை அடியொற்றி 13 வது திருத்தம் ஆராயப்பட வேண்டியுள்ளது.