முனைவர் ப.வடிவேல், தமிழ் இணைப்பேராசிரியர், ந.க.ம கல்லூரி, பொள்ளாச்சி.

———————————————————————————————–

அருங்கலச் செப்பு உரைக்கும் அணுவிரதம்

இல்லறத்தார் ஒழுக்க நூலென்று குறிப்பிடப்படுகின்ற பெருமையுடையது அருங்கலச் செப்பு என்னும் சைனசமய நூல். இது 181 பாக்களில் நற்காட்சி/ நல்ஞானம்,நல்லொழுக்கம் இவற்றைப் போதிக்கின்றது. அரிய கருத்து மணிகளின் பெட்டகம் இந்நூல். இரத்தின கரண்டகம், சிராவகாசாரம் என்னும் இருநூல்கள் இதன் முதல்நூல் என்றும், இரத்தின கரண்டக சிராவகாசாரம் எனும் சமஸ்கிருதநூலின் பெயர் கொண்டே இந்நூற்பெயர் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இருநிலைக் கருத்துகள் உண்டு. ஏனெனில், இரத்தினம் என்பது மணியையும், கரண்டகம் என்பது சிறுபெட்டகத்தையும் குறிக்கும் சொற்பொருள்களாகவும், சிராவகாசரம் என்பது சிராவக+ஆசாரம் எனப்பிரித்து இல்லற ஒழுக்கம் என்னும் அருங்கலச் செப்புடன் இணைத்துக் காணப்பட்டன.

துறவியுரைத்த இல்லறச் செம்மை :

       இல்வாழ்க்கையின் இன்ப மறைபொருட்களைத் தெற்றென விளக்கிய துறவியாகிய ஆதிசங்கரர் போல் அருங்கலச்செப்புரைத்த ஆசிரியரும் ஒரு துறவியாய் இருத்தல் கூடும் எனத் துணிகின்றார் முனைவர் க.ப.அறவாணன். அவர்தம் துணிபிற்குத் துணையாக இல்லறத்தார் நோக்கம் துறவறத்தாரை எப்போதும், முப்போதும் வரவேற்று உபசரித்து உண்டி, மருந்து, இருப்பிடம், மற்றைய உதவிப்பொருள்களைக் கொடுத்தல் அதிதிசம்விபாகம் (பா. 134-140) என்று அமைத்திருத்தலையும், ‘முற்று உணர்ந்தான்’ என்னும் அருகதேவனை வணங்கும் சைனசமய நூலாசிரியருள் துறவிகளே மிகுதி என்பதையும் காட்டியுள்ளார். மேலும்,

“மனை துறந்து, மாதவர் தாள் அடைந்து, நோற்று

வினை அறுப்பான் உத்திட்டன் ஆம்”,(பா. 172)

என்னும் பாவில் வீடு, மனைவி, மக்களைத் துறந்து பெரும் தவசியை அடைந்து நோன்பு இருப்பவன் இல்லறத்தொடர்புகளையெல்லாம் அறுத்துக்கொண்ட முனிவர்கள் போல இரந்துண்கின்றார் என்று இல்லறத்தின் பின் மேற்கொள்ளும் துறவறத்தின் இன்றியமையாமையைச் சுட்டியுள்ளார் என்பதையும் கொண்டு இந்நூலாசிரியர் துறவியாய் இருத்தல் கூடும் என்கிறார்.

நல்லொழுக்கம் :  

நூலமைப்பின் முப்பெரும் அறங்களிலொன்று நல்லொழுக்கம். இந்நல்லொழுக்கம் இல்லறத்தார்க்கென்றும் துறவறத்தார்க்கென்றும் இரு வகைகொண்டதாய் அமைந்துள்ளது. இவ்விருவருக்குமான விரதங்களை நூலாசிரியர்,

“ நிறைந்தது இருடிகட்கு ஆகும்; மனையார்க்கு

ஒழிந்தது மூன்று வகைத்து”,(64)

எனும் பாவால் குறித்துள்ளார். துறவிகளுக்கு மகாவிரதம் உரியது. இல்லறத்தார்க்கு அணுவிரதம், குணவிரதம், சிட்சாவிரதம் என்ற மூன்றும் உரியன என்பது இதன் பொருள்.

“காட்சி உடையார் வினைவரும் வாயிலின்

மீட்சியா நல்லொழுக்கு நன்று”,(62)

பிறவிக்கு வித்தான கர்மங்களிலிருந்து மீளச்செய்வது நல்லொழுக்கம் என்கிறார்.

அணுவிரதம் :

       “அணுவதம் ஐந்தும் குணவதம் மூன்றும்

உணர்நான்கு சிக்கா வதம்”,(65)

எனும் பாவின் மூலம் இல்லறத்தார்க்கு உரிய விரதங்களில் அணுவிரதம் ஐந்து பிரிவானது. குணவிரதம் மூன்று பிரிவானது. சிக்காவிரதம் நான்கு பிரிவானது என்றுரைத்துள்ளார். இதனை உரைகாரர் விளக்கவுரையில் அணுவிரதம் ஐந்தாவன அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், பிரம்மசர்யம். பரிமித பரிக்கிரகம் என விளக்கியுள்ளார். இவ்வாறே குணவிரதத்தின் மூன்று, சிட்சாவிரதத்தின் நான்கு ஆகியனவும் சேர்த்து, இப்பன்னிரண்டும் இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் எனக் கூறியுள்ளார்.

“பெரிய கொலை, பொய், களவொடு,காமம்

பொருளை வரைதலோடு ஐந்து”,(66)

என்பதால், கொல்லாமை, பொய்யாமை, களவாடாமை, காமத்தை விலக்குதல், பொருளை விலக்குதல் என அணுவிரதத்தின் ஐவகைகளைத் தெளிவுற விளக்கியுள்ளார். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பாவால் கூறி, அவ்விரத மீறல்களான அதிசாரங்கள் எவையென்று மற்றொரு பாவால் விளக்கிக்கூறியுள்ளார்.

கொல்லாமை :

       “இயங்கு உயிர் கொல்லாமை, ஏவாமை ஆகும்.

பெருங்கொலையின் மீட்சி எனல்”,(67) பெருங்கொலையின் மீட்சி

என்பதனை, இல்லறத்தார் செடி கொடி காய்கள் முதலிய தாவரங்களைச் சமைத்துண்ணல் இயல்பு, ஆதலால் அவ்விதமான கொலையிலிருந்து வேறுபடுத்தவே “பெரியகொலை செய்யாதிருத்தல்” என்னும் பொருள்படக் கூறியுள்ளார்.

இவ்வாறே கொலை செய்தல் மட்டுமே தவறு, செய்விக்க ஏவுதல் தவறன்று என எண்ணிவிடக் கூடும் என்பதாலும், பிறர் செய்யும் கொலைச் செய்கைக்கு உடன்படுதலும் தவறு என்பதாலும் கொல்லாமை, ஏவாமை எனும் தொடர்களால் உணத்தியுள்ளார். எனவே, தானே கொலை செய்தல் (கிரதம்), பிறரைக் கொண்டு கொலை செய்வித்தல் (காரிதம்), பிறர் செய்யும் கொலைச் செயலுக்கு உடன்படுதல் (அனுபோதம்) என்னும் மூன்று வழியிலும் விலகி இருத்தலை சிறந்தது என்றும் அதுவே அகிம்சா அணுவிரதத்தின் குறிக்கோளென்றும் உரைத்துள்ளார்.

கொல்லாமை என்ற அகிம்சா விரதத்தினை மீறாமல் இருக்க வேண்டுமெனில் அவ்விரதத்தின்படி நிற்போர், விலங்குகளின் உறுப்புகளை அறுத்தல், சாட்டை முதலானவற்றால் அவற்றை அடித்தல் உணவு இடாமல் ஓரிடத்தில் நெருங்க அடைத்து வைத்தல், கயிறு முதலானவற்றால் கட்டி வைத்தல், மிகுந்த சுமையை ஏற்றுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்யாதிருத்தல் வேண்டும் என்றும் கூறுகின்றார். விரதம் மீறும் செயல்களை அதிசாரம் என்னும் பெயரால் சுட்டியுள்ளார்.

பொய்யாமை :

“பாவம் பொருந்துவன சொல்லாமை ஏவாமை

ஆகும் இரண்டாம் வதம்”,(69)

என்பதனால் பொய்யாமை என்பதை உண்மைக்கு மாறானது என்ற கருத்தில் கையாளாமல் பழிபாவத்திற்குக் காரணமானவற்றை கூறாமையும் பிறரைச் சொல்லும்படி ஏவாமையும் “சத்யா அணுவிரதம்” என்று பொய்யாமையை விளக்கியுள்ளார். பாபம் விளைவிக்கக் கூடியதை அது உண்மையே எனினும் சொன்னாலோ, சொல்வித்தாலோ அதுவும் பொய்யின் பாற்படும். பாபம் தராத பொய்மையும் உண்மையே என்னும் கருத்திலமைந்த

“பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்”,

என்னும் திருக்குறளையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

களவாடாமை :

“கொடாதது கொள்ளாமை ஏவாமை ஆகும்

கொடாதது கொள்ளா வதம்”,(71)

பிறர் ஒருவர் தாமே கொடுக்காமல் போற்றும் பொருளைக் கவர்ந்து கொள்ளாது இருத்தலும், தானே நேரில் செய்யாமல் பிறன் ஒருவனைக்கொண்டு திருடி வருமாறு ஏவாமல் இருத்தலும் கொடுக்காததைக் கொள்ளாமை அல்லது கள்ளாமை எனும் விரதம். இதனை அஸ்தேயாணுவிரதம் என்பர்.

“குறைவு நிறைகோடல், கொள்ளைக் கவர்தல்

மறைய விராதல் இறப்பு”,(72)

“கள்ளரொடு கூடல், கள்ளர் கொணர் பொருளை

உள்ளினர் கோடலோடு ஐந்து”,(73)

என்னும் இரு பாக்களின் வழியே கள்ளாமை விரதத்தின் சிறப்புகளையும் அதிசாரங்களையும் வரையறை செய்துள்ளார்.

காமம் வரைதல் :

“விதித்த வழிஇன்றிக் காமம் நுகர்தல்

மதிப்பின்மை நான்காம் வதம்”,(74)

தாய், தந்தை, ஆசான், சுற்றம் போன்றோர் முன்னிலையில் மணந்து கொண்ட தன் மனைவியிடத்தல்லது பிறபெண்டிரிடத்து இன்பம் துய்த்தலை மனத்தாலும் மதித்து நினைக்காமை என்னும் பிரம்மச்சார்யாணுவிரதம், பிறனில் விழையாமை என்னும் வள்ளுவர் கருத்துடன் ஒத்துள்ளது. கள்ளாமைக்குக் கூறியது போன்றே, இருபாக்களில் விரதம் கெடுக்கும் அதிசாரங்களைக் கூறியுள்ளார்.

பெண் வழி அன்றிப் பிற வழிகளில் காமம் நுகர்தல், காம நினைவில் மூழ்கிக் கிடத்தல், வேசியரோடு உறவு கொள்ளல் என்று மூன்றும் பிரம்மச்சர்ய விரதத்தைக் கெடுப்பவை என்றும், அவற்றுடன் பிறர் மனைவியுடன் உறவிகொள்ளுதல், விதவை முதலானவரிடம் உறவு கொள்ளுதல் என்ற இரண்டும் சேர்ந்து ஐந்தும் அதிசாரங்கள் என்றும் சுட்டியுள்ளார்.

பொருள்வரைதல் :

“பொருள் வரைந்து ஆசை சுருக்கி ஏவாமை

இருள் தீர்ந்தார்க்(கு) ஐந்தாம் வதம்”,(77)

பொருள்களைத் தேவையான அளவிற்குப் போற்றி, மிகுபொருள் விரும்பாமையும், அப்பொருளைப் பெருக்கப் பிறரை ஏவல் கொள்ளாதிருத்தலும், பரிமிதபரிக்கிரவிரதம் எனப்படும் மிகுபொருள் விரும்பாமை விரதமாகும்.

கால்நடைகளின் துன்பம் அறியாமல் அவற்றின் மீதமர்ந்து பயணித்தலும், தானியங்களை நிரம்பச் சேர்த்து, பாதுகாக்க இயலாது புழுக்கள் உண்டாக்கிப் பிறருக்கும் கொடுக்க இயலாது வீணடித்தலும், எளியார்க்குக் கொடுத்து மகிழாத கருமித்தனமும், பிறர் உடைகண்டு வியந்து பொறாமை கொள்ளுதலும், தன்னால் முடிக்க இயலாத செயலினைப் பொருளாசையால் செய்யத் துணிதலும் மிகுபொருள் விரும்பாமை எனும் விரதத்தை நசிக்கச் செய்யும் ஐந்து அதிசாரங்கள்.

இதுகாறும் கண்ட ஐவகை விரதங்களை உள்ளடக்கிய அணுவிரதத்தின் சிறப்பினை,

“ஐந்து இறப்பு இகந்த, ஐந்து வதங்களும்

செய்யும் சுவர்க்கச் சுகம் “,(79)

என்னும் பாவின் மூலம் மேற்கூறிய இருபத்தைந்து அதிசாரங்களையும் நீக்கி மேற்கொள்ளப்படும் ஐவகை அணுவிரதங்களும் ஒருவனுக்கு இவ்வுலக வாழ்வில் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டே மறுமை உலக சுகத்தைத் தரவல்லவை என உணர்த்தியுள்ளார். இறுதியாக, இல்லறத்தார்க்கு வேண்டிய இன்றியமையாக் குணங்களை,

“கள்ளொடு, தேன், புலைசு உண்ணாமை, ஐவதமும்

தெள்ளுங்கால் மூல குணம்”,(82)

என்னும் பாவின் வழியே கூறியுள்ளார். கள்ளுண்ணாமை, தேன் உண்ணாமை (சிலம்பில் கவுந்தியடிகளும் உரைக்கின்றார்), புலால் உண்ணாமை என்னும் மூன்று குணங்களையும் மேற்சுட்டிய ஐந்து அணுவிரதங்களுடன் சேர்த்து எட்டு குணங்களும் இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய மூலகுணங்கள் (தவறாது பின்பற்றத்தக்கன) எனக் கூறியுள்ளார். இரத்தினத் திரயங்களில் நல்லொழுக்கத்தின் சிறுபகுதி மட்டுமே இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக, 10ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகக் கருதப்படும் அருங்கலச் செப்பு உரைத்துள்ள அணுவிரதக் கூறுகளும், திருவள்ளுவர் மொழிந்த அறங்களும் பெரும்பான்மை ஒத்துள்ளன என்பதையும் ஒப்பியல் நோக்கில் கண்டு இன்புறலாம்.

 

Leave a Reply