உரையாசிரியர் பாரதி – முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்

                                 முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம்,                                                                          பொள்ளாச்சி

உரையாசிரியர் பாரதி

பாரதியார் படைப்புகளை வியந்துரைக்கும்போது திறனாய்வாளர் ஆர்.கே.கண்ணன் ‘அவன் ஒருவனே வெல்லடற்கரியவன்’ என மொழிவார். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் துறைதோறும் அப்பேராசானின் ஒளி பரவி இருப்பதைக் கருத்தில் கொண்டுதான் அவர் இவ்வாறு கூறி இருக்க வேண்டும்.

          கட்டுரையாளர், சிறுகதை முன்னோடி, நாவலாசிரியர், கவிதை நாடகப் பரிசோதனையளர், புதுக்கவிதை தலையூற்று எனப் படைப்புலகிலும் தேசியம், சமுதாய சீர்திருத்தம், பெண் விடுதலை, பொருளாதாரம், பன்னாட்டரசியல், எனப் பல துறைகளிலும் தன் தகத்தாய முத்திரை பதித்தவர் பாரதியார். நாளிதலழ்களில் பணியாற்றியவர்.வார மாத இதழ்களில் ஆசிரியராகத் திகழ்ந்தவர். இத்தனை பரிமாணங்களும் பொதிந்த  இக்கவிங்கரிடம் காணப்படுகின்ற மற்றொரு வியத்தகு ஆற்றல் வடிவம் தான் அவர் தம் உரையாசிரியர் தோற்றம்.

உரை ஏன் தோன்ற்றுகிறது ?

          ஒரு நூலுக்கு உரை அல்லது விளக்கம் எழுதுவதற்கு காரணங்கள் பல;

 1. மூல நூல் இயற்றப்பட்ட கால இடைவெளி.
 2. மூல நூலின் சிக்கனச்சொல்லாட்சி (அ) திட்ப நுட்பம்.
 3. மூல நூல் குறிப்பிட்ட துறையினதாதல்.
 4. மூல நூல் பல்வகை விளக்கங்களுக்கு இடம் தருதல்.
 5. நூல் நயம் காணுதல்.
 6. பிறமொழி நூல் அறிமுகம்

எனப் பல காரனணங்கள் உரை தோன்றுவதற்கு அடிப்படை காரணங்களாகும். நூற்றாண்டுகளின் இடைவெளி காரணமாக ஒரு நூல் மொழிவேறுபாடு காரணமாகவும் புரிந்துகொள்ள இயலாது போகும். எனவே வல்லுனர் தம் உரை விளக்கம் தேவைப்படுகிறது. சில நூலாசிரியர்கள் திட்ப நுட்பமாக வெளியீட்டு முறைகளைக் கையாளுகின்றனர். சாதாரண வாசகர்கள் திருக்குறள் போன்ற செறிவுமிக்க சொல்லாட்சி நுட்பங்களை உணர்வது சிரமம். பயிற்சிமிக்கோர் இவற்றின் உள் நுழைய உரை மூலம் வழிதுலக்குகின்றனர். ஒரு நூல் இலக்கணம் அல்லது சமையத் தத்துவதின் அடிப்படையில் எழுந்திருக்குமாயின் அத்துறை வல்லாரின் விளக்கமின்றிப் பொருளரிதல் இயலாது. அதன் காரணமாக உரை தேவைப்படுகிறது.

          சில நூல்களின் பாடல்கள் அல்லது  பாடலின் சொற்கள் வெவ்வேறு பொருளையும்,விளக்கதையும் தருமாறு அமைந்து விடுகின்றனர்.

          ‘அறத்தா றிதுவென வேண்டா’ என்ற குறளுக்கு உரை சொல்வதில் வேறுபாடுகள் இருப்பதை எடுத்துக்காட்டாய்க் கூறலாம்.

          இலக்கியங்களில் நூல் நயம் காண உரைகள் பயன்படுகின்றன. ’என்னிலா அருந்தவத்தோன்’என்ற கம்பரின் தொடருக்கு ‘எண்ணில்+ஆ+அருந்தவம்,’எண்ணில்+ஆ+அருந்தவம்’ என்றெல்லாம் உடைத்து பொருள் கூறுவர் உண்டு. பிறமொழி நூலை மொழியாக்கம் செய்யும் போதும் உரை விளக்கம் தேவைப்படுகின்றது.

 

 

 

உரை வடிவங்கள்

          உரைப்பொருள் யாருக்குப் பயன்தர வேண்டுமென்று கருதப்படுகின்றதோ, அதற்கேற்ப உரைபல வடிவங்கள் கொள்கின்றது.

          அரும்பதவுரை,குறிப்புரை,கருத்துரை,காண்டிகையுரை,விருத்தியுரை,பொழிப்புரை எனப் பல வடிவங்கள் உரைகளில் காணப்படுகின்றது.

          அரும்பதவுரைகாரரேயன்றி மயிலை நாதர் போன்ற காண்டிகை உரைக்காரர்,சிவஞான முனிவர் போன்ற விருத்தியுரைக்காரர், தருக்க நெறி நிறைந்த சேனாவரையர், நுட்பங்காணும் நச்சினார்க்கினியர், செறிவுமிக்க பரிமேலழகர், நயங்கானும் வைணவ உரைக்காரர் எனப் பல வித்தகர்களையும் தமிழ் இலக்கிய உலகில் காண முடிகின்றது. வாழையடி வாழையென வந்த அந்த மரபில் தம்மையும் இணைத்துக் கொள்கிறார் பாரதியார்.

பாரதியார் எழுதிய உரைகள்

          பாரதியார் தம் கட்டுரைகளிலும் குறிப்புகளிலும் சில இலக்கியங்கள் குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக புது விளக்கங்கள் தந்துள்ளார். ஆயினும் அவர் எழுதியுள்ள உரைகள் எனத் தெளிவாகக் குறிக்கத்தக்கவை.

 1. பாஞ்சாலி சபத உரைக்குறிப்புகள்.
 2. பதஞ்சலி யோக சூத்திர உரை.
 3. பகவத் கீதை உரை.

ஆகிய மூன்றுமே ஆகும்.

பாஞ்சாலி சபதம்

          பாஞ்சாலி சபதம் 307 பாடல்களைக் கொண்ட சிறு காப்பியம். அழைப்புச் சருக்கம்,சூதாட்டச் சருக்கம்,துகிலுரிதல் சருக்கம் கொண்ட முதற்பாகமும், அடிமை சருக்கம், துகிலுரிதல் சருக்கம்,சபதச் சருக்கம் எனும் மூன்று பகுதிகள் கொண்ட இரண்டாம் பாகமும் கொண்டது இந்த நூல். கவிஞர் தம் காலத்தில் முதல் பகுதி வெளிவந்தது. 1919-லேயே இரண்டாம் பாகத்தின் கைப்பிரதி குறித்து வை. சு.சண்முகத்துக்கு எழுதிய கடிதத்தில் பாரதியார் குறிப்பிடுவதால் முன்னரே  இரண்டாம் பாகம் எழுதி முடிக்கப்பட்டு விட்டதாக அரிகிறோம்.ஆயினும் 1924-ல் தான் இருபாகங்களும் இணைந்து வெளியிடப்பட்டன.கவிஞரின் மரணத்துக்குப் பின்னரே இரண்டாம் பாகம் வெளிச்சத்தைக் கண்டது.

பாஞ்சாலி சபத உரை

          பாரதியார் தாம் படைத்த  நூலுக்குப் பொருள் விளக்கமும் குறிப்புரைகளும் என்னும் தலைப்பில் உரை வரைந்திருக்கிரார். இவ்வுரை முதற்பாகத்திட்கு மட்டுமே அமைந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கு அவர் உரை எழுதியிருக்கக் கூடும். ஆயினும் அவர் மறைவுக்குப் பின் உரை வெளிவந்த காரணத்தால் பிரதி தவறிப்போயிருக்க வாய்ப்புண்டு.

          ஒரு நூலிற்கு அந்த நூலின் படைப்பாளனே உரை எழுதுதல் தகுமா என்ற வினாவிற்குத் தம் ‘உரையாசிரியர்கள்’ நூலில் விளக்கம் தருகிறார் மு.வை. அரவிந்தன். வட மொழியில் இம்மரபு உண்டென்றும், தமிழில் ஐய்யனாரிதனார் (புறப்பொருள் வெண்பாமாலை), நாற்கவிராச நம்பி (அகப்பொருள் விளக்கம்) முதலிய சிலர் இவ்வாறு செய்துள்ளனர் என்றும் அவர் குறிக்கின்றார். ஆயினும் நயங்களையும்,கருத்தழகையும்  படைப்பாளரே எழுதுவது சிறப்பில்லை என்றும் கருத்துரைக்கின்றார். பாரதியாரைப் பொருத்தவரை இக்கருத்து பொருந்துவதாக் கூறுதற்கில்லை.

         பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் பாரதியார் ‘எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய சந்தம் குறித்து மொழிவது போன்று பாடல்கள் எல்லாம் எளியனவே. அவ்வாறிருக்க அதற்கு ஓர் உரையும் எழுத வேண்டியது ஏன் என்ற வினா எழுகிறது. எளிமைக்குள்ளும் அருமையை பொதிந்து வைத்திருப்பவர் பாரதியார் என்பதால் தான் உரை எழுத நேர்ந்தது எனக் கருதலாம்.

          பாரதியார் எழுதியுள்ள குறிப்புகள் எல்லாப் பாடல்களுக்கும் உரியனவாக இல்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களுக்கு மட்டுமே விளக்கங்கள் தரப்பட்டுள்ளன, இவ்வுரையினை அரும்பதவுரை என்றும் கூற முடியாது. விரித்தியுரையாகவும் கருத இயலாது. இரண்டு கூறுகளும் விரவிக்கிடக்கின்றன. இவ்வுரையின் பண்புகள் பின்வருமறு.

 1. அருஞ்சொட்பொருள்கள் மட்டும் கூறும் இடங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக வல் என்ற சொல்லுக்கு சூது என்ற பொருளையும், ஆலம் என்ற சொல்லுக்கு மார்பு என்ற பொருளையும் தந்திருப்பதைக் காணலாம்.
 2. பொது இலக்கணக் குறிப்புகள் காணப்படவில்லை. யாப்பு இன்னதென சில இடங்களில் குறித்துள்ளார்.

19-ஆம் பாட்டை எண் சீர். ஈற்றது மா.’ எனக் குறிக்கிறார்.

                      மெனப் பெரியோர் கள்என்றும்

                       ஓதுவ தாய் வினை மோதுவ தாய்

எனத் தொடங்கி நொண்டிச் சிந்தாக வரும் பாடல்களுக்கிடையே ஒரு எண்சீர் விருத்தம் வருவதைச் சுட்டிக் காட்டவே இக்குறிப்பு.

          3.பாடத்தக்க சிந்துப்பாடல்கள் நிரம்பி இருப்பதால் ஓசை அமைப்பு இன்னதெனச் சுட்டிக் காட்டியுள்ள இடங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, பாட்டு 183 முதல் 195 வரை அமைந்த பாடல்களைக் குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளார்.

லால லாலலா லா லாலா

லால லாலலா லா

என்ற மெட்டுள்ள சிந்துகள், தெருவில் ஊசிகளும் பாசிமணிகளும் விற்பதோடு பிச்சை எடுக்கவும் செய்கின்ற பெண்கள் மாயக்காரனம்மகிருஷ்ன்மாயக்காரனம்ம என்று பாடும் நடை,சூதாட்ட வருனணைகளும் அதில் ஏற்படும் பரபரத்த வார்த்தைகளையும் செய்கைகளையும் விளக்குவதற்கும் இந்நடை மிகவும் பொருந்தியதென்பது எளிதிலே காணப்படும்.

4.முதல் பாடலில் ‘பிரமதுதி’யில் இறைவனை ‘ஆம் எனும் பொருளனைத்தாய்’ என்று வருணிக்கிறார். முழுப் பொருளையும் விளங்கிக்கொள்ள மாட்டர்களோ எனக் கருதி ஒரு விளக்கத்தை சேர்க்கிறார்.

       ஆமெனும் பொருளனைத்தாய் – உள்ள வஸ்த்துக்கள் யாவுமாகி, என்பது பொருள். ஆம் எனும்   சொல் சம்மதியைக் குறிப்பதுமட்டுமே அன்றி உன்மையையும் குறிக்கும்.

     இத்துணை அளவு எழுதுவது இயற்கையே ஆகும். ஆயினும் இதனினும் மேற்சென்று தம் வடமொழிப் புலமையின் விளைவாக ஒரு கருத்தை பொறிக்கின்றார்.

     வடமொழியில் ‘ஓம்’ எனுஞ் சொல்லுக்கு ‘ஆம்’ என்றே பொருள். எவ்விடத்தும் ’இல்லை’ யாதலின்றி ‘ஆம்’ என இருத்தல் பற்றியே, வேதத்தில் பிரம்மத்துக்கு ‘ஓம்’ என்ற சொல் கொடுக்கப்பட்டிருப்பதறிக.

    இந்த நுட்பமான பொருள் விளக்கம் அவர் வடமொழிப் புலமையையும் காட்டுகிறது. தத்துவ நுண்பொருள் காணும் ஆற்றலையும் சுட்டுகிறது. 153-ஆவது பாட்டு காயத்ரி மந்திர மொழி பெயர்ப்பென அவரே குறித்துள்ளார்.

 1. சமூகச் சிந்தனையோடும் பாரதியார் உரை இயங்குகின்றது. எட்டாவது பாடலுக்கு எழுதியுள்ள குறிப்புரையில் ஒரு தேசத்தின் அறிவுக்குப் பொறுப்பான பிராமணர் கடமை தவறினால் தேசம் துன்புரும் என்பதைச் சொல்ல வந்தவர்.

       மஹாபாரதப் போர் நடக்கும் முன்பாகவே  முதற்படப் பாவம் பிராமணர்க்குள் புகுந்தது என்பதை இன்னூல் தெரிவிக்கின்றது.

எனத் தெரிவிக்கும் கொடுமையைக் காண்கிறோம்.

14 – ம் பாட்டு விளக்கதில் மகாஜனங்களை மாசனங்கள் என்று தாம் குறித்திருப்பதை விளக்கும் போதுஒரு சமூகவியலாளரை அவருள் காண்கிறோம்.

          மகாஜனங்கள் பொதுப்படையான குடிகள். இவர்களே தேசத்திற்கு உயிராவர். இவர்களை ‘சூத்திரர்’ என்பது தற்கால வழக்கு. சூத்திரர் எனும் பெயரை சில மூடர் இழிவான பொருள் பட வழங்குவது பற்றி, நூலில் அப்பெயர்  தரவில்லை.

      175-ம் பாட்டில் ‘சூதாடுதல் பூர்வாசாரம்’  எனும் கருத்தை விளக்கும் பொழுது, ‘தீய வழக்கங்களை அனுசரித்தல் பாரத தேசத்திற்கு ஏற்பட்ட சாபம்’ எனக் கருத்துரைக்கின்றார். இவ்வாரே 178-181-ம் பாடல்களைக் குறித்து எழுதும் போதும் பூர்வாசாரங்களை விமர்சனம் புரிகிறார்.

          இப்பட்டுகளிலே இப் ‘பூர்வாசாரங்களின்’ ஆராய்ச்சி  இல்லாது பக்தி செலுத்துவோரின் மடமை காட்டப்படுகின்றது. பழமையிலே பெரும்பகுதி உயர்வு சான்றதுதான். அதிலும், பாரத தேசத்தினராகிய நம்மவரின் நடைகள்  அறிவும் அறனும் பொதிந்தனவாகும். ஆயினும் இழிந்த அமானுஷீக நடைகள் பல இவற்றோடு கலந்துள்ளன…

 1. சிறிய செய்திகளில் கூடப் படைப்பாளர் பாரதியார் கவனம் செலுத்தியிருப்பதை உரையாளர் பாரதியார் மூலம் அரிய முடிகிறது.

பாட்டு 33 –ல் ‘அரபியர் ஒட்டைகள்’ என்று தாம் குறிப்பிட்டுள்ளது போன்று வியாசர் குறிப்பிடாமல் வெறும் ஒட்டைகளைச் சொல்லியிருக்கிறார் என்பதையும் தாம் ‘அரபியர்’ என்று சேர்த்துக்கொண்டமைக்குக் காரணம், ‘அவரது வருணனையைப் பார்க்கும் இடத்துத் தருமபுத்திரன் யாகத்துக்குக் காணிக்கையாக வந்த ஒட்டைகள்  அரபி தேசத்தனவென்று தெளிவாகத் தோன்றுகிறது. இன்றும் அரபி தேசத்திலேதான் ஒட்டைகள் அதிகமாக வழங்குவதரிக’ என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றார்.

 1. உரையாசிரியர் பாரதியார் விளக்கம் தர முற்படும் போது தம்மை தாமே சான்றாகக் காட்டும் இடங்கள் உண்டு.

          பாட்டு 148-ல் ஞாயிற்றின் மறைவைப் பற்றிய வருணனை வருகிறது. இங்கே விளக்கம் அவசியம் இல்லை. ஆயினும் இயற்கையில் ஈடுபடும் மனம் தமிழரிடம் வளர வேண்டுமென ஆதங்கம் கொண்ட பாரதியார் தம் கட்டுரை ஒன்றினையே(சூர்யாஸ்தமனம் – கர்மயோகி) சான்றாக – முழுமையாக எடுத்துக்காட்டியுள்ளார். பாரதியார் சிந்தனைகளில் இயற்கை உயிர்ப்பங்கு வகிப்பதையும், அவர் உரைநடை கவிதையை அறைகூவி அழைப்பதையும் காணமுடிகிறது.

          8.பா நயங்களும் பாரதியாரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. கலைமகள் தன் வேதமாகிய விழிகளில் ‘மிக்க பல்லுரையென்னும்  கருமை இட்டாள்’ என்ற கவிதை வரிக்குள் பொதிந்துள்ள நயத்தை தாமே விளக்குகிறார்.

          வேதமாகிய கண்ணில் (ஞான நூல்களாகிய கண்ணில்)  பலவித வியாக்கியானர்கள் , பாஷ்யங்கள்’ எனும் கரிய மையைப் பூசியவள். மை கண்ணுக்கு நல்லது. அழகும் கூட. ஆனால் அளவுக்கு மிஞ்சிப் பூசினால் விகாரமாகத் தோன்றுவதுடன் கண்ணே போனாலும் போய்விடும். நமது தேசத்தில் ஒருவேலை அப்படி நடந்திருக்குமோ? சரஸ்வதி அறிவு தெய்வம் ஆதலால் அவளுக்கு ஆத்ம குணமே (வேதமும்) விழியெனப்பட்டது.

          மேற்குறித்த உரையில் உரை பற்றிய பாரதியின் தீர்ப்பையும் காண முடிகிறது. அதனால் தான் தேவைப்படுகிற அளவு கச்சிதமாக பாரதியார் உரை எழுதினார் எனக் கருதலாம்.

பதஞ்சலி யோக சூத்திர உரை

          பதஞ்சலி யோக சூத்திரத்தின் 50 நூற்பாக்களுக்கு விரிவான உரை எழுதியுள்ளார் பாரதியார். வடமொழியில் நிகரற்ற பாண்டித்தியம் கவிஞருக்கு அமைந்திருந்தது என்பதை இவ்வுரை மெய்ப்பிக்கிறது.

இவ்வுரையின் தனிச்சிறப்புகளாகக் கருதத்தக்க செய்திகள் வருமாறு:

          1.முறைப்படி சூத்திரப்ப் பொருள், தொடர்ந்து வியக்கியானம் (விளக்கம்) என்ற முறையில் உரை அமைந்துள்ளது.

          2.இவ்வுரையில் முன் உரைக்காரர்களின் கருத்துக்கள் எடுத்துப் பேசப் படுகின்றன. எடுத்துக்காட்டாக போஜ தேவர் (ராஜ மார்த்தாண்டம் எனும் உரை), சுவாமி விவேகான்ந்தர், மதுரை நாராயணய்யர், பஞ்ச சிகாசாரியர் ஆகியோரின் உரைகள் எடுத்துப் பேசப்ப்பட்டன. பெரிதும் வழிமொழிந்த போதிலும், சில வேலைகளில் பாரதியார் மருத்தும் உரை எழுதியுள்ளார்.

          மதுரை நாராயணய்யர் 25-ம் சூத்திரத்துக்கு எழுதியுள்ள   உரையை ‘வினோதமான குறிப்புகள்’ என்று தெரிவிக்கின்றார்.

          35 –ம் சூத்திரத்துக்கு “யாதேனுமொரு பயனுடையதாகிய தொழில் செய்யப் புகும் இடத்தே மனம் கட்டுப்பட்டு நிற்கும்” என்று பொருள் எழுதிய பாரதியார் விவேகானந்தர் கூறும் உரையினின்று மாறுபடுகின்றார். பயிற்சியால் இந்திரியங்களுக்குப் புலப்படும் புதுமைகளைக் கண்டு மனம் அப்பயிற்சியில் நிலை பெற்றுவிடும் என்பது விவேகானந்தர் கருத்து. முன்னைய உரையாசிரியர்களை ‘பரிசோதனையின்றிக் கைக்கொண்டார்’ விவேகானதர் எனப் பாரதியார் குறை கூறுகின்றார்.

          36,37-ம் சூத்திரங்களுக்கும் விவேகானந்தர் உட்பட்ட கருத்தைப் பாரதியார் ஏற்கவில்லை.

          3.பாரதியார் உரையில் பொருத்தமான, அரிய மேற்கோள்கள் எடுத்தாளப்படுவதைக் காணலாம்.

          50-ம் சூத்திரத்தில் ‘ஒருமுறை சித்தச் செய்கை நிகழ்ந்தால் அது மீள மீள நிகழும்’ என்ற கருத்துக்கு அரண் செய்யப் பின் வருமாரு எழுதுகிறார்.

          Qui a bru boria என்பது ப்ரெஞ்ச் பழமொழி. அதன் பொருள்: “(இதற்கு முன்னே) குடித்தவன் (இனியுங்குடிப்பான்)”

          4.நூற்சான்றுகளோடு தம் படைப்புகளிலிருந்தும் சான்றுகள் தருகிறார்.

23-ம் சூத்திரத்தை விளக்குவதற்குப் பகவத் கீதை 9-ம் அத்தியாயம் 26-ம் சுலோகத்தைச் சான்று காட்டுகின்றார். 24,28-ம் சூத்திரத்தை தெளிவுபடுத்தத் தம்முடைய ‘பாரதி அருபத்தாறு’ நூற்ப்பாடல்களை எடுத்தாளுகின்றார். சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே’,பூமியிலே கண்டமைந்து’ என்னும் இரு பாடல்கள் இவ்வாறு இடம் பெற்றுள்ளன.

 1. கவிஞரது உரையின் பல பகுதிகளில் இழையோடும் கவித்துவமான இடங்கள் குறிப்பிடத்தக்கவை.

          38-ம் சூத்திர விளக்கம் பாரதியாரின் அரிவாற்ற்லுக்கு  அருமையான சான்றாகும். இசை ஞானமும், அறிவியல் ஞானமும் போட்டி போடுகின்றன. இடையே ‘எல்லாம்’ என்ற சொல்லாராய்ச்சி வேறு. படித்துச் சுவைக்கவும், சிந்த்திக்கவும் சிறந்த உரைப்பகுதி இது.

          50-ம் சூத்திர உரையில், ‘உயிர் மழையை மரணத்தீ வற்றடித்தல் சாத்தியமில்லை’என்ற கம்பீரமான வாக்கியத்தை காணமுடிகிறது.

பகவத் கீதை உரை

          பகவத் கீதை தன் காலமும் தூரமும் கடந்த தன்மை காரணமாக நூற்றுக்கணக்கான உரைகளைக் கண்டது. சங்கரர், இராமனுசர், மத்வர் உரைகளின் தொடர்ச்சியாக இந்திய நாடு முழுவதிலும் ஏராளமான உரை விளக்கங்கள் எழுந்துள்ளன. ஞானேச்வரி,கீதா ரகசியம் முதலிய புகழ் பெற்ற விளக்கங்கள் முதல் வினோபாவின் கீதைப் பேருரைகள் வரை தத்தம் உணர்வுகளுக்கேற்ப எழுதப்பட்ட உரைகள் எழுந்துள்ளன.

பாரதியார் கீதையின்பால் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அதனால்தான்,

          போர்க் களத்தே பர ஞானமெய்க் கீதை

          புகன்ற தெவருடை வாய் ?”

என்று புகழ்ப் பனுவல் இசைத்தார். இரண்டு கவிதைப் பகுதிகளில்(சூரிய தரிசனம் – ஒர் கனவு ; சிவாஜி தன் சைனியங்களுக்குக் கூறியது) கீதை உரைக்கும் கண்ணனின் மட்சியைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். எனவே பகவத் கீதைக்கு உரை வகுக்க முற்பட்டதில் வியப்பில்லை.

          பகவத் கீதை மொழிபெயர்ப்புச் சிறப்பினையும்,உரை நலத்தையும் பல்வேறு கீதை உரை நூல்களுடன் ஒப்பிட்டு விரிவாக எழுதுதல் வேண்டும். இச்சிறு கட்டுரையில் அதற்கு வாய்ப்பில்லை.

          பகவத் கீதையின் சுலோகங்களைப் பாரதியார் அணுகியுள்ள முறையைப் பின்வருமாறு கூறலாம்.

 1. உரைப் பாயிரம் எனக் கூறத் தகுந்த விரிவான முன்னுரை.
 2. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சுருக்க அறிமுகம்.
 3. சுலோக மொழிபெயர்ப்பு.

என வகுத்துக் கொண்டு உரை கூறியுள்ளார்.

          முன்னுரை ஏறத்தாழ ஐம்பது பக்கங்கள் கொண்டது. இம்முன்னுரை பதிமூன்று பகுதிகளாக அமைந்துள்ளது.முதல் ஒன்பது பகுதிகளில்  பகவத் கீதை கர்ம சாஸ்திரம், பக்தி சாஸ்திரம், ஞான சாஸ்திரனம், மோட்ச சாஸ்திரம், யோக சாஸ்திரம் அமரத்துவ சாஸ்திரம் என்பதற்கான காரணங்களைத் தர்க்கரீதியாக ஆராய்ந்து நிறுவுகின்றார்.

          வினா விடையாக , ஐயமும் சந்தேகம் தெளிதலுமாக விரியும் அவரது விளக்கத்தில் திருவாய்மொழியும், பைபிலும், திருநாவுக்கரசர் தேவாரமும், பட்டிணத்தார் பாடலும் போட்டி போட்டுக் கொண்டு பொங்கி வருகின்றன. சாயணர், புத்தர் பற்றிய விமர்சன்ங்கள் இடம் பெற்றுள்ளன.

          மண் மீது அமரத்தன்மை என்ற மகத்தான செய்தியை கீதை முன்னுரை முரசறைந்து பேசுகின்றது. சுலோக மொழிபெயர்ப்பில் தமிழ் நடை கொஞ்சி விளையாடுகின்றது.

          ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாய்; வரம்பிலா

          விறலினை; கணக்கிலாத் தோளினை; ஞாயிறும்

          திங்களும் நயனமாக் கொண்டனை; எரியும்

          கனல் போல் இயலும் முகத்தினை; ஒளியால்

          முழுமை உலகையும் கொளுத்துவாய்.(அத்.11 :10)

         

பகைவரக் கொல்லும் பார்த்தனங்கு

          பசுநிரை காக்கும் பகவனி நோக்கிப்

          போரினிப் புரியேன் என்று

          வாய் புதைந்திருந்தான்”.(அத்.2 : 3)

இவ்வாறு பாரதியாரின் கீதைக் கருத்துரைகள்  கவிதைகளாகப் பூத்துச் சொரிகின்றன.

          சுலோகங்களுக்குப் பொருள் மட்டுமே தந்துள்ளார் பாரதியார். விளக்கங்கள் இல்லை.

உரையாசிரியன் பாரதி:

          பாரதியார் மழையைப் புனைந்துரைக்குமிடத்து ‘பல கோடி தந்திகளை உடையதோர் இசைக்கருவி’(காட்சி) எனக் கூறுவார். உண்மையில் பாரதியாரையும் அவ்வாறே நாம் மதிப்பிடலாம்.

          அவர் உரையாசிரியராகப் புது அவதாரம் எடுத்து நிற்கும் போது, பன்மொழிப் புலமை, பன்னூலறிவு, தர்க்க நுணுக்கம்,புதுப் பொருள் காட்சி, இலக்கண வித்தகம், இலக்கியச் செழுமை, உரை நடைப்பொழிவு, உயிர்ப்புறும் கவிதை என அந்த ஓர் அவதாரத்திலேயே பண்முகங்களைக் காணமுடிகிறது.

          பதஞ்சலி யோக சூத்திர உரையில் இவ்வாறு பாரதியார் எழுதுகின்றார்;

          மாயையாவது யாதெனில்,

          ஸர்வ மங்களமாகிய ஜகத்தில் ஜீவன் தன் கற்பனா

          சக்தியால் ஏற்படுத்திக் கொள்ளும் தீமை

          மாயையைத் தவிர ஜகத்தே இல்லையென்று சங்கராச் சார்யர் சொன்னார்.ஸர்வமங்களாகாரமான

          ஜகத்தில் ஜீவன் கற்பனையால் செய்து கொள்ளும் தீமையே

          மாயையென்று நம் சொல்லுகிறோம்.”

இந்தத் தெளிவு, இந்தத் துணிவு, இந்த வியத்தகு ஞானம், இந்தப் பேரறிவு – இவைதாம் மகாகவி பாரதியார்.

   குறிப்புகள்:

 1. சீனி.விஸ்வநாதன், பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு. 1989, ப.161.
 2. மு.வை.அறவிந்தன், உரையாசிரியர்கள்(3.ப). 1993. ப.72
 3. பாரதியார் கவிதைகள் (மணிவாசகர் பதிப்பு 1995) கு.424
 4. மேலது, ப.433.
 5. மேலது, ப.422
 6. மேலது, ப.422
 7. மேலது, ப.423
 8. மேலது, ப.424
 9. மேலது, ப.432
 10. மேலது, ப.424
 11. மேலது, ப.428மேலது, ப.422 (பாரதியார் பதஞ்சலி யோக சூத்ரம் (அபிராமி வெளியீடு)
 12. மேலது, ப.39
 13. மேலது, ப.43
 14. மேலது, ப.59
 15. மேலது, ப.21
 16. மேலது, ப.25,34
 17. மேலது, ப.44,53
 18. மேலது, ப.61
 19. மேலது, ப.20.