முனைவர் ஆ மகாலட்சுமி

                                                                   உதவிப் பேராசிரியர்,                                                                    தமிழ் இலக்கியத்துறை,                                                                    என்.ஜி.எம்.கல்லூரி, பொள்ளச்சி

குறிஞ்சி நிலத்தின் முப்பொருள்கள்

    உலக சமூகத்தில் முதன் முதலாகத் தோற்றம் பெற்றவர்கள் குறிஞ்சி நில மக்களாவர் என்பதும், அவர்கள் தான் நாகரிகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையானவர்கள் என்பதும் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சி. இலக்குவனர் குறிப்பிட்டுள்ள போது குறிஞ்சி நில மக்கள் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்து நாளடைவில் விலங்கு வாழ்வினின்றும் வேறுபட்ட நாகரீக வாழ்வைத்  தொடங்கியது குறிஞ்சி நிலப்பகுதியே ஆகும் என்று கூறியுள்ளார்.

          குறிஞ்சி என்பது குறி என்பதன் அடியாக வந்ததாகும். குறி அடையாளம், காலம், அளவு, தடவி என்னும் பொருள்படும். பல்லாண்டு கால அளவைக் குறிக்கும் பூ எனவும் கூறுவர். அப்பூப்பூக்கும் செடி அச்செடி தழுவுதல் தழிஞ்சி எனவும், நெரிப்பது நெரிஞ்சி எனவும் ஆவது போல குறிப்பது குறிஞ்சியாகும். குறிஞ்சி எனும் சொல் குறு+இஞ்சி ஆயிற்று. அந்நிலையில் இருந்து குறுகுதலைக் குறிஞ்சி எனவும் கூறுவர். இஞ்சி என்பது இடமாகும். நானிலத்தில் குறுமுதலான நிலம் எதுவெனில் மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும்.

முதற்பொருள்

          தொல்காப்பியர் முதற்பொருளைப் பற்றிக் குறிப்பிடும் போது.

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே.  (தொல்.பொருள்.4)

 முதற்பொருள் எனக் கூறப்பெறுவதை  நிலம்,பொழுது என இரண்டின் தன்மை எனக் கூறுவர். குறிஞ்சி நிலத்திற்கு உரியதான நிலம் மலையும் மலை சார்ந்த இடமும் ஆகும். இந்நிலத்தின் பொழுதாக

குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்.  (தொல்.பொருள்.6)

 என்று தொல்காப்பியர் காட்டிய்யுள்ளார். இதில் பெரும்பொழுது கூதிர் காலமும்,சிறுபொழுது யாம்ம் என்பதும் ஆகும். இலக்கியங்களில்

குன்று குளிப்பன்ன உதிர்ப்பானாள்.  (நெடு.வா.12)

என்று நெடுநல்வாடை ஆசிரியர் நக்கீரர் கூறியுள்ளார். இதில் உடலியல், உளவியல் நிலையில் தலைமக்கள் இணைந்து வாழ்வதற்கான சூழலை இந்த நிலமும் பொழுதும் அமைகின்றன.

உரிப்பொருள்

          குறிஞ்சி நிலப்பொருள் புணர்தலும் புணர்தல் நிமிர்த்தமும் ஆகும்.பத்துப்பாட்டை புதுப்பித்த உ.வே.சா குறிஞ்சி  புணர்தலும் புணர்தல் நிமிர்த்தமும் ஆகிய ஒழுக்கம், இதன் கண் இயற்கைப் புணர்ச்சியும் பின்னர் நிகழும் புணர்ச்சிகளுக்கு நிமிர்த்தங்களும் கூறப்படுதலின் இப்பெயர் பெற்றது.

கருப்பொருள்

          கருப்பொருள் குறித்துத் தொல்காப்பியர் கூறும் போது

தெய்வம் உணவே புள் பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைகு

அவ்வகை பிறவும் கரு என மொழிப.  (தொல்.பொருள்.18)

என்பதில் தொல்காப்பியர் கருப்பொருள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதில் பெரும்பாலும் மக்களின் வாழ்வாதாரங்களை மையப்படுத்தியே அமைகின்றன.

          நிலத்திற்கேற்பவும் சூழ்நிலைகளுக்கேற்பவும் மனிதர்களின் உணர்ச்சிகள் அமைவது இயல்பாகும். அதனால் அவற்றுக்கேற்ப வழிபாடுகள் அமைந்துள்ளன. குறிஞ்சி மக்கள் மலைத்து நின்று கதிரவன் கடலினின்று எழும் இயற்கைக் காட்சியைக் கண்டு களித்தனர். அவர்களுக்கு அக்காட்சி  நீல மயில் மீது செவ்வேள் இருப்பது போல் தோன்றியது. இதை,

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

          பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு.  (திரு.முரு..1)

இவ்வகையான வழிபாடே முருகன் வழிபாடாக மலர்ந்தது என்று கூறுவார் திரு.வி.க. இதனால்  குறிஞ்சிக்குரிய கடவுள் செவ்வேலாகிய முருகன் ஆவார்.

மக்கள்

          குறிஞ்சி நில மக்களில் உயர்ந்தோன் பொருட்பன்.வெற்பன், கொடிச்சி எனவும் கூறுவர் .தற்பொழுது குறவர்கள் இந்தியா முழுவதும் வசிக்கும் ஒரு சமூகத்தினர் ஆவர் .இவர்கள் தமிழும் தெலுங்கும் கலந்து பேசுவர் .குறவர்கள் பல வகையானோர் உள்ளனர்.

          குறவர்கள் தங்கள் நாட்டு அரசர்களுக்கு வேட்டைத் தொழிலில் உதவி புரிந்தவர்கள் இவர்கள் இந்தியாவின் பழைய குடிகளுள் ஒருவராகக் கருதப்படுகின்றனர்

ஆநிரை கவர்தல்

          வேடர்கள் வெல்லும் படைக்கலமும், அஞ்சாமையும்  கடிய சொல்லும் உடையவர். சங்க காலத்தில் மன்னர்கள் பகை நாட்டின் மேல் போர் தொடுக்கக் கருதும் வேலையின் ஆநிரை கவர்தல் முதலிய செயல் நடைபெறும் . அப்போது குறிஞ்சி நில மக்கள் குறிஞ்சி மாலை சூடி நிரையைக் கவர்வதற்காகச் செல்லுவர். இதனை,

          வெற்றியையுடைய விறன் மறவர்

          கன்றோடு மாதழீ இயன்று.   (புறப்பொருள் வெண்பாமாலை)

இப்பாடல்  வரியின் மூலம் ஆநிரை கவர்தல் என்ற போர் முறைக் கருத்தை அறியலாம்.

உணவு

          மலை சார்ந்த பகுதி குறிஞ்சி  நிலமாதலால் இந்நிலத்தில் இருந்தோர் தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு விலங்குகளை வேட்டை ஆடியுள்ளனர். இதன் மூலம் கிடைத்த உணவுப் பொருள்களைக் குழுவிலுள்ள அனைவரும் பகிர்ந்து உண்டனர். குறிஞ்சி நிலமக்கள் தங்கள் இல்லங்களில் முன் பாறை அமைந்த முற்றங்களில் மலைகளில் அவ்வப்போது கிடைக்கும் மழை நீரின் மூலம் விளைவித்த மழைநெல் அரிசியை உலர வைத்து உண்டனர்.

பாறை முன்றில் ஐவனம் உணங்கும். (கண்ணப்ப நாயனார் புராணம்.652)

என இப் பாடல் வரியின் மூலம் அறிய முடிகிறது. இம்மக்கள் மலைத்தேனும் ஊண் கலந்த இனிய சோறும் உண்பவராய் இருந்தனர் என்பதை

பச்சையின் நரவும் ஊனின் புழுக்கமும் உணவு கொள்ளும். (மேலது.வரி.656)

 இப்பாடல் வரிகளில் இருந்து குறிஞ்சி நில மக்கள் வேட்டையாடுதலில் வல்லவர்கள் என்பதை அறியலாம். ஆதலால் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை சமத்து அதனுடன் மலைத்தேனும் கலந்து இனிடே உண்டனர். இந்த உணவை அமுது என்றும் குறித்தனர். குறிஞ்சி நில மக்கள் ஈசல் உணவையும் உட்கொண்டனர் என்பதை

மென்தசையும் ஈயலொடு நரவும் வெற்பில்.

எனும் பாடலில் புற்றில் தோன்றும் ஈசலையும் உணவாக உண்டு வந்தனர் என்பது கூறப்படுகிறது. இப்போது கூட மக்கள் ஈசலை உணவாக உட்கொண்டு வருகின்றனர். இப்பழக்கம் குறிஞ்சி நில மக்கள் வகுத்தது என்பது புலனாகிறது. சில வகையான அரிசி சோறும் உண்டு வந்துள்ளனர்.

 

பறவை

          குறிஞ்சி நிலத்தில் கிளியும் மயிலும் பறவைகளாக்க் கொள்ளப்படுகின்றன. பறவைகளின் பழக்க வழக்கங்கள், பழகும் முறை, கூடுகள் கட்ட தேர்ந்தெடுக்கும் மரங்கள் ஆகியவை சங்க இலக்கியங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சேவல் ஒலி எழுப்பி விடியலை அறிவிக்கும் முறையை

தளிர்புரை கொடிற்றில் செறி மயிர் எருத்தின்

கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ அன்ன

நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும். (அகம்.367)

 என்ற பாடல் வரி கூறுகிறது. முருகன் மயில் ஊர்தியை உடையவன் என்பதை,

 மயிலுண்டக் கொற்ற ஊர்தி

 என்ற கண்னப்ப நாயனார் பாடல் வழி அறியலாம்.

விலங்கு

          சங்க இலக்கியத்தில் பல்வேறு வகை விலங்குகள் குறிஞ்சி நிலத்தின் கண் வாழ்ந்தனவாக குறிக்கப்படுகின்றன. அவற்றுள் யானை, புலி,கரடி,பன்றி போன்ற குறிஞ்சி நில விலங்குகளாகக் குறிக்கப்படுகின்றன.

ஊர்

          மலைகள், குன்றுகள் அவற்றைச் சார்ந்த இடங்கள் குறிஞ்சி நிலம் ஆதலால் அவர்கள் வாழ்ந்த பகுதியை சிலம்படைந்தபாக்கம், குறவர் பாக்கம், சிறுகுடி என்று குறிக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்தின் நிலப் பகுதிகள் புனம், இதை,முதை,விடலை எனக் குறிக்கப்படுகின்றன.

இதையே புனவர் புகைனிழல் கடுக்கும். (அகம்-140)

 என்பதில் அறியலாம்.

குடில்

          குறிஞ்சி நில மக்கள் மிகத் தாழ்வான சிறிய குடில்களைக் கட்டி அதன் மேல் தினைத் தாளையும் ஐவன நெல்லின் தாழையும் பற்களையும் கூரையாக வேய்ந்துள்ளனர். தினைக் கதிர்களை அரிந்து விட்ட பிறகு கிடக்கும் தாழ்களைக் கொண்டு தங்கள் குடிலின் மேல் வேய்ந்தனர். இக்குழல்,

இறுவி வேய்ந்த குறுங்காற் குறும்பை

பனையோ நோக்கின் மனையோன் மடுப்பத்

தேம்பிலி தேறல் மாந்தி மகிழ் சிறந்து. (குறி.பா.153-55)

 என்ற பாடலில் குறிஞ்சி நில மக்களின் வாழ்க்கை நிலையையும், குடிலினையும் விளக்குவதை அறிய முடிகிறது.

குடி

          குறிஞ்சி நிலத்துக்கு பெருங்குடி, சிறுங்குடி என்றா பெயர்கள் உண்டு. பிங்கல நிகண்டு குறும்பொறை, சீறூர், சிறுகுடிக் குறிஞ்சியூர் என்று கூறியுள்ளது. இந்நிலத்தில் குடிகள் மிக்க குறிஞ்சியைப் சுற்றி யானைக் கொம்புகளால் அமைக்கப்பட்ட வேலிப்புறம் உள்ளது என்பதை

செறிகுடிக் குறிஞ்சி சூழ்ந்த புனைமருப் புழழை வேலி – (674)

 என்று கண்ணப்ப நாயனார் புராணம் கூறுகிறது.

 

 

அருவி

          அருவி நீரும், சுனை நீரும் குறிஞ்சி நிலத்தின் நீர் நிலைகளாகக் கருதப்பட்டன. குறிஞ்சி  நிலக் காட்சியைக் கபிலர், பறம்பு மலையின் அருவி ஓசையை பறை முழக்கம் போல் உள்ளதாகக் கூறுகிறார். இதனை

இருமன இழிதரும் பறைகுரல் அருவி. (பதி.பத்து.78)

இவ்வரிகள் சான்று தருகின்றது.

சுனை

          மலைகளில் இயற்கையாக அமைந்திருக்கும் சுனை நீர் சுவை உடையதாய் இருக்கும் என

தீம்பெறும் பைஞ்சுனை. (அகம்-23)

  என்று அகநானூறு கூறுகிறது,

பூ

குறிஞ்சி நிலத்தில் குறிஞ்சி மலரே முக்கிய மலராகும். இது இந்நிலத்தின் அடையாள மலராகும். இது  மட்டும் அல்லாமல் பல வகையான மலர்களும் காணப்படுகின்றன. குறிஞ்சிச் செடியின் மலரை வைத்து வயதைப் பன்னிரண்டு ஆண்டு எனக் கணக்கிட்டனர். இச்செடியானது மலையும் மலை சார்ந்த இடத்திலும் வளரும். குறிஞ்சி மலரில் சிறந்தது நீலக் குறிஞ்சியாகும். நீலகிரியில் நீலக்குறிஞ்சி வளர்வதால் நீலகிரி என்ற நிறத்தின் பெயரையே வைத்துள்ளனர்.என்பர்.

கருங்கோட் குறிஞ்சி பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும். (குறுந்தொகை-7)

 என்றும் குறிஞ்சி மலரை தலைவனின் அன்பு உள்ளத்திற்குச் சான்றாகக் கூறப்பட்டுள்ளது.

கடம்ப மலர்

          கடம்ப மலர் முருகக் கடவுளுக்குறிய அடையாள மாலை ஆகும்.எனவே முருகனைக் கடம்பன் எனவும் வழங்குவர்.

 கார்நறுங் கடம்பின் கண்ணிமுடி……..முருகே. (.34)

          கார் நறுங் கடம்பின்….தெறியற் கார்நவை. (புறம்.23)

 இச்சான்றுகள் மூலம் கடம்ப மலரின் சிறப்பினை அறியலாம்.

கொன்றை மலர்

          இலக்கியங்களில் கடம்ப மலர் குறித்து பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. துளிரிடையே கொத்தாய் மலரும் கொன்றை பொன் சொறிவதைப் பார்க்கலாம்.

முறியினர்க் கொன்றை நன்பொன் கால. (முல்லைப் பாட்டு.35)

 என்று கூறுகிறது. மேலும் நீலோற்பல மலர், கடம்ப மலர் போன்றன உள்ளதை அறியலாம்.

பண்

          பண் என்பது இசைவகையாகும். குறிஞ்சிப் பண்ணில் தோன்றும் ராகங்களை குறிஞ்சி இனப் பூக்களின் நிறத்தால் பெயரிட்டழைத்திருக்கின்றனர். மேகராகக் குறிஞ்சி என்பது ஓர் ராகம் இது மேகநிறம் போன்று உள்ள குறிஞ்சிப் பூவின் நிறத்தால் பெயர் பெற்றது. பொன் வண்ணக் குறிஞ்சி என்றப் ராகம் மஞ்சள் நிறக் குறிஞ்சிப் பூவைக் குறிக்கின்றது. நீலாம்பரி என்ற ராகத்தின் பெயரில் நீலம் பயில்கின்றது என்ற செய்தியை(சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம் பக்கம்-33,34) பி.எஸ். சாமி பதிவு செய்துள்ளார்.

தொழில்

தேன் எடுத்தல்,கிழங்கு அகழ்தல், தின்கிளி கடிதல், வேட்டையாடுதல் முதலானவை குறிஞ்சி நில மக்களின் தொழிலாகும். குன்றம் ஆடுதல்,ஏறுதல் எனும் போது இம்மக்கள் முருகப்பெருமானின் குன்றத்தில் குரவைக் கூத்து அணங்காடல்,துணங்கைக் கூத்து, வாகைக் கூத்து, வெறியாட்டு போன்றவற்றை நிகழ்த்தி விழாக் கொண்டாடுவர். சிலப்பதிகாரத்தில் குன்றக் குறவையில் தலைவி தோழியை நோக்கி, தோழி ! கடலில் மாமராய் நின்ற சூரபதுமனைக் கொன்ற, வேலேந்திய முருகனைப் போற்றிக் குறவைக் கூத்தாடிப் புகழ்ந்து பாடுவம் வா! என்றாள், இதனை,

உரவு மாகொன்ற வேலேந்தி

குரவை தொடுத்தென்று பாடுகம் வா தோழி! (குன்றக் குரவை.6)

 என்ற வரியின் மூலம் அறியலாம். வெறியாட்டுக்குத் தொல்காப்பியர்

 வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட்ட யர்ந்த காந்தளும். (தொல்.புறம்.5)

 என்று புறத்திணையைக் கூறியுள்ளார்.இவ்வாறு வெறியாட்டின் சிறப்பினை அறியலாம்.

          மேற்கண்ட செய்திகளின் வாயிலாக குறிஞ்சி நில மக்களின் வாழ்வியல் அமைப்பில் முப்பொருள்களும் அமைந்துள்ளன. இதையே மையமாகக் கொண்டு பண்டைய புலவர் பெருமக்கள் பாமாலையாகப் பாடி பரவசம் அடைந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

Leave a Reply