சங்க காலத் தமிழரின் விளையாட்டுக்கள்

நா.ரம்யா முதுகலைத் தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு, என்.ஜி.எம்.கல்லூரி, பொள்ளாச்சி.

மனித வாழ்க்கையில் பொழுதுபோக்காக அமைவது விளையாட்டு.  விளையாட்டு எப்பொழுதும் முக்கிய இடங்களை வகித்து வருகின்றன. அவற்றைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் அதிக இடங்களில் நினைந்து உள்ளன. சங்ககால மக்கள் தங்கள் வாழ்வில் பெரும்பாலும் விளையாட்டை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் அவர்களது வீரத்தை பறைசாற்றும் வகையில் விளையாடி உள்ளனர்.

இக்காலத்தில் விளையாட்டு ஒரு துறையாக மாறிவிட்டது. இப்பொழுது யாரும் வெளியே சென்று விளையாடுவது இல்லை. வீட்டிற்குள்ளே இருந்தபடியாக விடியோ கேம்ஸ் மற்றும் இணையம் வழியாக குழ்ந்தைகள் விளையாடுகின்றனர். குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதல் மூலமாக உடல் ஆரோக்கியத்துடனும் புத்துணர்சியுடனும் இருக்கலாம். சங்க கால மக்கள் தன் வாழ்வை விளையாட்டுடன் இணைத்துக் கொண்டு விளையாடினர். தமிழ் இலக்கியத்தில் அவர்கள் விளையாடியச் செய்தி நினைந்து உள்ளனன. இதனைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புனலாடுதல்

பெண்கள் பலர் சூழ்ந்து நிற்க ஆண்கள் தங்கள் வீரத்தை காட்டும் விதமாக நீர்த்துறை அருகே தாழ்ந்த கிளைகளையுடைய மருத மரத்தினின்று ஆழமிக்க கிணற்றுக்குள் பாய்ந்து மூழ்கி அக்கிணற்றின் அடியில் இருக்கும் மணலை எடுத்து அங்கு இருக்கின்ற பெண்களிடம் அம்மணலை எடுத்துக் காட்டியதை,

“இனிநினைந்து இரக்க மாகின்று திணமணல்

செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்

தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து

தழுவுவழித் தழீஇ”                  (புறம்- 243)

என்று புறநானூறு பாடல் மூலம் அறியலாம்.

பெரும்பாணாற்றுப்படையிலும் புனலாடுதல் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

“வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ

புனல் ஆடு மகளிர் இட்ட பொலங்குழை”

(பெரும்பாணாற்று-311-312)

என்ற பாடல் மூலம் பெண்கள் புனலாடினர் என்று அறியமுடிகிறது.

ஆண், பெண் இருவரும் புனலாடினர் என்ற செய்தி எட்டுத்தொகை நூலான ஐங்குறுநூற்றில் இடம் பெறுகிறது.

“சூது ஆர் குறுந்தொடி சூர்அமை நுடக்கத்து

நின் வெங்காதலி தழீஇ பொருநை

ஆடினை என்ப புனலே”      (ஐங்குறு-71)

என்பதன் மூலம் அறியலாம்.

கழங்காடுதல்

சங்க கால மகளிரின் விளையாடும் விளையாட்டில் மிகவும் முக்கியமான விளையாட்டாக இருப்பது கழங்காடுதல். அக்கால பருவ மகளிர் மிகவும் விரும்பி விளையாடிய விளையாட்டாக இருந்தது கழங்காடுதல். இது பற்றிய செய்தி புறநானூற்றில் இடம்பெறுகிறது. இவ்விளையாட்டை மகளிர் திண்ணைகளில் பொன்னாலான கழங்கினை வைத்து ஆடினர் என்பதை,

“செறியச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்

பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்”      (புறம்-36)

என்ற பாடல் மூலம் அறியலாம்.

இளமை பருவத்தில் பெண்களுடன் சேர்ந்து கழங்கு ஆடிய நிகழ்வை சொல்லும் விதமாக அகநானூற்றில்  செய்தி இடம் பெறுகிறது.

“இளந்துணை ஆயமோடு கழங்கு உடன் ஆடினும்”   (அகம்-17)

“கழங்குஆடு ஆயத்து அன்று நம்அருளிய”            (அகம்-66)

பெரும்பாணாற்றுப்படையில் பெண்களின் விளையாட்டாக இக்கழங்காடுதல் இருந்ததைக் குறிப்பிடுகிறது. மணலில் அமர்ந்து பெண்கள் கழங்கு ஆடியதையும் அவ்விளையாட்டிற்கு பொன்னாலான பொருள் ஒன்றை பயன்படுத்தி விளையாடியதை,

“ …………….. குறுந்தொடி தத்த பைபய

முத்தவார் மணல் பொற்கழங்கு ஆடும்”       (பெரும்-334-335)

என்ற வரிகள் மூலம் அறியலாம்

ஓரையாடுதல்

மகளிர் விளையாட்டுக்களில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது ஓரையாடுதல். இவ்விளையாட்டு  கடல் பகுதி மற்றும் ஆற்றங்கரைகளில் விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டிற்க்கு அவர்கள் ஆமை, நண்டு ஆகியவற்றை பயன்படுத்தி  ஆடினர் என்ற செய்தி புறநானூற்றில் இடம்பெறுகிறது.

“ ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர்”     (புறம்-176)

என்ற வரியில் அறியலாம்.

எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில் இதற்கான குறிப்புகள் இருக்கின்றன. அவை

“……….  பாவை

காலை வருந்தும் கையா றோம்பென

ஓரை யாயம் கூறக் கேட்டும்”           (குறுந்- 48)

என்ற வரியில் பெண்கள் ஒன்றாக சேர்ந்து இவ்விளையாட்டை விளையாடினர் என்றும்,

“துறவுக் கடல் பொறாத விரவுமணல் அடைகரை

ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட”  (குறுந்-316)

இவ்வரியில் கடல்கரைப் பகுதியில் பெண்கள் கடற்கரையில் கிடைக்கின்ற நண்டுகளை வைத்து விளையாடினர். அவர்கள் நண்டு வைத்து விளையாடியதை “ஆய்ந்த வலவன் றுன்புறு” என்பதன் மூலம் அறியலாம்.

நண்டுகளைக் கொண்டு விளையாடியதற்கு சான்றாக பட்டினப் பாலையில்,

“……… கடலாடியும்

மாசுபோக புனல் படிந்தும்

அலவன் ஆட்டியும்”      (பட்டினப் பாலை-99-100)

என்ற வரியில் மூலம் நண்டுகளை வைத்து விளையாடியச் செய்தி பட்டினப்பாலையில் இடம்பெறுகிறது.

பந்தாடுதல்

பந்தாடுதல் அன்றைய மகளிர் வழக்கமாகக் விளையாடினர். அதனை,

“பந்து ஆடு மகளிரின் படர்தரும்

குன்றுகொழு நாடனொடு”       (ஐங்குறு-295)

மற்றொரு வரியிலும் பந்தாடுதல் பற்றிய செய்தி வருகிறது. அவை,

“பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே”(ஐங்குறு-377)

ஆகிய பாடல்களின் மூலம் மகளிர் பந்தாடுதலையும் கழங்காடுதலையும் வழக்கமாக கொண்டிருந்தனர் என்பதனை இதன் மூலம் தெரிகிறது.

 

ஏறுதழுவுதல்

சங்க கால ஆடவர் ஏறுதழுதவுதல் மூலமாக தங்கள் வீரத்தை வெளிபடுத்தினர். தற்போது விளையாடக்கூடிய ஜல்லிக்கட்டின் முன்வடிவமாகும். ஏறுதழுவுதல்  முல்லை நிலத்திற்குரிய விளையாட்டாகும். இவ்விளையாட்டு சிறப்பாக நடைபெற்றது என்பதை பல நூல்களின் மூலம் அறியலாம். ஏழுதழுவுதல் பற்றியச் செய்தி கலித்தொகையில்  நிறைய காணபடுகிறது என்பதை,

“சீறு அருமுன் பின்னோன் கணிச்சிபோல் கோடுசீஇ

ஏறுதொழூஉப் புகுத்தனர்”    (கலி-101)

“முன்பின் ஏறு பல செய்து” என்ற வரியில் மூலம் ஏறுதழுவுதல் சிறப்பாக நடந்தது என்பதை அறியலாம்.

சங்க காலத்தில் மக்கள் விளையாட்டுக்களில் மிகவும் ஈடுபாடுயுடன் இருந்தனர் என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. எட்டுத்தொகை  நூலான புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, நற்றினை, ஐங்குறுநூறு போன்றவற்றிலும் பத்துப்பாட்டு நூலான பட்டினப்பாலை, பொருணராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை போன்ற நூல்களில்  விளையாட்டு பற்றியச் செய்தி இருக்கின்றது. அவர்கள் விளையாடிய விளையாட்டுக்களில் சில விளையாட்டு இன்றும் நம் இடையே இருக்கின்றன.

பயன்பட்ட  நூல்கள்

  1. புறநானூறு மூலமும் உரையும்- புலியூர்க்கேசிகன்
  2. தமிழர் நாகரீகமும் பண்பாடும்- அ.தட்சிணாமூர்த்தி
  3. தமிழ்மொழி-இலக்கிய வரலாறு- டாக்டர்.மா.இராசமாணிக்கனார்Top o
  4. பத்துப்பாட்டு மூலமும் உரையும் – டாக்டர்.கதிர் முருகு