முனைவர் பே. மகேஸ்வரி,

தமிழ் இணைப்பேராசிரியர்

என்.ஜி.எம்கல்லூரி

பொள்ளாச்சி

——————————————————————————————————————-

சமயக்குரவர் பக்தித் திறன்

கி.பி 250௦-க்குப் பின் தமிழகத்தில் அயலவரான களப்பிரரும், பல்லவரும் ஆட்சியுரிமை பெற்றிருந்ததால், தமிழைப் புறக்கணித்து விட்டுப் பாலி, பிராகிதம், வடமொழிகளை ஆட்சிமொழியாக்கினர். இந்நிலை கி.பி.6ஆம் நுற்றாண்டு வரை நீடித்தது. இதனால் குறிப்பிடத்தக்க தமிழ் நூல்கள் தோன்றவில்லை. ஆயினும் அறவொழுக்கங்கள் சிறப்பாகப்போற்றப்பட வேண்டிய நிலை. இந்நிலையில்தான் பக்தி இiakkaiakkamயக்கம் வேர் விடத் தொடங்கியது. சைவ, வைணவப் பெரியவர்களான நாயன்மார்களும், ஆழ்வார்களும் பக்திப் பாடல்கள்பாடியும், சமூக சேவைகள் செய்தும் சமயங்களைப் parappiபரப்பி வந்தனர்.

திஞானசம்பத்தார், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரையும் சைவ சமயக்குரவர்கள் என்பர். இவர்களின் பக்தித்திறன் எவ்வாறு அமைந்துள்ளது என ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

திருஞானசம்பந்தர்

8-ம் நூற்றாண்டில் புகலி, வேணுபுரம், சீகாழி, சிரபுரம், தோணிபுரம் எனப் பன்னிரண்டு திருநாமங்களைக் கொண்ட சீர்காழிப் பதியில் தோன்றியவர். இவர் பாடிய பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

திருஞானசம்பந்தருக்கு மூன்றாண்டு நடைப்பெற்றுக் கொண்டிருந்த போது தோணிபுரத் திருக்கோயிலில் பசியால் கோபுரத்தை நோக்கி அழுதபோது இறைவன் திருவருளால் உமையம்மை பொன் கிண்ணத்தில் ஞானப் பாலுடன் சிவஞானதையும் அமுதூட்டினார்.பால் தந்தவர் யார் என வினவ அதற்கு விடையாக,

‘தோடுடைய செவியன் விடை யேறியோர்

              தூவெண் மதிசூடிக்

       காடுடைய சுடலைப் பொடி பூசியென்

உள்ளம் கவர் கள்வன்

       ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து

ஏத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுர மேவிய

பெம்மான் இவன் அன்றே(திருப்பிரமபுரம்-1)என்று விளக்கினார்.

 

அற்புதம் நிகழ்த்திய அருளாளர்

திருப்பால்சிராமம் என்னும் திருத்தலத்தில் கொல்லி மழவனின் மகள் முயlலகன் என்னும் நோயினால் பிடிக்கப்பட்டதை அறிந்து இறைவனைப் போற்றித் திருப்பதிகம் பாடி, அப்பிணியை நீக்கினார். மதுரையில் சமணர்களோடு வாதிடுவதற்காக புறப்பட நேர்ந்தது. அந்நாள் சோதிடப்படி நல்ல நாளாக இல்லை என்று கூறினர். அப்போது “வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்” என்ற பதிகம் பாடி எல்லாநேரமும் நல்ல நேரம்தான் என்பதை உணர்த்தினார்.

மதுரை சென்று கூன் பாண்டியனின் நோய் நீக்கி அவனை சைவனாக்கினார். அவர்தம் பாடலில் சாதி, சமய வேறுபாடு, தீண்டாமை முதலிய மூட நம்பிக்கைகளுக்கு இடம் இல்லை.

திருநாவுக்கரசர்

கி.பி ஆறாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் திருமுனைப்பாடியில் பிறந்தவர். தமக்கையாருடன் வளர்ந்த திருநாவுக்கரசர் கல்வி கேள்விகளில் சிறப்புற்று உலக நிலையாமை உணர்ந்து மெய்யறிவு பெற்றுத் துறவு நெறியை மேற்கொண்டார். முதலில் சமண சமயத்தைத் தழுவிப் பின் சூலை நோயிற்கு ஆட்பட்டு சைவராயினார். சமணத்தைக் கைவிட்டுச் சைவத்தைச் சார்ந்த நாவுக்கரசரை, சமண முனிவர்கள் வேண்டுகோள்களுக்கு இணங்கி மகேந்திரவர்ம பல்லவன் நீற்றறையில் இட்டான். அப்போது நாவுக்கரசர்,

“மாசில் வீணையும் மாலை மதியமும்

       வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

       மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

       ஈசன் எந்தை இணையடி நீழலே” (தனித்திருக்குறுந்தொகை-1)

எனும் பாடல் பாடி, தண்டனையில் இருந்து தப்பினார். மேலும் நஞ்சை அருந்த செய்தும், யானைக்காலில் இட்டும், கல்லுடன் கட்டிக் கடலிலும் இட்டனர். இதிலும் நலம் பெற்றதைக் கண்ட மகேந்திரவர்மனும் வியப்புற்றுச் சைவமே மெய்ச் சமயமென்றும் உணர்ந்து சைவனானான்.

அருட்செயல்கள்

திருவையாற்றை அடுத்துள்ள திங்களூரில் அப்பூதியடிகள் மகனை உயிர்பெறச் செய்தார். திருவீழிமிழலையை அடைந்து ஆண்டவனின் பொற்காசு பெற்று அடியார்களின் அரும்பசிப்பிணியைப் போக்கினார்.

சுந்தரர்

       திருக்கைலையில் சிவபெருமானுக்கு ஆலால சுந்தரர் தொண்டு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் நந்தவனத்திற்குச் சென்ற போது தேவியரின் தோழியர்களாகிய அநிந்திதை, கமலினி ஆகிய இருவர் மீதும் காதல் கொண்டு தாமதமாக சிவசன்னிதானதிற்குச் சென்றதால் சிவபெருமான், பூவுலகில் மக்களாகப் பிறந்து காதல் கொண்டு தொண்டு செய்துவிட்டு வாருங்கள் என்று அருளி அனுப்புகிறார். அவ்வாறே மூவரும் சுந்தரர், பரவைநாச்சியார், சங்கிலி நாச்சியார் என்ற பெயர்களுடன் பிறந்து தடுத்தாட்கொள்ளப்படுகின்றனர்.

பிறப்பும் வளர்ப்பும், தடுத்தாட்கொள்ளுதலும்

ஆலால சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் பிறந்தார். புத்தூர் என்னும் ஊரிலுளள் சடங்கவி சிவாச்சாரியாருடைய திருமகளாரைத் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். உரிய நாளில் திருமணக் கோலத்தோடு இருந்த நம்பியாரூரரை இறைவன் தடுத்தாட் கொள்ள நினைத்துக் கிழவேதியாகத் தோன்றினார்.

மணப் பந்தலின் முன்னின்ற “இந்த நம்பியாரூரன் என் அடிமை” என்றார். “அந்தணர், அந்தணருக்கு அடிமையாவது எங்கும் இல்லையே நீ என்ன பித்தரோ? என்றார்.. இறைவன் “நான் பித்தன் ஆனாலும், பேயன் ஆனாலும் உன்னை விட்டோழியேன். எனக்கு ஏவல் புரியும் கலப்பாடு உடையவன் நீ” என வற்புறுத்தினார்.

நீ அடியவன் என்ற உண்மையை அறிய விரும்பினால், திருவெண்ணைநல்லூர் வரும்படி இறைவன் ஆணையிட்டார். அதன்படி அங்கு சென்ற போது கிழவேதியராக வந்த இறைவன் கோயிலுக்குள் அனைவரும் அறிய மறைந்தார். சிவபெருமான் இடபவாகனத்தில் காட்சி தந்து வன்தொண்டன் என்று கூறி பித்தன் என்று கூறிய சொல்லை வைத்தே பாடல் பாடும் படியாகக் கூறுகிறார். அவ்வாறே,

“பித்தா பிறைசூடி பெருமானே யருளாளா

       எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

       வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்

       அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே” (தேவாரப்பதிகம்) எனப்பாடினார்.

அற்புதச் செயல்கள்

திருக்குருகாவூரில் சிவபெருமான் அளித்த பொதிசோற்றை உண்டு “இத்தனையா மாற்றை அறிந்திலேன்” என்ற் பதிகம் பாடினார். திருக்கச்சூரில் சிவபெருமான் பிச்சை எடுத்து வந்து தந்த உணவை உண்டு, “முதுவாய் ஓரி கதற” என்று பதிகம் பாடினார். ஒருநாள் காலை மகிழ மரத்தடியில் “நான் என்றும் உன்னைப் பிரியேன்” என்ற சபதத்தைமறந்து திருவாரூர் சென்று விட்டார். இறைவனைக் காணும் பொருட்டுச் சென்ற ஆரூரரின் கண்கள் ஒளி இழந்து பின் இறைவன் அருளால் மீண்டும் பார்வைப் பெற்றார். உடற்பிணியால் வருத்தமுற்ற சுந்தரர் திருப்பூந்துருத்தியை அடைந்து  பதிகம் பாடி குளத்தில் மூழ்கி உடற்பிணி நீங்கப்பெற்றார். சேரமான் பெருமானைகான மலைநாடு சென்றபோது முதலை உண்ட பாலகனை மீண்டும் உயிருடன் மீட்டுக் கொடுத்து அற்புதம் நிகழ்த்தினார்.

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூரில் பிறந்தார். இவருக்கு திருவாதவூரர் என்ற பெயரும் உண்டு. அவர் இயற்றிய நூல்களான திருவாசகமும், திருக்கோவையாரும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையாக வைத்துப் போற்றப்படுகின்றன.

அரிமர்த்தனப் பாண்டிய மன்னன் இவரின் அறிவு ஆற்றல் சிறப்புக்களைப் பாராட்டி மந்திரியாக நியமித்து, தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டத்தையும் வழங்கினார். ஒருசமயம் சோழ நாட்டுக் கடற்கரையில் உயரின குதிரைகள் விற்பனை செய்யப்படுவதை அறிந்த மன்னன் குதிரைகளைவாங்கி வருமாறு மாணிக்கவாசகரை அனுப்பினான். இறைவன் திருவருள் இனிமேலும் அவரை உலகியல் வாழ்வில் உழல வைப்பது தகாது என்று திரு உள்ளம் கொண்டு தம் திருவடி நிழலில் ஆட்கொள்ள எண்ணினார். வழியில் பரிவாரங்களுடன் அமைச்சரும் திருப்பெருந்துறையை வந்தடைந்தனர்.  அங்கு  குருந்த மரத்தடியில் ஞான குரு ஒருவரால் இன்னருள் பாலிக்கப் பெற்று சிவஞானச் செல்வரானார். இப்படி பக்தி வைராக்கிய விசித்திரத்தை, தன்னை ஆட்கொண்டருள், திருப்பெருந்துறை இறைவன்பால் கொண்டிருந்த பேரன்பின் திறம் திருச்சதகத்தில் வெளிப்படுகிறது. இந்த இரட்சிப்பைப் பத்து வகையாகப் பகுத்துக் காட்டுகிறார்.

  1. மெய்யுணர்தல்
  2. அறிவுறுத்தல்
  3. சுட்டறுத்தல்
  4. ஆத்தும சுத்தி
  5. கைம்மாறு கொடுத்தல்
  6. அனுபோக சுத்தி
  7. காருணியத்து இரங்கல்
  8. ஆனந்தத்து அழுந்தல்
  9. ஆனந்தப் பரவசம்
  10. ஆனந்தா தீதம்

சைவசமயக் குரவர்களான நால்வரும் கீழ்வரும் மார்க்கங்களைக் கைக் கொண்டனர். முதலாவது தாசமார்க்கம் என்னும் கிரியை. உடலுழைப்பால் இறைவனுக்குச் செய்யும் சேவைகள், கோயில் கட்டல், கோயில் தூய்மை செய்யல், மாலை தொடுத்தல் போன்றன. இதற்கு நாவுக்கரசர். இரண்டாவது புத்திமார்க்கம் எனும் சரியை. மகன் தந்தையைப் போற்றுவது, தொழுவது போன்ற தொடர்புடை யாரிடத்தில் அன்பு காட்டல், இதற்குச் சான்று ஞானசம்பந்தர். மூன்றாவது, யோகம் என்னும் சகமார்க்கம். உற்ற நண்பனது நட்பு போன்ற அன்பு காட்டும் சார்ந்த வழி. இதற்குச் சான்று மாணிக்கவாசகர்.

முடிவுரை

சமய உணர்ச்சி பல வகையில் நிலைகுலைந்திருக்கும் இக்காலத்தில் மக்களுடைய உள்ளத்தில் மீண்டும் அவ்வுணர்ச்சியை நிலைபெற செய்ய வேண்டியது சமயத்துறையில் ஈடுபட்டோருடைய கடமையாகும். சமய அறிவு பரவவேண்டுமானால், சமய நூல்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும்படி செய்வதே தக்க வழியாகும். எனவே, சைவமும் தமிழும் பரவி ஓங்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தலங்கள் தோறும் சென்று பாடிய சமயக்குரவர்கள் பக்தி போற்றுதற்குரியது.

Leave a Reply