வெ.பரிமளம், உதவிப் பேராசிரியர்,                                                                    தமிழிலக்கியத் துறை,                                                                    என்.ஜி.எம்.கல்லூரி,                                                                    பொள்ளாச்சி.

தனிமனித அறங்கள்

உலக உயிரினங்களில் தனித்துவம் மிக்கவனான மனிதன் காலத்திற்கேற்ப தம்மை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் படைத்தவன். தன்னைப் பற்றிச் சிந்திக்க தொடங்கிய பிறகு நல்லது கெட்டதைப் பற்றிப் பகுத்தறிய ஆரம்பித்தான்.பகுத்தறியும் போது குழப்பம் விழையாமல் இருக்கவும், தீமைகள் தோன்றாமல் இருக்கவும் சில வரையறைகள் தேவைப்பட்டன.அந்த வரையறைகளே அறம் என வழங்கப்ப்பட்ட்து எனலாம்.

அறம்விளக்கம்:

          அறம் என்ற சொல் அறு என்ற வினைச்சொல்லை அடியாகக் கொண்டு பிறந்தது. ‘அறு’ எனும் அடிச்சொல்லுக்கு அறுத்துச்செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு,வேறுபடுத்து போன்ற பல பொருள்கள் உண்டு. தீமையினின்றும் நன்மையை அறுப்பதே அறமாகும்.

          அறியாமையால் விளைவது தீவினை. அறியாமையாவது இருள். அவ்விருளை அகற்றுவது அறத்தின் பயன்(திருக்குறள்,அறத்துப்பால்,ப.33) என்பார் தண்டபாணி.

          மனதளவில் குற்றமில்லாமல் இருப்பதே அறம் என்று திருக்குறள் வலியுறுத்துகிறது.

இதை,

          மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

          ஆகுல நீர பிற (34).

என்பதால் அறியலாம்.

          அறம் என்ற சொல் ஆங்கிலத்தில் ETHICS என்று அழைக்கப்படுகிறது.இது ETHOS என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது.இது வழக்கம் என்ற பொருளில் அமைந்த கிரேக்கச் சொல்லில் இருந்து ஆங்கிலத்திற்கு வந்த சொல்லாகும்.அறம் எனும் சொல் பல்வேறு நிலைகளில் ஆழ்ந்த பொருளுடன் விரிந்து கிடக்கிறது. அத்தகைய அறத்தை மனிதர்கள் பின்பற்ற வேண்டியது இன்றைய சூழலில் அவசியமாகிறது.

 தனிமனித அறங்கள்:

       மனிதன் விலங்கில் இருந்து பரிணமித்தவன். ஆகையால் விலங்கு குணங்கள் அவனிடம் இருப்பது இயல்பானது.அந்த விலங்கு குணங்களை அடக்கி பண்பட்டு வரும் தன்மையே அறம் எனப்படுகிறது.சமூகத்தில் வாழும் தனிமனிதன் பின்பற்றுகின்ற ஒழுக்க னெறிகளே தனிமனித அறங்களாகும். அற நிகழ்வுகள் காலந்தோறும் கடைபிடிக்கப்பட்டு வருவன. மனச்சான்று நிலையில் நல்லவனாக விளங்குவது தனி மனிதனைப் பொறுத்து அமைவதாகும்.

          அறமே ஆக்கம் அதனை மறத்தலே கேடு (32) என்கிறார் வள்ளுவர்.

தனிமனிதனைப் பொறுத்த வரையில் நல்ல ஒழுக்கமே முக்கியமானதாகும்.அதை வேத நூல்கள் ஸ்தயம் வத தர்மம் சரஎன்னும் மந்திரத்தால் விளக்குகிறது. அம்மந்திரம் ‘ நேர்மையானதை செய்ய வேண்டும்’ தெரிந்ததை மட்டும் சொல்லித் தெரிந்ததை மட்டும் செய்யவேண்டும். கடுமையாகப் பேசாமல் இனிமையாகப் பேச வேண்டும். போன்றவற்றைக் கூறுகிறது எங்கிறார் கலைவாணி ராமநாதன் (இந்து தர்மமும் வர்ண தர்மமும் ப.4)

நட்பறம்:

          தனிமனிதன் பின்பற்ற வேண்டிய அறங்களில் முக்கியமானது நட்பறமாகும். மனித மனம் விரிவடையக் காரணமாக அமைகிறது. எல்லா உயிர்களுக்கும் பொதுவான குணமாக நட்பு அமைகிறது. நட்பு பொருளாலோ, கைம்மாறு செய்தலாலோ தோன்றுவது கிடையாது. அது மனிதனின் விருப்பத்தால் அமைவதாகும். இதை,

          தசை பெரிதுடையார் நல்கலு நல்குவர்”(குறு...37)

என்ற அடியால் அறியலாம்.

ஒருவனது குணத்தையும் நடத்தையும் நன்கு அறிந்து கொண்டு நல்லவர்களாக நட்பு செய்ய வேண்டும்.அவசரப் பட்டு ஆராயாமல் நட்பு செய்யக் கூடாது. ஆராய்ந்து ஒருவரை நட்பு செய்து கொண்டால் எக்காலத்திலும் நண்பரைச் சந்தேகப்படக்கூடாது. இதை,

          நாடி நட்பின் அல்லது

          நட்டு நாடார் தம் ஒட்டியதோர் திறத்தே”(பா..32, அடி,8-9)

எங்கிறது நற்றினை. இதனை ஒத்துத் திருவள்ளுவரும்,

          நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்

          வீடில்லை நட்புஆள் பவர்க்கு”(791)

என்கிறது.

          நட்பு என்பது அறமாகும். நாடி  நட்பு செய்த பின் நண்பரைச் சந்தேகிக்கக்கூடாது என்பதை அறிய முடிகிறது.

அறத்தின் தன்மை:

          அறம் அதைச் செய்பவர்க்கும் பெறுகின்றாவர்க்கும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.மனிதனின் தனித்துவம் மிக்க குணங்களில் ஒன்று அறம் செய்தல். அறமானது இன்பத்தையும் பொருளையும் வழங்கக்கூடியது. இதுவே அறத்தின் தன்மையாகும். இதைப் புறநானூறு,

          சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்

          அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல(பா.எண்.31)

என்கிற அடிகளால் உண்ர்த்துகிறது

செல்வத்தை பகிர்ந்து கொடுத்தால் தான் அது பயன் தரும். ஈயாதவனின் செல்வமானது நாய் பெற்ற தேங்காய் போன்று பயனற்றது. அது போல கருமியின் செல்வமும் அறத்தின் பாற்படாது என்பதை,

          அறம் பெரிதாற்றி யதன்பயன் கொண்மார்”(பரி.பா..19 .10)

என்பதால் அறியலாம்.

          அறத்தினுள் அன்பு நீ (மேலது.பா.எ.3) என்று திருமாலையே அறமாகக் காண்கிறது. பரிபாடல். உயிர்,யாக்கை,செல்வம் போன்றவை நிலையற்றன. ஆகையால் நாம் நன்றாக இருக்கும் போதே அறம் செய்ய வேண்டும். இதை,

          செய்குவம் கொல்லோ நல்வினை”(புறம்.பா.214..1)

எனற அடிகளால் அறிய முடிகிறது.

          இன்னா வைகல் வாரா முன்னே

          செய் நீ முன்னிய வினையே”(புறம்.63)

என்று கூறும் கருத்தோடு ஆசாரக்கோவையின் பின்வரும் கருத்தை ஒப்பு நோக்கினால் தினமும் அறம் செய்ய வேண்டும. என்பதை அறியலாம்.

          வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும்

          நல் அறமும் ஒண்பொருளும் சிந்தித்து”(பா..4)

உலகின் இயல்புணர்ந்து அறம் செய்ய வேண்டும். அறத்தை செய்யாவிட்டாலும் தவறில்லை, அறமற்றதைச் செய்யக் கூடாது. அதுவே உலகத்தவர் விரும்பும் நெறியாகும். இதை

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

          அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்

          எல்லாறும் உவப்ப தன்றியும்

          நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே”(புறம்.195.அடி,6-9)

என்கின்ற அடிகளால் அறியலாம். உலகத்தில் நாம் செய்கின்ற நல்லதும் கெட்டதும் மற்றவர்களால் அறியப்படும்.ஆகையால் கெட்டதைச் செய்யாமல் நல்லதையே செய்ய வேண்டும் என்பதை புறநானூறு,

          “வசையும் நிற்கும் இசையும் நிற்கும்

          அதனால் வசை நீக்கி இசை வேண்டியும்

          நசை வேண்டாது நன்று மொழிந்தும்”(புறம்.,359)

என்ற அடிகளால் விளக்குகிறது. முடிந்த அளவு நல்லதைச் செய்ய வேண்டும். என்பதை,

          ஆற்றும் துனையால் அறம் செய்கை

          முன் இனிதே”(பா..6)

என்ற இனியவை நாற்பது அடிகளால் அறியலாம்.

          உடலைப் பற்றிய நன்னிலை, மனத்தைப் பற்றிய தூய்மை நிலை,பேச்சின் இனிமை இவையெல்லாம் பண்பாட்டில் அடங்கும்.(தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.5) என்பார் தட்சிணாமூர்த்தி. அறம் செய்ய இக்குணங்கள் இன்றியமையாததாகும். நம்மைப் பற்றிய நன்னிலையும், அறம் செய்யத் தூய்மையான மனமும் அறச்சிந்தனைகள் உருவாக்க காரணமாகும். அறம் நடைபெறுவதால் இவ்வுலகம் நிலைபெறுகிறது எனலாம்.

மதிப்பறம்:

          தமது பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்தல், வறுமையால் வாடி வந்தவர்க்கு தனது பொருள்களை ஈதல் என வாழ்வியல் அறங்கள் பலவாகும். வறியவர்க்கு ஈதலும் அதனால் உண்டாகும் புகழால் வாழ்வது மனித வாழ்விற்கு இன்றியமையாதது” (231) என்கிறது திருக்குறள்.

          ஒரு மனிதன் தான் செலவழிக்கப் பொருள் இல்லையென்றாலும் மதிப்புடன் வாழ வேண்டும்.மேலும் பிறரிடம் சென்று இரக்கக்கூடாது. என்பதை,

          ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே

          தா என் கிளவி ஒப்போன் கூற்றே

          கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே”(தொல்.நூ.49-51)

என்ற நூற்பாவால் அறியலாம். இதை புறநானூறு,

          ஈ என இரத்தல் இழிந்தன்று அதனெதிர்

          ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று

          கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்

          கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று”(புறம்.,204,1-4)

என்ற அடிகள் உணர்த்துகின்றன. ஈதலை விடக் கொள்ளேன் என்று ஈகை மறுப்பதே உயர்ந்த அறம் என்பதையும் அவ்வறத்தைச் சங்க கால மக்கள் பின்பற்றினர் என்பதையும் அறிய முடிகிறது.

          ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

          போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

          பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

          அன்பு எனப்படுவது தங்கிளை செறாமை

          அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோன்றல்

          செறிவு எனப்படுவது கூறியது மறாமை

          நிறை  எனப்படுவது மறைபிறர் அறியாமை

          முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் எனப்படுவது வௌவ்வல்

          பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்”(கலி-133., ,6-14)

என்ற அடிகள் தனிமனிதன் பின்பற்ற வேண்டிய அறமுறைகளை வழியுறுத்துகின்றது.

முடிவுரை:

       தனிமனிதர்கள் தங்களுக்குள் ஒரு கோட்பாட்டை வகுத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால் அது தனிமனித அறமாக மதிக்கப்படும்.தனி மனிதர்கள் சமுதாயத்தின் அங்கமாக இருப்பதால் தனிமனித அறங்களே சமுதாயத்தை நல்ல நெறியில் செலுத்தும் என்பதை அறியமுடிகிறது.

Leave a Reply