“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
என்ற பாரதியின் கனவை நனவாக்கப் பொள்ளாச்சி நகரில் செல்லப்பம்பாளையம் நல்லமுத்துக் கவுண்டர் 12.07.1957 இல் இக்கல்லூரியை நிறுவி இவ்வட்டார ஏழை மக்களுக்கு எழுத்தறிவிக்க முனைந்தார்.
மற்றவர்கள் வாழ்க்கை ஒளி பெற்று வளம் பெறத் தனது பங்களிப்பை வாரி வழங்கித் தமிழ்ப் பண்பாட்டுடன் இக்கல்லூரியை வழிநடத்தி வருபவர் அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்கள்.
கல்லூரி தொடங்கியது முதல் தமிழ்த்துறையை வழிநடத்திய தமிழ்ச் சான்றோர்கள் வருமாறு :
புதிய கல்லூரியின் துருவ நட்சத்திரமாக விளங்கியவர் தமிழ்ப் பேராசிரியர் மு.வேங்கடசாமி அவர்கள்.
ஆழ்ந்த தமிழறிவு எனும் விடிவெள்ளியாக விளங்கி மாணவ மலர்களைத் தமிழ் மனம் ஊட்டி மணக்க வைத்தவர் பேராசிரியர் மு.சி.கணேசன் அவர்கள்.
தமிழ் இலக்கியக் கருத்துக்களையும் மொழியியல் அறிவையும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் விளக்கி மாணவர்களை நெறிப்படுத்திச் சென்றவர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் அவர்கள்.
சிம்மக் குரலோசை மூலம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழமாகவும் அழுத்தமாகவும் விவரித்த பெருமைக்குரியவர் பேராசிரியர் சு.நாச்சிமுத்து அவர்கள்.
மானுட சமூகத்தில் உயிர் விதைகளான பள்ளிக் குழந்தைகளை வளப்படுத்தியதோடு 1974 முதல் இக்கல்லூரி மாணவச் செல்வங்களையும் தமிழ் இலக்கியச் சுவையோடு நகைச்சுவை உணர்வையும் ஊட்டி அறக்கருத்துக்களை ஆணித்தரமாக நிலைநிறுத்த அரும்பாடுபட்டவர், பல மேடை கண்ட பெரும் பேச்சாளர், சிறந்த கவிஞர், சிறந்த கட்டுரையாளர், திறனாய்வாளர் அமுதன் என்ற முனைவர் க.இராமசாமி அவர்கள்.
தமிழை வரலாற்று நோக்கிலும், பக்திச் சுவையோடும் திறனாய்ந்து புலப்படுத்தியவர், நகைச்சுவையாளர், பல ஆய்வுத் திட்டங்களை செவ்வனே நிறைவேற்றியவர் என்ற பெருமைக்குரியவர் முனைவர் இரா.இராஜகோபால் அவர்கள்.
தமிழ்த்துறையின் அட்சயபாத்திரமாக, (1958 லிருந்து) கலைக்களஞ்சியமாக, கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக, கட்டுரையாளராக, பல்கலைக்கழகப் பேராசிரியராக, பல விருதுகளின் சொந்தக்காரராக, மண்ணின் மைந்தராக, கல்லூரியின் அடிக்கல்லாக விளங்கி மாணவர்களின் தமிழ் ரசிகராக விளங்கியவர் பேராசிரியர் முனைவர் சிற்பி பலசுப்ரமணியம் அவர்கள்.
1987 முதல் கல்லூரி தன்னத்ச் பெற்றது. தமிழ்த்துறையும் புத்துணர்ச்சியோடு ஆய்வுத்திட்டங்களோடு வீறுநடை போடுகிறது.
ஆய்வுப்பிரிவு :
1994 ஆம் ஆண்டு முதல் பகுதி நேர எம்.பில்., பிஎச்.டி ஆய்வுகளும், 2003 ஆம் ஆண்டு முதல் முழுநேர எம்.பில்., பிஎச்.டி ஆய்வுகளும் நடந்து வருகின்றன. இதுவரை 28 பேர்  பிஎச்.டி பட்டமும், 54 பேர்  எம்.பில். பட்டமும் பெற்றுள்ளனர்.
களஞ்சியம் ( கலை இலக்கிய விரிவாக்கப் பணி மையம் )

களஞ்சியம் சார்பில் பொள்ளாச்சிக் கல்வி மாவட்ட பள்ளித் தமிழாசிரியர்களுக்கான புத்தொளிப் பயிற்சி வழங்கி வருதல்.
தமிழ் மன்றம்
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தமிழகத்தின் சிறந்த இலக்கியப் பேச்சாளர்களையும் வல்லுநர்களையும் அழைத்து பருவத்திற்கு  ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்தல்.