முனைவர் த.கீதாஞ்சலி,

தமிழ் உதவிப்பேராசிரியர், என்.ஜி.எம் கல்லூரி, பொள்ளாச்சி

————————————————————————————————–

திருக்குறள் காட்டும் பண்பாட்டுப் பதிவுகள்

வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறிகளை வகுத்துக்காட்டும் திருக்குறள் ஒரு வாழ்க்கை இலக்கியம். இலக்கியம் மனித வாழ்க்கையினின்றே மலர்வது. வாழ்க்கைக்கே உரியது. வாழ்க்கைக்காகவே அது நிலைப்பெற்று உள்ளது என்பார் ஹட்சன் என்ற மேனாட்டுத் திறனாய்வாளர். வாழ்வின் எல்லாக் கூறுகளும் உண்மை  நெறியில் வைத்துப் பேசப்பட்டன. “சிறந்த கருத்துக்களின் பதிவே இலக்கியம்” என்பார் எமர்சன். அந்த வகையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் மனித வாழ்வின் மாண்புகளை, இலக்குகளை, குறிக்கோள்களைப் பல அதிகாரங்களில் விளக்கியுள்ளார். மனித மனம் பண்படுவதைக் காமத்துப்பாலிலும், பயன்படுவதை அறத்துப் பாலிலும், பண்படுவதையும் பயன்படுவதையும் பொருட்பாலிலும் எடுத்துக் காட்டியுள்ளார். வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அரிய கருத்துக்களை, நீதிகளைப் புகுத்திச் சொல்லும் சங்க இலக்கியக் கருத்துக் கரூவூலமாகத் திகழும் திருக்குறளின்கண் அமைந்துள்ள பண்பாட்டுப் பதிவுகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பண்பாடு

       செம்மைப்படுத்தப்பட்ட மானிட உணர்வுகளே ‘பண்பாடு’ என்பர்.. “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” என்ற கலிதொகைப் பாடல், எல்லோருடைய இயல்புகளையும் அறிந்து நன்நெறியில் நடத்தலே பண்பு என்று கூறுகின்றது. பண்பாடு என்னும் சொல் காலத்தினால் பிந்தியதாக இருப்பினும், அச்சொல் குறிக்கும் பொருள்கள் பழந்தமிழ்ப் பாடல்களில் பல்கி வந்துள்ளன.

“பாடறிந்தொழுகும் பண்பினோரே புறம்-197

“கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டீரத்து புறம் -120

“பயனும் பண்பும் பாடறிந்தொழுகலும் நற்-160

ஆகிய வரிகளைக் கொண்டு தமிழினத்தின் பண்பாடு வரலாற்றுப் பின்னணி கொண்டது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மானுடம் என்பது மக்கட் பண்பு. உலகில் மனிதராகப் பிறந்தவர் மக்களுக்குரிய பண்புகளைப் பெற்று வாழ வேண்டும். மக்களைப் போன்று உருவ ஒப்பும், அறிவு நுட்பமும் பெற்றிருப்பினும் பண்பு உள்ளவர்களே மக்கள் எனப்படுவர். மனிதப் பண்பை முழுமையாகப் பெற்ற சான்றோர்களால் தான் இவ்வுலகு வாழ்கிறது என்னும் கருத்தை,

“சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்

தாங்காது மன்னோ பொறை” (990)

என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

பண்பாட்டின் இருநிலைகள்

       பண்பாடு என்பதை அடிப்படை நிலைப்பண்பாடு, கலப்பு நிலைப்பண்பாடு என இரு நிலைகளில் பாகுபடுத்திக் காணலாம். பண்பாடு என்னும் சொல் பல்வேறு மதிப்புக்களை உள்ளடக்கிய ஆழ்ந்த நுண்ணிய பொருளைத் தருவதாகும். எந்த இனத்திற்கும் மொழிக்கும் அடிப்படையான பண்பாடு ஒன்று உண்டு. இத்தகைய அடிப்படையான பண்பாட்டில் அவ்வினதிற்கே உரிய அம்மொழிக்கே உரிய தனித்தன்மை புலப்படும். தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் உரிய பண்பாடு தமிழரின் “அடிப்படை நிலைப்பண்பாடு” எனலாம்.

       காலம் வளர வளர எந்த நாட்டுப் பண்பாட்டிலும் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படுதல் இயற்கை. அந்நிலையில் பண்பாட்டில் கலப்பு ஏற்படுகிறது. அதுவே கலப்புநிலைப்பண்பாடு எனப்படுகிறது. சங்க காலத்தில் வடநாடினர் தொடர்பால் தமிழகப் பண்பாட்டில் கலப்பு ஏற்பட்டது.

       “வடசொற் கிளவி வட எழுத்தொரீ இ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் மே (395)

        மறையோர்தேஎத்த மன்றல் எட்டனுள்

        துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (389)

என்றத் தொல்காப்பிய நூற்பாக்கள் வடசொல் குறித்தும் வடமொழிப் பண்பாடு குறித்தும்அறிவிக்கின்றன.இருப்பினும் தமிழ் அடிப்படைப் பண்பாடும் மதிப்புமே தலைசிறந்து விளங்குகின்றன.

திருக்குறளில் பண்பாட்டுச் செய்திகள்

       அன்புடைமை, கல்வி, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை போன்ற பல்வேறு பண்பாட்டுப் பதிவுகள் திருக்குறளில் காணக்கிடக்கின்றன.

அன்புடைமை

       மானிட வாழ்வில் அன்பு ஒன்றே ஆதாரமாகும். மனிதனை மனிதனோடும், பிற உயிர்களோடும் பிணைத்து வைப்பது அன்பு. அன்பு கொண்டு வாழ்வதால் பிணக்குகள் நீக்கி வேற்றுமைகள் மறையும். யார் எந்த நாட்டவர்களாக இருந்தாலும் சரி, எந்த மொழியைப் பேசினாலும் சரி, எந்த மதம் இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நாம் எல்லோரும் அன்பால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். தனி மனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும், பொது வாழ்விலும் அன்பை மூலதனமாகக் கொண்டு வாழ வேண்டும்.

நம்முடைய வாழ்நாள் சிறிது காலம் ஆகும். அதனால் இருக்கும் காலம் வரையில் இன்பமாய் அன்பாய் வாழ்வோம். ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி வாழ்வோம் என்னும் நோக்கில் கவிமணி தம் கவிதையில்,

“இருக்கும் காலம் சிறிதேயாம்l

இதனுள் இன்பம் வாழ்வினையாம்

பெருக்கு மளவு பெருக்கிடுவோம்

பிழையொன் தனால் உண்டா? சொல்

என்று மனிதன் வாழக்கூடிய சில நாளாவது அன்பு பாராட்டி மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்கிறார். இதனைப் போன்றே

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்றும் உரியர் பிறர்க்கு(72)

என்னும் குறள் வழி அன்பில்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே பயன்படுத்துவர். அன்பு உடையார் தம் எலும்பும் பிறர்க்கு உரியது என்று கொடுப்பர் என்று திருவள்ளுவர் அன்பின் சிறப்பை எடுத்துக் கூறுகிறார்.

இன்றைய சூழலில் மனிதன் தவறான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான் மனித நேயமில்லாமல் உயிர்களை வதைப்பது, கொலை, கொள்ளை, பொய் பேசுதல் பழிச்செயல் போன்ற தவறான கொடிய செயல்களில் ஈடுபட்டு வருகிறான் . அத்தகைய மனிதனை நேர்மையோடு நல்ல வழியில் வாழச் செய்ய வேண்டும்  என்ற கருத்தினை, அறம் சார்ந்த அமைதிச் செயல்களுக்கே அன்பு துணையாகும் என்போர் அன்பின் இயல்பு அறியார். நாடு, மொழி, கொள்கைக் காக்கும் போருக்கும் அன்பே துணை என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,

       “அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

        மறத்திற்கும்அஃதே துணை(76)

என்ற குறளின் வாயிலாக எடுத்துரைக்கிறார்.

கல்வி

மனித வாழ்வின் அடிப்படையே கல்வி கற்றலில் தான் உண்டு. எனவே தான் ஔவையார்  பல ஆண்டுகளுக்கு முன்னரே “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று கூறினார்.

“கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு

“கற்றோரைக் கற்றாரே காமுறுவர்

என்ற பொன் மொழிகள் கல்வியினால் வரும் சிறப்பினை உணர்த்தக்கூடியவை. கல்வி அறிவு பெறாத மனிதன் களர் நிலத்திற்குச்சமமாவான், என்பதாலேயே கல்வி அதிகாரம் வகுத்துள்ளார்.

தமக்கு இன்பம் தன் கல்வி அறிவைத்t தம் வாயிலாகப் பிறர்  கேட்டு இன்பம் அடைதலையே கற்றவர்கள் விரும்புவார்கள். ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வமானது கல்வியே. அதைத் தவிர மற்றைய செல்வங்கள் எல்லாம் செல்வங்கள் ஆகா என்பதை,

“கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடுஅல்ல மற்றை யவை “

என்றும், கல்வி அறிவு பெற்றவர்களே கண்களையுடையவர்கள் என்றும், கல்லாதவர் தம் முகத்தில் புண்களைப் பெற்றவர்கள் என்றும் கூறி வருந்துகிறார்.

கல்வியின் சிறப்புப் பற்றிய கருத்துக்கள் இந்திய இலக்கியங்களில் ஒருமைப்பாடுடையவனாய்த் திகழ்கின்றன. “வாழ்வதற்கோ சமுதாய வாழ்க்கைக்கோ முன் ஏற்பாடுகளைச் செய்து கொள்வது மட்டும் கல்வியின்  உண்மை நோக்கமன்று. வளமையும் முழுமையும் தூய்மையும் வாய்ந்த வாழ்க்கையைப் பெற உதவுவதே கல்வியின் நோக்கம் . இத்தகைய கல்வியே மனிதனைப் பொய்மையிலிருந்து உண்மையையும், இருளிலிருந்து ஒளியையும் இறப்பிலிருந்து இறவாப் புகழுடம்பையும் எய்தச் செய்கிறது. அறிவொளியைத் தருவதும் நிலைத்த புகழை நிலைநாட்டுவதும் மெய்மையை உணரச் செய்வதும் கல்வியே. அன்றைய காலம் முதல் இன்று வரை கல்விக் கற்றுச் சிறப்படைதலே நம் பண்பாட்டின் சிறப்பு என்பதை வள்ளுவர் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ஒழுக்கமுடைமை

சமுதாய ஒழுக்கத்திற்குத் தனிமனித ஒழுக்கம் அவசியம். தனிமனித ஒழுக்கத்திற்கு வாழ்வியல் கல்வியே பயனுடையதாக அமைகிறது. ஒழுக்கமில்லாத மனிதனைச் சமுதாயம் புறக்கணித்து விடுகிறது. செல்வம் என்பது பொருளல்ல அது சிறந்த ஒழுக்கமே என்பதை, “திருவொக்கும் தீதில் ஒழுக்கம்”என்று நான்மணிக்கடிகை கூறுகிறது. ஒழுக்கம் செம்மையை உருவாக்கும் என்பதால் அது உயிரைக் காட்டிலும் உயர்ந்ததுவாகும் என்பதை,

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப்படும் (131)

என்று கூறுகிறார். உலகத்துச் சான்றோர்கள் சென்ற வழியில் இணைந்து செல்லாதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்தாலும் அவர்கள் அறிவில்லாதவர்கள் ஆவார் என்பதை,

“உலகத்தோடு ட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்” (140)

என்னும் குறளின் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது. வேதத்திலே உள்ள உயர்ந்த பொருள்களை எல்லாம் திருக்குறலின் மூலம் சொல்லியிருப்பதனால், உலகத்தாரின் ஒழுக்கம் கெடாமல் காப்பாற்றப்பட்டது என்னும் கருத்தினை, ‘வேத விழுப்பொருளை வெண்குறலால் வள்ளுவனார் ஓத வழுக்கற்றது உலகு” என்று பாரதம் பாடிய பெருதேவனார் கூறுவது நோக்கத்தக்கது.

நடுவுநிலைமை

       செய்யத்தக்க, தகாத செயல்கள் இவை என்பதை அறநூலின் வழியில் நடுவுநிலையிலிருந்து ஆராயாத, மனவுறுதி அற்றவர்கள் உயர் மக்கட் பிறவி எனினும் விலங்கே. சிதையா நெஞ்சுடன் நடுநிலை வழியைப் பின்பற்றுவதே சிறந்தது. பசுவின் கன்றுக்காக மகனைத் தேர்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும்,புறாவிற்காகத்  தன் தசையையே அரிந்து கொடுத்த சிபிச்சக்கரவர்தியும்நெறியமைந்த நல்வாழ்வில் வாழ்ந்தவர்களேயாவர். நடுவுநிலைமை உடையவனின் செல்வமும் சிறப்பும் சேதம் எதுவுமின்றி அவன் வழிவருவோர்க்கும் புகழ் அரணாக இருக்கும் என்கிறார் வள்ளுவர் .

“கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின்(116)

என்ற குறளின் வழி, நெஞ்சம் நேர்மை தவறி முறைகேடாக நடக்கத் துணியுமானால் ‘அழிவு’ எனக்கு வந்து விடும் என்று உணர்ந்து கொள்வது நல்லது என்று கூறுகிறார்.அது  மட்டுமல்லாது நேர்மையில் நிலைத்து நிற்பவனுக்கு வீழ்ச்சி ஏற்பட்டாலும் அதனைக் கேடு என்று மக்கள் இழிவாக எண்ணமாட்டார்கள் என்பதை,

“கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு” (117)

என்ற குறள் வழி விளக்குகிறார். இருபக்கமும் சமமாக அமைந்து எடை அளக்கும் தராசு போல் ஒரு பக்கம் சாயாது நின்று  நீதி காத்தல் நல்லோர்க்கு அழகாகும். மனச் சாய்வுக்கு இடம் தராத உறுதி இருக்குமானால் சொல்லும் தீர்ப்பிலும் குறை நேராது செம்மை உண்டாகும்.

“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி(118)

“சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒரு தலையா

உள்கோட்டம் இன்மை பெறின் (119)

செல்வம் இழத்தலும் ஈட்டலும் உலகில் இயற்கையாக நிகழ்பவை. எனவே, நடுவுநிலை தவறிச் செல்வத்துக்காக ஒருபக்கம் சாயாது இருப்பதே நல்லோர்க்கு அழகு என வலியுறுத்துகிறார்.

வள்ளுவர் தமிழர் பண்பாடு அனைத்தையும் தம்  குறள்களில் எடுத்தியம்பியுள்ளார். உலக மக்களுடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் நடுவுநிலை தவறாது இருப்பதற்கும், மானிட சமூகம் அன்புடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கான உயர்ந்த கருத்துக்களையும், ஒழுக்கம் உடைமையே சிறந்த குடிப்பிறப்பின் தன்மை என்பதையும், கூறியிருப்பதனால் திருக்குறள் ஒரு பண்பாட்டுக் கருவூலம் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

Leave a Reply