அப்துல்ரகுமான் கவிதைகளில் அங்கதம்
சு.பிருந்தா தமிழ்த்துறைத் தலைவர் [சுயநிதி] ஶ்ரீ ஜி.வி.ஜி கல்லூரி உடுமலைப்பேட்டை
புதுக்கவிதைகளில் அங்கதம் ஓர் உத்தியாக கவிஞர்களால் படைக்கப்பட்டு வருகிறது. இவ்வுத்தி கிரேக்க நாட்டில் செல்வாக்குப் பெற்றுள்ளது போலவே தொல்காப்பியம் தொடங்கி இக்காலம்வரை தமிழ் இலக்கியத்திலும் அங்கதம் இடம் பெற்றுள்ளது. இது தொடக்க காலத்தில் ஓர் இலக்கிய வகையாக இருந்துள்ளது. பின்னர் உத்தியைக் குறிப்பதாக மாறிவிட்டது.
தமிழ்க் கவிதைகளுக்குப் புதிய தரிசனங்களைத் தந்த அப்துல்ரகுமான் நடுவுநிலைமையோடு சமுதாய நிகழ்வுகளைத் தம் கவிதைகளில் பாடுவதில் சிறந்து விளங்கியவர். சமூகச் சீர்கேடுகளைக் கண்டு கோபம்கொண்டு, அச்சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டுவதோடு அந்நிலை மாற வேண்டும் என்ற அக்கறை உடையவராகவும் இருந்ததால் அந்நிகழ்வுகளை அங்கதவுணர்வுடன் வெளிப்படுத்தியுள்ளார். கவிஞர் அப்துல்ரகுமானின் அங்கதக் கவிதைகளை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அங்கதம் :
நகைச்சுவையும், புலமை நுட்பமும், திறனாய்வு நோக்கும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி அங்கதம். இது மக்கள் சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.அங்கதம் என்பது தீங்கையும், அறிவின்மையையும் கண்டனம் செய்யும் பாட்டு (Satire is a poem in which wickedness or folly is censured ) என்பார் டாக்டர் ஜான்சன்.
தனிப்பட்ட மனிதனின் குறையையோ, ஒரு சமுதாயத்தின் குறையையோ, ஒரு இயக்கத்தின் குறையையோ குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ சுட்டிக்காட்டுவது அங்கதம் என்று பிரிட்டானிகா கலைக் களஞ்சியம் காட்டுகிறது.
தொல்காப்பியம் கூறும் அங்கதம்:
ஏழு வகையான இலக்கியங்கள் குறித்து தொல்காப்பியர் கூறுகிறார்,
” பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல்லோடு அவ்வேழ் நிலத்தும்” [தொல்- பொருள்–நூ 384 ]
என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் அங்கதம் என்றால் என்ன? என்று விளக்கமாகக் கூறவில்லை. அங்கதத்தின் வகைகளைப் பிரித்து காட்டியுள்ளார்.
” அங்கதம் தானே அரில்தபத் தெரியின்
செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே” [தொல் – பொருள் -429]
“செம்பொருளாயின் வசையென்பபடுமே” [மேலது -430 ]
“மொழிகரந்து சொல்லின் அது பழிகரப்பாகும்” [ மேலது-431 ]
செம்பொருள் என்பதை வசை என்றும், பழிகரப்பு என்பதை மொழி கரந்து சொல்லப்படும் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார்.
ஆங்கில மொழியில் அங்கதம்:
டிரைடன், போய், ஸ்விப்ட், பீசாக், ஹக்ஸ்லி போன்றோர் ஆங்கில மொழி இலக்கியத்தில் அங்கதத்தைக் கையாண்டுள்ளார்கள். கி.பி. -18 ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழியில் புதினங்களில் அதிகம் இதனைக் கையாண்டதாகக் குறிப்பிடுவர். இக்காலமே அங்கத இலக்கியத்தின் பொற்காலம் என்பர்.
தமிழில் அங்கதம் :
சங்க இலக்கியத்தில் அங்கதம் இடம் பெற்றுள்ளது. அதியமான் நெடுமானஞ்சிக்காக தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையார் அவனிடம் அவனின் படைக்கலத்தை உயர்வாகக் கூறிப் பழிப்பது அங்கதத் தன்மையுடையது
“இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
அண்ணல் எம் கோமான் வைந்நுதி வேயே” [புறம் -95 ]
புகழ்வது போலப் பழிப்பதே அங்கதமாகும். பழிப்பது போலப் புகழ்வது அங்கதமாகாது.
தனிப்பாடல்களில் அங்கதம் :
அங்கதம் வெளிப்படும் வகையில் காளமேகப் புலவர் மிகுதியாகப் பாடல் இயற்றியுள்ளார். குற்றம் கண்டு வசைபாடிய இவரை ” வசைபாடக் காளமேகம்” என்று அழைப்பர் அக்காலச் சமுதாயச் சீர்கேடுகளை வசைப்பாடல்களில் பாடுவது காளமேகப் புலவரின் பண்புகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.
புதுக்கவிதைகளில் அங்கதம் :
நாவல். சிறுகதை, நாடகம் போன்ற இலக்கியங்களில் அங்கதம் இடம்பெற்றாலும் புதுக்கவிதைகளில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கருத்தை உணர்த்தும் உத்தி முறைகளில் அங்கதம் இடம்பெற்றுள்ளது. தற்காலப் புதுக்கவிதைகளில் அங்கதம், எள்ளல், பழிப்புரை, நையாண்டி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பிறரது குறைகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் நோக்கம் கொண்டது. இக்காலத்தில் அரசியல்வாதிகள் செய்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டவும், சமுதாயத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி மக்களின் மனப்போக்கைத் திருத்தவும் அங்கதம் பயன்படுகிறது. அங்கதம் திருத்தும் நோக்குடையது. வசை ஒழிக்கும் நோக்குடையது.
நாற்காலி என்கிற கவிதையில் கவிஞர் அப்துல்ரகுமான் அரசியலில் நாற்காலிப் பதவியைப் பிடிக்க என்னென்ன வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அங்கதச் சுவையோடு காட்டுகின்றார்.
“ஓடிப்பிடித்தால்
நாற்காலி கிடைக்கும்
ஏலத்திலும்
எடுக்கலாம்
முகத்திற்கோ
வேட்டிக்கோ
பண்டமாற்றாகவும் பெறலாம் ” [ அப்துல்ரகுமான்- சுட்டுவிரல் – ப44 ]
தேர்தல் வரும்போதெல்லாம் நாற்காலிச் சண்டை வருவதைக் காணலாம். அதனைப் பெற பணம் முதலிடம் வகிக்கிறது. இதை கவிஞர் அங்கதச் சுவையோடு குறிப்பிடுகிறார்.
வாழ்வியல் அங்கதம் :
“அதுதான்” என்கிற கவிதையில் மனிதர்கள் சிலபோது செய்கின்ற நிகழ்வுகள் அங்கதமாக அமைந்துவிடுவது உண்டு. அதனை கவிஞர் அடுக்கிக் கூறுகின்றார்.
“அந்நிய மொழிப் படத்தைப்
பார்த்து
வசனம் புரியாததற்காக
வருதப்பட்டிருக்கிறீர்களா?
பெண்ணின்
பின்னழகாய்
கவரப்பட்டு
முகத்தைப் பார்த்தபோது
ஏமாற்றமடைந்திருக்கிறீர்களா?
திருவிழாவுக்கு
வேடிக்கை பார்க்கப் போய்
உங்கள் குழந்தையைத்
தொலைத்து விட்டுத்
தேடி அலைந்திருக்கிறீர்களா?
கடைசிப் பக்கங்கள்
கிழிந்து போன
துப்பறியும் நவீனத்தைத்
தெரியாமல் எடுத்துப்
படித்திருக்கிறீர்களா?
அதுதான் வாழ்க்கை” [ அப்துல் ரகுமான், ஆலாபனை – ப75.]
என்ற வாழ்வியலில் நடக்கும் சம்பவங்களை கவிஞர் அங்கதச் சுவையோடு சிந்திக்க வைக்கின்றார்.
கடற்கரை என்கிற கவிதையில் வாழ்வியல் யதார்த்தத்தைப் பதிவு செய்கிறார். எதற்காகப் பிறந்தோம் என்பது அறியாமலேயே வாழ்ந்துவிட்டு மனித வாழ்வியலை முடித்துக் கொண்டு விடுவதை,
“நம்முடைய
காலடிச் சுவட்டையும்
விட்டு விட்டுப் போகிறோம்
ஆனாலும்
கடலைப் பார்த்திருப்பதாக
நாம் பெருமையாகப்
பேசிக் கொள்கிறோம்” [ மேலது ப-118]
கடலின் பெருமையைப் பேசும் நாம் அதனைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதில்லை. அது போல்தான் வாழ்வும் அதனின் பெருமைகளையும், ஆழத்தையும் அறியாது வாழ்ந்து மடிகின்றோம் என்று மனித வாழ்வியலை அங்கதத்துடன் கடிந்துரைக்கின்றார்.
காதல் அங்கதம்:
காதல் அங்கதம் குறித்துப் பாடாத கவிஞர்கள் இல்லை. சங்க இலக்கியம் தொடங்கி தற்காலக் கவிதைகள் வரை காதல் குறித்த கவிதைகள் புற்றீசல்கள் போல பெருகிக்கிடக்கின்றன. கவிஞர் அப்துல்ரகுமானும் இது குறித்து அங்கதமுடன் பதிவு செய்கிறார்.
“அதிகாரம் செலுத்தாமலே
அடிபணியச் செய்வது
எப்படி என்பதைக்
காதலியிடம் கற்றுக் கொள்ளுங்கள்” [ ஆலாபனை. ப -155]
என்கிறார்.காதலில் ஆண்கள் பெண்களுக்கு அடிபணிந்தே ஆக வேண்டுமென்பதையும் கூறுகின்றார்.
“நீ காதலித்திருந்தால்
உனக்குத் தெரிந்திருக்கும்
தன்னையே பலிகொடுப்பவனுக்குத்தான்
காதல் தேவதை
வரம் கொடுக்கிறாள் [ மேலது – ப-134]
காதலுக்கு எதிரானவர் இல்லையென்றாலும், காதலின் உண்மை நிலையை எடுத்துரைக்கின்றார். ஆம் ’தற்கொலை செய்துகொள் நீ காதலில் அமரனாவாய்! என்று அங்கதம் வெளிப்படுத்துகின்றார்.
சமூக அங்கதம்:
அப்துல்ரகுமான் கவிதைகளில் எதிர்கால இந்தியா, ஒப்பில்லா சமுதாயம், ஒருமைப்பாடு, அரசியல் கோட்பாடுகள் போன்ற தேசியம் தொடர்பான பல கருத்துக்கள் காணக் கிடைக்கின்றன.
” சுதந்திர தின விழாவில் ’ஜன கன மன’ பாடிக்
கொண்டிருந்தார்கள் நான் பசியால் சுருண்டு
படுத்துக் கொண்டிருந்தேன் எழுந்து நிற்க
முடியவில்லை தேசிய கீதத்தை அவமதித்ததாகச்
சிறையில் அடைத்து விட்டார்கள்” [ சுட்டுவிரல்- ப-12]
சுதந்திர தினத்தை நாம் பெருமையோடு கொண்டாடுகிறோம். தேசிய கீதத்திற்கு மதிப்பு கொடுக்கிறோம். இதற்கிடையே ஒருவன் பசியால் வாடுகிறான். அந்த அவல நிலையைச் சுட்டுகிறார். மேலும்,
“கம்பங்களுக்கு ஆடை
மனிதர்களுக்கு நிர்வாணம்
விசித்திரமான தேசம்”
என்று கடினமான அங்கதமுடன் கூறுகின்றார்.
இங்ஙணம் அங்கதத்தை பல்வேறு நிலைகளில் அப்துல்ரகுமான் தன்னுடைய கவிதைகளில் உத்தியாக வெளிப்படுத்திய பாங்கை அறிந்தோம்.