முனைவர் அமுதன்,                                                                             மதிப்பியற் பேராசிரியர்,                                                                              என்.ஜி.எம்.கல்லூரி,                                                                              பொள்ளாச்சி.

                    கொங்கு நாட்டின் இலக்கணக் கொடைநன்னூல்

       “கொங்கு நாடு புகழ் தங்கு நாடு” என்பதற்கு நன்னூலும் ஒரு காரணமாயிற்று. நன்மை + நூல் = நன்னூல்.

இச்செயலுக்கு நாட்டுக்கும், மக்களுக்கும், மொழிக்கும், நன்மை புரிந்த  நூல் நன்னூல் என்பது பொருளாகிறது. நூல் என்பது இலக்கண நூலையே முன்பு குறித்தது. அதனால் தான் மொழியின் இலக்கணம் கூறும் பா வகைக்கு “ நூற்பா” என்று பெயராயிற்று.

          நூலின் தன்மையால்,(பண்பால்,குணத்தால்) பெயர் பெற்ற நூல்கள் என்று சிந்தாமணி நன்னூல் முதலாயின

என்று உரையாசிரியர்கள் உரைக்கின்றார்கள். நன்னூல் புரிந்த புரிகின்ற  நன்மை, உரையாசிரியர்கள் நெஞ்சில் ஆழப்பதிந்துள்ளமைக்கு இது சான்றாகும். நன்னூல் சிறப்புப் பாயிரத்தில்

                   பன்னரும் சிறப்பிற் பவணந்தி

                   என்னும் நாமத்து இருத வத்தோனே

          என்று போற்றுவதனால் அறியப் புகழ்க் கூட்டத்தைப் பவணந்தி பெறவுள்ளார் என்பதனை அன்றே அறிந்திருக்கிறார்கள். அவர் தந்தை சண்மதி முனிவர், அவர் பிறந்த ஊர் பொன் மதிற் சனகையெனும் இன்றைய சீனாபுரம். பவணந்தி என்னும் பெயர், சமண முனிவர்கள் பலரின் பெயர்களாக அன்று இருந்திருக்கிறது. ஞான சம்பந்தப் பெருமான் நந்திகள் பெயரை கேலித் தொனியில் தேவாரத்தில் குறிப்பிடுகின்றார். ‘பவ’ – உளதாதல் ‘ நந்தி’ – மகிழ்ச்சி, அறிவுடன், எப்போதும் மகிழ்வுடன் இருப்பவர். உலகத் துயரிலிருந்து விடுபட்டு, அருக தேவன் திருவடி  நீழலில் மகிழ்பவர் எனும் பொருளில் நந்தி எனும் பெயர் அக்காலத்தே சமண சமயத்தில் பெரு வழக்கினதாய் இருந்தது.

          கோவை – ஈரோடு நெடுஞ்சாலை வழியில், ‘சீனாபுரம்’ என்னும் பெயர் கொண்ட பழம்பெரும் சமயத் தலம் ஒன்று கொங்கு நாட்டில் இன்றும் உள்ளது. அந்தச் சிற்றூர்க்கு சீனர்கள் வந்து குடியிருக்கக் காரணமேயில்லை. ஆகவே, சீனர்கள் குடியிருந்த ஊர் என்னும் பொருள் அவ்வூர்ப் பெயருக்குப் பொருந்தாமல் நீங்குகிறது. ‘ஜினபுரம்’ , ‘ஜைனபுரம்’ என்பதன் தமிழ் வடிவமே ‘சீனாபுரம்’. ஜினர். ஜைனர் என்பவை சமணர்களைக் குறிப்பவை. இங்கு முதல் தீர்த்தங்கரர் ஆகிய ஆதி நாதர் கொயில் இன்றும் உள்ளது.

                   கங்கக் குரிசில் உவக்க நன்னூலைக் கனிந்து புகழ்

                   துங்கப் புலமை பவணந்தி மாமுனி தோன்றி வளர்

                   கொங்கில் குறும்புதனில் ஆதிநாத குரு விளங்கும்

                   மங்குல் பொழில் சனகாபுரமும் கொங்கு மண்டலமே

                    சொல் காப்பியத்தின் குணதோடம் தேர்ந்து சொல்வதற்குத்

                   தொல்காப்பியம் கற்க நீண்டது அதனைச் சுருக்கி

                   ஒல்காப் பெரும் பவணந்தி என்று ஓதி உபகரித்த

                   வல்காவலன் சீயகங்கனும் தான் கொங்குமண்டலமே” (கொங்கு மண்ட்லச் சதகம்)

இந்த இரண்டு பாக்களாலும், நன்னூல் இயற்றிய  ஆசிரியர் இடம், நூல் தோன்றக் காரணம் அத்தனையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக உரைத்துப் போயிருத்தல் காணலாம். ஆரியமும், தமிழும் ஆசறக் கற்ற சிவஞான முனிவர், நன்னூல் சமண மதத்தைச் சார்ந்ததாக இருப்பினும் சைவராகிய அவர், கீழ் வரும் வாசங்களால் மனம் திறந்து பாராட்டி மகிழ்கிறார்.

“நட வா மடி சீ” எனும் நூற்பாவின் அழகைக் கண்டு சுவைத்த  சைவப்பழமாகிய சிவஞான முனிவர் அந்நூற்பாவில் எழுதியுள்ள வாசகங்கள் இவை : “கையறியா மக்கட்கு அன்றி, நூல் இயற்றும் அறிவினையுடைய மக்கட்குப் பல்கலைக் குரிசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான் புகழ்போல் விளங்கி நிற்றலால், உலக மலையாமை உள்ளிட்ட பத்தழகோடும், பிறந்து நின்றது இச் சூத்திரம் என்க”.

நூலுக்குரிய பத்து அழகுகள் ஆவன ;

          சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்,

          நவின்றோர்க்கு இனிமை, நன்மொழி புணர்த்தல்,

          ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல்,

          முறையின் வைப்பே, உலகம் மலையாமை,

          விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது

          ஆகுதல், நூலுக்கு அழகு எனும் பத்தே

இந்த பத்து அழகையும் கூட்டிக்கொண்டு இலக்கண நூல் படைக்கப் புறப்பட்டவர் பவணந்தி முனிவர் என்பது சிவஞான முனிவர் கருத்து.

          சிவஞான முனிவர் மட்டுமன்றி அவர் காலத்துக்கு அருகிலிருந்த சுவாமிநாத தேசிகர் தம் இலக்கணக் கொத்து எனும் நூலில்,

          முந்நூல் ஒழிய பின்னூற் பனுவலுள்

          நன்னூலார் தமக்கு எந்நூலாரும்

          இணையோ வென்னும் துணிவே மன்னுக.” என்கின்றார்

இத்துனைக்கும் இந்தச் சுவாமி நாத தேசிகர்

          ஐந்தெழுத்தால் ஒரு பாடை என

          அறையவும் நாணுவர் அறிவுடையோரே

என்று ஆரிய மொழியை உயர்த்தி, தமிழ் மொழியைத் தாழ்த்திப் பாடியவர். அவர் தம்மை மறந்து,  நன்னூலின் அழகில் மயங்கி , நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ என்று துணிந்து கூறிவிட்டுப் போயிருக்கிறார்.

          நன்னூலாருக்கு முன்பே குணவீர பண்டிதர் என்பவர், நேமிநாதம் என்னும் இலக்கண நூலை யாப்பில் படைத்துப் போயிருக்கிறார். அவர் கூறும் வெண்பா யாப்பில் புணர்ச்சி விதிகளை அறிந்து கொள்வது மிகப் பெரும்பாடாய் இருந்தது. அவருக்குப் பின் எழுந்த பவணந்தியார், புணர்ச்சி இலக்கணத்தையும், சுவைபடக் கூறும் நேர்த்தியைக் கண்டு, ‘தணிகை உலா’ என்ற நூல்,

          நேமிநாதத்தால் நிலை தெரியாச் சொற் புணர்ச்சி

          காமர் நன்னூற் சூத்திரத்தால் காட்டிடீர்

என்று வேண்டுகின்றது. இந்தத் தணிகை உலாப் போலவே, சிராகிரிக் கோவை, கோடீச்சுரக் கோவை, திருவெங்கை உலா முதலிய பல நூல்கள் அவை இலக்கிய நூலாயினும், இலக்கண நூலாகிய நன்னூலின் பெருமையைப் போகும் போக்கில் பேசிச் செல்கின்றன.

          மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் நாடறிந்த மொழியியற் பேரறிஞர். ‘வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி’ என்பது போல, அவர் நன்னூலாரையும், நன்னூலையும் புகழ்ந்துள்ள புகழ் மொழிகள் இவை –  “தொல்காப்பியத்துக்குப் பின் எழுந்த இலக்கண நூல்களுள் நூல்களும் நன்னூல் நன்னூலே”. விரிவான பொதுப் பாயிரம் சேர்க்கப்பட்டிருப்பதும், தொல்காப்பியத்தில் பரக்கக் கூறியிருக்கும் பகுபத உறுப்புகளை எல்லாம் ஓரியயலில் தொகுத்துக் கூறி விளக்கியிருப்பதும்,  “னல முன் றனவும், ணள முன் டணவும் ஆகுந் தநக்கள் ஆயுங் காலே எனச் சொற் சுருக்கி நூற்பா யாத்திருப்பதும், பொருள்கோள் வகைகளை விரிவாகக் கூறியிருப்பதும், உரியென்னும் சொற் பொருளின் காரணத்தைக் கூறியிருப்பதும்  நன்னூலின் சிறப்புக் கூறுகளாம்.” (ஞா.தேவநேயன் – தமிழ் இலக்கிய வரலாறு).

          இடைக் காலத் தமிழுக்கும் முற்காலத் தமிழுக்கும் இலக்கணக் காமதேனு நன்னூல் என்பது மொழியியல் அறிஞர் பலரின் முடிபு. இந்நூல் சமயச் சூழலில் பிறந்து. சமயச் சூழலில் வளர்ந்து இப்பொன்னூல் பூத்துக் குழுங்கி நிற்கின்றது என்பார் அறிஞர் அறவாணன். சோழர் காலத்தில் இந்நூல் முகிழ்த்தெழக் காரணம், பிர்கால சோழர் காலத்தே இருந்த சமயப் பொறுமையே. சைவ வைணவ சமணசமயத்தார், தத்தம் தத்துவ நூல்களை விளக்க எடுத்துக் கொண்ட முயற்சியே இலக்கண நூல்கள் பல இடைக் காலத்தே பல்கிப் பெருகக் காரணமாயிற்று. நன்னூல்  திட்ப நுட்பம் செறிந்த நூற்பா யாப்பில் அமைக்கப் பெற்றிருந்தால் பல்வேறு உரை விளக்கங்கள் அந்நூலுக்கு எழுந்தன.தொல்காப்பியம் பல உரை பெற்றதற்குக் காரணம் விளங்காமை. நன்னூல் உரை பல பெற்றதற்குக் காரணம் சமயப் போட்டி என்பார், அறிஞர் அறவாணன்.

          ஆங்கில ஆட்சி நிலை பெறத் தொடங்கியவுடன், வெள்ளையர் நாட்டு மக்களுடன் இரண்டறக் கலந்து பழக மக்களின் தாய் மொழியை அறிந்து கொள்ளும் தேவை அதிகமாயிற்று. அதற்குத் தமிழ் மொழி இலக்கணத்தை எளிய வழியில் கற்றுக் கொள்ள நன்னூல் ஒரு கற்பகத் தருவாயிற்று.  

                    “நன்னூலுக்கரிய பெரும் சிறப்பு – தெளிவு குன்றாச் சுருக்கம்” இத்தனித் தன்மையே பிற தமிழ் இலக்கணங்களைக் காட்டிலும்  நன்னூலை அயலார் விரும்பப் பெருங்காரணம் ஆயிற்று என்று மொழியியல் அறிஞர்கள் கூறுவது பேருண்மை கொண்டது.

          அச்சுப் பொறியும், மாநிலக் கல்லூரி சென்னைக் கல்விச் சங்கமும்  நன்னூற் கல்வியை மிக மிகத் தேவையாக்கின. எனவே, உரைகள் பெருகின. பெருக்கத்திற்குக் காரணம் ஆய்வு நோக்கம் அன்று தேர்வு நோக்கம் என்பர் கல்வியியல் அறிஞர்கள். ஐரோப்பியர் வட்டார மொழியைப் பயின்றாக வேண்டும் என்ற காலத்தின் கட்டாய்த்தால், ஆங்கிலத்திலும்  நன்னூல் அறிமுகமாகியது. ஆங்கிலர் தம்மை அறியாமல் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் செய்த பெரும் நன்மைகளுள் இதுவும் ஒன்றாயிற்று.

           நன்னூலை மொழிபெயர்ப்புச் செய்யும் முழு முயற்சியை மேற்கொண்ட இரட்டையர் வால்டர் ஜாய்சும், சாமுவேற் பிள்ளையும் ஆவர். தொல்காப்பியத்தையும்   நன்னூலையும் ஒன்றாக இணைத்து இரண்டின் ஒற்றுமை, வேற்றுமைகளையும் கற்பர் எளிதில் புரிந்து கொள்ளுமாறு தொல்காப்பியம்நன்னூல் என்னும் ஒரு அரிய  நூலை சாமுவேற் பிள்ளை 18ஆம்  நூற்றாண்டின் இறுதியில் அச்சேற்றினார். பல   நாட்களாக, கிடைக்காமலிருந்த, இந்நூலை இரண்டாம் பதிப்பாக, செம்மொழி மாநாட்டு விழாக் காலத்தில், என்.சி.பி.சி நிறுவனத்தினர் வெளியிட்டனர். அருட்செல்வர் ஐயா அவர்கள் அந்நூலின் அருமை கருதி அந்நூலை வாங்கிப் பல தமிழ் அறிஞர்களுக்கு அனுப்பி வைத்தார்.

          தமிழில் ஏறத்தாழ 72 இலக்கண நூல்கள் இருந்தனவாகத் தெரிய வருகிறது, 37 இலக்கண  நூல்கள் மறைந்துவிட்டன. இத்தனை நூல்களிலும், தொல்காப்பியமும், நன்னூலும் தனித்து எழுத்து காலத்தைத் தாண்டி நிற்கின்றன. இச்சாதனை புரிந்த இருவருள் பவணந்தி முனிவர் பிறந்த இருப்பிடத்தை இன்னும் தெளிவுபடுத்த இயலாமல் அறிஞர்கள் உள்ளனர். இத்தனைக்கும் பெருந்துறைக்கும் அருகில் உள்ள விசயமங்கலம், சந்திரப்பிரபா தீர்த்தங்கார் கோயிலில், பவணந்தி சிலை தவக் கோலத்தில் அமர்ந்த  நிலையில் உள்ளது. அருகில், அலங்காரத் திருமேனியாக சீயகங்கன் சிலை உள்ளது. ஜினபுரம் ஜனகபுரமாகி சீனாபுரமாக, காலம் மாற்றி வைத்திருக்கின்றது.

          கல்வெட்டுகளும் இலக்கியமும் குறிப்பிடும் சனகபுரமும், சீனாபுரமும் ஒன்றே என்பதை இலக்கியச் சான்றுகளும், கல்வெட்டுச் சான்றுகளும் தெளிவாக்குகின்றன. இவ்வளவு தெளிவாகச் சான்றுகளிருந்தும் தொண்டை மண்டலம் போய், பவணந்தி முனிவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் இங்கு சிலர்,

                   “குற்றமே விழைவார் குறுமாமுனி

                    சொற்றபாவிலும் ஓர் பிழை தேடுவர்

என்னும் மேற்கோள், இங்கு  நினைவிற்கு வருகின்றது.  நன்னூலார்,  நூற்பா யாக்கும் போது, போகும் போக்கில், தத்துவ கருத்துக்களையும் சொரிந்து சொல்கிறார்.

                    “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

          இந்தச் சூத்திரத்தால், உடல் உயிர் தத்துவம் எளிதாக விளக்கப் படுகின்றது. உயிரின்றேல் உடல் இயங்காது. அதனால், உயிர் மேல் உடல் வந்து ஒன்றாது, உடல் மேல் உயிர் வந்து – ஒன்றினால் (இரண்டும் ஒன்றாகி) உலகு இயங்குகின்றது என்னும் ஓர் அரிய தத்துவத்தை, ஓர் எளிய ஓரடி  நூற்பாவால் விளக்கிச் சொல்கிறார்.

                   “பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல்போற்பல

                    சொல்லால் பொருட்கு இடனாக

                    வல்லோர் அணிபெற்ச் செய்வன செய்யுள்

          தோல், இரத்தம், இறைச்சி, எழும்பு, நிணம், மச்சை, வெண்ணீர் என்னும் ஏழு வகைத் தாதுக்களினால், உயிர்க்கு உடம்பாக இயற்றப்பட்ட உடம்புபோல, பெயர், வினை இடை, உரி என்னும் நால்வகைச் சொற்களால் பொருளுக்கு இடமாகக் கல்வி அறிவினால், செய்யுள் செய்ய வல்லவர் அணிபெறச் செய்வன செய்யுள் என்பது பாக்கள் பற்றிய  நன்னூலார் கோட்பாடு, யாப்புக்க யாக்கையை ஒப்பிட்டுக் கூறியது மிக அரிய ஒரு கருத்தாகும்.

                   “சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்

                     செவ்வான் ஆடியில் செறித்து இனிது விளக்கி

                    திட்ப  நுட்பம் சிறந்தன சூத்திரம்

          பேர் உருவங்களின் நிழலை, தன்னுள்ளே செவ்வகையாக அடக்கி இனிதாகக் காட்டும் காண்ணாடி போல, சில வகை எழுத்துக்களால் ஆன வாக்கியத்திலே பலவகைப் பட்ட விரிந்த பொருள்களை செவ்வகையாக அடக்கி, இனிதாகக் காட்டி சொல்  நுட்பமும் பொருள்  நுட்பமும் சிறந்து வருவன இந்த  நூற்பாக்கள் ஆம். இவர் காட்டும் இந்த இலக்கணத்திற்கு, இவர் வரைந்த  நன்னூல்  நூற்பாக்களே சான்றாக நிற்கின்றன.

          பவணந்தியார், தமிழகத்தில் ஆரியத் தொடர்பு மிகுந்த காலத்தில், அவர்களோடு தொடர்ந்து வந்த ஆரியச்சொற் கூட்டங்கள் பெரு வெள்ளம் எனத் தமிழகத்தில் நுழைவதை உண்ர்ந்தார். இவ்வெள்ளத்தை இப்படியே தடுக்காமல் விட்டுவிட்டால், தமிழ் மொழியின் எதிர்காலம் என்னாகும் என்று சிந்தித்தார். ஆரியக் கலப்பால், முன்பிருந்த வடநாட்டு மொழிகள், வடமொழியின் கிளை மொழிகள் ஆகிவிட்டதைப் போலத் தமிழும், வடமொழியின் கிளை மொழிகளில் ஒன்றாகிவிடும் எனும் அவலம்  நெருங்குவதனைத் தெளிவாக உணர்ந்தார் பவணந்தியார்.

          எனவே, ஆரிய மொழியின் வெள்ளத்தைத் தடுப்பனை போல, வடவெழுத்துக்களோடு அவற்றின் ஒலியோடு எந்த வடமொழிச் சொல்லும் தமிழகத்திற்குள் நுழையக்கூடாது என்று தடைவிதித்தார்.

                   “வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

என்று ஆணையாக விதித்தார். இதனால் வடமொழிக்குரிய சிறப்பெழுத்துக்கள் எல்லாம் அவ்வவற்றின் சொந்த எழுத்து ஒலிகளோடு தமிழில்  நுழைய இடமில்லாமல் செய்யப்பட்டன. அத             (தமிழ்) எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே

னால் தமிழின் தனித்தன்மை  நிலைநாட்டப் பெற்றது.

          இந்தப் பேருபகாரத்தைத் தொல்காப்பியனாரும்,  நன்னூலாகும் இணைந்து புரிந்த திறப்பாட்டால், ஆரியத்திற்கு எதிராக, செம்மாந்து நிற்கும் தனி மொழியாக, உலகச் செம்மொழிகளில் ஒன்றாக இன்று வீறார்ந்து  நிற்கின்றது தமிழ்.

          பவணந்தி முனிவர், தமிழ் இலக்கணத்திற்குக் கொடுத்த இந்த அழியாக் கொடைகளால் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பில், கொங்கு மக்கள் உள்ளத்தில், முன்பும் இருந்தார், இன்றும் இருக்கிறார் என்றும் இருப்பார்.

                                      – – – – – – – – – – – – – – – –

 

Leave a Reply