உயர்குணங்கள் – தலைமை என்னும் அறப்பண்பு
நாம் செய்யும் தானமும் தருமமும் அடுத்துவரும் தலைமுறைக்கும் வரும் என்பர் நம் முன்னோர். இது முற்றிலும் உண்மையாகும். இக்கருத்தை வலியுறுத்துவனவாக ஈதலும், நம்மிடமுள்ள உயர் நடத்தையும் விளங்குகின்றன. இதனை அறம் எனும் உயர்பண்பு பத்து வகைகளாகப் பகுத்துக்காட்டுகிறது. அவையாவன,
- உண்மை பேசுதல்
- பொறுமை
- உயர்வுடன் கூடிய பெருமை
- தியானம் செய்தல்
- ஐம்புலன்களையும் அடக்கியாளுதல்
- நடுவுநிலைமையோடு இருத்தல்
- தனக்கென எதனையும் உரிமையாக்காமல் இருத்தல்
- பொருள்களின் மீது ஆசை கொள்ளாமை
- நற்செயல்களைப் பின்பற்றுதல்
- அறத்துடன் மேற்கொள்ளும் விரதத்தை இடையிலே கைவிடாதிருத்தல்.
என்பனவாகும். பத்து அறங்களும் ஒருவர் நல்மனம் கொண்டு வாழ வழிகாட்டுவதாக உள்ளது. இப்பண்புகள் மேலோங்குமேயானால், ஒருவர் வாழ்வில் எந்நிலையிலும் உயரலாம். இவற்றின் அடிப்படையில் நாம் வாழ்வை அமைத்துக்கொண்டோமென்றால், நாம் வாழும் இப்பிறவி, அடுத்து வரும் பிறவிகளுக்கும் வலிமையான அறமாக அமையும். அறம் பெரிய வலிமையான துணையாக இருக்குமென்பதை,
“அறத்துணையோ டேகமா நண்பொன்று மில்”
என்னும் பாடலடி உணர்த்துகிறது. அறம் என்பது பண்பு நலன்கள் அடிப்படையில் அமைகின்றது. இதனடிப்படையில்தான் உளவியல் அறிஞர்களும் குழந்தைகளின் ஐந்து வயது வரை அவர்கள் வளரும் சூழலில் அமையும் பண்புநலன்கள் தான் அவர்களின் வாழ்வு என வரையறுக்கின்றனர். இது முற்றிலும் உண்மையாகும். எனவே தான் இளமையிலேயே அவர்களுக்கு நல்லனவற்றைப் போதிக்க வேண்டும் என்பர். “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?”. ஆகவே எந்நெறியில் வளர்க்கப்படுகின்றனரோ அதைப் பொறுத்து அவர்கள் இளமைப்பருவமும் அமைந்து விடுகிறது. தடம் மாறிச்செல்வதும் இந்நிலையில் தான். இவ்விளம்பருவம் ஒருவருக்குச் சரியான இலக்குடனும் நற்குணங்களுடனும். வுழிகாட்டுதலுடனும் அமைந்துவிட்டால் பின்னர் அவர்கள் பலருக்கு வழிகாட்டிகளாக மாறிவிடுவர். இந்நிலையை அடைய மனதை இளம்பருவத்திலேயே பக்குவப்படுத்துதல் வேண்டும். துன்பம் வந்து சேரத் தடையாக இருப்பது அறம் செய்யாமையாகும். ஆகவே இனியசொல்லை விளைநிலமாகக் கொண்டு, ஈகைப்பண்பை விதையாக ஊன்றி, தீய சொற்கள் என்னும் களைகளை அகற்றி, உண்மை என்னும் உரமாகிய எருவை போட்டு, அன்பினை நீராகப் பாய்ச்சி, அறமாகிய கதிரை வளரச்செய்யும் பசுமையான பயிரை உருவாக்குதல் இன்றியமையாதது.
“அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.”
என்னும் பாடலடி அறம் வளர்த்தலின் அருமையை எடுத்துரைக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல மனிதவாழ்வும் நிலையில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அதிலும் இன்றைய பெருந்தொற்று நோயின் தாக்குதலில் வயது வேறுபாடின்றிச் சிறியவர் தொடங்கிப் பெரியவர் வரை யாவரும் தங்கள் உயிரை இழக்கின்றனர். இதில் இளையோர் மட்டும் விதி விலக்கல்ல, எனவே, இதனை மனதில் கொண்டு நாளை என்று தள்ளிப்போடுவதை விடுத்து, வாய்ப்புக் கிடைக்கும்போதே அறம் செய்வது ஏற்புடையது. இம்மனநிலையில் உண்மையாக இளம் பருவத்திலே அறச்செயல்களை மேற்கொள்பவர்கள் சமூகத்தில் உயர்ந்தவராகப் போற்றப்படுவர். இக்கருத்தானது,
“காலைச்செய் வோமென் றறத்தைக் கடைப்பிடித்துச்
சாலச்செய் வாரே தலைப்படுவார்.”
என்ற அடிகள் மூலம் அறியலாகிறது. இவ்வாறு செய்ய வேண்டிய அறத்தைச் செய்யாமல் நாட்களைக் கழித்தால் வாழ்நாளில் பிற்காலத்தில் துன்பமே நிகழும். இதை வலியுறுத்தியே வளரிளம் பருவத்தில் அறங்கள் செய்வது சாலச்சிறந்தது என ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இயல்பாகவே மானிடர் பலருக்கு ஒரு குணம் உண்டு. அது யாதெனில், என்னிடம் செல்வம் இருந்திருந்தால், துன்பத்தில் இருப்பவருக்குக் கொடுத்திருப்பேன். என்னிடம் தான் எதுவும் இல்லையே, ஆனால், செல்வமுள்ளவர்களில் பலர், நான் கொடுத்தால் என் செல்வம் குறைந்து விடுமே என்று எண்ணுவது அவரது எதார்த்த குணம். இருப்பவரில் பலர் கொடுக்க முன்வருவதில்லை. கொடுக்க விரும்புவோருக்குக் கையிருப்பு இருப்பதில்லை. இதை உணர்ந்தவர்களாய் செல்வம் உள்ள யாவரும் உள்ளபோதே முன்வந்து கொடுத்து உதவினால் அச்செல்வம் அவனுக்குத் துணையாக இருக்கும். அரசரைப் போல நிறைய செல்வம் வந்ததற்குப் பின் அறம் முதலிய தருமங்களைச் செய்யலாம் என்று காலங்களைக் கழிப்பதில் பயனொன்றுமில்லை.
அறம் வளர்க்கும் வகையில் நமது மனத்தைப் பக்குவப்படுத்த வேண்டும். நல்ல முதிர்ச்சியும் பக்குவமும் அடைய ஒருவருக்குத் தடையாக இருப்பது அவர் மனதில் விளையும் சினமும், வெறுப்புணர்வுமேயாகும். சினம் மனதில் தோன்றி விட்டால், முறையான விதத்தில் அதை வெளிப்படுத்துதல் வேண்டும். இல்லையெனில் அது மனதையும் உடலையும் பாதிக்கும் கொடிய நோயாக மாறிவிடும். நம் உடலும் உயிரும் ஒன்றை விட்டு ஒன்று பிரியும் தன்மை உடையது. எனவே எதுவும் நிலையானது அல்ல, அவ்வுயிரையும் உடலையும் காக்க வேண்டுமெனில், தீயவை உள்ளத்திலிருந்து அகற்றப்படல் வேண்டும். நிலத்தில் நல்ல பயிர்களைக் காக்க, தீய களைகளை அகற்றி, விவசாயி நெற்கதிர்களைப் பெறுவது போல், மனிதனும் அவனுள் உள்ள சினம் என்னும் தீய உணர்வை அகற்றி, இன்பம் பெருகுவதற்கான வழிகளை விரும்பிச் செய்தல் சிறப்பாகும். இதனை,
“புற்களைந்து நெற்பயன் கொள்ளு மொருவன்போல்
நற்பயன் கொண்டிருக்கற் பாற்று.”
என்ற பாடலடிகள் நன்னிலை அடைய அறம் செய்தல் சிறப்பு என்றும், சினத்தை நீக்குவது பற்றியும் வலியுறுத்துகிறது. மானிடராய்ப் பிறப்பது அரிது. இப்பிறவியில் மனம் ஒன்றி, ஆறறிவு உணர்வையும் இணைத்து, நற்செயல்களாகிய அறத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வோர் அந்நெறியிலிருந்து சிறிதும் விலகமாட்டார்கள்.
ஒழுக்கமே உயர்வு
மானிடராய்ப் பிறத்தல் அரிது எனினும், இப்பிறவியில், யாவரும் மறைந்த பிறகு, அவரவர் உடலின் நிலைமை என்ன என்பதை அனைவரும் நன்;கு அறிவோம். அதற்கு முன்பாக இவ்வுடலைக் கொண்டு நாம் நற்காரியங்களைச் செய்ய வேண்டுமென்றே சமயங்களும், சாத்திரங்களும், இலக்கியங்களும் பகர்கின்றன. அது மட்டுமின்றி ஒருவர் உயிரினும் மேலாக ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டுமென வள்ளுவரும் இயம்புகிறார். வறுமை நிலையில் வாடுவோர்க்கும் ஒழுக்கமே தலைசிறந்தது. ஒருவர் எத்தகைய துன்பம் அடைந்தாலும் பிறரால் பெரிதும் இகழப்படுவதில்லை. ஆனால், ஒழுக்கத்தினின்று தவறினால், பெரிதும் இகழ்ச்சிக்குரியவராகப் பலராலும் கருதப்படுகிறார். முன்னோர் கூறிய முதுமொழிகளைப் பின்பற்றி, நல் ஒழுக்கத்தில் வளர்ந்தால் அவரைத் துன்பம் அணுகுவதில்லை. இந்நெறியின் சிறப்பை,
“ஒழுக்கத்தோ டொன்றி உயப்போதி யன்றே
புழுக்கூட்டுப் பொச்சாப் புடைத்து.”
என்ற அடிகளிலிருந்து ஒழுக்கம் உயர்வுக்கு வழிகாட்டுவதையும், ஒழுக்கம் தவறினால் துன்பத்திற்கு ஆளாக நேரிடும் என்னும் உயர்நெறி இங்குப் புலனாகிறது.
போற்றப்பட வேண்டிய பொறுமை
சினமே எல்லா தீயகுணங்களுக்கும் தலைமையாகக் கருதப்படுகிறது. இக்குணத்தை நீக்கினால் இயல்பாகவே பொறுமை என்னும் உயர்குணம் மேலோங்கும். ஆனால் பொறுமையை அடைவது அவ்வளவு சுலபமானது அல்ல, காரணம் ஒருவர் தவறு செய்து கொண்டேயிருந்தால் அதிலிருந்து விலக இயலாது. அதிலும், தான் செய்வது தவறு என்று உணராமலிருந்தால், அது நாளுக்குநாள் பெருகிவிடும். இந்நிலையில், எவர் தான் செய்வதை உணர்ந்து வருத்தமுறுகிறாரோ அவரிடத்தில், பொறுமை படிப்படியாய் வளர்ச்சியுறும். எத்தகைய துன்பமும் விட்டுவிட வேண்டுமெனில், பொறுமையைப் பின்பற்றவேண்டும். இத்தகு பொறுமையின் உயர்வினை,
தன்னையுரையான் இகழ்ந்துரைப்பின் தானவனைப்
பின்னையுரையாப் பெருமையான் .
என்னும் பாடலடியிலிருந்து தன்னைத் தானே இழிவாகக் கூறி, பின்பு தான் இகழ்ந்து கூறும் தன்மையில்லாதவன் சிறப்புடையவன் என்றும் இதற்குப் பொறுமையே தலையானது என்றும் தெளிவாகிறது. இதன் வளர்ச்சி நிலையாக ஒருவர் தன்னை உணர்தலும், பிறர் அவரைக் கடிந்துரைக்கும்போது அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்வது அவ்வளவு எளிதல்ல, அது ஒருவரை அவரது ஆழ்மனதுவரை சென்று தாக்கும். சிலசமயங்களில் அது கொல்லுவதற்குரிய அம்பாகவும் மாறிவிடுகிறது. எம்மனநிலையில் பிறர்கடிந்து உரைப்பினும் அவை நெருப்பானது சுட்டால் எவ்வளவு வேதனை தருவதாக இருக்குமோ, அந்தளவிற்குத் தாக்குவதாக ஒருசிலரது வார்த்தைகளும் இருக்கும். இச்சூழலில் எவரும் சுயக்கட்டுப்பாட்டை இழக்காமல் தனது ஆய்ந்தறியும் திறனை வளர்த்தல் அவசியம். இத்தகைய ஆய்ந்தறியும் திறனாகிய நீரினால் ஒருவர், நெருப்புப் போன்ற வார்த்தைகள் தாக்கும் தருணங்களில் அமைதி காத்து அத்துன்பத்தைக் களையலாம். இத்தகு உயர்நெறியினைப் பின்பற்றுவதைப் பற்றி,
அறிவென்னு நீரால் அவித்தொழு கலாற்றின்
பிறிதொன்று வேண்டா தவம்.
என்ற பாடலடிகள் விளக்குகின்றன. அமைதியில் துன்பத்தைத் தாங்குவதற்கான கருத்துகள், இவ்வகையில் அறம் செய்ய பொறுமையும் இன்றியமையாப் பண்பு என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
வழிகாட்டும் நட்பு
ஒருவர் எத்தகைய நற்பண்புகளை உடையவராய் இருப்பினும், தான் மட்டும் நல்லவராய் இருந்தால் அது அவரது உயர்வுக்கு மட்டும் வழிவகுக்கும். அதுவே தன்னுடன் சேர்ந்துள்ள நட்புகளுக்கும் கொண்ட கொள்கையில் விடாது அறநெறி தவறாமல் இருந்தால் அவர் தான் நல்ல நண்பராகக் கருதப்படுவார். பலவிறவிகள் எடுப்பதன் நோக்கமே மனிதன் அறச்செயல்கள் செய்து நல்நெறியில் வாழவேண்டும் என்பதுவேயாகும். ஆனால் அதைப் பலர் மனதில் கொள்வதில்லை. வாழும்வரை மகிழ்வுடன் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தன் வாழ்வையும், தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்வுநெறியையும் அவர்கள் பெரிதாக எண்ணுவதில்லை. நாம் நல்வழியில் நடக்க வேண்டுமெனில் நம்முடன் இருப்பவரும் அவ்வழியில் நடக்க வேண்டும். இதை அறிந்தவர்கள், ஆராய்ந்துணர்ந்து தீயவழியில் இருந்து விலகி நடப்பார்கள். நல்ல நட்பின் திறம்
அறநnறி கைவிடாதாசாரங் காட்டிப்
பிறநெறி போக்கிற் பவர்.
என்னும் பாடலடிகளில் அறநnறியை விடாது பின்பற்றி, தீயவழியில் விலகி நடப்பவர்களே நல்லநண்பர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சான்றாண்மை எனும் உயர்அணிகலன்
நண்பர்களைத் தெரிந்தெடுப்பது எல்லோருக்கும் விருப்பமான செயலாகும். ஆனால் அவ்வாறு தேர்ந்தெடுக்கும் நண்பர்களில் பலர் நற்பண்புகள் நிறைந்தவர்களாய் இருப்பதில்லை. இவர்களால் தான் பலர் தடம் மாறிச்செல்கின்றனர். எனவேதான் அறநூல்கள் பலவும் நட்புக்குப் பெரிதும் முக்கியத்துவம் அளிக்கின்றன. இதையே வள்ளுவரும் பெரியாரைத் துணைக்கோடல் என்று தனிஅதிகாரத்தையே வரையறுத்துள்ளார். சான்றாண்மை என்பது பண்புநலன்களில் மேலோங்கி, யாவரும் மதிக்கத்தக்க வாழ்வு வாழ்வது. இவர்களைத் தான் நண்பர்களாகத் தேர்ந்துகொள்ள வேண்டும். அப்போது அவர்கள் நல்லநெறியில் நடக்க வழிகாட்டுவார்கள். மேலும் ஆசையை ஒழித்தவர்களாய் அவர்கள் வாழும் போது பிறவி நீங்குவதற்கான வீடுபேற்றினை அடைவார்கள் என்று சுட்டப்படுகிறது. வள்ளுவரும்
“சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்” (குறள். 986)
என்று சான்றாண்மை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல பண்புநலன்களைத் தமக்குரியதாக்கி வாழ்பவர்கள், அடக்கம் என்னும் உயர்குணத்தை என்றும் கைவிடாமல் பின்பற்றி நடப்பர். மனதினை அடக்கியாளும் இத்தகைய சான்றோர், சிறுபிள்ளைகளுக்குத் தாயானவள் பால் ஊட்டுவதற்கும், மருந்தாகிய ஆமணக்கு நெய்யினைக் கொடுப்பதற்கும் கை மற்றும் கால்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு வாயினைப் பிளந்து ஊற்றுவது போல், அன்றாடம் அறக்கருத்துகளை விடாது வலியுறுத்திக்கொண்டே இருப்பர்.
அடக்கத்தை வேண்டி அறன்வலிதுநாளும்
கொடுத்துமேற் கொண்டொழுகுவார்.
என்று இப்பாடல் சான்றோர்கள் அன்னையைப் போன்று விடாது அறக்கருத்துகளை வலியுறுத்துவார்கள் எடுத்துரைக்கிறது. நற்பண்புகள் வாய்க்கப்பெற்ற இப்பெரியவர்களைத் துணையாகக் கொண்டால், வாழ்வில் உயர்வதோடு மட்டுமின்றி எந்நிலையிலும் அவர்கள் துன்புறாவண்ணம் அவர்களுக்குச் செல்வம் பெருகிக்கொண்டே வரும். காரணம் அவர்கள் எவ்விதப் பாவநெறியிலும் செல்லவிடாமல் வழிகாட்டிக் கொண்டேயிருப்பார்கள்.
உயர்குணங்கள்
- குற்றமில்லாமல் பேசுதல்
- துன்பத்தில் மனம் சோராதிருத்தல்
- தீயவர்களுக்கும் நன்மையே செய்தல்
- உலகவாழ்வுக்குரிய குணங்கள்
- வெப்பம் பொருந்தி இருக்கும் உணவு
- அதிக வருமானத்தோடு கூடிய நீதிநெறி
- ஈகைக்குணம் உடைய வாழ்க்கை
அறம் என்பது தலையான பண்பு, இத்தகைய நெறியில் நின்று வாழவேண்டுமென்றால், கொண்ட கொள்கையில் வழுவாது இருத்தல் வேண்டும். தூயமனதுடன் கொடுக்கும் பண்பானது உயர்வுக்கு வழிகாட்டும். அறத்தின் தன்மை, அறம் கூற வேண்டியவர்கள், உயர்நலன்கள், அடக்கம், பொறுமை, நல்லநட்பு, சான்றாண்மை என்னும் அனைத்து உயர்நெறிகளையும் அறம் எனும் ஒருகோட்டின் கீழ் ஆசிரியர் வகுத்திருக்கும் நெறிமுறை யாவரும் இப்பண்புநலன்களைப் பின்பற்றுவதன் யுக்திமுறையாக அமைந்துள்ளது. இதையே அறநnறிச்சாரமும் பெரிதும் முன்னிறுத்திக் கூறுகிறது.
முடிவுரை
அறத்தின் பத்து வகைகள், ஒழுக்கம், பொறுமை, நட்பு, சான்றாண்மை முதலான உலக வாழ்விற்குரிய உயர்ந்த குணங்கள் அறநெறிச்சாரத்தின வழி தெளிவாகின்றது. இந்நூல் உரைக்கும் அறங்களைப் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் உயரலாம்.