முனைவர் ச. தனலெட்சுமி, உதவிப் பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி
ஒளவை என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்ததை நமது தமிழ் இலக்கிய வரலாற்றில் காண முடிகிறது. புகழுக்குரியாரது பெயரைப் பின்வரும் தலைமுறையினர் தம் பிள்ளைகளுக்கும்ச் சூட்டுவது இன்றும் நாம் காணும மரபுதான். எனவே சங்க காலத்தில் பீடுபெற்று விளங்கிய ஒளவையாரின பெயரைப் பின்னால் பலர் பெற்றுத் திகழந்ததில் வியப்பில்லை. மேலும் ஒளவை என்றாலே அறிவு என்பதாக அறிவுக்கேயுரிய பெயராக ஒளவை என்பது வழங்கலாயிற்று என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்ககால ஒளவையாரைப் பற்றிக் காண்போம்.
ஒளவை
ஒளவை எனும் சொல், பொதுமக்கள் பார்வையில் வயதான மூதாட்டி எனும் பொருளை நல்குகிறது. அம்மை, அய்யை, அவா, அவ்வை, அவ்வெ, ஒவ்வ, தவ்வை, யாய், ஆய் ஆகிய சொற்கள் அம்மாவைக் குறிப்பன.
i) நிகண்டில் ஔவை
ii) இலக்கிணங்களில் ஔவை
iii) இலக்கியங்களில் ஔவை
நிகண்டில் ஒளவை
“அம்மை யன்னை யாய் அவ்வை, தம்மனை தருமோய்
ஈன்றாள் அன்னை தாய் என்ப” 1
“அம்மை அன்னை ஆய் அவ்வை”2
“அவ்வையும் கந்தியும் நோற்பவள் பெயர்”3
என்று நிகண்டுகளில் ஔவை பெயர்பதிவாகியுள்ளது
இலக்கணங்களில் ஒளவை
இளம்பூரணர் உரை ஒளவை என்ற சொல்லுக்குப் பதில் ‘அவ்வை’ என எழுதும் முறையைச் சுட்டுகிறது.
“அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய் பெறக் தோன்றும்”
– தொல்காப்பியம் – எழுத்து 56
யாப்பெருங்கலம் நேரசை பற்றிய நூற்பாவில் ‘ஒன்றரை மாத்திரை என்றம் ஒதப்பட்ட ஐகாரக் குறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் நேரசை என்கிறார் உரையாசிரியர்.
அந்த விளக்கத்திற்கு,
“ஒளவை என்றெடுத்துரைக்கும்
தௌவை என்றன் ஓலை …..”
என்ற பாடலைக் குறித்துள்ளார்.
இலக்கியங்களில் ஒளவை
ஒளவை பழந்தமிழ்ச் சொல். முதியவள். அன்னை என்ற பொருளில் பண்டைத் தமிழில் வழங்கியது.
சான்றுகள்:
‘அவ்வை மகள் இவள்தான் அம்மணம் பட்டிலா’
– சிலப்பதிகாரம் 29 : 8 – 3
‘அவ்கைக்கு மூத்தமாமன்’
– சீவகசிந்தாமணி – 1046
‘அவ்வை நீங்கும்’
– கம்பராமாயணம் கைகேயி சூழ்விணை – 4
ஒளவை என்ற சொல்லுக்கு பலரும் பொருளைத் தங்கள் கருத்துடன் தொடர்புடையதாக கூறியுள்ளார்கள் அவ்வாறு கூறியதற்குச் சான்றுகளும் நம்முடைய இலக்கணங்களிலும் இலக்கியங்களிலும் காணக் கிடைக்கின்றன.
ஒளவையார் வரலாறு
ஒளவையாரைப் பெற்றெடுத்த தந்தை யார்? தாய் யார்? உற்றார் யார்? உடன் பிறந்தோர் யார்? அவர் பிறந்து வளர்ந்த ஊர் யாண்டுளது? அவரைப் பெற்றெடுத்த பெருமைக்குரிய குடி எது? அவர் கல்வி கற்றது எங்ஙனம்? கற்றுத்தந்த நல்லாசிரியர் யார்? என்பது போன்ற வினாக்களுக்கு விடைகாணும் வாய்ப்பு அவர் பாடலைப் பயின்றார்குக் கிடைத்தலது.
சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஒளவையைப் பற்றிய கதைகள், நிரம்ப வழங்குகின்றன. ஒளவைப் பிறப்புப் பற்றிக் கபிலர் அகவல் திருவள்ளுவர் கதை. ஞானமிர்தம் பன்னிரு புலவர்சரித்திரம், புலவர் புராணம் விநோதரச மஞ்சரி, பாவலர் சரித்திர தீபகம், ஒளவைப் புராணம் ஆகிய நூல்கள் உணர்த்துகின்றன. ஒளவை பிறப்புக் பற்றியும். ஏனைய கதைகள் பற்றியும் பலகதைகள் வழங்குகின்றன அழைக்கப்படுவார்.
ஒளவையார் பிறந்த குடி
பழந்தமிழ்க் குடிகளில் பாணர் குடி என்பதும் ஒன்று. “பாணன் பறையன் துடியன் கடம்பனென்று இந்நான்கல்லது குடியும் இல்லை” என்பது புறநானூறு. அவர்களுள் ஆண்மகன் பாணன் என்றும் பெண்மகள் பாடினி எனவும் (விறலி) அழைக்கப்பெறுவர் ஒளவையார். இப்பாணர் குடியில் பிறந்தவரே என்று கூறுவர் சிலர். அதற்கு ஆதாரமாக அரசன் ஒருவன் ஒளவையாரை “விறலி” என அழைத்தான் என ஒளவை அவர்களே பாடிய “இளையணிப் பொலிந்த ஏந்து அல்குல், மடவரல் உண்கண் வாணுதல் விறலி!” என்ற பாட்டையும் காட்டுவர்.
சமயம்
“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
– தொல்காப்பியம் புறத்திணை – 38
என்ற தமிழர் இயற்கை வழிபாட்டுமுறை மறைய சிவன், திருமால், முருகன் போன்ற வைத்தக் கடவுளரையும், கொற்றவை போன்ற சிறு தெய்வங்களை வழிபடும் வழக்காறு, ஒளவையார் காலத்திலேயே தமிழகத்தில் இடம் பெற்றுவிட்டது. ஆகவே, தமிழர்கள் ஒவ்வொருவரும் இக் கடவுளரில் யாரையேனும் ஒருவரை வழிபடு தெய்வமாகக் கொண்டே வாழத் தொடங்கினர். ஒளவையார் இம்முறைக்கு மாறுபட்டவர் அல்லர்.
வாழ்நாள்
ஆண்டாலும் அறிவாலும் முதிர்ந்த ஒரு பெண் மகளைச் சுட்டுவதற்காகவே ஒளவையார் என்ற சொல்லைத் தமிழ்மக்கள் ஆளுகின்றனர். ஆதலின் ஒளவையார் நெடுநாள் வாழந்தவர் என்பதைக் கூறத் தேவையில்லை. அதற்குக் காரணம் அதியமான் அளித்த கருநெல்லிக்கனியே என்றும் கூறியுள்ளார்.
“சிறியிலை நெல்லித் தீங்கனி குவியாது
ஆதல் நின்கைத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்குஈத் தனையே”
– புறம் 91.
நெடுநாள் வாழ்ந்த ஒளவையார் தம் வாழ்நாளின் பிற்பகுதியிலேயே பாடல்புனையப் பழகினாரல்லர். இளமையிலிருந்தே இன்கவிபுனைவதில் ஈடில்லாதிருந்தனர் என்பதற்கு அவர் பாடல்களிலேயே சான்றகள் உள. “உங்கள் நாட்டில் பொருநரும் உளரோ? என அரசன் ஒருவன் கேட்டதாகவும், அதற்கு ஒளவையார் விடையளித்ததாகவும் வரும் பால் ஒன்றில் அவ்வரசன் அணிகள் பல அணிந்ததனால் தோன்றிய ஒளவையார் தம் செயற்கை அழகு. இளமை நலம் குன்றா அவர் உடலின் இயற்கை அர்கு நல்குடிப் பெண்டிர் பால் பிரியாது நிற்கவேண்டிய நிறைகுணங்களாகிய மடம் முதலாயின மைத்Pட்டப் பெற்ற அவர் கண்கள் பேரொளி வீசும் நெற்றி ஆகியவற்றைக் கண்டு பாராட்டியதாக அவரே கூறியுள்ளார்.
“இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டால்இல்
மடலால், உண்கண், வாள்றுதல், விறலி1”
– புறம்
ஆகவே, ஒளவையார் பேரழகு வாய்ந்த சீரிளமைப் பருவத்தராய் இருந்த நாள் முதலே பாடல் தொழிலில் பயிற்சியுடையராய் இருந்தனர் என்பது தெளிவாம்.
ஒளவையார் வாழ்க்கைநிலை
கல்வி பல கற்றவர் கடும் வறியராகவும், செல்வத்தில் செழித்திருப்போர் எழுத்தறிவு இலராகவும் இருப்பதையே நாம் எங்கும் காண்கின்றோம். உலகப் பெருங்கவிகள் அனைவரும் வறுமையில் வாடி மறைந்தாராகவே மாநில வரலாறுகள் அறிவிக்கின்றன. தாம் செல்வத்தில் திளைத்துச் செருக்குடன் வாழந்ததாக எந்தப் புலவரும் கூறியதாகத் தமிழ் நூல்கள் அறிவிக்கவில்லை. பெரும்பாலான ஒளவை பாடல்கள் அவர்தம் வறுமை நிலையைப் பல்வேறு வகையில் விளக்கியுள்ளன. ஒளவையார் தம் வறுமைநிலையை விளக்க, நீர்ப்பாசின் வேர்போல் நெகிழ்ந்து கிழித்துபோன தம் உடைகளையும், எண்ணெயும் தண்ணீரும் கண்டு எத்தனையோ நாள் ஆகிய காரணத்தாலும் விட்ட வியர்வை நீர் துடைக்கப் பெறாமல் வற்றிப்போனதாலும் புலால் நாற்றம் நாறும் தம் தலையையும் காட்டும் காட்சி கழிவிரக்கம் கருவதாகும்! என்னரை முதுநீர்ப்பாசி. அன்ன உடை களைத்து, “பாசி வேர்புரை சிதாஅர் நீத்து”, “புலவி நாறும் என் தலை ‘வறுமையில் உழலும் வாழ்வில்தான் செந்தமிழ்ப் பாக்கள் செழிக்கத் தோனறுகின்றன.
ஒளவையார் சென்ற நாடுகள்
ஒளவையார், தமிழகம் முற்றம் சுற்றிப் பார்த்தனார். அவர் செல்லாத நாடு இல்லை ஒவ்வொரு நாட்டிற்கும் நேரில் சென்று அந்நாட்டின் பரப்பு, செல்வச்சிறப்பு, மக்கள் பண்பு முதலாயின அறிந்துள்ளார். சேர, சோழ, பாண்டிய நாடுகள் என் முப்பெரும் பிரிவாக இருந்த தமிழகம், அவர் காலத்தில் மேலும் பல நாடுகளைக் கொண்டதாக பிரிக்கப்பட்டிருந்தது. நாஞ்சில் நாடு, வெண்ணி என்ற ஊர், கொல்லிமலை, பறம்பு மலை, தொண்டைநாடு என் நாடு பல சுற்றி, ஆங்காங்கே நல்ல நண்பர் பலரைப் பெற்றள்ள பெருமையாலன்றோ, நாடனைத்தையும் நன்றாகச் சுற்றிப்பார்த்துப் பழகிய காரணத்தாலேயே ஒவ்வொரு நாடும் எவ்வெப் பொருளாற் சிறந்தது என்பது தோன்ற ஒளவையாரால் பாடலைப் பாட முடிந்தது என்று கூறுவாகும் ஊர்.
ஒளவையின்ஆளுமை
தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப்படும் சங்க காலமே ஒளவையார் வாழ்ந்த காலமாகும். சங்க காலம் கி.பி.2ம் நூற்றாண்டு என்றும் இருவிதமாக கூறுவாரும் ஊர். எனினும் கிடைத்துள்ள வரலாற்றுச் சான்றகள் எல்லாம். சங்க காலம் 2ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதையே உறுதி செய்கின்றன. ஆதலின். சங்ககாலப் புலவராகிய ஒளவையார். இரண்டாம் நூற்றாண்டில் வாழந்தவரே ஒருவர் பிறந்த காலத்தை ஆண்டு, திங்கள், நாள், நாழிகை. ஓரை தவறாமல் குறிக்கும் தமிழர், ஒளவையார் போன்ற பெரும்புலவர் பிறந்த நாட்களைக் குறிக்காது விட்டது வியப்பானதாகும்.
வறுமையிற் செம்மை
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்” என்றார் பிற்காலப் புலவர் ஒருவர். புலவர்கள் பொருளால் வறியரே என்றாலும் மான உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுப்பவர் பேரரசர்களையும், குறுநில மன்னர்களையும் பாடினார்கள் என்றால் அவர்கள் அளிக்கும் பரிசில் ஒன்றே கருதிப் பாடினாரல்லர். பரிசில் பெறுவதற்காக என்றே அவர் பால் இல்லாதi எல்லாம் ஏற்றிக் கூறிப் போயினாரும் அல்லர். அதியமான் தலைவாயில் நின்று தடாரிப்பறை ஒலித்துதி தன்வரவு உணர்த்திச் சிறிது காலை நின்று பார்த்தனர் ஒளவையார். அவன் ஆங்கு விரைந்து வந்திலன். அது கண்ட ஒளவையார் சினங்கொண்டு அவ்வாயில் காவலனை நோக்கி,
“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”
-புறம்-206
எனக்கூறி எழுந்த அவ்வுரை, ஒளவையார் தம் வறுமையிற் செம்மையாம் பண்பை வகுத்துரைப்பது. அரசர்கள் விரும்பாது அளிப்பன எவ்வளவு பெரியன ஆயினும், அவற்றை ஏற்றுக் கொள்வார் அல்லர்.
புலவரைப் பாராட்டல்
ஒரு புலவர் இன்னொரு புலவரைப் பாராட்டி மதிப்பது அரிது. புலவர் காய்ச்சல் என்பது புலவர் எல்லாரிடத்தும் பொருந்தும் பண்பாகும் என்ற பழியுரைகளைப் புலவர்கள் மீது சூட்டு வோர், ஒளவையார் வரலாற்றையும், அவர் காலத்தே வாழ்ந்த பிற புலவரிடத்தே ஒளவை கொண்டிருந்த மதிப்பையும் அறிதல் வேண்டும். புலவர் தம் நாக்கினைப் பற்றிக் கூறும் பொழுது “செவ்விய நாவிii உடையப் புலவர் – செந்நாப் புலவர்” என்று கூறிச் சிறப்பிக்கிறார் ஒளவையார்.
ஒளவை பெருமை
ஒளவையார், முடியுடை மூவேந்தர்களாலும், வேறுபல குறுநில மன்னர்களாலும் நன்கு மதிக்கப்பெற்றவர். அதியமானால் அரசியல் தூதுவராக அனுப்பப்பெறும் அளவு மதிக்கப்பெற்றவர். ஒளவையார் வழி வந்தோர் அனைவராலும் கல்வியறிவும் கடவுள் அன்பும் உடைய ஆண்டால் முதிய அம்மையார் எவர்க்கும் ஒளவையார் என்ற தம் பெயரே இட்டு வழங்கும் அளவு பெயர்போன பெருமையுடையார் ஒளவையார்.
நாட்டில் நிகழும் இழிவுக் காட்சியைப் புலவர்கள் பல முறை கண்டு, மனம் மிக நொந்து கண்ணீர் விட்டுக் கலங்கியும் உள்ளார்கள் அத்தகைய புலவர்களுள் ஒளவையாரும் ஒருவர். நாடழிவது கண்டும், அதைத் தடுக்கச் வெய்வதொன்றும் அறியாது, “அந்தோ என்று இரங்கிப் பெருமூச்சு விட்டு அடங்கும் அயல்பினர் அல்லர் ஒளவையார். இவ்வழிவைத் தடுத்தே ஆக வேண்டும் என னண்ணினார். மூவேந்தர் மனத்தே நிலையாமை உணர்வு தோன்றச் செய்து, அதன் வழியே நாடு அழிதல் இன்றி, அமைதிவாழ்வு காணமுயன்ற ஒளவையார் தம் அருள் உள்ளம் அறிந்து பாராட்டத் தக்கது.
அறிவுரை கூறல்
தம் இயல்பியற்கேற்ப தம்மிடை வாழ்வோரை மாற்றும் ஆற்றல் வாய்ந்த இடங்களை அதன் ஆற்றலுக்குட்பட்டுத் தாம் மாறிவிடாமல் தம்வழி அவ்விடங்களை மாற்றவதே ஆண்மையும் அறிவும் உடையோர் செயலாம். உலக மக்களே! உலகம் உங்கள் கையில் அதை நன்மை நிறைந்த நல்லுகமாக ஆக்கிவதோ அன்றி இன்னல்களுக்கிடையே இருட்டுலகமாக ஆக்கிவதோ எல்லாம் உங்களால்தான் முடியும்.
ஆகவே நிலத்திற்குத் தனக்கென நன்மையோ தீமையோ இல்லை எல்லாம் உங்கள் கையில் என்று பிறகும் கூறுவதைப் போல், எல்லாம் உங்கள் கையில் என்று இருக்கும் இடத்தால் ஒன்றும் இல்லை என்று ஒளவையார் கூறிய அறிவுரைகள் அனைவரும் ஏற்றுப் போற்ற வேண்டிய ஒன்று.
ஒளவையார் ஒருவரா? பலரா?
1872இல் இலண்டனில் முதற்பதிப்பாக வெளிவந்து, “தமிழ் விஸ்டம் (வுயஅடை றுளைனழஅ) என்னும் தொகுப்பு நூலில் ஒளவையாரின் நீதி நூல்களில் இருந்து ஆங்கிலேயர் மொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பெற்ற பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒளவையார் ஒருவரா, பலரா என்பதைப் பற்றிய சிந்தனைக்குக் கூட அதில் இடம் இல்லை.
1902 இல் சித்தூர் சுப்பிரமணியாசாரியார், அவர்கள் இயற்றிய ஒளவையார் என்னும் நூலில் ஒளவையார் ஒருவரா என்ற கொள்கை மறுக்கப்பட்டுள்ளது. ஞானபோதினியின் மதிப்புரையில் “முன்னேயோர் போல் ஒளவையாடிராருவரே என வாதியாது” என்று சுட்டிக் காட்டப் பெற்றுள்ளது.
“முன்னொளவை கலி வருட மூன்றாவாதயிரத்தாள் பின்னொளவை நான்காவதாயிரத்திற் பிறந்திட்டாள்” என்று வகுத்ததே சான்றாகும்.
– அவ்வையார், 1932 (பக் – 7)
பல ஒளவையார்கள்
“சங்க கால ஒளவை, இடைக்கால ஒளவை, சோழர் கால ஒளவை, சமயப் புலவர் ஒளவை, பிற்கால ஒளவை I, பிற்கால ஒளவை II என்று ஒளவையார்களைப் பட்டியலிட்டுள்ளார்.
– தமிழ் இலக்கிய வரலாறு 12ம் நூற்றாண்டு முதல் பாகம் (பக் – 499)
“அவ்வையார் I, அவ்வையார் II, அவ்வையார் III, அவ்வையார் IV, அவ்வையார் V, அவ்வையார் VI என்று அவ்வையார்களைப் படடியலிடுவார்.
– டாக்டர் தாயம்மாள் அறவாணன்.
“சங்க கால ஒளவையார், நீதிநூல் ஒளவையார் என்று இரு ஒளவையார்களே என்று கூறுவார்”.
– தமிழண்ணல்.
இவ்வாறு ஒளவையார்களைப் பற்றிப் பலரும் பலவிதமாகக் கருத்துக் கூறுவர்.
ஒளவையார் பலர் – காரணம்
ஒளவையின் பெயர் தமிழ் இலக்கிய உலகிலும், பெண் உலகிலும், அரசியல் உலகிலும் கொடி கட்டிப் பறந்த பெயராகச் சங்க காலத்தில் இருந்திருந்தல் வேண்டும். எனவே, தமக்கு முன் வாழ்ந்த பெருமைக்குரிய பெயரைச் சூட்டிக் சூட்டிக் கொண்டிருந்தல் வேண்டும்.
ஒருவர் பெயரைப் பலரும் பல்வேறு காலங்களில் வைத்துக் கொள்கிறார்கள் என்றால், முதலில் அப்பெயர் கொண்டவர். மிகு புகழ் பெற்றவராக இருக்கவேண்டும். மீண்டும் மீண்டும் அப்பெயரைப் பலர் வைக்க அதுவே காரணம் ஆகலாம்.
ஒளவையார் என்ற பெயரில் பலபெண்பாற்புலவர்கள் இருந்ததை நமது தமிழ் இலுக்கிய வரலாற்றில் காண முடிகிறது. புகமுக்குரியாரது பெயரைப் பின்வரும் தலைமுறையினர் தம் பிள்ளைகளுக்குச் சூட்டுவது இன்றும் நாம் காணும் மரபுதான். எனவே சங்க காலத்தில் பீடுபெற்று விளங்கிய ஒளவையாரின் பெயரை பின்னால் பலர் பெற்றுத் திகழ்ந்ததில் வியப்பில்லை.
அவைக்களப் புலவர்
அஞ்சியின் திருவேலாக்கத்தை ஒளவை சிறப்பாகக் குறிப்பிடுகின்றார்.
“ஓங்கு செலல்
கடும்பகட்டு யானை நெடுமான் அஞ்சி
ஈரநெஞ்சம் ஓடிச் சேண்விளங்கத்
தேர்வீச இருக்கை போல”
– (நற் 381)
ஆண்டு இவர் அவைக்களப் புலவராய் வாழ்நாளிற் பெரும்பகுதி கழித்தமையால் ‘என் ஐ’ (என் தலைவன்) என்றே உரிமையுடன் பாடுகிறார்.
“முடிவுத்தோள் என் ஐ” – புறம் 88
“என் ஐ” – புறம் 89
என் ஐ இளையோற்கு (என் தலைவனின் மகனுக்கு) (96) என இவ்வாறு சுட்டுமிடங்களும் இறுதியில் பாடிய கையறுநிலைப் பாடல்களும் இவர்களது நட்பின் சிறப்பைக் காட்டுகின்றன.
தூய தமிழ்த் தூதுவர்
பிறநாட்டு அரசரவையில், தூதுவராய் அமர்ந்து தொழிலாற்றப் பெண் ஒருத்தி சென்றாள் என்ற பெருமையை முதற்கண் பெற்ற நாடு நம் பைந்தமிழ் நாடே! தம் அரசராலும் பகையரசர்களாலும் விரும்பிப் பாராட்டத்தக்க பண்புடையராதலும் தூதுவோர்க்கு இலக்கணமாம்.
உணர்ச்சிகளின் வன்மை, மென்மைக் கூறுகளை திட்ப நுட்பமுடன் பாடுவதில் வல்லவர் என்பதை ஒளவையாரின் படைப்புகள் குறிக்கின்றன. கபிலர், பரணருக்கு அடுத்த படியாக அதிக எண்ணிக்கை யாத்தவரும் ஒளவையாரே: இதனால் சங்க கால ஒளவையார், சங்க காலப் பெண்பாற் புலவர்களின் கவியரசியாக உயர்ந்து நிற்கிறார்.
சங்க ஒளவையின் பாடல்கள்
காலந்தோறும் ஒளவையார் புகழ் விளங்கத் தொடங்கி வைத்தவர் சங்ககால ஒளவையாரே ஆவார். ஒளவையார் பாடியனவாக சங்க இலக்கியத்துள் 59 பாடல்கள் கிடைக்கின்றன. அவற்றுள் அகப்பாடல்கள் 26, புறப்பாடல்கள் 33.
பாடலால் பெயர் பெற்ற கலித்தொகை பரிபாடலிலோ, நீண்ட பாடல்களாகிய பத்துப் பாட்டிலொ அவர் தம் பாடல்கள் காணப்படவில்லை. உதிரிப் பாடல்களின் தொகைகளாகிய குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு ஆகிய நான்கு தொகைகளில் மட்டுமே அவர் பாடல்கள் காணப்படுகின்றன. இது “தனிப்பாடல் திரட்டு” நூலில் காணப்படும் ஒளவையின் மனப்போக்கை ஒத்திருக்கிறது. அதாவது சங்க கால ஒளவையும் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைக்கும் உணர்வுக்கும் ஏற்பப்பாடிய “தனிப்பாடற் புலவராகவே” ஒளவையார் விளங்கினார் என்று அறிகிறோம்.
சங்க கால இலக்கியங்களில் உள்ள ஒளவையின் பாடல்கள் 59 உள்ளன. அப்பாடல்கள் இடம்பெற்றுள்ள சங்க இலக்கிய நூல்களை பற்றியும். ஒளவை புனைந்துள்ள பாடல்களைப் பற்றி அறியலாம்.
குறுந்தொகை
குறுந்தொகை நாலடி முதல் எட்டடி வரையுள்ள ஐந்திணை தழுவிய 400 பாடல்களைக் கொண்டது. இவற்றை 205 புலவர்கள் பாடியுள்ளார்கள். இந்நூலைத் தொகுத்தவர் உப்பூரி குடிகிழாராக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். தொகுப்பித்தான் பூரிக்கோ.
205 புலவர்களில் ஒருவர் ஒளவையார். இந்நூலில் 15 பாடல்களைப் பாடியுள்ளார்.
நற்றிணை
நற்றிணை, ஒன்பது அடிமுதல் பன்னிரண்டு அடிவரையிலுள்ள ஐந்திணை தழுவிய 400 பாடல்களைக் கொண்டது. இவற்றை 275 புலவர்கள் இயற்றியுள்ளனர். இந்நூலைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்னும் பாண்டிய அரசனாவான். 275 புலவர்களில் ஒருவர் ஒளவையார் இந்நூலில் 7 பாடல்களை ஒளவையார் இயற்றியுள்ளார்.
அகநானூறு
அகநானூறு 12 அடிக்கு மேற்பட்ட ஐந்திணை தழுவிய 400 செய்யுட்களை உடையது. நீண்ட அடிகளைக் கொண்டமையின் இதனை நெடுந்தொகை என்றும் அழைப்பர். அவற்றை 145 புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார். உருத்திரசன்மனார். தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இந்நூலில் 4 பாடல்களை ஒளவையார் பாடியுள்ளார்.
புறநானூறு
புறப்பொருள் பற்றிய 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். செல்லரித்துச் சிதைந்து விட்டதால் இரண்டு பாடல்கள் இன்றும் கிடைக்கவில்லை. 44 பாடல்களில் பலவரிகள் உருத்தெரியாமலே ஒழிந்து விட்டன.
4 அடி முதல் 40 அடி வரையிலும் இப்பாக்கள் செல்லுகின்றன.. இவற்றை ஏறக்குறைய 160 புலவர்கள் பற்பல காலங்களில் பாடி உள்ளனர். 160 புலவர்களில் ஒளவையாரும் ஒருவர். 400 பாடல்களில் 33 பாடல்களை பாடியுள்ளார். திணை அடிப்படையில் வெட்சி1, கரந்தை2, தும்பை6, வாகை7, பாடாண்13, பொது இயல்4, மொத்தம் 33 பாடல்கள்.
இயல்கள்
ஒளவையார் பாடிய பாடல்களை அகம் சார்ந்த பாடல்கள் புறம் சார்ந்த பாடல்கள் எனும் இரண்டு பெரும் பிரிவில் அடக்கலாம். அகம் சார்ந்த பாடல்களை அகவியல் என்றும், புறம் சார்ந்த பாடல்களை புறவியல் என்றும் கொண்டு ஒளவையின் பாடல்களை ஆராயலாம்
ஒளவை பாடல் (59)
இயல்கள் (2)
அகவியல் (26) புறவியல் (33)
அகவியல்
அகவியல் என்னும் இவ்வியலின் மூலம் அகம் என்பது பற்றியும், ஒளவையார் பாடிய அகப்பாடல்களின் கருத்துக்களையும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கம்.
அகம்
பண்டைத் தமிழ் மக்கள் வாழ்க்கையில் அகம் பற்றிய செய்திகளை எளிமையாக இனிய சுவையுடன் படைத்துள்ளார் ஒளவை. “உள்ளமொத்த தலைவனும், தலைவியும் ஊழால் ஒன்றுகூடித் தாம் துய்த்த இன்பம் இத்தகையது என பிறருக்குப் புலப்படுத்த முடியாததாக விளங்குவது “அகம்” ஆகும். காதல் பற்றிய கவிதைகளை அகப்பொருள் பற்றிய நூல்களில் நுகரலாம். சங்ககால இலக்கியங்களில் ஒளவையார் மொத்தம் 26 அகப்பாடல்களைப் பாடியுள்ளார். ஒளவையார் பாடிய அகப்பாடல்களின் கருத்தைத் தொகுத்து ஆராய்வோம்!
காதல் ஒளவை
சங்ககால ஒளவையை பெண்துறவி எனப்பொருள் கொள்வது தகுமா? மண வாழ்க்கையைத் துறந்து வெள்ளாடை பூண்டு தவக்கோலம் கொண்ட பாட்டி என்று கருதுதல் தகுமா? இவ்வாறு கருதுதலுக்கு இடமே இல்லை. ஒளவை பாடிய அகப்பாடல்களை நோக்குவோர்க்கு ஒளவை காதலித்து மணம் முடித்து நிறைவுற வாழ்ந்த வாழ்க்கையை உடையவர் என்பது தெளிவாகப் புலப்படும். காதலனைப் பிரிந்து ஒருநாள் இப்பினும் உள்ளம் தாங்காது என்பதை,
‘ஒரு நாள் கழியினும் வேறுபடூஉம் – நற் : 129
பாடல் மூலம் மெய்யான இல்லற வாழ்க்கைப் புலப்படும்.
ஆராக் காதல் . . . – அகம் : 273
சங்ககால ஒளவைப் பெண்துறவி என்று கொள்ளுவதற்கு இடம் இல்லை. பெண்துறவி அல்லர் என்று முடிவு செய்யின் அவர் இளங்குமரி என்று பொருள் கொள்ளுதலும் ஆகாது. காரணம் புறநானூற்றுப் பாடல்கள் காட்டும் அறிவு முதிரிச்சி, அரசியல் முதிர்ச்சி ஆகியன. அகப்பாடல்களின் மூலம் ஒளவையின் காதல் உணர்வை அறியலாம்.
அகப்பாடல்களின் அழகும் சிறப்பும்
ஒளவையின் அகப்பாடல்கள் எளிமையும் அழகும் ஒருங்கமைந்தன. காம உணர்வை அழுத்தமாய் வெளிப்படுத்துவன. உவமை அழகிலும் அவை அவரது புறப்பாடல்கட்டு ஈடாய் விளங்குகின்றன. அகப்பொருட்பாக்கள் உணர்வு மிக்கன. பரிவாற்றாத் துன்பத்தை விளக்குவன. சில சொற்களைத் திரும்ப திரும்ப அமைத்து அவற்றின் வாயிலாக உணர்ச்சி மிகுதியைப் புலப்பத்தும் திறன் ஒளவைக்கு கைவந்த கலையாகும். சான்று
வள்ளினென் அல்லனோ யானே!
என்னும் பாடல்
அகத்திணைப் பாட்டிலும் உரிய இடத்தில் வைத்து அதியனைப் போற்றியுள்ளார்.
வந்த சொற்களையே அடுக்கி, சொல்லாமலே புலப்படுத்தும் குறுந்தொகைப் பாடல் இவரது கவித்துவத்தின் முத்திரை சான்று. ‘அகவன் மகளே! அகவன் மகளே! என்னும் பாடல்.
தொகுப்புரை
ஓளவை எனும் சொல் பொது மக்கள் பார்வையில் வயதான மூதாட்டி எனும் பொருளை நல்குகிறது. ஓளவை மரபு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒளவையார் என்னும் பெயரில் பலர் இருப்பதால் சங்க கால ஒளவையார் என்று தனியாக ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஓளவை மரபு என்பது தமிழ் இலக்கியத்திலும் ஏன் உலக இலக்கியத்திலும் ஒப்புமை காட்ட முடியாத அற்புதமாகும். உணர்ச்சிகளின் வன்மை, மென்மைக் கூறுகளை திட்ப நுட்பமுடன் பாடுவதில் வல்லவர் என்பதை ஒளவையாரின் படைப்புகள் குறிக்கின்றன. கபிலர், பரணருக்கு அடுத்த படியாக அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியவர் ஒளவையாரே: இதனால் சங்க கால ஒளவையார், சங்க காலப் பெண்பாற் புலவர்களின் கவியரசியாக உயர்ந்து நிற்கிறார்.
குறிப்புகள்
1. பிங்கல நிகண்டு 112
2. பிங்கல நிகண்டு 912
3. சூடாமணி நிகண்டு – மக்கட் பெயர்த் தொகுதி-பாடல் 26.
உசாத்துணை நூல்கள்
1.பிங்கல் நிகண்டு
2. சூடாமணி நிகண்டு
3. தொல்காப்பியம்
4.சிலப்பதிகாரம்
5.சீவக சிந்தாமணி
6.கம்ப இராமாயணம்
7. அகநானூறு
8. புறநானூறு
9. ஒளவையார் – சித்தூர் சுப்பிரமணியாசாரியார்
10. குறுந்தொகை
11. நற்றிணை
sfrdhanam@gmail.com