முன்னுரை
கள் குடிப்பதை சங்கால மக்கள் தவறாகக் கருதவில்லை. ஊர் வளத்தைப் பேசும்போதும், கள்ளின் மிகுதியையும் பேசியுள்ளனர்.நன்கு புளித்த கள் “தேள் கடுப்பன்ன” கடுமை உடையதாகும். உள் நாட்டுக் கள்ளைத் தவிர வெளிநாடுகளிலிருந்தும் வருவித்துக் குடித்தனர். மன்னனின் சிறப்பைக் கூறும்போதும் கள் குடித்தது குறித்தும் கூறப்பட்டுள்ளது. கள் உண்டு களிக்கும் விழா ’உண்டாட்டு விழா’ எனப்படும். வீரர்களுக்கு மன்னன், தன் கையால் கள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மதியை மயக்கும் மதுவை அருந்துதல் கூடாது. மது அருந்துவது என்பது தனிமனித ஒழுக்கக்கேடு. சமுதாயத் தீமை. மது உண்பதால் முதலில் உடம்பானது ஒரு விபரீத நிலையை மேற்கொள்கிறது. பின்னர் உண்டவனின் அறிவு மயங்குகிறது என்று வள்ளுவர் கூறுகின்றார். அத்தகைய கள் குறித்தும், கள் அருந்துவதால் தோன்றும் மெய்ப்பாடுகள் குறித்தும் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஆராய்வோம்.
பஞ்சமாபாதகங்கள்
கொலை, களவு, கள்ளுண்ணல், பொய் உரைத்தல், குரு நிந்தனை ஆகிய ஐந்தும் “பஞ்சமாபாதகங்கள்” என்பர். குடிக்கும் பழக்கம் உடையவர்கள் முதலில் தம் அறிவை இழக்கின்றனர். பின்னர் மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறார்கள். அவர்கள் உடல் நலமும், உள்ள நலனும் கொடுகின்றனர்.
மூளையின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும்
நமது மூளையின் ஆரோக்கியமும் நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களைப் பொறுத்தது. சில உணவுப் பொருட்கள் நம் மூளைக்கு நல்லது. மற்றவை மூளையின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். மதுபானம் அல்லது பானம் என்பது எத்தனால் கொண்ட ஒரு பானமாகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். மதுபானம் மனக் கிளர்ச்சியுடன் நடந்து கொள்ளத் தூண்டும். கவனம் செலுத்துவதில் சிரமம். நினைவாற்றல் இழக்கும். உணர்வு இழப்பு ஏற்படும். மங்கலான பார்வை, விபத்துக்கள், வாய்மொழி அல்லது உடல் ரீதியான தாக்குதல் போன்ற விரிவான விளைவுகளை ஏற்படுத்தும். சில செயல்கள் நடந்த பின்னர் வருத்தப்பட செய்யும். ஆல்கஹால் எத்தனால் ரசாயன சேர்மம் ஒரு நியூட்ரோக்சன் இருப்பதினால் மூளை செல்களுக்கு இடையேயான தொடர்பைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. ஒருவரால் சரியாகப் பேச முடியாமல் போகும். உடலுக்கும், மூளைக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்கும். இது நரம்பு மண்டலத்தைச் சீர்குலைத்து விடுகிற அளவுக்கு அல்லது அழித்து விடுகிற அளவிற்கு சக்தி வாய்ந்தது.எனவே, தான் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமலும், தெளிவில்லாமலும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டும் கள் குடித்தவர்கள் நடந்து கொள்கின்றார்கள்.
1. கோசலத்தில் கள்
கோசல, கிட்கிந்தை, இலங்கை மக்களும் குடிப்பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை கம்பர் தம் ராமாயணத்தில் குறிப்பிடுகிறார்.
ஆற்று வெள்ளத்தில் ஈக்களும், வண்டுகளும் வெள்ளத்தில் மொய்த்து மிதந்து வந்ததை ஒரு குடிகாரனின் முகத்தில் மொய்த்த ஈக்கள் போன்று இருந்தது என்று உவமித்தது வெள்ளத்தில் உட்புறம் கலங்கி இருப்பது மனதிலும், அறிவிலும் தெளிவில்லாத குடியர்களை ஒப்புமையாக்கி கம்பர் கூறியுள்ளார்.(ஆற்றுப்படலம் 22)
இராமனுக்கு முடிசூட்டல் என்று முடிவு செய்ததும், தசரதன், வசிஷ்டனை அழைத்து, இராமனுக்கு அற உரைகளை வழங்க வேண்டும் என்றான். வசிஷ்டன், இராமனிடம்
“சூது முந்துறச் சொல்லிய மாத் துயர்
நீதி மைந்த நினக்கு இலை ஆயினும்
ஏதம் என்பன யாவையும் ஏய்துதற்கு
ஓதும் மூலம் அவை என ஓர்தியே”
(மந்தரை சூழ்ச்சிப்படலம் 105)
என்று கூறுகிறார்.
(சூதாடுதல், வேட்டையாடுதல், பகலில் தூங்குதல், வம்பலத்தல், பெண் பித்து, குடி, பாட்டு கூத்து, இசைப் பிரியன் ஊர் சுற்றல் என்று காமத்தின் வழி உண்டான பத்து துன்பங்கள் என்று பேராசிரியர் அ.ச ஞானசம்பந்தம் அவர்களின் உரை குறிப்பிடுகிறது.)
நகரப்படலத்தில், நகரமாந்தர் பொழுதுபோக்கு குறித்து கூறும் போது, பேரொளி பொருந்திய அந்த அயோத்தி நகரத்தில் மகளிர் சிலருக்கு, நந்தவனத்திற்குச் சென்று மலர் பறிப்பதாலும் – பெண் மான்களைப் போலத் துள்ளி வந்து, தம் இளமைமிக்க கணவரோடு குளங்களில் நீராடுவதாலும்- தம் வாயில் உள்ள செந்நிறம் அழியும்படி கள் பருகுவதாலும், சூதாடுவதாலும் பொழுது போகும்.
“செந்துவர் அழிதரத்தேறல் மாந்தி சூது
உந்தலின் பொழுதும் சிலர்க்கு அவ் ஒள்நகர்”
(நகரப்படலம் 162)
என்று கூறுகிறார்.
கள் உண்ட மள்ளர்கள்
கள் குடித்திருக்கின்ற மள்ளர்கள் வயல்களில் களைகளாக வளர்ந்திருக்கின்ற கருங்குவளை, தாமரை,செவ்வாம்பல் மலர்கள் உழத்தியரின் கண், கை, வாய், முதலிய உறுப்புகளை ஒத்துள்ளதால் அவற்றைப் பறித்துக் களையாது உலவியிருந்தனர் என்பதை,
“பண்கள் வாய் மிழற்றும் இன் சொற் கடைசியர் பரந்து நீண்ட
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களையலாற் களையிலாமை
உண் கள்வார் கடை வாய் மள்ளர் களைகிலாது உலாவி நிற்பர்”
(நாட்டுப்படலம் 42)
என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.
கள்ளுண்ட மயக்கத்தால் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளைச் சரியாகச் செய்ய இயலாதநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
2. மிதிலையில் கள்
மிதிலைக் காட்சிப்படலத்தில், இராம இலட்சுமணர்கள் விசுவாமித்திரருடன் வந்து கொண்டிருந்தனர். பளிங்குக் கிண்ணத்தில் ஊற்றப்பட்ட புதிய மணமுள்ள மதுவைக் குடித்தனால் வெளிப்படையாய்த் தோன்றும் சிரிப்பை உடையனவாகியும், வெறி கொண்ட சொற்களைப் பேசுபவளாகியும், தமக்குள் உண்டான ஊடல் செய்திகளை மறைக்கமுயன்றாலும், மறைக்க முடியாமல் வெளிப்படுத்தும் வகையாகக் கள்ளுண்ட களிப்பை வெளிப்படுத்துவனவாகியும் தோன்றும் மகளிர் முகங்களாகிய அழகிய தாமரை மலர்கள் பலவற்றையும் அவர்கள் கண்டார்கள்.
“பளிங்கு வள்ளத்து வாக்கும் பசி நறுந் தேறல் மாந்தி
வெளிப்படு நகைய ஆகி வெறியன மிழற்றுகின்ற
ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டர ஊடலை உணர்த்துமா போல்
களிப்பினை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் யாவும் கண்டார்”
(மிதிலைக்காட்சிப்படலம் 500)
ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்திருப்பவர்களுக்குக் கள் இனிமையை உண்டாக்கும் என்பதைக் ‘ கலந்தவர்க்கு இனியதோர் கள்ளுமாய்’963 எனும் அடிகள் மூலம் கம்பர் உணர்த்துகிறார்.
மலர்ப்படுக்கையில் கலவிப்போரில் களிக்கவேண்டும் என்கிற மனமுடையவர்களாய்ப் புதிய மதுவைப் பருகத் தொடங்கினர்.
“பூக்கமழ் ஓதியர் போது போக்கிய
சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர்
ஆக்கிய அமிழ்து என அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா மாந்தல் மேயினார்”
(உண்டாட்டுப்படலம் 916)
அழகிய மகளிர் மதுவைப் பருகியதை
“மானுடை நோக்கினார் வாயின் மாந்தினார்
தேனுடை மலரிடைத் தேன்பெய் தென்னவே”
(உண்டாட்டுப்படலம் 917)
வெப்பத்தையுடைய ஹோமக்குழியில் சரிந்தநெய் அதனுள் உள்ள கனலை மூளச் செய்வதுபோல, மகளிர் உண்ட மது அவர்களின் உள்ளே பொருந்திய காமாக்னியை மிகுவித்தது என்பதை,
“தூமம் உண் குழலியர் உண்ட தூநறை
ஓமவெங்குழி உரு நெய்யின், உள்உறை
காமவெங் கனலினை கனற்றிக் காட்டிற்றே”
(உண்டாட்டுப்படலம் 919)
என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.
உண்டாட்டுப் படலத்தில் மாலையில் மகளிர் மது அருந்தியதால் ஏற்பட்ட மயக்கங்களை,
“விடம் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்சொலார் தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டோவாள் நுதல் ஒருத்தி காண
தடன் ஒக்கும் நிழலைப் பொன் செய் தண் நறுந் தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள்”
(உண்டாட்டுப்படலம் 920)
கம்பர் உணர்த்துகிறார்
கையில் மதுக்கிண்ணத்தை ஏந்திய ஒரு பெண், தன் நிழலைப் பார்த்து அதைத் தன் தோழி என்று எண்ணி மயங்கி, நீயும் என்னோடு மது அருந்த வா என்று அழைக்கிறாள். (உண்டாட்டுப்படலம் 921)
ஒரு பெண் தன் கையில் உள்ள கோப்பையில் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்துவிட்டு, அதை இன்னொரு பெண் என்று நினைத்து, இவ்வளவு பெரிய பாத்திரத்தில் மது நிறைந்திருக்கும் போது, நான் பருகிய எச்சிலை நீயும் பருக நினைத்தாயோ என்று கேட்கிறாள். (உண்டாட்டுப்படலம் 922)
இன்னொரு பெண் தன் கையில் உள்ள மணிகள் பதித்த பளிங்காலான மதுக் கிண்ணத்தில் நிறைந்திருந்ததாக மயங்கி, வெறும் கிண்ணத்தை வாயில் வைத்தாள். அதைக் கண்டு அனைவரும் சிரித்தனர். (உண்டாட்டுப்படலம் 922)
ஒரு பெண் தனது கண்களின் நிழலைக் கோப்பையில் கண்டு அவற்றை வண்டுகள் என்று எண்ணி விரட்டத் தொடங்கினாள்.
“தாள் கருங்குவளை தோய்ந்த தண்நறைச் சாடியுள் தன்
வாள் கணின் நிழலைக் கண்டாள்”
(உண்டாட்டுப்படலம் 923)
வேறொரு பெண் முழு நிலவின் பிம்பத்தைக் கிண்ணத்தில் பார்த்து உன்னைத் தீண்ட வரும் பாம்புகளுக்கு அஞ்சி, இங்கு ஒளிந்திருக்கும் உன்னை நான் காப்பேன் என்று உறுதியளித்தாள். (உண்டாட்டுப்படலம் 924)
இன்னொருத்தி தன் கை , தன் கிண்ணத்திலிருந்து கீழே மது சிந்திவிட்டதை அறியாமல், கிண்ணத்தைத் தலைகீழாகக் கவிழ்த்து, அதன் பின்னே மது இருக்கலாம் என்று எண்ணி வாய் அருகே கொண்டு சென்றாள்.
“தள்ள தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும் தேறாள்
உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி
வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள்”
(உண்டாட்டுப்படலம் 928)
ஒரு பெண் தனது தாமரை பூ போன்ற சிவந்த வாயை திறந்து மதுவை அருந்தினால், வண்டுகள் உள்ளே போய்விடும் என்று அஞ்சி, ஒரு தண்டினால் மதுவை உறிஞ்சினாள்.
ஒரு பெண் கள் உண்ணவேண்டும் என்று விரும்பினாலும், தன் உள்ளத்தில் உறையும் காதலர் மது அருந்தும் பழக்கமற்றவன் என்ற காரணத்தால்
“உன் உறை அன்பன் உண்ணான் என உண்ணி நறுவை உண்ணாள்”
(உண்டாட்டுப்படலம்930)
மகளிர் கள்ளுண்டமையால் ஏற்பட்ட தடுமாற்றங்களைக் கம்பர் 46 பாடல்களில் விரித்துரைக்கின்றார்..அவற்றில் 24 பாடல்களில் மகளிர் நிலையைப் பாடல்களில் வர்ணித்துள்ளார்.
அப்பாடல்கள் மது உண்ட மயக்கத்தினால் மகளிர் செய்யும் காமம் சார்ந்த செயல்களையும், கள்ளுண்ட களிப்பினால் தங்கள் கணவரோடு மேற்கொள்ளும் ஊடல்களும், கூடல் தொடர்பான செய்திகளையும் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
கள் உண்ணும் பழக்கத்தையும், அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் மயக்கங்களையும் கம்பர் கூறுகிறார்.
மது அருந்துதல் ஒரு குற்றம்
பள்ளிபடைப் படலத்தில் கோசலையின் திருவடிகளில் விழுந்து பரதன் சபதமாகப் பலவற்றைக் கூறுகிறான்.’பருகினான் உரை’ என்று மது அருந்துதலை ஒரு குற்றமாகவே கம்பர் கூறுகிறார்.
நிகும்பலை யாகப் படலத்தில் வீடணன், இந்திரஜிதிடம் பேசும்போது தான் குற்றமற்றவன் என்பதற்கு சாட்சியாக,
“உண்டிலென் நரவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும்
கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம்
கண்டிலர் என்பால் உண்டே நீயிரும் கண்டிர் அன்றை”
(நிகும்பலையாகப்படலம் 3017)
இதிலிருந்து மது அருந்துவது என்பது பொய் சொல்வதற்கும், பிறர் பொருளைக் கவர்வதற்கும், வஞ்சம் செய்வதற்கும் இணையான குற்றம் என்பது தெரிகிறது.
பிலத்தில் கண்ட நகரில் மது
வானர சேனைகள் பிலத்தில் கண்ட நகரில் அமிர்தம் போன்ற சோறு முதலிய உணவு வகைகளும், தேனும், மதுவும் சுவையுடைய கனி வகைகளின் கூட்டமும், இன்னும் பல பயனுடைய பொருள்களும், எங்கும் மணம் வீசும் படியாக அளவற்றிருந்தன.
“அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்
தமிழ் நிகர் நறவமும் தனித் தண் தேறலும்
இமிழ் கனிப் பிறக்கமும் பிறவும் இன்னன
கமழ்வுறத் தோன்றிய கணக்கில் கொட்பது”
(பிலம்புக்கு நீங்கு படலம் 848)
3. கிட்கிந்தையில் கள்:
வானரங்கள் கள் அருந்திய செய்தியைக் கம்பர் கிட்கிந்தைப் படலத்தில் குறிப்பிடுகிறார்.
வாலி, இராமனிடம் வரம் கேட்டல்:
அழகனே, நாயேன் உன்னிடம் வேண்டுவது ஒன்று உண்டு. என் தம்பி சில சமயம் மதுவுண்ட மயக்கத்தினால் உமக்கே ஏதேனும் தவறு செய்ய நேர்ந்த போதும், என் மேல் எய்த அம்பை அவன் மேல் எய்யாமல் இருக்கவேண்டும் என்றான்.
” பூவியல் நறவம் மாந்திப்
. புந்திவேறு உற்ற போழ்தில்
.தீவினை இயற்று மேனும்
எம்பிமேல் சீறி, என்மேல்”
(வாலிவதைப்படலம் 360)
மது அருந்திய சுக்ரீவன்
கள் அருந்தியதால் ஏற்பட்ட விளைவையும், அதை உணர்ந்த சுக்ரீவன் கள் அருந்தியவர்கள் செய்த பாவத்தையும் கூறுகிறான். சுக்ரீவனுக்கு அரசபதவியைக் கொடுத்த இராமன், “கார்காலத்தில் நீ படையுடன் சீதையைத் தேடும் பொருட்டு வா” என்றதைக் கூட மறந்துவிட்டு, போதையில் ஆழ்ந்திருந்தான். நாட்கள் கடந்தும் வராததால் இராமனே, இலட்சுமணனிடம், சுக்ரீவனைப், பார்த்து வருமாறு கூறினான்.
அனுமனும், அங்கதனும் சுக்ரீவனை எழுப்பி நிலைமையை உணர்த்தினர். அப்போது அங்கதன் “சுக்ரீவனிடம் முன்பே இலட்சுமணன் வந்தத் தகவலைத் தெரிவித்தும் போதையில் இருந்ததால் அதை நீங்கள் புரிந்து கொள்ளவேயில்லை” என்றான். அதற்கு சுக்ரீவன், “நான் மது அருந்தியதால் இராமனின் பெருந்துன்பங்களையும், மறந்தேன் என்றும், இலட்சுமணனைப் பார்ப்பதற்கும் வெட்கம் அடைகிறேன்” என்றான்.
‘தாய்’ என்றும், ‘மனைவி ‘என்றும் வேறுபாடு காணும் அறிவு இல்லாமை
இப்போது என்னிடம் உள்ள இந்தக் குடிமயக்கம் அல்லாமல் வேறு பேதமையான செயல் யாதுளது? இங்ஙனம் கள் குடிப்பதால் ‘தாய்’ என்றும், ‘மனைவி ‘என்றும் வேறுபாடு காணும் அறிவு இல்லாமையால் கள் குடிப்பவனிடம் வேறு அறங்கள் இருந்தும் யாது பயன்? இவ்வாறு கள்ளுண்டு மகிழ்தல் ஐம்பெருந்தீமைகளுள் ஒன்றாகும். அன்றியும் வஞ்சனை நீங்கப் பெறாத மாயையின் வயமாகி, மயங்கும் நாம் அந்த மயக்கத்தை ஒழிக்காத நிலையில் மற்றொரு மயக்கத்தைக் கூடியவரானோம்.இது மிக இழிவானதாகும். (கொலை, களவு, கள்ளுண்ணல், பொய் உரைத்தல், குரு நிந்தனை ஆகிய ஐந்தும் பஞ்சமாபாதகங்கள் என்பர்)
“ஏயின இதுவலால் மற்று ஏழைமைப் பால தென்னோ
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல்தரும் என் ஆம்
தீவினை ஐந்தின் ஒன்றாம் அன்றியும் திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றோம் மயக்கின்மேல் மயக்கும்
வைத்தாம்”
(கிட்கிந்தைப் படலம் 650)
மனம் தெளிந்து தீய தொழில்களை விட்டவர்,பிறவி நோயை ஒழித்தவராவர் என்று கெடாத ஞானத்தை உடைய தத்துவ ஞானிகளும், வேதங்களும் சொல்லியிருக்கவும், உணர்வின்றி நெளிந்து கொண்டு தங்கியுள்ள புழுக்களை எடுத்து விட்டுக் கள்ளைப் பருகி மனம் நிறைந்த மகிழ்வுடன் நான் இருக்கிறேன் என்றான்.
“நெளிந்துறை புழுவை நீக்கி நறவுண்டு நிறை கின்றேனால்
அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்”
(கிட்கிந்தைப்படலம் 651)
முதலில் நாம் தன்னுடைய உண்மைத் தன்மையை உணராததால், மெய்யறிவு பெறாததால், அழுக்கு உடலைப் பெற்றிருத்தலோடு, மேலும் கள்ளை உண்டு மனம் மயக்குகின்ற போதையைப் பெறுவதும் தகுதியோ? என்றும், மற்றவர் அறியாமல் மறைத்துக் குடித்து, அதனால் உண்டாகும் வெறியால், பின் உலகெல்லாம் அறியுமாறு கண்டவிடங்களில் ஓடிக் களிப்புக் கொண்டவர் அடைந்துள்ள நற்கதியை எவரேனும் கண்டதுண்டோ? இல்லை என்றான்.
“ஒளித்தவ ருண்டு மீண்டு இவ்வுலகு எலாம் உணர ஓடிக்
களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டதுண்டோ”
(கிட்கிந்தைப்படலம் 653)
மது அருந்துபவரை வஞ்சகமும், திருடுதலும், பொய்யும், அறியாமையும் தொன்றுதொட்டு வந்த முறைமைக்கு மாறான கொள்கையும், அடைக்கலமாக அடைந்தவரைக் கைவிடுகின்ற தீய பண்பும் , செருக்கும் சேர்ந்து வருத்தும். திருமகளும் விட்டு நீங்குவாள். நஞ்சு உண்பவரைக் கொல்வதே அன்றி, நரகத்தில் சேர்க்காது. நஞ்சு உண்டவரின் உடலை மட்டுமே அழிக்கும். மதுவோ உடலை அழித்தலோடு, உயிரையும் நரகத்தில் தள்ளும். (கிட்கிந்தைப்படலம் 656)
மதுவால் கேடு உண்டாகும் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அவ்வாறு கேட்டச்சொல் கண்கூடாகத் தன் தொழிலைக் காட்டிவிட்டது என்றும், இந்த மதுவினால் உண்டாகும் மாற்றுவதற்கு அரிய தீமைக்கு நான் அஞ்சினேன். கள்ளைக் கையால் தீண்டுதலே அன்றி, மனத்தால் நினைப்பதும் செய்யக்கூடியதன்று.கொடிய இம்மதுவை அதனால் நேர்ந்த தீங்கைக் கண் கூடாகக் கண்டுவிட்டேன், பின்னும் விரும்பினேனாயின், இராமனின் திருவடிகள் என்னை அழிக்கட்டும் என்று ஆணையிட்டு உரைத்தான்.(கிட்கிந்தைப்படலம் 657)
இவ்வாறு மதுவினால் அடைந்த துயரத்தை அனுபவித்த சுக்ரீவன் உரைத்தான்(.கிட்கிந்தைப் படலத்தில் 649-657)
4. இலங்கையில் கள்
இலங்கையில் அரக்கர்களும், அவர்தம் மகளிரும் மகிழ்ச்சியாக கள் அருந்தினர் என்பதைக் கம்பர் பாடியுள்ளார்.
கும்பகர்ணன் மதுகுடித்தல்
உறக்கத்திலிருந்து எழுந்த கும்பகர்ணனுக்குக், குடம் குடமாக மதுவைக் கொண்டு வந்து கொடுத்தனர்.
“ஆறு நூறு சகடத்து அடிசிலும்
நூறு நூறு குடங்களும் நுங்கினான்”
(கும்பகர்ணன் வதைப் படலம் 1272)
அறுநூறு வண்டி உணவையும், 10,000 குடங்கள் மதுவையும் உண்டான்.
அனுமன் கண்ட இலங்கை மாந்தரின் நிலை
பளிங்குக் கற்களினால் செய்யப்பட்ட மாளிகையின் இடங்களிலும், ஏனைய இடங்களிலும் அங்கு அமைக்கப்பட்ட கற்பகச் சோலைகளிலும் எங்கே பார்த்தாலும் மதுவை உண்டு ஆடுகிறவர்களும், பாடுகின்றவர்களுமாய் இருக்கின்றார்களேஅன்றிக் கவலையுடையவர்களாக ஒருவருமே காணப்படவில்லை என்று அனுமன் கூறுகிறான்.(ஊர்தேடுபடலம் 125)
இலட்சுமணனால் மூக்கறுபட்டு இலங்கை வந்த சூர்ப்பணகையைக் கண்ட பொதுமக்கள் பலவாறு தங்களுக்குள் பேசிக்கொண்டனர். நிறைய கள் குடித்துவிட்டு, மது மயக்கத்தில் கண்ணாடியின் முன் நின்று, அதில் இவள் தன் முகத்தைப் பார்த்துத் தனக்குப் போட்டியாக இன்னொருத்தியா? என்று நினைத்து அந்தக் கண்ணாடி மீது மோதி இருப்பாள் என்று, அதனால் ஏற்பட்ட காயம் தான் இதுவோ என்று ஊர் மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்
வீடணன் குறித்து அனுமன் கூறல்
நான் இலங்கையில் பழி செறிந்த காட்சிகளையே மிகுதியாகக் கண்டேன். அவைகளுக்கிடையில் அபூர்வக் காட்சியினையும் கண்டேன். அப்படிக் கண்டது இவனுடைய பொன்மணையும் ஒன்று.அங்கு மதுவைக் கண்டிலேன். மாமிசம் கண்டிலேன். நீதியை மட்டும் கண்டேன்.தர்மநியாயங்களைக் கண்டேன். அந்தணர் வாழும் அணிமணிமணையாகவே விளங்கிற்று என்கிறான்.
“நிந்தனன் நறுமும்நெறயில் ஊன்களும்
தந்தன கண்டிலேன் தரும தானமும்
வந்தனை நீதியும் பிறவும் மாண்பமைந்து
அந்தணர் மனை எனப் பொழிந்த தாம் அரோ”
(வீடணன் அடைக்கலப்படலம் 402)
பிரம்மாஸ்திரத்தால் அடிபட்டுக்கிடந்த இலட்சுமணன் நிலையை ஒற்றர்கள் மூலம் அறிந்த இராவணன் மகிழ்ச்சியுடன் கள்ளுண்டு காலம் முதலிய வரையறையின்றி பெண்கள் நடனம் ஆடும் நீண்ட களியாட்டிற்கு இளம் பெண்களை நியமித்து ஏற்பாடு செய்தான். ஆடலுக்கு ஏற்ப பாடும்படி கின்னரர் முதலியோரை அழைத்தான். (களியாட்டுப் படலம் 1)
நடனப்புகழ் படைத்த அரம்பை போன்ற எண்ணற்ற பெண்கள், அவன் கட்டளைக்குப் பணிந்து கூட்டம் கூட்டமாக வந்தனர். மேனகை, திலோத்தமை, ரம்பை, ஊர்வசி முதலிய தெய்வ மகளிர் முரசு, சங்கு, முருகு, முதலிய தாள வாத்தியங்களுக்கு ஏற்றபடி, கால் சிலம்பு ஒலிக்க, தேவலோகத்திலிருந்து நடனமாடிக் கொண்டு வந்தார்கள்.
ஆடல் மாதர் கள்ளுண்டனர். கள் அவர்களது உடலையும், உள்ளத்தையும் ஆதிக்கம் கொண்டது.
கள்ளுண்ட மகளிர் நிலை
கள்ளுண்ட மகளிர் பற்கள் வெளியே தோன்றச் சிலர் சிரித்துக்கொண்டே இருந்தனர். உடல் வியர்த்தது. உதடுகள் துடித்தன. கண்கள் கடை சிவந்தன. புருவங்கள் நெறிந்து நெற்றி முற்றச் சென்றன. வாய் வெழுத்தது. கூந்தல் குலைந்தது.
மது மயக்கம், மகளிரது பாடலையும், ஆடலையும் சிதைத்துப் பாடும் முறையைத் தவறவிட்டு அட்சரகாலத்திலிருந்து விலகி, சுருதி பிறழ்ந்து, சஞ்சாரக் கிராமத்தை மாற்றி குற்றம் உடைய பாடலைப் பாடினர்.
கல்வி அறிவோடு கேள்வி அறிவும் நிரம்பி அவற்றினால் உண்டாகும் பயனை உணராத பேதையிடம், வஞ்சகன் ஒருவன் செய்த கற்பனை அவனால் விரைவில் நம்பப்பட்டு பரவுவது போல கள்ளி.ன் வேகம் மகளிரிடம் விரைந்து பரவியதை
“நல் பெருங்கல்விச் செல்வம் நல்ல அற நெறியை நண்ணி
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியோடும் பழகி முற்றிப்
பின் பயன் உணர்தல் தேற்றா பேதையால் வஞ்சன் செய்த
கற்பனை என்ன ஓடிக் கலந்தது கள்ளின் வேகம்”
(களியாட்டுப்படலம் 2766)
அறியமுடிகிறது.
கள்ளுண்ட மகளிர் தனது உள்ளத்தில் உள்ள புணர்ச்சி விருப்பத்தை தமது உடம்பில் பொருந்திய செய்கையால் உணர்த்த, அது காம களியாட்டமாக வெளிப்பட்டது. அக்காம களியாட்டத்தில் காம, வெகுளி மயக்கங்களில் இருந்து நீங்கிய சிந்தையினரான தெய்வத்தன்மை நீக்க, சிறந்த வேதம் உணர்ந்த முனிவர்களுக்கும் மயிர்க்கால் தோறும் காம உணர்ச்சியாகிய வெள்ளம் தோன்றியது என்பதை
“உயிர் புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது
அயிர்ப்பினில் அறிதிர் என்றே அது களியாட்டமாகச்
செயிர்ப்பு அறு தெய்வச் சிந்தைத் திருமறை முனிவர்க் கேயும்
மயிர்ப்புறம் தோறும் வந்து படித்தது காமவாரி”
(களியாட்டுப்படலம் 2774)
என்ற பாடலில் கம்பர் கூறியுள்ளார்
கள்ளுண்ட பெண்களின் கண்கள் தமக்கு இயல்பான காதலரை வருத்தும் வலிமையை இழந்து, எய்ய வழி இல்லாமல் அம்பறாத் துணியில் அடைபட்ட மன்மத பாணம் போல் வீணாகின. அவர்களின் பாடல், முறை பிறழ்தது. தாளம் பிசகியது. காலம் தவறியது லயம் சிதைந்தது என்று கூறிய கவிஞர் புல்லாங்குழலும் நாணும் பெண்கள் குரல் இப்போது இனிமை இழந்தது. ’பாழ்த்த குரல்’ எடுத்துப் பாடினார்கள்.
“சிங்கல்இல் அமுதினோடும் புனி அளாம் தேறல் என்ன
வெங்குரல் எடுத்த பாடல் விளித்தனர் மயக்கம் வீங்க”
(களியாட்டுப்படலம் 2771)
இந்திரஜாலமோ என்று பார்ப்பவர்கள் மருளும்படி அபிநயித்து, பாவனையப் பொருளை தன் முன்னே கொண்டு வந்து காட்ட வல்லவர் இந்த நடன மாதர். ஆனால் இப்போது மான் போன்ற கண்களை உடைய பெண்களையும், மைந்தரையும் அபிநயிக்கத் தொடங்கி, மதி மயங்கி மறந்து யானையை அபிநயிப்பதாக கூறி, மறுபடியும் மறந்து தேரைக் காட்டி முடித்தனர். (களியாட்டுப்படலம் 2772)
கள் மயக்கத்தால் அழுவார்கள். சிரிப்பார்கள். விரும்பி யாங்கு பாடி ஆடுவார்கள். அருகில் நிற்பவரைக் கைகூப்பித் தொழுவார்கள். உறங்குவார்கள். துள்ளி எழுந்து சோர்வார்கள். சிவந்த வாயில் உள்ள கள்ளை ஒழுக விடுவார்கள். தளர்ந்து தளர்ந்து ஒருவர் மேல் ஒருவர் விழுந்து சாய்வார்கள். இரத்தம் போன்று சிவப்பு ஒளி மிக்க கண்களை மூடிக்கொண்டு சோம்பல் முறிப்பார்கள்.
“அழுகுவர் நகுவர் பாடி ஆடுவர் அயல் நின்றாரைத்
தொழுகுவர் துயில்வர் துள்ளித் தூங்குவர் துவர் வாய் இன் தேன்
ஒழுகுவர் ஒல்கி ஒல்கி ஒருவர் மேல் ஒருவர் புக்கு
முழுகுவர் குருதி வாட்கண் முகிழ்த்து இடை மூரி போவர்”
(களியாட்டுபடலம் 2773)
உள் மனதில் உயிர்ப் புறத்தில் அடக்கி வைத்த மறை பொருட்களைச் சிறிதும் தயக்கமின்றி கொட்டியது.
கள்ளுண்டதால் பெண்களது கரிய நீண்ட குவளை மலர் போன்ற கண்கள் சிவப்பேறின. செங்கழுநீர் மலரும், செங்கிடைச் செடியும் போலச் சிவந்த வாய்கள் வெளுத்தன. இத்தகைய நிற மாற்றங்கள் மலர்கள் நிறம் மாறிப் பூக்களும் உற்பாதம் போல, படை வலிமையும், வஞ்சகமும் படைத்த அரக்கரின் அழிவைக் குறிக்கும் உற்பதங்கள் ஆயின. கயல் மீனும் கொல்ல வரும் எமனது கூர்மையான வேல் படையும், மன்மத பாணமாகிய நீல மலரும், உவமையாகாத நீண்ட கண்களை உடைய ஆடல் மகளிர் மார்பில் புரளும் பொன் சரட்டையும் காஞ்சி எனும் இடையணியையும், அரைத்துகிலையும், கையிலேக் கொண்டு மேகத்தை நிகர்த்த தம் கூந்தலில் அணியத் தொடங்கினர்.(2776)
இத்தன்மையான காமக் களிப்புச் செயல்களைக் கற்பகப் பந்தலின் கீழ் அரசு வீற்றிருந்து இராவணன் ரசித்துக் கொண்டிருந்தான்.
மானம் காத்த கூந்தல்
மது மயக்கத்தால் சில பெண்களின் கூந்தல் அவிழ்ந்து விழுந்தது. அவர்கள் உடுத்தியிருந்த ஆடையும் கட்டு அவிழ்ந்து, கால்களில் சரிந்தது. அவர்களது மானத்தை, அவிழ்ந்த கூந்தல் காத்தது. கீழோரால் நேரும் குறைபாட்டை மேலோர் மறைத்துக் காப்பாற்றுதல் போல, இடையிலிருந்து சரிந்த ஆடை விழுந்து போகச் செய்யவிருந்த மானத்தை, தலையில் இருந்து சரிந்த கூந்தல் பாதம் வரை தொங்கி, பரந்து இடையை மறைத்துக் காப்பாற்றியது.
இடையைச் சுற்றிய ஆடை சரிந்தது. மேல் முகட்டில் இருந்த கூந்தல் சரிந்து மானம் காத்தது. மேல் வளர்ந்த கூந்தலை மேலோர்க்கும், கீழிருந்து சரிந்த ஆடையைக் கீழோருக்கும் ஒப்புமை கூறியுள்ளார் கம்பர்.
“கூந்தல் அம்பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்து போய் இறங்க யாணர்ப்
பூந் துகிலோடும் பூசல் மேகலை, சிலம்பு பூண்ட”
(களியாட்டுப்படலம்2768)
இராமன், சீதையைக் கோபித்தல்
இராம, இராவண யுத்தம் முடிந்த பிறகு சீதையைக் கண்ட இராமன் பலவாறாகப் பேசினார். துன்பமற்றவளாகத் தோன்றுகின்ற சீதையே, நீ அரக்கர்களிடம் தங்கி இருந்தமையால், அவர்கள் உண்ணும் உணவாகிய பிராணிகளின் அமிழ்தத்திலும் இனிதான மாமிச உணவை உண்டிருப்பாய், அவர்கள் குடிக்கும் கள்ளை, நீயும் போதுமான அளவு குடித்திருப்பாய். இவ்வாறு உயிரோடு இருந்தாயே. இனி எங்களுக்கும் ஏற்றதாகிய நீ உண்ட விருந்து இருக்கின்றதோ சொல்லுவாயாக என்று இராமன் கடிந்து .
“மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை
அறுந்தினையே நறவு அமைய உண்டியே”
(மீட்சிப்படலம் 3956)
கூறியதை அறியமுடிகிறது.
அனுமன் கண்ட அரக்கியர் நிலை
ஊர்தேடு படலத்தில் இலங்கையில் அனுமன் அரக்கியர்களைக் கண்டார். அந்த அரக்கியர்கள் ‘ பாம்பின் படம்’ என்று கூறத்தக்க கொடுமையான கள்ளையும், இரத்தத்தையும் உண்டு பித்தர்களைப் போலக் குழறி, மனத்தை நிலைநிறுத்த முடியாமல் தடுமாறியமையை,
“நச்சு எனக் கொடிய நாகக்கள்ளோடு குருதி நக்கி
பிச்சரின்பிதற்றி அல்குல் பூந்துகில் கலாபம் பீறி”
(ஊர் தேடு படலம் 283)
என்ற பாடலடி மூலமு அறியமுடிகிறது.
மேலும் தயிரின் நிறத்தைப் பெற்ற மிக்க காழ்ப்புடைய கள் உள்ளத்தைத் தளரச் செய்ய, அறிவு தடுமாற்றமடைந்து. ஓய்ந்து போகிற அரக்கியரையும் கூறியுள்ளார்.
களியாட்டுப்படலத்தில் மகளிர் மதுவுண்ட நிலையைக் கம்பர் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
அன்பும் ஒருவகை கள்ளின் தன்மை உடையது
கணையாளியைப் பெற்ற பரதன் நீங்கள் செய்த தவத்தால் எங்கள் அண்ணன் வந்தார் என்று அங்கிருந்த அந்தணரைத் தொழுதான். தனக்குக் கீழ்ப் பட்ட சிற்றரசர்களை வணங்குவான். வேலைக்காரிகளை வணங்குவான். நீ செய்த தவத்தினால் உன்னுடைய அண்ணன் வந்துவிட்டார் என்று தன்னைத்தானே தொழுது கொள்வான். ஒன்றும் தோன்றாமல் விம்மூற்றி இருப்பார் ஒரு மரம் போல நிற்பான் இவ்வாறு பரதன் செயல்களை நோக்கினால், அன்பு என்று சொல்லப்படுவதும் ஒருவகை கள்ளின் தன்மையுடையதாகும்.
“வேதியர் தமைத் தொழும் வேந்தரைத் தொழும்
தாதியர்தமைத் தொழும் தன்னைத்தான் தொழும்
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும் நிற்குமால்
காதல் என்றதும் ஓர் கள்ளின் தோன்றிற்றே”
(மீட்சிப்படலம்4143)
முடிவுரை
கோசலம், மிதிலை, கிட்கிந்தை, இலங்கை உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி கள் அருந்தி மயக்க நிலையில் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. மது அருந்தியதால் மயக்கத்தில், தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாத நிலையில் இருந்துள்ளனர் என்பதும், மது உண்ட மயக்கத்தினால் மகளிர் செய்யும் காமம் சார்ந்த செயல்களையும், கள்ளுண்ட களிப்பினால், தங்கள் கணவரோடு மேற்கொள்ளும் ஊடல்களும், கூடல்களும் தொடர்பான செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. மது அருந்திய சுக்ரீவன் தன் தவறை உணர்ந்து, தாய் என்றும், மனைவி என்றும் வேறுபாடு காணும் அறிவு இல்லை, செய்நன்றி மறந்ததையும், கொடுத்த வாக்கு பிறழ்தல் தன்மை அடைந்ததையும், எண்ணி வருந்தியதையும் இனி மதுவை மனதாலும் நினைக்க மாட்டேன் என்று கூறியதையும் அறிய முடிகிறது. இலங்கையில் கள் உண்டு மகளிர் ஆடை நெகிழ்ந்ததையும், அறியாதவர்களாய் இருந்ததையும், அவர்களின் நீண்ட கூந்தல் அவிழ்ந்து, அவர்களின் மானம் காத்ததையும் அறிய முடிகிறது. இராமன் வருகிறான் என்பதை உணர்ந்த பரதன் மகிழ்ச்சி மிகுதியால் செய்த செயல், அன்பும் ஒருவகை கள்ளின் தன்மையுடையது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. பஞ்சமா பாதகங்களில் ஒன்று என்பதையும் கள் அருந்துவது குற்றம் என்று உத்தம புருஷர்கள் எண்ணியதையும் அறிந்து கொள்ள முடிகிறது. நாட்டுப் படலம், உண்டாட்டு படலம், களியாட்டுப் படலம் மூலமாக கள்ளினால் தோன்றும் மெய்ப்பாடுகளை அறிந்து கொள்ள முடிகிறது.
REFERENCES : துணை நூற்பட்டியல்
- இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை, 2016.
- எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
- கம்பன் புதிய தேடல், அ. அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப்பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
- கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளி பதிப்பகம், சென்னை,2019.
- கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன்,லக்ஷண்யா பதிப்பகம், சென்னை,2019.
- கருத்திருமன். பி,சி.கம்பர் கவியும் கருத்தும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018.
- காசி. ஆ, கம்பரும் திருத்தக்கதேவரும்,தமிழ்ச்சோலைப் பதிப்பகம்,சென்னை, 2010.
- காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாள
- சக்தி நடராசன்.க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு, 2017,
- பழனிவேலு. தா, காலத்தை வென்ற கம்பன், பல்லவி பதிப்பகம், ஈரோடு. 2021.
- பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.