மீன்களை நன்னீரில் வாழ்பவை என்றும், கடல் நீரில் வாழ்பவை என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கெண்டை மீன், கெழுத்திமீன், நெத்திலி மீன், வஞ்ஜ்ரமீன், விலாங்குமீன், செண்ணாங்குனிமீன்,மோவல் மீன், சங்கரா மீன், கிழங்கா மீன், பாறை மீன், விரால்மீன், மத்தி மீன், சால மீன், சீலா மீன் என்று பல வகையான மீன்கள் காணப்படுகின்றன. கம்ப ராமாயணத்தில் கெண்டைமீன்,பனைமீன், கயல்மீன், வாளைமீன், விரால்மீன், இறால் மீன், சேல்மீன், திமிங்கிலம், திமிங்கிலம் ஆகிய மீன்கள் குறித்தும், மீன்களின் தன்மை, இயல்பு குறித்தும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.
உலகின் உயிர்களுக்கு அன்பை விளைவிக்கும் கடவுளான மன்மதனின் கொடி ‘மீன்கொடி’. மூவேந்தர்களில் பாண்டியர்களின் கொடி மீன்கொடி ஆகும்.
மீன்கள் முட்டையிட்டு தம் பார்வையாலேயே குஞ்சு பொறிக்கும் இயல்புடையன.
1.கெண்டைமீன்
தேரையானது தெங்கின் இளம் பாளையை நாரையென்று நடுங்குவதாகவும், கெண்டைமீன் கூரிய நுனியையுடைய ஆம்பல் கொடியை சாரைப்பாம்பு என்று நினைத்துப் பயந்ததாகவும் கம்பர் குறிப்பிடுகின்றார்.
” தேரை வன் தலைத் தெங்கு இளம் பாளையை
நாரை என்று இளங் கெண்டை நடுங்குவ
தாரை வன் தலைத் தண் இள ஆம்பலைச்
சேரை என்று புலம்புவ தேரையே”
(ஆறுசெல் படலம் 927)
உலாவியற் படலத்தில் வெட்டப்பட்டதால், மேலும் தழைக்க முடியாத கரும்பை வில்லாகப் பெற்றுள்ள மன்மதன் செலுத்திய அம்புகள் பாய்ந்தமையால் ஏற்பட்ட புண்கள் நீங்கப் பெறாத நூலிழையும் இடையை செல்ல முடியாமல் நெருங்கிய இளமையான முலைகளை உடைய ஒருத்தி, காதணியில் மோதிப் பிரகாசிக்கும் கெண்டைமீனைப் போன்ற கண்கள், மேகத்தைப் போல நீர்த்திளிகளைச் சிந்த, சோர்வடைந்து, மேகத்தில் பொருந்தாமல் தேகத்தில் பொருந்திய மின்னலைப் போன்ற நுண்ணிடை துவள்வது போலத் துவண்டு நின்றாள்.
“குழை உறா மிளிரும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த”
(உலாவியற்படலம் 1018)
2.கயல் மீன்
மகளிரின் கண்களுக்கு கயல் மீன்களை உவமையாக கூறுவர். மகளிர் கண்களின் ஒளிமிக்க பிறழ்ச்சி தன்மையாலேயே ஆகும். மகளிர் விழியோப்ப செயல்கள் புகழுவதாக கூறுவர். கயல் மீன் வடிவத்தில் முன்னும், பின்னும் ஒத்து சமச்சீர் வடிவமாக இருப்பதால், கண்ணிற்கு நல்ல உவமையாகின்றது. கயல் மீன்களில், செங்கயல், கருங் கயல் என்று மகளிர் கண்களுக்கு ஒப்பிட்டுள்ளார்.
கயல் மீன்களும் தோற்றுப் பயம் கொள்ளவும், பிறழ்கின்ற கண்களை உடையவள் சீதை.
“பின்ற மானப்போர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள்
அன்று அவ் வானத்து உம்பர் அளிக்கும் அமுதுஅன்றி”
(மிதிலைக் காட்சிப்படலம் 510)
“செங்கயல் கருங்கண் செவ்வாய்த்” (நாடவிட்டப்படலம் 798)
கயல் என்பதற்கு ’கெண்டை’ என்று பொருள் கூறுவது வழக்கம்.
3.வாளை மீன்
நன்னீர் மீன்களில் மிக நீளமாக வளரக்கூடியது வாளை மீன். இந்த மீன்கள் ஓரளவு துள்ளும். தீட்டப்பட்ட வாளை போற்றிருக்கும். ஆறடி நீளம் வளரக்கூடியது இதன் குணத்தைக் கொண்டு கற்பனையாக, இது இதன் தென்னம்பாளைக்கு தாவுவதாக கூறினார். எல்லாப் பக்கங்களிலும், தென்னம்பாளை அரியப்பட்டதால் வடிந்த கள்ளைக் குடித்துப் பருத்த வாளை மீன்கள் நிமிர்ந்து எழுந்து செருக்கித் திரியும்.
“பாளை தந்த மதுப் பருகிப் பரு
வாளை நின்று மதர்களும் மருங்கு எலாம்”
(நாட்டுப்படலம் 56)
புனல் விளையாட்டுப் படலத்தில் வாளைமீன்கள் அவர்களுக்கு அருகே துள்ள, அதைக் கண்டு மகளிர் அஞ்சினர்.(புனல் விளையாட்டுப்படலம் 881)
பொய்கையில் அலைகள் தோறும், பாயும் வாளை மீன்கள் காணப்படுகின்றன. கோலம்காண் படலத்தில் குளங்களில் உள்ள வாளை என்னும் பெரியமீன்கள் துள்ள, நீரிலே படிந்துள்ள எருமையின் மூளையையும், முதுகையும் கயல் என்னும் சிறிய மீன்கள் கோவிக் கொள்ள, வலிமை மிக்க வரால் என்னும் நடுத்தர மீன்கள், தென்னை முதலிய மரங்களின் பாளைகள் பிளந்து மலரும்படி மேலெழுந்து பாய்வதற்கு இடமான, மருத நிலவளம் மிகுந்த கோசலநாட்டுக் கொற்றவனே, திருமணத்துக்குப் பொருந்திய நாள் நாளையே ஆகும் என்று சிறந்த தவத்தை உடைய விசிவாமித்திரன் உரைத்தான்.
“வாளை உகள கயல்கள் வாவி படிமேதி
மூளை முதுகைக் கதுவ மூரிய வரால் மீன்
பாளை விரியக் குதி கொள் பண்ணை வள நாடா
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான்”
(கோலம்காண் படலம் 1104)
5. வரால் மீன்கள்
மீன்களில் மிகவும் சுவையுடையதாக கருதப்படுவது வரால் மீன்கள். வரால் மீன் உருண்டு, திரண்டு இருக்கும். உருண்டு திரண்டு இருப்பதாலும் கரிய நிறத்தில் வரிகளும், புள்ளிகளும் இருப்பதனாலும், பிடியின் கை பொருத்தமான உவமையாகும். சீதையின் கணைக்கால் போல் வரால் மீன்கள் இருந்ததாகக் கம்பர் குறிப்பிடுகின்றார்.
’வினைவரால் அரியகோதைப் பேதை மென் கணைக்கால் மெய்யே’(நாடவிட்டப்படலம் 772)
அயோத்தியில் முள் தன்மை பொருந்திய தண்டுகளையுடைய தாமரையின் வெண்ணிறமான முளைகள் முறிந்து போகவும், முத்துகளும் பொன்னும் ஒதுக்கப்படவும், இரத்தினங்கள் சிதறவும், சலஞ்சலம் என்னும் சிறந்த சங்குகள் வாய் விட்டுக் கதறவும், உழுப்படை சால்களில் மீன்கள் துள்ளிக் குதிக்கவும், ஆமைகள் தலையையும், கால்களையும் ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்ளவும், வரால் மீன்கள் மதகுகளில் புகுந்து ஒதுங்கிக் கொள்ளவும் உழவர்கள் வயலை உழுகின்ற கடாக்களை அதட்டி ஓட்டினார்கள்.
“துள்ளி மீன் துடிப்ப ஆமை தலைபுடை கரிப்ப தூம்பின்
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும்”
(நாட்டுப்படலம் 50)
வரால் என்னும் நடுத்தர மீன்கள், தென்னை முதலிய மரங்களின் பாளைகள் பிளந்து மலரும்படி மேலெழுந்து பாய்வதற்கு இடமான மருத நிலவளம் மிகுந்தது.
6.இறால் மீன்
மக்களால் விரும்பி உண்ணப்படும் மீனாகும். நீரில் இது பின்புறமாக நீந்தக்கூடியது.கடல்வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள், கடல் நீரில் கழிவுப் பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் கழிவுப் பொருட்களை கடலில் உள்ள இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன. இவற்றை ’கடலின் தூய்மையாளர்’ என்று அழைப்பர். இது நன்னீரில் வாழும். இது பெரிய தாடைகளை உடையது. வெகு வேகமாகத் துள்ளிக் குதிக்கும் குணமுடையது. ’தாவும் குதிரை துடித்து எழுவதால், இறாலை ஒத்தது’ என்று கம்பர் குறிப்பிடுகின்றார்.
7.சேல் மீன்
கங்கைப்படலத்தில் இராமன், சீதை, இலட்சுமணன் மூவரும் வரும்போது நெற்கதிர்களை மேயும் பருவம் முதிர்ந்த எருமைகள் முற்றப்பெறாத இளங்கதிர்களை உண்பதால், அவற்றிலிருந்து பெருகியப் பால் அவ்வெருமைகளின் கடைவாய் வழியே ஒழுகிக் கால்வாய்கள் போலப் பரவியது. நீர் நிலைகளில் உள்ள தேன் நிறைந்த நீல மலர்களில் தங்கிய வண்டுகள், நீரில் உள்ள சேல் மீன்களும், கயல்மீன்களும் மேலே பாய்ந்து குதிப்பதால் மலரிலிருந்து படர்ந்தன.
“சேல் பாய்வன கயல் பாய்வன செங்கால் மட அன்னம்
போல் பாய் புனல் மடவார் படி நெடுநாடு அவை போனார்”
(கங்கைப் படலம் 617)
8.பனை மீன்
ஊழிக்காலத்துக் காற்றைப் போல, அனுமன் செல்லும் வேகத்தைத் தாங்க முடியாமல், அதற்கு முன் துள்ளிக் கொண்டிருந்த முதலைகளும், மீன்களும் இப்போது துள்ளுதல் ஒழிந்தன. சுறா மீன்கள் வேதனையால் தத்தளித்தன. பனைமீன்கள் இறந்தன. பனைமீன், யானை மீனைப் போல பெரியது.
“துள்ளிய மகர மீன்கள் துடிப்பறச் சுறவு தூங்க
ஒள்ளிய பனை மீன் துஞ்சும் திவலைய ஊழிக் காலின்”
(கடல்தாவு படலம் 22)
அனுமன் கடலைத் தாவும் போது, கடலில் இருந்த முதலை, சுறவு முதலியனவும் ஒள்ளிய பனைமீனும் கரையில் தள்ளப்பட, நீர் கரைகளை மோதின, மற்றும் கடலில் மூழ்கி இருந்த மைந்நாக மலை மேலெழுந்தால், பனை மீன் திமிரோடு துள்ளி மலை மேலிருந்த சுனையை நாடிற்று. பனைமீன் கடலில் வாழும் இந்த பனை மீனும், யானை மீனும் திமிங்கல இனமாகும்.
பனைமீனையே கம்பர் ’தாலமீன்’ என்று ஒரு பாடலில் கூறுகிறார்.
இராமன் எய்த அம்பொடு தால மீன்கள் திரிந்த காட்சி, கூம்புடைய பெரிய மரக்கலங்கள் ஓடுவது போல இருந்தது. பொருட்களை எரிந்து செல்லும்போது சிறிய மீன்கள் கூட்டமாக ஒழிந்தன. அம்பு உடலில் பட்டு இறக்காது திரியத்தக்க ஆற்றல் உடைய கலை மீன்கள் உடலில் தைத்த அம்புகளோடு திரிந்தன.
9.திமில்மீன்
கடலைத் தாவி வரும் அனுமனுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணம் கொண்டு, கடலில் இருந்து உயரே எழுந்தபோது, பனை மீன்களும், திமில் என்னும் மீன்களும் தம் அறிவினால் நடந்ததை தெரிந்துகொண்டு இம்மலையினின்று நீங்காமல், சுனைகளில் தொடர்ந்து துள்ளிக் கொண்டிருக்கவும், மைந்நாக மலை வானைத் தொடுமாறு எழுந்தது.
“நினைவின் கடலூடு எழலோடும் உணர்ந்து நீங்காச்
சுனையில் பனைமீன் திமிலோடு தொடர்ந்து துள்ள”
(கடல் தாவு படலம் 49)
10.திமிங்கிலகிலம்
அனுமன் கடலைத் தாவிச் சென்ற போது, அவன் உடம்பிலிருந்து வீசிய காற்றால், திசைகளின் எல்லை வரையில் பரவி இருக்கும், கடல் முழுதும் கலங்கியது. அதனால் பல யோசனை தூரம், நீண்ட உடம்பினைப் பெற்றன என்று மக்களும், நூல்களும், சொல்லும் திமிங்கிலகிலங்களும் மற்றும் உள்ள மீன்களும் இறந்து மிதந்தன. (திமிங்கிலத்தை விழுங்குவது திமிங்கிலகிலம்)
“ஓசனை இழப்பு இலாத உடம்பு அமைந்துடைய என்னத்
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கில கிலங்களோடும்
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை
வீசிய காலின் வீந்து மிதந்தன மீன்கள் எல்லாம்”
(கடல் தாவு படலம் 37)
11.சுறா மீன்கள்
கம்பர் மீன்களில் சிலவற்றை உவமையாக பயன்படுத்தியுள்ளார். பெரியது சுறா மீனாகும். கம்பர் சுறா வானத்தில் ’கொம்பன் சுறா’ எனப்படும் சுறாவைக் குறிப்பிட்டுள்ளார்.
தாழையின் மடல் போல சுறாவின் கொம்பு இருந்ததாக கம்பர் கூறுகிறார். (பிரம்மாஸ்திரப் படலம் 2435)
வருணன் வருந்த வேண்டும் என்று எண்ணி, இராமன் எய்த நீண்ட அம்புகள் தீயுடன் இடி விழுந்தாற்போலக் கடலில் பாய்வதால், உயிர்விட்ட நிலையில் தீப்பட்ட சுறாமீன்கள் மயக்கமடைந்து கடல் நீரின்மீது நெருங்கி மிதந்தன.
“மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கிச்
செரும வானிடைக் கற்பக மரங்களும் தீய”
(வருணனை வழி வேண்டு படலம் 550)
நீரில் வேகமாக நீந்தி செல்லும் இதன் உடல் வளையக்கூடிய குருத்தெலும்பால் ஆனது. இதற்கு பற்களும், கொம்புகளும் உண்டு. மீன்கள் செதில்களால் சுவாசிக்கும் வாளால் நீந்திச்செல்லும்.
தமது நிறத்தினால் ஒருபுறம் குங்குமப்பூவை ஒத்திருப்பனவும், மற்றொருபுறம் நீல நிறம் பொருந்தியிருப்பனவும், நீரில் வேர்விட்ட பவளக்கொடியினால் சுற்றிக் கொள்ளப்பட்டனவும், செம்பொன் பொருந்தியவுமான தன் சிகரங்களில் விசாலமான முற்றங்கள் தோறும் தம் பெண் துணைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த சுறா மீன்கள் தூக்கம் தெளிந்து பெருமூச்சோடு உலாவும் மைந்நாகமலை வானைத் தொடுமாறு எழுந்தது
(கடல் தாவு படலம் 46)
சுறாமீன் போன்ற அணிகலன்
கடிமணப்படலத்தில் வேலைப்பாட்டில் குறையில்லாத ’கிம்புரி’ என்னும் தொடையில் அணியப்படும் அணிகலன், சுறாமீனின் திறந்த வாயை முகப்பாக உடைய அதன் கண்ணாகப் பதித்த மணியின் ஒளியும் பற்களாக அமைந்த வயிரமணியின் வெள்ளொளியும்,கொண்ட ஒளி மிக்க அந்த முகப்பு, தான் வெளியிடும் பல்நிற ஒளிகளால் திசைகளின் எல்லையை அளந்து காட்டின.
“வீசலின் மகரவாய் விளங்கும் வாள் முகம்
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே”
(கடிமணப்படலம் 1171)
ஊழி காலத்து காற்றைப் போல, அனுமன் செல்லும் வேகத்தை தாங்க முடியாமல் அதற்கு முன் துள்ளிக் கொண்டிருந்த முதலைகளும், மீன்களும் இப்போது துள்ளுதல் ஒழிந்தன. சுறா மீன்கள் வேதனையால் தத்தளித்தன. பனை மீன்கள் இறந்தன. இவற்றைப் பெற்ற கடல் கலங்கி, வீசி எறிந்த அலைகள் அனுமானுக்கு முன்பே இலங்கை நகரத்தின் மேல் மோதின.
“துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அறச் சுரவு தூங்க
ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய ஊழிக் காலின்”
(கடல் தாவு படலம் 22)
12.மகர மீன்கள்
இராமனது கணைகள் தைத்த பெரிய மீன்கள் கடலில் ஓடுகின்றன. கடலில் துள்ளும் சுறா மீன் குருதி வெள்ளத்தில் இட்டு விழுந்து துள்ளும். வாள் பிடித்தக் கைக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. மகர மீன்கள் கடலில் மூழ்கி தோன்றும். மகர மீன்கள் குருதி வெள்ளத்தில் மூழ்கித், தலை எடுக்கும் யானைகளுக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இராமன் ஏவிய அம்பு கடல் மீன்களை எல்லாம் கிழித்து விடவே, அதன் வழி பரவிய குருதியால் அந்திவானகம் தடுத்தல் வலப்புறம் அளக்கர் என்று கடல் சிறப்பிக்கப்படுகிறது. கடலில் குருதி கலந்த பின் கடலில் உள்ள மீன்களும், பவள நிறம் கொண்டன எனக் கூறப்படுகிறது.சில மீன்கள் வெந்து தீய்ந்தன. சில மீன்கள் கரிந்தன. சில மீன்கள் பொரிந்தன.(வருணனை வழி வேண்டு படலம் 555)
வளைக்குள் அகப்பட்ட மீன்கள் மீள முடியாதது போல, இராமனின் அம்பு வளைக்குள் அகப்பட்ட அரக்க சேனை மீள முடியாததாயிற்று.
காணிக்கைப் பொருளான மீன்
குகன், இராமனைப் பார்க்க வரும்போது, தேனும், மீனும் கொண்டு வந்தான். தங்கள் உணவாக அமையும்படி தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய எண்ணம் யாதோ? என்று கேட்டான்.
“இருத்தி ஈண்டு என்னவேலடும் இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்”
(குகப்படலம் 649)
மீன்களின் நடுக்கம்
இராவணன் செயலால் தனக்கும், தன்னை சார்ந்தவருக்கும் அழிவு வரும் என்பதை மாரீசன் உணர்ந்தான். தனது அன்புக்குரிய சுற்றத்தாரை நினைத்து வருந்தினான். மானிட வீரர்களான இராம, இலட்சுமணரை எண்ணி மனதில் குழப்பம் அடைந்தான். ஆழமான பள்ளத்தில் உள்ள நீர் நச்சுத்தன்மை அடையும்போது, அதில் வாழும் மீன் அந்த நீரில் இருந்தாலும் சரி, நிலத்தில் இருந்தாலும் சரி, இறப்பது உறுதி. அந்த மீன்கள் எப்படி நடுங்குமோ அப்படி மாரீசன் நடுங்கினான்.
“வெஞ் சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு
அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால்”
(மாரீசன் வதைப்படலம் 762)
தனி மனிதர்கள் நஞ்சினை பயன்படுத்தி துயரடைவது போலவே நீர்நிலைகளிலும் நஞ்சு கலந்து, நீர் வாழ் உயிர்களையும் அழிவுக்கு உள்ளாக்குகின்றனர். இதனைப் பள்ளத்தில் உள்ள நீரின் கண் நஞ்சு கலந்த நிலையில் அங்குள்ள மீன்கள் துடித்தலென சீதையைக் கவருதல் பற்றி எண்ணிய மாரீசன் மனம் துடித்ததை உவமை வழி அறிய முடிகிறது.
மீன்களின் அச்சம்
கொக்கின் நிழலைக் கண்டு மீன்கள் அஞ்சும் என்று கம்பர் கூறுகிறார்.
” ஏலும் நீள்நீழ லிடையிடை எறித்தலில் படிகம்
போலும் வார் புனல் புகுந்துளவாம் எனப் பொங்கி
ஆலும் மீன்கணம் அஞ்சின அலம்வர வஞ்சிக்
கூல மா மரத்து இருஞ் சிறை புலர்த்துவ குரண்டம்”
(பம்பைப் படலம் 19)
நாரையின் மயக்கப்பார்வை
மிதிலை நகரத்தில் வயல்களில் கழைப் பறிக்கின்ற உழத்தியரின் பிரளுகின்ற கண்கள், நீரில் பிரதிபலிக்கின்றன. அதைப் பார்த்த நாரைகள் கயல் மீன் என்று எண்ணி, அவற்றைக் கொத்தி, அவை மீன்கள் அல்ல என்பதை அறிந்து, வெட்கமடைகின்றன. இப்பார்வையைக் கம்பன்
“கள்ள வாள் நெடுங்கண் நிழல் கயல் என கருதா
அள்ளி நாணுறும் அகன் பணை மிதிலை நாடு அணைந்தார்”
(அகலிகைப்படலம் 463)
என்று பாடுகிறார்.
பெண்களின் அச்சப் பார்வை
கங்கையில் செல்லும் நாவாயின் செலவு மீன்களின் செலவை ஒத்துள்ளது. கங்கை ஆற்றில், மகளிர் ஏறி செல்லும் மரக்கலங்கள், செல்லும் வேகத்தில் ஒன்று மற்றொன்றோடு, மோதின. அக்கலத்தில் உள்ள பொன்னாழி என்ற குலை அணிந்த மகளிர் மனம் கலங்கி, மயங்கி அச்சமுற்று, இரண்டு பக்கமும் பார்த்தனர். இவ்வாறு இரண்டு பக்கம் அவர்களின் கண்கள், அசைகின்ற நீர்ப் பெருக்கு தள்ளி விலை கெட ஆற்று நீர் அங்கும், இங்குமாக கலங்குவதனால் பயந்து, துள்ளுகின்ற மீன் கூட்டத்தை ஒத்துள்ளன. கலத்தின் மோதலால் பயந்து மிளிரும், விழரும், மிடறும் மகளிர் கண்களுக்கு கலம் செல்லும் வேகத்தில், தள்ளப்படும் நீரில் பயந்து துள்ளும் கயல் மீன்கள் போல, இருந்தன.
“கலங்கலின் வெருவிப்பாயும் கயற்குலம் நிகர்த்த கண்கள்”
(கங்கை காண் படலம்1039)
நீரிலே தான் மீன் வாழும்
இராமனுடன் காட்டுக்கு நானும் வருவேன் என்று இலட்சுமணன் கூறும் பொழுது, நாணை பூண்ட வில்லை உடையவனே ஆராய்ந்து பார்த்தால் குளத்திலே நீர் இருந்தால்தான் மீன்களும், கருங்குவளைகளும், அங்கே இருப்பவையாகும். உலகம் இருந்தால் தான், உயிர்கள் யாவும் இருப்பவை ஆகும். நானும், சீதா தேவியும் யார் இருந்தால் இருப்பார்கள் ஆவோம் நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டான்.
“நீர் உள எனின் உள மீனும் நீலமும்
பார்உள எனின் உள யாவும் பார்ப்புறின்
நார் உளதனு உளாய் நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம் அருள்வாய் என்றான்”
(நகர் நீங்கு படலம் 444)
வற்றிவிட்ட குளத்தில் மீன்
தசரதன் இறந்தவுடன், கோசலை எதனாலும் தாழ்வு பெறாத அரசன் கருணை இல்லாதவனாகி, இப்பொழுது எங்களை விட்டு, தான் மட்டும் தனியாகப் போய்விட்டான் என்று கூறி, வானத்திலிருந்து வரும் மழை நீர் இல்லாமலும், தான் வாழும் நீர்நிலையில் காற்று, நீர் இல்லாமல் முற்றிலும் வற்றிவிட்ட குளத்தில் துன்புற்ற ஒரு மீனைப் போல, உடல் நடுங்கி விழுந்தாள்.
“தானே தஞ்சம் இலா தான் தகைவு இல்லான்
போனான் போனான் எங்களை நீர்த்து இப்பொழுது என்னா
வான்நீர் சுண்டி மண் அற வற்றி மறு குற்ற
மீனே என்ன மெய் தடுமாறி விழுகின்றாள்”
(தைலமாட்டுப்படலம் 587)
மாயை என்னும் சுறா மீன்கள்
தசரதன் இறந்தவுடன் அவனுடைய 60,000 தேவிமாரும் வந்து புலம்புகின்றனர். அம் மகளிர் புதல்வன் இராமனைப் பிரிந்தும் வெறுக்கத்தக்க சொல்லாலே தன் உயிரை இழந்தும், தனது இறுதிக்காலம் வரையில் சத்தியம் காத்தவரான தசரதனது அழகிய உடலை பற்றிக்கொண்டு, அதை விட்டு பிரியாதவராக இருந்தனர். அவர்கள் பித்து கொள்வதற்கு காரணமான மண் முதலிய மாயை என்னும் சுறா மீன்கள் உலாவும் பிறவி என்னும் பெரிய கடலை கடக்குமாறு செலுத்தி மீண்டுள்ள மரக்கலத்திலே தாமும் செல்ல போகின்ற அவர்களை ஒத்திருந்தனர். கைத்த சொல்லால் உயிரிழந்தும் புதல்வர் பிரிந்தும் கடை ஓட வைத்த வேந்தன் திரு உடம்பைப் பிரியர் பற்றி விழறால் பித்த மயக்கு ஆம் கரவு எரியும் பிறவி பெரிய கடல் கடக்க உயிர்த்து நீண்ட நாவாயில் தாமும் போவார் போகின்றார். (596 தைலமாட்டு படலம்)
சுறா மீன் பித்த மயக்கு மூன்று ஆனவன் பொன் பெண் ஆசைகள் ஆகும் மூவாசை உண்டாக்குவது அவிச்சை. அவிச்சை என்பது அகங்காரம், அவா, விளைவு, வெறுப்பு எனும் நன்குடன் இணைந்தது இவற்றைப் ’பஞ்சகலேஷம்’ என்று கம்பர் குறிப்பிடுவர்.
பித்த மயக்கு ஆம் சுரவு எரியும் பிறவி பெரிய கடல் கடக்க 19 11
என்னும் தொடரின் வழி பித்த மயக்கை சுறா என்றார். தசரதன் உடல் மரக்கலம் போன்று இருந்தது. அவன் இராமன் காடு அடைந்தான் என்பதைக் கேட்டவுடன், அப்படகு வழி அவன் மேலுலகம் எனும் கரை அடைந்தான். அவனது தேவிமார் பலர் அவனது உடலாகிய மரக்கலத்தை பற்றியிருந்தனர்.
மச்சாவதாரம்
இராமன் காட்டிற்கு செல்லும் பொழுது இராமன் ஏரிச்சென்ற அந்த சிறந்த தேர் பக்கங்களில் எல்லாம் நீர் பெறுகிய வாய்க்கால் போல தொடர்ந்து செல்லுமாறு பின் தொடர்ந்து வந்தவர்களின், கண்கள் சிந்திய வெம்மை பொருந்திய கண்ணீர் வெள்ளத்தில் மெல்ல சென்றதால், ஏழு உலகங்களும் ஒன்றாகும்படி பெருகிய பிரளய கால பெருங்கடலில், உலகத்து உயிர்கள் உயிரி பெறுமாறு நீந்துகின்ற தெய்வ மீனை மச்சாவதாரம் கொண்ட திருமாலை ஒத்தது. (தைலமாட்டுப் படலம் 526)
மீன் அரசன் திமிங்கலம்
வானரர் களம் காண் படலத்தில் ஒழுகிப் பாய்கின்ற மூன்று மதநீர்களையுடைய யானைகள் உயிருடன் கூடியிருந்தும், தலைத் தூக்கி எழ முயன்றும், இராமனின் அம்பு பட்டதால் எழுந்திருக்கமாட்டாமல் இரத்த வெள்ளத்தில் மூழ்கியது.இதுகாறும் பழகியிராத பல அலைகள் மறித்து விழப்பெற்றக் கடலில் முழுகுவதும் வெளியே தோன்றுவதுமான மீன் அரசை (திமிங்கலத்தை) ஒத்திருக்கப் பெற்ற இயல்பைக் காணுங்கள் என்று கூறுகிறான்.(வானரர் களம்காண் படலம் 3259)
சுறாமீனின் அச்சம்
சகரப்புத்திரர்களால் தோண்டப்பட்ட கடல்தன் யானைப் பிணங்களை அடித்துச் செல்லும் இரத்த நீர்ப்பெருக்கும் தடுமாறுவதனால் அங்கு வந்த சுறாமீன்கள் அந்த யானைகள் கண்டு மலையைப் போன்ற இவை யாவை என உள்ளத்துள் அஞ்சித் தம் இருப்பிடம் நோக்கிச் சென்றனவற்றைக் காணுங்கள் என்று கூறினான்.( வானரர் களம்காண் படலம் 3558)
களிப்படைந்த மீன்கள்
அயோத்தியில் கரும்பாலைகளில் இருந்து வெளிவந்த கருப்பஞ்சாறு என்னும் தேனும், தென்னை, பனை முதலியவற்றின் அரியப்பட்ட நுனிகளையுடைய பாளையில் இருந்து தோன்றும் கள் என்னும் தேனும், சோலைகளில் உள்ள பழங்களின் சாறு என்னும் தேனும், தேன் கூட்டிலிருந்து ஒழுங்காக, ஒழுகுகின்ற தேனும், மக்கள் அணிந்த மலர் மாலைகளில் இருந்து சிந்திய தேனும்,ஒன்று சேர்ந்து அளவு கடந்து ஓடி, கப்பல் இயங்கும் கடலிடையே சென்று சேர்ந்தன. அப்பல்வகைத் தேன்களைக் கடலில் உள்ள மீன்கள் அனைத்தும் உண்டு களிப்படைந்தன.
“மாலைவாய் உகித்த தேனும் வரம்பு இகந்து ஓடி வங்க
வேலைவாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ”
(நாட்டுப்படலம் 41)
மீன்களின் துயரம்
எழுந்த செந்நிறமான அம்புகள் தம் மார்புகள்தோறும் பட்டதும் அளவில்லாத மகரமீன்கள் குருதியைக் கக்கி இறந்தன. இராமன் எய்த அம்புகள் தொடர்ந்து ஊடுருவியதால், திமிங்கிலங்களும், திமிங்கிலகிலங்களும் சிதறுண்டு பலத் துண்டுகளாய் துணிவுபட்டன.(வருணனை வழி வேண்டு படலம் 552)பெரிய மலை போன்ற பெருத்த மீன்களும், ஓரிடத்திலும் உயிரைத் தாங்கி நிற்கமுடியாதவையாகி, நீரில் புகுந்து தீயும். இந்தக் கடல்நீரைவிட நல்லதாகும் என்றுகூறித் தரையில் குதித்துத் துடிக்கும் உடலை உடையவை ஆயின.(வருணனை வழி வேண்டு படலம் 577)
பிறப்பும் இறப்பும்
பொய்கையில் நீர்க்காகங்கள் நீரில் மூழ்கி மீன்களோடு மீண்டும் மேல் எழுந்து வரும் காட்சியினை, மக்களுக்குப் பிறப்பும், இறப்பும் இத்தகையவை மாறி மாறிவருவனவாகும் எனக்கூற முற்படுகிறார்.
“எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன
கவ்வு மீனொடு முழுகின எழுவன காரண்டம்”
(பம்பைப்படலம் 16)
படைக்கலன்கள் மீன்கள் போல ஒளிர்தல்
ஆரவாரம் செய்வதால், அலைத்தலால் கண்டவர் சோர்வடையும்படி, எல்லாப் பக்கமும் பருத்து தோன்றுவதால், கருநிறத்தோடு திகழ்வதால், வலிமை பொருந்திய படைக்கலன்கள் மீன்கள் போல, ஒளி விட்டு விளங்குவதால், வலிமை பொருந்திய அரக்கரும், கடைந்தபோது கலக்குகின்ற கடலைப்போல இருந்தனர். அக்கடலைக் கடையும் மந்தரமலையைப் போல அனுமன் இருந்தான்.
“மிடல் அயில் படை மீன் என விலங்குகளின் கலங்கும்
கடல் நிகர்த்தனர் மாருதி மந்தரம் கடுத்தான்.”
(கிங்கரர் வதைப் படலம் 800)
மீன்களும் நாறின
புனல் விளையாட்டுப் படலத்தில் தூய அறிவுள்ள ஞானிகளோடு பழகிய சாதாரண மக்களும், அப்பழக்கத்தால் மிகுந்த ஞானம் உள்ளவர் ஆவர்.அதைப்போல, நீராடிய மகளிருடன் தொடர்பு கொண்டதால், அந்நீருல் உள்ள மீன்கள் எல்லாம் மகளிரின் கூந்தலில் உள்ள தேன் மணமும், கஸ்தூரி மணமும், தேக்கு, அகில் ஆகியவற்றின் புகை மணமும் பெற்று வாசம் வீசின.
“தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும்
மீனும் நாறின வேறு இனி வேண்டுமோ”
(புனல் விளையாட்டுப் படலம் 897)
இறந்தன மீன்கள்
இராமன் விட்ட அம்புகளால் துண்டாக்கப்பட்ட அரக்கருடைய வேற்படையும், வாட்படையும் மேலே கிளம்பி விரைந்து, நீர்ப்பெருக்கைக் கொண்ட கடலிடத்தே பொருந்தும் போது, தம்மிடம் நெருங்கிய வெப்பமானது அதிகரிக்க, சுறுசுறு என்னும் ஒலியெழப் பருகியதால் அந்தக்கடல் நீர் வற்ற, அதில் வசிக்கும் மீன்கள் உயிர் நீங்கி மண்ணில் செறிந்தன.
“மற்ற நீர் வறத்து மீன் மறிந்து மண் செறிந்தனவால்”
(மூலபலவதைப்படலம் 3328)
முடிவுரை
கம்பராமாயணத்தில் கெண்டை மீன், கயல்மீன், வாளை மீன், வரால்மீன்,இறால் மீன், சேல் மீன், பனைமீன், திமில்மீன், திமிங்கிலகிலம், சுறாமீன், மகரமீன் ஆகிய மீன்கள் குறித்தும், காணிக்கைப் பொருளான மீன், மீன்களின் நடுக்கம், கொக்கின் நிழலைக் கண்டும் மீன்கள் அஞ்சுவது,நீர் இருந்தால் தான் மீன்கள் வாழும், வற்றிவிட்டக் குளத்திலே மீன்கள் துன்புறும், மாயை என்னும் சுறா மீன்கள், திருமால் மச்சாவதாரம் எடுத்தல், பல்வகையான தேன்களை உண்ட மீன்கள் களிப்படைந்தன. படைக்கலன்களும் மீனைப்போல ஒளிர்ந்தன. நீரே மணத்ததால் மீன்களும் மணத்தன, என்பன போன்ற மீன்களோடு தொடர்புடைய உவமை குறித்த செய்திகளையும் அறியமுடிகிறது.
துணை நூற்பட்டியல்
1.இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை,2016.
2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் , புதுச்சேரி, சென்னை.
3.கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
4. எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளிபதிப்பகம், சென்னை,2019.
6. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5,
6,7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
7. செல்வம்.கோ,கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை 2016.