பண்டைத் தமிழரின் வாழ்வியலானது பண்பாட்டுக் கூறுகள் மிகுந்ததாகும். தமிழர் உயர்ந்த ஒழுக்கங்களைத் தம் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இத்தகைய மேலான வாழ்வியலுக்குச் சான்றாக அமைவன சங்க இலக்கியங்களாகும். அவை மனித வாழ்வியலை அகம் புறம் என இருதிறத்ததாய்ப் பகுத்துக் காட்டுகின்றன. பண்டைத் தமிழரின் அகவாழ்வையும் அதன் சிறப்பியல்புகளையும் எடுத்துக்கூறும் நூலாகக் குறுந்தொகை அமைகிறது. குறுந்தொகையில் அமைந்துள்ள தமிழர் வாழ்வியல் பற்றிய கருத்துக்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
குறுந்தொகை
சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்றாக அமைவது குறுந்தொகையாகும். இந்நூல் குறுகிய அடிகளில் ஆழமான கருத்துகளைக் கூறும் நூலாக அமைகிறது. இக்குறுந்தொகை நானூறு பாடல்களைக் கொண்டதாதலின் குறுந்தொகை நானூறு எனவும் வழங்கப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். தொகை நூற்களுள் குறுந்தொகைக்கெனத் தனித்த இடமுண்டு. இதனை “நல்ல குறுந்தொகை” என்ற பழம்பாடல் பதத்தால் அறியலாம். தொகை நூற்களுள் சான்றோரால் மிகுதியும் எடுத்தாளப்பட்ட பெறுமை குறுந்தொகைக்கு உண்டு. இது மனித வாழ்வின் பல நுட்பமான கூறுகளை இனிமையுற எடுத்துக்காட்டியுள்ளது.
இல்லறத்தில் புரிதல்
தமிழர் சுட்டும் அகம் புறம் ஆகிய இருநிலைகளுள் மனத்தை அடிப்படையாகக் கொண்ட அகமே புறத்திற்கும் அடிப்படை என்பதை “அகத்தை யொத்தே புறம் (வாழ்வு) அமைகின்றது”1 எனும் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் கருத்தால் உணரலாம். அகமானது இல்லற வாழ்வியலைக் கூறுவது. தமிழர் பண்பாட்டில் உயர்ந்த நிலையில் இருப்பது இல்லறமாகும். துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. திருக்குறள் இல்லறம் துறவறம் ஆகிய இரு வாழ்வியல் நெறிகளுள் இல்லறத்தை முதன்மைப்படுத்தியுள்ளது. இதனை “திருக்குறள், வாழ்வியலை வகையுற விளக்கப் போந்து, இல்லறத்திற்கே முதன்மை கொடுக்கின்றது”2 எனும் சி. இலக்குவனார் கூற்றால் அறியலாம். இல்லறத்தைப் பேணுகின்ற கணவனும் மனைவியும் ஒத்த அன்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மனைக்கு அழகென அமைவது தலைவனும் தலைவியும் தம்முள்கொண்ட புரிதலாகும். இப்புரிதலைக் குறித்து குறுந்தொகையில் ஓரம்போகியார் கூறும் பொழுது,
“காஞ்சியூரன் கொடுமை
கரந்தன ளாகலி னாணிய வருமே” 3
எனப் பாடுகின்றார். இப்பாடலில் தலைவன் தலைவியினிடத்து ஊடல் கொண்டு தலைவியைக் கடிந்துரைக்கின்றான். புறத்தே சென்ற தலைவன் மீண்டும் இல்லத்திற்குத் திரும்பும்போது தாம் காலையில் கொண்ட ஊடலின் காரணமாகத் தலைவி வருத்தம் கொண்டிருப்பாள். தன்னிடத்து உரையாடமாட்டாள் என்று நினைத்தவாறு இல்லத்திற்குள் புகுகின்றான். அச்சமயம் தலைவியானவள் காலையில் நிகழ்ந்த ஊடலைச் சிறிதும் நினையாதவள் போல் இயல்பாய் நடந்து கொள்கிறாள். இச் செயலைக் கண்ட தலைவன் தான் செய்த தவறை நினைந்து நாணுகிறான். இவ்விடத்து இல்லறத்தார் பேணுகின்ற உயர்நெறியாகிய அன்பும் புரிதலும் எடுத்துரைக்கப்படுகிறது.
இல்லறத்தில் இருக்கின்ற தலைவனும் தலைவியும் ஒருவர் சொற்படி மற்றொருவர் கேட்டு நடத்தல் சிறப்பான ஒன்றாகும். தோலால் செய்த பாவையைக் கண்ணாடிக்குள் வைத்து கயிற்றால் இயக்கும்போது அப்பாவையானது கை, கால்களைத் தூக்கி ஆடுகிறது. இதற்குப் பொம்மையாட்டம் அல்லது பாவைக்கூத்து என்ற பெயர் வழங்கப்படுகிறது. கையையும் காலையும் ஆட்டிவைத்தபடி ஆடுகின்ற அந்த பாவையைப் போல் மனைவியானவள் சொன்னபடி அந்தக் கணவன் நடத்தல் வேண்டும் எனக் குறுந்தொகை கூறுகிறது. இதனை,
“கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே” 4
என்ற பாடலானது எடுத்துரைக்கிறது. இது அன்பின் அடிப்படையில் இல்லறம் சிறப்புற அமைதற் பொருட்டு அறத்தின் பாற்பட்டு அமையவேண்டிய நெறியாகும்.
நம்பிக்கை
பண்டைய தமிழர் தம்முடைய வாழ்க்கையில் சகுனம் பார்த்தல், நற்சொல் கேட்டல், தெய்வக்கடன் என்பன போன்ற நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர். இதில் சகுனம் பார்த்தலை நிமித்தம் ஆராய்தல் என்றும் கூறுவர். புதிதாக ஒரு செயலைத் தொடங்கும் பொழுது சகுனம் பார்த்தல் என்னும் வழக்கு இருந்து வருகிறது. இதே போன்று தெய்வக் கடன் என்பது தாம் நினைத்த காரியம் நிறைவேற கொற்றவையை வழிபடுதலாகும். எண்ணிய காரியம் நிறைவேறிய பின் தெய்வ பூசை செய்து கொற்றவையை வழிபட்டு தெய்வக் கடனை முடிப்பது பழந்தமிழர் மரபாகும். இதனை,
“ விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
புள்ளு மோராம் விரிச்சியு நில்லாம்” 5
என்ற பாடலானது உணர்த்துகிறது. இது தமிழரின் பண்பாட்டு அமைவினைக் காட்டுவதாக அமைகின்றது. தமிழர் வாழ்வியலில் இடம்பெற்றிருந்த பல்வகை நம்பிக்கைகளையும் எடுத்துக் கூறுவதாக மேற்கண்ட பாடலடிகள் அமைகின்றன.
சூளுரைத்தல்
சூளுரைத்தல் எனும் பதம் வாக்களித்தல், உறுதியளித்தல் என்னும் பொருளைத் தருகிறது. இவ்வழக்கு நாட்டுப்புற வழக்குகளில் முதன்மையானதாகும். ஏதேனும் ஒரு செயலைச் செய்வதன் பொருட்டு சூளுரைத்தவர் அச்செயலை செய்யாது ஒழியின் அவர்களைத் தெய்வம் வருத்தும் என்ற நம்பிக்கை பழந்தமிழர்களிடம் காணப்பட்டது. இதன் பயனாய் சூளுரைத்தவர், எச்செயல்புரியினும் இச்செயல் முதன்மை எனச் சிரமேற்கொண்டு தாமுரைத்த சூளினை நிறைவேற்றுவர். இக்கருத்தைக் குறுந்தொகை உரைக்கும் பொழுது தலைவன் வரைவு மேற்கொள்வதாகக் கூறிச் சூளுரைத்த காலம் கடந்தும் தலைவியை வரைந்து கொள்ளாது காலம் தாழ்த்துவானாயின் தெய்வம் அவனை வருத்தும் எனத் தோழி கூறுவதாக,
“தொண்டி யன்னவென் னலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே” 6
என்ற பாடலானது அமைந்துள்ளது. தலைவி களவொழுக்கத்தில் காதலித்த தலைவனையே இல்லற வாழ்வின் கணவனாகக் கரம்பிடிக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இந்த இடித்துரைப்பினைத் தோழி தலைவனிடம் கூறுகின்றாள். காதல் வாழ்வின் உண்மையையும் கற்பு வாழ்வின் அறத்தையும் மக்கள் அகவாழ்வின் உன்னதத்தையும் இதனால் உணரலாம்.
மடலேறுதல்
தலைவியின்பாற் காதல் கொண்ட தலைவன் தன் காதலுணர்வை அவளுக்கு வெளிப்படுத்த மடலேறுதல் நிகழ்த்துவான். மடலேறுகின்ற தலைமகன் எருக்கம் பூவை தலையில் கண்ணியாகத் தொடுத்து அணிந்துகொண்டு பனங்கருக்கினால் செய்த குதிரை மீதேறி ஊரார் அறியும்படி தன் காதலை வெளிப்படுத்துவான். இதனை,
“பொன்னே ராவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூன் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க வேறி நாணட்
டழிபட ருண்ணோய் வழிவழி சிறப்ப” 7
என்ற பாடலால் அறிய முடிகிறது. பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் மடலேறுதல் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்று உரைக்கிறது. பக்தி இலக்கியக் காலத்தில் திருமங்கையாழ்வார் தமது பாசுரத்தில் பெண்களும் மடலேறுவதாகப் பாடியுள்ளார். மடலேறுகின்ற மரபு பழந்தமிழர் கைக்கொண்ட பழக்கங்களுள் ஒன்று என்பது மேற்காண் சான்றினால் பெறப்படுகிறது.
வேலன் வெறியாடல்
தலைவன் மீது காதல் கொண்ட தலைவி தன் இயல்பு நிலையிலிருந்து மாறுபட்டு பித்துப் பிடித்தவள் போல காணப்படுவாள். தலைவியின் இந்நிலை கண்ட நற்றாய் தன் மகள் அலகையின் பிடியில் சிக்கினால் போலும் என எண்ணி வேலன் வெறியாடல் நிகழ்த்த ஏற்பாடு செய்வாள். வேலன் வெறியாடலில் வேலன் என்பது பூசாரியைக் குறிக்கும். வேலன் தம்மீது முருகன் இறங்கியதாகக் கூறி ஆரவாரமிடுவான். வாழையிலையில் நெற்பரப்பி அதில் தலைவி ஆசையுடன் வளர்த்த ஆட்டுக்குட்டியின் தலையை வெட்டி பலியிட முற்படுவான். அச்சமயம் தலைவி தம் களவை வெளிப்படுத்தி அவ்வாட்டுக்குட்டியை மீட்டுக்கொள்வாள். இவ்வேலன் வெறியாடலை,
“மறிகுர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச்
செல்லாற்றுக் கவலை பல்லியங் கறங்கத்
தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா
தெய்வம் பலவுடன் வாழ்த்தி
பேஎய்க் கொளீஇய ளிவளெனப் படுதல்” 8
என்ற பாடலானது எடுத்தியம்புகிறது. இவ் வேலன் வெறியாடல் என்பது இசைக்கருவிகளை முழக்குதல் தெய்வத்தை வாழ்த்துதல் போன்ற நிகழ்வுகளும் அரங்கேற்றப்படுகிறது இவ்வழக்கம் இன்றும் நாட்டுப்புற மக்களிடையே குறிகேட்டல் என்ற முறையில் வழங்கப்படுகிறது.
கல்வி நிலை
பண்டைத் தமிழச் சமுதாயம் கல்வி பற்றிய மேலான கொள்கைகளைக் கொண்டிருந்தது. ஆண் பெண் என இருபாலருமே கல்விகற்றிருந்த நிலையைச் சங்க இலக்கியங்கள்வழி அறியமுடிகிறது. எந்நிலைக்குச் சென்றேனும் கல்வியைத் தவறாது பெறல் வேண்டும் என்ற உயரிய நோக்குடையதாகப் பண்டைத் தமிழ்ச் சமுதாயம் விளங்கியதை,
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே” 9
என்ற புறநானூற்று அடிகள் காட்டுகின்றன. கல்வியானது ஒருவனைப் பல்வேறு எல்லைகளைக் கடந்தும் வாழ்விற்கும் சிறப்பிற்குரியது என்பதை தமிழ்ச் சான்றோர் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு எடுத்துக்கூறி கற்பதற்கு நெறிப்படுத்தினர் என்பதை,
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு” 10
என்ற குறட்பா விளக்குகின்றது. பழங்காலத்தில் கல்வியைப் பெற விரும்பும் மாணாக்கர்கள் குருவின் இருப்பிடம் நாடிச் சென்று கலை இலக்கியங்களைப் பயின்றதோடு, தமக்கு வேண்டிய உணவை தானே தேடி உண்ணும் வகையில் இரந்துண்டு வாழ்ந்தனர் எனக் குறுந்தொகை எடுத்துரைக்கிறது. இதனை,
“அன்னா யிவனோ ரிளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூ ணிரம்பா மேனியொடு
விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே” 11
என்ற பாடலால் அறிய முடிகிறது. இப்பாடலில் கல்வி கற்கின்ற மாணாக்கர்கள் செவிக்கு உணவு இல்லாத போதே வயிற்றுக்கு உணவு நாடிச் செல்வார்கள் என்றும், இக்காரணத்தினாலேயே உடல் மெலிந்து காணப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மெய் வருத்தம் பாராது கல்வியை நாடிச்சென்று பணிவுடன் அறக்கடைமையாற்றி கற்றவர்கள் தமிழர்கள் என்பது இதனால் விளங்கும்.
பண்டைத் தமிழர்களது அகவாழ்வினைக் காட்டும் வாழ்வியற் களஞ்சியமாகக் குறுந்தொகை விளங்குகின்றது. களவு கற்பு ஆகிய இருநிலைகளையும் இது நுட்பமாக எடுத்துக் காட்டியுள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்படும் ஊடலானது இயல்பானது. அவ்வூடலால் மனவேறுபாடு மிகாது அதனை மறந்து மனமொன்றி வாழ்தலே இல்லறம் சிறப்பதற்கான வழி என்பதை குறுந்தொகை அழகுறக்காட்டி உள்ளது. பல்வகைப்பட்ட நம்பிக்கைகயின் வழிப்பட்டதே மனித வாழ்வு. அதனடிப்படையில் குறுந்தொகையில் அமையப்பெற்ற நிமித்தம் பார்த்தல், தெய்வ வழிபாடு, படையலிட்டு தெய்வங்களுக்கான கடனை நிறைவு செய்தல், வேலன் வெறியாடல் ஆகிய பண்டைத் தமிழரின் நம்பிக்கைகள் காட்டப்பட்டுள்ளன. தலைவன் சூலுரைத்ததைத் தோழி சுட்டிக்காட்டி இடித்துரைக்கும் தன்மையும் தலைவன் மடலேறுதல் குறித்த பதிவும் தொல் தமிழர் தாம் தமது வாழ்க்கைத்துணையாக மனதில் நினைந்தாரையன்றி மாற்றாரை மணத்தல் கூடாது என்ற அகவாழ்வின் உன்னத நிலையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. மெய்வருத்தம் பாராமல் எந்நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய கல்விச் சிந்தனை முகிழ்த்து அது பழந்தமிழரின் வாழ்வியலை அணிசெய்திருந்த பாங்கினைக் குறுந்தொகை சிறப்புற எடுத்துக்காட்டியுள்ளது. இவ்வாறு குறுந்தொகை காட்டியுள்ள பண்டைத் தமிழரின் வாழ்வியற் கூறுகள் எக்காலத்து மக்களையும் வாழ்வின் நுட்பமான இன்பங்களை விளக்கிக்கூறி நெறிப்படுத்தும் தன்மையினவாய் அமைந்துள்ளன என்றால் அது மிகையாகாது.
சான்றெண் விளக்கம்
வ.உ.சிதம்பரம்பிள்ளை, அகமே புறம் , இரண்டாம் பதிப்பு – 1916,பக்கம் – 17
சி. இலக்குவனார், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்க காலம்), பக்கம் – 52
குறுந்தொகை, பா.எ. – 10
மேலது, பா. எ. – 8
மேலது, பா. எ. – 218
மேலது, பா.எ – 238
மேலது, பா. எ – 173
மேலது, பா. எ – 263
புறநானூறு, பா.எ – 183
திருக்குறள் – 397
குறுந்தொகை, பா. எ – 33
மின்னஞ்சல் : tamilathi3110@gmail.com