Kalanjiyam - International Journal of Tamil Studies

ISSN : 2456-5148

புறநானூற்றில் கல்வெட்டுகள் வழி அறியலாகும் ஊர்கள்

முனைவர் ப. மகேஸ்வரி,

Keywords:

Abstract:

தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு ஆகும். இந்நூலில் காணப்படும் எண்ணங்களும் சொற்களும் இலக்கணவொழுக்கமும் இலக்கியச்செறிவும் பெற்றுத் திகழ்கின்றன. தமிழ் மக்களின் நல்லொழுக்கத்தையும் சீரிய நாகரிகப்பண்பாட்டையும் பல்வேறு ஊர்களின் பழைமயையும் விளக்கி நிற்கின்றன. தமிழக வரலாற்றை அறிய உதவும் சான்றுகளை காலவாரியான பகுப்பு, சான்றுவாரியான பகுப்பு எனப் பிரிப்பர். கே.ஏ. நீலகண்டசாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாறு என்ற நூலில் கல்வெட்டுகளே இந்திய வரலாற்றிற்குக் குறிப்பாகத் தென்னிந்திய வரலாற்றிற்கான வளமிக்க நம்பகமான சான்றுகளாகும் என்று குறிப்பிட்டுள்ளார். நடுகல் வடிவில் அமைந்த கல்வெட்டுக்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. புறநானூற்றில் கல்வெட்டுகள் வழியாக அறியலாகும் ஊர்களைச் சுட்டுவதே இவண் நோக்கம்.

சோழன் மாவளத்தான் சோழன் நலங்கிள்ளியின் தம்பியாவான். எளிதில் வெகுளும் இயல்பினன். ஆயினும் நல்லதன் நலமுணரும் நயம் மிக்கவன். ஒருகால் இவனும் ஆசிரியர் தாமற்கண்ணனாரும் வட்டாடினர். வுட்டுக்களில் ஒன்று தாமற்பல்கண்ணனாரை அறியாமல் அவர்க்கீழ் மறைந்துவிட்டதாக அதனைப் பின்பு உணர்ந்த மாவளத்தான் வெகுண்டு அவரை அவ்வட்டினால் எறிந்தான். உண்மை கூறவும் ஓராது வெகுண்டெறிந்த அவன் செய்கையை இகழ்ந்து அப்புலவர் “வேந்தே நின் செயல் பொருந்துவதன்று; நின் குடிப்பிறந்தோர்க்கு இச்செயல் இயல்பன்றாதலின் நின் பிறப்பின்கண் ஐயமுறுகின்றேன் என வருந்தி உரைத்தார்.     அதனைக் கேட்டதும் மாவளத்தான் தன் தவற்றினை உணர்ந்து நாணினான். இந்நிகழ்ச்சியை உரைக்கும் பாடலில் கிள்ளியின் தம்பியாகிய தாமற்பல்கண்ணனார் புறவின் பொருட்டுத் துலை புக்கவனின் வழித்தோன்றல் ஆவார். அவனது முன்னோர் சான்றோர்க்கு நோய் செய்யார். இச்செயல் உனக்குத் தகுமோ? உன் பிறப்பில் ஐயமுடையேன் என்று கூறியதைக் கேட்டு நாணியிருந்த மாவளத்தானின் செய்கைச் சிறப்பைக் கண்டு வியந்து “நீ காவிரி மணலினும் பல்லாண்டு வாழ்க” எனப் பாராட்டுவதாக“நிலமிசை வாழ்ந ரலமர றீரத்…..என்ற புறநானூற்றுப்பாடல் (43) அமைந்துள்ளது.

தாமற்கண்ணனார் என்பவர் பார்ப்பனர். புலமைமிக்கவர். காஞ்சிபுரத்திற்கு மேற்கில் உள்ளதோர் நல்ல ஊர். இடைக்காலச்சோழ வேந்தர் காலத்தில் இவ்வூர் மிக்க சிறப்புற்று விளங்கியது என்பதை இங்குள்ள கோயில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவ்வூரைத் தாமர் (ளு.ஐ. ஏழட. ஏ. 1004. யு.சு. 139 ழக 1896) எனக் குறிப்பிடுவதால் தாமற்பல்கண்ணனாராக இருக்கலாம் என்பர். பல்கண்ணன் என்பது இந்திரனைக் குறிக்கும் பெயராதலின் இவர் இவ்வாறு பெயர்பெற்றனர் என அறியலாம். பார்ப்பார் நோவன செய்யார் என்ற பாடலடி இக்குலத்தாரின் சிறந்த பண்பை எடுத்துரைக்கிறது.

மோசி எனும் இயற்பெயரினையுடைய ஏணிச்சேரி முடமோசியார் எனும் புலவர் உறையூரின் பகுதியாகிய ஏணிச்சேரி என்ற ஊரினர். மோசி குடி என்னும் ஓர் ஊரும் உண்டு. அவ்வூர் மதுரைமாநாட்டுக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இதனைப் புறநானூற்றுப் பாடலில் (127) காணமுடிகின்றது.

மல்லிகிழான் காரியாதிக்கு இப்போதுள்ள சீவில்லிபுத்தூர் உரியது. சீவில்லிபுத்தூர் வைத்தியசாமி கோயில் கல்வெட்டுக்களிலும், ஆண்டாள் கோயில் கல்வெட்டுக்களிலும் “மல்லி நாட்டுச் சீவில்லிபுத்தூர்” என்றே குறிக்கப்படுகிறது. இது பின்னர் வில்லிபுத்தூராகியிருக்கலாம் என்கின்றனர்.இதைப் புறநானூற்றுப்பாடல் (177) உணர்த்துகின்றது.

கருங்குளம் என்னும் ஊரினர் ஆதனார்ஆவார். பாண்டிநாட்டில் இவ்வூர் கோட்டைக்கருங்குளம் என வழங்குகிறது. இடைக்காலத்தே இது “கருங்குள வளநாட்டுக் கரிகால சோழ நல்லூரான கருங்குளம்” (யுnரெயட சுநிழசவ ழn நுpபைசயிhலஇ ஆயனசயள ழே.269 ழக 1928) எனப்பட்டது. இதனால் இவ்வூர் கரிகால் சோழனால் ஆதனார்க்குத் தன் பெயரால் தரப்பட்டது என்பது தெளிவு. பாண்டியன் இராசசிங்கன் காலத்தில் இராசசிம்மேச்சுரம் என்னும் சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இவ்வூர் பின்பு சீகண்ட நல்லூர் எனவும் பெயர்பெற்றது. (யு.சு.ழே.277 ழக 1928) இவ்வூர்க் கோயிலுக்குத் திருவாங்கூர் வேந்தரும் திருப்பணி (யு.சு.ழே. 287 ழக 1928) செய்துள்ளனர். இதனைப் புறநானூற்றுப்பாடல் (224) எடுத்துக்காட்டுகிறது.

பன்னிரண்டாம்நூற்றாண்டில் மைசூர் நாட்டில் இருந்து ஆட்சிசெலுத்திய ஹொய்சள வேந்தருடைய கல்வெட்டுக்களுள், பண்டைநாளில் யதுகுலத்தில் தோன்றிய சள என்ற பெயரினனான வேந்தன் ஒருவன் சஃகிய மலைகளிடையே (மேலை வரைத் தொடர் றுநளவநசn புhயவள) வேட்டைபுரியும்போது முயலொன்று புலியோடு பொருவது கண்டு வியப்புற்று இந்நிலம் மிக்க வன்மை நல்கும் பெருநிலம் போலும் என எண்ணி அவற்றைத் தொடர்ந்து சென்றதாகவும், அங்கே தவம் புரிந்துவந்த முனிவன் ஒருவன் புலியைக் கண்டு “சளனே போய்ப் புலியைக் கொல்க” என வேந்தனைப் பணித்ததும் அவன் உடைவாளை உருவிப் புலியைக் கொன்றதாகவும் முனிவன் அருள்பெற்று மீண்ட சளவேந்தன் அதுமுதல் ஹொய்சளன் என்று அழைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. அவன் வழிவந்தோர் தம்மைக் ஹொய்சளர் எனக் கூறிக்கொண்டதாக மைசூர் நாட்டுப் பேலூர் மாவட்டத்துப் பேலவாடியில் உள்ள நரசிம்ம ஹொய்சள தேவர் கல்வெட்டொன்று (நுp.ஊயச.ஏழட.ட.டீ1:171) கூறுகிறது. அந்நாட்டுக் ஹொன்னாவரத்துக் கேசவப்பெருமாள் கோயில் கல்வெட்டு (ஐடினை:ர்n.65) இவ்வரலாற்றிற் கண்ட முயலைப் பற்றிய செய்தியை நீக்கி எஞ்சியவற்றைக் கூறுகிறது.

காட்டிலிருந்த முனிவன் மந்திரவலிமையுடையனென்று சளன் என்பான் அறிந்து அவன் திருவடியில் வீழ்ந்து வணங்கினான் என்றும், அதனால் மகிழ்ச்சியுற்று, அவனுக்குச் சசகபுரத்தைத் தலைமையாகக் கொண்ட பேரரசை வழங்கவேண்டுமென விரும்பிய முனிவன் அதற்கேற்ற மந்திரச்செயல்களைச் செய்தான் என்றும், அதனை அழித்தல் வேண்டிச் சசகபுர நகரத் தெய்வமாகிய வாசந்திகை என்பவள் ஒரு புலி உருக்கொண்டு வந்தாள் என்றும், அது கண்டு முனிவன் அப்புலியைக் கொல்லுமாறு பணிப்பான்  “ஹொய்சள” என்றான் என்றும், அவன் அவ்வண்ணமே செய்து ஹொய்சள வேந்தன் ஆனான் என்றும் (ஐடிi ன.யும.71) அரிசிக்கரையிலுள்ள வீரவல்லாளதேவன் கல்வெட்டொன்று இயம்புகிறது.

புலிகடிமால் வழிவந்த இருங்கோவேளிர்களுள் பலர் புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்திருந்தனர் என அப்பகுதியிலுள்ள கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.இச்செய்திகள் புறநானூறு (201) இல் இடம்பெற்றுள்ளன.

ஆலத்தூர் கிழாருடைய ஆலத்தூர் சோழநாட்டுக் காவிரியின் தென்கரையிலுள்ள ஓர் ஊர். இதனை இடைக்காலக் கல்வெட்டுக்கள் “ஆவூர்க்கூற்றத்து விக்கிரமசோழன் பேராலத்தூர்” (யு.சு.ழே.481 ழக 1922) என்றும்,“தென்கரை நித்த விநோத வளநாட்டு ஆலத்தூர்” (யு.சு.ழே.360 ழக 1929) என்றும் இயம்புகின்றன. திருச்சிவபுரத்துக் கல்வெட்டொன்றில் “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க்கூற்றத்து ஆலத்தூர்கிழான்” (யு.சு.ழே.273 ழக 1927) ஒருவன் காணப்படுகின்றான் என்பது சொல்லப்பட்டுள்ளது.இச்செய்தி புறநானூறு 225 – ஆம் பாடலில் வழி அறியலாகிறது.

மாசாத்தனார் எனும் புலவர் ஆவடுதுறை என்னும் ஊரினர். திருவாவடுதுறைக்குச் சாத்தனூர்என்பது பழம்பெயரென அவ்வூர்க் கல்வெட்டுக்களும் (யு.சு.ழே.124 0க 1925) திருத்தொண்டர்புராணமும் குறிப்பிடுகின்றன. சாத்தனூர் என்பது ஊர்ப்பெயர். திருவாவடுதுறை என்பது திருக்கோயிலுக்குப் பெயர். நூளடைவில் சாத்தனூர் என்பது மறைந்து திருவாவடுதுறை என்ற பெயரே ஊர்க்கும் பெயராகிவிட்டது என்று 227 ஆம் பாடல் தெரிவிக்கின்றது.

தகடூர் நாட்டில் அதியமான்களின் கோட்டை இருந்த ஊர் இந்நாளில் “அதமன் கோட்டை” என வழங்குகிறது. தகடூரும் இந்நாளில் தருமபுரி என வழங்குகிறது. எழினியின் வழிவந்தோர் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலும் தகடூர்ப் பகுதியில் இருந்தனர் என்று தகடூர்க்கு அருகிலுள்ள ஒட்டப்பட்டிக் கல்வெட்டுக்கள் (யு.சு.ழே.211 ழக 1910) தெரிவிக்கின்றன.இது 230 ஆம் பாடலில் இடம்பெற்றுள்ளது.

கொங்கு நாட்டிலும் குடவாயில் என்றோர் ஊர் பொங்கலூர் நாட்டிலுள்ளதெனக் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடிகரை கல்வெட்டொன்று (யு.சு.ழே.6 ழக 1923)சொல்கிறது எனப் புறநானூற்றுப்பாடல் (242) நவில்கின்றது.

கோட்டம்பலமென்பது சேரநாட்டு ஊர்களுள் ஒன்று. இக்கோட்டம்பலம் இப்போது அம்பலப்புழை என்னும் இடமாகும். கடற்கோட்டில் உள்ள அம்பலமாதலின் இது கோட்டம்பலம் எனப் பண்டைநாளில் பெயர்பெற்றுப் பிற்காலத்தில் அம்பலப்புழை என மாறியிருக்க வேண்டும். இன்றும் இது தொன்மைச்சிறப்புடைய ஊராகவே விளங்குவதும், இப்பகுதியல் மாக்கோதை மங்கலம் என ஓர் ஊர் இருப்பதும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. சேரநாட்டில் பல கூத்தம்பலங்கள் உள்ளன. திருவாங்கூர் நாட்டு அரிப்பாடு முதலிய இடங்களில் கூத்தம்பலங்கள் இருந்திருக்கின்றன என அந்நாட்டுக் கல்வெட்டறிக்கைகள் (வு.யு.ளு.ஏழட.ஏஐ ழக 1927இ p.35) கூறுகின்றன. இதனைப் புறநானூற்றுப்பாடல் (245) குறிப்பிட்டுள்ளது.

கந்தாரம் என்பது காவிரிக்கரையைச் சார்ந்த ஓர் ஊர். இவ்வூரினைத் தலைமையாகக் கொண்ட சிறு நாடும் இருந்தது. இதனை “நித்தா வினோத வளநாட்டுக் கந்தார நாடு” (ஆ.நு.சு.1936-37: ழே.31:) எனக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளதாகப் புறநானூற்றுப்பாடல் (258) தெரிவிக்கிறது.

எருமை என்பது ஓர் ஊர். மைசூர் நாட்டுக்குப் பண்டைநாளில் எருமைநாடு என்றும், மைசூர் எருமையூரென்றும் வழங்கின. அப்பகுதியிலுள்ள கல்வெட்டுக்களுள் கன்னட மொழியிலுள்ளவை எருமைநாடு (நுங.உயச. ஏழட.ஓ ஊர.20) என்றும் தமிழ் கல்வெட்டுக்கள் எருமைநாடு (யு.சு.கழச 1907. Pயசய.ஐ) என்றும் கூறுகின்றன. தகடூர் அதியமான்களில் எழினி என்பவன் எருவாயில் என்னும் ஊரைக் கைப்பற்றிய போரில் எழினியின் படைமறவன் ஒருவன் போரில் வீழ்ந்து நடுகல் நிறுவப்பட்டான். அவனை எருமையநக்கன் என்று கல்வெட்டு (யு.சு.ழே.211 0க 1910) கூறுவதால்,இந்நக்கன் எருமைநாட்டு எருமையூரினன் என்பதைப் புறநானூறு (223) மூலம் அறியமுடிகிறது.

பூங்கண் என்பது காவிரியின் வடகரையிலுள்ள ஓர் ஊர் எனக் கல்வெட்டுக்களால் (ஆ.நு.சு.ழே.153 ழக 1932) அறியலாகிறது. இதனைப் புறநானூறு (277) தெளிவுப்படுத்துகிறது.

அரிசில் என்னும் ஊர் சோழநாட்டுக் குடந்தை நகருக்கு அண்மையில் இருந்த ஓர் ஊர். குடந்தையிலுள்ள கல்வெட்டொன்று (யு.சு.255ழக 1911) அரிசிலூரைக் குறிப்பதாகப் புறநானூறு (281) பகர்கிறது.

அழும்பில் எனும் ஊரையும், கோசரது அவைக்களத்தையும் புறநானூறு (283) குறிப்பிடுகிறது. இது புதுக்கோட்டைப் பகுதியில் உள்ளது. இப்போது அம்புக்கோயில் என வழங்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டு “இராஜராஜ வளநாட்டுப் பன்றியூர் நாட்டு அழும்பில்” (p.ள.ஐளெ.458) என்று குறிக்கிறது.

அவினியின் பெயரால் அவினியாறு என்றோர் ஆறு பூழி நாட்டில் இருந்திருக்கிறது எனக் கல்வெட்டுக்களால் (யு.சு.96 0க 1906) அறியப்படுகிறது எனச் செப்புகின்றது புறநானூறு(284).

விரிச்சியூர் என்பது பாண்டி நாட்டில் உள்ள ஊராகும். வேந்தன் பொருட்டு விரிச்சி நின்று கூறியது. அவ்வாறே வேந்தனுக்குப் பயனை நல்கியது. அவ்வேந்தன் விரிச்சி நின்றவளுக்கு அவ்வூரை வழங்கியதால் விரிச்சியூர் என வழங்கப்பட்டது. கணியூர், மருத்துவக்குடி, பிரமதேயம் முதலிய ஊர்கள் விரிச்சியூர் போலப் பெயர் பெற்றனவாகும். இது இடைக்காலத்தில் பெரிச்சியூர் என (யு.சு.ழே.66 ழக 1924) மருவி வழங்கியதாகவும், இங்குப் பிறந்த புலவர் நன்னாகனார் ஊர்ப்பெயரோடு இணைத்து விரிச்சியூர் நன்னாகனார் என அழைக்கப்பட்டதாகவும் புறநானூறு (292) விளக்குகிறது.

நல்லிசைப்புலவர் நன்முல்லையாரின் ஊர் அள்ளுர் என்பதாகும். தஞ்சை மாநாட்டிலுள்ள திருவாலங்காட்டிற்கும் அள்ளுர் என்பது பெயரென அவ்வூர் கல்வெட்டு (யு.சு.ழே.79 ழக 1926) குறிப்பிடுகிறது. திருநெல்வேலியில் உள்ள கோயில் கல்வெட்டு ஒன்றில் (ளு.ஐ.ஐ.ஏழட.ஏ.ழே.438)  அள்ளுர் ஒன்று காணப்படுவதாகப் புறநானூறு (306) கூறுகிறது.

புறந்தருதல் தாய்க்குக் கடனாதலும், சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனாதலும் “ஈன்றுபுறந் தருத லென்றலைக் கடனே…”(புறம்.312)என்ற பாடலில் இடம்பெற்றுள்ளன. மேலும் அவ்வூர்களில் இருக்கும் கொல்லர் முதலியோர் அவ்வூரவர்க்கு வேண்டுவன செய்தல் வேண்டுமென்றும், அயலூர் சென்று பணிசெய்வது குற்றமென்றும் முதற்குலோத்துங்கச்சோழன் காலத்தும் ஒரு கட்டுப்பாடு இருந்ததாகத் திருபுவனையிலுள்ள கல்வெட்டொன்று (யு.சு.ழே.205 ழக 1919)கூறுவது பொன்முடியார் பாடிய புறநானூற்றுப்பாடல் (312) மூலம் கடனாக வகுக்கும் கொள்கையை வற்புறுத்துகிறது. ஈன்றாள் முதலியோர்க்கு முறையே புறந்தருதல் முதலாக உள்ள தொழிற்பண்புகளைக் கடனாகக் கூறி அவற்றிலிருந்து வழுவாது நடக்கவேண்டும் என்ற பண்பை வலிறுத்துகிறது இப்பாடல்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்த கல்வெட்டொன்று,“வாச்சியன் இரவி கூத்தனை முதுகண்ணாக உடைய இவன் பிராமணி தேவன் நீலியும் இவன் மகன் கூத்தன் இரவியும்” (ளு.ஐ.ஐளெ.ஏழட ஐஏ. ழே.227) என்று கூறுகிறது. ஒருவர் மிக்க இளைஞர் ஒருவருக்குப் பாதுகாப்பாளராய் இருப்பாராயின் அவரை முதுகண் (புரயசனயைn) என்பது பழையநாளை வழக்கு. முதுகண்ணன் சாத்தனாரை மிக்க இளையனொருவற்கு முதுகண்ணாயிருந்து சிறந்தவராகக் கருதுவர்.இதனைப் புறநானூறு (325) பாடலில் காணமுடிகின்றது.

தங்கால் என்பது விருதுநகர்க்கு அருகிலுள்ள ஊராகும். இளங்கோவடிகள் இதனைத் “தடம்புனற் கழனித் தங்காள்” (சிலப். மதுரைக். 23:118) என்று சிறப்பிப்பார். இடைக்காலப் பாண்டியர் காலத்திலும் இவ்வூர் சிறப்புற்றிருந்தது. இதனை இராசராச பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி நாட்டுத்திருத்தங்கால் (யு.சு. ழே. 564 ழக 1922) என்று கல்வெட்டுக்கள் இயம்புகின்றன. மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1) காலத்தில் இவ்வூரிலுள்ள மடமொன்றில் பாரதமும் இராமாயணமும் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கல்வெட்டொன்று (யு.சு.ழே. 546 ழக 1922) கூறுவதனால் இவ்வூர் கல்விவளம் சிறந்த நல்ல ஊர் என்பது தெளிவாகிறது. இவை போன்ற செய்திகளைப் புறநானூறு (326) தெரிவிக்கிறது.

உறையூரில் நடைபெற்ற பங்குனி விழாவை,“விறற்போர்ச் சோழர் இன்கடுங்கள்ளின் உறந்தை யாங்கண் வருபுனல் நெரிதரு மிகுகரைப் பெரியாற்று உருவ வெண்மணன் முருகுநாறு தண்பொழிற் பங்குனி முயக்கம்” (அகம்.137) என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்பங்குனி விழாக் காலத்தில் திருவரங்கத்துப்பெருமாளை உறையூர்க்குக் கொண்டு சிறப்பு செய்வதுண்டென ஸ்ரீரங்கத்துக் கோயில் கல்வெட்டுக்கள் (யு.சு. ழே. 16 ழக 1936-7) கூறுகின்றன. இது புறநானூற்றுப்பாடல் (331) மூலம் தெரியவருகிறது.

தமிழக வரலாற்றை அறிய உதவும் சான்றுகளில் கல்வெட்டின் வாயிலாக மூவேந்தர், நாயக்கர், சோழர் முதலிய அரசர்களின் ஆட்சித்துறை, காலம், நகரஅமைப்பு, கலைஈடுபாடு, பண்புநலன்கள் ஆகியவற்றை அறியலாம். இவ்வாறாகத் தமிழர்களின் வாழ்வியலைக் கண்டறிய உதவும் கல்வெட்டுக்கள் வழி ஊர்கள் பற்றிப் புறநானூறு தெளிவாக்கியுள்ளது.