Kalanjiyam - International Journal of Tamil Studies

ISSN : 2456-5148

வேளாண்குடி வரலாறும் அடையாளமும்

க.கருப்பசாமி

Keywords:

Abstract:

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி” என்ற புறப்பொருள் வெண்பாமாலை அடிகள், தமிழின வேளாண்குடிகளின் தோற்றத்தை, தொன்மையை புலப்படுத்தும். வேளாண்குடிகளைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வாழ்கின்ற நிலத்திற்கேற்ப பண்பாட்டையும், வாழ்க்கைச் சூழலையும் அமைத்துக் கொண்டனர். வேளாண் – வேள் ஆள் எனப் பிரித்து ‘வேள்’ என்பது ‘மண்’ எனும் பொருளையும், ‘ஆள்’ என்பது ‘ஆளுதல்’ எனும் பொருளையும் தருகிறது. பழங்காலத்தில் வாழ்ந்த மருதநிலத்து மக்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கையிலேயே வாழ்ந்து இயற்கையில் கிடைக்கக் கூடியப் பொருள்களை உண்டு தன் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்ந்து வந்தான். நாளடைவில் உணவின் தேவை கருதி ஆற்றுப் படுக்கையில் நெல்லை பயிரிட்டு வேளாண்மை செய்யக் கற்றுக் கொண்டனர். இவ்வாறு மருதநில மக்கள் ஆற்றங்கரை நாகரிகத்தை தோற்றுவித்த நாகரிகத்தின் வளர்ச்சியே ஊர், மூதூர், பேரூர், சேரி, நகரம், நாடு, ஞாலம், மாஞாலம் எனப் பரந்துபட்டு ‘ஒரு குடையின் கீழ் மல்லன் மா ஞாலாமாக’ பன்னெடுங்காலமாக இருந்து வருவது அனைவரும் அறிந்த வரலாற்று உண்மையே. அந்த வகையில் வேளாண் குடிகளின் வரலாற்றையும் அடையாளத்தையும் இன்றைய உலகிற்கு வெளிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

மள்ளர்

மள்ளர் என்னும் சொல்லானது மல்லா, மல்லன், மள்ளர் மள்ளன், மல்லல் எனப் பல சொல்லைக் கொண்டது.

சேந்தன் திவாகரம் :

“அருந்திரல் வீரருக்கும் பெருந்திரல் வீரருக்கும்

பெருந்தகைத்தாரும் மள்ளரெனும் பெயர்”

என்றும்,

பிங்கல நிகண்டு :

“செருமலை வீரரும் திண்ணியோரும் மருதநில

மாக்களும் மள்ளரெனும் பெயர்”

என்று கூறுவதைக் காண முடிகிறது.

வேளாளர்களின் அடையாளம்

வேளாளர்களின் பிரிவுகள் :

ஆத்தா, அம்மா, அஞ்ஞா, அய்யா, கடைஞன் என பல வழக்குச் சொற்களின் ஒவ்வொரு நிலப்பிரிவுகளிலும் தங்களை தனித்த அடையாளத்தோடு வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

வேளாளர் குலப் பட்டங்கள் :

பண்ணாடி, காலாடி, கடைஞன், மூப்பன், பணிக்கன், பாண்டியன், சோழன், பட்டக்கரான், பலகன், உடையார்

வேளாளர் நாட்டுப் பிரிவுகள் :

கொடைவள நாடு, சீவந்த வள நாடு, வீரவள நாடு, பருத்திக்கோட்டை நாடு, சிக்கவள நாடு, செளுவ வள நாடு, கொங்கு எழுகரை நாடு, சோமூர் நாடு, மாற நாடு, வளளல் நாடு, மங்கா குறுப்ப நாடு, தொண்டை மண்டலம், மங்க நாடு, வேங்கல நாடு, சார நாடு, வையாபுரி நாடு, நாகநாடு

சொல்லாடல்கள்

நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது”

எந்த நிலத்தைச் சேர்ந்தவர்களும் நெல்லை உற்பத்தி செய்தாலும், மள்ளர்கள் நெல் பயிர் செய்து தருவது போலத் தரமான, வகை வகையான நெல் வகையைத் தர முடியாது, எண்ண முடியாது.

மள்ளனை இரும்பெனப் பதம் பார்த்து அடிக்கவொண்ணுமோ”

மள்ளர்கள் நெற்களஞ்சியங்களைக் காக்க இரும்புக் கவசமாகத் துவங்கிய பீரங்கிகளையே துச்சமாக எண்ணிப் போராடிய வீரத் தியாகிகள்.

மருத நிலம்

மருத நிலமானது எக்கணமும் இயற்கை வளம் வற்றாத, குன்றாத ஆறுகள், நீர்நிலைகளின் அருகாமையிலே அமைந்த கழனிகள், தோட்டங்கள் கொண்ட நீண்ட நெடிய சமவெளிப் பரப்பினைக் கொண்டதாகக் காணப்பட்டது.

நெல்லை விளைவிப்பதற்காகவே வேளாண் மக்கள் ஆறுகளை இடைமறித்துக் கால்வாய்களை வெட்டி, அவற்றின் வழியாக மலைகளிலிருந்து வரும் மழைநீரை ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் பாய்ச்சி மருதநிலத்தை வளப்படுத்தினர். மருதநிலத்தை வளப்படுத்திய சூழலில் தாங்கள் வாழும் நிலத்தை மட்டுமல்லாது, தன்னைச் சார்ந்த மற்ற நிலபுலங்களையும் விரிவுபடுத்த எண்ணினர். இதன் விளைவாகவே மற்ற குறிஞ்சி, முல்லை, நெய்தல் நிலங்களைக் காட்டிலும் மருதநில நாகரீகம் உயர்ந்த நிலையில் இருந்தது.

மருதநிலப் பாகுபாடு

மருதநிலத்தை ஆறு அடிப்படைப் பாகுபாடுகளாக சங்ககாலப் புலவர்கள் பிரித்துள்ளனர் என்று எ.பாலுச்சாமி கூறுகிறார். அவை,

 

 

  1. பண்படுத்தப்பட்ட விளைநிலமாக அமையும் கழனி
  2. வயல்புலத்தை அடுத்தமையும், நீர் தேங்கிய பழனம்
  3. ஓடும் புனலைக் காட்டும் ஆறு
  4. புனல் தங்கும் பொய்கை என்றினைய நீர்நிலைகள்
  5. மரம், செடி, கொடிகள் அடர்ந்த பொழில்
  6. மக்கள் உறைவிடமாக இருக்கும் ஊர்

என்பனவாகும்.

மருதநில மக்களின் தொழில்

பண்டைய காலம் முதல் இக்காலம் வரை எப்போதும் அனைவரிடமும் போற்றப்படும் தொழில் ஒன்று என்று கேட்டால் ‘உழவு’ தொழில் மட்டுமே. மருதநிலத்து மக்கள் பெரும்பாலும் உழவுத் தொழிலையே விரும்பிய காரணத்தினால் இவர்களின் உழைப்பானது உழவு உற்பத்தி தொடர்பான உழைப்பாக மாறியது. இதனையே வள்ளுவர்,

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை”

என்று உழவை மக்களின் இன்றியமையாத தொழில் என்று கூறுகிறார். உலகில் எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் உழவுத் தொழிலுக்கு ஈடு இணை எதுவுமில்லை எனலாம்.

நெல் தோன்றிய விதம்

கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில், மள்ளர் மரபினர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியால் தேவலோகத்திலிருந்து சென்னெல், கண்னெல், கதலி, பனை முதலிய வித்துக்களுடனும், காளையுடனும் பூமிக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவர்கள் ஒரே நாளில் பன்னீராயிரம் கிணறுகள் தோண்டி, வேளாண்மை கண்டு நாட்டைச் செழிப்பித்ததாகவும் கூறுகின்றன. மேலும் செங்கோட்டுப்பள்ளுவில், தேவேந்திர குல முதல்வன் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தேவலோகம் சென்று நெற்பயிரைக் கொண்டுவந்து பூமியில் பயிர் செய்வித்ததாகக் கூறுகின்றது. இதிலிருந்து வேளாண் மரபினர் தான் முதன் முதலில் தமிழகத்தில் நெற்பயிரைத் தோற்றுவித்தனர் என்று தெரிகிறதாக இந்திரன் விழிப்புணர்வு இதழில் 2017 பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வேளாண்குடி மக்கள் நெல் தொழிலில் முதன்மை வாய்ந்தவர்கள் என்பதை,

“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

மன்னர்தானே மலர்தலை உலகம்” (புறம்.186)

என்னும் பாடலின் மூலம் நன்கு புலப்படுகிறது.

ஒளவையார் ஒரு தமிழ் வேந்தன் திருமகனின் திருமணத்தின் போது, “வரப்பு உயர நெல்லும் உயரும்” என்று வாழ்த்தினார். இதைக் கண்டு மன்னனும் மற்றவர்களும் திகைத்துப்போய் நின்றனர். உடனே ஒளவையார்,

“வரப்பு உயர நீர் உயரும்,

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயர கோன் உயரும்”

என்று விளக்கம் கொடுத்தார். இதிலிருந்து உழவர் குடியும், நெல் சாகுபடியும் உயர்ந்த நிலையில் போற்றப்பட்டதை அறிய முடிகிறது.

நெல்

நெல் என்னும் சொல் சங்க இலக்கியத்தில் 102 இடங்களில் வருகின்றது. மூங்கில நெல் – 6, செந்நெல் – 21, வெண்ணெல் – 24, ஐவனநெல் – 4 என நெல்லானது மொத்தம் 145 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லைக் குறிக்க பல சொற்கள் உள்ளன. அவற்றில் ‘சொல்’ என்ற சொல்லானது நெல் என்ற பொருளில் கையாளப்படுகிறது. நெல்லைக் குறிக்கும் சொற்களாக வரி, சொல், விரிகி, சாலி, யவம் என சூடாமணி நிகண்டு,

“வரி சொல்லு விரிகி சாலி வளர் செந்

நெல்லாம் யவமும் ஆகுக”

என்றும்,

“சொல்லும் விரீகி வரியும் சாலியும்

யவமும் நெல்லின் பொதுப்பெயர் ஆகம்”

என்று பிங்கல நிகண்டும் நெல்லின் பெயர்களைக் கூறுகின்றன.

நன்செய் வேளாண்மை வெகுவாகப் பேசப்பட்ட சமுதாயம் வேந்தரின் மருதநிலச் சமுதாயம் என்பதை,

“……………………….. நெல் அரிந்து

சூடுகோ டாகப் பிறக்கி நாடொறுங்

குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை

கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்குஞ்

சாலி நெல்லின் சிறைகொள் வேலி

காவிரி புரக்கு நாடுகிழ வோனே” (பொரு. 242 – 248)

எனக் கரிகாலன் புகழப்படுவதாக பெ.மாதையன் கூறுகிறார். மேலும் ‘நெல் பல பொலிக, பொன் பெரிது சிறக்க’ (ஐங். 1:2) என வாழியாதன் நெல்லை முதன்மைப்படுத்தி வாழ்த்துகின்றான்.

முடிவுரை

மனிதனின் தோற்றம், பரிணாம வளர்ச்சி பற்றி, அறிவியல் ரீதியாக இயங்கியல் தத்துவத்தின்படி பகுத்தறியும் போது மட்டுமே ஒரு இனத்தின் வரலாற்றை அடையாளத்தை மீட்டெடுக்க முடியும். முனிதன் ஆற்றங்கரைச் சமவெளிக்கு இடம்பெயர்ந்த நிகழ்வுதான் மனித இனத்தின் பரிமாண வளர்ச்சியின் அடுத்த கட்டமாக அமைந்தது. பள்ளமான ஆற்றங்கரைச் சமவெளிப் பகுதியில் முதன் முதலில் உணவுத் தானியங்களை பயிரிடும் வேளாண்மையை முல்லை நிலத்திலிருந்து இடம் பெயர்ந்த ஒரு கூட்டம் இடம்பெயர்ந்தது. அந்த இன மக்கள் தான் வேளாண்குடியான மள்ளர் இனம்.

மருதநில மள்ளர்கள் அயராத உழைப்பும், மனதில் ஈரமும், கண்களில் கருணையும், உள்ளத்தில் உயர்வும், வாழ்வில் ஒழுக்கமும், நடையில் மிடுக்கும், வாக்கில் வாய்மையும், வாழ்வில் வளமும், அறிவில் சிறந்தும், இல்லத்தில் காதல் வாழ்வும் போன்ற பண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டு இம்மண்ணையும், மக்களையும் காத்து வருதைத் தலையாய பண்;பாகக் கொண்டு விளங்கும் மருதநில மக்களான வேளாண்குடிகளின் வரலாற்றையும் அடையாளத்தையும் இலக்கியங்களின் மூலம் தௌ;ளத் தெளிவாக காணமுடிகிறது.