“கற்றறிந்தோர் ஏத்தும் கலி” (புலியூர்கேசிகன், (2006), கலித்தொகை – மூலமும் உரையும், ப.3) எனப் போற்றப்படும் கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். ((hவவி:ஃஃறறற.வயஅடைஎர.ழசபஃடiடிசயசலஃட1260ஃhவஅடஃட1260அஎம.hவஅ) பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான இது, ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்டுள்ளது.
இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பற்றிய குறிப்பு நூல் இறுதியில் காணப்பெறவில்லை. கலித்தொகை உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர் குறிப்பிலிருந்து நெய்தற் பகுதியைச் செய்த நல்லந்துவனாரே கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடி, இத்தொகையைத் தொகுத்தார் என்று கொள்ள இடந்தருகிறது. (புலியூர்கேசிகன், (2006), கலித்தொகை – மூலமும் உரையும், ப.3) இந்நூலின் காலம் குறித்து உறுதியான நிலைப்பாடு அறிஞரிடத்தில் இல்லை. இந்நூலில் உள்ள சொற்பயன்பாடு, பொருற்பயன்பாடு என்பவற்றின் அடிப்படையில் இந்நூல் கடைச்சங்க காலத்திற்குப் பின்னர் எழுந்திருக்கலாம் என்பர். ( இராசமாணிக்கனார்.மா., 2003, கால ஆராய்ச்சி. ப.82)
எட்டுத் தொகை நூல்களுள் பாவின் பெயரைப் பெற்று விளங்கும் கலித்தொகை நூற்றைம்பது (150) பாடல்கள் கொண்டது. நூற்றைம்பது பாடல்களுள் முதற் பாடல் கடவுள் வாழ்த்து ஆகும். பின்னர், பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை மற்றும் நெய்தல் என்ற வரிசையில் ஐந்திணைகளுக்கும் உரிய பாடல்கள் அமைந்துள்ளன. கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், பாலைக்கலியில் 35 பாடல்களும், குறிஞ்சிக்கலியில் 29 பாடல்களும், மருதக்கலியில் 35 பாடல்களும், முல்லைக்கலியில் 17 பாடல்களும், நெய்தற்கலியில் 33 பாடல்களும் பாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடல் இறுதியிலும் துறைவிளக்கம் கூறப்பட்டுள்ளது. (hவவி:ஃஃவnpளஉhரடி.டிடழபளிழவ.உழஅஃ2015ஃ03ஃடிடழப-pழளவ_231.hவஅட?அஸ்ரீ1 )
திணை முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள கலித்தொகையில் பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் பெருங்கடுங்கோ, குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர் கபிலன், மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் மருதன் இளநாகன், முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவர் சோழன் நல்லுருத்திரன், நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் நல்லந்துவன் ஆவர். இதனை,
“பெருங் கடுங்கோன் பாலைக் கபிலன் குறிஞ்சி;
மருதன் இளநாகன் மருதம்; அருஞ்சோழன்
நல்லுருத்திரன் முல்லை நல்லந்துவன் நெய்தல்
கல்வி வலார் கண்ட கலி”
என வழங்கும் பழம்பாடலால் அறியலாகிறது.
(hவவி:ஃஃறறற.வயஅடைஎர.ழசபஃடiடிசயசலஃட1260ஃhவஅடஃட1260அஎம.hவஅ )
இந்நூல் கலி, கலிப்பா, கலிப்பாட்டு, நூற்றைம்பது கலி ஆகிய வேறுபெயர்களாலும் அறியப்படுகிறது. (புலியூர்கேசிகன், (2006), கலித்தொகை – மூலமும் உரையும், ப.3) கலித்தொகை உரைகளுள் நச்சினார்க்கினியரின் உரை சிறந்த உரையாக அமைந்துள்ளது.
கலித்தொகைப் பாடல்களின் மூலம் அக்காலத்து ஐவகை நிலத்து மக்களின் வாழ்க்கை நிலைமைகள், ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இவற்றின் மூலம் நல்வாழ்வுக்குத் தேவையான போதனைகளைத் கலித்தொகை தந்துவிடுகிறது.
கலித்தொகை காட்டும் வாழ்வியற் போதனைகள்
இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகளைப் போதிப்பதே தலையாய நோக்காக உள்ளது. சங்கத் தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகையிலும் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் பல வாழ்வியற் போதனைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வாழ்வியல் என்பது வாழ்வை வாழும் முறையறிந்து உரிய வகையில் வாழ்தலைக் குறிக்கும். இதனை ‘வாழும் கலை’ எனச் சுருக்கமாகக் கூறலாம். வகையறிந்து வாழும் வாழ்க்கைக்கு உதவும் அறம்சார் வாழ்க்கைக் கூறுகளை வாழ்வியல் நெறிகள் எனக்கொள்ளலாம். வாழ்வியல் நெறிகள் என்ற சொல்லிற்கு ஆங்கில சொற்களஞ்சியம் குறிப்பிடும் பொருள், ‘நுவுர்ஐஊளு’ என்பதாகும். நுவுர்ஐஊளு என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக தமிழில் அறநெறிகள், அறவியல், நன்நெறிக் கோட்பாடுகள், வாழ்வியல் ஒழுகளாறுகள், பண்புகள், ஒழுக்க முறைகள் முதலான சொற்கள் வழங்கி வருகின்றன. இவற்றுள், ‘வாழ்வியல் நெறிகள்’ என்ற சொல்லே பரவலான ஏற்பினைப் பெற்றுள்ளது; வழக்கிலும் நிலைபெற்றுள்ளது. (hவவி:ஃஃஎயசையஅயni-டயமளாஅi.டிடழபளிழவ.உழஅஃ2011ஃ08ஃடிடழப-pழளவ_4161.hவஅட )
சமூகத்தில் முழுமையும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ வேண்டுமெனில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று சில கடமைகளையும் கட்டுப்பாடுகளையும், ஒழுக்கங்களையும் விதித்துக்கொள்ளவேண்டும். இத்தகு கடமைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் தொகுப்புகளைத்தான் நாம் வாழ்வியல் நெறிகள் என்று கூறுகிறோம். வாழ்வியல் அறநெறிகள் என்றென்றும் மாறாதவை இவை உலகப் பொதுவானவை (ருniஎநசளயட நுவாiஉள) இவை இரு பிரிவுகளாக உள்ளன. தனிமனித வாழ்வியல் நெறிகள் (Pநசளழயெட நுவாiஉள), சமூக வாழ்வியல் நெறிகள் (ளுழஉயைட நுவாiஉள) என்பன அவையாகும்.
(hவவி:ஃஃஎயசையஅயnடையமளாஅi.டிடழபளிழவ.உழஅஃ2011ஃ08ஃடிடழப-pழளவ_4161.hவஅட )
வாழ்வியல் நெறிகளாக மனித வாழ்வில் காணலாகும் அறம், பண்பு, அன்பு, வாய்மை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறன் இல் விழையாமை, புறங்கூறாமை, பயன்இல சொல்லாமை, புலால் மறுத்தல், ஈகை, கள்ளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை, விருந்தோம்பல், கற்புநெறி, மனையறம் போன்றன காணப்படுகின்றன. இத்தகு வாழ்வியல் நெறிகள் நல்வாழ்வை மக்களுக்குத் திருப்திகரமாக அளிப்பதுடன் மனித வாழ்வுக்கு வளம் சேர்ப்பனவாகவும் விளங்குகின்றமை குறிப்பிடற்பாலது.
பழந்தமிழர் வாழ்வை பிரதிபலித்து நிற்கும் கலித்தொகையில், மனித வாழ்வைச் செம்மையுறச் செய்யும் பல அறக்கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. சிறிய சிறிய சொற்றொடர்கள் மூலம் நல்ல பல வாழ்வியற் போதனைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
பண்புடைய வாழ்வு
பண்புடைமையையே நாம் பாண்பாடு என்கின்றோம். பண்பாடு என்பது பண்பூஅடுதல் என்பதன் கூட்டாகும். அடுதல் என்றால், ‘சமைத்தல்’ ஆகும். சமைத்தல் என்பது, ‘பக்குவப்படுத்தல்’ எனப்பொருள்படும். (குமரன், எஸ்., 2016, சங்க இலக்கியம் காட்டும் பண்பாடும் வாழ்வியல் அறங்களும், தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள், ப.536) இதன்படி, “பண்பாடு என்பது மனித மனதைப் பண்படுத்தி வாழ்வியலுக்கு மனிதனைப் பக்குவப்படுத்துவது” எனக்கூறலாம். பண்பாடு உடைய மனிதனாக வாழும்போது மனித வாழ்வு சிறந்ததாகிறது. இதனாலே கலித்தொகை,
“‘பண்பு’ எனப்படுவது, பாடு அறிந்து ஒழுகுதல்;” (கலித்தொகை-நெய்தற்கலி:16:8)
எனக் கூறுகிறது. பண்பு என்பது உலக நிலைமையறிந்து நடத்தலாகும். இவ்வாறு உலக நிலையறிந்து நாம் நடக்கும் போது மகிழ்ச்சியான வாழ்வு வாழமுடியும் என்பது இப்பாடலின் மூலம் வலியுறுத்தப்படுகின்றமை நோக்கத்தக்கது.
அன்பு
அன்பே வாழ்வின் ஆதாரமாகும். பொருளை விடவும் அன்பு சிறந்ததாகும். கலித்தொகையில் அன்புநெறி பலவாறு எடுத்துக் காட்டப்படுகிறது.
“‘அன்பு’ எனப்படுவது தன் கிளை செறாஅமை” (கலித்தொகை-நெய்தற்கலி:16:9)
எனவரும் கலித்தொகைப் பாடலால், அன்பு என்பது தன் சுற்றத்தினரைக் கோபியாது இருத்தல்;; எனப்படுகிறது. மேலும், தலைவன் மீது தலைவி கொண்ட அன்பினை எடுத்துக் கூறுவதன் மூலமாகவும் அன்புநெறி எடுத்துக்காட்டப்படுகிறது.
“அன்பு கொள மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறுகரால் ஆற்றும், ‘புறவு’ எனவும் உரைத்தனரே”,
(கலித்தொகை-பாலைக்கலி:10:12-13)
“நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள்” (கலித்தொகை-பாலைக்கலி:1:13)
“இடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்” (கலித்தொகை-பாலைக்கலி:3:6)
எனவரும் பாடல்களின் மூலம் அன்பின் தன்மை வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்திலும் சமூகத்திலும் நாம் அன்புடன் வாழ வேண்டும், அப்போதே மனித வாழ்வு சிறப்புடையதாகும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
மனையறம்
சமுதாய வாழ்க்கையை மனையறம், துறவறம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மனித வாழ்வில் இல்லறம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இல்வாழ்வை அறநெறியுடன் வாழ்தல் தவநெறியைசிடச் சிறந்ததாகும். (தேவிராஜேஸ்வரி,சி., 2011, நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர் உணர்த்தும் வாழ்வியல் அறங்கள், பன்னிரு திருமுறை ஆய்வுநூல், ப.137) கலித்தொகையில் இல்லறத்துடன் தொடர்புடைய பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. கணவனும் மனவியும் ஒற்றுமையுடன் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து வாழ்தல், பிறருக்கு உதவுதல் போன்ற இல்லற மாண்புகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இருக்கின்ற ஒரே ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் கொடிய வறுமை நிலையிலும், மனம் ஒன்றி வாழும் வாழ்க்கையே சிறந்த இல்லற வாழ்க்கை என்பது கலித்தொகையில் எடுத்துக்காட்டப்படுகிறது. இதனை,
“ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” (கலித்தொகை-பாலைக்கலி:17:10-11)
எனவரும் பாடல் வரிகள் தெளிவுறுத்துகின்றன.
ஈகை
ஈகையே வாழ்க்கையில் தலையாய ஒன்றாகும். பொருளின் பயனே கொடுப்பதாகும். “கொடுப்பாருக்குக் குறைவில்லை” என்பது ஆன்றோர் வாக்காகும். ஈபவர்களுக்கே இறைவனின் அருளும் கிட்டும். “இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்” (திருமுறை 4, பதிகம் 38, பாடல் 10) எனவரும் அப்பர் பாடல் இதனை மெய்ப்பிக்கிறது. இத்தகு சிறப்புப் பொருந்திய கொடைத் தன்மையானது அனைவருக்கும் வந்துவிடாது. ஒரு சிலருக்கே இக்குணம் வாய்க்கப்பெறும். நிலையாமையை உணர்ந்தவருடைய கொடையே எல்லார்க்கும் பயன்படும். ஈகை அறம் பற்றி கலித்தொகையில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன. அத்துடன் ஈயாமை இழிவு என அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
“தொலைவாகி, யிரந்தோர்க்கொன்றீயாமை யிழிவென
மலையிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ”, (கலித்தொகை-பாலைக்கலி:1:11-12)
“இல்லென விரந்தோர்க்கொன்றீயாமை யிழிவெனக்
கல்லிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ”இ (கலித்தொகை-பாலைக்கலி:1:15-16)
“இடனின்றி யிரந்தோர்க்கொன் றீயாமையிழிவெனக்
கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ” (கலித்தொகை-பாலைக்கலி:1:19-20)
எனவரும் பாடல் வரிகள் வாயிலாக ஈயாமை இழிவு எனவும் ஈதலே உயர்வு எனவும் வலியுறுத்தப்படுவதுடன் நாம் வாழ்வில் ஏற்றம் காண்பதற்கு தன்னிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும் எனக் கலித்தொகை போதிக்கிறது.
கற்புநெறி
“கற்பு” என்பதற்கு அகராதியில் கல்வி, அறிவு, முல்லைக்கொடி, கதி, மகளிர் கற்பு எனப் பல பொருள்கள் கூறப்பட்டுள்ளன. (hவவி:ஃஃறறற.னiயெஅயni.உழஅஃறநநமடலளரிpடநஅநவெளஃவயஅடைஅயniஃ 2017ஃஅயலஃ14ஃகலித்தொகையில்-கற்புநெறி-2701654.hவஅட) இங்கு மகளிர் கற்பு குறித்து நோக்கின்,
“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்” (குறள்- 54)
என்று வியந்து போற்றினார் வள்ளுவப் பெருந்தகை. ஒளவையார், காரைக்கால் அம்மையார், சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் எனப் பலரும் தம்முடைய பாடல்களில் ஒழுக்கம், கற்பு நெறி போன்றவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி எழுதியதன் காரணம், “கற்பு ஒன்றுதான் பெண்ணுக்கு அணிகலன்” என்பதால்தான். கற்பு எனப்படுவது, தன்னையே முழுதுமாகச் சார்ந்துவிட்ட கணவரது சொல் மீறாத நிலையாகும். (hவவி:ஃஃறறற.னiயெஅயni.உழஅஃறநநமடலளரிpடநஅநவெளஃவயஅடைஅயniஃ2017ஃஅயலஃ14ஃகலித்தொகையில்-கற்புநெறி-2701654.hவஅட) இல்லறம் காக்கும் பெண்ணுக்குக் கற்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கலித்தொகையில் மகளிர்தம் கற்புநெறி பலவாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலித்தொகை, பாலைக்கலியின் முதல் பாடலிலேயே கற்பின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. பொருள்தேடும் பொருட்டு பிரிந்து செல்லப்போகும் தலைவனிடம்,
“மறப்பருங் காதல் இவள் ஈண்டு ஒழிய,
இறப்பத் துணிந்தனிர்” (கலித்தொகை-பாலைக் கலி:1: 9-10)
எனவரும் பாடலில் உன்னைப் பிரிந்த தலைவி துயர் ஆற்றாது இறந்துவிடுவாள் எனத் தலைவியின் நிலையைத் தோழி எடுத்துக்கூறுவதன் மூலம் கற்புநெறி கூறப்படுகிறது. மேலும், உலகமே வறட்சியில் துன்பப்படும் காலத்தும், மழையைப் பெய்விக்கும் கற்புத்திறம் (சக்தி) உடையவள் இவன் மனைவி என்று கூறுவதை,
“வறன் ஓடின் வையகத்து வான்தரும் கற்பினாள்” (கலித்தொகை-பாலைக்கலி:15:20)
எனவரும் பாடல்வரியால் உணரமுடிகிறது.
இவை தவிர, பாலைக்கலி (8:22, 17:5-22), குறிஞ்சிக்கலி (3:11-19), மருதக்கலி (13:19-20), முல்லைக்கலி (2:21-24, 3:60-64, 4:73-76) முதலியவற்றில் உள்ள பிற பாடல்கள் மூலமும் கற்புநெறி கலித்தொகையில் பலவாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
விருந்தோம்பல்
நம் இல்லம் நாடி வரும் விருந்தினர்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பது தமிழர் பண்பாடாகும். வந்தவர்கள் அகம் மகிழ மனமுவந்து அமுது படைப்பதை கடமையாகப் போற்றுவது இல்லறத்தார் கடனாகும். தன்னை நாடி வருபவரை வரவேற்று அவர் மகிழ நாம் விருந்தளிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
“துயர் அறு கிளவியோடு: அயர்ந்தீகம் விருந்தே” (கலித்தொகை-பாலைக்கலி:31:19)
எனவரும் கலித்தொகைப் பாடல்வரி விருந்தோம்பல் பண்பை எடுத்துக்காட்டுகிறது.
தன்னைப் போல் பிறரையும் நேசித்தல்
தன்னைப் போல பிறரையும் எண்ணி பிறருக்கு ஏற்படும் துயரையும் தன் துயராகக் கருதி வாழ வேண்டும் எனக் கலித்தொகை போதிக்கிறது. அவ்வாறு பிறர் துயரைத் தன் துயராக கருதி வாழ்பவரே சான்றோர் எனவும் கூறப்பட்டுள்ளது.
“பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன்” (கலித்தொகை-நெய்தற்கலி:22:2-3)
எனவரும் பாடல்வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
மனசாட்சியுடன் வாழ்தல்
மனச்சாட்சியை விட உயர் தர்மம் எதுவும் இல்லை என்பது கலித்தொகைப் பாடல்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது.
“கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார்
தங்காது தகைவின்றித் தாம்செய்யும் வினைகளுள்
நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை ஆகலின்” (கலித்தொகை-நெய்தற்கலி:8:1-4)
எனவரும் பாடலில் உணர்வில்லாதவர்கள் உலகத்துள் தாம் செய்தவற்றுள் இது தீயது, இது கெட்டது என உணர்ந்து ஒதுக்கமாட்டார்கள். கண்டவர் யாரும் இல்லை என நினைத்து அதனை பிறருக்கு மறக்கலாம். ஆனால், நெஞ்சஎனக் கூறுவதன் மூலம் மனட்சாட்சியே உயர் தர்மம் என்பது போதிக்கப்படுகின்றமை குறிப்பிடற்குரியது.
தீங்கு செய்யாமை
பிறருக்குத் தீங்கு செய்பவன் தானும்கெட்டு, சுற்றத்திற்கும் கேடு விளைவிப்பான். எல்லோரிடத்திலும் தீய செயல்களைச் செய்த ஒருவன் நல்ல பெயருன் எங்கும் வாழமுடியாது. கெட்டவன் என்ற பெயரே விளங்கும். அவனது முடிவும் துன்ப முடிவாகத்தான் இருக்கும். ஆகவே பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ வேண்டும். இதனை,
“யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி”
(கலித்தொகை-பாலைக்கலி:9:3)
எனவரும் பாடல்வரியால் அறியமுடிகிறது.
நிறைவுரை
சங்கத் தொகைநூல்களுள் ஒன்றான கலித்தொகையில் வாழ்வுக்கு நலம் சேர்க்கும் வாழ்வியற் போதனைகள் பல இடம்பெற்றுள்ளமை கண்கூடு. மிகச்சிறந்த நற்பண்புகளை பின்வரும் தலைமுறையினர் நன்முறையில் பின்பற்றும் வகையில் கலித்தொகை தொகுத்துரைத்திருக்கும் பாங்கு குறிப்பிடற்குரியது. இந்நூலில் கூறப்படும், பண்புடமை, அன்பு, மனையறம், கற்புநெறி, ஈகை போன்ற வாழ்வியற் சிந்தனைகள் யாவும் மனித வாழ்வின் மேன்மைக்கு மிகமுக்கியமானவை. இத்தகு வாழ்வியற் போதனைகள் தமிழர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது என்பதல்ல, இவை வையக மாந்தர் யாவருக்கும் பொருந்தக்கூடியவையாகும். எனவே கலித்தொகை காட்டும் வாழ்வியல் நெறிகளை நாம் கடைப்பிடித்து வாழும்போது நல்முறையில் வாழ்ந்து வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பது திண்ணம்.
REFERENCES:
- புலியூர்க்கேசிகன், (2009), கலித்தொகை – மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை.
- புலவர் குழந்தை, (2005), திருவள்ளுவர் செய்த திருக்குறள் – உரை, சாரதா பதிப்பகம், சென்னை.
- கனகசபாபதி, தை.ஆ., (1937), கலித்தொகை மூலமும் விளக்கவுரையும் – பாலைக்கலி, பன்னூற் கழகம், சென்னை.
- தேவி ராஜேஸ்வரி, சி., (2011), “நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர் உணர்த்தும் வாழ்வியல் அறங்கள்”, பன்னிரு திருமுறை ஆய்வுநூல், மாணிக்கவாசகர் பதிப்பகம், சென்னை.
- இராசமாணிக்கனார்.மா., (2003), கால ஆராய்ச்சி, அலமு பதிப்பகம், சென்னை.
- குமரன், எஸ்., (2016), “சங்க இலக்கியம் காட்டும் பண்பாடும் வாழ்வியல் அறங்களும்”, தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் கூறுகள், தமிழ்த்துறை, அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், கோயாம்புத்தூர்.
- http://vairamani-lakshmi.blogspot.com/2011/08/blog-post_4161.html
- http://www.tamilvu.org/library/l1260/html/l1260mvk.htm
- http://www.dinamani.com/weeklysupplements/tamilmani/2017/may/14/கலித்தொகையில்-கற்புநெறி-2701654.html
- http://tnpschub.blogspot.com/2015/03/blog-post_231.html?m=1