தமிழ் இலக்கணப் பாரம்பரியத்தில் தொல்காப்பியம் தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒன்பது இயல்களாக 27 இயல்கள் இடம்பெற்றுள்ளன. மக்களின் வாழ்வானது அகம், புறம் என்ற தன்மைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு இருந்தது. அக வாழ்விற்கு அளித்த முக்கியத்துவத்தை புற வாழ்விலும் காணமுடிகின்றது. போரில் வீரமரணம் அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு தமிழ் சமுதாயம் விளங்கியதை கண்கூடாகக் காணமுடிகின்றது.
தொல்காப்பியம் அகமரபுகளை எடுத்துக் கூறியதோடு புறத்திணை மரபுகளையும் அடையாளப்படுத்துகிறது. போருக்கு ஆயத்தமாகும் செயல்களையும், போரின்போது நிகழும் நிகழ்வுகளையும், போருக்குப் பின்பு நடைபெறுவனவற்றையும் காட்சிப்படுத்துகிறது. புறத்திணைகளாக வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய திணைகளாகக் குறிப்பிடப்படுகின்றது. ஒவ்வொரு திணையிலும் எத்தனை துறைகள் காணப்படுகின்றன. அதில் எத்தகைய மரபுகள் பின்பற்றப்பட்டிருந்தன என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. வீர உணர்விற்கு அளிக்கும் முக்கியத்துவம் குறைந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தமிழ் சமுதாயத்தில் நிலவிய போர் மரபுகளை காட்சிப்படுத்தும் நோக்கத்தில் இக்கட்டுரை அமைகின்றது.
தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள்
மக்களின் அகவாழ்வானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்று 7 பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு திணைகளும் அகத்திணைகளுக்கு புறமாக அமைவதாகத் தொல்காப்பியம் சுட்டிக்காட்டியுள்ளது. அக வாழ்வும், புற வாழ்வுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தே விளங்கியதைக் காணமுடிகின்றது.
வெட்சி திணை
வெட்சித்திணை குறிஞ்சித் திணைக்கு புறமாக அமையும் அது 14 துறைகளை உடையது என்பதை தொல்காப்பிய நூற்பா விளக்கம் அளிக்கிறது. இதனை,
“வெட்சி தானே குறிஞ்சியது புறனே
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே“
(தொல்.பொருள்.59)
என்னும் நூற்பா குறிப்பிடுவதன் மூலம் தெளிவாகின்றது.
வெட்சித் திணையின் இலக்கணம்
பண்டையக் காலத்தில் ஆநிரைகள் ஒரு நாட்டின் செல்வமாக விளங்கின. தம் நாட்டுச் செல்வ வளத்தைப் பெருக்கும் நோக்கத்தோடு பகைவர் நாட்டு ஆநிரைகள் கவரப்பட்டனர். ஆநிரை கவர்தலானது வெட்சிப் போர் என்று அழைக்கப்பட்டது. இதனை,
“வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்” (தொல்.பொருள்.60)
என்னும் நூற்பா எடுத்துக் கூறுகின்றது.
அரசனின் கட்டளைக்கு ஏற்ப வீரர்கள் பகைவர் நாட்டில் சென்று பிறர் அறியாமல் ஆநிரைகளைக் கவர்ந்து கொண்டு வருதல் ஆகும். அவ்வாறு கவர்ந்து வந்த ஆநிரைகளுக்குப் போதிய தீவனம் அளித்து காப்பதும் கடமையாகக் கருதப்பட்டது. வெட்சி வீரர்கள் வெட்சிப்பூ அணிந்திருந்தனர். அகவாழ்விலும், புற வாழ்விலும் மலருக்குச் சிறப்பிடம் வழங்கியிருந்ததை அறியமுடிகின்றது.
வெட்சித் திணைக்குரிய துறைகள்
வெட்சி வீரர்கள் பகைவர் நாட்டில் ஆநிரை கவரச் செல்லும்போது படையில் ஓசை எழுகின்றது. வீரர்களால் நற்சொல், நல் நிமித்தங்கள் பார்க்கப்பட்டது. ஒற்றர்களின் துணையினால் பகைவரின் நாட்டுச் சூழல் அறியப்பட்டது. வீரர்கள் ஆநிரைகளை எந்த வருத்தமும் ஏற்படாமல் ஊர்ப்புறத்தே கொண்டு சேர்த்தனர். வீரர்கள் வெற்றிக் கூத்தாடி மகிழ்ச்சியுடன் உணவு உண்டனர். போரில் உதவிய அனைவருக்கும் ஆநிரைகளை கொடையாகக் கொடுத்தனர். இது போன்ற பல செயல்களும் வெட்சிப் போரில் போது நடைபெற்றது.
போர் செய்வதற்கு முன்பாக பல ஆயத்த செயல்களும், போரின் போது பல நிகழ்வுகளும் போர் நடைபெற்ற பின்விளைவுகளாக பல செயல்களும் மேற்கொண்டதை அறிய முடிகின்றது.
வெட்சி வீரர்களின் குடிப்பெருமை கூறப்பட்டது வெற்றித் தெய்வமாகக் கருதப்படும் கொற்றவை குறித்தும் குறிப்பிடப்படுகின்றது. இதனை,
’வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ‘
திருமுருகு.258-259
என்ற பாடல் வரி குறிப்பிடுவதன் மூலம் உறுதியாகின்றது.
வெட்சித்திணையில் கரந்தைத் திணை குறித்தும் குறிப்பிடப்படுகின்றது.
கரந்தைத் திணை
கரந்தைத் திணை என்பது நிரை மீட்டல் ஆகும்.
”நாகுமுலை யன்ன நறுப்பூங் கரந்தை
விரகறி யாளன் மரபிற் சூட்ட
நிரையிவன் தந்து நடுகல் ஆகிய
வென்வேல் விடலை” (புறம்.161:13-16)
என்னும் பாடல் கரந்தை வீரர்கள் குறித்து எடுத்துக் கூறுகின்றது.
கரந்தைத் திணையில் வேலன் வெறியாடல் நிகழ்த்தல், அரசனைத் திருமாலுடன் ஒப்பிடல், வீரர்களின் வீரக் கழல்களை புகழ்ந்து கூறுதல் ஆநிரைகளை மீட்டல், ஆநிரைப் போரில் இறந்த வீரனுக்காக நடுகல் எடுத்தல் போன்ற பல நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.
நடுகல் அமைத்தல் குறித்து,
”காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மரபிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட எழுமூன்று துறைத்தே”. (தொல்.பொருள்.63)
கரந்தைத் திணையானது 21 துறைகளை உடையது. கரந்தை வீரனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. நடுக்கல் அமைக்கும்போது முதலில் கல்லைத் தேர்வு செய்தனர். அதை நீராட்டி உரிய இடத்தில் நட்டனர். நடப்பட்ட கல்லைச் சுற்றிலும் பந்தல் அமைக்கப்பட்டது. பின்பு நடுகல்லை வழிபட்டனர்.
”நடுகல் வழிபாடு குறித்து,
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறம்.335:11-12)
என்ற பாடல் வரிகள் நடுகல் வழிபாட்டின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
வெட்சி, கரந்தைத் திணைகள் குறித்து “சீவகசிந்தாமணியில் கோவிந்தையார் இலம்பகத்தில் ஆநிரை கவர்தல், மீட்டல் பற்றிய சொய்திகள் இடம் பெற்றிருந்ததை அறிய முடிகின்றது. பல்லவர் காலத்துக் கல்வொட்டுக்களிலும் (கி.பி600-900) வெட்சி, கரந்தை வீரர்களின் மறச் செயல்களும் வீரமரணமும் குறிக்கப் பெற்றுள்ளன”. (புறத்திணை வாழ்வியல்: பக்.86-87) என்று சோ.ந.கந்தசாமி குறிப்பிடுவதன் மூலம் ஆநிரை கவர்தல், மீட்டல் ஆகிய இரு செயல்களும் போர் மரபின் அடிப்படையாக விளங்கியதை விளங்கிக் கொள்ள முடிகின்றன.
வஞ்சித்திணை
அரசன் தன்னுடைய நாட்டின் எல்லையை விரிவு படுத்துவதற்காக மண் மீதுள்ள விருப்பத்தின் காரணமாக வேற்று நாட்டின் மீது படை எடுத்துச் செல்வது வஞ்சித்திணை ஆகும்.
“வஞ்சி தானே முல்லையது புறனை
எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தன்றே”
(தொல். பொருள்.64)
என்ற நூற்பா குறிப்பிடப்படுகின்றது.
வஞ்சித் திணையில் பகைவர் நாட்டை தீயிட்டு அழிக்கப்படுகிறது. வீரர்களுக்கு படைக் கருவிகளை வழங்குதல். பகைவர்களை எதிர்த்து நின்று போர் செய்தல். வீரனின் பெருமையை எடுத்துக் கூறப்படுகின்றது. வீரர்களுக்கு பெருஞ்சோறு அறிக்கப்படுகிறது. திறைப் பொருட்களை தோற்றவனிடம் இருந்து பெறுதல் போன்ற 13 துறைகள் குறிப்பிடப்படுகின்றன.
உழிஞைத் திணை
உழிஞைத் திணை குறித்து,
”உழிஞை தானைனே மருதத்துப் புறனே
முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
அனைநெறி மரபிற்று ஆகும் என்ப.
(தொல்.பொருள்.66)
உழிஞைத் திணையானது மருதத்திணைக்குப் புறமாக அமைகின்றது. கோட்டைகளின் மதிலை உள்ளிருப்பவர்கள் காவல் காப்பதும் மதிலுக்கு வெளியில் இருப்பவர்கள் மதிலைத் தாக்க முற்படுவதும் உழிஞைத் திணை ஆகும்.
இத்திணை 8 துறைகளை உடையது. பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதிய அணசனின் வெற்றியைக் குறிப்பிடுகிறது. வீரர்கள் மதிலின் புறத்தே தறுகியிருத்தல் பகை அரசனின் அருந்திய நிலையை எடுத்துக் கூறுதல் உழிஞை வீரர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் நொச்சி வீரர்கள் மதிலைக் காத்தல் இவை போன்ற செயல்கள் குறிப்பிடப்படுகின்றன.
தும்பைத் திணை
”தும்பை தானே நெய்தலது புறனே
மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை அழிக்குஞ் சிறப்பிற் றென்ப”
(தொல்.பொருள்.70)
என்ற நூற்பா தும்பைத் திணை குறித்து விளக்குகிறது.
தும்பைத் திணை நெய்தல் திணைக்குப் புறமாக அமைகின்றது. போர் புரிவதையே தன் வலிமையாகக் கருதிய பகை அரசனின் வலிமையை அடக்குவதாகும். இரு அரசர்களும் ஒரு போர்க்களத்தில் போர் புரிகின்றனர். இது 12 துறைகளை உடையது.
படை வீரர்களின் அதிகப்படியான எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றது. பகைவரை ஒரு வீரன் தான் ஒருவனாகவே நின்று போர் செய்த வீரச் செயலை எடுத்துரைக்கின்றது. எதிரிப் படையை வெற்றி பெற்ற தன்மையை விளக்குகின்றது. இவை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றதை அறிந்து கொள்ள முடிகின்றது.
வாகைத்திணை
”வாகை தானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப” (தொல்.பொருள்.73)
என்ற நூற்பா குறிப்பிடுகின்றது.
வாகைத்திணை பாலைத் திணைக்கு புறமாகக் கருதப்படுகின்றது. நான்கு வருணத்தாராகிய மக்கள் (வலியும் வருத்தமும் இல்லாமல் இயல்பாக ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள்), அறிவர் (சான்றோர்கள்), தாபதர் (துறவிகள்) ஆகியவர்கள் தம்முடைய செயல்களில் சிறந்து விளங்குவதையே வாழ்க்கைக் குறிக்கோளாகக் கடைப்பிடித்தார்கள். அத்தகையவர்கருக்கு ஏற்படும் சிறப்பும் வெற்றியும் வாகை என்று குறிப்பிடப்படுகின்றது.
இத்திணை 18 துறைகளை உடையது. வீரர்ககள் கூதிர், வேனில் என்ற இரு பாசறைகளில் தங்கியிருத்தல். தேரின் பின்னால் மகளிர் குரவைக் கூத்தாடினர். வீரர்கள் வெற்றி பெறுவதற்காக வஞ்சினம் கூறிக் கொண்டனர். துறவு குறித்தும் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக அமையக்கூடிய காம ஆசையை நீக்கி பக்குவப்பட்ட மனப்பான்மையைக் குறிப்பிடுகின்றது. இவை போன்ற பல ஒழுக்கங்களும் விளக்கப்படுகின்றன.
காஞ்சித் திணை
”காஞ்சித் திணையை,
காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே. (தொல்.பொருள்.76)
என்ற நூற்பா விளக்குகின்றது.
காஞ்சித் திணை பெருந்திணைக்கு புறமாக அமைகின்றது. ஒருவன் வீடுபேறு அடைவதற்காக மூன்று நிலைகளிலும் அறம், பொருள், இன்பம் என்றும் உயிரும், உடலும், செல்வமும், இளமையும் ஆகியவற்றின் நிலையில்லாத தன்மையை சான்றோர்கள் குறிப்பிடுவது காஞ்சித் திணை ஆகும்.
20 துறைகளை உடையது. சான்றோர்கள் கூற்றுபவனின் செயலை அறிவுறுத்திக் கூறியதைக் குறிப்பிடுகின்றது. வாழ்க்கை நிலையில்லாததால் வீரன் விழுப்புண்ணைக் கிழித்துக் கொண்டு இறக்கும் செயலைக் குறிப்பிடுகின்றது. வீரனைப் பேய்கள், காவல் காக்கும் செயலை எடுத்துக்கூறுதல் இறந்தவர்களின் நல்லியல்புகள் குறித்துச் சுட்டப்படுகின்றது. இவை போன்ற பல செயல்கள் விளக்கமளிப்பதை அறிய முடிகின்றது.
பாடாண் திணை
”பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே.” (தொல்.பொருள்.78)
பாடாண் திணை கைக்கிளைக்குப் புறமாக அமைகின்றது. ஆண்மகனின் அருஞ்செயல்களையும், ஒழுக்கலாறுகளையும் எடுத்துரைக்கின்றது.
இது 8 வகையாகக் குறிப்பிடப்படுகின்றன. அரசனின் இயல்பு குறித்து எடுத்துக் கூறப்படுகின்றது. மற்றவர்களுக்குப் பொருட்களை கொடுத்தவனைப் புகழ்ந்தும் கொடுக்காதவனை இகழ்ந்தும் கூறப்படுகின்றது. அரசன் அந்தணர்களுக்கு பசுவைத் தானமாகக் கொடுத்ததை விளக்குகின்றது. அரசனை காக்கும்படி வழிபாடு தெய்வத்தை வேண்டினர். இவை போன்ற பல செயல்களும் விளக்கப்படுகின்றன.
முடிவுரை
தமிழ்ச் சமூகமானது காதலையும், வீரத்தையும் முக்கியமாகக் கருதியது. வீர உணர்வுடன் வாழ்வதே பெருமையாக எண்ணப்பட்டது. வீரர்கள் தம் வீரத்தை நிலைநாட்டி தங்களை பெருமைப் படுத்திக் கொள்வதற்காகப் பாடுபட்டனர். அத்தகைய தன்மைகளின் தொல்காப்பியம் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு திணைகளை அடிப்படையாகக் கொண்டு புறத்திணை மரபுகளை எடுத்துக் கூறி தமிழர்கள் வீரத்திற்கு அளித்த சிறப்பினை நினைவூட்டுவதாக அமைகின்றது.