பாநயங்களில் உரிச்சொல் பயன்பாடு (நான்மணிக்கடிகை)
முன்னுரை
கருத்துப் பரிமாற்றத்தில் மொழியின் பங்கு குறிப்பிடத்தக்கது . அம்மொழி சொற்களின் கூட்டிணைப்பினால் வடிவம் பெறுகின்றன. அச்சொற்களினை பயன்பாடு மற்றும் பொருண்மையின் அடிப்படையில் நான்கென இலக்கண நூலார் வகுத்துரைக்கின்றனர். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்களுள் ஒன்றாக உரிச்சொல் விளங்குகிறது. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் உரியியலில் உரிச்சொல்லிற்கான இலக்கணத்தையும் உரிச்சொற்களையும் அவ்வுரிச்சொற்களுக்கானப் பொருண்மையினையும் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தில் மொத்தம் 120 உரிச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. பாக்களில் இடம்பெற்றுள்ள நயங்களே பாடல்களுக்கு அழகு சோ்க்கின்றன. சொற்களை அடிப்படையாகக் கொண்டே நாம் நயங்களை கணக்கிடுகிறோம். அவ்வகையில் உரிச்சொற்களும் நயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அறத்தினைப் போதிக்கும் வகையில் அமைந்த நூலான நான்மணிக்கடிகையில் உரிச்சொல் எவ்வாறு நயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
தொல்காப்பியத்தில் சொற்களுக்கான இலக்கணம்:
எழுத்துக்களால் அமைவது சொல். சொல்லப்படுவதால் சொல் என்பது காரணப் பெயராகும். இது மொழி, கிளவி, வார்த்தை என்னும் வேறு பெயர்களாலும் சுட்டப்பெறும். சொல்லிற்கு தொல்காப்பியர் கூறும் இலக்கணம் பின்வருமாறு,
சொற்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு பொருளினை உணர்த்தியே வருகின்றன என்பதை,
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.” 1
(தொல்(சொல்);சேனாவரையர்;நூற்பா-640)
என்னும் நூற்பாவின் வாயிலாக அறிய முடிகிறது.
சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும் என்பதை,
“சொல்லெனப் படுப பெயரே வினையென்று
ஆயிரண்டு என்ப அறிந்திசி னோரே.”2
(தொல்(சொல்); சேனாவரையர்; நூற்பா-643)
“இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப.”3
(தொல்(சொல்); சேனாவரையர்; நூற்பா-644)
என்னும் நூற்பாக்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் இணைந்து ஒரு வாக்கியத்தை உருவாக்க இயலும். ஆனால் இடைச்சொற்களாலும் உரிச்சொற்களாலும் பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களின் உதவியின்றி தனித்து இயங்க இயலாது. பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களைச் சார்ந்தே இடைச்சொற்களும் உரிச்சொற்களும் இயங்குகின்றன. எனவே தான், தொல்காப்பியர் பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் முதன்மைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளார்.
சொற்கள் பொருளுணர்த்தும் முறை:
சொற்கள் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பொருளினை உணர்த்தி வரும் என்பதை,
“தெரிபுவேறு நிலையலுங் குறிப்பில் தோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை நிலையே”.4
(தொல்(சொல்); சேனாவரையர்; நூற்பா-644)
என்னும் நூற்பாவின் வாயிலாக அறிய முடிகின்றது.
தொல்காப்பியத்தில் உரிச்சொற்களுக்கான இலக்கணம்:
அகத்தியரின் மாணவரான தொல்காப்பியரால் இயற்றப்பட்டது தொல்காப்பியம். தமிழில் கிடைத்த மிகப் பழமையான இலக்கண நூலாகத் தொல்காப்பியம் விளங்குகின்றது. உரிச்சொல் குறித்து,
“உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
இசையினும் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்
பெயரினும் வினையினும் மெய்தடு மாறி
ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்
பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்
பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்”.5
(தொல்(சொல்); சேனாவரையர்; நூற்பா-782)
என்னும் நூற்பாவின் வாயிலாக,
1) உரிச்சொல்லானது இசை, குறிப்பு, பண்பெனும் பொருள்களை அடிப்படையாகக்
கொண்டு தோன்றும்.
2) பெயர் போலவும் வினை போலவும் தம் உருபு தடுமாறும்.
3) ஒரு சொல் பல பொருளைப் பெற்று வரும்.
4) பல சொல் ஒரு பொருளைப் பெற்றும் வரும்.
5) கேட்பவரால் பயிலப்படாத சொல்லைப் பயின்றப் பொருளோடு சார்த்திப்
பொருளை உணர்த்தும்.
6) தமக்குரிய இயல்பில் நின்றும் தாம் பொருந்தி நிற்கும் பெயரும் வினையுமாகிய
நிலைக்களன்களால் வேறுவேறு பொருள்களை உணர்த்தும் என்பதை அறிய
முடிகிறது.
முத்து வீரியமும் தொல்காப்பியமும் உரிச்சொல் குறித்து ஒரே விதமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது.
“தமக்கியல்பில்லாத இடைச்சொற் போலாது இசை குறிப்புப் பண்பெனும் பொருட்குத் தாமே உரியவாகலின் உரிச்சொல்லாயிற்று”6 (தொல்(சொல்); கி. ராசா; ப-102) என்று சேனாவரையர் உரிச்சொல்லுக்கு விளக்கம் அளிக்கிறார்.
“நால்வகைச் சொற்களுள் செய்யுளுக்கு மட்டுமே உரிமை பூண்டு வரும் சொற்கள் உரிச்சொற்கள். இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள் உணர்த்துவதற்குத் தாமே உரியன ஆதலின் உரிச்சொல் என்று பெயர் பெற்றது” (நன்னூல்(சொல்);ச.திருஞானசம்பந்தன்;ப-128)7 என்றும் கூறலாம் என தொல்காப்பிய சொல்லதிகாரத்திற்கு உரையெழுதிய முனைவர் ச.திருஞானசம்பந்தம் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியர் வழக்கில் பயன்படுத்தாத பலருக்குத் தெரியாத உரிச்சொற்களை மட்டுமே தொல்காப்பியத்தில் விளக்குகின்றார் என்பதை,
“வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன”8
(தொல்(சொல்); சேனாவரையர்; நூற்பா-783)
என்னும் நூற்பாவின் வழி அறிய முடிகின்றது.
தொல்காப்பியர் குறிப்பிடும் உரிச்சொற்கள்
தொல்காப்பியர் இசை, குறிப்பு, பண்பு என்னும் அடிப்படையில் உரிச்சொற்கள் தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தில் இசை, குறிப்பு, பண்பு அடிப்படையில் 120 உரிச்சொற்கள் காணப்படுகின்றன. அதில் அழுங்கல், இரங்கல் ஆகிய இரண்டு சொற்களும் இசை உரிச்சொற்களாகவும் குறிப்பு உரிச்சொற்களாகவும் இடம்பெற்றுள்ளன.
பாநயம்
பாவினைச் செய்யுள் என்றும் கூறுவர். யாப்பு, தூக்கு, பாட்டு என்னும் சொற்கள் பாவினைக் குறிக்கும் ஒருபொருட் பன்முகக் கிளவியாக விளங்குகிறது என்பதை,
“யாப்புந்
தூக்கும் பாட்டும் பாவும் ஒன்றென
நோக்கிற் றென்ப நுணங்கி யோரே”9
( யாப்பருங்கலம் ; ப-17 ).
என்னும் இந்நூற்பாவின் வாயிலாக அறியலாம்.
பா மற்றும் நயம் என்னும் சொல்லிற்கு தமிழ் நிகண்டுகள் கூறும் பொருள், பா என்னும் சொல்லிற்கு கவி, கவிதை, செய்யுள், பாட்டு, தூக்கு மற்றும் யாப்பு என்னும் பொருளினையும் நயம் என்னும் சொல்லிற்கு கண்ணோட்டம் மற்றும் நன்மை என்னும் பொருளினையும் தருகிறது.
பாநயம் = பா+ நயம்; பா – யாப்பு. நயம் = கண்ணோட்டம்.
இறுதியாக, பாநயம் என்னும் சொல்லிற்கு யாப்பினை பற்றிய ஒரு கண்ணோட்டம் என்று நாம் பொருள் கொள்ளலாம்.
பாக்களில் நயங்களைப் பயன்படுத்தியமைக்கான காரணங்கள்
மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் படிப்பவரின் மனதைக் கவரும் பொருட்டும் கவிக்கு அழகுசேர்க்கும் பொருட்டும் இலக்கியங்களில் எதுகை, மோனை, இயைபு, முரண், கற்பனை, அணி முதலான நயங்கள் பாக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நான்மணிக்கடிகை – பாநயங்களில் உரிச்சொல் பயன்பாடு
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ அல்லது பொருளோ மீண்டும் மீண்டும் வருவது பின்வருநிலையணி ஆகும் என்பதை,
“முன்வரும் சொல்லும் பொருளும் பலவயிற்
பின்வரும் என்னிற் பின்வரு நிலையே”10
(தண்டியலங்காரம்; நூற்பா-41)
என்னும் நூற்பா குறிப்பிடுகிறது. பின்வருநிலையணியை சொற்பின்வருநிலையணி, பொருள் பின்வருநிவையணி, சொற்பொருள் பின்வருநிலையணி என மூன்று வகைகளாகப் பிரிப்பர்.
- செய்யுளில் முன்னா் வந்த சொல் பின்னா் பல இடத்தும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது – சொற்பின்வருநிலையணி.
- செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது – பின்வருநிலையணி.
- செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பலமுறை வருவது – சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
நயங்களின் பொருட்டும் உரிச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு கீழ்க்கண்ட பாடல்கள் ஒரு நல்ல சான்றாதாரமாக விளங்குகின்றது.
நன்று
நன்று என்னும் சொல் பெரிது என்னும் பொருளினைத் தருகின்றது என்பதை,
“நன்று பெரிதாகும்”.11
(தொல்(சொல்);சேனாவரையா் உரை; நூற்பா-826)
என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகிறது.
பண்ணிசை அமையாத யாழினை விட பறை மேலானது. பெருமையில்லாத மாந்தரை விட நெஞ்சை ஒரு வழியில் செலுத்துகின்ற பெண் மேலானவள். கெட்டுப் போன பண்டங்களை உண்பதை விடப் பசித்திருத்தல் மேலானது. விரும்பினாரை நீங்கி வாழ்தலை விட தீப்புகுதல் மேலானது என்பதை,
“பறைநன்று பண்ணமையா யாழின் நிறைநின்ற
பெண்நன்று பீடிலா மாந்தரின் – பண்அழிந்(து)
ஆர்தலின் நன்று பசித்தல் பசைந்தாரின்
தீர்தலின் தீப்புகுதல் நன்று.”12
(நான்மணிக்கடிகை; பா-15)
என்னும் பாடல் அறிவுறுத்துகிறது. இப்பாடலில் நன்று என்னும் உரிச்சொல் நான்கு முறை அமைந்து மேலானது என்னும் ஒரே பொருளைத் தருகின்றமையால் சொற்பொருள் பின்வருநிலையணி அடிப்படையில் அமைந்துள்ளது.
பலர் ஒன்று சேர்ந்து வாழும் ஊா் சிறந்தது. ஐயந்திரிபறக் கற்கும் ஒருவனின் அறிவு சிறந்தது. கூர்மையான கொம்பினையுடைய காளைகள் உடனிருந்தால் பசுக்கூட்டங்கள் சிறப்படையும். வறியவர்களுக்கு உணவு அளிப்பதனால் ஒருவனது குடி மேலோங்கும் என்பதை,
“பதிநன்று பல்லார் உறையின் ஒருவன்
மதிநன்று மாசறக் கற்பின் – துதிமருப்பின்
ஏற்றான் வீறெய்தும் இனநிரைத் தான்கொடுக்கும்
சோற்றான்வீ(று) எய்தும் குடி.”13
(நான்மணிக்கடிகை; பா-72)
என்னும் பாடல் உணர்த்துகிறது. இப்பாடலில் நன்று என்னும் உரிச்சொல் இருமுறை அமைந்து இரண்டு முறையும் சிறந்தது என்னும் ஒரே பொருளையேத் தருகின்றமையால் சொற்பொருள் பின்வருநிலையணி அடிப்படையில் அமைந்துள்ளது. தற்காலத்தில் நன்று என்னும் சொல் நல்லது, சிறந்தது, மேலானது என்னும் பொருள்களைத் தருகின்றது.
உவப்பு
உவப்பு என்னும் சொல் மகிழ்ச்சியைக் குறிக்கும் என்பதை,
“உகப்பே உயா்தல்; உவப்பே உவகை”.14
(தொல்(சொல்);சேனாவரையா் உரை; நூற்பா-789)
என்னும் இந்நூற்பா விளக்குகிறது.
யானையை உடையவர் அதன் சினம் கண்டு மகிழ்வர். குதிரையின் விரைந்த ஓட்டத்தைக் கண்டு மன்னர் மகிழ்வர். நல்லியல்புடைய ஆடவர் நன்மங்கையரின் நாணத்தைக் கண்டு மகிழ்வா். தீய பெண்டிர்பால் தீய ஆடவர் தீய ஒழுக்கத்தில் ஈடுபடுவதை எண்ணியே மகிழ்வா். இத்தகையத் தீய ஒழுக்கம் தீமையை உண்டாக்கும் என்பதை,
“யானை யுடையார் கதனுவப்பர் மன்னர்
கடும்பரிமாக் காதலி(து) ஊர்வர் – கொடுங்குழை
நல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை
அல்லார் உவப்பது கேடு.”15
(நான்மணிக்கடிகை; பா-56)
என்னும் பாடல் உணர்த்துகிறது. இப்பாடலில் உவப்ப என்னும் சொல் மூன்று முறை இடம்பெற்று மும்முறையும் மகிழ்ச்சி என்னும் ஒரே பொருளையேத் தருகிறது. இப்பாடலும் சொற்பொருள் பின்வருநிலையணி அடிப்படையில் அமைந்துள்ளது.
அதிர்வு
அதிர்வு என்னும் சொல் நடுக்கம் என்னும் பொருளினைக் குறிப்பதாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை,
“அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்”.16
(தொல்(சொல்);சேனாவரையா் உரை; நூற்பா-799)
என்னும் நூற்பா வழி அறிய முடிகிறது.
கணவன் கலங்குவானாயின் அவன் மனைவியும் கலங்குவாள். கற்றறிந்த அறிஞன் கலங்குவானாயின் அவன் கருத்துக்கள் கலங்கும் (தெளிவாக இருக்காது). குடிமக்கள் கலங்கினால் கொற்றவனது ஆட்சியும் கலங்கும். யாழ் நரம்பின் கட்டுகள் அதிர்ந்தால் பாடல்களும் அதிர்ந்து போகும் என்பதை,
“பெற்றான் அதிர்ப்பில் பிணையன்னாள் தானதிர்க்கும்
கற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் – பற்றிய
மண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்
பாடல் அதிர்ந்து விடும்.”17
(நான்மணிக்கடிகை; பா-21)
என்னும் பாடல் தெளிவுபடுத்துகிறது. இப்பாடலின் கண் பயின்று வந்துள்ள அதிர்ப்பு, அதிர்க்கும் என்னும் சொற்கள் கலங்கும் பொருளினைத் தருவதாக சொற்பொருள்பின்வருநிலையணி அடிப்படையில் அமைந்துள்ளது. இப்பாடலின் மூன்றாவது அடியில் நான்காவது சீரிலுள்ள அதிர்ப்பு என்னும் சொல்லும் நான்காவது அடியிலுள்ள அதிர்ந்து என்னும் சொல்லும் வினைச்சொல்லாக வந்துள்ளது. மற்ற இடங்களிலுள்ள அதிர்ப்பு, அதிர்க்கும் என்னும் சொற்கள் கலக்கத்தினைக் குறிக்கும் பண்பு உரிச்சொல்லாக இடம்பெற்றுள்ளன.
உரிச்சொற்களைத் தொல்காப்பியர் குறைச்சொற்கிளவியாகக் குறிப்பிட்டுள்ளார் என்பதை,
“உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்
குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி
நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும்”18
(தொல்(எழுத்து); சேனாவரையர்; நூற்பா-482)
என்னும் நூற்பா விளக்குகிறது. நான்மணிக்கடிகையில் அதிர்வு (அதிர்ப்பு,அதிர்க்கும்) என்னும் சொல்லும் உவப்பு (உவப்பா், உவப்பது) என்னும் சொல்லும் அப்படியே முழுமையாக இடம்பெறாமல் குறைச்சொற்கிளவியாக இடம்பெற்றுள்ளது.
முடிவுரை
- இசை, குறிப்பு, பண்பினை அடிப்படையாகக் கொண்டு ஒரு சொல் பல பொருளைப் பெற்றும் பலசொல் ஒரு பொருளைப் பெற்றும் பெயர், வினைகளைச் சார்ந்து செய்யுளுக்கு உரியவையாய் வருவது உரிச்சொல்லாகும்.
- தொல்காப்பியத்தில் மொத்தம் 120 உரிச்சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- யாப்பினைப் பற்றிய கண்ணோட்டமே பாநயமாகும். மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் படிப்பவரின் மனதைக் கவரும் பொருட்டும் கவிக்கு அழகுசேர்க்கும் பொருட்டும் பாக்களில் எதுகை, மோனை, இயைபு, முரண், கற்பனை, அணி முதலான நயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் நான்மணிக்கடிகையில் நன்று, அதிர்வு, உவப்பு ஆகிய சொற்கள் சொற்பொருள் பின்வருநிலையணி அடிப்படையில் அமைந்து பாக்களுக்கு நயம் பயக்கின்றது.
- அதிர்வு மற்றும் உவப்பு என்னும் உரிச்சொற்கள் குறைச்சொற்கிளவியாக நான்மணிக்கடிகையில் இடம்பெற்றுள்ளன. நான்மணிக்கடிகையில் நன்று என்னும் சொல் மேலானது, சிறந்தது என்னும் பொருளிலும் உவப்பு என்னும் சொல் மகிழ்ச்சி என்னும் பொருளிலும் அதிர்வு என்னும் சொல் கலக்கம் என்னும் பொருளினைக் குறிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- தற்காலத்தில் நன்று, அதிர்வு, உவப்பு ஆகிய சொற்கள் பயன்பாட்டில் உள்ளன.
துணைநூற்பட்டியல்
1)இராசாராம் – பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும்
தெளிவுரையும் (மூன்றாம் பகுதி),
முதற் பதிப்பு : 1995,
முல்லை நிலையம், பாரதிநகர் முதல் தெரு,
தியாகராய நகர், சென்னை – 600 017.
2)இராமசுப்பிரமணியம்.வ.த – தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும்
விளக்கவுரையும்,
127, பிரகாசம் சாலை, சென்னை – 600 108.
3)இராமசுப்பிரமணியம்.வ.த – தண்டியலங்காரம் மூலமும் தெளிவுரையும்,
முதற் பதிப்பு : ஏப்ரல் 1998,
முல்லை நிலையம், பாரதிநகர் முதல் தெரு,
தியாகராய நகர், சென்னை – 600 017.
4)கந்தையா ந.சி – செந்தமிழ் அகராதி,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தரமணி, சென்னை – 600 013.
5)சுப்பிரமணியன் ச.வே – பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும்
தெளிவுரையும்,
முதற்பதிப்பு : 21, ஜீன் 2010,
மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்,
சென்னை – 600 021.
6)சேனாவரையர் உரை – தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)-
முதற்பதிப்பு : 2005
சாரதா பதிப்பகம்,
ஜி-4, சாந்தி அடுக்ககம்,
3 ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு,
ராயப்பேட்டை, சென்னை – 600 014.
7)திருஞானசம்பந்தம்.ச – பவணந்தி முனிவரின் நன்னூல் – சொல்லதிகாரம்
முதற்பதிப்பு – நவம்பர் 2009
ராஜா பப்ளிகேஷன்,
நெ.10, முதல் தளம், இப்ராஹிம் நகர்,
காஜாமலை, திருச்சி – 23.
8) மெய்யப்பன்.ச – தமிழ் நிகண்டுகள் (தொகுதி – 1),
முதற்பதிப்பு : பிப்ரவரி; 2014,
மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்,
சென்னை 600 021.
9) ராசா.கி – தொல்காப்பியம் (சொல்),
முதற் பதிப்பு : டிசம்பர் 2007.
பாவை பப்ளிகேஷன்ஸ்,
142, ஜானி ஜான் கான் சாலை,
இராயப்பேட்டை, சென்னை – 600 014.
10) வேணுகோபாலப்பிள்ளை.மே.வீ – அமிதாகரனார் இயற்றிய யாப்பருங்கலம்
(பதிப்பாசிரியர்) (பழைய விருத்தியுரையுடன்),
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
தரமணி, சென்னை – 600 005.