Skip to content
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்
E-ISSN: 2456-5148
Facebook page opens in new windowTwitter page opens in new windowDribbble page opens in new window
KALANJIYAM
International Journal of Tamil Studies
KALANJIYAM
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்
Submit Research PapersSubmit Article
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்

சங்க இலக்கியத்தில் கற்பு என்னும் சொல்லின் பொருள்

You are here:
  1. Home
  2. Research Article
  3. சங்க இலக்கியத்தில் கற்பு என்னும் சொல்லின்…

சங்க இலக்கியத்தில் கற்பு என்னும் சொல்லின் பொருள்

PDF
Print 🖨 PDF 📄 eBook 📱

அறிமுகம்
கற்பு என்ற சொல் தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு விவாதப் பொருளாகவே இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது.  என்றாலும் கற்பு என்ற சொல் பற்றிய கருத்தாக்கம் பாரதி,  தந்தை பெரியார் போன்றவர்களிடம் வந்து சேருகிறபோது கடுமையான  விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று.  குறிப்பாக பெரியார், ‘கற்பு என்பதற்குப் “பதிவிரதம்” என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலி கொண்டவர்களாக ஆக்கப்பட்டு விட்டதனாலும் பெண்கள் அடிமையாவதற்கும், புருஷர்கள் மூர்க்கர்களாகிக் கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை. தவிர புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை (குடிஅரசு, 8 -11-1928)’ என்ற சிந்தனையை முன்வைத்துள்ளார்.

பாரதியாரோ,

‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ (பெண்கள் விடுதலைக்கும்மி.5)

என்கிறார். அதாவது கற்பு என்பது, பெண்ணுக்கு மட்டும் உரியதன்று; ஆண், பெண் இருவருக்கும் அது பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.

கற்பு என்ற சொல் பெண்களைக் குறித்ததாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட சூழலில் புதுமைப்பித்தன் ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் ஐயா பொன்னகரம்’ (புதுமைப்பித்தன் சிறுகதைகள், ப.3) என்று பெண்ணுக்கு எதிரான
சமூகத்தினுடைய கட்டமைப்பைக் கிண்டல் செய்துள்ளார்.

இவ்வாறு கற்பு பற்றிய கருத்தாக்கங்கள் தொடர்ச்சியாகப் பெண்ணை மையப்படுத்தியதாக முன்வைக்கப்பட்டும் x மறுக்கப்பட்டும் வருகின்றன. இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழக வரலாற்றில் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ள கற்பு என்ற சொல்லின் அர்த்தங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.

கற்பு என்ற சொல் பெண்ணின் ஒழுக்கம் சார்ந்தது.

பெண்ணின் ஒழுக்கம் என்பது ஆணுக்கும் பொருந்தும்.

இந்த ஒழுக்கம் என்பது உடல் சார்ந்தது.

இந்த ஒழுக்கம் என்பது மனம் சார்ந்தது.

கற்பு என்பதன் பொருள் கல்வி.

என்பனவாக உள்ளன. இவ்வாறு கற்பு என்ற சொல்லுக்கு நாம் பலவாறு பொருள்கொள்ளும் நிலையில், சங்க காலத்தில் (கற்பு) எவ்வாறு பொருள் கொள்ளப்பட்டது என்பது பற்றிய ஒரு முழுமையான பார்வையை முன்வைக்க முயல்கிறது இக்கட்டுரை.

கற்பு என்னும் சொல்

தொல்காப்பியத்தின் பொருளதிகாரப் பகுதியில் திருமணத்திற்குப் பிற்பட்ட வாழ்க்கை மரபுகளை உணர்த்துவது கற்பியல் எனும் பகுதியாகும் என்று சொல்லப்படுகின்றது.

‘கற்பு எனப்படுவது கரணமொடு புணர
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே’ (தொ.கற்.1)

என்ற தொல்காப்பியம் கற்பியலின்  முதல் நூற்பாவிற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் “வரைதலின் பின் இன்னவாறு ஒழுகுதல் வேண்டும் என இருமுது குரவரால் கற்பித்தலின் கற்பாயிற்று,” என்று  விளக்கம் தருகிறார். அவருடைய
விளக்கத்தின்படி பார்க்க கற்பு என்பதற்கு, “பெரியவர்கள் சொன்னபடி நடத்தல்” என்பதுதான் வெளிப்படையான பொருள் என்பது தெளிவாகிறது. இனிச் சங்க இலக்கியப் பாடல்களில் இது எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது எனப் பார்ப்போம்.

பாட்டும் தொகையும் என்று அழைக்கக்கூடிய சங்க இலக்கியப் பாடல்களில் அகப்பாடல் புறப்பாடல் என்ற பேதமின்றி இருவிதமான பாடல்களிலும் கற்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் அந்தச் சொல் பின்வரும் நான்கு விதமான
பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கற்பு என்பது தலைவன் கூறிய சொல்லைக் கேட்டு நடத்தல் என்ற பொருளைத் தருகிறது.

கற்பு என்பது வணங்கத்தக்க தெய்வத்தன்மை என்பதோடு பொருத்திச் சொல்லப்படுகிறது.

கற்பு என்பது கல்வி (கற்றல்) என்ற பொருளைத் தருகிறது.

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும்தான் உரியதா? என்ற வினாவை எழுப்புவதாக உள்ளது.

மேற்கண்ட பொருளில் அமைந்துள்ளவற்றின் உள்ளடக்கம் மற்றும் அவற்றின் பின்புலம் குறித்து இனிக் கண்போம்.

கற்பு -1

கற்பு என்னும் சொல் தலைவன் கூறிய சொல்லைக் கேட்டு நடத்தல் என்ற பொருளில் பயன்படுத்தப் படுகின்றது. அதாவது, தலைவன் கூறிய சொல்லைக்கேட்டு நடத்தல் / தலைவனின் வருகைக்காக காத்திருப்பது என்பது என்ற பொருளில்
குறிக்கப்படுகின்றது.  தலைவனின் வருகைக்காக காத்திருக்க வேண்டும் அவ்வாறு இருக்கக்கூடிய பெண் கற்புடையவள். அதாவது தலைவன் சொன்ன சொல்லை ஏற்றுக் கொண்டு அவனுடைய உடைமைப் பொருளாக வீட்டிற்குள் இருக்கக்கூடிய ஒரு
இயல்பைக் கொண்டவள் என்ற பொருண்மையில் இந்தச் சொல் கையாளப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் கற்பு என்ற சொல் சங்க இலக்கியத்தில் 23 இடங்களில் இருப்பதை பார்க்க முடிகிறது. அவை,

‘…………………   கற்பு மேம்படுவி’ (அகம்.323:7)

 

‘கற்பினின் வழாஅ நற்பல உதவி’ (அகம்.86 :13)

‘நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல்’ (அகம்.9:24)

‘மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய’ (அகம்.33: 2)

‘திருநகர் அடங்கிய மாசுஇல் கற்பின்’ (அகம்.114:13)

‘உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடன் படுவீ ’ (அகம்.136:19)

‘முல்லை சான்ற கற்பின்’ (அகம்.274:13, நற்றி.142 :10)

‘முல்லை சான்ற கற்பின் மெல்லியல்’ (சிறு.பாண்.30)

‘இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்’ (கலி.9:22)

‘நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள்’ (கலி.2:13)

‘ஆறிய கற்பின் அடங்கிய சாயல்’ (பதிற்.16:10)

‘ஆறிய கற்பின் தேறிய நல்லிசை’ (பதிற்.90:49)

‘கற்பு இறை கொண்ட கமழும் சுடர் நுதல்’ (பதிற்.70:15)

‘பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்’ (புறம்.163:2)

‘மறங்கடிந்த அருங் கற்பின்’ (புறம்.166:13)

‘நாண் அலது இல்லாக் கற்பின் வாள்நுதல்’ (புறம்.196:13)

‘அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை’ (புறம்.249:10)

‘கற்புடை மடந்தை தன்புறம் புல்ல’ (புறம்.383:13)

‘நன்றி சான்ற கற்போடு’ (நற்றி.330:10)

‘விளங்கு நகர் அடங்கிய கற்பின்’ (குறு.338:7)

‘மாசுஇல் கற்பின் மடவோள் குழவி’ (நற்றி.15:7)

‘புலத்தலின் சிறந்தது கற்பே’ (பரி.9:16)

என்பனவாகும். இந்த இடங்களில்,

தலைவனின் வருகைக்காக காத்திருக்க வேண்டும்.

கற்புடன் கணவனுடன் வாழவேண்டும்.

நாணத்துடன் தலைவனுக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

வினைமேல் செல்வது தலைவனின் கடன் அதுபோல வீட்டில் அவனுக்காக காத்திருப்பது தலைவியின் கடன்.

உறுதியான நிலைபெற்ற ஒழுக்கத்தைக் கொண்டவள்.

வீட்டிற்குள் அடைந்து கிடப்பது.

மணக்கோலத்தில் தலைவனுக்காக தன்னுடைய உடல் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்படைக்க கூடியவளாக இருக்க வேண்டும்.

முல்லை மலரை சூடிக் கொண்டு தலைவனின் வருகைக்காக காத்து இருக்க வேண்டும்.

தலைவனோடு அடக்கத்துடன் அல்லது ஒழுக்கத்தோடு சென்றால் வாழ்வில் துன்பம் நேராது.

என்ற கட்டுப்பாடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. மேலும், இவ்வாறு இடம்பெற்றுள்ள கற்பு பற்றிய செய்திகளில்,

‘நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மீன் சிறந்தது
காதல் காமம் காமத்து சிறந்தது
விருப்போர்  ஒத்து மெய்யுறு புணர்ச்சி
புலத்தலின் சிறந்தது  கற்பே அதுதான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
பரத்தை உள்ளதுவே பண்புறு கழறல்
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
நாள் அணிந்து உவக்கும் சுணங்கறை அதுவே
கேள் அணங்குற மகனைக் கிளந்துள சுணங்கறை
சுணங்கறைப் பயனும் ஊடலுல் உள்ளதுவே
அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திரார்’ (பரி.9:12-25)

என்ற பரிபாடல் ஒன்பதாம் பாடலில் பரத்தையர் வழி பிரிந்து தலைவன் பூப்பு எய்திய காலத்தில் உடல் இணைவுக்கு உரிய பருவம் வந்ததை உணர்த்தி அவனை வீட்டிற்கு அழைக்கக்கூடிய இயல்பைக் கொண்டவளாக விளங்குபவள் (கற்புடன் உள்ள)

என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது குறிக்கத்தக்கது. அதாவது, ஆண் ஒழுக்கம் என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பெண் என்பவள் அந்த ஆணுடன்தான் இருக்க (ஆணுக்கு அடங்கி வாழ) வேண்டும் என்ற சூழலில்
பயன்படுத்தப்பட்டு இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

கற்பு -2

இரண்டாவதாக கற்பு என்ற சொல் தெய்வத் தன்மை உடையதாகச் சித்தரிக்கப்படுகிறது. குறிப்பாக இது அருந்ததி என்ற ஆரியப் பின்புலத்தோடு பெருவாரியாகக் குறிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. சில பாடல்களில் அருந்ததி என்ற சொல் இல்லை
என்றாலும் உரையாசிரியர்கள் அதை அருந்ததியோடு இணைத்துப் பேசுகிறார்கள். (ஏன் அவ்வாறு உரை எழுதி இருக்கிறார் என்பது குறித்து தனியாக ஆராயப்படவேண்டும்).

இந்த பொருளில் குறிக்கப்படுவதாக17 பாடல்கள் உள்ளன. அவை,

“அணங்குறு  கற்பொடு மடம் கொளச் சாஅய்’ (அகம்.73: 5)

கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய ( அகம்.184:1)

கடவுட் கற்பின் மடவோள் கூற (அகம்.314:15)

வறன் ஒடின் வையகத்து வான்தரும் கற்பினாள் (கலி.16:20)

ஒலிந்த கூந்தல் அறம்சால் கற்பின் (பதிற்.31:24)

காமர் கடவுளும் ஆளும் கற்பின் (பதிற்.65:9)

மீனொடு புரையும் கற்பின் (பதிற்.89 :19)

வடமீன் புரையும் கற்பின் மடமொழி (புறம்.122: 8)

கடவுள் சான்ற கற்பின் சேயிழை (புறம்.198:3)

கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி (குறு.252:4)

அருந்ததி அனைய கற்பின் (ஐங்.442 : 4)

‘செயிர்தீர் கற்பின் சேயிழை கணவன்’ (புறம்.3:6)

மறுஇல் கற்பின் வாணுதல் கணவன் (திரு.6)

சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல் (பெரும்.பாண்.303)

மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் (பரி.5:46)

கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை (பரி.9 : 81)

காமம் களவிட்டு கைகொள் கற்பு உற்றென (பரி.11: 42)

என்பனவாகும். இவை கடவுள், வணங்கத்தக்க என்னும் பொருளிலும் (அகம்.73, 184, 314. புறம். 198.  குறு.252. பதி.31),  மழையைப் பெய்ய வைக்கும் வலிமை என்னும் பொருளிலும் (கலி.16),  அருந்ததியை ஒத்தவள் என்னும் பொருளிலும் (பதி.89. புறம்.122.

ஐங்.442. சிறு.303. பரி.5.),  தெய்வயானை (திரு.6.) மற்றும் முருகனின் மனைவியர் (பரி.9) எனவும் அமைந்துள்ளன.

மேலும், இப்பாடல்களில் ‘அருந்ததி கற்பு’ என்ற பொருண்மை அரசர்களோடு தொடர்புடையதாக அதாவது, அரசிகளுடன் (அரசர்களின் மனைவிகள்) அதிகம் இணைத்துக் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

மேற்கொண்ட கற்பு என்ற சொல்லுக்கான பொருண்மைகளான கற்பு -1 மற்றும் கற்பு – 2 ஆகிய இரண்டிற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை நாம் கவனிக்க முடிகிறது. அதாவது, ஒன்று ஆணின் சொல்லைக்கேட்டு நடப்பது

இன்னொன்று ஏற்கனவே உள்ள ஒரு பெண்ணின், தெய்வத்தின் இயல்பை (ஒழுக்கத்தை) ஒத்திருப்பதாகச் சித்தரிப்பது என அமைந்துள்ளது.

கற்பு – 3

கற்பு என்ற சொல் கல்வி / கற்றல் என்ற பொருளில் நான்கு பாடல்களில் கையாளப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. இது மேற்கண்ட கற்பு என்னும் சொல்லின் பொருள்  கற்பு – 1, மற்றும் கற்பு – 2 ஆகிய இரண்டிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

‘வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்’ (அகம்.106:10)

‘உலகம் தாங்கிய மேம்படு கற்பின்’ (பதி.59:8)

‘கீழ்ப்பால் ஒருவன் கற்பின்’ (புறம்.183 :9)

‘எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்’ (குறு.156:5)

என்ற இந்த நான்கு பாடல்களிலும் கல்வி என்பது முறையே,

·  குற்றமற்ற கல்வி (போர் பயிற்சி)

·  மேம்பட்ட கல்வி (வில்லாற்றல் முதலான)

·  கல்வி கற்றல்

·  ஏட்டில் எழுதாக் கல்வி (வேதம்)

என்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கற்பு – 4

மேற்கண்டவற்றிற்கு (கற்பு – 1,2,3) மாற்றாக கற்பு என்பது பற்றிய ஒரு மாற்றுக் கருத்து மூன்று பாடல்களில் முன்வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அதில் முதலாவதாக கற்பு என்பது

‘இகல் அடு  கற்பின்   மிஞிலியொடு தாக்கி’ (அகம்.396 : 5)

அதாவது, ‘தான் சொன்ன சொல்லிலிருந்து தவறாது நடத்தல் (உறுதிப்பாடு)’ என்ற பொருளில் ஆணுக்கு (ஆய் எயினன்) உரியதாக அகநானூறு 396 ஆவது பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது. இது பெண்ணுக்குரிய ஒழுக்கமாகக்குறிக்கப்படும் கற்பு -1

என்பதின் எதிரிணைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பெண்ணுக்கு உரியதான ஒழுக்கம் ஆணுக்குரியதாக சொல்லப்பட்டுள்ளது. எனினும் பெண்ணுக்கு உரியதான கற்பு -1 என்பது ஆண் சொன்ன சொல்லிலிருந்து தவறாது நடத்தல் என்றிருக்க,

இது ‘தான்சொன்ன சொல்லில் இருந்து தவறாது நடத்தல் (உறுதிப்பாடு)’ என்பதாக உள்ளது.

இரண்டாவதாக, கற்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான் உரியதாக இருக்க வேண்டுமா? என்ற வினாவை எழுப்புவதாக அகநானூறு ஆறாம் பாடல் 6 இல் அமைந்திருக்கிறது.

‘மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என’ (அகம்.6 :13)

என்ற வரியில் கூறப்படும் இது, ‘நீ விரும்பின பரத்தையொடு பூமி நாட்டாரது குளத்தினை நாடிச்சென்று நீர் விளையாடும் களிறும் பிடியும் போல முகம் இனிமையாய் மிக்க அழகினைக் கொண்ட மார்பகத்துப் பூமாலை பொலி வழிய நேற்று வேழக்

கரும்பாலாகிய வெண்மையான புணை தழுவிப் புனல் ஆடினாய்! இன்று இங்கு வந்து மார்பிலுள்ள அழகிய முலையிடத்துத் தோன்றிய தேமலையும் மாசற்ற கற்பினையும் உடையவளே! என் புதல்வன் தாயே என்று வாஞ்சையுடன் பொய்யான

வார்த்தைகளைப் பலகாலம் பணிந்து கூறி முதுமையை இகழாதே’ (அகம். 6:6-18)  என்று  பரத்தையிடம் உறவு கொண்டு திரும்பிய ஆடவனைப் பார்த்து ஒரு பெண் கேட்பதாக அமைகிறது. அதாவது இந்தப் பாடலில் கற்பு என்பதன் நேரடிப் பொருள்

என்னவோ ஆணின் சொல்லைக் கேட்டு நடத்தல் என்பதாகத்தான் உள்ளது. ஆனால் அந்தப் பண்பு ஆணுக்குத் தேவையில்லையா? என்ற கதைசொல்லியின் கேள்வியின் மூலம் ஆணுக்கும் அப்படிப்பட்ட ஒழுக்க நெறி அவசியம் என்ற கருத்து

முன்வைக்கப்படுவதாக பார்க்க முடிகின்றது.

இதற்கு சற்று நெருக்கமான பொருளில் அகநானூற்று 198 ஆம் பாடலில் அச்சொல் கைய‍ளப்பட்டுள்ளது.

‘ஆன்ற கற்பின் சான்ற  பெரியள்’ (அகம்.198:12)

அதாவது, கற்பைவிட சூரர மகளிர் பெரியவர் என்ற பொருளில் கையாளப்பட்டிருக்கிறது. இது, களவில் தலைவனைத் தேடி சென்று அவனோடு இன்பத்தை நுகர்ந்து விட்டு திரும்பிச் செல்லுகிற தலைவியைப் பார்த்து, தலைவன் ‘அவள் நிறைந்த
கற்பினால் உயர்ந்த பெருமையுடைய அழகிய மாமை நிறம் கொண்ட பெண்ணும் அல்லள்; தென் திசைக்கண் உள்ள ஆய் என்பானது நல்ல நாட்டில் தெய்வம் வாழும் மழையில், கவிரம் என்னும் பெயரினையுடைய அச்சம் தரும் பக்கமலையில், அழகிய மலர்களையுடைய நீர் நிறைந்த சுனையில் வாழ்கின்ற தெய்வமாகிய சூரர மகளே!’(அகம்.198:12-17) என்று சொல்வதாக உள்ளது.

இவ்வாறாக இந்த மூன்று பாடல்களும் பெண்ணுக்கு உரியதாகச் சொல்லப்பட்ட / சொல்லப்பட்டு வரும் “கற்பு” என்ற சொல்லாடலை ஆணுக்குரிய ஒழுக்கமாகவும் (சொன்ன சொல் தவறாமை), பெண்ணுக்குரிய ஒழுக்கம் ஆணுக்கும் வேண்டும்
என்பதாகவும், ஆணுக்கு அடங்கி இருக்கும் (கற்பை விட) தன்னுடைய விருப்பத்தின் பேரில் வாழும் (சூரர மகளிர் வீரம்) வாழ்வு உயர்வானது என்றும் சொல்லுகின்றன.

மேலும் இந்த மூன்று பாடல்களையும் பாடியவர் பரணர் என்பது நாம் இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனெனில் பரணர் வரலாற்றை கட்டமைப்பதில் முக்கியமான பங்களிப்பு செய்தவர் என்ற பின்புலத்தோடு பெண்ணுக்கு எதிரான ஒரு
கருத்திற்கு எதிராக மாற்றுக்கருத்தை அந்த காலத்திலேயே முன்வைத்தவராக இருந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

பெண்மை எனும் சொல்

பெண்மை எனும் சொல் சங்க இலக்கியங்களில் பெண்ணுடைய ஒழுக்கம் சார்ந்த சொல்லாடலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கற்பு என்ற சொல்லுக்கு ஏறக்குறைய நிகரான ஒரு சொல்லாகவே குறிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

குறிப்பாக கலித்தொகை 147 ஆம் பாடலில் தலைவனிடம் தன்னை இழந்த தலைவி அவனை அடைய வேண்டும் என்று ஏங்கித் தவிப்பதாக கூறும் இடத்தில் ‘பெண்மையும் இலள் ஆகி’ என்று தன்னுடைய ஒழுக்கத்தைத் தவறவிட்டதற்காக
வருந்துவதாக கூறப்பட்டுள்ளது.

‘பெண்மையும் இலள் ஆகி அழும் அழும்’ (கலி.147:10)

‘பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று’ ( கலி.47:21)

‘பெண்மை சான்ற பெருமடம்’ (பதி.70:14)

‘பெண்மை நிறைந்த பொலிவொடு’ ( புறம்.337:8)

‘யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி’ (நற்.94:3)

‘பெண்மைப் பொதுமை பிணையிலி……’ (பரி.20:50)

இவ்வாறு சங்க இலக்கியங்களில் ஆறு இடங்களில் பெண்மை என்ற சொல் ( கற்பு / ஒழுக்கம்) பெண்ணுக்குரிய ஒழுக்கம் என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது. அது,

பகைவர்களால் நெருங்க இயலாத இயல்புடையவள்

கற்பொழுக்கத்துடன் கூடிய மடமை குணம் கொண்டவள்

பெண்மையைப் பலருடன் பகிர்ந்தவள் (கற்பொழுக்கம் இல்லாதவள்)

பெண்மைக்கு உரிய உயரிய குணம் கொண்டவள்

என்றவாறு அமைந்துள்ளது. இவை உடல் சார்ந்த ஒழுக்கம் என்பதாக்க் கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

முடிவுரை

‘கற்பு என்பது ஒரு நடைமுறை விழுமியம். அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்தப்படும் ஒரு வாழ்க்கை நோக்கு அது. ஒழுக்கம் என்ற ஒட்டுமொத்த வரையறைக்குள் வரக்கூடியது அது எனலாம் (ஜெயமோகன்)’. அந்த வகையில் பார்க்க
சங்ககாலத்தில் கற்பு என்ற சொல் ஆணின் சொல்லைக் கேட்டு பெண் நடத்தல் என்ற பொருளில் (24 இடங்களில்) பொருத்திச் சொல்லப்படுகிறது.

அவ்வாறு நடப்பது (கற்பு ஒழுக்கத்துடன் இருப்பது) வணங்கத்தக்க / தெய்வத்தன்மை வாய்ந்தது என்பதாக (16 இடங்களில்) சொல்லப்படுகிறது.

கற்பு என்பது கல்வி (கற்றல்) என்ற பொருளில் (4 இடங்களில்) பொருத்திச் சொல்லப்படுகிறது.

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும்தான் உரியதா? என்ற கேள்வி (மூன்று இடங்களில்) எழுப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ‘அருந்ததி கற்பு’ என்ற பொருண்மை அரசர்களோடு தொடர்புடையதாக அதாவது, அரசிகளுடன் (அரசர்களின் மனைவிகள்) அதிகம் இணைத்து கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

மேலும் பெண்மை என்னும் சொல் கற்பு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் அர்த்தம் பெரிதும் உடல் சார்ந்ததாகவே உள்ளது. மேலும் கற்பு -1, 2 மற்றும் நான்கு ஆகியவற்றிலும் உடல் சார்ந்த ஒழுக்கம் என்பதானப் பொருளைத்
தருவது குறிப்பிடத்தக்கது.

துணை நின்றவை

ஆலிஸ், முனைவர் அ., (உ.ஆ.) 2004 (மூன்றாம் ஆச்சு 2007), பதிற்றுப்பத்து, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

சுப்பிரமணியன், முனைவர் பெ., (உ.ஆ.கு), 2004 (முதல் பதிப்பு), பரிபாடல், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

செயபால், முனைவர் இரா., (உ.ஆ), 2004 (மூன்றாம் அச்சு 2007), அகநானூறு (தொகுதி1, 2), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.

தட்சிணாமூர்த்தி, முனைவர் அ., (உ.ஆ),  2004 (மூன்றாம் அச்சு 2007), ஐங்குறுநூறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.

நாகராசன், முனைவர் வி., (உ.ஆ) 2004 (மூன்றாம் அச்சு 2007), குறுந்தொகை (தொகுதி1, 2), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.

நாகராசன், முனைவர் வி., (உ.ஆ.) 2004 (முதல் பதிப்பு), பத்துப்பாட்டு (பகுதி -2), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

பாலசுப்பிரமணியன், முனைவர் கு.வெ., (உ.ஆ), 2004 (முதல் பதிப்பு), நற்றிணை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.

பாலசுப்பிரமணியன், முனைவர் கு.வெ., (உ.ஆ.கு), 2004 (மூன்றாம் அச்சு 2007), புறநானூறு (தொகுதி -1, 2), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

மோகன், முனைவர் இரா., (உ.ஆ.) 2004 (மூன்றாம் ஆச்சு 2007), பத்துப்பாட்டு (பகுதி -1), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

விசுவநாதன், முனைவர் அ., (உ.ஆ),  2004 (மூன்றாம் அச்சு 2007), கலித்தொகை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை – 600 098.

வையாபுரிபிள்ளை, 1967 (இரண்டாம் பதிப்பு),  சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம்,  அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது, சென்னை – 600 001.

தாமஸ் லெஹ்மன் மற்றும் தாமஸ் மால்டன், 2007 (இரண்டாவது பதிப்பு) சங்க இலக்கிய சொல்லடைவு (A word index), ஆசிவியல் ஆய்வுகள் நிறுவனம், செம்மஞ்சேரி, சென்னை – 600 119.

ஜெயமோகன், https://www.jeyamohan.in/35556/

ம.வீ.கனிமொழி, http://siragu.com/

chandiranacn@gmail.com

* கட்டுரையாளர்: – முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் மாவட்டம் –

Copyright © 2023 KALANJIYAM - International Journal of Tamil Studies. All Rights Reserved.

AcadmicPlus.org

Go to Top
ajax-loader