Skip to content
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்
E-ISSN: 2456-5148
Facebook page opens in new windowTwitter page opens in new windowDribbble page opens in new window
KALANJIYAM
International Journal of Tamil Studies
KALANJIYAM
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்
Submit Research PapersSubmit Article
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்

தாமரையின் கவிதைகளில் மெய்ப்பாடுகள்

You are here:
  1. Home
  2. Research Article
  3. தாமரையின் கவிதைகளில் மெய்ப்பாடுகள்

தாமரையின் கவிதைகளில் மெய்ப்பாடுகள்

PDF
Print 🖨 PDF 📄 eBook 📱

கவிதை என்பது ‘வாழ்வின் விமர்சனம்‘ என்பர் மாத்யூ அர்னால்டு. மனிதத்தைப் பாடுவதும் அவனின் மறுமலர்ச்சிக்குத் துணை செய்வதும்தான் கவிதை. தான் வாழும் காலத்தில் தன்னைக் கடந்து சென்ற நிகழ்வுகளையும் பட்டறிவினால் உணர்ந்ததைப் பிறருக்கு உணர்த்தும் வகையிலும் கவிஞர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்குகின்றனர். சமுதாய சீர்கேடுகளானது ஒழிக்கப்பட்டு அக்கேடு மீண்டும் உருவாகாமல் இருப்பதில் கவிஞர்களின் பங்கு முக்கியமானதாக அமைகிறது.

கவிஞனின் இதயக் கருவறையில் தோன்றுவது கவிதை. தன் வாழ்வியல் அனுபவங்களுக்கு உயிர்கொடுத்து கவிஞன் கவிதையைப் படைக்கிறான். “கவிதைகள் அனைத்தும் ஏதோ ஒரு கருத்தைத் தெரிவிப்பனவாக அமைந்துள்ளன. அந்த ஏதோ ஒரு கருத்தே கவிதையின் உள்ளடக்கமாகின்றது.“1 இலக்கிய வகைகளைத் தீர்மானிப்பதில் உருவத்தைப் போன்றே உள்ளடக்கமும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அவ்வகையில் கவிஞர் தாமரையின் முதல் கவிதைத் தொகுப்பான ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்‘ என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள் வார்த்தைகளில் வித்தை காட்டாமல் எளிமையாக உள்ளடக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தொல்காப்பியர் உரைக்கும் மெய்ப்பாடு

தமிழில் நமக்குத் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உணர்ச்சிகளை வகைப்படுத்தி,

“உய்த்துணர் வின்றித் தலைபடு பொருளின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்“2 என்னும் நூற்பாவில் தன் உள்ளத்தில் தோன்றியவாறே மற்றவர்களுக்குப் புலனாகும்படி உடலசைவுகளால் வெளிப்படுத்துவதே மெய்ப்பாடாகும் என்று விளக்குகிறார்.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப“3

என்னும் நூற்பாவில் எண்வகை மெய்ப்பாடுகளை விளக்குகின்றார்.

தொல்காப்பியர் உரைக்கும் மெய்ப்பாட்டு உணர்ச்சிகளைக் கவிஞர் தாமரையின் கவிதைகளில் பொருத்திக் காணஇயலும்.

நகை

உலக உயிர்களில் மற்ற உயிர்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு உணர்ச்சி மனிதரிடம் உள்ள நகை என்னும் சிரிப்புணர்வு,

“எள்ளல் இளமை பேதைமை மடனென்று
உள்ளப் பட்ட நகை நான்கென்ப“4

என்று நான்கு நிலைகளில் தோன்றும் என்கிறார் தொல்காப்பியர். தாமரையின் ‘விலை‘ என்னும் கவிதையில்,

“நகரத்தில் நாற்பது ஐம்பது
நியாய விலைக் கடைகள். .
நியாயம் என்ன விலை?”5

என்னும் வகைகளில் எள்ளலில் விழைந்த நகைச்சுவை உணர்ச்சியாகும்.

அழுகை

அழுகை என்னும் மெய்ப்பாடு நான்கு நிலைகளில் தோன்றுவதை,

“இழிவே இழவே அசைவே வறுமையென
விளவில் கொள்கை அழுகை நான்கே“6

என்னும் நூற்பாவால் விளக்குகிறார்.

‘காதலின் சுவடுகள்‘ என்னும் கவிதையில் காதலின் பிரிவால் தோன்றிய அழுகையை,

“கரம் தொட்டதும் கனல் இட்டதும்
இருள் கவிந்த்தும் இதழ் குவிந்த்தும்
கண்ணிலே ஈரமாய்க்
கலந்துதான் போனதே”7

என்னும் வரிகள் அழுகைச் சுவையைத் தோற்றுவிக்கின்றன.

இளிவரல்

இளிவரல் முதுமை நோய், துன்பம், எளிமை என்னும் நான்கு நிலைகளில் தோன்றும் என்பதை,

“மூப்பே பிணியே வருத்த மென்மையொடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே“8

என்று விளக்குகிறார். இச்சுவை உணர்த்த கவிஞர் தாமரையின் ‘ஆறுதல்கள்‘ என்னும் கவிதையில்,

“துன்பங்கள் எனக்குப் புதுக்கவிதையல்ல
சுடச்சுடத் தூய்மையாகும் சங்கு போல்
புதிதாய் துயரத்தின் நிழல் என்மேல்
படப்பட உன் நினைவுகள் ஆழமாகின்றன
பூக்களின் நடுவில் பூவாய் வாழ்ந்துவிட்டேன்
இன்று முட்களின் நடுவே மலர நேர்கின்றது“9

என்னும் வரிகள் இளிவரல் சுவையை வெளிப்படுத்துகின்றது.

மருட்கை

மருட்கையைச் சுட்டும் தொல்காப்பியர்,

“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கு“10

என்கிறார். கவிஞரின் வரிகளில் ‘இதயமாற்று சிகிச்சை‘ என்னும் கவிதையில் காதலின் நினைவுகளில் தத்தளிக்கும் இதயத்தை வெட்டியெடுத்துவிட்டு அவ்வெற்றிடத்தில் காதலரைப் பதிக்க கவிஞருக்கு மருட்கை உண்டாகின்றது.

“என்ன ஆச்சர்யம். . !
இதயத்தின் இடத்தில் நீ!
இதயத்தின் வேலையைச் செய்து கொண்டு. . “11

என்னும் வரிகள் புதுமை என்னும் நிலையில் விளைந்த மருட்கை சுவையைத் தோற்றுவிக்கிறது.

அச்சம்

வியப்பிற்கு அடுத்து அச்சம் என்னும் மெய்ப்பாட்டை குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர். கவிஞரின் ‘முதல் நரை‘ என்னும் கவிதையில் முதல் நரைக்கு அஞ்சும் ஆண்களின் உளவியலைச் சுட்டும் கவிஞர் அச்சுவையை,

“அந்த முதல் நரைக்கு அஞ்சி
மொட்டையடித்துக் கொண்டேன்”12

என்னும் வரிகள் வெளிப்படுத்துகின்றன.

பெருமிதம்

“கல்வி தறுகண் புகழ்மை கொடைஎனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே“13

என்கிறார் தொல்காப்பியர். தன் சிறுவயதுத் தாழி தன்னைப்போல் சராசரிப் பெண்ணாக வாழ விரும்பாமல் ஈழ மண்ணில் போராளியாய் விளங்குவதைப் பெருமிதத்தோடு காணும் கவிஞர்,

“ஊரடங்கும் சுற்றி வளைத்தலும்
உனக்குத் தெரியாது
குனிந்த தலையும் குற்ற முகமுமாய்
நம் சொந்த ஊரிலே நாங்கள். . .
நீ நடந்தாய் நிமிர்ந்த நெஞ்சோடு“14

என்று பெருமிதச் சுவையைத் தோற்றுவிக்கிறார்.

வெகுளி

‘மென்பாதங்கள்‘ என்னும் கவிதையில் காதலனுக்காக எத்துயராயினும் சகித்துக் கொண்டு ஏற்றுக் கொள்ளும் பெண் காதலனின் கோழைத்தனத்தைப் பொறுக்கமாட்டாள் என்பதனை,

“உன் கோழைத்தனத்தை என்
கால்கள் பொறுத்துக் கொள்வதேயில்லை
மிதித்து அழிக்கவே விரும்புகின்றன. .
காதலை சிலசமயம் கால்களும் தீர்மானிக்கின்றன“15

உவகை

உவகை என்னும் மெய்ப்பாட்டை,

”செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டுடன்
அல்லல் நீத்த உவகை நான்கே”16

என்னும் நூற்பா போல் கவிஞரும், சின்னஞ்சிறு வயதில் தன் தோழியோடு விளையாடியதை உவகை உணர்வோடு எடுத்துரைக்கும் கவிஞர்,

“நல்லூரின் வீதிகளில் நகர்ந்த தேர்
நம்மை நோக்கியே வருவதாய் பிரம்மை!
பெரிசான பிற்பாடு பொன்னிலே சக்கரம்
போடுவதாய் கந்தன் சாமிக்கும் நமக்கும்
உடன்பாடு”17

என்று உவகை பொங்க நினைவுகளை கண்முன் நிறுத்துகிறார்.

நிறைவுரை

ஒரு படைப்பில் உணர்ச்சிக் கூறுகளே வாசகனின் உள்ளத்தை ஈர்த்து நீண்டகாலம் படைப்பை உள்ளத்தில் நிலைநிறுத்தச் செய்கின்றன. அவ்வகையில் கவிஞர் தாமரையின் கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் எண்வகை மெய்ப்பாடுகளும் விரவிக் கிடக்கின்றன. யாப்பின் கட்டுகளை உடைத்தெறிந்து புதிய பாதையில் வீறுநடையிட்ட தாமரையின் கவிதைகள் என்றும் நிலைத்து நிற்கும்.

சான்றெண் விளக்கம்

க.ப.அறவாணன், தமிழ் இலக்கியச் சமூகவியல், தமிழ்க்கோட்டம், புதுச்சேரி, 1992.
தொல்காப்பியம், நூற்பா-505.
மேலது, நூற்பா-247.
தொல்காப்பியம், பொருளதிகாரம், நூற்பா-4.
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும், குமரன் பதிப்பகம், சென்னை-17, 1999.ப.51.
தொல்காப்பியம், நூற்பா-249.
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும், குமரன் பதிப்பகம், சென்னை-17, 1999.ப.14.
தொல்காப்பியம், நூற்பா-250.
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும், குமரன் பதிப்பகம், சென்னை-17, 1999.ப.49.
தொல்காப்பியம், நூற்பா-251.
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும், குமரன் பதிப்பகம், சென்னை-17, 1999.ப.45.
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும், குமரன் பதிப்பகம், சென்னை-17, 1999.ப.48.
தொல்காப்பியம், நூற்பா-253.
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும், குமரன் பதிப்பகம், சென்னை-17, 1999.ப.41.
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும், குமரன் பதிப்பகம், சென்னை-17, 1999.ப.13.
தொல்காப்பியம், நூற்பா-255.
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும், குமரன் பதிப்பகம், சென்னை-17, 1999.ப.39.


*கட்டுரையாளர்கள்: –  இரா.முருகேஸ்வரி, முனைவர் பட்ட ஆய்வாளர் &  முனைவர் மு.சுதா, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 –

sumuyogi@gmail.com

Copyright © 2023 KALANJIYAM - International Journal of Tamil Studies. All Rights Reserved.

AcadmicPlus.org

Go to Top
ajax-loader