முன்னுரை
சங்க இலக்கியங்கள் என்று அறியப்படும் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளையும் அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன. அதுமட்டுமன்றி
இச்சங்க நூல்கள் இலக்கிய ஆவணங்களாகவும் விளங்குகின்றன. இவ்வியலக்கியத் தகவல்கள் மற்றும் கல்வெட்டு, அகழ்வாராய்ச்சித் தரவுகளைக் கொண்டு தமிழரின் தொன்மை மரபையும் அவர்களின் தனித்தன்மைகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது.
இத்தொகை நூல்கள் மட்டுமே தமிழர் சார்ந்த பண்பாட்டு ஆவணங்கள் என்று சொல்லிவிட முடியாத அளவிற்குப் பிற்காலத்திலும் பல்வேறு நூல்கள் தோன்றி நம் தமிழர் மரபைப் பரைசாற்றி நிற்கின்றன. அதில் திருக்குறள் நாலடியார் போன்ற
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடலாம். மேலும், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்களும் இதற்குள் அடங்கும். இவ்வாறு தொன்றுதொட்டு எழுதப்பட்டுவரும் இலக்கியங்களில் ஒரு இனத்தின்
பண்பாட்டுச் செய்திகள் பொதிந்திருப்பது இயல்பே. அந்தவகையில் நாலடியாரில் இடம்பெற்றிருக்கும் தமிழர் பண்பாடும் பழக்கவழக்கங்களும் சார்ந்த தகவல்களை இக்கட்டுரை எடுத்தியம்புகின்றது.
பெரியோரை மதித்தல்
பெரியோரக் கண்டால் இருக்கையில் இருந்து எழுவது எதிர் நின்று வரவேற்பது, அவர் பிரியும்போது அவருக்குப் பின்சென்று வழியனுப்புவது போன்ற உயர்ந்த ஒழுக்கநெறிகள் இருந்துள்ளதை,
இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன (நாலடி.143:1-2)
என்று நாலடியார் குறிப்பிடுகின்றது. இப்பாண்ட்டைப் போன்றே விருந்தினரை வழியனுப்பும் மரபை பொருநராற்றுப்படை,
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி,
காலின் ஏழ் அடிப் பின் சென்று,….. (பொருநர்.165-66)
என்று பொருநராற்றுப்படை குறிப்பிடுகின்றது.
நீரும் அதன் பயன்பாடும்
ஆற்றில் நீர் வற்றிய காலத்தில் அதைச் சிறிதளவு தோண்டி தெளிந்த நீரை மக்கள் தம் அன்றாட வாழ்வியலுக்குப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை,
அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும் (நாலடி.150:3-4)
என்று நாலடியார் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. மேலும், தண்ணீரைக் காய்ச்சிப் பயன்படுத்தியுள்ளதை,
…….. …………. ………….. அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் …. (நாலடி.68:2-3)
என்ற பாடல் வரிகளால் அறியமுடிகின்றது.
தண்ணீர் நிரம்பியுள்ள புதிய மண்பானையில் பழமையான பாதிரிப்பூவினை போட்டு அத்தண்ணீரை நறுமணமாக்கிப் பயன்படுத்தியுள்ள செய்தியினை, ஒண்ணிறப் பாதிரிப்பூ சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு (நாலடி.139:3-4)
என்ற நாலடியார் பாடல் வரிகளால் அறியமுடிகின்றது. இன்றைக்கும் சில பகுதிகளில் இம்மரபு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அரிசியும் அடுக்களையும்
இம்மியரிசி என்னும் ஒருவகை அரிசி (புல்லங்காய்ப் புல்லரிசி என்பர் நச்சினார்க்கினியர்) இருந்ததை,
இம்மி யரிசித் துணையானும் வைகலும் (நாலடி.94:1)
என்று குறிப்பிடும் நாலடியார், சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்கள் இருந்துள்ளனர் என்பதை,
……… …………. …………… உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர் (நாலடி.94:3-4)
என்று குறிப்பிடுகின்றது. வறியவர்கள் எந்தக்காலத்திலும் இருப்பர் என்பதை இக்குறிப்பினால் அறியமுடிகின்றது.
மகளிர்
இன்றைக்கு சந்தனக்கிண்ணத்தில் சந்தனம் வைத்துப் பயன்படுத்துவது போல் அன்றைக்குச் சிமிழில் சந்தனத்தை வைத்துப் பயன்படுத்தும் வழக்கமிருந்ததை,
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து (நாலடி.126:3-4)
என்று குறிப்பிடுகின்றது நாலடியார். மேலும், பெண்கள் முகத்திற்கு மஞ்சள் பூசுகின்ற வழக்கத்தை,
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – … (நாலடி.131:1-2)
என்று குறிப்பிடும் நாலடியார், காதலனைப் பிரிந்த மகளிர் தம் காதலர் பிரிந்த நாள்களைக் கைவிரல்களால் எண்ணுவர் என்கின்றது. இதனை,
செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் – மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல்,……. (நாலடி.394)
என்ற நாலடியார் பாடல் வரிகளால் அறியமுடிகின்றது.
இறந்தோர்
இறந்தவர்களுக்கு பறையடிக்கப்பட்டுள்ளது. அப்பறையானது ஒருமுறை அடிக்கப்பட்டு பிறகு இரண்டாவது முறையும் அடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறை அடிக்கும் முன்னரே பிணத்தைத் துணிகொண்டு மூடி சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வழக்கம்
இருந்துள்ளது. இதனை,
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர் (நாலடி.24:3)
என்கிறது நாலடியார். மேலும், இறந்தவரின் உடலை நாரால் கட்டிச் சுமக்கின்ற வழக்கம் இருந்ததை,
நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் ; (நாலடி.26:1-2)
என்ற நாலடியார் பாடல் வரிகளால் அறியலாம்.
இறந்தவர்களை எரிக்கின்ற இடத்தைப் புறங்காடு என்றும் அங்கே பல எலும்புக் கூடுகள் கிடக்கும் என்றும் நாலடியார் குறிப்பிடுகின்றது. இதனை,
எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன் (நாலடி.45)
என்று நாலடியார் குறிப்பிடுகின்றது.
இறந்துபோனவரின் எரிந்துபோன தலையானது வெண்மை நிறத்துடன் பார்ப்பவர் அஞ்சும்படி பயங்கரமாக இருக்கும் என்பதை,
கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிதாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி (நாலடி.49:1-2)
என்கிறது நாலடியார். இதே கருத்தினை நாலடியார் 50 –வது பாடலும் வலியுறுத்தி நிற்கின்றது.
பொதுவாக இறந்தவர்களைப் புதைக்காமல் எரிக்கின்ற வழக்கத்தைப் பின்பற்றுபவர்கள் சமணர்கள். அதனடிப்படையில் நாலடியாரை நோக்கினால் இறப்பு பற்றிய செய்திகளினூடாக இறந்தவர்களை எறிக்கின்ற தகவல்களை மட்டுமே பெறமுடிகின்றது.
விலங்குகள்
வெள்ளை எருதின்மேல் சூடு வைக்கின்ற வழக்கமிருந்ததை நாலடியார் சுட்டிக் காட்டுகின்றது. இவ்வாறு எருதுகளின்மேல் சூடுபோடுவதால் அவற்றை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம் என்ற அடிப்படையில்தான் இத்தகைய வழக்கம்
பின்பற்றப்பட்டிருக்கலாம் என அறியமுடிகின்றது. இதனை,
பெருவரை நாட! பெரியோர்கட் டீமை
கருநரைமேற் சூடேபோற் றோன்றும்:-…. (நாலடி.186:1-2)
என்கிறது நாலடியார்.
உள் வயிரமுள்ள மரத்தில் ஆண் யானை கட்டிவைக்கப்படும் என்பதை,
ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறிணைக்குங் கந்தாகும்: (நாலடி.192:1-2)
என்று குறிப்பிடும் நாலடியார், யானை பழக்குகின்ற பாகன் இருந்ததையும் அவ்வாறு உடனிருக்கும் பாகனையே நன்கு அறிந்த யானையானது கொல்லும் தன்மையுடையது என்பதையும் நாலடியார் பதிவு செய்துள்ளது. மேலும், நாயினை நன்றியுள்ள
ஜீவனாக நாலடியார் குறிப்பிடுகின்றது. யானைக்குப் பதிலாக நாயினை வளர்த்தல் நலம் என்றும் குறிப்பிடுகின்றது. இதனை,
யானை யனையவர் நண்பொரீஇநாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்:- யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய் (நாலடி.213)
என்ற பாடல் வரிகளால் அறியலாம்
ஆமையைக் கொதிக்கின்ற உலையிலிட்டுக் கொல்லுகின்ற வழக்கம் இருந்ததை,
கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே, (நாலடி.331)
என்று குறிப்பிடுகின்றது நாலடியார். இதே செய்தி நாலடியார் 114 – ஆம் பாடலிலும் இடம்பெற்றுள்ளதைப் பார்க்க முடிகின்றது.
ஆடுகளைப் பலியிடுவோர் தம் கைகளில் தளிராற் சேர்ந்த மாலையைப் பிடித்துக்கொண்டிருப்பர் என்பதை,
வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல். (நாலடி.16)
என்கிறது நாலடியார்.
மந்திரித்து இட்ட திருநீற்றால் பாம்பு தம் சினம் தணியும் என்பதை,
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் …… (நாலடி.66:3)
என்ற நாலடியார் குறிப்பினால் அறியமுடிகின்றது.
முடிவுரை
பெரியோரை மதித்தல், நீர், நாகம், மகளிர், இறந்தோர், விலங்குகள் குறித்தும் இன்னும் பல்வேறு பண்பாட்டுச் செய்திகள் நாலடியாரில் இருக்கின்றன. தமிழரிடையே தொன்றுதொட்டு வழங்கப்பட்டுவரும் பல்வேறு பழக்க வழக்கங்களும் நம்பிக்கை சார்ந்த தகவல்களும் நாலடியாரில் காணப்படுகின்றன. அவற்றுள் மிகக் குறைவான தகவல்களே இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
துணைநின்ற நூல்கள்
1. நாலடியார் உரைவளம் (மூலமும் மூன்று பழைய உரைகளும் அடங்கியது), S. முத்துரத்ன முதலியார், M.R. கந்தசாமி பிள்ளை, சரசுவதிகமால் நூலகம், தஞ்சாவூர், மு.ப.1953.
2. நாலடியார்: உரை, திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1992.
3. பத்துப்பாட்டு சென்னை: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை, 2004.
*கட்டுரையாளர்: – முனைவர் சி. இராமச்சந்திரன், ஆய்வு உதவியாளர்,,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 –