Skip to content
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்
E-ISSN: 2456-5148
Facebook page opens in new windowTwitter page opens in new windowDribbble page opens in new window
KALANJIYAM
International Journal of Tamil Studies
KALANJIYAM
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்
Submit Research PapersSubmit Article
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்

பாரதியின் சமுதாயச் சிந்தனையும் , கல்விச் சீர்திருத்தமும்

You are here:
  1. Home
  2. Research Article
  3. பாரதியின் சமுதாயச் சிந்தனையும் , கல்விச்…

பாரதியின் சமுதாயச் சிந்தனையும் , கல்விச் சீர்திருத்தமும்

PDF
Print 🖨 PDF 📄 eBook 📱

முன்னுரை
குழந்தைகள் ஒரு குடும்பத்திற்கு மகிழ்வ10ட்டும் செல்வங்கள்.  மொட்டாக அரும்பி, மலர்களாக மலர்ந்து மணம் வீசுங்கால் அந்தக் குடும்பம் குதூகலத்தில் குலுங்கும்.  சிறப்பும் மேன்மையும் அடையும்.  குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலச் சிற்பிகள்.  குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் அணிகலன்கள்.  மகாகவி பாரதியும் அவரது பரந்த பார்வையில்  குழந்தைகள் நலனுடனும் சிறப்புடனும் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும், அவர்களது அறிவுத்திறன் சிறப்புற பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பொறுப்பு என்ன? என்பதை அவரது ஆத்மார்த்த சிந்தனையில் உதித்த அவரது எண்ணங்களைப் பதித்துள்ளார்.  முதற்கண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிப்பதினால், கற்றுத்தேர்ந்த குழந்தைகள் நல்லறிவு பெற்றவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் திகழ்வார்கள். சமுதாயமும் சீர்பெறும். இக்கருத்தை உறுதிப்படுத்தும்படியாக, பாரதி  இச்சமுதாயத்தில் விதைக்க நினைத்த சமுதாயச் சிந்தனைகளையும் கல்விச் சீர்திருத்தத்தையும் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குழந்தைக் கல்வியில் பெண்களின் பங்களிப்பு
தேசியக் கல்வியில்; தமிழ்நாட்டுப் பெண்களின் முக்கியப் பங்கு என்னவென்பதை பாரதி கூறுகையில்,  “தமிழ் நாட்டு ஸ்திரிகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுடைய யோசனைகளையும் தழுவி நடத்தாவிடில் அக்கல்வி சுதேசியமாகமாட்டாது.  தமிழ்க் கல்விக்கும், தமிழ்க் கலைகளுக்கும் , தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க் கோவில், தமிழரசு, தமிழ்க்கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ?  ஒரு பெரிய சர்வகலா சங்கத்தின் ஆட்சி மண்டலத்தில் கலந்து தொழில் செய்யத் தக்க கல்விப் பயிற்சியும் லௌகீக ஞானம் உடைய…. பத்துப் பெண்களைக் கூட்டி நடத்த வேண்டிய காரியங்களைப் பச்சைத் தமிழில் அவர்களிடம் கூறினான்.  அதனின்றும் அவர்கள் பயன்தரத்தக்க பல உதவி யோசனைகளும், ஆண்மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புதுக் குணங்களும், சமைத்துக் கொடுப்பார்களென்பதில் சந்தேகமில்லை” (காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 9:2008 : 58-59)

என்ற வரிகள் பெண்கள் நாட்டின் கண்களாகவும் ஒளி விளக்காகவும் அமைந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன. குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும்  பாதையில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்ற கருத்தை இவ்வரிகளின் வழியாக பாரதியார் முன்வைக்கின்றார்.

பெண் கல்வியின் பயன்
பெண், நற்பண்பின் விளைநிலம். அந்நிலத்தின் தன்மைக்கேற்ற பயிரே அங்கு விளையும்.  உரிமை பெற்ற, அறிவு செறிந்த, மாண்பு கொண்ட பெண்ணினமே சிறந்த மக்களைச் சான்றோர்களைச் சீலர்களைப் பெற்று வளர்த்து வழங்க இயலும்.  கல்வி கற்ற தாய்மார்களே குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக இருக்க முடியும்.  கல்வியிற் சிறந்த ஆணும், பெண்ணும் இணைந்த குடும்பத்தில் பொருளாதார நிலை சிறந்திருக்கும்.  ஏழ்மைக் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி பெறும் வாய்ப்பு பெரிதும் கிடைப்பதில்லை.  பொருளாதாரத்தைத் திருத்திக் கொள்ள ஏழ்மைக் குடும்பத்தில் பெண் குழந்தைகளைத் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணமும் செய்துவிடுகிறார்கள். கல்விச் செல்வம் குறைந்த பெண்கள் தங்களது குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி பெற உதவ இயலாது.  எனவேதான் பாரதி பெண் கல்வியின் தேவையை வற்புறுத்துகிறார் என்பதை,

“தமிழ் நாட்டின் சகோதரிகளே,  உங்களிடம் எத்தனையோ அரிய திறமைகளும் தந்திரங்களும் உயர்ந்து இருந்த போதிலும் கல்வியின் பரவுதல் அதிகமாக இல்லாத படியால் அவ்வப்போது வெளியுலகத்தில்  நிகழும் செய்திகளையும் மாறுதல்களையும் அறிந்து கொண்டு அதற்குத் தக்கபடி நடக்க இயலாமல் போகிறது” (பாரதியார் கட்டுரைகள், 2004 : 185)

என்ற வரிகளில் தகுதியும் திறமையும் கொண்ட தமிழ்நாட்டுப் பெண்கள் வெளியுலகை அறியவும், தன் பிள்ளைகளை நற்பண்புள்ளவர்களாக வளர்க்கவும், சமுதாயத்திற்கேற்ற நல்வித்தை உருவாக்கும்  பொறுப்பும் பெண்களிடமுள்ளது. அப்பெண்கள் கல்வியறிவில் சிறந்திருப்பதே தனக்கும் தன் குழந்தைக்கும், சமுதாயத்திற்கும் மிகப்பெரும் நன்மை பயக்குமென்பதை பாரதியார் சுட்டிக்காட்டுகின்றார்.

தாய் மொழிக் கல்வி
இந்திய நாட்டில் எண்ணிறந்த மொழிகள் உள்ளன.  அவற்றில் பதினெட்டு மொழிகளே முக்கிய மொழிகள்.  இந்திய நாட்டில் பெரும்பாலும் மொழியின் அடிப்படையிலேயே மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதுக்கும் பொதுவான மொழி தேசியமொழி ஒன்றிருக்க வேண்டும் என்று கருதியால் இந்தி பெரும்பாலோர் பேசப்படுவதால் தேசிய மொழியாக அனுசரிக்கப்படலாம்.  ஆனால் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கு மக்களால் பேசப்படும் மொழியே அதன் முதல் மொழியாக அமைதல் வேண்டும்.  எனவே கல்வி கற்கும் போது தமிழ் நாட்டில் தமிழே முதல் மொழியாகவும், இறுதி ஆங்கிலம் துணை மொழிகளாகவும் அமைதல் வேண்டும்.  அதுவே நன்மை பயக்கும்.  அப்போதுதான் மக்கள் அனைவரும் எளிதாகக் கல்வி பயில ஏதுவாகும் என்று இன்றைய நிலையில் பின்பற்றப்படும் தாய்மொழிக் கல்வியைப் பாரதி அன்றே உணர்ந்து விரிவாகக் கூறியுள்ளார்.   இதனை,

“தமிழ் நாட்டில்  தேசிய கல்வியென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ் பாஷையை ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்க்லீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உபபாஷையாகவும் ஏற்படுத்தினால் அது தேசீயம் என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாஷையே ப்ரதானமென்பது தேசிய கல்வியின் ஆதாரக் கொள்கை.  இதை மறந்துவிடக்கூடாது…  இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படுமென்பதை, தம்பட்டம் அறைவிக்க வேண்டும்.  இங்ஙனம் தமிழ் பாஷையே ப்ரதானமென்று நான் சொல்வதால்… ஆர்ய பாஷா விரோதம் கொண்டு பேசுகிறேன் என்று நினைந்து விடலாகாது.  தமிழ் நாட்டிலே  தமிழ் சிறந்திடுக.  பாரத தேச முழுதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க.  இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்யத்தை பரிபூரணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மென்மேலும் ஓங்குக.  எனினும் தமிழ்நாட்டில் தமிழ் மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக” (கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், 9 : 2008 : 516)

இவ்வரிகளிலுள்ள பாரதியின் தெள்ளிய கருத்து இன்றளவிலும் நடைமுறையில் வரவில்லை.  தமிழ்நாட்டில் தமிழ்மொழி பேசுவதும். தாய்மொழிக் கல்வியாக தமிழ் உருவாக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும் பாரதியார் வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும்,

“பொறியியல் மருத்துவம் போன்ற பாடங்களில் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இல்லையென்று கருதுவதால் இன்னமும் தமிழ் மொழி முதல் மொழியாக இயங்கப்படுதல் இல்லை. பெற்றோர்களின் ஆங்கில மோகத்தினால் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியே ஆங்கிலத்தில் அமைந்து  வறiமெடநஇ வறiமெடந டவைவடந ளவயச  என்ற பாட்டே பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் பதிகிறது.  நிலா நிலா வா வா, நில்லாமல் ஓடி வா என்னும் தித்திக்கும் இனிய பாட்டு மறந்துவிட்டது. நிலவைக் காட்டி அன்னமூட்டுவதும் மறைந்து, தொலைக்காட்சியைக் காண்பித்து அன்னமூட்டுதல் இன்றைக்கு வழக்கமாகி வருகிறது.  தமிழ்ப் பெயர்கள் ஆயிரமாயிரம் இருப்பினும் அங்கும் இங்குமொன்றாகவே தமிழ்ப் பெயர்கள் காதில் விழுகின்றன.  தமிழாசிரியர்களும் ஆங்கிலம் கலந்த மொழியே பேசுகிறார்கள்.  எனில் தூய தமிழ் எங்ஙனம் வளரும்?  மறைமலையடிகள் போன்ற ஆயிரம் தமிழ்ப் பாவலர்கள் தோன்றித் தூயதமிழ் வளர்க்க வேண்டும்” (டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதன், பாரதி என்றொரு மானுடன், பக். 89-90).

என்பன  போன்ற கருத்துக்கள் தமிழ் நாட்டில் தமிழ் மொழிக் கல்வியே நிலைபெற, தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து தூயத் தமிழை வளர்த்தும் பொறுப்புள்ளவர்களாக மாற வேண்டும் என்ற உண்மை நிலையினை உறுதிப்படுத்துகின்றது.

ஆரம்பப் பள்ளிக்கூடம்
குழந்தைகள் கல்வியில் சிற
ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது பாரதியின் லட்சியம்.  அறிவே வலிமை.  தைரியம் கொடுப்பது.  கற்றார்க்கு எவ்விடத்தும் சிறப்புண்டு.  எனவே கல்விக்கான வசதி எப்படிச் செய்வது?  பாரதியாரே அதைத் திறம்படச் சொல்கிறார்.  இதனை,

“உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதமாக எத்தனை பள்ளிக்கூடங்கள் சாத்தியமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள்.  ஆரம்பத்தில் மூன்று உபாத்தியாயர்கள் வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் போதும்.  இந்த உபாத்தியாயங்களுக்குத் தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்க வேண்டும்.  திருஷ்டாந்தமாக இங்ஙனம் தமிழ் நாட்டில் ஏற்படும் தேசிய பாடசாலைகளில் உபாத்தியராக வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும்.  சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வதர்மாபிமானமும் எல்லா ஜீவர்களிடத்தும் கருணையும் உடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுத்தல் நன்று” (பாரதியார் கட்டுரைகள், 2004 : 176) என்றும்,

“அங்ஙனம் தேசபக்தி முதலிய உயர்ந்த குணங்கள் ஏற்கனவே அமைந்திராத உபாத்திரயாயர்கள் கிடைத்த போதிலும், பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியாயர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுவதற்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.  ஆரோக்கியமுந் திடசரீரமுடைய உபாத்தியாயர்களைத் தேர்ந்தெடுப்பது நன்று” (பாரதியார் கட்டுரைகள் : 2004 : 383)

என்ற வரிகளில், பாரதியார் தான் வாழ்ந்த காலத்தில் எழுதிய கருத்துக்கள் இன்றும் ஏற்புடையனவாய் உள்ளன என்பதே வியப்பிற்குரியது.  தேச மொழியில் ஞானமும், தமிழ் நூல்களில் தேர்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் உடையவர்களே ஆசிரியர்களாக அமைதல் வேண்டும் என்ற அவரது முன்னோக்கான பார்வை வியக்கத்தக்கது.

பள்ளிப் பாடங்கள்
மாணவர்களுக்குக் கல்வி நிலையங்களில் கற்பிக்க வேண்டிய பாடங்கள் பற்றிய விரிவுபட்ட பாரதியின் ஞானம் வியக்கத்தக்கதாக உள்ளது. அவர் மகாகவி, மாசுவிதை படைத்தவர்.  கட்டுரை, கதைகளிலே உலகளாவிய உன்னதப் படைப்புகளைப் படைத்தவர்.  குழந்தைகளின் பாடங்கள் பற்றிய அவரது கருத்துக்கள் அவர் ஒரு படைப்பாளி மட்டுமல்ல.  மிகச்சிறந்த கல்வியாளர் என்பதைக் காட்டுகின்றன. இன்றளவும் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், கல்வி அமைச்சர்கள் இவர் கூறுவதை ஆய்ந்தறிதல் நலம். இதனை,

“ஆதி பால்ய பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்திநிற்கும் இயல்புடையவை.  ஆதலால் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தின் அற்புதமான பகுதிகளைய10ட்டி அசோகன், விக்கிரமாதித்தன், ராமன்,  லஷ்மணன், தர்ம புத்திரன், அர்ஜுனன் இவர்களிடமிருந்த சிறந்த குணங்களையும் அவற்றால் அவர்களுக்கும், அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட  மகிமைகளையும் பிள்ளைகளின் மனத்தில் பதியும்படி செய்வது அந்தப் பிள்ளைகளின் இயல்பைச் சீர்திருந்த மேன்மைப்படுத்துவதற்கு நல்ல ஸ்தானமாகும்” (பாரதியார் கட்டுரைகள், 2004 : 384).
என்றும்,

“ஹிந்து தேச சரித்திரம் மாத்திரமேயல்லாது ஸெளகரியப்பட்டால் இயன்றவரை அரேபிய, பாரசீக, ஜரிஷ், போலிஷ், குஷ்ப, எகிப்திய ஜப்பானிய துருக்க தேசங்கள் முதலியவற்றின் சரித்திரங்களிலும், சில முக்கியமான கதைகளும் திருஷ்டாந்தங்களும் பயிற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்தல் நல்லது” (பாரதியார் கட்டுரைகள், 2004 : 384)

என்ற கருத்துக்களில் மாணவர்களுக்கு வகுப்பறைகளில் புராணக்கதைகளில் கூறப்பட்ட பாத்திரங்களின் நற்குணங்களையும், அவர்கள் வாழ்வின் பெருமைகளையும் போதிப்பதே எதிர்காலச் சமுதாயத்திற்குரிய நல்வித்தை உருவாக்க முடியும் என்ற சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்கிறார் பாரதியார். அது மட்டுமல்லாது, பிற மொழிகளின் புராணக்கதைகளையும் இணைத்து போதித்தல் மேலும் நன்மை பயக்கும் என்கிறார். நாளைய சமுதாயத்தை உருவாக்க பாரதியின் முன்னோக்கிய சிந்தனை ஏற்புடையதே.

சமய நல்லிணக்கம்
சமய நல்லிணக்கம் பற்றிய பாடங்கள் நீதிக் கதைகளுடன் புகட்டுவது மிகவும் இன்றியமையாதது.  சமயசாதிப் பேதங்கள் இல்லாமல் மாணவர்கள் நற்குணங்களுடன் இருப்பதற்கு  வழிகள் ஏற்படும் என்பதை,
“தேசீய பள்ளிக்கூட மாணவர்களுக்கு உபாத்தியாயர் தத்தம் இஷ்ட தெய்வங்களிடம் பரம பக்தி செலுத்தி வழிபாடு செய்து வர வேண்டும் என்று கற்பிப்பதுடன்.  இதர தெய்வங்களைப் பழித்தல், பகைத்தல் என்ற மூடச் செயல்களைக் கட்டோடி விட்டுவிடும்படி போதிக்க வேண்டும்.  கடவுள் ஒருவரே.  அவரை ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர் என்ற ரிக் வேத உண்மையை மாணாக்கரின் உள்ளத்தில் ஆழப்பதியுமாறு செய்ய வேண்டும்.  உலகம் முழுவதும் கடவுளின் வடிவமே என்று இந்து மதம் போதிக்கிறது.  இங்ஙனம் எல்லாம் கடவுள் மயம் என்றுணர்ந்தவன் உலகத்தில் எதற்கும் பயப்படமாட்டான். எங்கும்  உண்மை, நேர்மை, விரயம், பக்தி முதலிய வேத ரிஷிகளின் குணங்களையும், ஸ்வஜனாபிமானம், ஸ்வஜீவதயை முதலிய புராண வீரர்களின்  குணங்களையும் பிள்ளைகளுக்கு நன்றாக உணர்ந்த வேண்டும்” (பாரதியார் கட்டுரைகள், 2004 : 387-388)

இவ்வரிகளில் ‘தெய்வம் ஒன்றே’ என்பதை மாணவர்களுக்கு பதிவாக்குவதற்கு சமயத்தைக் குறித்த நல்போதனைகள் போதிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகிறார். மாணவர்களுக்கு உலகமே கடவுள் மயமாக்கப்பட்டிருக்கும் உண்மை நிலையினை உணர்த்துவது கட்டாயமானது. நீதி, நேர்மை, உண்மை என்னும் நற்பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக மாணவச் சமுதாயம் உருவாக்கப்பட வேண்டுமென்கி;றார். எதிர்காலச் சமுதாயம் சாதி, சமயமற்ற ஒற்றுமைச் சமுதாயமாக வலம்வர சமய நல்லிணக்க போதனைகள் அவசியம் என்பதை உறுதிப்படுத்துகின்றார்.

ராஜ்ய சரித்திரம் (அரசு அமைப்பு)
பள்ளி மாணவர்களுக்கு அரசியல் கல்வி தேவை என்பது பாரதியின் கருத்து.  அரசின் செயல்பாடுகள் பற்றிய பாடங்கள் பாட நூலில் இடம் பெறவேண்டும் என்று பாரதி கூறியுள்ளதை,

“ஜனங்களுக்குள்ளே மைதானத்தைப் பாதுகாப்பதுவும், வெளிநாடுகளிலிருந்து படை எடுத்து வருவோரைத் தடுப்பதுவும் மாத்திரமே ராஜாங்கத்தின் காரியங்கள் என்று நினைத்துவிடக் கூடாது.  ஜனங்களுக்குள்ளே செல்வமும், உணவு, வானம் முதலிய ஸெளகரியங்களும், கல்வியும், தெய்வ பக்தியும், ஆரோக்கியமும் நல்லொழுக்கமும், பொது சந்தோஷமும் மேன்மேலும் விருத்தியடையவதற்குரிய உபாயங்கள் இடைவிடாமல் அனுஷ்டித்துக் கொண்டிருப்பதே ராஜாங்கத்தின் கடமையாவது, கிராம பரிபாலனம், கிராம சக்தி, வைத்தியம் முதலியவற்றில் குடிகளனைவரும் மிகுந்த சிரத்தை நாட்ட வேண்டுமாதலால் மாணாக்கர்களுக்கு இதன் விவரங்களை நன்றாக போதிக்கப்பட வேண்டும்” (பாரதியார் கட்டுரைகள், 2004 : 388-389).

மேற்கண்ட பாரதியின் வாசகத்தில் அரிய பெரும் கருத்துக்கள் நிறைந்துள்ளன.  இவை எதிர்கால அறிஞர்களாக வரவிருக்கும்  மாணவர்கள் மட்டுமல்லாமல் எல்லாக் குடிமக்களும் அறிய வேண்டிய கருத்துக்கள். இன்றைய அரசியலில் நமது நாட்டின் எல்லையைக் காப்பது மிகவும் முக்கியமான பொறுப்பாக உள்ளது.  நாட்டில் நல்லாட்சி மலர்ந்து குடிமக்கள் எல்லா நன்மைகளும் அடைந்து வெகு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே பாரதியின் கருத்து. எப்படி?…

“குடிகள் ராஜாங்கத்தைத் தம்முடைய நன்மைக்காகவே, சமைக்கப்பட்ட கருவியென்று நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.  குடிகளுடைய இஷ்டப்படியே ராஜ்யம் நடத்தப்பட வேண்டும்.  தீர்வை விதித்தல், தீர்வைப் பணத்தைப் பல துறைகளிலே விநியோகித்தல், புதுச் சட்டங்கள் அமைத்தல், பழைய சட்டங்கள் அழித்தல் முதலிய ராஜாங்க காரியங்கள் எல்லாம் குடிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளின் இஷ்டப்படியே நடத்த வேண்டும்.  குடிகளின் நன்மைக்காகவே அரசு ஏற்பட்டிருப்பதால் அந்த அரசியலைச் சீர்திருத்தும் விஷயத்தில் குடிகளெல்லாரும் தத்தமக்கு இஷ்டமான அபிப்ராயங்களை வெளியிடும் உரிமைகள் இவர்களுக்கு உண்டு…  ராஜாங்கங்கள் எவ்வளவு தூரம் மேற்கண்ட கடமைகளைச் செலுத்தி வருகின்றன என்பதையும் (மாணக்கருக்கு) எடுத்துரைக்க வேண்டும்.  கோயிற் பரிபாலனமும் அங்ஙனமே.  ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதுவும், தொழில் ஏற்படுத்திக் கொடுத்து உணவு தருவதுவும் ராஜாங்கத்தாரின் கடமை” (பாரதியார் கட்டுரைகள், 2004 : 389)
என்ற வரிகளில் மாணவர்களுக்கு, நாட்டை ஆள்பவர்களுக்குரிய கடமை எதுவென்பதையும், குடிமக்களுக்குரிய கடமைகள், உரிமைகள் எவை என்பதையும் கற்றுக்கொடுத்தலே எதிர்காலச் சமுதாயத்தில் நல்லாட்சி மலரும் என்றுரைத்த பாரதியின் கருத்து இச்சமுதாயம் சீர்பெருவதற்குரிய வழிகாட்டியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்
உலகம் வியக்கும் உன்னதமான நாடு என்றால், அது பொருளாதாரத்தில் மிகச்சிறந்த நாடாக இருக்க வேண்டும்.  செல்வச் செழிப்பு – ஏன் செல்வச் செருக்குடன் வாழும் நாடெனில் மற்ற நாடுகள் அதற்குப் பணிந்தே இருப்பது இயல்பு.  ஒரு காலத்தில் அந்நிலையில் இருந்த அமெரிக்கா பொருளாதார சரிவால் இன்று பெருமை இழக்கும் நிலையில் உள்ளது.  சீனா இன்று பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்து வருகிறது.  பொருளாதாரச் சிறப்பு அடையவேண்டுமானால் நேர்மையான அரசியல், திறமையான வணிகம், மக்களுக்கு வேண்டிய முக்கிய  பொருட்கள் சீராக வினியோகித்தல் இவைகள் யாவும் இன்றியமையாதன.  தீர்க்கதரிசனமாக இதைச் சொன்ன பாரதியின் பெருமையை நாம் வியக்கிறோம்.
“ஆரம்பக் கருத்துக்களை மாணாக்கர்களுக்குப் போதிக்குமிடையே தீர்வை விஷயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.  ஜனங்களிடம்… குறைவாக வாங்கும் நிலையிலிருந்து பொது நன்மைக்குரிய காரியங்கள்…  மிகுதியாக நடைபெறுகின்றனவோ…  அந்த ராஜாங்கம் நீடித்து நிற்கும்.  அந்த ஜனங்கள் ஷேமமாக வாழ்ந்திருப்பார்கள்.  விளை பொருளும், செப்பொருளும் மிஞ்சிக் கிடக்கும் தேசத்தில் விலைக்கு வாங்கி அதை வேண்டியிருக்கும் இடத்தில் கொண்டு போய் விற்க வேண்டும் என்பதை வியாபாரத்தில் பிரமாணமான கொள்கையாகும்.  வியாபாரத்தில் கூட்டு வியாபாரம்  எங்ஙனம் சிறந்ததோ அது போலவே கைத் தொழிலும் கூட்டுத் தொழிலே சிறப்பு வாய்ந்ததாகும்.  முதலாளி ஒருவன் கீழே பல தொழிலாளர்கள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும் தொழிலாளர்கள் பலர் கூடிச் செய்யும் தொழிலே அதிக நன்மையைத் தருவதாகும்…  சாத்தியப்பட்டவரை அநேகரிடம் பொருள் பரவியிருக்கும்டி செய்யும் வியாபார முறைகள் மேன்மையாகப் பாராட்டத் தக்கனவாம்” (பாரதியார் கட்டுரைகள் : 2004 : 390)

இக்கருத்தில்,  நாட்டின் பொருளாதாரம் மேன்மையடைவதற்குரிய நேர்மையான தீர்வை (வரி) வழிகளையும்,  வியாபாரத்தின் நுணுக்கங்களையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதே நாட்டின் பொருளாதாரம் சீர்பெருவதற்குரிய வழிகளாக அமையும். சமுதாயம் மேன்மையடைய பொருளாதாரம் மிக அவசியம் என்ற பாரதியின் கருத்தை மாணவர்களின் மனதில் பதிவாக்குதலே நன்மை பயக்கும்.

முடிவுரை
எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம.  விதைக்கும் நிலம் பண்பாட்டிருந்தால் மட்டுமே விதைக்கும் விதை நற்பலனைக் கொடுக்கும்.   நல் நிலமாக – மாணவர்களின் மனதைப் பண்படுத்தி, நல்விதையான பாரதியாரின் சீர்திருத்தக் கருத்துக்களின் விதைகளைத் தூவுவதன் மூலம் எதிர்காலச் சமுதாயம் நற்சமுதாயமாகப் பூத்துக்குலுங்கும்.  விதைப்பின் நற்பலன்களை நாம் அறுவடையாக்குவோம். மாணவர்களைப் பண்படுத்துவோம். பலன் பெறுவோம்.

துணை நின்ற நூல்கள்

1. பாரதியார் கட்டுரைகள்
கவிதா வெளியீடு
சென்னை – 600 007
பதிப்பு – 2007.

2. விசுவநாதன் சீனி
காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்
சி.ஐ.டி. நகர், சென்னை-600 035
முதற்பதிப்பு – 11 டிசம்பர் 2006.

3. டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதன்
பாரதி என்றொரு மானுடன்
நிய10 செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-டீஇ சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை – 600 098
முதற்பதிப்பு : 2014.

rmaragatham22@gmail.com

* கட்டுரையாளர்: திருமதி அர. மரகதவள்ளி, உதவிப்பேராசிரியர் – தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,  கோயம்புத்தூர்.

Copyright © 2023 KALANJIYAM - International Journal of Tamil Studies. All Rights Reserved.

AcadmicPlus.org

Go to Top
ajax-loader