Skip to content
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்
E-ISSN: 2456-5148
Facebook page opens in new windowTwitter page opens in new windowDribbble page opens in new window
KALANJIYAM
International Journal of Tamil Studies
KALANJIYAM
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்
Submit Research PapersSubmit Article
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்

பாரியும் பனையும்

You are here:
  1. Home
  2. Research Article
  3. பாரியும் பனையும்

பாரியும் பனையும்

PDF
Print 🖨 PDF 📄 eBook 📱

முன்னுரை
உலகின் மூத்த மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்க கூடியது தமிழ்மொழி ஆகும்.  தமிழ்மொழியின் பெருமைகளைத் தலைமுறைத் தலைமுறையாக இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.  அத்தகைய இலக்கியங்கள் பல இலக்கிய வகைமைகளைத் தோற்றுவிக்கின்றன.  தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற இலக்கிய வடிவங்கள் தோன்றின.  இது காலத்தின் தேவையாக இருக்கின்றது.  அந்த வகையில் சங்க இலக்கியத்தை மூலமாகக் கொண்டு அண்மையில் ஆனந்த விகடனில் 111 வாரமாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ என்ற வரலாற்றுத் தொடர் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்தாலும், மணியம் செல்வன் என்ற புகழ்பெற்ற ஓவியரின் கை வண்ணத்தாலும், தமிழரின் ஈராயிரம் ஆண்டுகாலம் பழமை வாய்ந்த வரலாறுகளையும், பண்டைத் தமிழரின் அக, புற வாழ்வையும் விரிவாக எடுத்துரைக்கின்றனது. இந்நாவலில் தமிழரின் ஆதி அடையானமான ‘பனைமரம்| ஒரு மையக் குறியீடாக இருந்து கதையின் தொடக்கத்தையும் இறுதியையும் இணைக்கிறது என்பதையும் தமிழினத்தின் பேரடையானமாகப் ‘பனைமரம்’ நாவலில் எவ்வாறு இடம் பெறுகின்றது என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

முதல் நூலில் பனைமரம்
தொல்காப்பயித்தில் மூவேந்தர்கள் பகையின் காரணமாகவும், தங்களைத் தனித்து அடையாளப்படுத்தவும் தனித்தனி அடையாள மாலையை பயன்படுத்தினர் என்று குறிப்பு இடம்பெறுகிறது.  இதில் சேரனுக்குரிய அடையாளமாகப் போந்தையும், சோழனுக்குரிய அடையாளமாக ஆத்தியும், பாண்டியனுக்குரிய அடையாளமாக வேம்பும் குறிப்பிடப்படுகின்றது.இதனை,

“…………………………உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்
போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந்தானை மலைந்த பூவும்”    (தொல்.பொ.நூ-1006)

என்ற நூற்பாவின் வழி அறியமுடிகிறது.     போந்தை என்பது பனம் பூவைக் குறிப்பதாகும்.  தொல்காப்பியர் பனம் பூவை “ஏந்து புகழ் போந்தை” என்று குறிப்பிடுகின்றார்.  இதன் பொருள்,“உயர்ந்த புகழை உடைய பனம் பூ” என்பதாகும்.  உயர்வு கருதி குறிப்பிட்டதன் காரணம் தமிழரின் பேரடையாளமாக பனைமரம் இடம் பெற்று இருப்பதே ஆகும்.

சிலப்பதிகாரமும் பனைமரமும்
தொல்காப்பியம் மட்டுமின்றி சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களிலும் மூவேந்தரின் அடையாள மாலை பற்றிய குறிப்புகளும் பனை தொடர்பான செய்திகளும் காணக் கிடைக்கின்றன.  இதனை,

“தோள் நலம் உணீஇய கம்பைப் போந்தையொடு வஞ்சி பாடுதும்………”                    (சிலம்பு.ப-27)

“பலர் தொழ வந்து மலாவிழ்: மாலை
போந்தைக் கண்ணிப் பொலம்பூ தெரியல்”      (சிலம்பு.ப-381)

என்ற சிலப்பதிகாரப் பாடலடிகள் வழி சேரனின் அடையாள மாலையான பனை பற்றிய செய்திகளை அறியமுடிகிறது.

புறநானூற்றில் பனை
பனை தொடர்பான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மிகுதியானப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.  அப்பாடல்களில் பனை வேந்தனாகியச் சேரனையும் குறுநில மன்னனாகிய வேளிரையும் அடையாளப்படுத்துகிறது.

“வட்கர் போகிய வளர் இளம் போந்தை”    (புறம்.ப.100)

என்ற பாடலடிகள் வேளிரில் ஒருவனாகிய அதியமானைக் குறிக்கின்றது.  அதியன் தன் அடையாள மலையாகப் பனம்பூவைச் சூடினான் என்பதன் மூலம் வேளிரும், சேர வேந்தனும் பனம்பூவை அடையாளமாகக் கொண்டவர்கள் என்பதை அறிய முடிகின்றது.  மேலும்,

“வான் உயர ஓங்கிய வயங்கு ஒளிர்பனை”            (கலி.ப-104)

“மூட பனையத்து வேர் முதலா”              (புறம்.ப-229)

“இரும் பனையின் குரும்பை நீரும்”              (புறம்.ப-24)

கலித்.பா-104,138,142,149, •    நற்.பா-126,335, குறுந்.பா-173,248,372, அகம்.பா-148,33,360,365, புறம்.பா-45,22,161,249,340 ஆகிய சங்க இலக்கியப் பாடலடிகள் வழி அறியப்படுகிறது.

பனை – சொல்லும் பொருளும்
இலக்கியங்களில் பனை என்பதற்குப் “போந்தை” என்றும் “பெண்ணை” என்றும் கூறுவர்.  பனையானது ஆண்பனை, பெண்பனை, கூந்தல்பனை, நாட்டுப்பனை, அலகுப்பனை, தாளிப்பனை, நிலப்பனை போன்ற பனை வகைகள் இருப்பதை அபிதான சிந்தாமணி தமிழ் களஞ்சியம் குறிப்பிடுகின்றது.

பனை என்பது புல்லினத்தைச் சார்ந்த ஒரு தாவரப் பேரினம் ஆகும்.  இலக்கணமுறைப்படி பனையை மரம் என்று கூறுதல் தவறானதாகும்.  பேச்சுவழக்கப்படி பனை என்பதை மரம் என்றே அழைக்கின்றனர்.  தமிழரின் அடையாளம் என்பதால்தான் பனை தமிழகத்தின் மாநில மரமாக அறியப்படுகின்றது.

தொல்காப்பியத்தின் தொடங்கி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் பனை தொடர்பான குறிப்புகள் மிகுதியாக கிடைத்திருப்பதை மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

மனிதனின் முதல் கண்டுபிடிப்பான மொழியினைக் கொண்டு பேசவும், பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்து அதை இலக்கியமாக வரைய பனையோலைகளே பயன்பட்டது.  பல நூறாயிரம் இலக்கியங்கள், பனையோலையிலேயே எழுதி பாதுகாத்து பல தலைமுறைகள் பயன்படுத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே.

பனைக்கும், பழந்தமிழருக்குமான உறவு என்பது பன்னெடுங்காலம் தொட்டே இருந்து வருகின்றது என்பதற்கும் பனை தமிழரின் அடையாளம் என்பதனை உணரவும் இது ஒன்றே போதுமானச் சான்றாகும்.
வீரயுக நாயகன் வேள்பாரி

எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்கள் வீரயுக நாயகன் வேள்பாரி என்னும் நாவலைச் சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, பல ஆண்டுகளாகக் களஆய்வு மேற்கொண்ட வரலாற்றுத் தேடலின் வாயிலாகவும், பழந்தமிழரின் வாழ்வியலை மையப்படுத்தி மிகப் பெரிய வரலாற்றுப் புதினத்தைப் படைத்திருக்கின்றார்.

நாவலின் தொடக்கம்
கபிலர் பாரியின் பறம்பு மலை நோக்கி பயணிக்கும்போது நீலன் என்ற வீரனின் உதவியால் பச்சைமலைத் தொடரைக் கடக்கின்றனர்.  இவ்விருவரும் பேசிக்கொள்ளும் போது பனை மரம் பற்றிய உரையாடல் எழுகிறது.‘பனைமரம் எங்களின் குலச்சின்னம்’ மனிதனுக்கு மட்டுமல்ல பறம்பு மலையின் எல்லா உயிர்களுக்கும் அது தெரியும்.  அதனிடம் ஒப்படைத்துவிட்டால் எந்தத் தீங்கும் வருவதில்லை என்று நீலன் விளக்குகிறான்.  மேலும் பனைமரம் தன் இயல்பில் செங்குத்தாக வளரக்கூடியது.  இயல்புதான் ஒன்றின் குணத்தைத் தீர்மானிக்கின்றது.  வளைந்து கொடுக்காத பறம்பு நாட்டின் இயல்பு பனையிலும், பனையின் இயல்பு பறம்பு நாட்டிலும் நிலை கொண்டுள்ளது என்று பெருமிதமாகக் குறிப்பிடுகின்றான்.நாவலின் தொடக்கத்திலேயே பனை மரத்தின் இயல்பு பற்றியும், பறம்பின் இயல்பு பற்றியும் மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.  மேலும் காட்டில் எத்தனையோ மரங்கள் இருக்க பனைமரத்தை குலச்சின்னமாகக் கொண்டது ஏன்? என்று கபிலர் கேட்க, அதற்கு நீலன் பனை என்பது வெறும் அழகு அல்ல, அது ஆயுதம்.  ஆயுதம் மட்டுமல்ல பேரழகு என்றும், பாரிக்குப் ‘பனையன்| என்ற பெயரும் இருக்கின்றது என்றும் பாரியின் குலப்பாடலே பனைமரம் பற்றியதுதான் என்றும் எடுத்துக் கூறினான்.

மூவேந்தர் உரை
வேளிர்க்கும் – வேந்தருக்கும் இடையே போர்ப்பதற்றம் சூழ்ந்திருந்த வேளையில் அமைதிப் பேச்சுக்காக பாரியின் பிரதிநிதியாகக் கபிலரையும், மூவேந்தரின் பிரதிநிதியாகத் திசைவேழரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.  இப்பெரும் போரில் பாரியும் பறம்பும் அழிவதைத் தவிர்க்கவே நாங்கள் விரும்புகிறோம் அதற்காகத் தான் உங்களை அழைத்தோம் என்றார் குலசேகரப் பாண்டியன்.  அதற்காக நான் என்ன செய்யவேண்டும் என்று கருதுகிறீர்கள் எனக் கேட்டார் கபிலர்.  மூவேந்தர்களோடு இணங்கிப் போவதுதான் பாரிக்கு நல்லது எண்ணற்ற சிறுகுடி மன்னர்களைப் போல கீழ்ப்படிந்தால் அவனும் தனது நிலத்தை சிறப்பாக ஆளலாம் என்றார் பாண்டிய நாட்டு முதன்மை அமைச்சர் முசுகுந்தர்.உடன்படவில்லை என்றால்? எனக் கபிலர் கேட்க “போர்க்களத்தில் அவனது குடலை கழுகுகள் ஏந்திப் பறக்கும் நாள் விரைவில் வரும்” என்றார் சோழவேலன். கூர்மையான வார்த்தைகளால் தாக்கப்பட்ட கபிலர் தன் கொந்தளிக்கும் உணர்வுகளை ஒருமுகப்படுத்திக் கொண்டிருந்தார்.  மூவேந்தர்களும் இணைந்து அவையில் ஒருமித்த கருத்தாக வேந்தரில் ஒருவருக்கு பாரி தன் மகளை மணமுடித்து கொடுக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது.

மகற்கொடை மறுத்தல்
பாண்டிய நாட்டு இளவரசன் பொதியவெற்பன் சொன்னான் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவனுக்குப் பாரி தன் மகளை மணமுடித்து கொடுத்து மணஉறவு காண்பது அல்லது மூவேந்தருடன் போரிட்டு மாய்வது இவை இரண்டில் எது சரியான வழியென உங்கள் நண்பனுக்கு அறிவுரை வழங்குங்கள் என்று கூறினான்.  உடனே சோழவேலன் எழுந்து மூவேந்தருடன் போரிட்டால் பாரி நிச்சயமாக போரில் அழிவான்.  அதன் பிறகு பறம்பையும் பறம்பின் செல்வங்களையும் பங்கிட்டுக் கொள்ளுவோம் அதைத் தடுக்க மூவேந்தருடன் மணஉறவு கொள்ளுதல் சிறந்தது தானே என்றார்.  அதற்கு கபிலர் நேரடியாக கேட்டார் மூவேந்தருக்கும் பாரியின் பறம்பு மலை வேண்டும் அவ்வளவுதானே! உரத்தக்குரலில் ஆமாம் என்றான் சோழவேந்தன்.

இதற்கு கபிலர், கூத்தராக, விறலியராக, பாணராக வேடமிட்டு பறம்பு மலையேறி யாழ்மீட்டி யாசகம் வேண்டுங்கள்! யாசகம் கேட்டால், இல்லையென்று சொல்லும் வழக்கம் பாரியிடம் கிடையாது என்று மூவேந்தரையும் இகழ்ந்து பாரியின் மகளை மணமுடித்து கொடுக்க மறுத்தபோது மூவேந்தர்களில் மூத்தவனான குலசேகர பாண்டியன் கொந்தளித்து எழுந்து நட்பால் நா பிறழ்கிறது. உமது சொற்கள் பற்றியெரியும் பறம்பினைப் பாட அதிக நாட்கள் இல்லை கபிலரே!என்றான்.  உடனே கபிலர் இருக்கையைவிட்டு எழுந்து நெருப்பில் எரித்தாலும் மீண்டும் முளைக்கும் ஆற்றல் கொண்டது பனம்பழம் மட்டும் தான். பனையைக் குலச்சின்னமாக கொண்டவன் வேள்பாரி.  நெருப்பாலும் அழிக்க முடியாத அவனைப் பாடுதல் எந்தமிழுக்கு அழகு என்று சொல்லியபடி வணங்கி அவை நீங்கியதை நாவலாசிரியர் குறிப்பிடுவதால் நாவலின் மையமாகவும் பனைமரம் பாரியின் குறியீடாக பேசப்படுவதைக் காணமுடிகிறது.

நாவலின் முடிவு
நாவலின் தொடக்கத்தில் கபிலர் நீலன் மூலமாக கூறக்கேட்ட பனையின் இயல்பும், பறம்பின் இயல்பும் பாரியின் குலப்பாடலில் வரும் பனையின் சிறப்பும் மிக அழகாக நாவலின் இறுதியில் மூவேந்தரின் பகைவென்று வெற்றித்தெய்வமான கொற்றவைக் கூத்தின் போது பாரியின் குலப்பாடலான

“பனையன் மகனே! பனையன் மகனே!
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே!
திணையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே!…”

என்ற நீண்ட பாடலை நீலன் பாடச் சொல்லுதல் மூலம் நாவலின் தொடக்கம், மையம், இறுதியென நாவல் முழுவதும் பனையை மையமிட்டதாகவே அமைந்துள்ளது.  அந்த வகையில் நாவலின் ஒரு மையக் குறியீடாகவே பனைமரம் பார்க்கப்படுகின்றது.  பனைமரம் என்பது பாரியின் குறியீடாகப் பழந்தமிழரின் அடையாளமாக முன்வைக்கப்படுவதை வேள்பாரி நாவல் எடுத்துக் காட்டுகிறது.

“பாரி அழிந்த சமூகத்தின் அடையாளமாக இல்லாமல் அழியக் கூடாத மனிதப் பண்பின் பேரடையாளமாக என்றென்றும் போற்றப்பட வேண்டும்” என்பதே ஆசிரியரின் நோக்கமாக அமைகின்றது.  பனையின் இயல்போடு பாரியின் இயல்பைக் கூறுவதன் மூலம் பாரியும் பனையைப்போல தமிழரின் பேரடையாளமாக நீண்ட காலங்களுக்கு நிலைத்து வாழ வேண்டும் என எடுத்துரைக்கின்றார்.

முடிவுரை
பனை தமிழரின் அடையாளம் என்பதால்தான் நாவலாசிரியர் பனையின் இயல்புகளோடு வேள்பாரியின் இயல்புகளை ஒப்பிடுகின்றார்.  பாரி என்ற குறுநில மன்னன் மூன்று பெரு வேந்தர்களைக் காட்டிலும் பெரும் வீரனாகவும், வரலாற்று நாயகனாகவும் ஆசிரியர் நாவல் முழுவதும் குறிப்பிட்டு இருக்கின்றார்.  மூவேந்தரைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் ஏன் பாரியை கொண்டாட மறந்துவிட்டது என நாவலின் மூலம் கேள்வி எழுப்புகின்றார்.  மேலும் நாவல் பழந்தமிழரின் அடையாளமான பனையை பாரியின் குறியீடாக காட்டியிருப்பது வேந்தர்களைப் போல தமிழ்ச் சமூகம் பாரியையும் கொண்டாட வேண்டுமென்பதைக் குறிப்பால் உணர்த்தியிருக்கின்றார்.

பயன்பட்ட நூல்கள்:

சுப்பிரமணியன், ச.வே.,                தொல்காப்பியம் தெளிவுரை,
மணிவாசகர் வெளியீடு
சென்னை, 1998.

பாலசுப்பிரமணியன், கு.வெ.,            சங்க இலக்கியம் – புறநானூறு,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
சென்னை, 2004.

வெங்கடேசன், சு.,                    வீரயுக நாயகன் வேள்பாரி,தொகுதி 1,2
ஆனந்த விகடன் பிரசுரம்,
சென்னை, 2018.

* கட்டுரையாளர் – தூ.கார்த்திக் ராஜா, இளம் முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை , காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். -624 302

அனுப்பியவர்: முனைவர் சிதம்பரம் – mudalvaa@gmail.com

Copyright © 2023 KALANJIYAM - International Journal of Tamil Studies. All Rights Reserved.

AcadmicPlus.org

Go to Top
ajax-loader