Skip to content
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்
E-ISSN: 2456-5148
Facebook page opens in new windowTwitter page opens in new windowDribbble page opens in new window
KALANJIYAM
International Journal of Tamil Studies
KALANJIYAM
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்
Submit Research PapersSubmit Article
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்

மழையும் தமிழர் சிந்தனை மாற்றப் போக்குகளும்

You are here:
  1. Home
  2. Research Article
  3. மழையும் தமிழர் சிந்தனை மாற்றப் போக்குகளும்

மழையும் தமிழர் சிந்தனை மாற்றப் போக்குகளும்

PDF
Print 🖨 PDF 📄 eBook 📱

உலகில் சிந்தனையாலும் பண்பாட்டாலும் வளர்ச்சியடைந்த  தொல்குடி தமிழ்ச்சமூகம். இதற்கு இரண்டாயிரமாண்டு கால சிந்தனை மரபு உண்டு. வாழ்தல் சார்ந்த, உழைப்பு சார்ந்த செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் அம்மாக்களின் சிந்தனையிலும் மாற்றங்களை உருவாக்குகின்றன. ஒரு சமூகத்தின் சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவான  பனுவல்களே தக்கச் சான்றாக அமைகின்றன. அந்த வகையில் தமிழரின் மழை சார்ந்த பகுத்தறிவு சிந்தனை எப்படி கருத்துமுதல்வாதச் சிந்தனைக்குச் சென்றது அதற்கான சமூகக் காரணங்களை இலக்கியத்தில் இருந்ததும் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலில் இருந்தும் முன்வைத்து ஒரு உரையாடலை கட்டமைப்பதே  இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

வரலாறு அறியும் காலம் சங்க காலம். சங்க கால மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள தொல்லியல் சான்றுகள் தொடங்கி பல சான்றுகள் கிடைக்கின்றன. என்றாலும் சங்க இலக்கியம் புனையும் வாழ்க்கைச் சித்திரம் முழு நம்பகத்தன்மை கொண்டதாக விளங்குவதை இந்திய சமூக ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சங்கப் பனுவல்களுக்கு மூலமாக விளங்கியது தொல்காப்பியம். ஒரு சமூகத்தின் முதற் பொருள் என்பது நிலமும் பொழுதும் என்ற வரையறை தமிழ்ச் சிந்தனை மரபின் உச்சாணி கொம்பு. அனைத்து நிலத்திற்கும் பொதுவானது மழை. மழை பெய்யும் காலத்தைக் கார் காலம் என்று கூறும் முறையில் தமிழர்ச் சிந்தனை வியந்து நிற்கிறது. இதனை, “மாயோன் மேய காடுறை உலகமும்”. தொல். பொ.அகம்.951.

என்று நிலமும்,

“காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்”.
தொ.பொ.அகம்.952.

என்று பொழுதுகளும்,

“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்” தொ.பொ.அகம்.960.

என்று மக்கள் வாழ்க்கையும் மழை சார்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக மழையோடு உறவாடி வாழ்ந்து வரும் முல்லை நில மக்களின் வாழ்க்கையைச் சங்க இலக்கியங்களில் பரவலாகப் பார்க்க முடிகிறது. முல்லைப்பாட்டு என்று தனிப் பாடல் எழுதும் அளவிற்கு மழை வாழ்க்கை முக்கியத்துவம் பெறுகிறது.

காடு, மலை, வயல், கடல் என்று மழை தனது செயல்பாட்டால் மக்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை விழிப்புக்கு மழையின் பங்களிப்பு முக்கியமானது. மழையின் அவசியத்தின் அடிப்படையிலேயே ஏனைய பருவங்களின் வாழ்வியல் தீர்மானிக்கப்படுவதைத் திருக்குறளில் ‘வான் சிறப்பு’ உணர்த்தி நிற்கிறது. இதனை,

“விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண்பது அரிது”
. குறள் 16.

தமிழரின் திணை வாழ்க்கையில் கண்டடைந்த வாழ்வியல் நெறிகளில் ஒன்று மழைப் போற்றுதல். மழை இல்லையென்றால் புல்லே வாழ முடியாதபோது மனிதன் என்ன செய்வான் என்பது வாழ்தலின் ஊடாகக் கண்டடைந்த சிந்தனைப் போக்கைக் காணமுடியும். மேலும்

“மாமழைப் போற்றுதும்; மாமழைப் போற்றுதும்“. சிலம்பு.

என்ற இளங்கோவின் சிந்தனையும் இங்கு உடன் சிந்திக்கத்தக்கது. இவ்வாறு போற்றுதலுக்கு உள்ளான மழை குறித்து பல பதிவுகள் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன. அவை தமிழரின் ஆழ்ந்த இயற்கை பற்றிய பகுத்தறிவை வெளிப்படுத்த உள்ளன.

“மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே’‘ . புறம்.பாடல்.எண். 107

“பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே
“. அகம்.183

“வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்
“. பதி . 12

“கருவி வானம் தண்டளி தலைஇய
வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய”
.பதி. 31

“வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து
“. நற்றிணை.261

“நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழி
ந்து”. நற்றிணை. 289

“நனந்தலை உலகம் வளையி நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
“. முல்லை. 1-2

“கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு
“. அகம். 43

மேலே உள்ள சங்கப் பாடல்களில் மாரி, கார், மாமழை, கனை பெயல், பெரும் பெயல், சாரல் போன்ற சொற்கள் மழை பெய்தல் குறித்து பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சொற்கள் மழை பெய்யும் சூழலை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன. அக்கால மக்கள் மழை எப்படி பெய்கிறது என்ற வியத்தகு சிந்தனைக்கு ஆட்பட்டு உள்ளனர். குறிஞ்சி, முல்லை, மருதம் மக்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டிருந்த கடல் வாழ்க்கை இதற்கான பதிலை வழங்கியது. நெய்தல் நில வாழ்க்கை மழையின் இரகசியத்தை மக்கள் சிந்தனைக்கு எட்டச் செய்தது. கடலும், கடுமையான கோடையும் வெப்பச்சலனமும் அடர்ந்த காடுகளும் மழை பெய்வதற்கான இருப்புகள் என்பதை இந்நில வாழ்க்கை கற்றுத் தந்தது. இதனை புலவர்கள் பல பாடல்களில் (அகம் 43, 183) எடுத்துக் கூறியுள்ளனர்.

இயற்கையோடு வாழ்ந்து  பட்டறிவின் காரணமாக மழை சார்ந்த பகுத்தறிவை வளர்த்துக் கொண்ட சமூகம் பிற்காலத்தில் தன்ணுணர்வு நிலைக்கு மாறி விட்டது. இயற்கையிலிருந்து அந்நியமாதல் ஏற்படத் தொடங்கிய காலமாக சங்கம் மருவிய காலம் இருந்துள்ளதை மக்கள் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் மூலம் அடையாளம் காண முடியும். மழை சார்ந்த புரிதல் இதற்கு தக்க உதாரணமாகக் கொள்ள முடியும்.

திணைச் சமூகம் ஒருங்கமைக்கப்பட்ட நிலவுடைமைச் சமூகமாக மாற்றம் பெறும் சூழ்நிலையில் சிந்தனைக் கட்டமைப்பும் சார்புடையதாக மாற்றம் பெறுகிறது. பொருள் முதல்வாத நிலையில் இருந்த சிந்தனை மரபு அரசு உருவாக்கத்தால் திட்டமிட்டு கருத்து முதல் வாதத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டதை மழை குறித்த சிந்தனை சார்ந்து உணர முடியும்.

திருவள்ளுவர் தனது குறளில் ‘பெய்யென பெய்யும் மழை’ என்று கூறுவதைச் சிந்திக்க வேண்டும். இங்கு மழை குறித்த சிந்தனை வாழ்வியல் தளத்தில் இல்லாமல் வெறும் கருத்துத் தளத்தில் மாற்றம் பெற்றுள்ளதைச் சிந்திக்க முடிகிறது. பெண்களின் கற்பு நெறியை எடுத்துக் கூற மழை பயன்படுத்தப்பட்டுள்ளது. கணவனைத் தெய்வமாக வணங்கும் கற்புடை பெண் பெய்யென்று கூறினால் மழை உடனே பெய்யும் என்ற சிந்தனை தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட மாபெறும் மாற்றத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது. சமூக கட்டமைப்பில் மனித ஏற்றத் தாழ்வுகள் தீர்க்கப்பட முடியாத முரண்பாடாக மாறும் சூழலில் உழைப்புக்கும் உடைமைக்கும் இடைவெளி மோசமாகப் பேணப்படும் நிலையில் மக்களுக்கு இடையே பண்பாட்டு பொருளாதார சமமின்மை நிலைத்து விட்ட சூழலில் உருவாக்கப்படும் சிந்தனை அடிமைத்தனம் நிகழ்வதையே இது காட்டுகிறது.

நிலம் சார்ந்த வாழ்க்கை இருக்கும் போது இருந்த பொருள் சார் சிந்தனை மரபு சமூகம், அரசன், குடும்பம், சொத்துடைமை, பண்பாடு என்று நிறுவனமயமாக்கப்படும் போது மக்கள் பொருள் முதல் சார் சிந்தனையில் இருந்து வலுகட்டாயமாக விலக்கப்பட்டுக் கருத்து முதல் சார் சிந்தனைக்கு உட்படுத்தப்படும் பணியில் வள்ளுவரும் விதிவிலக்கில்லாமல் ஆட்பட்டிருப்பதை உணர முடிகிறது.

“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்” என்ற சிந்தனை அடிமைத்தனம் மக்கள் வாழ்க்கை இயற்கையிலிருந்து விலகி மன்னன் என்ற கடவுளுக்கு நிகரானவனிடம் சென்றுவிட்ட அவலத்தையும் மக்கள் அச்சூழலில் வாழப் பழகிக்கொள்ள கருத்துப் பதிவுகளைப் பயிற்றுவிக்கும் தன்மை அக்கால சமூக மேல் கட்டுமானத்தை ஆழமாக எடுத்துக் கூறுகிறது. இந்த வகையில் தான் மழை சார்ந்த சிந்தனை முறையும் மாற்றமடைந்துள்ளது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் அரசு உருவாக்கத்தால் கருத்து (கற்பனை) சார்ந்த சமூகமாக பின்தள்ளப்பட்ட அவலத்திற்கு தமிழ்ப் புலவர்களும் அவர்களின் வறுமையும் பயன்படுத்தப் பட்டுள்ளதை வரலாறு நெடுகிலும் அறிய முடியும்.

அதே நேரத்தில் கிராம மக்களின் மழை சார்ந்த வழக்காறுகளை எண்ணும்போது பெரும்பாலும் உழைப்புச் சார்ந்த வெளிப்பாடாகவே இருக்கின்றன.

“தவளை கத்தினால்தானே மழை!”

“அந்தி ஈசல் பூத்தால், அடை மழைக்கு அச்சாராம்!”

“மார்கழி மழை மண்ணுக்கு உதவாது!”

“தை மழை நெய் மழை!”

“மழையடி புஞ்சை, மதகடி நஞ்சை!”

“தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்!”

மழை தங்கள் பொருளாதார வாழ்வை மேம்படுத்தும் இயற்கை நிகழ்வு. மழையால் ஏற்படும் பயன்பாட்டு மதிப்பின் அடிப்படையில் சிந்திக்கும் போக்கும் சமூக யதார்த்த வாழ்வும் அம்மக்கள் ஆழமான அரசியல் பொருளாதார பண்பாட்டு நிகழ்வுகளுக்கு எதிர் வினை நிகழ்த்தும் சிந்தனை மரபும் அறுந்துபட்ட அந்நியப்பட்ட தன்மையையும் காண முடிகிறது.

துணைநூற்பட்டியல்

1.தொல்காப்பியர், தொல்காப்பியம்.
2.திருவள்ளுவர், திருக்குறள், பரிமேலழகர் உரை.
3. சங்க இலக்கியம், புறநானூறு (மூலமும் உரையும்), 2007, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 098.
4.சங்க இலக்கியம், அகநானூறு (மூலமும் உரையும்), 2007, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 098.
5.சங்க இலக்கியம், நற்றிணை (மூலமும் உரையும்), 2007, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 098.
6.சங்க இலக்கியம், பதிற்றுப்பத்து (மூலமும் உரையும்), 2007, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 098.
7. சங்க இலக்கியம், பத்துப்பாட்டு (மூலமும் உரையும்), 2007, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 098.
8.இராமநாதன், ஆறு.நாட்டுப்புறவியல் ஆய்வுகள்,1997, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.

* கட்டுரையாளர் – – முனைவர் ம இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  (தன்னாட்சி) ஊத்தங்கரை , கிருஷ்ணகிரி மாவட்டம். –

ramachandran.ta@gmail.com

Copyright © 2023 KALANJIYAM - International Journal of Tamil Studies. All Rights Reserved.

AcadmicPlus.org

Go to Top
ajax-loader