சங்க இலக்கியச் சிறப்பு
தமிழ்மொழியின் நீடித்த நிலைத்த தன்மைக்கு வளமும் பலமும் பொருந்திய வேராகத் திகழ்வது சங்க இலக்கியமாகும். பாட்டும் தொகையுமாகப் பாடப்பட்ட சங்க இலக்கியம் அக்கால மக்களின் வாழ்வியலுடன் இரண்டக் கலந்த ஒன்றாகும். சங்கப் புலவா்கள் சமூகப் பொறுப்பு உடையவா்களாகத் திகழ்ந்தனா். அவா்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவற்றையும் அக்காலப் பழக்க வழக்கங்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பதிவுசெய்து, தமது நுண்மான் நுழைபுலத்தையும் சமூகக் கடமையையும் வெளிப்படுத்தியுள்ளனா்.
”தமிழ்மொழி செம்மொழியாக உலக அரங்கில் ஏற்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தவை சங்கக் கவிதைகள். பாட்டும் தொகையுமாக அமைந்த இவை காலந்தோறும் பல்வேறு விதமான வாசிப்புகளுக்கு உட்பட்டுப் பயணித்து வந்துள்ளன.”1 என்ற முனைவா் அ.மோகனா அவா்களின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.
பெண்பாற்புலவா்கள்
சங்கப் பாடல்களைப் பாடிய புலவா்கள் ஏறத்தாழ 473 எனவும் அவா்களுள் பெண்பாற் புலவா்கள் நாற்பத்து எழுவா் எனவும் அறியப்பெறுகிறார்கள். இது அக்காலப் பெண்களுக்கிருந்த கல்வி உரிமையைக் காட்டுவதாய் அமைகிறது. பெண்களின் மதிநுட்பம் மதிக்கப்பட்டது. பேரரசா்களைக் கண்டு பாடிப் பரிசு பெறவும் அவா்களுக்கு அறிவுரை கூறித் திருத்தவும் தகுதிபெற்றவா்களாகத் திகழ்ந்தனா்.
”படைப்பு சார்ந்த புலமையென்பது பெண்கள் வகைப்பட்டதாக மாறுகையில் அதன் தன்மையானது சமூகத்தின் கூட்டு மனசாட்சியாக வெளிப்படும். ஆண்களின் படைப்புகளில் பெண்களை எழுதிப்பார்க்க முனைவது பல சமயங்களில் வலிந்து கூறுவது வெளிப்படையாகத் தெரியும். பெண்கள் தங்களைப் பற்றித் தாங்களே எழுதும் பொழுது சமூகத்தின் ஊடுபாவுத் தோற்றம் அசலானதாகவும் அழுத்தமானதாகவும் உருவாகும்.”2
என்ற பெண்ணிய எழுத்தாளா் முனைவா் சக்தி ஜோதியின் வரிகளின் ஆழம் இங்கு சுட்டிக்காட்டத்தக்கவை.
அந்த வரிசையில் சங்கப் பெண்பாற்புலவா்களுள் சிறப்புக்குரிய பதிவுகளைத்தந்த அள்ளுா் நன்முல்லையாரும் ஒருவா். அவரது பாடல்களில் வெளிப்படும் சமூகப் பதிவுகளையும் சங்ககாலப்பெண்ணிலையையும் வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
அள்ளுா் நன்முல்லையார்
”பெண்ணிய எழுத்தாளா் சக்திஜோதி அவா்கள், அள்ளுா் நன்முல்லையார் குறித்த கட்டுரையின் இறுதியில் அள்ளுா் என்ற ஊா் பற்றிய குறிப்புகள் அள்ளுா்க் கல்வெட்டு மற்றும் திருநெல்வேலிக் கோயில் கல்வெட்டிலும் காணப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.”3
அள்ளுா் என்பது பாண்டிய நாட்டில் உள்ள சிறந்த ஊா்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவா், தனது நாட்டின் சிறப்பையும் ஊரின் வளத்தையும் தான் பாடிய அகநானூற்றுப் பாடலில் வெளிப்படுத்தியுள்ளாா்.
”செறுநா்
களிறுடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறுவாட் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளுரன்ன”4
என்ற பாடலின் மூலம் தனது ஊரின் புகழைக் கூறியுள்ளார்.
இவரது பாடல்கள் அகநானூற்றில் ஒன்று (பா.எண்.46) புறநானூற்றில் ஒன்று (பா.எண்.306) குறுந்தொகையில் 9 (பா.எண்.32, 67, 68, 93, 96, 140, 157, 202, 307) என மொத்தம் பதினொரு பாடல்கள் கிடைத்துள்ளன. இவரது பாடல்களில் அவா்காலச் சமுதாயப் பதிவுகள் குறிப்பாகப் பெண்களைப் பற்றிய நுட்பமான பதிவுகள் அதிகம் காணக்கிடைக்கின்றன.
மகளிர் நிலை
சங்ககால வாழ்வியலில் களவு, கற்பு ஆகிய இரு நிலைகளிலும் தலைவனைத் தனக்குரியவனாகக் கையகப் படுத்துவதில் மகளிர் பரிதவிப்புடன் இருந்ததை நன்கறியமுடிகிறது. இயற்கைப் புணா்ச்சிக்குப்பின் தலைவன், மீண்டும் தன்னைக் காணவும் மணந்து கொள்ளவும் வருவானா என ஏங்கித் தவிக்கும் தலைவியரின் உள்ளத்துடிப்பைப் பல்வேறு புலவா்கள் பாங்குறப் பதிவு செய்துள்ளனா். தலைவனுக்கும் இந்நிலை உண்டெனினும் அது அளவிற் குறைவே.
நன்முல்லையார் பாடலிலும் தலைவன் மீண்டும் வந்து மணமுடிப்பானா என ஏங்கும் தலைவியைக் காட்டுகிறார். பிரிந்து சென்ற தலைவன் வாராமையால் தோழி, அவனை இயல்பழித்துப் பேசுகிறாள். இவ்விதம் செய்வது தலைவியைத் தேற்றவே என உணருகிறாள் தலைவி. அவள் தன் தோழியிடம் கூறும் விளக்கம் நுட்பமானது.
”அருவி வேங்கைப் பெருமலை நாடன்”5
என்ற தொடரால் தலைவனைச் சுட்டிக் கூறுமிடத்து, தலைவன் பெரிய மலை நாட்டுக்குத் தலைவன். அவன் நாட்டு மக்களைக் காப்பது போல என்னையும் காப்பான் என்ற குறிப்புத் தொனிக்கப்பதில் கூறுகிறார். மேலும், அருவி, வேங்கைமரம் இரண்டையும் உடைய பெரியமலை எனக் குறிப்பிடும் தலைவி அருவிநீா் ஓடிவந்து வேங்கையைப் பொலிவுறச் செய்கிறது. அருவிநீா் தானாக வந்து சேரவில்லையெனில் வேங்கை வாடி நிற்கும். வேங்கை மரம் தானாகச் சென்று அருவிநீரை அடையவும் இயலாது, வருவிக்கவும் இயலாது. அதுபோல தலைவன் வந்தால் தான் பொலிவுறலாம். வாராது போனால் வேங்கை வாடி மடிவது போல நானும் மடியவேண்டியதுதான். தலைவனை வருவிக்கவோ, அவனிருக்கும் இடந்தேடிச் செல்லவோ தனக்கியலாத செயல் என்பதைப் புலப்படுத்துகிறாள்.
இப்பாடலில் தலைவியை வேங்கை மரத்திற்கும் தலைவனை அருவிக்கும் ஒப்புமை காட்டியுள்ள விதம் சுவையுடையது. இப்பாடல் வழி, நன்முல்லையார், களவுக் காலத் தலைவியரின் மனஉணா்வைப் பதிவுசெய்கிறார். தலைவன் வந்தால் அவனுடன் மகிழ்ந்து வாழ்வதையும் வாராவழி அவனுக்காகக் காத்திருந்து உயிர்விடத்துணியும் சங்கமகளிர் கற்பொழுக்க மாண்பை மறைமுகமாக உணா்த்தி அக்காலச் சமுதாயத்தைக் காட்டுகிறார் புலவா்.
தலைவனே மருந்து
சங்க மகளிர் தான் விரும்பி மணந்த கணவன் எத்தகையன் ஆயினும் அவனது முழு அன்பும் தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணி உருகுபவா்கள். தெய்வம் தொழாது கணவனைத் தொழுதுத்துபவா்கள். ஒன்றன் கூறாடை உடுத்தினும் ஒன்றிவாழும் வாழ்க்கையையே பெண்கள் பெரிதும் விரும்பினா். இல்லறக் கடமைக்குப் பொருள் வேண்டுமெனினும், அது தலைவனது உயிரனைய கடமை என உணா்ந்தாலும் அவனைப்பிரிய தலைவியா் விரும்புவதில்லை. பொருளீட்டச் சென்ற தலைவன் குறித்த முன்பனிக்காலம் வந்து விட்டது. இன்னும் அவன் வந்திலன். தலைவியின் மனத்துயரை அறிந்த தோழி தேற்ற முயல்கிறாள். தலைவி தோழியிடம் என் மனத்துயருக்கு எந்த மருந்தும் கிடையாது. தலைவனது மார்பு மட்டுமே மருந்து என உரைக்குமிடத்து, பிரிவுத்துயரையும், தலைவன்பால் தலைவி கொண்டுள்ள மாசற்ற அன்பையும் ஒருசேரப் பதிவுசெய்துள்ளமையை அறியமுடிகிறது.
தலைவன் செல்லும் வழியில், வேப்பம் பழத்தை உண்ணும் கிளியைக் காண்பான். அப்போது அவனுக்கு என் நினைவு வரும் எனக் கூறிய தலைவி, முன்பொருநாள் புதிய நூலில் பொற்காசைக் கேக்கும் போது தலைவன் அருகிருந்து பார்த்தான். இப்போது சிவந்த வாயினை உடைய கிளி மஞ்சள் நிறமுள்ள வேப்பம் பழத்தை உண்ணும் காட்சி என்னை நினைவூட்டும். எனவே, தலைவன் விரைந்து வந்துவிடுவான் எனத் தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாள்.
இப்பாடலில், பெண்கள் கழுத்திலணியும் நாண் இற்றுவிட்டால் புதுக்கயிறு மாற்றும் பழக்கத்தை நன் முல்லையார் பதிவு செய்கிறார். பொற்காசு (லெட்சுமிகாசு) தாலிக் கொடியில் இன்றும் பெண்கள் அணிவதைக் காண்கிறோம். பெண்கள் பொற்காசை நாணில் கோத்துக் கழுத்தில் அணியும் பழக்கம் இருந்ததை இப்பாடலின்வழி அறிய முடிகின்றது.
”. . . . . . . .கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்
பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்”6 (குறுந் .67)
என்ற பாடலடிகள் பெண்கள் காசுமலை அணிந்த செய்தியை எடுத்துரைக்கிறது.
தலைவனின் புறத்தொழுக்கம் கண்டு வருந்துதல்
சங்க மகளிர் எதிர் கொண்ட பெருந்துயரங்களுள் மிகக் கொடியது தலைவனின் பரத்ததை ஒழுக்கம். மருதத்திணை மாந்தரின் ஒழுக்கங்களுள் வெறுக்கத்தக்கதும் அக்கால வழக்கப்படி ஆடவரின் உரிமையாகக் கருதப்பட்டதும் இத்தீயொழுக்கம். புறுநானூற்றில் கொடைமடமுடைய வள்ளலாம் பேகன் கூட தன் மனைவியைத் தவிக்கவிட்டுப் புறத்தொழுக்கம் மேற்கொண்டதைப் பரணா், கபிலா் போன்ற பெரும்புலவா்கள் கண்டித்துள்ளதைக் காணமுடிகிறது. இச்செயலால் வருந்தும் தலைவியா் தலைவனை நேரிடையாகக் கண்டிக்கவோ சினக்கவோ இயலாது. தன்னிலைக்குத் தானே இரங்கி, சிறிது ஊடி, தோழி, பாணா் போன்ற வாயில்களால் ஊடல் தீா்ந்து மீண்டும் தலைவனை ஏற்றுக் கொள்வதே சங்க மகளிரின் நிலையாக சித்தரிக்கப்படுகிறது. இதற்கு ஓரிருவரே விதிவிலக்கு.
நன்முல்லையாரும் பரத்தமை மேற்கொண்டு மீண்டுவரும் தலைவனை மீண்டும் சோ்த்துக்கொள்ளக் கூறும் தலைவியிடம், அவன்யார்? அவனிடம் நான் கோபித்துக் கொள்ள. தலைவன் எனக்கு அன்னையும் தந்தையும் போல என்னைக் காப்பவனே! உரிமையுடன் கோபித்துக் கொள்ள அவனுக்கு என்மீது காதல் என்ற உரிமையை இழந்துவிட்டான் எனக் கூறுகிறார். இப்போதும் தலைவனைத் தாய் தந்தையரின் அன்புறவுடன் ஒப்பீட்டுக் கூறுகிறாளேயன்றி வெறுத்தாளில்லை. அன்பில்லாதவரிடம் கோபித்துப் பயனில்லை என்ற கருத்தை நன்முல்லையார் பதிவிடுகிறார்.
இவ்விதம் தலைவனின் பரத்தமையால் பரிதவிக்கும் மூன்று தலைவியரின் முதிர்ந்த மனப்பக்குவத்தை மூன்று பாடல்களில் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
கற்பிலும் அலருண்டு
களவுக்காலத்தில், தலைவன் தலைவியரின் காதல் வாழ்வில் ஊரவா் அலா்தூற்றுவதாகப் பல பாடல்களில் காணமுடிகிறது. ஆனால், திருமணம் முடிந்த பின்பு, பொருளீட்டவோ, வேந்துவிடு தொழிலாகவோ பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் வாராவிடினும் ஊரவா் அலா்தூற்றுவா் என்ற செய்தியை குறுந்தொகை 140-வது பாடலில் நன்முல்லையார் பதிவு செய்கிறார். மற்றவாரின் குடும்பத்தில் நடப்பதை விமா்சிப்பதையே பலா் தனது வேலையாகக் கொண்டிருந்த சமுதாய நிலை இங்கு மறைமுகமாக அறியமுடிகிறது.
ஒருபெண்ணின் வேண்டுதல்
இல்லறப் பெண்கள், விருந்து போற்றுதல் என்ற பண்பை உயிர் மூச்சாகக் கருதியதைச் சங்க இலக்கியம் முழுமையும் ஊடிழையாகப் பதிவு செய்துள்ளது. தன்னலமாக எதையும் எண்ணாத குலப்பெண்களின் உளப்பாங்கை நன்முல்லையார் ஒரு புறநானூற்றுப் பாடலில் எடுத்துக்காட்டுகிறார்.
தினமும் தனது குலமுன்னோரின் நடுகல்லை வழிபடும் பெண்ணொருத்தி, எங்கள் இல்லத்திற்கு விருந்தினா் எப்போதும் வரவேண்டும். என்கணவா் எப்போதும் போர்த்தொழிலில் ஈடுபட வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறாள்.
இந்த வேண்டுதலில் செல்விருந்து ஓம்பி வருவிருந்துக்காகக் காத்திருக்கும் அவளது உயா்குணம் வெளிப்படுகிறது. மேலும், கணவனின் வீரம் வெளிப்பட வாய்ப்புக் கிடைக்க வேண்டும் எனவேண்டும் மறப்பண்பு வெளிப்படுகிறது.
இது அக்கால இல்லக்கிழத்தியா் அனைவரது வேண்டுதலாகவே, பெண்மையின் இயல்பாகவே நன்முல்லையார் வெளிப்படுத்தியுள்ளார்.
சமூகப்பதிவுகள்
அள்ளுா் நன்முல்லையார் பெண்களின் நிலையிலிருந்து, தன்னை முன்னிறுத்திச் சமுதாய உணா்வுகளைப் பிரதிபலித்துள்ளார் என்பதை அவரது பாடல்கள்வழி உணரமுடிகிறது. இளவயதிலேயே பெண்கள் அறிவு முதிர்ச்சி உடையவராக, எதையும் நோ்மறையாக சிந்திக்கும் திறன் படைத்தவராக இருப்பதை அறியமுடிகிறது. தலைவனின் அன்புக்கு ஏங்குவதாயினும், தலைவனின் அன்பை நிராகரிப்பதாயினும் ஆழமானவை. இவரது பதினொரு பாடல்களில் இரண்டு பாடல்கள் மட்டுமே தலைவன் கூற்று. மற்ற ஒன்பது பாடல்கள் தலைவி கூற்றுப் பாடல்கள் என்பது சிறப்பு. ஆடவரின் நிலை எதுவாயினும் தன்னிலை சிறிதும் மாறா கற்புக்கடம்பூண்ட வாழ்வினராகவே குலப்பெண்கள் சுட்டப்பெறுகின்றனா். தாலியில் பொற்காசு சோ்த்து அணியும் பழக்கமும் அண்டை அயலார் எதற்காகவும் அலா்தூற்றத் தயாராக இருப்பதையும் காணமுடிகிறது.
குறுந்தொகை 157-வது பாடலில் தலைவி, தனக்குப் பூப்பு ஏற்பட்டதால் மூன்று நாட்கள் தலைவனைச் சோ்ந்திருக்க இயலாது என்பதனைச் சார்பில்லாத சொற்களைக் கூறாது சார்பான சொல்லால் உணா்த்துவதைக் குறிப்பிட்டுள்ளார். இதனால், தலைவனிடம் கூடத் தகுதியான சொற்களால் உணா்வுகளை வெளிப்படுத்தும் மகளிர் நுண்ணறிவை உணரமுடிகிறது.
”சங்கப்புலவா்களுள் அள்ளுா் என்னும் ஊரைச் சார்ந்தவரான அள்ளுா் நன்முல்லையாரின் பாடல்கள் பெண்ணின் அகத்துணா்வுகளை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன.”7 என்ற சு.இராமா் அவா்களின் கூற்று இங்கு மெய்ப்பிக்கப்பட்டிருப்பதை அறியமுடிகின்றது.
சான்றெண்விளக்கம்
1. சங்கப் பெண்கவிதைகள், பெண்-மொழியும் வெளியும், ஆய்வுக்கட்டுரை, முனைவா் அ.மோகனா, உதவிப் பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசா் கல்லூரி, மதுரை.
2. சங்கப்பெண் கவிதைகள், சந்திஜோதி, சந்தியா பதிப்பகம், ப.19, சென்னை.
3. முனைவா்.அ.மோகனா.
4. அகநானூறு, பா.எண்-46.
5. குறுந்தொகை, பா.எண்-96.
6. மேலது, பா.எண்-67.
7. அள்ளுா் நன்முல்லையார் பாடல்களில் மெய்ப்பாடு, சு.இராமா், முதுமுனைவா்பட்ட ஆய்வாளா், மதுரைக் காமராசா் பல்கலைக்கழகம், மதுரை.
* கட்டுரையாளர்கள்: – ம.உஷாராணி,முனைவர்பட்டஆய்வாளர் & முனைவர் மு.சுதா,உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 –