முன்னுரை:
ஏட்டு இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி இலக்கியம் தோன்றியது. வாய்மொழி இலக்கியங்களில் பாட்டு ஒரு இலக்கியம்தான். ஒப்பாரி என்பது இறந்தவர்களை நினைத்து அழும் பெண்கள் பாடுவதாகும். நாட்டுப்புற மக்களின் பிறப்பிடமான மரபு பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் இவற்றோடு இரண்டறக் கலந்து விட்ட நாட்டுபுறப்பாடல்களில் ஒப்பாரிப் பாடலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறப்படுகிறது. ஒப்பாரியைப் பற்றி பாடும் பொழுது இறந்தவர்களின் சிறப்புகளைப் பற்றி பாடுவார்கள் தொன்மைக் காலத்தில் ஒப்பாரியை கையறுநிலைப்பாடல், புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு. அழுகைப்பாட்டு என நம் முன்னோர்கள் ஒப்பாரியை அழைத்தனர்.
‘குழந்தைப் பெற்றவளுக்குத் தாலாட்டும் கணவனை இழந்தவளுக்கு ஒப்பாரியும் தானே வரும்” என்பது பழமொழி ஒப்பாரி பாட்டு பற்றிக் கட்டுரையில் கூறப்படுகின்றது.
ஒப்பாரி பொருள் விளக்கம்:
ஒப்பாரி என்பதனை ஒப்பூஆரி ஸ்ரீ ஒப்பாரி எனப் பிரித்துக் கொள்ளலாம், ஒப்பு என்றால் இழந்தப்பொருளுக்கு இணை என்றும், இதற்கு ஒப்புச் சொல்லி ஆரிப்பதம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மேலும் அழுகைப்பாட்டு என்றும், போலி என்றும், ஒப்பு என்றும் அகராதி பொருள் விளக்கம் தருகிறது. ஆரிப்பது என்பதை அவழச்சுவையுடன் ஆரவாரம் செய்வதும் என்றும் கூறலாம். எனவே இறந்தவர்களை எண்ணிப் பெண்கள் பாடும் ஒரு வகை இசைப்பாடலே ‘ஒப்பாரி’ என்கிறார் மு.அண்ணாமலை.
‘மக்களே போல்வர் கயவர் அலரன்ன
ஒப்பாரியுங் கண்டது இல்” (குறள்-1071)
ஒப்பாரி:
ஒருவருடைய நெங்கிய உறவினர்கள் இறக்கும் போது இழப்பின் துயரம் தாங்கிக் கொள்ள முடியாமல் பெண்கள் இறந்தவர்களின் சிறப்புகளையும், அவர்கள் இறந்ததால் அடையப்போகும் துயரத்தையும் பாடலாகப் பாடுவார்கள். ஒப்புச் சொல்லி அழுவதால் ஒப்பாரி என்று அழைக்கப்படுகிறது.
‘வாழ்வின் முன்னுரை தாலாட்டு ஆனால் முடிவுரை ஒப்பாரியாகும். தாலாட்டு கலங்கரை விளக்கமானால், ஒப்பாரி நினைவுச் சின்னமாகும், தாலாட்டும் ஒப்பாரியம் பெண் குலத்தின் படைப்பாகும்” என்பர் சு.சக்திவேல் பற்றிக் கூறியுள்ளார்.
ஒப்பாரி முக்கியத்துவம் பெண்களே:
ஒப்பாரிப் பாடல்கள் அனைத்தும் பெண்களால் குறிப்பாக ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து பாடப்படுகின்றது. பெண்ணானவள் ஒரு குழந்தைக்கு முதலில் தாய் என்ற நிலையில் இருந்தும், பெற்றோருக்கு மகள் என்ற நிலையில் இருந்தும், உடன் பிறந்தவனுக்குக் கூடப் பிறந்தவள் என்ற நிலையில் இருந்தும், ஒருவருக்க மனைவி என்ற நிலையில் இருந்தும், பேரன், பேத்திக்குப் பாட்டி என்ற நிலையில் இருந்து பாடல்களைப் பாடுகின்றாள் என்று செய்கோ.மா.வரதராசன் குறிப்பிடுவதை உணர முடிகின்றது.
தொல்காப்பியம் – அழுகை பற்றிய விளக்கம்:
தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு பற்றி தொல்காப்பியர் விளக்கம் தருகிறார்.
‘இளிவெ இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே”
என்கிறார். பிறரால் இகழப்பட்ட நிலையில் இளிவும், தந்தை தாய் முதலான சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழக்கின்றபோது இழிவும், பண்டைநிலை கெட்டு வேறுநிலை அடையும்போது அசைவும், போகத்துய்க்குப்பெறாத பற்றுள்ளம் கொண்டபோது வறுமையும் அழுகைக்கு அடிப்படைக் காரணங்களால் அமையும் என்பார்.
சங்க இலக்கியங்களின் கருத்து:
சங்க இலக்கியங்களில் மன்னன் இறந்தபோது பாடுவதைப் பற்றி குறிப்பிடப்படுகிறது.
‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்;… எந்தையுமிலமே”
எனப் பாரி இறந்தது அவர் மகள் புறநானூற்றுப் பாடலில் கூறப்பட்டுள்ளது.
‘சிறியகள் பெறினே எமக்கீயு மன்னே
பேரியகள் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்துண்ணும்”
என்று அதியமான் இறந்த பிறகு பாடியுள்ளனர்.
கையறு நிலையும் ஒப்பாரியே:
நாட்டுப்புற மக்கள் அழுகைப்பாட்டே ஒப்பாரி என அழைக்கின்றனர். கற்றறிந்த சான்றோர்கள் அழுகைப் பாட்டை முறைப்படுத்திச் செம்மை செய்து ‘கையறு நிலைப் பாடல்கள்” எனவும் இரங்கற்பா எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.
‘வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின்
கற்றோர் உரைப்பது கையறு நிலையே”
எனப் பன்னிரு பாட்டியல் கையறு நிலைக்கு விளக்கம் தருகிறது.
‘கழிந்தோர் தேலத்து அழபடர் உறீஇ
ஓழிந்தோர் புலம்பிய கையறு நிலை”
என்று அழுது புலம்பலும் கையறுநிலைப் பற்றித் தொல்காப்பியர் நூற்பாவில் எடுத்துரைக்கிறார்.
உணர்வு வெறிப்பாடு:
உணர்வு நிலை என்பது மனதில் இருந்து தோன்றக்கூடியதாகும். உணர்வு என்பது ஐம்புலன்களால் வழங்கப்பெறும் ஒன்றாகும். பெருமை, வெட்கம், கோபம், மகிழ்ச்சி, அழுகை போன்ற உணர்வுகளும் மனிதர்களின் உணர்ச்சி எனலாம். மனிதனில் உணர்வுநிலைகளில் அழுகை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அழுகை என்பது ஒருவகை வலியினால் வரும் கோபமான உணர்ச்சியாகும்.
நாட்டுப்புறப் பாடல்களில் ஒப்பாரியின் நிலை:
ஒப்பாரிப்பாட்டு காட்டாற்று பெருவெள்ளம் போலும், சொல்லிய சொல்லுக்கும் எதுகை மோனைக்கும் காத்திருக்காமல் தங்கு தடையில்லாமல் தானே ஓடிவரும் பெரும்பனல் புது வெள்ளமாகும். இருவகைப் பாடல்களும் தனிமனித உள்ளத்தில் குமுறியெழும் வேதனையின் வெளிப்பாடே என்றாலும் ஒப்பாரியில் காணப்படும் சோகப் பெருவெள்ளம் கையறு நிலைப்பாடல்களில் காணப்படுவதில்லை எனச் சுட்டுகின்றார் மா கோதண்டராமன். நாட்டுப்புறப் பாடல்கள் எப்பொழுதும் மாற்றம் அடைந்து கொண்டே இருப்பனவாகும்.
ஒப்பாரிப்பாட்டைப் பாட முன்வராமை:
நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டுப் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் காட்டினாலும் ஒப்பாரிப் பாடல்களைப் பாடப் பெண்கள் மிகவும் தயங்குகின்றனர். ஏனெனில், ஒப்பாரிப் பாடல் இறப்புச் சடங்கின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதே ஆகும். இறப்பை ஒட்டிய துயரச் சு10ழலில் பாடப்படும் இப்பாடல்களைச் சாதாரண நேரங்களில் பாடச் சொல்கிற போது பெண்கள் தயக்கத்திற்கும் மறுப்பிற்கும் இல்லாத பிறசமயங்களில் பாடக்கூடாது என்று சிலரும், பாடினால் உண்மையிலேயே அவ்வாறு நேர்ந்து விடக்கூடும் என்று வேறு சிலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கணவனை இழந்த நிலை கனவு பொய்த்துப்போனது:
பெண்கள் எப்பொழுதுமே கணவனுடன் சேர்ந்தே வாழ விரும்புவர். கணவன் இறந்து விட்டால் கனவுகளில் மிதக்க வேண்டிய அவள் கண்ணீரில் மிதக்கிறாள். கணவனை இழந்த பெண்கள் பலர் படும் துயரம் வார்த்தைகளினால் விவரிக்க முடியாதது. கணவனை ஒரு பெண் இழந்துவிட்டால் அவளுக்குப் பூவும், பொட்டும் சொந்தம் இல்லை அணிகலன்களால் தன்னை அழகு செய்துக்கொள்ள முடியாது. நிகழ்காலத்தில் வாழ்க்கை சரிந்து போய் வருங்காலத்தில் எண்ணற்ற துன்பங்களை எதிர்நோக்க வேண்டியவளாகின்றாள். கணவனை இழந்த பெண்னொருத்தி கணவன் இறந்த பின்பு, தாலியை கழற்ற மனம் ஒப்பாது ஒப்பாரிப் பாட்டைப் பாடுகின்றார்.
‘ஆத்தாங்கர மண்ணெடுத்து எனக்கு
அரும்புவச்சி தாலிபண்ணி நான்
அவசரமா அறுப்பேனு எனக்கு ஒரு
ஆசாரியும் சொல்லலியே.
சுருவாட்டு மண்ணெடுத்து எனக்கு
சுருளுவச்சி தாலிபண்ணி நான்
சுருகனமா அறுப்பேனு எனக்கு ஒரு
சோசியரும் சொல்லலியே
மாங்கா கொலுசு போட்டு நான்
மண்ணிலேய நடந்தேன்னா என்னோட
மண்ணத் தொடப்பாரில்ல என்னோட
மனக்கவலய கேப்பாரில்ல”
என்று கணவனை நினைத்து அவர் மீது பாடப்படும் பாடல்களே மிகுதியாகும்.
முடிவுரை:
இதுவரைக் கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து, நாட்டுப்புறப் பாடல்களின் ஒப்பாரிப் பாடல்கள் பாடப்படும் சு10ழல், ஒப்பாரியின் பொருள் விளக்கம், கனவு பொய்துத்துப் போனது, கையறு நிலையும் ஒப்பாரியோ, ஒப்பாரிப் பாட முன்வராமை ஆகியன குறித்து கூறப்பட்டுள்ளது.
குறிப்புகள்:
1. தொல்காப்பியம். நூ.எ 120, ப-42.
2. சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு – ப-124.
3. மு.அண்ணாமலை, நமது பண்பாட்டில் நாட்டுப்புற இலக்கியம், ப-123.
4. மா.கோதண்டராமன், வட ஆர்க்காடு மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள், ப-206.
5. கோ.பெரியண்ணன்-நாடு போற்றும் நாட்டுப்புறப் பால்கள், ப-271.
* கட்டுரையாளர்: – எஸ்.செளந்தர்யா, PhD, காந்தி கிராமம்- கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் –