New Commentaries of Sangam literature came with the print tradition at the end of the 19th century. Although these commentaries seem to come from an older tradition, the contemporary and historical background are different from it. From this point of view, Avvai Duraisamy Pillai’s commentaries of Sangam literature are very important. In particular, the uniqueness of Tamil, Tolkappiyar’s perspective, historical and social background are important elements.
முன்னுரை
தமிழின் செவ்வியல்தன்மைக்கும் கவித்துவத்துக்கும் சான்றாக அமையும் சங்க இலக்கியங்களுக்குப் பழைய உரைகளாக நச்சினார்க்கினியர், பரிமேழலகர் போன்ற மிகச் சொற்பமானோரின் உரைகளே கிடைக்கின்றன. அத்துடன், பெயர்தெரியாத உரைகளும் சில இருக்கின்றன. தொல்காப்பிய உரை மேற்கோள்களில் உரையாசிரியர்கள் சங்கக் கவிதைகளை விளக்கியும் உள்ளனர். ஆனால் முழுமையாக சங்க இலக்கியங்களுக்கு உரைகள் கிடைக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து தமிழ்நூல்கள் அச்சாக்கம் தீவிரமாக நடைபெற்றதன் பின்னணியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டில்தான் பெரும்பாலான சங்க இலக்கியங்களுக்கு உரைகள் எழுந்தன. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், சௌரிப்பெருமாளரங்கன், இராமரத்ந ஐயர், ஔவை துரைசாமிப்பிள்ளை, பொ.வே. சோமசுந்தரனார், அருளம்பலவாணர் போன்ற பலரது உரைகள் இவ்வாறு அமைந்தன. இந்த இருபதாம் நூற்றாண்டு உரைச்சிறப்புகள் குறித்து மு.வை. அரவிந்தன், இரா.மோகன் – சொக்கலிங்கம், பெ. மாதையன் போன்றோரின் ஆய்வுகளும் அமைந்துள்ளன. இந்த ஆய்வுகளினூடாகவும் சங்க இலக்கிய உரைகளினூடாகவும் இருபதாம் நூற்றாண்டு உரையாசிரியரின் உரைகளின் சிறப்புக்களை எடுத்துரைக்கவேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் ஔவை. துரைசாமிப்பிள்ளையின் சங்க இலக்கிய உரைச்சிறப்புக்களை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.