மக்களின் வாழ்க்கையை முழுமை படுத்தவும் செம்மைப் படுத்தவும் எழுந்தவை தான் நீதி இலக்கியங்கள் எனப் பொருள் கொள்ளலாம். மனிதன் வாழ்க்கையில் எதனைப் பின்பற்ற வேண்டும் எதனைப் பின்பற்றக் கூடாது என்று சொல்லுவதுதான் நீதிநூல்கள். மக்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு ஓர் அளவுகோலாக இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க இலக்கியமான புறநானூறு; அற இலக்கியமான திருக்குறள், நாலடியார் போன்றவை நீதியை எடுத்தியம்பும் உயர்ந்த நோக்கில் இவ்வாய்வு அமைகின்றது.
மனித சமுதாயத்தில் நீதி கோட்பாடுகள்
பழந்தமிழர்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழும் மக்களாக விளங்கினர். பின்னர் பல்வேறு நாகரீக மாற்றத்தால் கூடி வாழும் வாழ்க்கையை வாழ்வதற்கு துவங்கினர். அதன் பின்னர் ஒருவர் செய்யக்கூடிய தவறுகள் அல்லது குற்றங்களை தட்டிக்கேட்டு அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இதன் விளைவாக சமூகம் என்ற அமைப்பு உருவானது சமூகத்தில் வாழும் போது நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். இம்மை மறுமை என்ற இருவகை வாழ்க்கை உள்ளதை மக்கள் அறிந்திருந்தனர்.
தற்பொழுது தாம் வாழும் வாழ்க்கையில் அவர்கள் செய்கின்ற செயலை மறுமைக்கும் தொடர்ந்து வரும் என நம்பினார்கள், எனவே அத்தகைய வாழ்வே அனைவரும் விரும்பத்தக்கது என்று நல்வழி படுத்துகின்ற வழிகளையும் உணர்ந்தனர். எனவே தன் வாழ்நாளில் பிறருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கூட தீயதை செய்யாமல் வாழ வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கம் உடையவர்களாக மக்கள் வாழத் துவங்கினர். அதுவே மனிதனை நல்ல கதிக்கு கொண்டு சேர்க்கும் என்றும் உணர்ந்தனர். இத்தகைய சமூக வாழ்வை புறநானூறு,
“பல் சான்றீரே பல் சான்றீரே
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயன்இல் மூப்பின் பல் சான்றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.”
-(நரிவெரூஉத்தலையார்-புறநானூறு- பாடல் எண் :195)
என்று பதிவு செய்துள்ளது. இப்பாடல் அடிகள் சமுதாயம் முழுவதும் நல்வழிப்படுத்தும் நோக்கத்தோடு அமைந்துள்ளது. மேலும் உலக உயிர்கள் உய்வடைவதற்கும், உயர்ந்த நிலையை அடைவதற்கும், பிறருக்கு தீமை செய்யாது இருத்தலே மறுமைக்கும் நன்மையாய் அமையுமென்று கூறுகின்றது.
ஈகை அறமும் நீதியும்
உலக மக்கள் அனைவரும் பொருளைத் தேடி அதனை அடைவதற்காக அதன் பின்னேயே முயன்று கொண்டிருக்கிறார்கள். பொருளுக்காக உறவுகளையும் இழக்கின்றார்கள். வெறுத்து ஒதுக்கவும் செய்கின்றார்கள். இதனால் மனிதர்கள் மனிதநேயம் அற்றவர்களாக மாறி வருகின்றனர். இன்று நமக்கு சொந்தமானது நாளை மற்றொருவருக்கு சொந்தமானதாக மாறும். செல்வம் என்பது நிலையில்லாதது எனவே உள்ள போதே மற்றவர்களுக்கு நாம் கொடுத்து அதன் பயன் உண்டாக வாழ வேண்டும் என்பதனைத் திருக்குறள்,
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு ”
-(திருவள்ளுவர்-திருக்குறள்-குறள் எண் :231)
என்று பதிவு செய்துள்ளது. எனவே ஒருவர் மற்றவருக்கு கொடுத்து உதவி அந்த கொடுத்தலின் விளைவாக கிடைக்கப்பெறும் புண்ணிய கருமத்தை தன்னுடைய வாழ்வுக்கு, தன்னுடைய உயிருக்கு ஊதியமாக ஈட்டி வைக்க வேண்டும் என்று வள்ளுவர் பதிவு செய்கின்றார்.
இதனையே நாலடியாரும்,
“அறுசுவையுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண்டாகும் – வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின்செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று ”
– (நாலடியார் பாடல் எண் :1)
என்று குறிப்பிடுகின்றது. எனவே மனிதன் தன் வாழ்வில் நியதியாக, அறமாக, ஈகையை மேற்கொண்டு ஒழுகுதல் வேண்டும் என்கின்ற உண்மையானது பெறப்படுகின்றது.
இரத்தலின் இழிவும் – உழைப்பின் உயர்வும்
மனித வாழ்வில் ஒருவன் தன்னுடைய உழைப்பினால் பெறுகின்ற செல்வமே அவனுக்குச் சிறந்தப் புகழைத் தரும். ஒருவன் பிறரிடம் சென்று எந்த சூழ்நிலையிலும் இரத்தல் கூடாது. அவ்வாறு இரத்தல் என்பது மிக மிக இழிவானது என்று இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. இரத்தலின் இழிந்த நிலையை வள்ளுவர்,
“கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர் ”
– (திருவள்ளுவர்-திருக்குறள்-குறள் எண்: 1070)
என்றும்,
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”
-(திருவள்ளுவர்- திருக்குறள் -குறள் எண் : 1062)
என்றும் பதிவு செய்கின்றார். எனவே இரத்தல் என்பது கொடுமை என்றும், உழைப்பின் மூலம் பெறுகின்ற பொருளே சிறந்த பொருள் என்றும் எடுத்து உரைப்பதன் வழி அறிய முடிகின்றது. இதுவே மனித வாழ்க்கைக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் மனித வாழ்க்கையின் பொருளுடைய செயலாக அமையும் என்கின்ற உயர்ந்த நோக்கமானது பெறப்படுகின்றது.
தீதும் நன்றும்
மனித வாழ்க்கை என்பது நிலையில்லாதது, அது ஒரு நீர்க்குமிழி போன்றது. அதற்குள் போராட்டங்களும், வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் கொண்டு மனிதன் உலகில் வாழுகின்றான். எனவே வாழ்வின் நிலைத்த தன்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைவது பிறருக்கு நாம் நன்மை செய்வது ஒன்றே ஆகும்.
“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனினும்
பெருமை உடைத்துஇவ் வுலகு”
-(திருவள்ளுவர்-திருக்குறள்-குறள் எண்:336)
எனக்கு திருக்குறள் பதிவு செய்கின்றது. எனவே இன்பமும் துன்பமும் பிறரால் வருவது அல்ல. அவர்கள் செய்கின்ற செயல்களின் மூலம் தான் அவர்களுக்கு வருகிறது. நல்லது செய்வாராயின் அவர்களுக்கு நன்மை நடக்கும் என்றும், தீமைகள் செய்தால் அவர்களுக்கு தீமையை விளைவிக்கும் என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதனால்தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்ற பழமொழி தோன்றியிருக்கிறது போலும். இதனையே கணியன் பூங்குன்றனார் புறநானூற்றில்,
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”.
-(கணியன் பூங்குன்றனார்-புறநானூறு-பாடல் எண் : 192)
என்று விளக்குகிறார். எனவே அவரவர் செய்கின்ற வினையின் காரணமாகவே, அவர்களுக்கு விளைவுகள் ஏற்படுகின்றன என்பது பெறப்படுகின்றது.
புற வாழ்க்கையில் மட்டுமன்றி, அக வாழ்க்கையிலும் பழந்தமிழர்கள் உயர்ந்த நீதியை பின்பற்றினார்கள் என்பது சங்க சான்றுகள் கொண்டு அறிய முடிகின்றது. குறுந்தொகைப் பாடல் ஒன்றில் தலைவி தன் தலைவன் கூறிச்சென்ற நீதியில் தவறமாட்டான் என்று கூறியிருப்பது இங்கு சான்றாக,
“வண்டுபடத் ததைந்த கொடி இணர் இடையிடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங்கொன்றைக்
கானம் கார் எனக் கூறினும்,
யானோ தேறேன், அவர் பொய் வழங்கலரே”
-(ஓதலாந்தையார்-குறுந்தொகை-பாடல் எண்:21)
என்று பதிவு செய்கின்றது. தோழி பருவம் வந்தும் தலைவன் வரவில்லை என்று நினைக்கும் பொழுது தலைவி, தலைவன் கூறிச் சென்ற காலம் வந்துவிட்டதாக இயற்கை குறிப்பிட்டாலும், என் தலைவன் சொல்லிச்சென்ற தன்னுடைய நீதியிலிருந்து வழுவ மாட்டான் என்று தலைவி கூறியிருக்கின்ற செய்தியானது, அக்காலமக்களினுடைய உயர்ந்த நீதி உடைய வாழ்க்கையை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. எனவே பண்டைய தமிழர்கள் அகவாழ்விலும், புற வாழ்விலும், உயர்ந்த நீதி உடையவர்களாக விளங்கினார்கள் என்ற செய்தியானது பெறப்படுகின்றது.
அனைவருக்கும் ஒரே நீதி
சங்க இலக்கிய நூல்கள் நீதி கூறும் பொழுது துலாக்கோல் போல சிறந்து சமமாக குறிப்பிடுகின்றது. விருப்பு வெறுப்பு எதுவுமின்றி நீதியின் முன் அனைவரும் சமம் என்ற நிலை அக்காலத்தில் மக்களிடையே நிலவி இருந்தது. பண்டைய தமிழ்நாடு நீதி வழங்குவதில் சிறந்து இருந்தது. பாண்டிய நாட்டின் அறங்கூறு அவையம் நீதியின் காலமாகக் காட்சியளிக்கின்றது. சான்றாக, மாங்குடி மருதனார் நீதி நிறைந்த ஆட்சியில் நாடு சிறப்புற்று விளங்கியதாக மதுரைக்காஞ்சியில்,
“அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத் தாகிக்
சிறந்த கொள்கை அறங்கூற அவையமும்”
-(மாங்குடி மருதனார்-மதுரைக்காஞ்சி பாடல் வரி : 489-492)
என்ற வரிகளின் மூலமாக அறியமுடிகின்றது. மேலும் நீதியின்படி மக்கள் தன்னுடைய வாழ்க்கையை வாழும் பொழுது, எந்தவிதமான குற்றமும் அற்று, குற்றம் குறைந்து, சிறப்பான முறையில் தன்னுடைய வாழ்க்கையை வாழ உயர்ந்த நீதிகள் உதவியாக அமைகின்றது என்பதனை உணர முடிகின்றது.
அரசர்க்கு வனப்பு
சங்ககால அரசர்கள் தங்கள் குடிமக்களை வருத்தாது காத்தனர். செங்கோல் ஆட்சியும் செலுத்தினர். அதனால் உலகம் சிறப்புற்று விளங்கியது. அரசனுக்கு அழகே நீதி மாறா செங்கோல் உடையவனாக வாழுகின்ற ஒழுக்க நெறியே உயர்வாகக் கருதப்பட்டது. இலக்கியங்கள் காட்டுகின்ற ஆட்சி முறையே எல்லா காலத்திலும், பொருந்துவதாக ஏற்றதாக அமைகின்றது என்பதனை, சிறுபஞ்ச மூலத்தில் காரியாசான் நீதியின் அழகினை,
“கண் வனப்புக் கண்ணோட்டம்; கால் வனப்புச் செல்லாமை;
எண் வனப்பு, ‘இத் துணை ஆம்’ என்று உரைத்தல்; பண் வனப்புக்
கேட்டார், நன்று என்றல்; கிளர் வேந்தன் தன் நாடு
வாட்டான், நன்று என்றல் வனப்பு”
-(காரியாசன்-சிறுபஞ்சமூலம்-பாடல் எண்:9 -1-4)
கண்ணிற்கு வனப்பாவது பிறர்மேற் கண்ணோடுதல், காலிற்கு வனப்பாவது பிறர் மாட்டிரந்து செல்லாமை, ஆராய்ந்து சூழுஞ் சூழ்ச்சிக்கு வனப்பாவது இவ்வளவு இன்னதென்று துணிந் துரைத்தல், பாடும் பண்ணிற்கு வனப்பாவது கேட்டார் நன்றென்றல், படை கிளர்ந்தெழும் வேந்தற்கு வனப்பாவது தானாளும் நாட்டினை வருத்தான் மிகவும் நன்றென்றல், என்று குறிப்பிடுகின்றார். எனவே ஒரு சிறந்த அரசனுக்கு அழகு என்னவென்று கேட்டால், அவனுடைய நாட்டு மக்கள் அவனை சிறந்தவன் என்று குறிப்பிடுவதே என்கின்ற கருத்தானது சிறுபஞ்சமூலத்தின் வழியாக அறியமுடிகின்றது. இத்தகைய செங்கோல் ஆட்சியை அக்கால மன்னர்கள் செய்தனர் என்பதும் பெறப்படுகின்றது.
பொதுவான நீதி
உலகம் இன்றுவரை நிலைத்து உள்ளதற்குக் காரணம் மக்கள் எதனையும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழுகின்ற நல்ல உள்ளம் கொண்டு இருப்பதே காரணம் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இதனையே புறநானூறு,
“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”
-(கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி-புறநானூறு-பாடல் எண்:182)
என்று பதிவு செய்கின்றது. எனவே இந்த உலகம் நிலைபெற்று இருப்பதற்குக்
காரணம் தனக்காக சுயநலமாக வாழுகின்ற மனிதர்கள் இல்லாமல், பிறருக்காக முயன்று உதவுகின்றவர்கள் வாழுகின்ற காரணத்தினாலேயே ஆகும் என்பது பெறமுடிகின்றது.
உலகில் வாழும் வாழ்க்கை சிறப்பானதாக அமையவும், இருவகை (அகம், புறம்) வாழ்க்கைக்கும் மாமருந்தாக அமையும் வழிகளைக் காட்டும் விதமாக இலக்கியங்களில் நீதி நெறி கருத்துக்கள் அமைந்துள்ளது. வாழும் வரை அல்ல, வாழ்க்கை வாழ்ந்த பின்பும், மனிதன் பேசப்பட வேண்டும். எனவே நீதி வழுவாமல் வாழ்வோமேயானால் உறுதியாக வாழ்வு சிறப்படையும், சீர்பெறும். அத்தகைய வாழ்வியல் நெறி நின்று வாழ்வோம். உயர்ந்த நீதியை வாழ்வியலில் பின்பற்றி நீதி வழுவாமல் வாழ்ந்து, நீதி உடையவர்களாக இவ்வுலகில் ஆள்வோம்!
துணைநூல்கள்
1. உரையாசிரியர் புலவர் அ. மாணிக்கனார், புறநானூறு (மூலமும்
உரையும்) (முதல் தொகுதி), வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 1999
2. உரையாசிரியர் புலவர் அ. மாணிக்கனார், பத்துப்பாட்டு (இரண்டாம்
தொகுதி) (மூலமும் உரையும்), வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 1999
3. உரையாசிரியர் இரா. பிரேமா, குறுந்தொகை (மூலமும் உரையும்),
வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 1998
4. பரிமேலழகர் உரை – திருக்குறள் – சாரதா பதிப்பகம் – சென்னை –2002
5. காரியாசன் – சிறுபஞ்ச மூலம் (மூலமும் உரையும்) – சாரதா பதிப்பகம்
– சென்னை – 2019
6. புலியூர்க் கேசிகன் – நாலடியார் (தெளிவுரை) – சாரதா பதிப்பகம் –
சென்னை – 2019
* கட்டுரையாளர்: – முனைவர் கோ. வசந்திமாலா, தமிழ்த்துறைல, இணைப்பேராசிரியர், பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014