முன்னுரை
தமிழில் சிறார் இலக்கியங்கள் என்பது மிகவும் அரிதாக இருக்கின்ற நிலையில், நாணற்காடன் குழந்தைகளுக்கான கதைகளை எழுதி வருகின்றார். அந்த வகையில், தன் முகநூல் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 11/04/2020 முதல் 30/04/2020 வரை வெளியிட்டுள்ள சிறார் கதைகளில் இயற்கை மற்றும் அறிவியல் பற்றி இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகிறது.
ஆசிரியர் அறிமுகம்
நாணற்காடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் என்ற ஊரைச் சார்ந்தவர். தனியார் பள்ளியில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக இந்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கூப்பிடு தொலைவில், பிரியும் நேரத்தில் என்ற இரு ஹைக்கூ நூல்களையும் சாக்பீஸ் சாம்பலில், நூறு நாரைகளாய் நின் நிலமெங்கும் என்ற இரு கவிதை நூல்களையும் கோமலி, கர்வாச்சௌத் என்ற இரு இந்தி மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பினையும் அப்பாவின் விசில் சத்தம் என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பினையும் படைத்திருக்கிறார். இதில் சமீபத்தில் வெளியான நூல் கர்வாச்சௌத் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் இவர் நாமக்கல் மாவட்டத் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளராகப் பணியாற்றியதோடு, தற்போது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளராக இருக்கின்றார். தமிழிலிருந்து இந்தி, இந்தியிலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். பன்மொழிப் புலமை கொண்ட இவர், தற்போது தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிறுவர்களுக்கான கதைகளை எழுதி வருகிறார்.
இந்தச் சிறார் கதைகளை எல்லா தரப்பட்ட வயதினரும் வாசிக்கின்றார்கள். பின்னூட்டத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு இந்தக் கதைகளைச் சொல்லி வருவதாகவும் மேலும் தாங்கள் குழந்தைகளாகவே மாறி விடுவதாகவும் பதிவு செய்தனர். இதுபோன்ற வாசகர்களினுடைய பின்னூட்டங்கள், ஆசிரியருக்கு மேலும் மேலும் கதை எழுதுகிற ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
மேலும், அவர் தன்னுடைய ஒரு பேட்டியில், இந்தக் கதைகளை எழுத ஆரம்பிக்கத் தொடங்குவதற்கு முன்பு ஒரு நாவல் எழுதவேண்டும் என்று தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அது சிறுகதையாக ஆரம்பித்து விட்டது. குறிப்பாக் குழந்தைகளுக்கான கதையாக மாறிவிட்டது என்று தன்னுடைய பேட்டியில் கூறினார். அதுமட்டுமல்லாமல், தொடக்கத்தில் ஒரு பத்து கதைகளின் தலைப்புகளைத் தான் தேர்ந்தெடுத்து எழுதியதாகவும் அதன்பின் வந்த கதைகள் யாவும் வாசகர்களின் கேட்டுக்கொண்ட தலைப்பிற்கு ஏற்ப கதைகளை எழுதி வெளியிடுவதாகவும் கூறினார்.
அவர் 11/04/2020 முதல் 30/04 2020 வரை ஏறத்தாழ 21 சிறார் கதைகளை எழுதி இருக்கிறார். இந்த இருபது நாட்களில் நாளுக்கு ஒரு கதை என்று திட்டமிட்டு எழுதியிருக்கிறார். ஆனால் மே 13ஆம் தேதி மட்டும் காலை ஒரு கதையையும் இரவு ஒரு கதையையும் என இரண்டு கதைகளை பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தச் சிறார் கதைகளில் உள்ள அறிவியல் மற்றும் இயற்கை சார்ந்த செய்திகள் விளக்கப்படுகின்றன.
கதைகளின் பெயர்கள்
முதலியவை கதைகளினுடைய தலைப்புகள் ஆகும்.
கதைகளினுடைய அமைப்பு
இந்த இருபத்து ஒன்று கதையும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கதையின் தொடக்கமும் ஒரு குழந்தை மாமா ஒரு கதை சொல்லுங்க என்று தொடங்குகிறது அதற்கு என்ன கதை சொல்லட்டும் என்று கதைசொல்லி கேட்க அந்தக் குழந்தை தனக்கு வேண்டிய பெயரைச் சொல்லி, மான் கத, மீன் கதை, மயில் கதை சொல்லு மாமா என்று கேட்பதாக் கதை தொடங்குகிறது. எந்த ஒரு கதைக்கும் கதைக்கானத் தலைப்பைத் தனியாக ஆசிரியர் குறிப்பிட்டு எழுதவில்லை. அதற்குக் காரணம், என்ன கதை சொல்ல வேண்டும் என்பதைக் குழந்தைகள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதற்காகக் கதைத் தலைப்பைக் கூறாமல் இருந்திருக்கலாம். அதே போல ஒவ்வொரு கதையின் முடிவும் வாசகர்களைக் கதையோடு இணைக்க வைக்கின்றது. இத்தன்மை அடுத்தடுத்த கதைகளை வாசிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக மயில் கதையில், இறுதியாக இலந்தை பழத்தை மயிலு குட்டி சாப்பிடும். கதை கேட்கும் குழந்தை இறுதியில் ‘நல்லாருக்கு மாமா கத’ என்று கூறுகிறது. அதன்பின்,
‘இப்ப நீ என்ன கேட்பேன்னு தெரியும், எலந்தப்பழம் வேணும் அப்படித்தானே
இல்ல மாமா… கத படிச்சவங்க எலந்தப்பழம் இடிச்சி எலந்தவடை செஞ்சி தருவாங்க எனக்கு’
என்று முடிகிறது. இப்படி எல்லாக் கதைகளிலும் வாசகர்கள் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
பெயர்களும் உறவுகளும்
ஒரு கதையினுடைய பாத்திரம் முக்கியமானது என்றால் கதாபாத்திரத்தின் பெயர்கள் கதைக்கு மிகவும் அவசியமானது. அவ்வகையில் ஆசிரியர் ஒவ்வொரு கதையிலும் குழந்தைகளினுடைய உலகிற்கே சென்று அவர்களுக்குப் பிடித்தமான பெயர்களைக் கதாபாத்திரங்களுக்குச் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘நாவல் சிறப்பதற்கு நல்ல முறையில் பாத்திரங்கள் அமைய வேண்டும். கதையின் உயிரோட்டம் பாத்திரங்களே ஆகும்’1 என்கிறார்.
குரங்கு மற்றும் உலகம் கதைகளில் கதாபாத்திரங்களுக்கு என தனித்தனிப் பெயர்களை ஆசிரியர் குறிப்பிடவில்லை. மூன்றாவது கதைகளிலிருந்து கதாபாத்திரங்களுக்கு ஆசிரியர் பெயர் சூட்டியுள்ளார்.
மூன்றாவது கதையில் கடலி, ஆத்தி, தாக மரம், குளத்தி, கிணத்தி.
நான்காவது கதையில் எறும்பு கதையில் குறும்பு, கருப்பு மல.
ஐந்தாவது கதையில், காக்காபொண்ணு, தண்ணி தம்பி, பாறையண்ணா, குட்டி மீன்
ஆறாவது கதையில் மூஞ்சியம்மா, மூக்கி, சின்னாங்குருவி, பலாமரம்.
ஏழாவது கதையில், அண்டாம்மா, குண்டாம்மா, டம்ளர் பையன், சொம்பு பொண்ணு, பானைப்பாட்டி
எட்டாவது கதையில், இடிச்சி, மின்னி, ஆலங்கி, ஆலங்கட்டி.
ஒன்பதாவது கதையில், தட்டாம்பூச்சி, கிணத்து பூண்டுச் செடி, சிவப்பு சோப்பு, வயசான தாத்தா சோப்பு.
பத்தாவது கதையில், நெல்லப்பன், நெல்லம்மா, நெல்லுமணி, புல்லண்ணா, குருவியக்கா, கிணத்துப்பூண்டு தாத்தா
பதினொன்றாவது கதையில், நல்ல பாம்பு, உருட்டுக்கட்டை, கட்டுச்சி பாம்பு, கரையான் ராணி.
பன்னிரெண்டாவது கதையில், குடிசையான், மெத்தையான்,
பதிமூன்றாவது கதையில், கடிகாரம் அம்மா, மணியண்ணன், நடுவலவன் நிமிசக்குட்டி, நொடித்தம்பி, எறும்பு அண்ணா, ஆடு மாமா.
பதினான்காவது கதையில், நாலுகாலன், ஆடுதொடாப் பூ, சுருட்டன், நாணலம்மா, மூங்கிலப்பன்.
பதினைந்தாவது கதையில், சிவப்பி, வேங்கையன், நீலி, கருப்பி, நட்சத்திரப்பாட்டி, எரிமீன்.
பதினாறாவது கதையில், மண்ணரசன், காக்கா அக்கா, கலையரசன், ஆறு மகள், அருவி அம்மா.
பதினேழாவது கதையில், மயிலம்மா, மயில் குட்டி எலந்தையன்,
பதினெட்டாவது கதையில், பிம்பன்.
பத்தொன்பதாவது கதையில் மானம்மா, மரிக்கொழுந்து, புலி மாமா, சிங்மாமா.
இருபதாவது கதையில் சிலந்தி அக்கா, எருக்கன் அம்மா, எருக்கன் விதை இலவம்பஞ்சு.
இருபத்து ஒன்றாவது கதையில், கிழக்கான், மேற்கான், கதிரப்பன், மழையம்மா, வானவில், நட்சத்திரக் குழந்தைகள், நிலா அம்மா.
முதலிய பெயர்கள் இடம்பெறுகின்றன. அதிகபட்சமாக ஏழு பெயர்கள் இருபத்து ஒன்றாவது கதையிலும் குறைந்தபட்சமாக இரண்டு பெயர்களும் இடம்பெறுகின்றன. ஏறத்தாழ எழுபத்து ஏழு புதிய பெயர்களை ஆசியர் கையாண்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது. இப்பெயர்களை ஆசிரியர் கதாப்பாத்திரங்களுக்குச் சூட்டுகிற போது ஆண்பால், பெண்பால் விகுதிகளைக் பொருத்தியிருப்பதைக் காணமுடிகிறது. இக்கதைகளில் எந்தப்பாத்திரங்களும் எதிர்நிலை மாந்தர்களாகப் படைக்கப்படவில்லை என்பதையும் அறியலாம்.
இந்தப் பெயர்களைக் குழந்தைகளுக்குக் கூறுகிற போது, உறவுமுறைச் சொற்களை அறிமுகம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் என்பதை அறியலாம். மேலும், எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அதனை ஒரு உறவு நிலையில் பார்க்க வேண்டும் என்கிற ஒரு மனநிலையை கதையில் வரும் பாத்திரங்கள் உருவாக்குகின்றன என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. மேலும், நான்காவது கதையில் எறும்பூர் என்றும் எட்டாவது கதையில் நெய்தலூர், குறிஞ்சியூர், முல்லையூர், மருதூர் முதலிய ஊர்ப் பெயர்களையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை
மனிதர்களுடைய வாழ்வில் இயற்கை என்பது பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. எனவேதான் சங்க காலத்திலிருந்தே மனிதன் நிலங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தான். அவ்வகையில் இயற்கை என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இந்தக் கதைகளில் இயற்கை சார்ந்த செய்திகளைக் கதைகளின் மூலம் குழந்தைகளுக்கு அறிய வைக்கிறார்.
வெயில் காலத்தில் வேப்பம் பூ மட்டும் பூக்கும் மற்ற மரங்கள் எல்லாம் பூக்காது என்பதை முதல் கதையிலும்
பட்டாம்பூச்சிகள் தேனெடுத்து உண்ணுதலை இரண்டாவது கதையிலும்
மீன், மீன் வகைகள் ஆறு, குளம், கிணறு, கடல் பற்றிய செய்திகளை மூன்றாவது கதையிலும்
எறும்புகள் மழைக் காலத்திற்கு முன்னதாகவே தனக்கான உணவை சேமித்து வைக்கும் என்ற ஒரு சிந்தனையை நான்காவது கதையிலும்
அருவி, ஆறு முதலானவை இறுதியில் கடலில் கலக்கும் என்ற செய்தியை ஐந்தாவது கதையிலும்
கோடைகாலத்தில் பானையின் பயன்பாடு, பானையினுடைய நன்மை பற்றியும் குறிப்பிடுகின்றார். இந்த கதையில் பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்ற செய்தியும் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் என்பதும் புலப்படுகிறது. மேலும் இன்றைய காலகட்டங்களில் குளிர்சாதனப் பெட்டியினுடைய வருகை காரணமாகப், பானையினுடையப் பயன்பாடு குறைந்து வருகிறது என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார் என்று எண்ணத் தோன்றுகிறது. வானில் இடி, மின்னல், ஏற்படுவதை ஏழாவது கதையிலும்
மழைப் பொழிவு பற்றியும் குறிப்பாக ஆலங்கட்டி மழை பற்றி தன் எட்டாவது கதையில் அறிமுகப்படுத்துகிறார்.
விவசாயத்தைப் பற்றிக் குறிப்பாக, நெல் பற்றியும் குருவிகள் விதைகளை உண்டு தாவரங்களை உற்பத்தி செய்கின்றன என்ற ஒரு செய்தியையும் ஒன்பதாவது கதையில் குறிப்பிடுகின்றார்.
கட்டில் பயன்பாடு என்பது சமகாலத்தில் குறைந்திருப்பதையும் அந்தக் கட்டில் பயன்பாடு, கட்டில் பாய் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் பதினான்காவது கதையிலும் குறிப்பிட்டிருக்கிறார்.
உழவிற்கு மிக முக்கியமாக இருப்பது கருவிகள். அந்த வகையில் மண்வெட்டி பற்றியும் மண்புழு உரமாக இருக்கின்ற செய்தியையும் பதினாறாவது கதையிலும் எடுத்துரைக்கின்றார்.
மயில் என்ற கதையின் வாயிலாக இலந்தை மரம், ஆலமரம், கோடாரி முதலியவை பதினேழாவது கதையிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மான், புலி, சிங்கம் முதலியவை உறவினர்களாகச் சித்தரிக்கப்படுகின்றார். இந்தச் செய்தியை பத்தொன்பதாவது கதையிலும்
சிலந்தி வலை பின்னி வாழக்கூடியது என்பதையும் எருக்கஞ்செடி விதை, இலவம் பஞ்சு, பருத்தி முதலியவை இருபதாவது கதையிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வான மண்டலம் பற்றிய செய்திகளைக் குறிப்பாகச் சூரியன், சந்திரன், நட்சத்திரம், திசைகள் பற்றிய செய்திகள் இருபத்தொன்றாவது கதையிலும் எடுத்துரைக்கின்றார்.
இவ்வாறாக இக்கதைகள் முழுக்க முழுக்க இயற்கையினால் இணைக்கப்பட்டுள்ள மையை அறிய முடிகிறது. காக்கையைத் திருடன், மானின் எதிரி புலி, நரி தந்திரம் வாய்ந்தது என்று மனிதன், விலங்குகளையும் பறவைகளையும் தவறாகச் சித்தரித்த அந்த மரபைக் கட்டுடைத்துப் புதிய பாதையில் இக்கதைகள் பயணிக்கின்றன என்பதையும் அறியலாம்
அறிவியல் செய்திகள்
கடிகார அறிமுகம், நேரம், மணி, நிமிடம், நொடி என்பதை பதிமூன்றாவது கதையிலும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
எண்கள் பற்றிய கணிதம் சார்ந்த சிந்தனையை இருபத்தொன்றாவது கதையிலும் எடுத்துரைக்கின்றார்.
பலூன் லேசானதாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குப்பின் செல்ல முடியாது என்பதை பதினைந்தாவது கதையிலும் குறிப்பிடுகின்றார்.
வானவியவியல், திசைகள் பற்றியும் இருபத்தொன்றாவது கதையிலும் கூறுகின்றார்.
கண்ணாடியினுடைய பயன்பாட்டைப் பதினெட்டாவது கதையிலும் அறியமுடிகிறது.
மேலும் சில மருத்துவம் சார்ந்த செய்திகளும் இக்கதைகளில் இடம்பெற்றுள்ளன . ஆடுதொடா இலை சாப்பிட்டால் இருமல் நிற்கும் என்ற செய்தியை பதினான்காவது கதையிலும் கண்ணாடியினுடைய புண்ணிற்கு மருந்தாக நெருஞ்சிப்பூ, ஊசித்தட்டான் மருந்தாக இருக்கும் என்பதையும் பதினெட்டாவது கதையிலும் குறிப்பிடுகின்றார்.
மேலும் கண்ணாமூச்சி விளையாட்டு பற்றி இருபத்தொன்றாவது கதையிலும் விளக்குகிறார்.
இவ்வாறாக இந்த இருபத்தொன்று கதைகள் முழுவதும் ஏதோ ஒரு வகையில் இயற்கையோடும் அறிவியலும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
உயிரினங்கள்
எல்லாக் கதைகளும் இயற்கையோடு இயைந்தே காணப்படுகின்றன என்பதை ஒவ்வொரு பாத்திரங்களும் குறிப்பிடுகின்றன. மரங்கள், செடிகள், பூக்கள், விலங்குகள், ஊர்வன, பூச்சிகள் பறவைகள் முதலியவை பல இடம்பெற்றிருக்கின்றன.
முடிவுரை
நாணற்காடன் சிறார் கதைகள் வெறும் பொழுதுபோக்கிற்காகக் குழந்தைகளுக்குச் சொல்லக்கூடிய கதைகள் அல்ல. இந்தக் கதைகள் குழந்தைகளுக்கு இயற்கையையும் அதன் வளங்களையும் வாழ்விடங்களையும் மலைகளையும் காடுகளையும் வயல்களையும் கடற்கரைகளையும் அங்கு வாழும் உயிரினங்களையும், உயிரினங்களின் வாழ்வியலையும் எடுத்துக் கூறும் அறிவுப் பெட்டகமாக உள்ளது. அறிவியல் சார்ந்த கருத்துக்கள், மருத்துவம் சார்ந்த கருத்துகள், பாம்பு பற்றிய மூட நம்பிக்கை சிந்தனைகள், வானவியல் பற்றிய செய்திகள், கணிதவியல் பற்றிய சிந்தனைகள் முதலியவை இடம் பெறுகின்றன.
இக்கதைகள் வாயிலாக அறியப்படாத சில தாவரங்கள், விலங்குகள், தொலைந்துபோன ஏரிகள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றது என்பதை அறிய முடிகிறது. குழந்தைகளுக்குச் சிறிய வயதிலேயே கதைகளை எடுத்துக் கூறுகிற போது அவர்கள் இயற்கை பற்றிய பேராற்றல் பெற்றவராக மாற்றம் பெற இக்கதைகள் பயன்பெறும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு கதையும் வாழ்வியலைச் சொல்லிக்கொண்டு செல்கிறது. மேலும், இந்தக் கதைகளைக் குழந்தைகள் கேட்பதன் வாயிலாக அவர்களுக்கு இயற்கை சார்ந்தும் அறிவியல் சார்ந்தும் வானவியல் சார்ந்தும் மூடநம்பிக்கை சார்ந்தும் உள்ள செய்திகளைப் பள்ளிக்குச் செல்லாமலேயே கற்றுக்கொடுத்து விடுகிறது நாணற்காடனின் கதைகள் என்பதை உணரமுடிகிறது.
துணை நின்றவை
https://www.facebook.com/naanalbasho
அடிக்குறிப்பு
1.http://www.tamilvu.org/ta/courses-degree-p203-p2032-html-p20323l3-30041
* கட்டுரையாளர்: – முனைவர் சி. சங்கீதா, உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில், விருதுநகர் மாவட்டம்.- 626126. –