சேனாவரையர்
சேனாவரையர் தொல்காப்பிய சொல்லதிகாரத்தின் உரையாசிரியர். சேனை + அரையர் = சேனாவரையர். சேனை என்பது தமிழ்ச்சொல் அல்ல. வடமொழிச்சொல்லின் தழுவல் ஆகும். தமிழில் சேனை என்பது படையைக் குறிக்கும். அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள்படும். பண்டைத் தமிழ் வேந்தர்கள் படைத்தலைவர்களைச் சேனாவரையர் என்று அழைத்தனர். தமிழகத்திலுள்ள நான்கு கல்வெட்டுக்கள் சேனாவரையர் என்னும் பெயரைக் குறிப்பிடுகின்றன. இவற்றுள் ஒன்று ஆற்றூர் கல்வெட்டு. ஆற்றூர் தென்பாண்டி நாட்டுக் கொற்கைத் துறைமுகத்தை அடுத்துள்ள ஊர். கி.பி 13 ஆம் நூற்றாண்டின் காலத்தில் தம் படைத்தலைவருக்குச் சேனாவரையர் என மன்னர்கள் பட்டம் சூட்டினர். இச்சிறப்புப்பெயரே நிலைத்துவிட்ட நிலையில் கல்வெட்டில் இடம்பெற்றிருக்கிறது. அக்கல்வெட்டு மாறவர்மன் குலசேகர பாண்டியனின் ஏழாம் ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டது. இதனடிப்படையில் சேனாவரையரது பெயருக்கான வரலாற்றுப் பின்புலத்தை மு.இராகவையங்கார் சுட்டுகின்றார்.
உரை
உரை என்ற சொல் புலமை மிக்கது. அஃது மூன்று நிலைகளில் பொருள்படுகிறது.
- உரை – உரைத்தல் அல்லது சொல்லுதல் (தொல்.கற்பு.12)
- உரை – உரைநடை (தொல்.செய்.166)
- உரை என்பதை விளக்கம் அல்லது புலப்பாடு என்ற பொருளில் மரபியலில் தொல்காப்பியர் சுட்டுகின்றார். சூத்திரத்தின் உட்பொருளைப் பேசுவது உரை. ‘ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்குவது உரை’ (தொல்.மரபு 105> 106)
இவற்றின் வாயிலாக உரை என்பது பொருளாழம் நிறைந்தது. ஒன்றனை ஐயம் தெளிவுற விளக்கிக் கூறுவதற்கு உரை என்ற சொல்லாட்சி ஆளப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிகின்றது.
பெயர்கள்
பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல். பொருள்> இடம்> காலம்> சினை> குணம்> தொழில் என்ற பொருள் முதல் ஆறின் அடிப்படையில் தோன்றும். பெயர்கள் சமயம்> மொழி> பண்பாடு ஆகியவற்றின் ஆவணமாகவும் திகழ்கிறது. சேனாவரையர் தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் எழுதப்பட்ட உரையில் மாந்தர் பெயர்கள் அவர்களுக்கு அளிக்கப்பெறும் பட்டப்பெயர்கள்> ஊர்ப்பெயர்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அப்பெயர் அமைவுகளைக் காண்குவோம்.
புலமையும் பெயரமைவும்
சேனாவரையர் பண்டைத்தமிழ் அறிஞர்களின் பெயர்களையும் அரசர்களின் பெயர்களையும் திறன்மிகு மாந்தருக்கு சூட்டப்பெறும் பட்டப்பெயர்களையும் நூற்பாக்களை விளக்குமிடத்து சுட்டியுரைக்கிறார். இயற்பெயரும் சிறப்புப் பெயரும் அமையுமம் வரையறை குறித்த நூற்பாவினை விளக்க முற்படும் இடத்து சேனாவரையர்
“உம்மையால் தவம், கல்வி> குடி> உறுப்பு முதலாயினவற்றானாகிய பெயரும் கொள்ளப்படும். அவை முனிவன் அகத்தியன் எனவும்> தெய்வப்புலவன் திருவள்ளுவன் எனவும்> சேரமான் சேரலாதன் எனவும்> குருடன் கொற்றன் எனவும் வரும்.” (தொல். சொல். 41> உரை> ப.34) என்று மொழிகுவார். புலமையின் காரணமாக அளிக்கப்பெறும் சிறப்புப்பெயர்கள் யாவும் இயற்பெயர்க்கு முன்னதாக அமையும் என்பதை சேனாவரையரது உரை முன்மொழிகின்றது
ஏனாதி என்பது சிறந்து இயங்கும் படைத்தலைவனுக்கு கொடுக்கப்பெறும் பட்டப்பெயர் ஆகும்.அமைச்சர்> கணக்கர்> வேளாளர் முதலாயினார்க்குக் காவிதி என்ற பட்டமும்> வணிகருக்கு எட்டி என்ற பட்டப்பெயரும் அளிக்கப்பட்டது. சேனாவரையர் இதே நூற்பாவுரையில் திருவீரவாசிரியன்> மாந்தக் கொங்கேனாதி என்ற பெயர்களை பதிவுறுத்துகிறார். ஏனாதி> காவிதி> எட்டி எனப் பண்டைய மன்னர்கள் வழங்கிய பட்டங்களையும் அவர் கையாண்டுள்ளார் (தொல். சொல் 41, 166 உரை).
ஆக்கியோனால் பெயர் வழங்குதல்
ஒன்றனை ஆக்கியனோல் பெயர் அமையப் பெறுகின்றது. ஆல் ‟உருபைக் கூறவந்த சேனாவரையர் “அகத்தியனால் தமிழ் உரைக்கப்பட்டது” (தொல். சொல். 73> உரை> ப.62) என்பதனையும்> வேறோர் இடத்தில் அவர் “கபிலரது பாட்டு> பரணரது பாட்டியல்” (தொல். சொல் 80> உரை> ப.69) என்பதனையும் சுட்டிக் கூறுகின்றார். தொல்காப்பியன்> கபிலன் என்ற பெயர்களையும் (தொல்.சொல். 114> உரை> ப.30) வழிமொழிகிறார்.
மாந்தரின் பெயரமைவுகள்
சேரமான்> மலையமான் (தொல். சொல். 132> உரை> ப.98)> அருவாளன்> சோழியன்> அத்தி கோசத்தார்> அம்பர் கிழான்> பேரூர் கிழான்> பட்டி 52 புத்திரர்> கங்கைமாத்திரர் (தொல். சொல் 165> உரை> ப.111) சீத்தலைச் சாத்தன்> கொடும்புற மருதி (தொல். சொல்.174> உரை> ப.117)> பாரி (தொல். சொல். 259> உரை> ப.169)> பெருஞ்சேந்தனார்> முடத்தாமக் கண்ணியார் (தொல். சொல் 270> உரை> ப.172) ஆகிய இயற்பெயர்களையும் குடிப்பெயர்களையும் சிறப்புப் பெயர்களையும் அவர் சான்று கூறி விளக்குகின்றார்.
சாதிப்பெயரமைவுகள்
சேனாவரையர் தம் காலத்துச் சாதிப் பிரிவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். பார்ப்பனச்சேரி (தொல்.சொல். 49)> நான்மறை முதல்வர் (தொல்.சொல்.33)> ஓதும் பார்ப்பான் (தொல்.சொல்.234)> ஓதாப் பார்ப்பான் போன்றன அவர் காலச் சமுதாயப் பிரிவுகளை நமக்கு உணர்த்துகின்ற மெய்மைகளாக உள்ளன.
ஊர்ப்பெயர்கள்
சேனாவரையர் குறிப்பிடுகின்ற ஊர்களின் பெயர்கள் பலவாகும். கருவூரை அவர் பல இடங்களில் மேற்கோள் காட்டுகின்றார். (தொல்.சொல்.62) “கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா” (தொல்.சொல்.68) என்று “கருவூரின் கிழக்கு”(தொல்.சொல்.77> 110) என்றும் அவர் கூறுவது அறியத்தகும். உறையூர்> சிராப்பள்ளி> வடவேங்கடம் தென்குமரி ஆகிய ஊர்களைச் சேனாவரையர் பின்வருமாறு கூறுவர்:
“உறையூர்க் கயனின்ற சிராப்பள்ளிக் குன்றை உறை யூர்க்கட் குன்று என்றும்> வடபால் வேங்கடம் தென்பாற்குமரி என்பன வற்றை வடக்கண் வேங்கடம் தெற்கடற்குமரி என்றும் வந்தவாறு கண்டு கொள்க.” (தொல். சொல். 82> உரை>ப.70). “குழிப்பாடி யென்னுமிடப் பெயர் இடத்தின் வேறாய ஆடைமேனிற்றல் ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலாம்.” (தொல். சொல். 115> உரை> ப.91)
“மாறோக்கம்” என்பது கொற்கை சூழ்ந்த நாடு இதனைச் சேனாவரையர்> “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோக்கத்தார். இக்காலத்தும் பெண்மகனென்று வழக்குப ‟(தொல். சொல் 164> உரை> ப.110) என்று கூறும் விளக்கத்தினூடே நாட்டின் பெயரும் இழையோடி நிற்கக் காண்கின்றோம்.
“செந்தமிழ் நிலமாவன வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின்றெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம்” (தொல். சொல். 398> உரை> ப.205) என்று அவர் கருவூர்> மருவூர்> உறையூர்> சிராப்பள்ளி> வடவேங்கடம்> தென்குமரி> மாறோக்கம்> கொற்கை என்று ஊர்களையும் தென்குமரியாறு> வையை> மருதயாறு என்று ஆறுகளையும் எல்லைகளாகச் சுட்டிக் கூறுகின்றார். மேலும் அவர்> பன்னிரு நிலங்கள் குறித்தும் பேசுகின்றார்.
அளவைப்பெயர்கள்
சேனாவரையர் அக்கால அளவுப் பெயர்களை பட்டியலிட்டுள்ளார். பதக்குத் தூணி> தொடிதுலாம் (தொல். சொல். 116> உரை> ப.92) கலனே தூணிப்பதக்கு> தொடியே கஃசரை (தொல். சொல். 417> உரை> ப.219) என்று அளவுப்பெயர்களின் பயன்பாட்டு குறித்து உரைக்கிறார்.
முடிவுரை
சேனாவரையர் சொல்லதிகார உரையில் மாந்தர்களின் பெயர்களையும் திறன்மிகு மாந்தர்களுக்கு இடப்படும் சிறப்புப்பெயர்களையும் ஆக்கியோனுக்குச் சுட்டப்பெறும் பெயரமைவினையும் சாதிப்பெயர்கள், குடிப்பெயர்கள், இயற்பெயர்கள் சிறப்புப்பெயர்கள், பட்டப்பெயர்கள்> ஊர்ப்பெயர்கள்> ஆற்றின் பெயர்கள்> அளவைப்பெயர்கள் என்று பெயர்களையும் அவர்கால சமூக வழக்காற்றினையும் அதன்வழிச் சுட்டி உரை வரையறுக்கிறார் என்பதை இக்கட்டுரை பதிவுறுத்துகின்றது.