படைப்பிலக்கியம் என்பது வாழ்க்கையின் விளக்கமாகும். திறனாய்வு வாழ்க்கை விளக்கமாகிய அப்படைப்புகளின் விளக்கமாகும். என்ற கூற்று திறனாய்வின் இன்றியாமையை விளக்குகின்றது. ஓர் படைப்பாளனின் சிறந்த அனுபவமே படைப்பாகின்றது. அவ்வனுபவத்தின் மதிப்பினை அளவிடுவதே திறனாய்வின் நோக்கமாகும். சிறந்ததை, உயர்வனதைக் கண்டறிந்து தன்னலமற்ற முறையில் பரவலாக்குவது, அறச்சிந்தனை உணர்வினை விளக்குவது, இலக்கியத்தின் குறைநிறைகளைக் காண்பது, கலைஞனின் கூற்று – அதன் வெற்றி – அதன் தகுதி ஆகிவற்றை காண்பது, கலையினை நுண்ணறிவுக் கொண்டு உணர்த்தி அதன் தரத்தினை மதிப்பிடுவது என்று திறனாய்விற்கான விளக்கத்தினை அடுக்கிக்கொண்டே செல்லலாம். மேற்சொன்ன கூறுகளுக்கெல்லாம் ஒரு படைப்பினை உற்றுநோக்கி, ஆராய்ந்து, பாகுப்படுத்தி, விளக்கி, மதீப்பீடு செய்வது என்பது அடிப்படையாகும்.
என்று இலக்கியம் தோன்றியதோ அன்றே திறனாய்வும் தோன்றிவிட்டது என்பது திறனாய்வின் தோற்றம் பற்றிய பொதுக்கருத்து. தமிழில் திறனாய்வின் தோற்றத்தினைக் காணமுற்படும்போது சங்கப்பலகையில் வைத்து இலக்கியத்தினைச் சோதிப்பது, கற்றோர் நிறைந்த அவையில் படைப்பினை அரங்கேற்றுவது, சங்கம் அமைத்து ஆய்வது என்ற பல்வேறு மரபுநிலைசார்ந்த பரிணாமங்களைத் தமிழ்த்திறனாய்வு உலகம் பெற்றுள்ளது.
தொல்காப்பியத்திலிருந்தே திறனாய்வினுடைய தொடர்ச்சி இலக்கியபூர்வமாகத் தொடர்கின்றது. திருக்குறளிலேயே திறனறிதல் என்ற சொல்லாச்சி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழில் களப்பிரர் காலத்தில் நிலவிய சமயநிலைசார்ந்த தருக்கம், மறுப்பு என்பவையெல்லாம் திறனாய்வின் கூறுகளாகும். ஆனால் பயிற்சி நெறியாக பழங்காலத்தில் திறனறிதல் மேற்கொள்ளப்படவில்லை.
திருமண செல்வகேசவராயர், வ.வே.சு, மறைமலையடிகள், மு.ராகவையங்கார், நல்லசாமிப்பிள்ளை, ரசிகமணி டி.கே.சி, சேஷ அய்யர், வெ.கனகசபை, பெ.சுந்தரம் பிள்ளை, கு.ப.ரா, பெ.கோ. சுந்தரராஜன், வெங்கட்சாமிநாதன், பண்டித நடேஷ சாஸ்திரியார், கிருஷ்ணசாமி அய்யங்கார், சிவராஜபிள்ளை, பூர்ணலிங்கம் பிள்ளை, எம். சீனிவாச அயங்கார், பி.டி. சீனிவாச அய்யங்கார், வி.ஆர். இரமச்சந்திர தீட்ஷிதர், சாமிக்கண்ணுப்பிள்ளை, கா.ந.சுப்பிரமணியம், நா. கதிரைவேற்பிள்ளை, மார்கபந்து சர்மா, அறிஞர் அண்ணா, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, எஸ். வையாபுரிப்பிள்ளை, டி.வி.சாதாசிவப் பண்டாரத்தார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மு.வ, கோதண்டராமன், சிதம்பர ரகுநாதன், கேசவன், தோதாத்திரி, சிட்டி, சோ.சிவபாத சுந்தரம், அ.ச.ஞானசம்பந்தன், தி.சு. நடராஜன், வல்லிக்கண்ணன், தருமு சிவராம், கல்கி, இராஜாஜி, வி.ஆர்.எம் செட்டியார் ஆ.முத்துசிவன் கோவை ஞானி, தொ.மு.சி. இரகுநாதன், ப.ஜீவானந்தம், தமிழவன், வா.சுப.மாணிக்கம், ஜெயகாந்தன், தா.ஏ.ஞானமூர்த்தி, எஸ்.வி.ராஜதுரை, ஸ்ரீ பாலசுப்பிரமணியம், தமிழவன், பஞ்சாங்கம், சி.சு.செல்லப்பா, இலங்கையில் கைலாசபதி, சிவதம்பி, யாழ்விபுலானந்த அடிகள், சி.மௌனகுரு, மௌனகுரு சித்திரலோகா, எம்.ஏ.நுஃமான் போன்ற பல்வேறு திறனாய்வு முன்னோடிகளைக் கொண்டது தமிழ் இலக்கியமரபு. (செல்வகேசவராய முதலியாரா இல்லை வ.வே.சு சுப்பிரமணிய அய்யர் இவர்களில் யார் நவீன திறனாய்வின் முன்னோடி என்ற பிரட்சினை இன்றும் நிலவுகின்றது. இவ்விருவரையும் நாம் முன்னோடிகளாக கொள்ளலாம். ஆழமான திறனாய்வறிவு, பன்மொழிப் புலமை (வ.வே.சு க்கு 6 மொழிகளில் புலமையுண்டு) புதுமையைப் படைக்கும் ஆhர்வம், மேலைநாட்டு இலக்கியத்தினை, கோட்பாடுகளை ஒப்பிடும், அறிமுகப்படுத்தும் ஆர்வம், சீரியப் பணி இவற்றில் இருவரும் சாளைத்தவரல்ல எனலாம்) (வசனம், செய்யுள், இரபின்சன்குருசோ (செல்வகேசவராய முதலியார்) முயஅடியசயஅயலலயயெ ய ளவரனல (வ.வே.சு கம்பன் – மில்டன் – வால்மீகி ஒப்பீட்டு ஆய்வு), குளத்தங்கரை அரசமரம் – முதல் சிறுகதை, பாரதியைப்பற்றிய திறனாய்வுக் குறிப்புகள்) மரபு மீதான சார்பு, ரசனை மீதான ஆர்வம் மற்றும் பயிற்சி, தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு மீதான செம்மாப்புணர்வு என்ற தன்மைகளைக் கொண்டு விளங்கிய தமிழ் திறனாய்வு முன்னோடிகள் இரசனை, அழகியல் (டி.கே.சி, ஆ.முத்துசிவன்) என்ற அளவுகோல்களையே தமது திறனாய்வு அளவுகோலாக கொண்டிருந்தாலும் செல்வகேசவ முதலியார் போன்ற ஆங்கில இலக்கியம் கற்றவர்கள் ஆங்கிலத் திறனாய்வு முறைகளைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தினர். ஊசவைiஉளைஅ (கிரிட்டிக் என்ற கிரேக்க சொல்லிற்கு தீர்ப்பளிக்கத் தகைமைப் பெற்றவன் என்று பொருள். கிரிட்டிசிசம் என்பது கவனமாக மதிப்பீடு செய்தல் அல்லது தீர்ப்பளித்தல் என்று பொருள்) என்ற சொல்லிற்கு விமர்சனம் என்ற சொல்லினை முதலில் பேராசிரியர் ஆ.முத்துசிவன் பயன்படுத்துகின்றார். (அசோகவனம் என்ற நூலில் கவிதைவிமர்சனம் என்ற சிறந்த விமர்சின நூல்கள் – அரிஸ்டாடில், ஏ.சி.பிராட்லி, எம்.எச்.ஆப்ராம்ஸ் போகன்றவர்களின் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி தமிழ்க்காப்பியத்தை ஆய்ந்தவர். டி.கே.சியின் அழகியல் கோட்பாட்டில் ஈடுபட்டு அதில் மேலைநாட்டு திறனாய்வு முறையினைப் பின்பற்றியவர்) விமர்சனம் என்பது வடமொழிச்சொல்லாகும். விமர்சனம் என்பதற்கு இணையாக திறனாய்வு என்ற தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தியவர் அ.ச.ஞானசம்பந்தன் ஆவார்.
அச்சு, தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி, கல்வி பரவலாக்கம், தமிழிலக்கியம், சமூகம் குறித்த அறிவும் உணர்வும் பெற்றுள்ள புத்துணர்வு, தமிழ்மரபினை, அதன் இலக்கியச்சாதனையை ஆராய்ந்துப்பார்க்கும் ஆர்வம், மேலைநாட்டு படைப்புகளின் தாக்கம், அறிவியல் கண்ணோட்டம், எழுதுவதற்கான வாய்ப்பினைப் பத்திரிகைகள் அளித்தல் உள்ளிட்ட காரணங்களால் சமகாலத் திறனாய்வு இன்று புதிய வளச்சியைக் கண்டு விளங்குகின்றது.
இன்று திறனாய்வுகள் இல்லாத துறைகளே இல்லையெனலாம். அச்சில் வருபவை, அச்சில் வராதவை என்ற இருவகையான, பலதரப்பு கலைகளுக்கும், படைப்புகளுக்கும் திறனாய்வும், மதிப்புரையும் வந்துக்கொண்டே இருக்கின்றன. அறிவியல், கணிதம், சோதிடம் போன்ற பலத்துறைகளின் ஆய்வு முடிவுகளும் திறனாய்விற்கு உட்படுத்தப்பட்டு தீர்வுகாணப்படுகின்றன. குறிப்பிட்ட பரப்பினை அமைத்து சுருக்கமாக ஆய்வுநோக்கில் மேற்கொள்ளப்படுவது மதிப்புரையாகும். அச்சுப்பதிவு, இணையப் பதிவு, காணொளி, ஒலிவடிவம் என்ற நான்குவகையான வடிவங்களைச் சமகாலத் திறனாய்வு கொண்டுள்ளது.
சுதேசமித்திரன், சித்தாந்த தீபிகை, மணிக்கொடி, எழுத்து, கணையாழி, வாந வயஅடையைn யவெஙைரயசல, (மறைமலையடிகள் – தமிழ் ஆய்வுரை மரபில் மாற்றத்தினை ஏற்படுத்தியவர். ஆய்வுரை என்பதும் திறனாய்வின் கூறுதான். திறனாய்வின்றி ஆய்வுரை மேற்கொள்ளவியலாது. தமிழின் திறனாய்வு மரபில் உரைக்கும், ஆய்வுரைக்கும் ஒரு தொடர்புண்டு. இந்த இதழில் ஜி.யு.போப், மு.ராகவயங்கார், வெ.கனகசபை, பெ.சுந்தரம்பிள்ளை போன்றோரின் கட்டுரைகள் வெளியிடப்பட்டன) கசடதபற, நடை, ஞானரதம், தீபம், பரிமாணம், வைகை, யாத்ரா, படிகள் போன்ற பத்திரிகை மற்றும் இதழ்கள் விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டதைப்போல இன்று அமுதசுரபி, ஆனந்த விகடன், உங்கள் நூலகம், கற்கண்டு, திட்டம், தடம், காலச்சுவடு, தீராநதி, உயிர்மை, உயிர் எழுத்து, சுபமங்களா, அறிவுக்கண், விளையாட்டு உலகம், பொம்மி, மாணவர் உலகம், இளைஞர் உலகம், வணிகக் கதிர், மாணவ கதிர், கலைமகள், செயல் திறனாய்வு போன்ற இதழ்கள் திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. எண்ணிலடங்காத இதழ்களும், சிற்றிதழ்களும் இன்று திறனாய்விற்கு துணைநிற்கின்றன. ஆனால் அப்பொழுதைய இதழ்களைப்போல முழுவதும் ஆய்விதழாகவோ, இலக்கிய இதழாகவோ இருப்பவை அருகி விட்டன. சில இதழ்கள் இலக்கியம் மற்றும் சமூகம் என்ற இரு கண்ணோட்டதினைக் கொண்டு அதுசார்ந்த நிகழ்வுகளை விமர்சிப்பதும் உண்டு. அதன் தரமும், தேவையும் இன்றைய திறனாய்வுலகிற்கு இன்றியமையானதாகும். (இன்று இலக்கியம், சமூகப் பார்வையிலுள்ள சில இதழ்களுள் தடம், உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, சுப மங்களா, உங்கள் நூலகம் போன்ற இதழ்கள் இலக்கியம் சார்ந்த திறனாய்வற்கு பங்களித்துவருகின்றன. அதற்கென்று இடத்தினையும் ஒதுக்குகின்றன. வள்ளலார் செய்த புதுமைகள் (ஒளவை நடராசன், கலைமகள் இதழ்), கண்ணீரை புன்னகையில் வென்ற கலைஞன் (தெக்கூர் அனிதா, கற்கண்டு),அபூர்வ எழுத்தாளர் அநுத்தமா (தேவவிரதன், அமுதசுரபி), புத்தகம் பேசுது (இரா.நடராசன், திட்டம்), என்னைக் கவர்ந்த உலகக் கவிஞர்கள் (பூபதி பெரியசாமி, கிழக்குவாசல் உதயம், கறுப்பு நகைச்சுவையும் சுயபகடியும் கலந்த கதைகள் (ந.முருகேசபாண்டியன், தடம்), நான் என்ன செய்கிறேன் (அ.முத்துலிங்கம், தடம்), நனொரு சிறு கல் (எஸ்ராமகிருஷ்ணன், தடம்), பெருமாள் முருகனின் கண்ணாடிக்கூடம் (லூயிற் ஏ.கோமஸ், காலச்சுவடு), உப்புக் காற்றில் உலரும் கண்ணீர் (ஈழப்பதிவு, பா.செயப்பிரகாசம், காலச்சுவடு, திப்புசுல்தான் கதைப்பாடல் (அ.கா.பெருமாள், தடம்), பின்னர் வருபவர் பிரமிப்பர் (பழ.அதியமான், காலச்சுவடு), தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் பாலின வேறுபாட்டின் தாக்கம் (சுகுமாறன், உங்கள் நூலகம், இனவரைவியல் பண்பாட்டு எழுதுகை – மிராசு நாவலை முன்வைத்து (இரா.காமராசு, உங்கள் நுலகம்), அறத்தின் இன்னொரு முகம் (ந.முருகேசப்பாண்டியன்), உ.வே.சாமிநாதையர் நினைவுகள் (இரா.வெங்கடேசன், உங்கள் நூலகம்), காதியின் பயணம் : காந்தியின் கைத்தறி துணியிலிருந்து பேஷனின் குறியீடுவரை (வி.கே.சக்ஷேனா, திட்டம்), கோயில் கட்டடக் கலையில் நாயக்கர்களின் பங்களிப்பு (சொ.சாந்தலிங்கம்), சினிமா எனும் வெறிக்கூத்து (ஷாஜி, தடம்), வெள்ளை மீட்பர்கள் மீள் பரிசோதனை (ரதன், காலச்சுவடு) போன்றவையெல்லாம் சமீபத்திய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள், படைப்பாளர்கள், சமூகம் சார்ந்த விமர்ச்சனப் பதிவுகள். இதில் எல்லாவகையான துறைகள் சார்ந்த விமர்ச்சனங்களும் இடம்பெறுகின்றது.
இலக்கியத்தரம் சார்ந்த சில இதழ்கள் ஈழத்து எழுத்தாளர்களின் பதிவையும், புலபெயர்ந்து மேலைநாட்டில் உள்ளவரின் பதிவையும் கொடுத்திருப்பது நோக்கத்தக்கது. சிறர்களுக்கென்று வெளிவரும் பொம்மி என்ற சிறார்இதழில் சிறர் இலக்கிய நூற்படைப்பிற்கான ஆனந்தவிகடன் விருதுபெற்ற எஸ். புhலபரதியின் மரபாட்சி சொன்ன இரகசியம் என்ற நூலினுடைய அறிமுகமும், தாத்தாவுடன் போர் (வுhந றுயச றiவா புசயnனிய) என்ற அமெரிக்க சிறார் படம் பற்றிய விமர்சனமும் இன்று நோக்கத்தக்கது. இது குழந்தைகளிடம் சேர்க்கப்படும் பொழுத அவர்களுக்கு திறனாய்வின் மீது ஈர்பினை ஏற்படத்தி அதன் இன்றியாமையை உணர்த்தலாம். இதுபோன்ற பல இதழ்கள் தரமான திறனாய்வு கட்டுரைகளை வெளியிடுகின்றன. புத்தகங்களை அறிமுகம் செய்வதற்கென்றே புதிய புத்தகம் பேசுது என்ற மாத இதழ் வெளிவருவது புதிய புத்தகங்களின் அறிமுக்திற்குப் பெரும் பயனளிக்கின்றது. இதில் இடம்பெற்றிருக்கும் புத்தகங்களின் அறிமுகங்களும்கூட் திறனாய்வு போக்கில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதழில் இம்மாதத்தில் மு.ரமேஷின் ‘எந்தை’, பா.சிவானந்த வல்லியின் ‘கிருதயுகம் எழுக’, சங்கரின் ‘முருகம்மா’, அருணனின் ‘தேவ அசுர யுத்தம் ஆரிய திராவிட யுத்தமா?’, மொசைக்குமாரின் ‘நேசஅலைகள்’, விட்டல்ராவின் ‘நிலநடுக்கோடு’, சுப்ரபாரதி மணியனின் ‘பொன்னுலகம்’, விமலாதித்த மாமல்லனின் ‘புனைவு என்னும் புதிர்’, சாகித்ய அகாடமி வெளியீடான கௌரி கிருபானந்தாவின் தமிழாக்கத்திலான சா.சோவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், அ.கரீமின் ‘ரூபாய் நோட்டில் மிதக்கும் சைபர்’, பாவண்ணனின் ‘தகவு திறந்தே இருக்கிறது’, தாஜ்நூரின் ‘கணினி இசை அரணி ஆளும் இசை’ அ.கரீமின் ‘சிதார் மரங்களின் இலைகள் பூப்பதில்லை’ போன்ற புதுவரவு நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலும் தனி தனி நபர்களால் விரிவாக அறிமுகம் செய்வது சிறப்பான. இன்று தமிழின் நாளிதழ்களும் சிறியளவிலான விமர்சினம், புத்தக அறிமுகத்தினை செய்கின்றன. அவை எளிய நடையில் ஜனசரஞ்சக மக்களை சேரும் விதமாக அமைந்திருப்பது சிறப்பானது.
19 ஆம் நூற்றாண்டில் ஆய்வுமீதான கண்ணோட்டத்தில் தொடங்கி, இரசம், அழகியல், முற்போக்கு அழகியல், இசங்கள் என்று படிப்படியாக பரிணமித்த திறனாய்வினைத் தொடக்கத்தில் இருந்ததைப்போலவே கல்வியாளர்கள், படைப்பாளர்கள், பிறத்துறையாளர்கள் என்ற மூன்று பிரிவினரே சமகாலத்திலும் தொடர்கின்றனர். இவர்களுள் சமகாலத்தில் படைப்பாளர்களே அதிகளவில் திறனாய்வாளர்களாகத் திகழ்கின்றனர். சில திறனாய்வாளர்கள் படைப்பாளர்களாக மாறியுள்ளனர். இதனால் திறனாய்வுக் கோட்பாட்டிற்கு ஏற்றவாறு படைப்புகளை எழுதும் நிலை ஏற்பட்டு படைப்பின் தரம் பெருமளவில் பாதிக்கின்றது. பல்வேறு இருண்மைப் படைப்புகள் பெருகியுள்ளன. (மௌனியின் படைப்புகளை புரிந்துக்கொள்வதற்காக ஜெயகாந்தன் எழுதிய குறிப்புரை. இது எதார்த்தமாக வெளிப்பட்ட ஒரு படைப்பாளனின் படைப்புகளை சக படைப்பாளன், திறனாய்வாளன் அதனைப் புரிந்துக்கொள்ளும் நிலையினை ஊக்குவிக்கும் போக்கிலமைந்தது. அதே நேரத்தில் மாய யதார்த்தவாத உத்தியனைக் கொண்டு தமிழ்வன் எழுதிய ஏற்கனவே செல்லப்பட்ட மனிதர்கள் போன்ற நாவல்கள் போன்றவை கோட்பாட்டிற்கான எழுதப்பட்ட நிலையில் அதன் தரம் குறைவது எதார்த்தமாகிறது. இன்றைய இதழ்களில் வெளிவருகின்ற பெரும்பாலான சிறுகதைப் படைப்புகள் மேலைநாட்டின் இசங்களையொட்டியே வெளிவருவது கண்கூடு) முற்காலப் திறனாய்வாளர்கள் படைப்பாளர்களாக இருந்துள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் பகுதிநேரப் படைப்பாளர்களாகவும், முழுநேர திறனாய்வாளர்களாகவும் இருந்த நிலை மாறி முழுநேரப் படைப்பாளர்கள், பகுதிநேர திறனாய்வாளர்களாக இன்றைய படைப்பாளர்களுள் சிலர் திகழ்கின்றனர். அவர்களின் படைப்புகள் பெரும்பாலும் தம் அனுபவத்தினைப் பிறர்க்கு உணர்த்தவேண்டும் என்ற அளவிலேயே விளங்குவதால் அதன் தரம் குறைந்து நிற்கின்றது. முழு வியாபார நோக்குடனேயே எழுதப்படும் இப்படைப்புகள் இயல்புநிலையில் சூழலோடு எழுதப்படுகின்ற படைப்புகளை விட மதிப்புடைய அனுபவங்கள் குறைந்தாகவே விளங்குகின்றன. இத்தகைய படைப்புகள் சரியாக திறனாயப்படாமலும் சில சார்பு நிலைகள் கொண்டாதகவும் அமைவதால்; அதன் போக்கு களையப்படாமல் இருக்கின்றது.
இன்றைய பெரும்பாலான படைப்புத் திறனாய்வாளர்கள் கண்மூடித்தனமாக மரபுகளையும், மேலை கோட்பாடுகளையும் எதிர்க்கின்றனர். அவர்கள் வெ.கனகசபை போன்ற திறனாய்வர்களைப் போல மரபினை நன்குதெளிந்து கற்றுதெளிந்து அதைப்பற்றி விமர்சிப்பதில்லை.
இலக்கிய மற்றும் மக்கள் இதழ்களும் இன்று ஏதோ ஒருவித சார்புநிலைக்குட்பட்டதாகவே இயங்குகின்றன. குழுமனப்பான்மையுடன் இயங்கும் இவர்களால் திறனாய்வினுடைய போக்கு பாதிக்கப்படுகின்றது. பெருமளவில் இடது சாரிகள், வலது சாரிகள் என்ற சார்புநிலை இன்று திறனாய்வுகளில் மிகுந்துள்ளன. சில இதழ்களும் இந்த சார்புநிலையினை ஊக்குவிக்கின்றன. சில இதழ்களில் இடம்பெற்றுள்ள திறனாய்வாளர்களின், மதிப்பீட்டாளர்களின் நடையின் இறுக்கம் அறிவார்ந்த நபர்களுக்கு மட்டுமே புரியும் நிலையில் இருப்பது திறனாய்வு பரவலாக்தினைத் தடுக்கின்றது. திறனாய்வின் பயன் அறிவுடை சமூகத்திற்கென்றாலும் தரமான அனுபவ மதிப்புகளைப் பரப்புவது, நூல்களைப் படிக்கும் ஆர்வத்தினைத் தூண்டுவது என்ற நிலையில் எல்லோருக்கும் பொதுநிலையில் இருப்பதே இலக்கிய வளர்ச்சிக்கு சிறந்ததாகும்.
திறனாய்வாளர்கள் படைப்பாளி, வாசகனைத் தாண்டி அறிவையும் அனுபவத்தினையும் கொண்டவர்களாக திகழ்ந்தாலும் அவர்களின் பணி இலக்கிய வளர்ச்சிக்கு, சமூக்கத்திற்கு என்ற நிலையில் தம் பண்டித்தினைத் தாண்டி சமூக நலனில் அக்கறைக் கொள்ளவேண்டும். படைப்பினைப் படிக்கத் தூண்டுவது, படைப்பாளனின் ஆளுமையை வெளிப்படுத்துவது, படைப்பளானின் அனுபத்தினைப் பெறுவதற்கான திறவுக்கோலை அளிப்பது என்ற நிலையில் இன்றைய திறனாய்வுகள் மேலும் சிறப்பாக விளங்கவேண்டியதுள்ளது. இலக்கிய இதழ்களில் திறனாய்வுக் கட்டுரை எழுதும் சில எழுத்தாளர்கள் நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதும் பொழுது அதற்கேற்றவாறு மொழிநடையினை மாற்றியெழுதுவது மக்களுக்கு திறனாய்வுப் போக்கினை பரவலாக்கத் துணைப்புரிகின்றது.
படைப்பாளர்களின் நிலையிலும் மற்ற படைப்பாளர்களின் படைப்பினை ஊக்குவிக்கும் தன்மை இன்று குறைந்துள்ளது. நல்ல இலக்கியம் – நச்சு இலக்கியம், பண்டிதம் – நவீனம், ஜனரஞ்சகம் – நவீன பரிசோதனை என்ற முரண்கள் இன்றும் திறனாய்வில் விரவுகின்றன. கல்வியாளர்களே இன்று பெரும்பாலும் தரமான திறனாய்வாளர்களாகத் திகழ்வதாகக் கொள்ளலாம். (அ.மார்க்ஸ், க.பஞ்சாங்கம், எஸ்.இரமகிருஷ்ணன் போன்றவர்கள்) அவர்களின் வாசிப்பறிவும், மொழிப்புலமையும் அவர்களுக்கு திறனாய்விற்கான பெருந்துணைப்புரிகின்றன.
சமகாலத் திறனாய்வு புத்தகங்களும் இன்று பெரும்பாலும் திறனாய்வுக் கட்டுரைகளின், உரைகளின், கடிதங்களின் தொகுப்புகளாவே உள்ளன. சில புத்தகங்கள் ஒரு பொருண்மைக் குறித்த ஆழமானத் திறனாய்வினைக் கொண்டுள்ளன. அதில் பெரும்பாலானவை தமிழின் சங்க இலக்கியப் பொருண்மையே கொண்டவையாக அமைந்துள்ளன. இந்நிலை திறனாய்விற்குக் காலம் தடையாக இருக்கக்கூடாது என்ற கூற்றினை மெய்ப்பிக்கின்றன. சில இசங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் பெருமளவில் பொருந்துவதாக சங்க இலக்கியம் அமைந்திருப்பது இதற்குரிய காரணமாகும்.
தமிழின் சமகால இலக்கியங்களே இன்றைய திறனாய்வின் பேசுபொருளாக இருந்தாலும் திறனாய்வு புத்தகங்களில் கட்டுரைகளாக மட்டுமே அதன் திறனாய்வுகள் இடம்பெறுகின்றன. சில புத்தகங்களின் திறனாய்வுக் கட்டுரைகள் மதிப்புரையளவிலேயே இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான திறனாய்வுகள் சிறுகதைகள், கவிதைகள் சார்ந்தாகவே அமைகின்றன. (எஸ்.இரமகிருஷ்ணனின் ‘வாசகபர்வம்’, ‘காஃப்கா எழுதாத கடிதம்’, ‘நாவலெனும் சிம்பொனி’, ‘கதா விலாசம்’, ‘கதைகள் செல்லும் பாதை’, ‘காற்றில் யாரோ நடக்கிறார்கள்’, சாரு நிவேதிதாவின் ‘எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது’, ‘கலகம் காதல் இசை’, செ.சதீஸ்குமாரின் ‘திராவிடச் சாதி’, மு.ஜீவாவின் ‘கலைஞர் ஜீவாவின் எழுத்துக்கள், பெ.சுமதியின் ‘சங்க இலக்கியம் காதா சப்தபதியில் பெருந்திணைக் கோட்பாடுகள் – ஒப்பியல் பார்வை’, சாரு நிவேதிதாவின் ‘தாந்தேயின் சிறுத்தை’, கோவை ஞானியின் ‘ஞானியின் படைப்புலகம்’, இரா. வானதியின் ‘சூர்யகாந்தன் நாவல்களில் சமுதாயப் பார்வை’, சுப.குணசேகரனின் ‘தலித் இலக்கியம் வரலாற்றுப் புரிதல்’, ஈரோடு அறிவுக்கன்பனின் ‘கம்பன் ஊட்டிய ஆரிய நஞ்சு’, வை. இரமகிருஷ்ணனின் ‘கானா பாடல்கள் : சென்னை அடித்தள மக்களின் வரலாறு’, ஆர்.ஆர் சீனிவாசனின் ‘ஜான் ஆபிரகாம்’, செ.ரவிசங்கரின் ‘புதுமை இலக்கியப் பெட்டகம்’, எஸ்.செந்தில்குமாரின் ‘எங்கே செல்கிறது தமிழ்க்கவிதை’, ஜெயமோகனின் ‘இவர்கள் இருந்தார்கள்’, ‘நாளும் பொழுதும்’, கமலபாலாவின் ‘படைப்புகளின் வழியே பஷீர்’, வெளி ரங்கராஜனின் ‘புத்தகங்கள் பார்வைகள்’, விக்ரமாதித்யனின் ‘பின்னை புதுமை’, ஜெயமேகனின் ‘எழுதும் கலை’, ‘இலக்கிய முன்னோடி’, ‘அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்’, கலாப்பிரியாவின் ‘பாடலென்றும் புதியது’, சக்திஜோதியின் ‘சங்கப் பெண்கவிதைகள்’, ஜிவாவின் ‘மறக்கமுடியாத எழுத்துலகம்’, செந்தமிழ்த்தேனியின் ‘மணிரத்னம் அழகியல்’, கலாப்பிரியாவின் ‘அன்பெனும் தனி ஊசல்’, பி.டேவிஸின் ‘தேசியம் மற்றும் மார்க்சியக் கோட்பாடுகள்’, து.மூர்த்தியின் ‘தமிழியல் புதிய தடங்கள்’, பழ.கருப்பையாவின் ‘கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு’, கலைஞானத்தின் ‘சினிமா சீக்ரெட்’, கங்கை அமரனின் ‘பண்ணைப்புர எக்ஸ்பிரஸ்’, மணிமாறனின் ‘கதைகளின் கதை’, டி.வி. பாலகிருஷ்ணனின் ‘எம்.கே.டி. பாகவதர்’, சித்ரா கோபியின் ‘ஞாபகம் வருதே’, நா.மம்மதுவின் ‘என்றும் தமிழிசை’ போன்ற நூல்கள் பலவகையான பொருண்மைகளில், அளவுகோல்களில் திறனாய்வினை மேற்கொள்கின்றன. இதில் இலக்கியத்தினை அனுபவத்தி விதிவரு முறையில் செய்யப்பட்ட திறனாய்வுகளே அதிகமெனலாம். தமிழில் வெளிவரும் தி இந்து போன்ற நாளிதழ்களும் நாளிதழில் வெளிவந்த விமர்சன உரைகளை தொகுத்து புத்தகமாக தந்திருப்பது சிறந்த ஆவணமாகும். எஸ்.இராமகிருஷ்ணனின் ‘வீடில்லா புத்தகங்கள்’, வா.இரவிக்குமாரின் ‘இசைமேடையில் பெண்கள்’ போன்ற புத்தகங்கள்.
கலை கலைக்காகவா? இல்லை மக்களுக்காகவா? என்ற வாதம் இன்றும் தொடர்கின்றது. கலைக்காக என்று கொள்பவர்கள் தம் படைப்புகளை செறிவாக்குவதற்கோ, திறனாய்வதற்கோ தயாராக இல்லை. பிரதியை மேம்படுத்தும் போக்கு இன்றும் நம் தமிழிலக்கியத்திற்கு எட்டவில்லை என்றே சொல்லலாம். மேலைநாடுகளில் பிரதியை மேம்படுத்துகின்ற நுனவைழச களே பெரும்பாலும் திறனாய்வாளர்களாக இருக்கின்றனர். பிரதி மேம்படுத்தலுக்குப் பிறகு வெளிவரும் படைப்புகள் தரம் மற்றும் பயனுடையனவாக விளங்குகின்றன. தம் அனுபவத்தினை வாசகனுக்கு உணர்த்த சிறந்த கலைவடிவம் இன்றியமையானதாகும்.
படைப்பினை மற்றவர்கள் பிரதிமேம்படுத்துவதோ? மேலைநாட்டு இசங்களைப் பொருத்திப் பார்ப்பதோ அதன் தரத்தினை, இயல்பினை சிதைப்பதாகாதா என்ற வினா இன்றும் எழுந்தவண்ணமே இருக்கின்றது. இலக்கியத்தினை வளர்ப்பது, கலை மக்களுக்காக என்ற நிலைகளில் இந்த உணர்வுகளைப் பொறுத்துக்கொள்ளவது அவசியமாகும். திறனாய்வாளன் படைப்பின் குறைகளை சுட்டலமா? கூடதா? என்ற வினா இன்றும் எழுகின்றது. குறைகளைச் சுட்டப்படாமல் போனல் படைப்பாளனின் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாமல் போகும். ஆனால் குறைகள் சுட்டப்படும்போது அது சார்பில்லாத நிலையில் இருந்தால் மட்டுமே படைப்பாளனால் ஏற்றுக் கொள்ளப்படும். இன்று பெரும்பாலான மதிப்புரை, திறனாய்வுரைகளில் குறைகள் சுட்டப்படுவதில்லை. (தான் எழுதிய சிறுகதையினை 60 முறை திருத்தி எழுதி அதை வெளியிட்ட லா.சா.ரா போன்றவர்களும், படைப்பினை எடீட் செய்வது நம்மை நாமே எடீட் செய்வதைப்போல என்று கருத்துரைப்பவர்களும் இன்றும் தொடர்கின்றனர். தமிழினி வசந்தகுமார் போன்ற பதிப்பகத்தாரும் இன்று சிறந்த படைப்புகளை செப்பனிட்டு அளிக்கின்றனர். தனது ‘ஆழி சூழ் உலகு’ நூலினை தமிழினி வசந்தகுமார் படித்து சீர்மைசெய்ததாக ஜோ.டி.குரூசின் அனுபவம் இங்கு நோக்கத்தக்கது) நேரடியாகக் களஆய்வு மேற்கொண்டு திறனாய்பவர்கள் இன்று மிகவும் அருகிவிட்டனர். ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருக்கும் திறனாய்வாளர்கள் குறிப்பாக ஆங்கிலப்புலமை கொண்டவர்களால் மேலைநாட்டு இலக்கியங்களை ஒப்பிட்டு திறனாய்வு செய்யும் ஒப்பியல் திறனாய்வு இன்று கணிசமாக கூடியுள்ளது. இசங்களைப் பயன்படுத்தும் போக்கும் இவர்களுக்கு எளிமையாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.(களஆய்வு மேற்கொண்டு படைப்பினைப் படைக்கின்ற படைப்பாளர்களும் இன்று குறைவே. இராஜம் கிருஷ்ணன், அருணன் போன்றவர்கள் இன்று நினைத்தெண்ணிப் போற்றத்தக்கவர்கள். களஆய்வு மேற்கொண்டோ, தாம் வாழ்ந்த சூழலோடு கூடியதாக அமைந்திருக்கின்ற படைப்புகள் வாசகனுக்கு சிறந்த அனுபத்தினை அளிக்கின்றது.)
இணையவழியில் இன்று திறனாயும் போக்கு இன்று பெருகியுள்ளது. இணைய இதழ்கள், வலைப்பூக்கள், இணையதளம் புலனம் போன்ற இணையக் கூறுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் திறனாய்வுகள் இன்று பெருகியுள்ளன. பரவலாக்கம், பயன்பாட்டு எளிமை போன்ற தன்மைகளால் இன்று இது பரவலடைந்துள்ளது. இணையஇதழ்கள் இணைய வழியான திறனாய்விற்குப் பெரும்பாங்காற்றுகின்றன. பெரும்பான்மையான இணைய இதழ்கள் ‘திறனாய்வு கூடம்’ என்ற தலைப்பில் திறனாய்வுகளை வரவேற்பது இங்கு போற்றத்தக்கது. இன்றைய அறிவியல் வளர்ச்சி, உலகளவிய தகவல் பரப்பு, புலம்பெயர்வு போன்றவற்றால் தமிழ்த்திறனாய்வு பெற்றுள்ள சர்வதேசப் பண்புகளை வெளிப்படுத்த இணைய சிற்றிதழ்கள் பெரும்பங்காற்றுகின்றன.(மின்னம்பலம், சொல்வனம்.காம், திண்ணை, பதிவுகள், அப்பால் தமிழ், தமிழ்க்காவல், தமிழ்கூடல், ஆறாம்திணை, தமிழ் தமதி, கணியன், முத்துக் கமலம், கீற்று, தமிழோவியம், மரத்தடி.காம், தமிழ்சிகரம்.காம், இதயநிலா, தமிழ்விசை, மனஓசை, தமிழ் சினிமா, திசைகள், நிலாச்சாரல் போன்ற மின்னிதழ்கள் வானத்து விண்மீன்களைப் போல பெருகி ஜொலிக்கின்றன. இதில் கனடாவிலிருந்து வெளிவருகின்ற வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘பதிவுகள்’ போன்றவை சிறப்பான கட்டுரைகளை வெளியிடுகின்றது. கீற்று போன்ற மின்னிதழ்களும் சிறப்பான திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிடுகின்றன)
இணைய இதழ்கள் வியாபார நோக்கில்லாமல் அமைந்திருப்பது திறனாய்வு சார்ந்த சார்பு நிலையினைத் தவிர்க்க ஏதுவாகிறது. இதில் ஆய்வுரையைப் பதிவிடுவது மிகவும் எளிமையானது. இன்று பெரும்பான்மையான அச்சு இதழ்களும் மின்னிதழ்களாகப் பதிவேற்றப்படுகின்றன. அச்சு இதழ்களில் எழுதும் விமர்சகர்களும் தனது கட்டுரைகளை தமது இணையப்பக்கத்தில் பதிவேற்றிக்கொள்வது படிப்பவர்களுக்கு மிகவும் எளிமையானதாக உள்ளது. இன்று இணைய இதழ்களின் பெருக்கத்தால் வாகர்களுக்கு பரிச்சியமான சில இதழ்கள் தவிர பெரும்பான்மையான இதழ்கள் இருப்பதே தெரியாத நிலையில் உள்ளன. அதில் வெளிவரும் படைப்புகள் வாசகர்களுக்கு சேராமல் போகின்றன. இது சார்ந்த நல்ல விழிப்புணர்வு தேவைப்படுகின்றது. இணையவழி வெளிவருகின்ற திறனாய்வுக் கட்டுரைகள் பெரும்பாலும் மதிப்புரையாகவே உள்ளன. சில திறனாய்வுரைகள் ஆழமின்றி மேம்போக்காக இருக்கின்றன. ஆனால் பெரும்பாலன இதழ்கள்; மிகச் சிறப்பான கட்டுரைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆய்வேடுகள், கருத்தரங்குகள், ஆய்வுத் தொகுப்புகள் போன்றவை சமகாலத்தில் சிறப்பாக ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. கடமைக்கானதாகவே விளங்குகின்றன. தமிழில் சிறந்த திறனாய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படும் மேலைநாட்டவரின் திறனாய்வுக் கோட்பாடுகளை முழுவதுமாக கற்றுத்தேராமல் மேலைநாட்டின் மாணவர் ஒருவரால் இலக்கியத்தில் முதுகலை பட்டத்தினைப் பெறவியலாது. ஆனால் இங்கு அந்தநிலை இல்லை. தரமான படிப்போ, நெறிகாட்டுதலோ இல்லை. இதனால் வருங்கால ஆய்வாளர்கள், திறனாய்வாளர்களின் தரம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. எனினும் சில அரசு நிறுவனங்கள் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளோடு இணைந்து நடத்துகின்ற கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் தரமானதாக, மாணவர்களுக்கு படைப்பின்மீது ஆர்வத்தை ஊட்டுவதாக அமைந்திருக்கின்றன. இன்று பல்கலைக்கழகங்களில் இலக்கியம் சார்ந்த ஆய்வுகளில் ஆய்வுத்திருட்டு போன்றவற்றைத் தடுப்பதற்காகன மென்பொருளையும், ஆய்வுத் தரத்திற்காக ஆய்வுக்குழுவினையும் அமைத்திருப்பது தரமான ஆய்வுகளுக்காக வழிவகுக்கின்றன. இந்த நிலை மேலும் தரமுடன் தொடரவேண்டும்.
இன்று வாசகர்களால் விரும்பி வாசிக்கப்படுகின்ற, குறைகளை சுட்டிக்காட்டி மதிப்பிடுகின்ற திறனாய்வாக திரைப்படத் திறனாய்வு விளங்குகின்றது. தமிழின் தினசரிப் பத்திரிகை முதல் சிற்றிதழ்கள், மின்னிதழ்கள் வரை திரைப்படத் திறனாய்வினை சிறப்பாகவே மேற்கொள்கின்றன. திரைப்படத் திறனாய்விற்கான திறனாய்வுப் புத்தக்கங்களும் வெளிவந்திருக்கின்றன. இன்றைய தமிழ்த் திறனாய்வர்கள் தம் புத்தகங்களில் திரைப்படத்திறனாய்வினையும் தவறாமல் சேர்த்திருக்கின்றனர். இது பெரும்பாலும் இலக்கியத்தரம் வாய்ந்த தமிழ் மற்றும் பிறமொழி திரைப்படங்களின் மீதானதாக விளங்குகின்றன. இத்தகுத் திரைப்படத் திறனாய்வுகளைக் கண்டு திரைப்படம் பார்பவர்களின் எண்ணிக்கை இன்று பெருகியுள்ளது குறிப்பிடத்தக்கது. (லென்ஸ் (பி.பி.சி), ‘டுலெட் விமர்சனம் (விகடன்), பச்சைப் புத்தகம் (காலச்சுவடு), புளு சட்டை (இணைய திரைப்பட காணொளி விமர்சனம்) போன்றவை)
சமகாலத் திறனாய்வில் திறனாய்வுரைகள் தரம் கொண்டவையாக, பயன்நிறைந்தவையாக விளங்குகின்றன. இலக்கிய அமைப்புகள் நடத்தும் இலக்கியச் சந்திப்புகளில் பேசப்படும் திறனாய்வுரைகள் ஆக்கம் நிறைந்தாகவும், விவாதிக்கும் சூழல் கொண்டதாகவும் அமைகின்றன. இணையத்திலும் பல திறனாய்வு உரைகள் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒருசிலரின் உரைகள் ஆழமாக படைப்பின் திறனாய்கின்றது.
இலக்கிய சந்திப்புகளில் விவாதிக்கப்படும் செய்திகள் பதிவுசெய்யப்படாமல் போவது சமகாலத் திறனாய்வுலகிற்கு இழப்பாகும். தமிழிதழ்கள் இத்தகு விமர்ச்சன உரைகளை அச்சிட்டு தொகுப்பதாற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இன்று வெறும் செய்தியளவில் மட்டுமே இலக்கியச் சந்திப்புக் கூட்டங்கள் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. சில நாளிதழ்கள் இது பற்றிய விரிவான தகவலை வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. (பவா செல்லதுரையின் கதைகேட்க வாங்க போன்ற காணொளித் திறனாய்வுகள் குறிப்பிடத்தகுந்தவை. பல இலக்கிய சந்திப்பின் உரைகளும் பதிவேற்றப்பட்டுள்ளன. யுடியூப் இணையத்தளத்திற்குச் சென்று தேடுபொறிமூலம் எந்த பொருண்மைக்குரிய உரையினைக் கேட்கவேண்டும் என்பதைத் தேடியெடுத்து அதை சொடுக்கி அவ்வுரையினைக் கேட்கலாம். அதுசார்ந்த பின்னூட்டத்தினை அளிக்கின்ற வாய்ப்பினையும் இது கொண்டுள்ளது)
ஆய்வியல் நிலையிலான திறனாய்வுடன் மேலைநாட்டு திறனாய்வு முறையினை தமிழுக்கு அறிமுகப்படுத்திய ‘செல்வகேசவராயர்’, இரசனை முறைத் திறனாய்வின் முன்னோடி ‘டி.கே.சி’, ஒப்பியல் திறனாய்வை தமிழில் அறிமுகப்படுத்திய பாரதியார், தன் சமகாலத்தவரான பாரதியின் படைப்பினை திறனாய்விற்குட்படுத்திய வ.வே.சு அய்யர், நவீன படைப்பிலக்கியத்தையும், திறனாய்வினையும் ஊக்குவித்த ‘புதுமைப்பித்தன்’, உடனிகழ்வுக்கால திறனாய்வு முறையின் தொடக்கமாகத் திகழும் ‘கண்ணன் என் கவி’ எனும் நூலினை இயற்றிய கு.ப.ராஜகோபலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), இரசனை முறைத் திறனாய்வினை உரைநடையில் புகுத்திப்பார்த்த கா.நா.சு, இலக்கியத் திறனாய்வை அறிவியல் முறையில் கொண்டுசென்ற நா.சஞ்சீவி, மார்க்சிய திறனாய்வாளர்களான ‘எஸ்.வி.ராஜதுரை’, ‘ஜீவானந்தம்’, ஜெயகாந்தன், ‘கோவை ஞானி’, ‘ஸ்ரீ பாலசுப்பிரமணியம்’, ‘ஆ.மார்க்ஸ்’, ‘ஆ.சிவசுப்பிரமணியம்’, ‘முத்துமோகன்’, ‘இரா. மோகன்’ தமிழிலக்கியங்களை மறுவாசிப்பிற்குட்படுத்தும் ‘தி.சு. நடராஜன்’, ‘முருகேசப்பாண்டியன்’, மேலும் தொடர்ந்து திறனாய்வுத்துறையில் தடம் பதிக்கின்ற ‘சிற்பி பாலசுப்பிரமணியம்’, ‘இந்திரன்’, ‘வி.அரசு’, ‘இ.மறைமலை’, ‘பாவண்ணன்’, ‘வெங்கட்ராமன்’, ‘ஆனந்த குமார்’, ‘பூரணச்சந்திரன்’, ‘சி.ஆர்.இரவீந்திரன்’ திறனாய்வு நூல்களை இயற்றிய அ.ச.ஞானசம்பந்தன், தி.சு.நடராசன், க.பஞ்சாங்கம், போன்றோர் சமகாலத் தமிழ் திறனாய்விற்குப் பங்காற்றியவர்கள்.
இன்றைய நிலையில் வாசிப்புத் தன்மை பெருமளவில் குறைந்து வருவதற்கு திறனாய்வாளர்களும் பொறுப்பேற்கும் தார்மீகம் உள்ளது. நல்லப் படைப்புகளை, படைப்பின் தரத்தை, படைப்பாளனின் ஆளுமையை வாசக உலகிற்கு சுட்டிக்காட்டும் கடப்பாடுடையவர்கள் திறனாய்வாளர்கள். தரமானப் படைப்புகளை உருவாக்குவதும், தரமான படைப்புகளை வாசிக்கத் தூண்டுவதும் திறனாய்வாளர்களால் சாத்தியமே. திறனாய்வளன் என்பவன் எல்லாவிதத்திலும் வாசகனைக் காட்டிலும், படைப்பவனைக் காட்டிலும் சிறந்தவனாக இருக்கவேண்டும். இதற்கான அறிவு, பயிற்சி, அனுபவம் ஆகியவற்றினைக் கொள்ளவேண்டும். திறனாய்வு இலக்கியத்தினை வளர்க்கின்றதா? என்ற வினாவிற்கு என்றும் ஆம் என்ற விடையினை உரக்கக்கூறும் நிலை வலுப்பெறவேண்டும்.
துணை நின்றவை
‘திறனாய்வுக் கலை’, தி.சு. நடராசன்.
நேர்காணல் பேராசிரியர், திறனாய்வாளர் மா. நடராசன்.
நேர்காணல், பேராசிரியர் எம். ஏ. சுசீலா.
*கட்டுரையாளர்: முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முக கலை,அறிவியல் கல்லூரி, கோவை.