தமிழ்மொழிச் சிக்கல்கள்
உலகில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் சில கருத்தைத் தம் இனத்திற்குத் தெரிவித்துக் கொள்ளும் தன்மை பெற்றுள்ளன. கோழி ஒருவித ஒலியை எழுப்பிக் குஞ்சுகளை உணவுண்ண அழைக்கின்றது. பருந்து தன் குஞ்சுகளைத் தாக்கவரும் போது, வேறுவிதமான ஒலியை வெளிப்படுத்தி அவற்றைப் புலப்படுத்துகின்றது. இவை எண்ணத்தை வெளிப்படுத்தும் முறையில், இவ்வகை ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. ஆயினும் இவற்றை மொழி என்று கூறுவதற்கில்லை. மொழி வளர்ச்சிக்குரியது. புதிய சிந்தனைகளை அறிவிக்கும் தன்மையுடையது. படைப்பாற்றலுக்கு இடம் தருவது. இலக்கியம் தோன்றும் சிறப்புடையது. பறவை, பாலூட்டி ஆகியவற்றின் ஒலிக்குறிகள் இத்தகைய சிறப்புகளைப் பெறவில்லை. உள்ளம், உடல் என்ற இவற்றின் துணையால் மொழி பிறக்கிறது. உள்ளத்தின் போக்கும் உடற்கூறும் எல்லா மனிதருக்கும் ஒத்திருப்பதில்லை. எனவே அவர்கள் பேசும் மொழியில் வேறுபாடு தோன்றும். எனவே மொழியின் சிக்கல் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.