இலங்கை அரசு
கம்பர் தன்னுடைய காப்பியத்தில் இலங்கையை ஆண்ட அசுரர்கள் ஒழுக்கக்கேடானவர்கள்; பிறரைத் துன்புறுத்துபவர்கள்; புலால் உண்பவர்கள்; கள் குடிப்பவர்கள்; அறத்தை மறந்தவர்கள் என எதிர்மறையான செயல்களைச் செய்பவர்களாகவே இருந்தார்கள் என்று கூறுகின்றார்.
இலங்கை அரசின் குறைபாடுகள்
இராவணன் தேவர்களைச் சிறைபிடித்தலும், இந்திரனை வென்றதும், தேவமகளிரை ஏவலர்களாக ஆக்கியதும் போர் தொடர்பான நிகழ்ச்சிகள். இவைகளை வைத்து இராவணன் தவறானவன் என்று கூறிவிடமுடியாது. அயோத்தியில் தயரதனும் சம்பராசுரன் மேல் போர் தொடுத்துள்ளான். அரசர்கள் போர் தொடுப்பதும், அதில் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும் இயல்பான நிகழ்ச்சிகள். எனவே, போர் புரிவதைப் பெரியகுற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
ஆனால் இராவணன், சீதையைக் கவர்ந்து சென்றதும், அவள் மீது ஆசை கொண்டதும் பெரிய குற்றமாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது.
இலங்கையில் வாழ்ந்த ஒரு சாதாரணக் குடிமகன் இச்செயலைச் செய்திருந்தால் அது குற்றம் என்ற அளவில் பேசப்பட்டு, அத்தோடு முடிந்துபோயிருக்கும். ஆனால் ஒரு நாட்டின் மன்னன் அந்தத் தவறைச் செய்யும்போது குற்றத்தின் கடுமை அதிகமாகின்றது. இராவணன் செய்த இந்தச் செயலை, அரசவையில் உள்ளவர்களும், உறவினர்களும் எவ்வாறு விமர்சனம் செய்கிறார்கள், அவற்றை இராவணன் எவ்வாறெல்லாம் எதிர்கொள்கிறான் என்பதை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
அரசவையில் இராவணன் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகள்
சீதையைத்தேடி அனுமன் இலங்கைக்கு வருகிறான். அப்போது இராவணன் மகனான இந்திரசித்து அனுமனை சிறைபிடித்து, அரசவைக்குக் கொண்டு வருகிறான். அனுமன் இலங்கையில் செய்த அழிவுகளைக்; கேட்டு, அவனைக் கொல்ல இராவணன் ஆணையிடுகிறான். உடனே அங்கிருந்த வீடணன், “தூதரைக் கொல்லுதல் அறமன்று; அவ்வாறு செய்தால் நம் அரசாட்சிக்குப் பழியே வந்து சேரும்” என்று கூறியதும் இராவணன், “நல்லது உரைத்தாய் நம்பி” என்று கூறி, வீடணன் கூற்றை ஏற்றுக் கொள்கிறான்.
இராவணன் எல்லையற்ற சினத்தை உடையவனாய் இருந்தாலும், தன் தவறைச் சுட்டிக்காட்டியதும் அதைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற இயல்பு இராவணனின் சிறந்த குணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இலக்குவன் காட்டில் சூர்ப்பனகையின் மூக்கினை அரிந்து, பங்கப்படுத்திவிடுகிறான். உடனே, சூர்ப்பனகை இராவணனிடம் வந்து புலம்புகிறான். அதைக்கேட்ட இராவணன் பெருஞ்சினம் கொண்டாலும், மிக நிதானமாக ஒரு கேள்வியைக் கேட்கிறான்.
“நீயிடை இழைத்த குற்றம் என்னை கொல்
நின்னை இன்னே
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து
அவர் கொய்ய?” என்றான். (கம்பராமாயணப் பாடல்கள்: 3132)
தன் தங்கையின் நிலைகண்டு, கோபம் கொண்ட போதும்; நீ என்ன குற்றம் செய்தாய்?” என்று நடுநிலையோடு கேட்பதன் மூலம் அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், குற்றம் கண்டவுடன் அதைக் கண்டிப்பட்டது. இராவணன் குல மரபாக இருந்திருக்கிறது.
இராமன் வானரப்படையுடன் இலங்கைக்கு வந்து விட்டான். இதனை அறிந்த இராவணன், தன் மந்திராலோசனை சபையைக் கூட்டி, போரை எதிர்கொள்ளும் முறைகள் பற்றிப் படைத்தலைவர்களுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்துகிறான்.
அப்போது, அரசவையில் இருந்த அனைவரும் போருக்குக் காரணமாக இராவணன் ஒரு நாட்டின் அரசன் என்றபோதும், அவன் செய்த மாபெரும் தவறினைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார்கள். சிலர் கடுமையான மொழிகளாலும், வெகு சிலர் மென்மையாகவும் இராவணனைத் தாக்கிப் பேசுகிறார்கள். அப்போது இராவணன் தன்னைப் பற்றிய விமர்சனத்தை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். அரசன் என்பதற்காகப் பயந்து, வாய்மூடி மௌனமாய் இராமல், இராவணனின் தவறுகளைத் தைரியமாக அவனிடமே எடுத்துரைக்கிறார்கள். அவனும் அவர்களைப் பேச அனுமதித்து, அவர்களது கருத்துக்களைத் தன் மனதுள் வைத்துக்கொள்கிறான். ஒரு சனநாயக நாட்டில் நிலவுகின்ற பேச்சு சுதந்திரம், முடியாட்சி நடைபெறும் இலங்கையிலும் இருந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.
முடிவுரை
இக்காலச் சட்டமன்ற – நாடாளுமன்ற – நிகழ்வுகளில் எதிர்க்கட்சியினர் சிறுபான்மையாக இருந்தாலும், தங்கள் கருத்தை ஆளுங்கட்சி முழுமையாக அங்கீகரிக்காது என்பது தெரிந்த பின்னரும், எதிர்க்கட்சியினர் தம் பக்கத்து நியாயத்தைப் பதிவு செய்வர்.
அதுபோன்ற ஒரு நிலைதான் இராவணன் ஆட்சியிலும் இருந்திருக்கிறது. மக்களுக்குப் பேச்சுச் சுதந்திரம், கருத்து சுதந்திரம் என ஒரு குடியாட்சியில் இருக்க வேண்டிய அனைத்துப் பொதுவுடைமை முறைமகளும் இராவணனது ஆட்சியில் இருந்திருக்கின்றன என்பது தெரிய வருகிறது.
REFERENCES:
- திருக்குறள்
- கம்பராமாயணம் – யுத்த காண்டம்
- கம்பரின் மறுபக்கம் – புலவர் ஆ.பழனி
- புறநானூறு