Kalanjiyam - International Journal of Tamil Studies

ISSN : 2456-5148

உ.வே.சா.வின் பதிப்புக் கூறுகளுள் ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி

முனைவர் ச.கண்ணதாசன்

Keywords:

Abstract:

பழந்தமிழ் இலக்கியப் பதிப்பாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர் உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையர். அவர் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், தலபுராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பல்வகை நூல்களைச் சுவடியிலிருந்து நூல் உருவாக்கம் செய்தார் எனினும், சங்க நூல்களுள், எட்டுத்தொகையில் ஐந்தையும், பத்துப்பாட்டு முழுவதையும் பதிப்பித்துச் சங்க இலக்கியப் பதிப்பு வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தான் பதிப்பிக்கும் எந்த ஒரு நூலையும் வெறும் சுவடியின் படியெடுப்பாக அமைக்காமல் பதிப்பினுள் அந்நூல் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் தருவது உ.வே.சா.வின் தனித்த அடையாளம். நூலாராய்ச்சி செய்து தன்னுடைய பதிப்பை ஒரு தகவல் களஞ்சியமாக வெளியிடும் உ.வே.சா., இந்நூலில் (அ) இவ்வுரையில் வரும் இன்ன கருத்துக்கள் தனக்குப் புலப்படவில்லை என்பதையும் சுட்டிச் செல்வார். அவ்வாறு அவர் குறிப்பிடும் பகுதியுள் ஒன்று ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி’. இவ்வகராதி, அதன் பின்புலம், உ.வே.சா.விற்குப் பின்னாளில் அதில் விளங்கியவை குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இடம் விளங்கா மேற்கோள் அகராதியின் பின்புலம்

உ.வே.சா. பதிப்பிக்கும் ஒவ்வொரு நூலிலும், நூற்தன்மைக்கு ஏற்றவாறு பதிப்புக்கூறுகள் காணப்படும். பதிப்புக் கூறுகள் என்பவை நூலின் உட்கூறுகளே. இக்கூறுகளை அவரே முகப்புப் பக்கத்தில் நிரல்படுத்திக் கொடுத்திருப்பார்.

முகவுரை, நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, திணைகளும் துறைகளும், விசேடச்செய்திகள், உரையின் இயல்பு, அரும்பத முதலியவற்றின் அகராதி, பாட்டு முதற்குறிப்பகராதி, சிறந்தபாடல்களும் பாடற்பகுதிகளும், நூலாலும் உரையாலும் தெரிந்த செய்திகளின் அகரவரிசைப்பட்டியல், நூற்சுருக்கம், உரைச்சிறப்புப்பாயிரச் செய்யுள், இடம் விளங்கா மேற்கோளகராதி, பிழையும் திருத்தமும், குறிப்புரை, சில பிரதிகளில் காணப்படும் பாடல்கள் உள்ளிட்ட சில பகுதிகள் போன்ற பகுதிகளே அவை.

இவற்றுள் ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி’ பத்துப்பாட்டைத் தவிர்த்த பிற நூல்களில் காணப்படவில்லை. பத்துப்பாட்டில் மட்டும் இப்பகுதி இடம்பெறக் காரணம் அதன் உரையாசிரியர் நச்சினார்க்கினியரின் உரைப்போக்கே எனலாம். பின்னாளில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகியவற்றைப் பழைய உரையோடும், பரிபாடலைப் பரிமேலழகர் உரையோடும் பதிப்பித்த பொழுது அவருக்கு ஏற்படாத சிக்கல் பத்துப்பாட்டிற்கு அமைந்த நச்சினாக்கினியர் உரையைப் பதிப்பிக்கும் பொழுது ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை உ.வே.சா., என்சரித்திரத்தில் சிந்தாமணிப்பதிப்பின் பொழுது கூறியவற்றின் வாயிலாக அறியமுடிகிறது. “நச்சினார்க்கினியர் ஒரு விசயத்திற்கோ சொற்பிரயோகத்திற்கோ ஒரு நூற்செய்யுட்பகுதியை மேற்கோள் காட்டுமிடத்தில் அந்த நூற்பெயரைச் சொல்வதில்லை. ‘என்றார் பிறரும்’ என்று எழுதிவிட்டுவிடுகிறார்…அவர் உதாரணங்கள் காட்டும் நூல்களின் தொகுதியே ஒரு தனி உலகமாக இருக்குமோ என்ற மலைப்பு எனக்குத் தோற்றியது. நூற்பெயரையாவது இந்த மனிதர் சொல்லித் தொலைக்கக்கூடாதா? என்று அடிக்கடி வருத்தம் உண்டாகும். ஆனாலும் அந்த மகோபகாரியின் அரிய உரைத்திறத்தின் பெருமையை நான் மறக்கவில்iலை” (2017,பக்.541-542)

சீவகசிந்தாமணிக்குக் கூறிய இக்கூற்று பத்துப்பாட்டிற்கும் பொருந்தும். காரணம் இரு நூல்களுமே நச்சினார்க்கினியரின் உரையோடுதான் வெளிவந்துள்ளன.             நச்சினார்க்கினியரின் மேற்கோளாட்சி மேற்சுட்டியவாறு அமைந்திருந்தாலும், பல்வேறு இடங்களுக்கும் சென்று, பல்வகைச் சுவடிகளைத் திரட்டி, மேற்கோள்களை அரிதிப்பெரும்பான்மை அடையாளங்கண்டு  1889-ஆம் ஆண்டு முதன்முதலில் நச்சினாக்கினியர் உரையோடு பத்துப்பாட்டை உ.வே.சா. வெளியிட்டுள்ளார்.

நச்சினார்க்கினியர் ‘என்றார் பிறரும்’ என்று கூறியிருந்தமை தமிழுலகிற்குப் பேருதவியாக இருந்திருக்கிறது என்றே கூறலாம். காரணம் சீவகசிந்தாமணியில் அவர் சுட்டிய பிறர் யார், எந்த நூல் என்பதை உ.வே.சா. தேடிச்சென்றதன் விளைவே பத்துப்பாட்டு. பத்துப்பாட்டில் சுட்டியதைத் தேடிக்கொணந்தமையின் பலனே எட்டுத்தொகையும் பிறநூல்களும்.

1889-ஆம் ஆண்டு உ.வே.சா.பத்துப்பாட்டை வெளியிட்ட பொழுது, நச்சினார்க்கினியர் உரையில் தன்னால் இனம் காண முடியாத மேற்கோள்களைத் தனித்தலைப்பாக அமைத்து வெளியிடவில்லை. ஆனால் 1918-ஆம் வெளியிட்ட இரண்டாம் பதிப்பில் ‘இடம்விளங்கா மேற்கோள்கள் முதலியவற்றின் அகராதி’ என்று தனித்தலைப்பிட்டு நூலின் இறுதிப் பகுதியில் இவை நச்சினார்;க்கினியரின் மேற்கோள்களில் தன்னால் இனம்காண முடியாதவை என்பதைப் பட்டிலிட்டுள்ளார்.

பத்துப்பாட்டின் இரண்டாம் பதிப்பின் முகவுரையில் அப்பதிப்பு முதற்பதிப்பிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை ‘1889-ஆம் வருடத்தில் இந்நூலும் உரையும்  முதன்முறையாகப் பதிப்பிக்கப்பெற்று நிறைவேறின் பின்பு, திருநெல்வேலியைச் சார்ந்த களக்காடெனும் ஊரிலிருந்து ஸ்ரீமத் சாமிநாததேசிகர் அவர்கள் உதவிய கையெழுத்து மூலப்பிரதியாலும் நாளடைவில் கிடைத்த சில உரைப் பிரதிகளாலும், பலவகையான ஆராய்ச்சிகளாலும் இவை சிலசில திருத்தங்களையடைந்தன. முன்பு விளங்காமலிருந்தவற்றுள் சிலசில விளங்கின” (1918,முகவுரை,ப.IV) என்று இரண்டாம் பதிப்பில் கூறியுள்ளதால் முதற்பதிப்பில் ‘இடம் விளாங்கா மேற்கோள் அகராதி’ சேர்க்கப்படாமல் இருக்கக் காரணமாக அமைந்திருக்கும்.

இடம் விளங்கா மேற்கோள்கள்

இரண்டாம் பதிப்பை தொடர்ந்து 1931 – ஆம் ஆண்டு வெளிவந்த மூன்றாம் பதிப்பிலும் இப்பகுதி இடம்பெற்றுள்ளது. ஆனால் இரண்டாம் பதிப்பினுள் இவ்வகராதியில் 49  இடங்களைச் சுட்டியுள்ள உ.வே.சா., மூன்றாம் பதிப்பினுள் 43இடங்களை மட்டுமே சேர்த்துள்ளார். 2017-ஆம் ஆண்டு உ.வே.சா.நூல்நிலையம் வெளியிட்டுள்ள எட்டாம் பதிப்பிலும் இவ்வெண்ணிக்கை மாறுபடவில்லை. ஆனால் இப்பதிப்பில் ‘இடம் விளங்காத மேற்கோள்களின் முதற்குறிப்பகராதி’ என உ.வே.சா. நூல் நிலையத்தார் தலைப்பை மாற்றியுள்ளனர்.

பத்துப்பாட்டின் இரண்டாம் பதிப்பில் உ.வே.சா. தன்னால் அடையாளம் காணமுடியவில்லை எனக் காட்டிய 49 மேற்கோள்கள் முழுப்பாடல்களாகவும், ஓரிரு பாடல் அடிகளாகவும், உரைநடையாகவும் அமைந்துள்ளன. அவற்றின் தொடக்க வார்த்தைகள் மட்டும் இங்குப் பட்டிலிடப்பட்டள்ளன.

“அஞ்சுமுகந்தோன்றின், அணியிழையார்க்கு, அமைச்சர் புரோகிதர், அரிமாசுமந்தவமளி, ஆடழிக்க, ஆற்றல்சால் கேள்வி, ஆறுசென்றவியர், இக்குதிரை, இடக்கண், இரும்பனைக்கொண்டு, இன்னமொருகால், உப்புறைப்ப, உன்னையொழிய, எண்கோவை, ஏரியுமேற்றத்தினானும், கங்குலு நண்பகலுந், களமடங்க, காக்கக்கடவியநீ, குரவையென்பது, குன்றமெறிந்தாய், கொன்றைங்கருங்காலி, கோடேபத்தர், சார்பினாற் றோன்றாது, சிறுபூளை செம்பஞ்சு, சொல்லென்னும் பூம்போது, ஞாயிறுபட, தன்னையுன்னி, தாம முகுடம், திரைகவுள் வெள்வாய், தூஉத்தீம்புகை, நக்கீரர் தாமுரைத்த, நல்லம்பர் நல்ல, நால்விரன்முடக்கி, நின்குற்றமில்லை, நெடுவரைசந்தன, பரங்குன்றிற், பழுப்புடையிருகை, பெரியவரை வயிரம், பைங்கணிளம் பகட்டின், மண்டமரட்ட, முச்சக்கரமும், முருகனே, முருகுபொருநாறு, வஞ்சியுங்காஞ்;சியும், வண்டடைந்த, வீயாவீண்டும், வீரவேல்” ஆகிய மேற்கோள்கள் வரும் இடங்களைத் தன்னால் இனங்காண முடியவில்லை என்பதைச் சொல்கிறார். மேற்சுட்டிய 49 மேற்கோள்களில் 17 மேற்கோள்கள் திருமுருகாற்றுப்படையில் இடம்பெற்றுள்ளன. அதற்குக் காரணம், திருமுருகாற்றுப்படை அக்காலத்தில் சைவர்களுக்குப் பாராயண நூலாக இருந்தமையே. இதனால் முருக வழிபாடு குறித்த பாடல்கள் அதிகமாகத் தோன்றி, அவை நச்சினார்க்கினியரின் உரையிலும் இடம்பெற்றுவிட்டன.

 

இடம் விளங்கிய மேற்கோள்கள்

இரண்டாம் பதிப்பில் எடுத்துக்காட்டிய 49 மேற்கோள்களுள் ‘களமடங்க,  ஞாயிறுபட,  வாடைநலிய,  இக்குதிரை,  நல்லம்பர் நல்ல, வஞ்சியுங் காஞ்சியும்’  ஆகிய ஆறு  மேற்கோள்களை மூன்றாம் பதிப்பில் உ.வே.சா. நீக்கியுள்ளார். அப்படியானால் நீக்கப்பட்ட ஆறு  மேற்களுக்கான இடங்களை அவர்  விளங்கிக் கொண்டாரா? என்ற வினா எழுகிறது.   விளங்கிதான் நீக்கியிருக்கிறார் என்பதை அவருடைய பத்துப்பாட்டின் மூன்றாம் பதிப்பு உணர்த்துகிறது. மேல் உ.வே.சா.வால் மூன்றாம் பதிப்பில் நீக்கியதாகச் சுட்டிக்காட்டப்பட்ட  ஆறு மேற்கோளுள் ‘இக்குதிரை,  ஞாயிறுபட’ ஆகிய இரண்டும் சொற்றொடர்கள். ‘களமடங்க,  நல்லம்பர் நல்ல,  வாடைநலிய,  வஞ்சியுங்காஞ்சியும்’ எனத்தொடங்கும் நான்கும் செய்யுள்கள். இவை நீக்கப்பட்டதற்கான  காரணங்களை இனிக் காணலாம்.

சிறுபாணாற்றுப்படையில் “எறிந்துரு பிறந்த வேற்றருஞ் சென்னி” எனும் 266-ஆம் அடிக்குரிய விளக்கத்தில் நச்சினார்க்கினியர், ‘‘ஏறுதற்றொழில் அரிதாகிய உருமேறு தான் ஏறுதற்காக இடித்து இடித்து வழியாக்கிப் போன சிகரத்தை உடைய மலை. இக்குதிரை யேற்று அரிதென்ப’’ (1931,ப.177) என்று உரை எழுதியுள்ளார்.  இவ்விளக்கத்தில் ‘இக்குதிரை யேற்று அரிதென்ப’  என்பதற்குப் பொருளும் இடமும் விளங்காததால் இரண்டாம் பதிப்பில் சேர்த்த உ.வே.சா., பின்பு ‘அதியமானுக்குரிய குதிரைமலை ஏற்றம்’  என்பதையே நச்சினார்க்கினியர் ‘குதிரையேற்றம்’  என்று பொருள் கொண்டுள்ளார் என்பதைத் தெரிந்து மூன்றாம்  பதிப்பில்  அதை  நீக்கியுள்ளார்.       அதேசிறுபாணாற்றுப் படையில்   168-ஆம் அடியான “கொல்லை  நெடுவழி  கோபம் ஊரவும்”  என்பதன் உரையில் ‘‘கொல்லையிடத்து நெடிய வழிகளிலே இந்திர கோபம் ஊராநிற்கவும் என்று எழுதிப்பின் இச்செயவெனெச்சமெல்லாம் ஈண்டு நிகழ் கால முணர்த்தியே நின்றன. ஞாயிறுபட வந்தானென்றார் போல’’(1931,ப.177)  என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.  இவற்றுள் ‘ஞாயிறு பட வந்தா னென்றார் போல’  என்பதைப்  பிறரின் கூற்று என உ.வே.சா.  எண்ணியதால் இரண்டாம் பதிப்பில் சேர்த்துவிட்டுப் பின் நச்சினார்க்கினியரே சொந்தமாகக் கூறியதாக இருக்க வேண்டும் என்று எண்ணி 3-ஆம் பதிப்பில் அகராதியில் இடம்பெறச் செய்யவில்லை. ‘ஞாயிறு பட’ என்பதற்கு ‘ஞாயிறு மறைய’ எனும் பொருளில் வந்துள்ளது.

அடுத்ததாகக் ‘களமடங்க’  எனத் தொடங்கும் மேற்கோளை ‘கணனடங்க’  எனத் திருத்திச் ‘சிறுபஞ்சமூலம் 31’ என்று அச்செய்யுள் இடம்பெறும் நூலையும் குறித்துள்ளார்.  இதைப்போல் நெடுநல்வாடையின் இறுதியிலுள்ள ‘வாடை நலிய’எனும் வெண்பா மூன்றாம் பதிப்பில் ‘‘இவ்வெண்பா புறப்பொருள் வெண்பாமாலையில் வாடைப் பாசறைக்கு உதாரணமாகக் காட்டிய செய்யுள்’” (1931,ப.465) என்ற செய்தியை அடிக்குறிப்பாகத் தந்து விளங்கா மேற்கோளகராதியில் இருந்து அதை நீக்கியுள்ளார்.  மீதமிருக்கும் இரண்டு குறிப்பினுள் ஒன்று, “சின்னாள்,  ஆவி னன்குடி அசைதலு முரியன்” (திரு -175-176) எனும் அடியின் விசேடவுரையில் நச்சினார்க்கினியர் காட்டியுள்ள மேற்கோள் பாடல். முன்சுட்டிய அடிக்கு உரை எழுதிப் பின் விசேடவுரையில் ‘‘இனிச் சித்தன் வாழ்வென்று சொல்லுகின்ற ஊர் முற்காலத்து ஆவினன்குடி யென்று பெயர் பெற்றதென்றுமாம்.  அது

“நல்லம்பர் நல்ல முடியுடைத்துச் சித்தன் வாழ்

வில்லந் தொருமுன் றெரியுடைத்து – நல்வரப்

பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்

னாட்டுடைத்து நல்ல தமிழ்’”

என்று ஒளவையார் கூறியதால் உணர்க’ ” (1931,ப.60) என்றும் சிறப்புரை எழுதியுள்ளார்.  இங்கு நச்சினார்க்கினியர் ஒளவையார்  பாடல் என்று சுட்டி இருந்தாலும் இன்னநூல் என்று சுட்டவில்லை.  ஒளவiயின் தனிப்பாடலாக இது இருக்க வேண்டும் என எண்ணி, மூன்றாம் பதிப்பில் இக்குறிப்பை சேர்க்காமல் விடுத்துள்ளார். இதைப்போல் மதுரைக்காஞ்சி உரையின் முதல் பத்தியில் இடம் பெறும் ‘வஞ்சியும் காஞ்சியும் தம்முண் மாறே’எனும் சூத்திரத்திற்குப்  பன்னிருபடலம் என்று நச்சினார்க்கினியர் காட்டிய அடையாளமே போதும் என்று நினைத்து இக்குறிப்பையும் மூன்றாம் பதிப்பில் நீக்கியுள்ளார்.

இவ்வாறு ஆறு மேற்கோள்களை தன்னால் முடிந்த அளவு இனங்கண்ட பின் அதை நீக்கிவிட்டு, மீதமுள்ளவற்றை அடுத்த பதிப்புகளுள் கொடுத்துள்ளார். நச்சினார்க்கினியர் உரையை உ.வே.சா.வைத் தவிர வேறு எவரும் பதிப்பிக்காததால் எஞ்சிய இடங்களை இன்றுவரை கண்டறியமுடியவில்லை. மாறாக பத்துப்பாட்டிற்கு உரை எழுதியுள்ள பொ.வே.சோமசுந்தரனார், வை.மு.கோ. போன்றோரின் உரைகளோடு ஒப்பிட்டு மேலாய்வு செய்யலாம்.

முடிபுகள்

“உ.வே.சா.வின் பதிப்புக் கூறுகளுள் ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி’” எனும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வின் முடிபுகள் பின்வருமாறு அமைகின்றன.

  • பத்துப்பாட்டின் உரையாசிரியரான நச்சினார்க்கினியர் தாம் எடுத்தாண்ட மேற்கோள்கள் இடம்பெற்ற நூல்களின் பெயர்களைச் சுட்டிக் காட்டததன் விளைவே ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி’ எனும் பகுதியை உ.வே.சா. அமைக்க அடித்தளமிட்டது.
  • தன்னால் முடிந்த வரை மேற்கோள்களை அடையாளங்கண்டு அடுத்த பதிப்பில் வெளியிடலாம் எனும் எண்ணத்திலேயே முதற்பதிப்பில் இடம் விளங்கா மேற்கோள் அகராதியை உ.வே.சா. வெளியிடவில்லை என்பதை அவரின் என் சரித்திரம் உணர்த்துகிறது.
  • ‘இடம் விளங்கா மேற்கோள் அகராதி’ எனும் ஒரு தலைப்பை வெளியிட்டதன் வாயிலாக உ.வே.சா.வின் பதிப்பு நேர்மையை அறியமுடிகிறது.
  • இடம் விளங்கா மேற்கோள்கள் திருமுருகாற்றுப்படையில் அதிகமாகக் காணப்படுவதன் வாயிலாக நச்சினார்க்கினியர் காலத்தில் முருகவழிபாடு குறித்த நூல்கள் அதிகமாகப் புழக்கத்தில் இருந்துள்ளமையை அறியமுடிகிறது.