Kalanjiyam - International Journal of Tamil Studies

ISSN : 2456-5148

சங்கஇலக்கியத்தில் பழந்தமிழர் பண்பாடு ( உணவு , உடை ,பழக்கவழக்கங்கள்)

க. முத்துஇலக்குமி

Keywords:

Abstract:

பழந்தமிழர் வாழ்வு நிலம் சார்ந்து அமைந்தது. ஐந்நில வாழ்வே ஐந்திணைகளாக மலர்ந்து மணம் பரப்பியது. இத்தகைய திணை சார்ந்த வாழ்வியலைத் தான் சங்க இலக்கியம் கட்டமைத்துள்ளது. மனிதன் வாழ்ந்த, வாழும் வாழ்வியலைப் பதிவு செய்யும் மூலங்களுள் இலக்கியம் குறிப்பிடத்தக்க ஒன்று. இலக்கியம் மக்கள் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பார் சான்றோர். இலக்கியம் வாழ்வியலை மட்டுமன்று காலத்தையும் பிரதிபலிக்கும், பதிவு செய்யும் சிறந்த ஆவணமாக விளங்குவதற்குச் சிறந்த சான்று சங்க இலக்கியங்களே. மனிதன் தான் வாழும் புவியியற்ச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொள்கின்றான். “வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் அமையும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிபாகும்”.1 சங்கத் தமிழரின் வாழ்வியலை அறிந்து கொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரே ஆதாரமாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. எனவே தான் “பண்டைக் காலத்துத் தமிழ் மக்களுடைய தினசரி வாழ்க்கை நெறியை அவர்கள் இயற்றியுள்ள பாடல்களிலிருந்து ஊகிப்பதே தக்கதாகும் என்று வையாபுரிப்பிள்ளையும் பண்டைத் தமிழரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாகச் சங்க இலக்கியங்களையே குறிப்பிடுகிறார்” 2. மக்கள் வாழ்வியலின் இன்றியமையா கூறுகளான உறைவிடம், உணவு, உடை, தொழில், தெய்வம், மொழி, அரசியலமைப்பு, விருந்தோம்பல், ஒற்றுமை உணர்வு போன்ற பண்பாட்டுக்  கூறுகள்  அமைகின்றன. சங்கத்தமிழரின்  பண்பாட்டுக் கூறுகளுள்  சிலவற்றை மையப்படுத்தியதாக  இவ்வாய்வுரை  அமைகின்றது .

உணவு :

நிலம் சார்ந்து தம் வாழ்வை அமைத்துக் கொண்ட பழந்தமிழர் அந்நிலம் சார்ந்த உணவுப் பொருட்களையே  வாழ்வியல்  ஆதாரமாகக் கொண்டிருந்ததை  சங்க இலக்கியம்  காட்டுகின்றது.

“தேனினர் கிழங்கினர் ஊன் ஆர்வட்டியர்

சிறுகட் பன்றிப் பழுதுளி போக்கி”                         (மலை. 153-54)

எனவரும் மலைபடுகடாம் பாடலடிகள் குறிஞ்சி நிலத்தவரின் உணவு வகைகளான தேன், கிழங்கு, மாமிசம் போன்றவற்றைச் சுட்டுவதாகஅமைந்துள்ளது.

நம் படைப்பைத் தேன்மயங்கு பாலினும்’                (ஐங். 203)

எனவரும் பாடலடி தேன் முக்கிய உணவுப் பொருளாக இருந்ததைக் காட்டுகின்றது.தேன்  சிறந்த மருந்துப்  பொருளாகவும் விளங்கியது. உடும்பு, முயல் இவற்றோடு ஈயலும்  உணவுப்பொருளாக  சங்ககாலத்தில்

பயன் படுத்தப்பட்டிருந்ததை  நற்றிணை முல்லைத் திணைப் பாடல் பின்வருமாறு பதிவு செய்கின்றது.

”உடும்பு கொலீஇ வரிநுணல் அகழந்து

நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி

எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல

பல்வேறு பண்டத் தொடை மறந்து இல்லத்து

இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும்

வன்புலக் காடு நாட்டதுவே” .                                 (நற். 59)

ஈயலைப் புளி சேர்த்துச் சமைத்து உண்ணும் பண்டைத் தமிழர் வழக்கத்தை,

”செம்புற்று ஈயலின் இன்னளை புளித்து”             (புறம். 119:3)

என்றும்,

” ஈயல் பெய்தட்ட இன்புளி வெண்சோறு”             (அகம். 394:-5)

என்றும் பதிவு செய்கின்றது சங்க இலக்கியம். மேலும் பண்டைத் தமிழர் உணவினில்  நண்டும் சிறந்த உணவுப் பொருளாக  அமைந்தது . கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் மட்டுமின்றி வயல் சார்ந்த மருத நிலத்திலும் நண்டு சிறந்த உணவாக விளங்கியதை,

“அலைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு

கவைத்தாள் அலவன் சுவையொடு பெருகுவிர்’ (சிறுபாண்.194-195)

என்ற பாடலடிகள் எடுத்தியம்புகின்றன.

மேலும் காய்கறிகள், பலா, வாழை இவற்றோடு காவுத்தன், சேம்பு, வள்ளி போன்ற கிழங்கு வகைகளும் கீரை வகைகளும் தென்னையின் காய் மற்றும் இளநீர் போன்றவையும்  சங்கத்தமிழரின்  உணவுப் பொருட்களாக  அமைந்திருந்தன. இத்தகைய உணவுமுறை  வழக்கில்  இருந்தமையை,

”தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின்

தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்

வீழ்இல் தாழைக் குழவித் தீம்நீர்

குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம்

திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும்

தீம்பல்தாரம் முனையின் சேம்பின்

முளைப்புற முதிர்கிழங்கு ஆர்குவிர்”        (பெரும்பாண். 355-62)

என்று எடுத்துரைக்கின்றார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்

விருந்தோம்பல்

’ எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே ’     என்றும்

”அல்லிலாயினும் விருந்து வரின் உவக்கும்

முல்லைசான்ற கற்பின் மெல்லியல்”                                            (நற். 142:9-10)

என்றும்  போற்றப்படுவது  பண்டைத்தiமிழரின்  விருந்தோம்பல் பண்பு.

மலைகளில் வாழும் குறவர்கள் வரும் விருந்தினர்களை மகிழ்வுடன் வரவேற்று தாம் சமைத்த மாமிசத்தையும் தினையரிசிச் சோற்றையும் வழங்குவர். பலநாள் உறவுடையவர் போன்று புதியவர்களையும் ஏற்றுக் கொள்வர் என்பதையும் பின்வரும்,

“நும்இல் போல கேளாது கெழீஇ

சேட் புலம்பு அகல இனிய கூறி

பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு

குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர்”        (மலைபடு. 168-169)

என்று மலைமக்களின் விருந்தோம்பல் பண்பினைப் போற்றப்படுகின்றது. தாம் உண்ணும் உணவினை எவ்விதத் தயக்கமுமின்றி வரும் விருந்தினர்க்கு உபசரித்துமகிழும்  இவர்கள் பண்பினை, மலைபடுகடாம்  பாடலடிகள்  உணர்த்துகின்றன.

புளிக்கறி சேர்த்து நெற்சோறும் மான் இறைச்சியையும் தம் குடிக்கு வரும்  அனைவருக்கும் எயிற்றியர் வழங்கும் தன்மை,

“எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு

தேமா மேனிச் சில்வளை ஆயமொடு

ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவீர் ”                (சிறுபாண். 175-77)

என்று சிறப்பிக்கப்படுகின்றது  சிறுபாணாற்றுப்படை . மேலும்

“  சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி

ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்

வறைகால் யாத்தது வயில்தொறும் பெறுகுவிர்” (பெரும்பாண். 131-33)

எனவரும் பாடலடிகள், எயினர் வீடுகளில் ஈந்தின் விதை போன்ற சிவந்த சோற்றினையும் வேட்டை நாய்கள் பிடித்துக் கொடுத்த மாமிசத்தையும் உணவாகப் பெறுவர் என்று எடுத்தியம்புகின்றது.

வரும் விருந்தினர்களுக்குத் தடை இல்லாமல் உணவளிக்க வேண்டும் என்பது பண்டைத் தமிழர் கொள்கை என்பதையும்  பின்வருமாறு  உணர்த்துகின்றது .

”வருநர் வரையார் வார வேண்டு

விருந்துகண் மாறாது உணீஇய பாசவர்

ஊனத்தழித்த வான்நினக் கொழும் குறை

குய்யிடுதோறும் ஆனாது ஆர்ப்ப”                         ( பதிற். 21:8-11)

என்று வந்த விருந்தினர் உண்டு மகிழுமாறு உணவு சமைத்தலை எடுத்துரைக்கின்றது பதிற்றுப்பத்து .  விருந்தினர்க்கு எனச் சமைக்கும் செயலானது அந்தணர் தம் வேள்விக்கு ஒப்பானது என்று சிறப்பிக்கின்றது  இவ்விலக்கியம்.  இதனை,

” நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி”                                 (பதிற். 21:13)

என வரும் பாடலடியால் உணரலாம். விருந்து உபசரித்து மகிழும் இன்பத்திற்கு ஈடானது வேறொன்றும் இல்லை என்று நினைத்த சங்கத்தமிழர் பண்பினை கூகைக்கோழியார்  பாடல் (புறம். 364)  உணர்த்துகின்றது.

ஆடை

சங்ககாலத்தில் ஆடையில் தூய்மையையும் மென்மையையும் விரும்பினர். குறிப்பாக பட்டாடைகள் சிறப்புடையதாகக் கருதப்பட்டன. நல்லியக்கோடனின்  வள்ளல் தன்மையைச் சுட்டவரும் கவிஞர்  அவன் பரிசிலர்க்குக் கொடுக்கும் ஆடையானது மூங்கிலின் உட்பட்டையை உரித்தாலன்ன தன்மையது என்பதை ,

”     ……………… மாசுஇல்

காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ”              (சிறுபாண் 235 -236)

என்று விளக்குகிறார் . மேலும் பாம்புத்தோல் போன்ற மெலிதான ஆடைகள் வழக்கத்தில் இருந்தமையும்  அவற்றில்  பூத்தொழில்  செய்யப்பட்டிருந்ததையும்

” நோக்கு  நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து

அரவுரியன்ன அறுவை நல்கி ”  (பொருநர் 82 -83 )

எனவரும் பாடலடிகள் பதிவு செய்கின்றன.  ஆடைகளில்   பட்டாடை   சிறந்த்தாகக் கருதப்பட்டது.  புரவலர்கள்   தம்மை நாடி வரும்  புலவர்களுக்கும்  இரவலர்களுக்கும் பட்டாடை  அளித்து  சிறப்பித்தமைக்குச்  சங்க இலக்கியம்  சான்றாக விளங்குகின்றது.  இதனை ,

” கொட்டை கரைய பட்டுடை நல்கி ”        (பொருநர் 155)

“ ஆவியன்ன அவிர்நூற் கலிங்கம் ”           (பெரும்பாணா -469)

என்றும்  எடுத்துரைக்கப்படுகின்றது .

ஆடைகள்  மிக நுண்ணிய  நூலினால்  நெய்யப்பட்டிருந்தமையை   மலைபடுகடாம்   பின்வருமாறு   சுட்டுகின்றது.

“ இழை மருங்கு அறியா  நுழைநூற் கலிங்கம் “        ( மலை -561 )

போர்ப்பாசறையில் தங்கியிருந்த ஆண்கள் வெள்ளைத் துணியால் தலையில் தலைப்பாகை கட்டியிருந்தமை  தூய்மையை  விரும்பும்  பணடைத்தமிழரின்  இயல்பினை  உணர்த்துகின்றது.  இதனை

“துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப்

பெருமூ தாளர்”                                                           (முல்லை. 54-55)

என்ற  முல்லைப்பாட்டு  பாடலடிகளால்    அறியலாம் .

மன்றம் :

இனக்குழுச் சமுதாயத்தின் முக்கிய கூறாக மன்றங்கள் அமைகின்றன. ஒரு தலைவன் கீழ் செயல்படும்  குழுவாக  இனக்குழுச்  சமூகம்  அமைவதே  இதற்குக்  காரணம்.  சங்க காலத் தமிழர்  இதுபோன்று மக்கள் ஒன்றுகூடிய இடத்தை ‘மன்றம்’ என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளனர்.

“ …… சிறுகுடி

மன்றம் பரந்தது உரை”                                            (கலி. முல்லை. 2)

என்று கலித்தொகையும்

“தாது எடு மறுத்த கலி ஆழி மன்றத்து

உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து”                (பதிற். 13)

என்று பதிற்றுப்பத்தும் மன்றம் குறித்த செய்திகளைப் பதிவு செய்கின்றது.

 தலைவன் / குறுநில மன்னன்  :

தலைவன் பிறரினின்றும் மாறுபடாமல் சாதரணமாக எளிமையாக எந்தவித ஆடம்பரமும் அற்றவராக அம்மக்களில் ஒருவராகவே விளங்குகின்றார். பண்டைக்  காலத்தில் தலைவர்கள்

“ . . . . . . . என்றும்

இன்சொல் எண்பதத்தை ஆகுமதி – பெரும!”                     (புறம். 140)

என்று புலவர்கள் பாடும் எளிமையுடன் திகழ்ந்தனர். மட்டுமின்றி, தமக்கென் ஆடம்பரமான வீடுகளை அமைக்காமல் பிற வீடுகளைப் போன்றே தாமும் எளிமையாக வாழ்ந்தனர்.  இச்சூழலைக் கருவூர்க் கதம்பிள்ளைச் சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல் பின்வருமாறு  எடுத்துரைக்கின்றது.

“கூதளம் கவினிய குளவி முன்றில்

செழுங்கோன் வாழை அகல் இலைப் பகுக்கும்

ஊராக் குதிரை கிழவ !”                                                      (புறம். 168)

என்று பிட்டகக் கொற்றனின் அழகிய வீட்டு முற்றத்தைச் சிறப்பிக்கின்றார் கவிஞர்.

“ தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை

முயல் வந்து களிக்கும் முன்றில்”                                       (புறம். 328)

என்றும்

“ முன்றில் முஞ்ஞ்சையொடு முசுண்டை பம்பி

பந்தர் வேண்டாப் பலர் தூங்கு நீழல்

கைமான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தென”               (புறம். 320)

எனத் தலைவனின் வாழிடம் குறித்துச் சங்கப் பாடல்கள் பதிவு செய்கின்றன. மேலும் தம் இருப்பிடம் வருவோர்க்கு உணவளித்து வந்த விருந்தினர் உடனிருந்து உண்ணும் இயல்பினர் தலைவர்கள். இதனை,

“உலகு புகழ் திறந்த வாயில்

பலரொடு உண்டல் மரீஇயோயே”                                     (புறம். 234)

என்று பாடுகின்றார் வெள்ளெருக்கிலையார். தலைவனது இல்லமானது பிறர் இல்லம் போன்று எத் தனித்தன்மையும் பெறாமல் காணப்பட்டது என்பதையும், தலைவன் பாணரோடு ஒன்றாகக் கள்ளருந்தி துயில்கின்றான் என்பதை ,

“காட்டொடு மிடைந்த சீயா முன்றில்

நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே

அவன் எம் இறைவன்”                                                         (புறம். 316)

என்ற பாடலால் அறியலாம்.  மேலும் சீறூர் வேந்தன் இயல்பினை,

“இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த

குறுநறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு

புன்பல வரகின் சொற்றியொடு பெறூஉம்

சீறூர் மன்னர் ஆயினும் எம் வயின்

பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே”                                             (புறம். 197)

என்று  எடுத்துக் காட்டுகின்றார் புலவர்.

பகிர்ந்துண்ணல் :

இனக்குழு சமுதாய வாழ்வை மேற்கொண்டிருக்கும் மக்களிடம் பகிர்ந்து உண்ணுதல் என்பது அடிப்படைப் பண்பாக அமைந்துள்ளது. பண்டைத் தமிழரின்  பாகுபாடின்றி பகுத்து உண்ணும்  இப் பண்பைத்தான்

“ தந்துநிறை பாதீடு உண்டாட்டு உயர்கொடை ”

என்னும் நூற்பாவில் தொல்காப்பியர்‘பாதீடு’ என்றுசுட்டுகின்றார். மேலும்

.  சங்க காலத்தில் மன்னார்கள் போரில் பெற்ற செல்வங்களை வீரர்களுக்குப் புலவர்களுக்கும் வாரி வழங்கியதோடு பெருஞ்சோறு படைத்தும் மகிழ்ந்தனர்.

“ சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே

பெரியகட் பெறினே

யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே ”               (புறம். 235:1-6)

என்று தம்மை ஊட்டி மகிழும் அதியமானின் அன்புத் திறத்தைப் பாடுகிறார் ஔவையார். கானவன் அம்பெய்திக் கொணர்ந்த முள்ளம் பன்றியின் மாமிசத்தைக் கொடிச்சி, கிழங்கோடு சிறுகுடியினர் பலருக்கும் பகிர்ந்து அளித்தலை,

“ கானவன் எய்த முளவு மான் கொழுங்குறை

தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு

காந்தள் அம் சிறுகுடிப் பகுக்கும் ”                                                      (நற். 8-10)

என்று நற்றிணைப் பாடல் பதிவு செய்கின்றது. இத்தன்மையில் மதுவாயினும் மாமிசமாயினும் அனைவரும் ஒன்று கூடிப் பங்கிட்டு அக மகிழும் இயல்பினைப் பதிவு செய்கின்றது சங்க இலக்கியம்.

கூட்டுண்ணுதல் :

“இனக்குழு சமுதாயப் பண்புகளில் தலையாயது , பொதுவில் வைத்து உண்ணுதல் என்பது. சங்கப் பாடல்கள் இதைக் கூட்டுண்ணுதல் எனக் குறிப்பிடுகின்றன. சீறூர் மன்னர் சமுதாயத்தின் விருந்து பேணும் பண்பும், ஊரொடு தலைவி பசித்திருந்தாள் என்பதும்இக்கூட்டுண்ணுதலின் எச்சங்கள் ஆகும்”. 3

இப்பண்பினை,

“படைப்புப் பல படைத்து பலரொடு உண்ணும்”     (புறம். 188:1)

“உலகுபுகழ்த் திறந்த வாயில்

பலரொடு உண்டல் மரீஇயோனே”                                    (புறம். 234:6-8)

என்று  புறநானூறும்

“…. சாத்து எறிந்து

அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்

கொடுவில் ஆடவர் படுபகை வெறீஇ”                  (அகம். 167:7-9)

என்று  அகநானூறும் பதிவு செய்துள்ளது.

மது அருந்துதல் :

மதுவருந்துதல் தீதென கருதப்பட்ட இடைக்கால கருத்து புறக்கணிக்கப்பட்டு இன்று நாகரீகத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் இப்பண்பு பண்டைத் தமிழரால் போற்றப்பட்டது என்பதை,

“ உண்டோன் தான் நறுங் கள் ”                              (புறம். 34)

என்று  இனிய  கள்ளை  அருந்தும்  தலைவன்  சுட்டப்படுகின்றான்.

மேலும் பெண்களும் மது அருந்தி மகிழ்ந்தமையை,

“ சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே ”                                               (புறம். 235)

என்று  ஔவையாரும்  பாடுகின்றார்.

“ துடியின் அடி பெயர்த்து தோள் அசைத்துத் தூக்கி

அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின் ”                                    (பரி. 21, 19-20)

என்று நடனமாடும் பெண்கள் மது அருந்தியமையைப் பரிபாடல் பாடல் வரிகள் காட்டுகின்றன.

“இனக்குழு சமுதாயத்தில் கள் முக்கிய இடம் பெற்றது. இறப்பு, பிறப்பு, ஆவேசம் பெறுதல், விழாக்கள் போன்ற பல சந்தர்ப்பங்களிலும் கள் அருந்தினர். ஆடவரும் மகளிரும் கள் அருந்தி ஆடிப்பாடிய செய்திகளை பல சங்கப் பாடல்கள் விவரிக்கின்றன. இது கூட்டு வாழ்க்கையின் ஒரு அம்சமாகும்”.4 சங்க காலத்தில் மதுவின் பல வகைகள் சுட்டப்படுகின்றன. மட்டு, மது, நறவு, தேறல், கள் என்று பல பெயர்கள் மதுவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மது சங்க காலத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உணவாகவே கொள்ளப்பட்டது என்பதை,

”குறி இறைக் குரம்பைக் குரவர் மாக்கள்

வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து

வேங்கை முன்றில் குரவை அயரும்”                                 (புறம். 129:1-3)

எனவரும் முடமோசியார் பாடலும்,

”மகிழ்தால் மரபின் மட்டே அன்றியும்

அமிழ்து அனமரபின் ஊன்மதுவை அடிசில்

வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி”                    (புறம். 390:16-18)

என்று தம் மகிழ்ச்சியில் சுற்றமும் உணவுண்டு கள்ளருந்தி மகிழந்ததையும்

”பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி”            (சிறுபாண். 237)

என்று பாணர்கள் உபசரிக்கப்பட்டதையும் காட்டுகின்றது சங்க இலக்கியம். மேலும் பிட்டங் கொற்றனின் கொடைத்திறம் போற்றும் பாணர் தம் சுற்றத்தாரிடம்,

”ஏற்றுக உலையே ஆக்குக சோறே

கள்ளும் குறைபடல் ஓம்புக”                                          (புறம். 172:1-2)

என்று தம்  மகிழ்ச்சியில்  சுற்றமும்  உணவுண்டு கள்ளருந்தி மகிழ விழைகின்றான். பாணர் மட்டுமல்லாது வீரர்கள், அரசனை நாடிச் செல்வோர், உழவர் என அரசன் முதல்  உழவு செய்யும் உழவன் வரை அனைத்து தரப்பினரிடமும் மது உண்ணும் வழக்காறு இருந்தமையைச் சங்கப் பாடல்களால் அறியலாம்.

ஆநிரை கவர்ந்த மகிழ்விற்கு மட்டுமல்லாது ஆநிரை மீட்ட மகிழ்வினையும் மது அருந்திக் கொண்டாடினர்  பழந்தமிழர். வீரன் ஒருவன் தன்னை நாடி வரும் பாணனை உபசரிப்பதற்காகத் தன் வாளினைப் பணையப் பொருளாக வைத்து கள் பெற்று உபசரித்தமையை மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடிய புறப் பாடலால் (316) அறியலாம். விருந்தினரை உபசரிக்கும் உணவுகளில் கள் முக்கிய  இடம்  பெற்றிருந்ததை,

”விருந்தினன் அளியன் இவன் என, பெருந்தகை

நின்ற முரற்கை நீக்கி, நன்றும்

அரவு வெகுண்டன்ன தேறலொடு சூடுதருபு”                   (புறம். 376:12-15)

என்றும் விளக்குகின்றது  இப்பாடல்.சங்க காலத்தில்  நல்ல மலரிலிருந்து சேகரிக்கப்பட்ட தேறல் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டதோடு   தேவைக்கு  ஏற்ப சமைக்கவும் பட்டது என்பதையும்,  அவர்கள் அதனை உண்டு மகிழ்ந்தனர் என்பதையும் புறநானூற்றுப் பாடல்கள் (396:7-9, 329:1) பதிவு செய்கின்றன.சங்க உணவுப் பொருட்களில் மகிழ்வினை கொடுப்பதற்காக உண்ணப்பட்ட கள்ளினை நாள்தோறும் அருந்தும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தமையையும் சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன.

”நார் அரி நறவின் நாள்மிகிழ் தூங்குந்து”                               (புறம். 400:14)

என்று நலங்கிள்ளியின் உபசரிப்பில் நாள்தோறும் கள்ளருந்தி மகிழ்ந்ததாகக் கோவூர்க் கிழார் பாடுகின்றார்.

கலை உணர்வு :

சங்க காலத் தமிழர் பாணர்களையும், கூத்தர்களையும் போற்றி இசை, கூத்துக் கலைகளை வளர்த்தனர்.

“ கழைபாடு இரங்க பல்லியம் கறங்க

ஆடுமகள் நடந்த கொடுங்புரி நோன்கயிற்று”                 (நற். 95:1-2)

என்றும்,

“துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்

குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த

கொண்டகச் சிறுபறைப் பாணி அயலது

பைந்தாட் செந்தினைப் படுகிளி ஓப்பும் ”                       (நற். 104:3-6)

என்றும் வரும் நற்றிணைப் பாடல் வரிகளில் இசைக்கருவிகள் முழங்க நடனமாடும் தன்மையும், குற மக்களின் பறையோசை கேட்டு தினைக்கதிர் உண்ண வந்த கிளிகள் அஞ்சிய நிலையையும் உணர்த்துகின்றன.

பண்ட மாற்று :

மக்கள் பண்ட மாற்று மூலம் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். பண்டைத் தமிழரின் வாணிபம் என்பது பண்டமாற்றே. பண்டமாற்று குறித்த செய்தி சங்க இலக்கியத்தில் பல இடத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

”தேனெய்யொடு கிழங்கு மாறியோர்

மீனெய்யொடு நறவு மறுகவும்

தீங்கரும்பொரு அவல் வகுத்தோர்

மான் குறையோடு மது மறுகவும்”                         (பொருநர். 214-217)

என்று பத்துப்பாட்டு பதிவு செய்கின்றது. உமணர்கள் கூட்டமாகச்சென்று வெள்ளுப்பைக் கொடுத்து நெல்லும் பிறவும் பெற்றதை,

“கதழ்கோல் உமணர் காதல் மடமகள்

சில்கோல் எவ்வளை தெளிர்ப்ப வீசி

நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்

சேரிவிலை மாறு கூறலின்”                                    (அகம். 140:5-8)

என்றும்,

“குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு

வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி

நெல்லொடு வந்த வல்லாய்ப் பஃறி”                                              (பட்டினம். 28-30)

என்றும் உமணர்கள் தமகுக் கிடைத்த நெல்லைச் சிறு படகுகளில் ஏற்றி கழிகளில் ஓட்டிச் சென்றதைப் பாடுகின்றார் புலவர். சில பொருட்களைப் பணத்திற்கு விற்கும் முறையும் சங்க காலத்தில்  வழக்கில் இருந்தமையை,

“நெய்விலைக் கட்டி பசும்பொன் கொள்ளான்

எருமை நல்லான் கருநாகு பெறூஉம்

மடிவாய்க் கோவலர்”                                                                       (பெரும்பாண். 164-166)

எனவரும் பாடலடிகளால் நெய்க்கு விலையாகப் பசும்பொன் கொடுக்கும் வழக்காறும் இருந்தது என்பதை அறியலாம்.

தீக்கடைதல் :

தொன்மைச் சமூகத்தில் மனிதன் நெருப்பினைக் கண்டறிந்த பின், இரண்டு கற்களை உரசியும், தீக்கடைக் கோலால் கடைந்தும் நெருப்பை உருவாக்கியமையை வரலாறு பதிவு செய்கின்றது. நெருப்புக் குச்சி இன்றி அடர்ந்த காடுகளில் செல்லும் போது நெருப்பை உருவாக்கிக் கொள்ளும் வழக்கம் இன்றும் மலைவாழ் மக்களிடம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. நெருப்பை உருவாக்கும் இத்தன்மை சங்க இலக்கியங்களில் பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குளிர்ச்சிமிக்க மாலைப் பொழுதில் சிறு தீயைப் பெறுவதற்காகத் தீக்கடை கோலால் தீக்கடையும் இடையனின் செயலை,

“புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்

கல்லா இடையன் போல”                                                   (புறம். 331:4-5)

என்று உறையூர் முதுகூத்தனாரின் பாடல் பதிவு செய்கின்றது. மேலும் மழைக்காலத்து மாலை நேரத்தில் பால் விலை கூறும் இடையன் பலவாகிய காலிட்டுப் பின்னிய உறியுடன் தீக்கடைப் கோல் முதலான கருவிகளையும் தன் தோற்பையில் வைத்திருந்தான் என்று விளக்குகின்றது நற்றிணை. இதில் இடையன் எப்போதும் தம்முடன் வைத்திருக்கும் ஒன்றாகத்தீக்கடைக்கோல் இடம்பெற்றிருப்பதைஉணர்த்துகின்றது. இதனைப்   பின்வரும் நற்றிணைப் பாடலடிகள்  எடுத்துக்காட்டுகின்றன.

“வான் இருபு சொரிந்த வயங்கு பெயற் கடைநாள்

பாணி கொண்ட பல்கால் மெல் உறி

ஞெலி கோல் கலப்பை அதனொடு சுருக்கி

பரிப்புறத்து இட்ட பால் தொடை இடையன்”.                   (நற். 142:1-4)

நடுகல் வழிபாடு :

இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுக்கும் முறையினைத் தொல்காப்பியர்,

“ காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் ”                     (புறத். 5)

என்று விளக்குவார். இறந்த வீரர்களை மட்டுமின்றி, இறந்த அனைவரையும் வழிபடும் முன்னோர் வழிபாடு தமிழரிடம் தொன்று தொட்டே வழக்கில் உள்ளது. நடுகல்லிற்கு கரந்தைப் பூச்சூடி வழிபட்டனர் என்பதைப் பின்வரும் ஆவூர் மூலங்கிழார் பாடிய,

“ ……. நறும்பூங் கரந்தை

விரகறியாளர் மரபின் சூட்ட

நிரை இவண் தந்து நடுகல் ஆகிய

வென்வேல் விடலை இன்மையின் புலம்பி ”                (261)

என்ற புறநானூற்று வரிகளால் உணரலாம்.  இறந்தவர்களுக்கு படையல் செய்து வழிபடும் சங்கத் தமிழர் வழக்கை,

“ பிடிஅடி அன்ன சிறுவழி மெழுகி

தம் அமர் ஆதலின் புன்மேல் வைத்த

இன்சிறு பண்டம் யாங்கு உண்டனை கொல் ”                       (234)

என்ற புறநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றது.

“ நடுகல் பீலிசூட்டி நார் அரி

சிறுகலத்து உகுப்பவும் கொள்வன்

கொல்லோ ”                                                          (புறம். 232)

என்று மயில்பீலி சூட்டி கள் வைத்து வழிபட்டமையும் சுட்டப்படுகின்றது. “ புதைக்கப்பட்ட இடத்தின் மீது மிகப்பெரிய கல்லை வைக்கும் அமைப்பினை சங்க இலக்கியம் நெடுங்கல் என்று குறிப்பிடுகின்றது”5 வெறியாட்டு :

அச்சம் தரும் அணங்கு மற்றும் முருகனின் சினத்தினால் நோயுற்ற தலைவிக்கு ‘வெறியாட்டு’ நடத்தும் குறிஞ்சி நில மக்களின்  வழக்காற்றை  ,

“ அருங்கடி வேலன் முருகொடு வளைஇ

அரிக்கூடு இன்இயம் கறங்க நேர் நிறுத்து

கார் மலர்க் குறிஞ்சி சூடி கடம்பின்

சீர்மிகு நெடுவேல் பேணி ”                     (611-14)

என்று  வேலனின்  வெறியாட்டும்,  வழிபாடும்  மதுரைக் காஞ்சியில்  சுட்டப்படுகின்றது.  இதனையே,

“ வேலன் தைஇய வெறி அயர் களனும் ”          (திருமு. 223)

“ வேலன் புனைந்த வெறிஅயர் களந்தொறும் ”(குறுந். 53)

“ நெடுவேல் பேணத் தணிகுவன் இவள் என ” (அகம். 22)

என்றும் சங்கப் பாடல்கள் பதிவு செய்துள்ளன.

பண்டைத்தமிழரின்  இத்தகைய  பண்பாட்டுப் பதிவுகள்  மென்மேலும்  ஆராய்ந்து  அறிதற்குரியன.