புறத்திணைகள் :
அகத்திணை ஐவகை மக்களின் அக இயல்புகளைப் பாடுவது போலவே புறத்திணைகள் குறிப்பிட்ட நில மக்களின் பொதுவான பண்புகளை புறத்தே தெரியும் வீரம், கொடை முதலியவற்றைப் பாடுகிறது. சங்க காலத்தில் இருந்த இரு வகை திணை மரபுகளுள் புறத்திணை மரபும் ஒன்றாகும். தலைவன் தலைவி பெயர்கள் புறத்திணை மரபில் வெளிப்படையாக வரும். புறச்செயல்பாடுகளை யாவரும் அறிய பாடப்படுவதால் இத்திணையில் மறைவாகக் கூறப்படும் செய்திகள் இல்லை.
ஏழு வகை புறத்திணைகளை தொல்காப்பியர் கூறுகிறார். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பன. ஐந்திணைக்கு மலர்களின் பெயர்களைச் சூட்டியது போலவே புறத்திணை வகைக்கு மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவற்றுள் பாடாண் திணைக்கு மட்டும் மலரின் பெயர் சூட்டப்படவில்லை. பிற்காலத்து இலக்கணங்களில் புறத்திணை பன்னிரண்டு வகையாக விரித்துக் கூறப்பட்டன.
1. வெட்சி :
“வெட்சி தானே குறிஞ்சியது புறனே”
என்று கூறும் தொல்காப்பியம் வெட்சித் திணைக்கு 14 துறைகள் உள்ளன என பாடுகிறது. பகை நாட்டு ஆநிரைகளை கவர்ந்து குறிஞ்சி நிலத்து ஊர்ப் பொது தொழுவத்தில் கட்டுவதால் இது குறிஞ்சிக்கு புறத்திணையாயிற்று. குறிஞ்சி நிலத்தாரின் இயல்பான புறச்செயல்களில் தலைமையான புறச்செயல் இது. இனக்குழுச் சமூகத்தின் வாழ்க்கையாகவும் அவர்களில் நாடோடி வாழ்க்கை முறையைக் காட்டுவதாகவும் இது உள்ளது.
2. வஞ்சி :
“வஞ்சி தானே முல்லையது புறனே”
முல்லை நிலத்தின் புற ஒழுக்கம் வஞ்சி ஆக உள்ளது. பிறர் மண் மீது ஆசை கொண்ட மன்னனை எதிர்த்துப் போரிடுவதை கூறுவது வஞ்சித்தி ணையாகும். வஞ்சிக்குத் துறைகள் பதிமூன்று ஆகும்.
3. உழிஞை :
“உழிஞை தானே மருதத்துப் புறனே”
எனக் கூறியுள்ளதால் மருதமாகிய அகத்திணைக்குப் புறத்திணை உழிஞை என கூறப்பட்டது. மருத நிலத்து புற ஓழுக்கம் இது. அரண்களை முற்றுகையிடுவதும் அவற்றைக் கைப்பற்றுவதும் உழிஞைத் திணையாகும். வஞ்சித்திணையில் தோற்ற பகைமன்னன் தம் நாட்டு அரணுள் சென்று தாழிட்டுக் கொண்டு உள்ளே இருக்க, அவனது அரண்களைத் தகர்த்து அவனுடன் போரிடுவது உழிஞை எனும் புறத்திண ஒழுக்கமாகும்.
4. தும்பை :
“தும்பை தானே நெய்தலது புறனே”
என்றதனால் நெய்தல் மக்களின் புற ஒழுக்கம் தும்பையாகும். நெய்தல் என்ற அகத்திணைக்கு தும்பை என்ற புறத்திணையைப் பொருத்திக் காட்டப்பட்டுள்ளது, இரு பெரும் வேந்தர்களும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு களத்தில் போரிடுவது தும்பைத் திணையாகும். இது பன்னிரு துறைகளை உடையது.
5. வாகை :
“வாகை தானே பாலையது புறனே”
என பாலை என்ற அகத்திணைக்கு உரிய புற ஒழுக்கமாக வாகை என்ற புறத்திணை கூறப்பட்டது. போரில் வெற்றி பெற்ற மன்னனைப் பாடுவதும் வெற்றி பெற்றவர்கள் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவதும் வாகைத் திணையாகும். பாலை நிலத்தில் உள்ள மக்களது புறம் சார்ந்த இயல்புகள் இவை. வாகைக்குத் துறைகள் பதினெட்டாகும்.
6. காஞ்சி :
“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே”
என்றதனால் பெருந்திணை என்ற அகத்திணைக்குப் புறத்திணையாகக் கூறப்பட்டுள்ள திணை இதுவாகும். உலக வாழ்வு நிலையற்றது என்ற நிலையாமையை உணர்த்தும் திணையாக காஞ்சித் திணை உள்ளது.
7. பாடாண் :
“பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே”
என்கிறது தொல்காப்பியம். கைக்கிளை என்ற அகத்திணைக்குப் புறத்திணையாகக் கூறப்பட்டுள்ள திணை இதுவாகும். இது எட்டுவகை துறைகளைக் கொண்டது. அகத்திணை பாகுபாடும் புறத்திணை பாகுபாடும் ஏழு ஏழு திணைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தவர் பன்னிரு திணைகளை வகுத்ததற்கு இளம்பூரணர் தந்த விளக்கம் பொருந்துகிறது. அகக்கை ஐந்து உள்ளார்க்கு புறக்கை ஏழு உள்ளது என்றாற் போன்றது என அவர் விளக்குகின்றார். உள்ளங்கை விரல்கள் ஐந்தெனில் அதன் புறங்கை விரல்களும் பத்து மட்டுமே இருக்கும் என்பதும் இது காண்பாரின் காட்சிப் பிழை என்றும் உணர்த்துவது போல இளம்பூரணர் கூறியிருக்கிறார்.
தொல்காப்பியர் அகத்திணையைச் சரியாக ஏழு ஏழாகப் பிரித்திருப்பதே பொருத்தமானதாகும். அகத்திணையில் வைத்துக் கூறப்பட்ட கைக்கிளை, பெருந்திணை இரண்டையும் மீண்டும் புறத்திணையிலும் வைத்துக் கூறியிருப்பது காட்சிப் பிழைக்குச் சான்றாகிறது. ஏற்கனவே கூறப்பட்டுவிட்ட இரு திணைகளை மீண்டும் கூறுவது கூறியது கூறல் என்ற பத்துக் குற்றங்களுள் ஒன்றாகும்.
வெட்சித் திணையின் உள்ளே வைத்து கூறப்பட்ட கரந்தைத் திணையை தனி திணையாக கூறியிருப்பதும் ஏழு திணைகள் என்ற ஆராய்ந்த செம்மையான முடிவை பன்னிரு திணைகள் என வலிந்து கூறியிருப்பது திணை வைப்பு முறையில் உள்ள நெருடலாகும். எனவே தொல்காப்பியம் கூறும் ஏழு திணை என்பதே பொருத்தமுடையதாக இருக்கிறது.
அகத்திணை – புறத்திணை பொருத்தம் :
நிலம் – அக உரிப்பொருள் புற உரிப்பொருள்
குறிஞ்சி – புணர்தல் வெட்சி (கரந்தை)
முல்லை – இருத்தல் வஞ்சி
பாலை – பிரிதல் வாகை
மருதம் – ஊடல் உழிஞை
நெய்தல் – இரங்கல் தும்பை
– கைக்கிளை – பாடாண்
– பெருந்திணை – காஞ்சி
என்ற முறையில் ஐவகை நிலத்தின் இயல்புகள் வகைப்படுத்தப்பட்டன. குறிஞ்சி முதலான நிலங்களில் சங்க காலத்தில் ஒழுகிய ஒழுகலாறுகளாக அக ஒழுக்கமும் புற ஒழுக்கமும் இவ்வாறு வகைப்படுத்தி கூறப்பட்டது.
“அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்”
( தொல். புறத்.1 )
என்று கூறிவிட்டு தான் தொல்காப்பியர் தம் அகத்திணை புறத்திணை பாகுபாட்டை விளக்குகிறார். அதாவது தொல்காப்பியர் காலத்திலேயே அதங்கோட்டு ஆசானுக்கு பல ஐயங்களை விளக்கி தம் இலக்கணப் புலமையை இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் நிலைநாட்டினார் தொல்காப்பியர்.
இன்று புறத்திணைகளில் பன்னிரு திணை என்ற மாறுபட்ட பகுப்பை முன் வைப்பவர்களும் அதனை ஆதரிப்போரும் கேட்கும் ஐயப்பாடுகளையே அன்றும் சிலர் கேட்டுள்ளனர் என்பதால் எச்சரிக்கையாக இந்த அடிகளுடன் தொல்காப்பியர் திணை பாகுபாட்டை கூறியுள்ளார். எனவே திணை பகுப்பு முறையில் ஏழு திணைகளே என்ற திணைப் பகுப்பு முறையே பொருத்தமானது என தெரிய வருகிறது.