Skip to content
  • Log In
  • Register
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் இதழ்
Kalanjiyam
  • Home
  • About us
    • About KALANJIYAM
    • Editorial Board
    • Publishing Policy
    • Indexing
    • Submissions
    • Subscription
    • Journal
      • Review Process
      • Author instruction
      • Annual Subscription
      • Article Processing charges
      • Publication Ethics
  • Current Issue
  • Archives
    • List Articles
Menu Close
  • Home
  • About us
    • About KALANJIYAM
    • Editorial Board
    • Publishing Policy
    • Indexing
    • Submissions
    • Subscription
    • Journal
      • Review Process
      • Author instruction
      • Annual Subscription
      • Article Processing charges
      • Publication Ethics
  • Current Issue
  • Archives
    • List Articles
  • Log In
  • Register
Kalanjiyam - International Journal of Tamil Studies

ISSN : 2456-5148

சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி

மு.கயல்விழி,

Keywords:

Abstract:

இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், தான்சேன் போன்றவர்களும், மேல்நாட்டு இசை வல்லுனர்களான மொஸார்ட் (Wolfgang Amadeus Mozart), பீத்தோவான் (Ludwig van Beethoven), பாக் (Johann Sebastian Bach) போன்றோரும் தம் இசைத்திறனுக்காக இன்றும் புகழப்படுவதை நாம் மறந்து விடலாகாது. எனவே தான் நம் தமிழ்ச் சான்றோர்கள் இசைத்தமிழை உருவாக்கி மகிழ்ந்தனர். சோழர் காலத்தில் எல்லாக் கலைகளையும் போல் நுண் கலையான இசைக்கலையும் சிறப்பு பெற்றது. சோழநாட்டில் தமிழிசைக் கலை ஆலயங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், திருவிழாக் கூட்டங்கள், கூத்து மேடைகளில் வளர்க்கப்பட்டது. தமிழகத்தை எத்தனையோ அரசு மரபினர் ஆண்ட போதிலும் சோழரைப் போன்று தமிழிசை வளர்த்தவர்கள் ஒருவரும் இலர். அவர்கள் காலத்தில் இசைக்கலை தன் உச்ச நிலையை எட்டிற்று. எனவேதான் இக்காலத்தை தமிழிசையின் பொற்காலம் என்று போற்றுகின்றனர். சோழநாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் இசைக்கலையை நன்கு வளர்த்தனர். நுண்கலைப் புரவலர்களான சோழமன்னர்கள் சிறப்பு வாய்ந்த இசைக்கலையைப் போற்றியது வியப்பன்று. இசையால் தமிழ் வளர்ந்தது, தமிழால் இசை உயர்ந்தது.

சோழ மன்னர்களின் தமிழிசைப் பணிகள்:-

சோழ மன்னர்கள் தமிழர்;கள். எனவே தமிழிசைக்கு அவர்கள் இயல்பாகவே ஆக்கமும் ஊக்கமும் நல்கினர். அவர்களின் இசைப் பணிகள் குறித்து இலக்கியங்கள், உரையாசிரியர் குறிப்புகள், ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன. பல சோழ மன்னர்கள் இசை வல்லுனர்களாகத் திகழ்ந்தனர். முதலாம் குலோத்துங்கச் சோழன் இசையில் வல்லவனாகத் திகழ்ந்ததுடன், இசைநூல் ஒன்றையும் இயற்றினான் (பிற்காலச் சோழர் சரிதம், ப:252). அவன் மனைவி ஏழு ஸ்வரங்களையும் இசைப்பதில் வல்லவளாகத் திகழ்ந்ததால் “ஏழிசை வல்லபி” என்று  சிறப்பிக்கப்பட்டாள் (The Cholas, P:332). மற்றோரு சோழ மன்னனான இரண்டாம் குலோத்துங்கன் “நித்திய கீதப் பிரமோகன்”(குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், பாடல்:78) என்று சிறப்பிக்கப் பட்டான். சோழ மன்னர்களின் புகழ் பாடும் மெய்க்கீர்த்திகள் இசை வடிவத்தில் உள. அவை அகவலோசை, துள்ளலோசை, வஞ்சியோசையுன் பயின்று வருகின்றன. சோழ மன்னர்கள் நாடு முழுவதிலும் உள்ள கோயில்களில் தமிழிசையை வளர்த்தனர்;. அவ்விடங்களில் நாயன்மார்களின் திருமுறைகளும், ஆழ்வார்களின் பாசுரங்களும் இசையுடன் ஓதப்பட்டன. இசைப் பணியாற்றும் இசைக் கலைஞர்கள் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகப் பலவித இறையிலி நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. அவை வருமாறு:-

       இசைக் கலைஞர்கள்             இறையிலி நிலங்கள்

தமிழக்  கூத்தாடுவோர்.             –  கூத்தாட்டக் காணி

வீணை வாசிப்போர்                –  வீணைக் காணி

மத்தளம் கொட்டும் மெய்ம்மட்டியர் -மெய்ம்மட்டுக் காணி

இசைபாடும் முரலியர்              – முரலியக் காணி

ஒருகட்பறை கொட்டும் உவச்சர்    –  உவச்சக் காணி

திருப்பதிகம் ஓதும் ஓதுவார்        –  திருப்பதிகக் காணி

சேகண்டி இசைப்போர்              –  சேகண்டிப் புரம்

இசைப்பாடும் பாணர்        -பாணக் காணி /பாணர் ஜீவிதம்

சோழ மன்னர்கள் உலாவரும் போது பலவித இசைக்கருவிகள் முழங்கின. முதலில் ஒற்றை வலம்புரிச் சங்கு ஊதப்பட்டது. பின்னர் பிறவகை சங்குகள் முழங்கின. இதன் பின் மூன்று முரசுகள் ஒலித்தன. இவ்வாறு சோழ மன்னர்கள் இடையறாது தமிழிசை வளர்த்தனர்.

சோழநாட்டின் தமிழிசை வளர்ச்சி:-

சோழநாட்டில் இசை வளர்ந்த நிலையை அக்கால இலக்கியங்களும், கல்வெட்டுகளும் விரிவாகப் பேசுகின்றன.  சோழர் காலத்தில்; பெண்டிர் பரணி நாளி;ல் அதிகாலையில் துயிலெழுந்து நீராடிப் புத்தாடை உடுத்தி, வீதிதோறும் சென்று துயில் கொள்ளும் மகளிரை எழுப்புவர். பின்பு காளிக் கோயில் சென்று குறவைக் கூத்தாடி மகிழ்வர் என்று கலிங்கத்து பரணி உரைக்கின்றது. சீவக சிந்தாமணியில் சீவகன் வீணை மீட்டுவதில் வல்லவனாகத் திகழ்ந்ததாக சித்தரிக்கப்படுகின்றான். அவன் பல பண்களில் இசையமைத்து வீணையை மீட்டி அனைவரையும் மயக்கினான். அவன் இசையில் தேவரும் மனிதரும் வீழ்ந்தனர், மரமும் கல்லும் உருகின, பறவைகளும் விலங்குகளும் மயங்கின. சேக்கிழார் பெருமான் தம் பெரிய புராணத்தில் சோழ நாட்டு இசை வளத்தைப் பராட்டுகின்றார். திருப்பாணாழ்வார் புராணத்தில் திருவாரூர் நகரின் இசை முழக்கங்களை விளக்குகிறார். அங்கு தோடியர், குலவர், விரலியர், பாணர், கூத்தர், குலக்கியர் போன்றோர் இசைப் பணியாற்றினர். நீலகண்டயாழ்ப்பாணரும், மாதங்க சூளாமணியாரும் இணைந்து யாழிசைத்த அற்புதக் காட்சியை

“யாழிலெழும் ஓசையுடன் இருவர் நீடற்றிசை யொன்றி

வாழிதிருத் தோணியுளார் மருங்கணையும் மாட்சி யினைத்

தாழுமிரு சிறைப்பறவை படிந்ததனி விசும்பிடைநின்

றேழிசைநூற் கந்தருவர் விஞ்சையரும் எடுத்திசைத்தார்”

என்று வருணிக்கின்றார். (பெரிய புராணம், திருஞானசம்மந்த சுவாமிகள் புராணம், பாடல்:136) செந்தமிழ்ப் பாக்களான திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டில் பல தமிழ்ப் பண்கள் பயின்று வருகின்றன.  இதில்

இந்தளம், சாரைப்பாணி, நட்டராகம்-  1; பதிகம்

காந்தாரம்                        – 2 பதிகங்கள்

புறநீர்;மை                        – 3 பதிகங்கள்

பஞ்சமம்                          – 21 பதிகங்கள்

அமைக்கப்பட்டு ஆலயங்களில் இசையுடன் ஓதப்பட்டன. சோழ நாட்டு ஆலயங்கள் தோறும் தமிழிசையும், தமிழ்ப்பாக்களும்    இசைத்துப் பாடப்பட்டன.

சோழர் கால இசை நூல்கள்:-

சோழர் காலத்தில் பல தமிழிசை நூல்கள் காணப்பட்டன. அவை ஒன்றேனும் இன்று கிடைக்கவில்லை. அவை பொருநாரை, பெருங்குருகு, பஞ்சபாராதீபம். இசைநுணுக்கம், பஞ்சமரபு, இந்திரகாளியம் முதலியனவாகும். கி.பி. 1237ல் வடமொழியில் இயற்றப்பட்ட சாரங்க தேவரின் “சங்கீத ரத்தினாகரம்” என்னும் நூல் பல தமிழ்ப் பண்களைப் பற்றி பேசுகின்றது. குறிப்பாக தேவாரப் பண்களான சுத்தசதாரி, தேவாரவர்தினி, தக்கராகம், கௌசிகம், சுத்தபஞ்சமம், பக்க கௌசிகம் போன்றவை அந்நூலில் புகழப்படுகின்றன.

பக்திப் பாடல்களும், பண்ணமைதியும்:-

தமிழ் பக்திப்பாக்களான தேவாரப் பாடல்களுக்கும், திவ்யப் பிரபந்தங்களுக்கும் இக்காலத்தில் பண் வகுத்தளிக்கப்பட்டது. நீலகண்ட யாழ்ப்பாணரின் வழியில் வந்த பெண்ணொருத்தி தேவாரப் பாக்களுக்கு பண்ணமைத்தார். நட்டப்பாடை, தக்கராகம், பழந்தக்க ராகம், தக்கேசி, குறிஞ்சி, வியாழக்குறிஞ்சி, மேகராகக்குறிஞ்சி, இந்தளம், சீகாமரம், பயிந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி காந்தாரம், பஞ்சமம், கொல்லி, கௌசிகம், பஞ்சம், புறநீர்மை, அந்தாளி, திருத்தாண்டகம், செந்துருத்தி, பழம்பஞ்சுரம், கொல்லிக் கௌவாணம், குறுந்தொகை, பண்கரம் போன்ற இராகங்கள் இதில் பயின்று வந்தன. சோழர் காலத்தில் பன்னிரு திருமுறைகளுக்கும் பண் வகுக்கப்பட்டது. பல தமிழ்ப் பாக்களுக்கு உரிய இராகங்கள் இக்காலத்தில் வரைமுறைப்படுத்தப்பட்டன.

       பாக்கள்                பண்கள்

  1. வெண்பா     –  சங்கராபரணம்
  2. அகவற்பா ,தாழிசை –  தோடி
  3. கலிப்பா     – பந்துவராளி
  4. கலித்துறை     – பைரவி
  5. விருத்தப்பா     -கலியாணி ,காம்போதி, மத்தியமாவதி

இசைப் பாடல் பெற்றத்தலங்கள்:-

சோழ நாடெங்கும் கோயில்களில் பக்திப் பாக்களான  பன்னிரு திருமுறைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்தங்களும் இசையுடன் ஓதப்பட்டன. இதனை இறைப்பணியாகக் கருதி சோழ மன்னர்கள் ஆக்கமும், ஊக்கமும் நல்கினர். இவ்வாறு பாடப்பட்ட பாக்களுக்குகேற்ப நடனக் கலைஞர்களான பதியிலார்,  இஷபத்தளியிலார், தேவரடியார் போன்றோர் நடனமாடி மக்களை மகிழ்வித்தனர்.

திருமுறைகள் பாடப் பெற்றத்தலங்கள்:-

சைவத்திருமுறைகள் யாவும் இசையுடன் ஓதுதற்குரியன. இவை நாடு முழுவதும் பல்வேறு ஆலயங்களில் இசையுடன் பாடபெற்றன. திருவல்லம், எறும்பியூர், பழுவூர், திருவாவாடுதுறை, தவத்துறை, ஆத்தூர், குமாரவயலூர், அந்தவந்தநல்லூர், கூகூர், பிரமம்தேசம், திருமுதுகுன்றம், திருவீழிமிழலை, திருநல்லம், திருவாஞ்சியம், திருவெண்ணைநல்லூர், திருவாமூர், திருவாரூர், திருவெண்காடு, சிதம்பரம், சீர்காழி, தென்னேரி, உடையாளுர், தென்திருக்காளத்தி, திருச்சோற்றுத்துறை, எலவனாசூர், கீழுர் போன்ற ஆலயங்களில் திருமுறைகள் இசையுடன் ஓதப்பட்டதை கல்வெட்டுகள் செப்புகின்றன.

தேவாரப்பாடல்கள் பாடப் பெற்றத்தலங்கள்:-

சோழநாட்டில் மூவர் பாடிய தேவாரங்கள் சில ஆலயங்களில் சிறப்புடன் ஓதப்பட்டன. கோனேரிராசபுரம், கீழ்பழுவூர், கோவிந்தப் புத்தூர், கீழையூர், திருவான்மியூர், திருமணஞ்சேரி, திருவெறும்பூர், பாகூர், திருவாமாத்தூர் போன்றவை அவ்வாறு தேவாரப் பாக்கள் இசையுடன் ஓதப்பட்ட  ஆலயங்களாகும்.

இசைபயின்ற வைணவ ஆலயங்கள்:-

நாடு முழுவதும் உள்ள வைணவ ஆலயங்களில் பைந்தமிழ் வைணவப் பாக்களான நாலாயிர திவ்யப் பிரபந்தம் இசையுடன் ஓதப்பட்டு வந்தன. சோழ மன்னர்கள் சைவர்களான போதிலும் சமயப் பொறையுடன் வைணவத்தை நன்கு ஆதரித்தனர். திருக்கோவிலூர் திருவிக்கிரமப்பெருமாள் கோயிலில் திருநெடுந் தாண்டகமும், ஆழ்வார்திருநகரி மற்றும் திருமால்புரத்தில் நம்மாழ்வார் பாசுரங்களும், எண்ணாயிரம், உத்திரமேரூர், திருவரங்கம், குமாரலிங்கம் கோயில்களில் திருவாய்மொழிப் பாசுரங்கள் இசையுடன் ஓதப்பட்டன.

சோழர் காலத் தமிழிசைக் கருவிகள்:-

சோழர் காலத்தில் பலவித இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. அவை பலவகையாக இயல்புக்கேற்ப வகைப்படுத்தப்பட்டன. அவை வருமாறு:-

1 தோல்;கருவி

  1. நரம்புக்கருவி
  2. கஞ்சக்கருவி
  3. துளைக்கருவி
  4. மிடற்றுக்கருவி

அக்காலத்தில் காணப்பட்ட பக்க வாத்தியங்கள் வருமாறு:-

  1. சித்தமத்தளம்
  2. எலத்தாளம்
  3. கொம்பு
  4. திமில்

சோழர்கால இசைக்கருவிகள் இசை நயத்திற்கேற்ப உத்தமம், மத்திமம், அதமம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. சோழர் கால இசைக்கருவிகள்  வருமாறு:-

1.காளம்

2.வங்கியம்

3.சங்கு

4.சேகண்டிகை

5.குடமுழா / பஞ்சமுக வாத்தியம்

6.கரடிகை

7.திமிலை

8.தண்ணுமை

9.செண்டை

10.வீணை

11.உடுக்கை / டமரு / தமருகம்

12.துடி

13.தாளம்

14.மேராவியம் / மேர்வியம் / மெரவியம் / மோர்வியம்

15.பூரகம்

16.பெறருவடகம்

17.பேரிக்கை

19.இடக்கை

20.மத்தளம்

21.சல்லிகை

22.தக்கை

23.கானப்பறை

24.தமருகம்

25.தமாரி

26.யந்தரி

27.முழுவு

28.சந்திர வளையம்

29.மொந்தை

30.முரசு

31.கண்விடு தும்பு

32.நிசாளம்

33.துடுமை

34.சிறுபறை

35.அடக்கம்

36.ஆசில்

37.தருணிச்சம்

38.விரலேறு

39.பாகம்

40.தொடக்க உபாங்கி

41.பெரும் பறை.

அரையர் சேவைகள்:-

சோழர் காலத்தில் ஆழ்வார் பாடல்கள் இசையுடன் பாடி நடித்துக்காட்டும் கலை நிகழ்வு அரையர் சேவையாகும். இதை நாத முனிகள் ஏற்படுத்தினார் என்பர். ஒவ்வொரு மார்கழி மாதமும் முதல் பத்து நாட்களில் பகலில் இதை இசையுடன் பாடுவர். இது “பகல் பத்து” எனப்படும். அடுத்து இதே மாதம் ஏகாதசி முதல் பத்து நாட்கள் இரவினில் நடத்தப்படும். இது “இராப் பத்து” என்றழைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது திருப்பல்லாண்டு, திருவாய் மொழி, திருநெடுந்தாண்டவம் போன்ற வைணவப் பாக்கள் இசையுடன் பாடி நடிக்கப்பட்டது.

முத்துபுரிச் சேவை:-

இது அரையர் சேவையில் ஒரு பகுதியாக வைணவ ஆலயங்களில் நடத்தப்படும் இசை நிகழ்வாகும். அரையர் தம்மை குறத்தியாக பாவித்துக் கொண்டு வெண் முத்துக்களைப் பார்த்து குறி சொல்லுவர். இந்நிகழ்வில் திருநெடுந்தாண்டவத்தின் 11 பாக்கள் இசையுடன் பாடப்படும். இது தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடத்தப்பட்டது.

பள்ளுப் பாட்டு:-

இது அரையர் சேவையின் மற்றோர் அங்கமாகும். இந்நிகழ்வில் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் இசையுடன் பாடி நடிக்கப்படும். வைணவ ஆலயங்களில் இது சிறப்புடன் நிகழ்த்தப்பட்டது.

இசைக் கல்வெட்டு,  ஓவியம், படிக்கட்டுகள்:-

சோழ மன்னர்களின் இசை வல்லமைக்குச் சான்றாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பை நல்லூர் சிவன்கோயில் இசைக் கல்வெட்டு காணப்படுகின்றது. இதில் “நமசிவாய” என்ற ஐந்தெழுத்துக்கள் மாற்றி மாற்றி ஐந்து விதமாய் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் உள்ள 5 வரிகள் ஐந்து பண்ணுக்குரிய ஸ்வரங்களைச் சுட்டுவதாக அமையும். சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவைக் கூத்து நிகழ்வு போன்று இதன் இசைநுட்பம் அமைந்துள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஓவியத்தில் அக்கால இசைக்கருவிகள் வரையப்பட்டுள்ளன. இவ் ஓவியத்தில் நடராசப் பெருமான்  நடனமாட மகாவிஷ்ணுவும், பூதகணமும் யாழ் மற்றும் சிங்கியை இசைக்கின்றனர். இதர பூதகணங்கள் உடனிருந்து கைத்தாளம், தண்ணும்மை, உடுக்கை போன்ற இசைக்கருவிகளை  கின்றனர். சோழர்களின் இசை வல்லமைக்கு மற்றொரு சான்றாக தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பலிபீடத்தில் அமைந்துள்ள பத்து இசைப் படிக்கட்டுகளைக் கொள்ளலாம். இவற்றை ஒவ்வொன்றாக தட்டும்போது ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற சங்கராபரண இசையோலி எழுகின்றது. மதுரை மீனாட்சியம்மன். மற்றும் சுசீந்திரம் ஸ்தாணுமால்ய ஸ்வாமி கோயில்களில் உள்ள இசைத் தூண்களுக்கு இந்த இசைப் படிக்கட்டுகளே முன்மாதிரியாகத் திகழ்ந்தன. சோழ மன்னர்கள் கோயில் உருப்புக்களையே இசைவடிவாய் வடிவமைத்த திறன் இவற்றால் புலனாகின்றது.

முடிவுரை:-

சோழர் காலம் தமிழிசையின் பொற்காலமாகும். சோழ மன்னர்கள் தமிழிசைக்கு இடையறாது ஆக்கமும் ஊக்கமும் நல்கினர். கோயில்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், ஆடலரங்குகள், கூத்துமேடைகள், விழாக்கூடங்களில் தமிழிசை முழங்கியது. மன்னர்கள் மட்டுமன்றி சோழநாட்டுப் பொது மக்களும் தமிழிசைக்கு அளவற்ற ஆதரவளித்தனர்.. சோழர் ஆட்சியில் இசைக்கலையே அனைத்து நுண்கலைகளிலும் முதலிடம் பிடித்தது. சோழர் காலம் இசைக்கலையின் உன்னதமான பொற்க்காலம் என்பதுடன் இறுதி காலமாகவும் அமைந்தது. சோழர் ஆட்சியின் முடிவுக்குப் பின் தமிழிசையை வளர்க்க ஒருவரும் இராது போயினர். இதனால் இக்கலை வீழ்ச்சியடைந்தது. சோழருக்குப் பின் ஆட்சிக்கு வந்த நாயக்க மன்னர்கள் தெலுங்கு இசையையும், நவாப்புகள் இந்துஸ்தானி இசையையும் ஆதரித்தனர். இவ்வாறு தமிழிசைக் கலை ஆதரிப்பாரின்றி தன் முடிவை எட்டியது. கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளான தியாகப் பிரம்மம் என்ற தியாகராய ஸ்வாமிகள், முத்துஸ்வாமி தீட்ஷிதர், ஷியாமா சாஸ்திரி ஆகியோர் பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டில். அவர்களுக்கு உணவளித்து வாழ்வித்தது தமிழ்நாடு. ஆனால் அவர்கள் இயற்றிய எண்ணற்ற கீர்த்தனைகளில் ஒன்று கூட தமிழில் இல்லாதது மிகவும் வேதனைக்குரியது. சோழர் காலத்திற்கு பின் தமிழிசையின் அவல நிலையை விளக்க இதை விட வேறு சான்றுகள்,  இல.

  • 1.Neelakanta Sastri.K.A, (1975), Chennai, The Cholas, University of Madras.
  • 2.குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், (2012), சென்னை, மணிவாசகர் பதிப்பகம்,
  • 3பெரிய புராணம், (1950), திருப்பனந்தாள், காசிமட வெளியீடு.
  • 4.சதாசிவப் பண்டாரத்தார்.தி.வை, (2008), பிற்காலச் சோழர் சரிதம், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
  • 5.ஞான குலேந்திரன், (1990), பழந்தமிழர் ஆடலில் இசை, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகம்,
  • 6.நாகசாமி. இரா & சத்திய மூர்த்தி. மா, (1976), தமிழகக் கோயில் கலைகள், சென்னை, தமிழ் நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை,

Recent Comments

    • Home
    • About us
      • About KALANJIYAM
      • Editorial Board
      • Publishing Policy
      • Indexing
      • Submissions
      • Subscription
      • Journal
        • Review Process
        • Author instruction
        • Annual Subscription
        • Article Processing charges
        • Publication Ethics
    • Current Issue
    • Archives
      • List Articles
    Copyright 2020 - களஞ்சியம் பன்னாட்டு தமிழ் இதழ் - Kalanjiyam Tamil Journal - Department of Tamil, NGM College, Pollachi, Tamilnadu, INDIA 642001