இலக்கியங்கள் நிலைபேறுடைய மானிட மதிப்புகளையும் வாழ்வியல் விழுமியங்களையும் விண்டுரைத்து மானுட வெற்றிக்கு வழிவகுக்கின்றன. அறிவுறுத்தல், இன்புறுத்தல், மொழித்திறன் மிகுத்தல், பண்பாட்டுக் காப்பு. பொழுதுபோக்கு ஆகிய படைப்பு நோக்கங்களுள், தமிழ் இலக்கியங்களில் அறிவூட்டல் பண்பு மேலோங்கிக் கோலோச்சுதல் வெளிப்படை. வாழ்வியல் விழுமங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும், இலக்கிய உத்திகளும் நடையியல் நுட்பங்களும் சொல்லாட்சிச் செறிவும் திருக்குறளில் காணப்படுகின்றன. அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது. காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் ஆர்வமுள்ள அன்பர்களால் கூடச் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை. குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால் தான் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி, அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் மக்களிடம் பிறக்கும்.
அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள மொழி, இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிவது தேவையாகின்றது. குறட்பாக்களின் புரிதிறனில் உள்ள கடினத் தன்மை / மருட்சி ஆகியவற்றை நீக்க இத்தகைய பொருண்மையியல் அணுகுமுறை உறுதுணையாகும். சான்றாக, திருக்குறளில் ஆளப்பட்டுள்ள செருக்கு என்னும் சொல்லைக் கருதலாம். இச் சொல் செல்வக் களிப்பு, தருக்கு ஆகிய பொருளில் ஆளப்பட்டுள்ளது. அமைப்புச் சூழலுக்கேற்பவும் தொடர்ப் பொருண்மை நோக்கிலும் இத்தகைய சொற்களை நுணுகி ஆராய்ந்து முறையாகக் கருத்துணரவேண்டும். அதாவது ஒரு சொல் சூழலுக்கேற்பப் பல பொருளுணர்த்தும் பலபொருளொருசொல்லாக வழங்கப்படுவதுண்டு. செருக்கு, இறை, துணை , குறிப்பறிதல் என்னும் சொற்கள் திருக்குறளில் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. இக் கட்டுரை செருக்கு என்னும் சொல்லை மாறுபட்ட கருத்துகளில் பலபொருளொருசொல்லாகத் திருவள்ளுவர் ஆண்டுள்ள பாங்கை , அதோடு தேவையான நற்குணமாகவும், விலக்கத்தக்க பண்பாகவும் செருக்கு என்னும் சொல்லை வரையறுத்திருப்பதைப் பகர்வதாக அமைகின்றது.
செருக்கு – சொற்பொருள் :
செருக்கு என்னும் சொல்லின் பொருளாகத் திருக்குறள் சொல்லடைவு(ப.59 ) ,
செல்வக் களிப்பு, தருக்கு, செல்வம், தருக்குதல்
ஆகியவற்றையும், பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி ( பக். 72 )
இறுமாப்பு, மகிழ்ச்சி, ஆண்மை, மயக்கம்
ஆகியவற்றையும் சுட்டுகின்றன. இதனால் நற்குணமாகவும், விலக்கத்தக்க பண்பாகவும் செருக்கு என்னும் சொல் பெயராகவும் பெயரடையாகவும் வினையாகவும் பழங்காலத்திலிருந்து வழங்கிவருவது விளங்கும். இக்காலப் பேச்சு வழக்கிலும் செருக்கி என்று வினையெச்சமாக இது ஆளப்படுகின்றது.
திருக்குறளில் செருக்கு – சொல்லாட்சி அட்டவணை
குறள் எண் | சொல்லாட்சி | சொல் வகை | சொற்பொருள் |
180 | வேண்டாமை என்னுஞ் செருக்கு | பண்பாகுபெயர் | பெருமை |
201 | தீவினை என்னும் செருக்கு | பண்புப் பெயர் | அகங்காரம் |
346 | யானென தென்னுஞ் செருக்கு | பண்புப் பெயர் | செல்வக் களிப்பு |
431 | செருக்குஞ் சினமும் சிறுமையும் | பண்புப் பெயர் | அகங்காரம் |
598 | வள்ளியம் என்னுஞ் செருக்கு | பண்புப் பெயர் | மேம்பாடு |
613 | வேளாண்மை என்னுஞ் செருக்கு | பண்புப் பெயர் | பெருமை |
759 | செறுநர் செருக்கு | பண்புப் பெயர் | போர் அகங்காரம் |
844 | உடையம்யாம் என்னும் செருக்கு | பண்புப் பெயர் | செல்வக் களிப்பு |
860 | நன்னயம் என்னும் செருக்கு | பண்பாகுபெயர் | பெருமை |
878 | பகைவர்கண் பட்ட செருக்கு. | பண்பாகுபெயர் | படைச் செருக்கு |
916 | தகை செருக்கி | வினையெச்சம் | உடலழகுக் கர்வம் |
1193 | வாழுநம் என்னும் செருக்கு | பண்புப் பெயர் | பெருமை |
செருக்கு என்னும் சொல் 12 குறட்பாக்களில் பயின்றுள்ளது. இவற்றுள் 180, 598, 613, 860, 1193 ஆகிய குறட்பாக்களில் நற்குணமாகவும் பிறவற்றில் விலக்கத்தக்கதாகவும் அறியப்படுகின்றது. அதனால் எந்தச் சூழலில் நற்பண்பாகின்றது; எச் சூழலில் அல்பண்பாகின்றது என்பது விளக்கப்படவேண்டும். அதன்படி,
- பிறர் பொருளைக் கவர முனையாமை உயர்வைத் தரும் (180)
- வள்ளண்மை பெருமையானது (598 )
- பிறருக்கு உதவவேண்டும் என்னும் எண்ணம் உயர்வானது (613 )
- மானுட நல்லுறவு மேன்மையானது (860 )
- வாழ்க்கைத் துணை விரும்புமாறு வாழ்வது பெருமையானது (1193)
ஆகியவை மானுட மேம்பாட்டிற்கான நற்குணங்கள் ஆகின்றன. அடுத்ததாக, ஆளுமை வளர்ச்சியைச் சீர்குலைக்கின்ற நடத்தைகளாக,
தீவினை செய்ய முனைதல் (201)
தன்னலத்தோடு செயலாற்றுதல் (346 )
இறுமாப்பு (செருக்கு) கொள்ளுதல் (431 )
பகைவரை ஆக்கிரமிக்க முனைதல் (759, 878 )
தனக்கு அனைத்தும் தெரியும் என்னும் ஆணவம் (844 )
உடலழகால் செருக்கடைதல் ( 916 )
ஆகியவற்றை வள்ளுவம் வகுத்துரைக்கின்றது. எனவே பிறர் பொருளைக் கவர முனையாமல், அனைவருக்கும் உதவுகின்ற வள்ளல் தன்மையுடன், மானுட நல்லுறவு பேணி, மேன்மையான இல்லறத்தை வாய்ப்பாக்கிச் சிறக்கவேண்டும். அதோடு, தீவினையகற்றி, பொதுநலம் போற்றி, பகைவரை ஆக்கிரமிக்காமல், தற்பெருமையின்றி வாழ்ந்து வளமுறவேண்டும்.
இத்தகைய உலகளாவிய பொதுமையான விழுமியங்கள் மானுட மேன்மைக்கு வாய்ப்பாவதோடு, இலக்கியத்தின் பயன்பாட்டையும் மிகுவித்து, நிலைபேற்றை உறுதியாக்குவதுடன் , தகுதியான மொழிபெயர்ப்புகளையும் பெற்றுப் பரவ வழிவகுக்கின்றன.
References:
- திருக்குறள், திருக்குறள் சொல்லடைவு, பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி ஆகியன தமிழ் இணையக் கல்விக் கழக மின்னூலகத்திலிருந்து பெறப்பட்டன.
- முனைவர் ப.பாண்டியராஜா, (http://tamilconcordance.in)