Kalanjiyam - International Journal of Tamil Studies

ISSN : 2456-5148

நாட்டார் வழக்காறுகளும் சமஸ்கிருதமயமாக்கலும்

பேரா. வை. இராமராஜபாண்டியன்

Keywords:

Abstract:

மக்களுடைய இன உணர்வானது, அந்த இனத்தின் நாட்டார் வழக்காறுகளின் தூண்களாக என்றும் நிலைத்து வெளிக்காட்டும். நாட்டார் வழக்காற்றின் மீதான ஆர்வம் இயல்பானது, ஆழமானது. நம்நாட்டைப் பொருத்தமட்டில், இறைநம்பிக்கை என்பது அனைத்து மக்களிடம் இயல்பான ஒன்று. நாட்டுப்புற மக்களின் பண்பாடானது ஒன்றுடன் ஒன்று இணைந்த பகுதியாக உள்ளது. அந்த வகையில் நாட்டார் வழக்காறுகள் ஒரு இனத்தின் மீதான ஆதிக்கத்தை, பண்பாட்டை, வரலாற்றை, அடையாளப்படுத்தும் விதமாக இக்கட்டுரை முன்னெடுத்துச் செல்கிறது.

நாட்டுப்புற வழக்காறுகள் – விளக்கம்

மனித சமுதாயத்தின் கடந்த கால வரலாற்றை முறைப்படி ஆராய்ந்து நெறிப்படி வெளிக்கொணர்வது வரலாறு. வுரலாற்று ஆய்வுக்குப் பண்டைய மக்களின் வாழ்விடங்கள், வேட்டை விவசாயம், கல்வெட்டு, செப்பேடு, ஓவியம் போன்றவை எழுத்துப் பூர்வமாக பயன்படுகின்றன. எழுத்துச் சான்றுகள் இல்லாத நிலையில் நாட்டுப்புறக் கதைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பழமொழிகள் போன்றவை நாட்டுப்புற வழக்காறுகள் பற்றி அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.

நாகரிகப் போக்கு இல்லாத கிராமங்கள் நாட்டுப்புறம் என்று அழைக்கப்படுகிறது. நாட்டுப்புறத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் தொழில் ஒன்றையே மூலதனமாகக் கொண்டு கையாள்கின்றனர். மக்கள் மேற்கொள்ளுகின்ற தொழிலானது உழவுத் தொழிலாகவும், பிற தொழிலாகவும் இருக்கலாம். இத்தொழில் மேற்கொள்ளும் போது தனியாகவும், குழுவாகவும் இணைந்து பாடுபடுவதுண்டு. அப்போது அவர்களின் கலை,திறமை வெளிப்படுவதே நாட்டுப்புற வழக்காறுகள் எனக் கூறப்படுகிறது.

வருணப்பாகுபாடு

ஆரியர்கள் வருகைக்கு முன்பு தமிழ் மக்களிடையே வருணப் பாகுபாடு இருக்கவில்லை.

“யாயும் ஞாயும் யாராகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” (குறுந்.40)

என்ற பாடலின் மூலம் தமிழர்களின் கொள்கையை அறிய முடிகிறது.

“வருணம்” என்ற சொல் ‘இனம்’ அல்லது நிறத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாக நம்பப்பட்டு வருகிறது என்று கே.கே.பிள்ளை அவர்கள் கூறுகிறார். வருணமும் சாதியும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து இருப்பவை, வருணக் கொள்கை என்பது சாத்திர நெறிகளின் செல்வாக்கைக் கூறும் கருத்துக்களைக் கொண்டவை என்று ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுவார். தமிழர்களுக்கிடையேயான இனப்பாகுபாடு சங்ககாலம் தொட்டு இருந்து வருகிறது.

“பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய

திணைதொறும் மரீஇய திணை நிலைப் பெயரே” (தொல்.பொருள்:22)

என்னும் நூற்பாவின் மூலம், தொல்காப்பியர் காலத்திலிருந்தே தொழிலானது நிலம் வாரியாக வருணப் பிரிவுகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதும், அந்நில ஒழுக்கத்திற்கும் ஏற்றாற்போல் குலப்பெயர். தொழில் பெயர் என திணையை அடிப்படையாகக் கொண்டு பெயர்கள் மக்களுக்கு அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

ஆரியர் வருகைக்குப் பின்பு நம் நாட்டில் மனுதர்மமும், நால்வகைச் சாதிமுறையும் தோற்றுவிக்கப்பட்டது. இதோடு தீண்டாமைக் கோட்பாடும் ஒரு தீயமரபாகக் கொள்ளப்பட்டது. தீண்டாமையால் உழைப்பாளி மக்கள் மீது பெரும் அடக்குமுறை, ஒடுக்குமுறை கையாளப்பட்டது. இதனைப் புறநானூறு பாடலானது,

“வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

கீழ்ப்பால் ஒருவர் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே” (புறம்.183:8-10)

என்று கூறுகிறது. ஆரியர்களின் வருகையினால் நிகழ்ந்த சமூகப் பண்பாட்டு மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

சமஸ்கிருதமயமாதல்

சமூகத்தில் எங்கு எப்போது வர்க்கப்பிரிவினை தோன்றுகிறதோ அங்கு அப்போது அரசு தோன்றுகிறது என்று ஏங்கல்ஸ் கூறுகிறார். இனக்குழுச் சமூகத்தில் பொருள் பங்கீட்டிலும், சில வழிபாட்டு முறைகளிலும் முன்னிலை முதலுரிமை பெற்றோர் இருந்தனர். இவர்கள் வர்க்கச் சமூகத்திலும் நிலவுடைமை அமைப்பிலும் வல்லமை பெற்று மிகுந்து விளங்கினர். இனக்குழுக்கள் இணைந்து அரசு தோன்றியவுடன் அரசப் பிரிவு, வணிகப்பிரிவு வலிமைபெற்றது. இதனை கருத்தில் கொண்டு அந்தணர்கள் தங்களை நிலைநிறுத்த எண்ணினர்.

திருமண முறைகளில் வைதீகத் தாக்கம்

தமிழ்ச்சமூகத்தில் திருமணமுறை என்பது முக்கியமான நிகழ்ச்சியாகும். திருமணம் தனிமனிதன் என்ற நிலையிலிருந்து சமுதாயமாக உயர்நிலை அடையக்கூடிய ஒரு நிலையாகும். ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வதற்கு உண்டான திருமணச் சடங்கானது மனிதனுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். தமிழர்கள் தங்களுக்கென்று தனித்த அடையாளத்தோடு இருக்கும் போது காலமாற்றத்தில் ஆரியர் வருகையினால் தமிழ்ப்பண்பாடு அழிக்கப்பட்டது. இவ்வாறு அழிவுற்றதில் திருமண நிகழ்வும் ஒன்று.

 

 

தொல்காப்பியர் வடமொழி திருமணத்தை,

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டங் காணுங் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”

(தொல்.பொருள்.களவு.89)

என்று குறிப்பிடுகிறார். மறையோர் என்றால் வேதம் ஓதுபவர் என்று அர்த்தம். வேதத்தை முதலிடமாகக் கொண்ட வைதீகச் சமயத்தினர் தங்களுடைய எட்டுவகையான திருமண நிகழ்வை தமிழ் மக்களிடம் வலுப்பெறச் செய்து, தமிழ்ப் பண்பாட்டினை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்துள்ளனர்.

ஆரியச் சடங்குடன் கூடிய திருமண நிகழ்வினைத் தமிழர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டதை,

“நெய் பெய் தீயின் எதிர்கொண்டு

தான் மணந்தனையம் என விடுகம் தூதே” (குறுந்.106:4-6)

என்ற பாடலின் மூலம் யாகம் வளர்க்கும் நிகழ்வினை எடுத்தியம்புகிறார்.

திருமண நாளில் நடைபெறும் சடங்கு

திருமணம் நல்ல நாளில் நடைபெறும் என்பதை,

“கனை இருள் அகன்ற கவின் பெறு காலை

கோல் கால் நீங்கிய கொடுவெண் திங்கள்”         (அகம்.பா.86)

என்னும் அகநானூற்றுப் பாடலானது, அதிகாலைப் பொழுதில் ரோகிணி இணைகின்ற நாளில் திருமணம் நடைபெற்றது என்று குறிப்பிடுகிறது. இன்றைய காலகட்டத்தில் வேளாண்குடி மரபைச் சார்ந்தவர்கள் சுபமுகூர்த்த நன்னாளில் மட்டுமே திருமணத்தை நடத்தியுள்ளனர்.

 

 

மேலும் தீய கோள்களின் கெட்ட செயல்கள் எல்லாம் நீங்கி, அழகிய திங்களை, குற்றமற்ற உயர்ந்த புகழினையுடைய உரோகிணியோடு கூடிய நல்ல நாளில் வீட்டினை அழகுற அமைத்து, வழிபாடு மேற்கொண்டு, அதிகாலை வேலை திங்களை உரோகினி இணைந்த நல்ல நாளில்,

“திங்கள்…………….

சுகடமண்டிய துகள்நீர் கூட்டத்து” (அகம்.136:4-5)

என்ற பாடலின் மூலம் திருமணம் எளிமையாக, சமயச்சடங்குகள் அல்லாமல், பண்டைத் தமிழர்களின் செயல்களை வெளிக்கொணர்கிறது.

அகநானூற்றில் திருமணம் பற்றிய செய்திகள் இருக்கின்றன. சங்க காலத்தில் மணப்பந்தலின் கீழே மணல் பரப்பி அதில் மண்ணால் செய்யப்பட்ட விளக்கினை ஏற்றி வைப்பர்.

“தமிழகத்தைப் பொருத்தமட்டில் ‘தாலி’ என்பது முக்கியமான ஒன்று. அன்றைய காலகட்டத்தில் திருமணம் நடக்கும் முன்பு கடவுள் வழிபாட்டோடு தொடங்குவது வழக்கமான செயல். தூய்மையான வெண்நிறம் கொண்ட நூலில் வாகை இலை, அருகம்புள் கிழங்கினை கோர்த்து மாலையாக மணமக்கள் தாலியாக அணிந்து கொள்வார்கள். மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டியதாக சங்கத் தமிழ் இலக்கியத்தில் சான்றுகள் ஏதும் இல்லை” என்று கே.கே.பிள்ளை சொல்கிறார். ஆனால் இன்றை காலகட்டத்தில் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு தாலியானது மாற்றம் கண்டுள்ளதை அறிய முடிகிறது.

“தாலிகட்டும் வழக்கம் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு ஏற்படவில்லை என்று ஊகிக்க வேண்டியுள்ளது. இவ்வழக்கத்தைத் தெரிவிக்கும் முதல் கல்வெட்டு கி.பி.958 ஆண்டுக்குரியதாகும்” என்று கே.கே.பிள்ளை தாலி கட்டும் வழக்கத்தைக் கூறுகிறார்.

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல், அன்புடன் இருவரும் இணைந்து இறுதிக் காலம் வரை வாழ வேண்டும் என்று ஊரிலுள்ள சான்றோர் பெருமக்கள் முன்னிலையில் அவர்களின் சாட்சியாக தாலி கட்ட வேண்டும் என்ற நிலை பின்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தொல்காப்பியர்,

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல்.கற்பு.4)

என்று கூறுகிறார். சடங்குமுறையானது காலச் சூழலுக்கு தகுந்தவாறு மாற்றம் அடையக் கூடியது. தமிழ் மக்களிடையே தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு திருமணச் சடங்கு என்ற ஒன்று இல்லை. பின்பு ஆரியர்கள் தமிழகத்தில் நுழைந்த பின்பு மக்களிடத்தில் பொய்யும் வழுவும் என்ற நிலையில் மக்கள் அனைவரும் ஒன்று கூடித் திரளாக இச்சடங்கை ஏற்படுத்திக் கொண்டனர். இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆனந்தமாக மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு இச்சடங்கு முறை அவசியமாகிறது.

முடிவுரை

தமிழர்களின் நாகரிகத்திற்குள் ஆரியம் நுழைந்ததால் தமிழர் பண்பாடு, கலாச்சாரம் போன்றவை மாற்றம் கண்டதோடு மட்டுமல்லாமல், ஆரிய – தமிழ்க் கலாச்சார மரபு எனத் தனித்தனியான அடையாளம் காட்ட முடியாத நிலைக்கு காலச்சூழல் மாற்றம் கண்டுள்ளதை இக்கட்டுரையின் மூலம் காண முடிகிறது.