Skip to content
  • Log In
  • Register
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் இதழ்
Kalanjiyam
  • Home
  • About us
    • About KALANJIYAM
    • Editorial Board
    • Publishing Policy
    • Indexing
    • Submissions
    • Subscription
    • Journal
      • Review Process
      • Author instruction
      • Annual Subscription
      • Article Processing charges
      • Publication Ethics
  • Current Issue
  • Archives
    • List Articles
Menu Close
  • Home
  • About us
    • About KALANJIYAM
    • Editorial Board
    • Publishing Policy
    • Indexing
    • Submissions
    • Subscription
    • Journal
      • Review Process
      • Author instruction
      • Annual Subscription
      • Article Processing charges
      • Publication Ethics
  • Current Issue
  • Archives
    • List Articles
  • Log In
  • Register
Volume 01
Kalanjiyam - International Journal of Tamil Studies

ISSN : 2456-5148

புறநானூறில் வாழ்வியலும் பண்பாடும்

கி.தேன்மொழி

Keywords:

Abstract:

சங்க இலக்கியங்கள் காலக்கண்ணாடியாகவும் பண்பாட்டுப் பெட்டகமாகவும் அமைந்து தமிழர்களின் பெருமைகளைப் பறைசாற்றி நிற்பதை அனைவரும் அறிவர். ஆத்தகைய சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூறில் புறம் தொடர்பான போர் செய்தி, அரசர்களின் வரலாறு, நாட்டுவளம், படை பலம், முதலானவை மட்டுமல்லாது வாழ்வியல் கூறுகளையும் பண்பாடுகளையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. அத்தகைய வாழ்வியலையும், பண்பாட்டையும் பற்றி இக்கட்டுரையின் மூலம் காணலாம்.

ஈகை வலியுறுத்தல்

கடல் சூழ்ந்த உலகத்தைத் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த மன்னர்களானாலும், இரவு பகல் உறங்காமல் விலங்குகளை வேட்டையாடும் கல்லாத வறியோனாக இருந்தாலும் இவர்கள் உண்ணப்படும் தானியம் இரண்டு ஆழாக்கு மட்டும்தான். மேலும் இவர்கள் உடுக்கும் உடையும் மேலாடை மற்றும் கீழாடை என்னும் இரண்டுவித ஆடை மட்டுமேயாகும்.  சேல்வத்தின் பயனே பிறருக்கு ஈதல் பொருட்டேயாகும் மாறாக அச்செல்வத்தை யாருக்கும் கொடுக்காமல் தான் மட்டுமே சுய நலமாக அனுபவித்தல் கூடாது என்பதை

‘…. செல்வத்துப் பயனே ஈதல்:

துய்ப்பேம் எனினே, தப்புந பலவே’ (புறம்.189:7-8)

என்னும் பாடலடிகள் மூலம் ஈகை வலியுறுத்தலை அறியலாம்.

இன்றைய கால கட்டத்தில் பொருளாதார ரீதியாகத் துன்பம் நேரும்பொழுது பிறரிடம் உதவி கேட்டுப்பெறுவோம் அவ்வாறு கேட்டுப்பெறும்;போது உதவி கிடைத்தால் மகிழ்ச்சியடைவர் ஆனால், மாறாக உதவி மறுப்பின் அவர்களை வெறுத்துவிடுவர். சங்க காலத்தில் மக்கள் அவ்வாறில்லாமல் அவர்களை மேலும், நேசித்தனர்.

‘ஈஎன இரத்தல் இழிந்தன்று: அதன் எதிர்,

ஈயேன் என்றால் அதனினும் இழிந்தன்று, அதன்எதிர்

கோள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்

கோள்ளேன் என்றல் அதனினும் உயர்நதன்று’ (புறம்.204:1-4)

‘ஒன்றைத் தா’  என இரத்தல் இழிவானது. அவ்வாறு இரந்து நின்றார்க்கு ஒன்றை ‘ஈயேன்’ என்று  மறுப்பது அதனினும் இழிவானதாகும். கொள்வாயா என விரும்பிக் கொடுத்தல் இனிது. இவ்வாறு கொடுத்தாலும் கொள்ளோம் என்று கூறுவது அதனினும் உயர்ந்தது. என புறநானூறு இரத்தலுக்கான இலக்கணம் கூறுவதை நம்மால் அறியமுடிகிறது.

மேலும், பிறருக்குக் தானம் கொடுப்பதால் புகழ் கிட்டும் என்னும் உண்மையையும், வள்ளல்கள் அழியப் புகழ்பெற்று இன்றும் மக்கள் மனதில் வாழ்வதையும்

‘இரப்போர் வாட்டல் அன்றியும் , புரப்போர்

புகழ்குறை படூஉம் வாயில் அத்தை

அனைத்தாகியர்……’       (புறம்.196: 6-8)

என்னும் பாடலடியிலும்,

பரிசில் நாடி வருபவர்களுக்குப் பரிசில் மறுப்பது தேடிவரும் புகழினையும் அதனால் வரும் இன்பத்தினையும் இழந்தவராவர் என்பதை ,

‘உள்ளி வருநார் நசையிழப் போரே:

…………………………………….

பூண்கடன், எந்தை! நீ இரவலர் புரவே’ (புறம்.203: 8-12)

என்னும் பாடலடியிலும்; காணலாம்.

சான்றோர்களின் வாழ்வியல் நெறி:

‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்னும் வாக்கியம் சமுதாயத்தின் பார்வையிலிருந்து பெறப்பட்டதாகும்.  இவ்வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக நம் சான்றோர்கள் வாழ்ந்து தம் மக்கட்செல்வங்களுக்கும் கற்பித்து, உலகம் தம்மைக் கவனிக்கும் தன்மையையும் அறிவுறுத்தி அவர்களை நல்லவிதமான பாதையில் அழைத்துச் செல்வதற்கும் பெரிதும் விரும்பினர். அவ்வகையில் சுயநலம் தவிர்ததல், பிறருக்கு உதவுதல், பலருக்கும் பயன்படும் வகையில் நற்காரியங்களைச் செய்தல், பழிச் சொல்லுக்கு அஞ்சுதல், புகழை விரும்பச்செய்தல், கோபமின்மை, அயலாரை நேசித்தல் முதலான பண்புகளைத் தாம் மேற்கொண்டு அதன்வழியில் சான்றோர்கள் வாழ்வியலை இளைய சமுதாயத்திற்கு வழியுறுத்தினர் என்பதை

‘உண்டால் அம்ம, இவ்வுலகம்: இந்திரர்:

அமிழ்தம் இயைவதாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே:……….

……………………………………’  (புறம்.182:1-9)

என்னும் பாடலடியில் உணரலாம்.

வேந்தனுக்கு அறிவுரை

புறம் என்பது வீரம், வள்ளல் தன்மை , நாட்டு வலம், படை வலிமை, போர் வெற்றி, மன்னனில் உடல் வன்மை என மன்னனைப் புகழ்ந்து பாடுவது மட்டுமின்றி  மன்னன் தவறு செய்தாலும் அதைச் சுட்டிக் காட்டி, முறையான வாழ்வியல் நெறியை அறிவுறுத்துவதுமாகவும் புறம் சார்ந்த பாடல்கள் அமையும். அவ்வகையில் புறநானுற்றில் மக்களிடம் வரி வாங்க வேண்டிய விதத்தைப் பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையார்

‘காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்’ (புறம்.184: 1-2)

என்னும் பாடலில், நெல்லினை மாவாக்கி யானைக்கு கவளமாக வழங்கினால் அப்பயிர் உணவும் யானைக்குப் பலநாட்கள் உணவாக அமைந்து பயன்படும். அதை விடுத்து வயல்வெளியில் யானையைத் தாமாகவே இறங்கவிட்டு உணவுண்ணச் செய்தால் அதன் வாயில் புகுகின்ற நெற்கதிர்களைவிட காலில் மிதிபட்டு அழியும் நெற்கதிர்களின் சேதாரம் அதிகமாகும் ஆகையால், மக்களின் வளமைக்குத் தகுந்தவாறு வரி விதித்தால் நாடும் நாட்டு மக்களும் மகிழ்ச்சியடைவர் என அறிவுரை கூறுகின்றார்.

மேலும், உலகத்திற்கு உயிராய் அமைவது நெல்லும் நீரும் அன்று மாறாக உயராக இருப்பது  இவ்வுலகத் தன் வேலின் கீழ் ஆட்சி செய்யும் வேந்தனே இவ்வுலகிற்கு உயிர் போன்றவனாவான் என வேந்தனுக்கான முக்கியத்துவத்தை மோசிகீரனார்

‘நெல்லும் உயிர் அன்றே: நீரும் உயிர் அன்றே

மன்னன் உயிர்தே மலர்தலை உலகம்

அதனால், யான்உயிர் என்பது அறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே’ (புறம்.186: 1-4)

என்னும் பாடலில்; கூறுகிறார்.

இவ்வாறான அறிவுரைகளையெல்லாம் சான்றோர்களிடம் கேட்டு மன்னன் நடந்துகொண்டால் அவனுக்கும், அவன் ஆட்சி செய்யும் நாட்டிற்கும் எவ்விதத் .துன்பமும் நேராது என்பதை

‘பகைக்கூழ் அள்ளற்பட்டு ,

மிகப்பல தீநோய் தலைத்தலைத் தருமே’ (புறம்.185: 5-6)

என்னும் பாடல் கூறுகின்றது.

மன்னர்கள் முதல் கடைக்கோடி மக்கள் வரை தம் மறைவிற்குப்பின் தன் வழித்தோன்றல்களாகப் பார்க்கப்படு;ம வாரிசுகளாய் தங்கள் குழந்தைகளைப் பார்க்கின்றனர். மேலும், மக்கட்பேறு வாய்க்கவில்லையெனில் அச்சமுதாயம் பற்பல அவப்பெயர்களைக் கட்டிவிடுவர். இது மேலும், மக்கட்பேறற்றவரை கவலைக்கிடமாக்கிக்கொண்டிருக்கும். மக்கட்பேறு வாய்க்கப்பெற்றால் இவ்வுலகில் இதைவிட மகிழ்ச்சியானது வேறொன்றும் இராது என்பதை

‘மயக்குறு மக்களை இல்லோர்க்குப்

பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே’ (புறம்.188:6-7)

என்னும் பாடலடிகள் மூலம் அறியலாம்.

உழைப்பின் மகத்துவம்

சங்க கால மக்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுதடது வாழ்ந்தனர். உழைக்காமல் பெறுவது அமுதமாகவே இருந்தாலும் அதை விரும்பமாட்டார்கள்.  உழைப்பின் அறத்தை மக்களுக்கு வலியுறுத்தும் விதமாக,

‘கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென

அன்று அவண் உண்ணாதாகி, வழிநாள்,

பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து ,

இருங்களிறு ஒருத்தல் நல்வலம் படுக்கும்

புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து’ (புறம்.190: 6-10)

என்னும் பாடலில் பசியுடன் காணப்படும் புலியானது தனது இடப்பக்கத்தில் இறந்து கிடக்கும் காட்டுப்பன்றியினை உண்ணாது, மலைபோல் காட்சியளிக்கின்ற யானையைத் தன் வலிமையான முயற்சியினால் கொன்று உண்ணத் தொடங்கும். இத்தகையை  உழைப்பின் அறவழியினை வலியுறுத்தும் தன்மை புறநானூறில் சிறப்பாக அமையப்பெற்றுள்ளது.

உளவியலும் உடல் நோயும்

இன்றைய நவீன கால கட்டத்தில் எவை எவையெல்லாம் எளிதாக விரைவாக செய்துவிட முடியுமோ அவற்றையெல்லாம் விலைகொடுத்து வாங்கி தம் விருப்பத்தை எளிதாகவும், விரைவாகவும் நிறைவேற்றிக்கொள்கின்றனர். இப்பழக்கம் காலப் போக்கில் குடும்ப உறவுகளை எளிதாக பிரித்தும் விடுகின்றது. சங்க காலத்தில் உறவுகளைப் பேணினர், அவர்களுடன் நேரத்தைப் பகிர்ந்து கொண்டனர். பற்பல சிக்கள்களுக்குத் தீர்வும் கிடைத்தது. ஆனால்,  இக்கால கட்டத்தில் உறவுகளுக்கு மதிப்பளிப்பது கிடையாது. குடும்பத்துடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்வது கிடையாது. இதனால், தனிமைப் படுத்தப்பட்டு தனக்குள் எழும் மன அழுத்தத்தின் காரணமாக பல்வேறு நோய்களும் ஏற்பட்டு குணப்படுத்தமுடியாமல் மேலும், மனதளவில் பாதிப்படைகின்றனர்.

இன்றைய நவீன மருத்துவ உலகம் மனதிற்கும் உடல் நோய்களுக்கு தொடர்புள்ளதை நிரூபித்துள்ளது. மனதை ஆரோக்கியமாக நேர்மறையான சிந்தனைகளோடு வைத்திருந்தாலே உடலில் பல நோய்கள் விரைவில் குணமடைந்துவிடும். அந்த வகையில் இன்றை இளைஞர்களின் தலையாய பிரச்சனையாக விளங்குவது இளம் வயதிலேயே தலை முடி நரைப்பதுதான். இதற்கு மருத்துவ உலகம் சொல்லும் காரணம் இளைஞர்களுக்கு ஏற்படும் தேவையற்ற மன அழுத்தமேயாகும்.  மனதை எப்போதும் கவலையின்றி மனதை மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் வைத்துக் கொண்டாலே இத்தகைய இளநரையை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

நவீன மருத்துவம் தலைமுடி நரைத்தலைப் பற்றி இருபதாம் நூற்றாண்டில்தான் ஆராய்ச்சி செய்து இவ்வுண்மை கண்டறிந்து வெளியிட்டது. ஆனால், சங்க காலத்திலேயே தமிழர்கள் உளவியல் சார்ந்த நுண்ணறிவுப் புலம் புறநானூற்றிலும் வெளிப்பட்டுள்ளதை

‘யாண்டுபல வாக, நரை ஈகுதல்

யாங்கு ஆகியர்? என வினவுதிர்’  (புறம்.191: 1-2)

என்னும் பிசிராந்தையாரின் பாடலில் காணலாம். இப்பாடலில் என் மனைவி, மக்கள், இளையர், வேந்தன். உயர்ந்த குறிக்கோளினை உடைய சான்றோர்கள் முதலான யாவரும் என் விருப்பத்திற்குமாறாக நடவாதவர்களாவர். இதனால், எனக்குக் கவலையுமில்லை, நரையுமில்லை என்னும் பதில் இடம்பெற்றுள்ளது. இது தலைமுடி நரைப்பதற்கு கவலைதான் அடிப்படைக் காரணமாகுமென்னும் கருத்தினைப் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளது.

கூற்றுவனும் நன்நெறியும்

நாடோடி வாழ்க்கையாக வாழ்ந்து பகுத்தறிவு பெற்று கூட்டமாக மனிதன் இணைந்து வாழும்போது நன்மைக்கும் தீமைக்குமான போராட்டமாக, வாழும்போதே அறம் செய்தால் மேலுலகம் செல்வரென்றும், அறமற்றதைச் செய்தால் கீழுலகம் செல்வர் என்னும் கொள்கை விதியைப் பரப்பி குற்றங்கள் பெருகுவதைக் குறைத்தான். அவ்வகையில் கூற்றுவனையும் படைத்து, மக்களை நல்வழிப்படுத்தவும், பிறருக்குத் துன்பங்கள் நேராத வண்ணம் அறங்காரியங்களைச் செய்யத்தூண்டினான் என்பதை

‘கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை, இரங்குவீர் மாதோ:

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,

அல்லது செய்த்ல்  ஓம்புமின்’  (புறம்.195: 4-7)

என்னும் பாடலடியில் காணலாம்.

வாழ்வியல் அறக்கோட்பாடு

இவ்வுலகத்தில் உள்ள ஊர்கள் அனைத்தும் நமது ஊர். அங்கு வாழ்பவர்கள் அனைவரும் நமது உறவினார் என்று எண்ணவேண்டும் , தமது செயலால் ஏற்படும் நன்மையும் தீமையும், துன்பமும், ஆறுதலும் ஏற்படுகின்றது என்பதை உணர வேண்டும். இறப்பு ஒன்று இவ்வுலகில் நிகழாதது ஒன்றுமில்லை. புதுமையானவொன்றும் கிடையாது. தாம் வாழும் வாழ்க்கையே மகிழ்வானது என்றோ, துன்பங்கள் நேர்ந்தால் கோபப்பட்டு வாழ்வை வெறுத்து ஒதுக்கிவிடவும் கூடாது. வானமானது மின்னலோடு கூடிய மழை வெள்ளத்தை மலையில் பெய்யச் செய்து, அம்மலையிலுள்ள சிறு கற்களை உருட்டிக் கொண்டு பெரிய ஆறாய் பெருக்கெடுத்து ஓடும் நதிபோல், இவ்வுயிரானது முறையாக இவ்வுடலை விட்டுப்பிரியும். பேரியவர்களைச் சிறியவாள் போற்றுதலும் கூடாது, சிறியவர்களை இகழ்ந்து தூற்றவும் கூடாது என்னும் சான்றோர்களின் வாழ்வியல் முறைகளின் அறக்கோட்பாட்டினை,

‘யாதும் ஊரே: யாவரும் கேளிர்:

தீதும் நன்றும் பிறர்தர வாரா:

………………………………..’ ((புறம்.192: 1-13)

என்னும் பாடலில் காணலாம்.

முடிவுரை

புறநானூறு பிறருக்கு உதவி வாழும் பண்பு, நெறி பிறலும் மன்னவற்கு இடித்துரைத்ததல், சான்றோர்களின் வாழ்வியல் அறக்கோட்பாடுகள் , உழைப்பிற்கு முக்கியத்துவம், பழிக்கு அஞ்சுதல், பிற உயிர்களை நேசித்தல் முதலானவற்றை இதுவரை இக்கட்டுரையில் நாம் கண்டோம்.

  • சாமிநாதையர்.உவே.சா (2017), புறநானூறு (மூலமும் உரையும்), சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்,
  • சுப்பிரமணியன். க.ரா. (ப.ஆ.), (2014), தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் மதிப்புகளும் மாற்றங்களும், சேலம், பாப்பாத்தி பதிப்பகம்,

Recent Comments

    • Home
    • About us
      • About KALANJIYAM
      • Editorial Board
      • Publishing Policy
      • Indexing
      • Submissions
      • Subscription
      • Journal
        • Review Process
        • Author instruction
        • Annual Subscription
        • Article Processing charges
        • Publication Ethics
    • Current Issue
    • Archives
      • List Articles
    Copyright 2020 - களஞ்சியம் பன்னாட்டு தமிழ் இதழ் - Kalanjiyam Tamil Journal - Department of Tamil, NGM College, Pollachi, Tamilnadu, INDIA 642001