தொல்காப்பியர் காலத்தற்கு முன்பு இலக்கிய வகைகளை அகம், புறம் எனப் பிரித்தனர். அகவொழுக்கம் என்பது வீட்டு வாழ்க்கையைக் குறித்தும் புறவொழுக்கம் என்பது நாட்டு வாழ்க்கையைக் குறித்தும் அமையப்பெறுகின்றது. புறம் என்ற சொல்லுக்கு வெளியிடம்> அன்னியம்> புறத்திணை> வீரம்> பக்கம்> முதுகு> பின்புறம்> இடம்> இறையிலி நிலம் போன்ற பல பொருள்கள் உள்ளன. வாழ்க்கையை வளம்பெறச் செய்வதற்கும்> குறிக்கோள்களை அடைவதற்கும், எடுத்த நோக்கங்களை வெற்றி பெறச் செய்வதற்கும் புறநானூற்றுப் பாடல்கள் துணைசெய்கின்றன. மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகள் நிறைந்து
காணப்படுகின்றன. அதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஈகை அறம்
இந்த உலகமானது நிலை பெற்று இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் பலருக்கும் கொடுத்து வாழும் ஈகைக்குணமானது இன்றும் நிலைத்து இருப்பதே ஆகும். பிறர் பழிக்கு அஞ்சி> புகழ் தருகின்ற செயல்களை மட்டுமே செய்வர். அதற்காக உயிரையும் கொடுப்பர். பழி என்றால் உலகத்தையேப் பெறுவதாக இருந்தாலும் அதனைச் செய்வது இல்லை. அவர்கள் தமக்காக வாழாமல் பிறருக்காக வாழக் கூடியவர்கள். அத்தகைய மனிதர்கள் இருப்பதால் தான் இந்த உலகமே இருக்கின்றது எனக் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்னும் புலவர் குறிப்பிடுகின்றார்.
“புகழ்எனின், உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்> உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்>
அன்னமாட்சி அனையர் ஆகித்
தமக்குஎன முயலா நோன்தாள்>
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”
(பா.எ.182)
குமணனிடம் பரிசில் பெறும் பெருஞ்சித்திரனார்> அப்பரிசிலைத் தான்மட்டும் வைத்துக்கொள்ள நினையாது> தம் மனைவியிடம்>
“இன்னோர்க்கு என்னாது> என்னொடும் சூழாது>
வல்லாங்கு வாழ்தும் என்னாது – நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி – மனைகிழ வோயே!
பழம்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே”
(பா.எண்.163)
இன்னவர்க்கு என்று கருதாமல் என்னைக் கேட்டு கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் இப்பொருளை வைத்து நெடுங்காலம் வாழ்வோம் என்றும் கருதாமல் எல்லோருக்கும் கொடுப்பாயாக எனக் கூறுவதில் இருந்து அவரின் உயர்ந்த உள்ளமானது வெளிப்படுகிறது.
“இவரே புலன்உழுது உண்மார் புன்கண் அஞ்சி
தமதுபகுத்து உண்ணும் தண்நிழல் வாழ்நர்”
(பா.எ.46)
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அறிவால் உழவுசெய்து கொடை பெற்று வாழும் புலவர்களின் வறுமைத் துயர்க்கு அஞ்சித் தம் பொருளைப் பகுத்து வழங்கி உண்ணும் இரக்க வாழ்வின் வழி வந்தவர் எனக் கோவூர்கிழார் என்னும் புலவர் குறிப்பிடுகின்றார்.
போர் அறம்
அரசன் போர் செய்யத் தொடங்கும் முன் அந்நாட்டில் வாழும் பசு, பெண்கள், நோயுற்றேள். அந்தணர் ஆகிய அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் என்றும் தான் விடக்கூடிய அம்புகள் அவர்கள் மீது பட்டு இறந்து விட வேண்டாம் என்றும் அறிவிப்பு செய்கின்றான். இதன்மூலம் உயிரைக் காத்தல் அரசனின் கடமையாகக் கருதுகின்றனர் என்பதனைக் காட்டுகின்றது இதனையே>
“ஆவும்> ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும்> பிணியுடை யீரும்> பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர் பெறாஅ தீரும்”
(பா.எ.9)
என்பதன் மூலம் அரசர்கள் அறவழியைக் கூறும் கொள்கையையும்> அதற்கேற்ற வீரத்தையும் உடையவராகத் திகழ்ந்து அறநெறிப் படி வாழ்ந்துள்ளனர் என்பதனை புலவர் நெட்டிமையார் உணர்த்தியுள்ளார்.
“இன்னா ஆகப் பிறர்மண் கொண்டு
இனிய செய்தி> நின் ஆர்வலர் முகத்தே”
(பா.எ.12)
என, பகைவர் நிலத்தை அவர்களுக்குத் துன்பம் உண்டாகுமாறு கவர்ந்து கொண்டு வந்து உன்னை விரும்பும் பரிசிலர்க்கு வழங்கி நல்லதையே செய்கின்றாய் என நெட்டிமையார் புகழ்ந்து பாடியுள்ளார்.
மனித நேய அறம்
நம் தமிழர்கள் மனித இனம் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் மனம் படைத்தவர்களாகத் திகழ்ந்தனர். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினைச் சேர்ந்தோரும் ஒருவருக்கொருவர் உறவுடையவராக இருக்கின்றனர் என்று வயதில் பெரியவர் சிறியவர் என்ற வேற்றுமையினைக் களைந்து அனைவரும் மனிதனாக மதிக்கப்படும் மனித நேய சிந்தனை கணியன்
பூங்குன்றனார் பாடலில் வெளிப்படுகிறது.
“யாதும் ஊரே; யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா’
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே”;
“பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
(பா.எ.192)
இதன் மூலம் தமிழர்களின் உயரிய நற்பண்புகள் உணர்த்தப்படுகிறது. நன்றி மறவா திறம்
பண்டைய தமிழர்கள் நன்றியுணர்வோடு வாழ்ந்து வந்தனர். எத்தகைய பழிச்செயல் செய்பவர்களுக்கும் அதிலிருந்து மீண்டுவரும் வழிஉண்டு. ஆனால் ஒருவர் செய்த நன்றியை மறந்தவருக்கு அதில் இருந்து தப்பிக்கும் வழி கிடையாது என்பதை>
“ஆன்முலை அறுத்த அறன்இ லோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்>
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள் என
நிலம்புடை பெயர்வது ஆயினும்> ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம்பா டின்றே ஆயிழை கணவ!”
(பா.எ.34)
பசுவின் பால்கறக்கும் மடியை அறுத்த அறம் இல்லாதவர்க்கும்> அணிகலம் அணிந்த மகளிரின் கருவைச் சிதைத்தவர்க்கும்> பெற்றோர்க்குக் கொடுமை செய்தவர்க்கும் அவர் பாவத்தைப் போக்க வழிகள் உண்டு. ஆனால் நிலம் நிலை மாறுவதாயினும்> ஒருவன் செய்த நன்மையை, உதவியை அழித்தவர்க்குக் கடைத்தேறுவதற்கு வழியில்லை என அறநூல் கூறுகின்றது என ஆலந்தூர் கிழார் குறிப்பிடுகிறார்.
இதனையே வள்ளுவரும்
“எந்நன்றிக் கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றிக் கொன்ற மகற்கு”
(குறள் 110)
என வலியுறுத்தியுள்ளார்.
விருந்தோம்பல் பண்பு
தமிழர் பண்பாட்டில் சிறந்ததாகக் கருதப்படுவது விருந்தோம்பும்
பண்பாகும். இப்பண்பினைத் தமிழ் மக்கள் தம் கடமையாகக் கொண்டு
வாழ்ந்தனர்.
“கால் இயற் புரவி ஆலும் ஆங்கண்
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும்> தன்னொடு சூளுற்று
’உண்ம்’ என இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்”
(பா.எ.178)
குதிரைகள் ஆரவாரிக்கும் இடத்தில் மணல் நிரம்பிய முற்றத்திற்குச் சென்று பெரியோர் உண்டமையால்> உண்ண மாட்டேன் என்று கூறினாலும்> வற்புறுத்தி உண்ணுக என்று வேண்டுகின்ற புகழ்வாய்ந்தவனாகச் சாத்தன் விளங்கினான் என ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் பாண்டியன் கீரஞ்சாத்தனின் பண்பினைப் புலப்படுத்தியுள்ளார்.
“நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனள்; இன்றிக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு
ஈவதிலாளன் என்னாது> நீயும்”
(பா.எ.316)
வீரனொருவன் முதல் நாள் வாளைப் பணையம் வைத்து விருந்தளித்த விதத்தினையும்> மறுநாள் வந்த விருந்தினரை உபசரிப்பதற்கு யாழைப் பணயம் வைத்த விதத்தினையும் மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் என்னும் புலவரின் பாடலில் ஒருவனின் விருந்தோம்பல் அறம் போற்றப்படுகிறது.
மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் அறநெறிகளைப் பின்பற்றி வாழ அறிந்து வைத்திருந்தான். அதன்மூலம் நேரிய வழியில் செல்வத்தை ஈட்டுவதையே தனது குறிக்கோளாகக் கொண்டான். இல்லை என வருபவர்களுக்கு முகமலர்ச்சியுடன் வழங்கக்கூடிய உயரிய குணத்தைப் பெற்றிருந்தான். தன்னால் நன்மை செய்ய இயலாவிட்டாலும் தீமை செய்யாத குணம் உடையவனாகவும் நன்றி மறக்காத பண்பை உடையவனாக விளங்கி வாழ்வில் பல வெற்றிகளையும்> சிறப்பினையும் பெற்று இன்புற்று வாழ்ந்த நிலையினைப் புறநானூற்றுப் பாடல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.