உடன்போக்கிற்குப்பின் நற்றாயின் உணர்வு

நற்றாய்

சங்க இலக்கியம் நற்றாய், செவிலித்தாய் எனும் இருவகை முறைமைகளை முன்வைக்கின்றது. தலைவியினை ஈன்றெடுத்தவள் நற்றாய். வளர்த்தெடுத்தவள் செவிலித்தாய் ஆவாள். தலைவியின் களவு வாழ்வு கற்பு வாழ்வாக மாறுவதிலும், அவளின் கற்பு வாழ்வின் சிறப்பினை எடுத்துரைக்கும் நிலைகளிலும் செவிலித்தாயின் பங்கினை  மிகச் சிறப்பாக சங்கஇலக்கியம் பேசிச் செல்கின்றது.  தலைவி உடன்போக்கு சென்ற நிலையில் பெற்றெடுத்த நற்றாயின் மனம் அடையும் உணர்வு நிலையினை ஐங்குறுநூறு படம் பிடித்துக் காட்டுகிறது.

தலைவியை குழந்தையாக எண்ணல்

பெற்றவர்களுக்கு எப்பொழுதும் தன் மகள் சிறுபிள்ளைதான் என்ற எண்ணம் இருக்கும். இது அன்பு மிகுதியால் ஏற்படும் உணர்வு எனலாம்.

“முடி அகம் புகாஅக் கூந்தலள்

கடுவனும் அறியாக் காடு இறந்தோளே” (ஐங்.374: 3-4)

தனக்கு ஏற்ற ஆண்மகனைத் தேர்ந்தெடுத்து அவனோடு வாழத் துணிந்து உடன்போக்கினை மேற்கொண்ட நிலையிலும் தாய் தன்மகள் கூந்தல் நீட்சிபெறாத இளையவள் எனக் கருதி வருந்துதலை இவ்வடிகள் உணர்த்தி நிற்கின்றன.

புலம்புதல்

ஒருவர் நம்மைவிட்டுப் பிரிந்தாரெனில் அவர் பயன்படுத்திய பொருட்களைக் காணும்பொழுது அவரது நினைவு எழுதல் இயல்பு. பொருட்கள் நினைவுகளை மனக்கண் கொண்டுவந்து சேர்ப்பன. நற்றாயிடமும் இவ்வுணர்வு எழுகின்றது.

“இது என் பாவைக்கு இனிய நன் பாவை

இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி

இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று

அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல்

காண்தொறும் காண்தொறும் கலங்க

நீங்கினளோ- என் பூங்கணோளே”       (ஐங்.375)

என்று தலைவி பயன்படுத்திய பொருட்களைப் பார்த்து நற்றாய் புலம்பி அழுகின்றாள்.

தலைவனோடு செல்லத் தலைவி துணிந்த பொழுது தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தின்மீது பழிச்சொல் படருமேயென்று நினைத்தாலோ இல்லையோவென புலம்பித் துயருகிறாள்.

“என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை

அழுங்கல் மூதூர் அலர் எழ

செழும் பல் குன்றம் இறந்த என் மகளே”       (ஐங்.372)

என்று எண்ணிக் கலங்குகின்றாள்.

தலைவனது நற்றாயினைப் பழித்தல்

தன் மகள் உடன்போக்கினை மேற்கொண்ட சூழலில் பெருந்துன்பம் உற்ற தாய், தான் தனது மகளை நினைத்து நாள்தோறும் கலங்குவது போன்று தலைவனைப் பெற்றவளும் பெரும் துன்பத்தை அடைய வேண்டுமெனப் பழிக்கின்றாள்.

“நினைத்தொறும் கலிழும் இடம்பை எய்துக

…. வெஞ்சுரம் என்மகள் உய்த்த

அம்பு அமை வல் வில் விடலை தாயே”        (ஐங்.373)

பழிக்கும் பொழுதும் தன் மகளைக் காக்கும் விதமாக வில் ஏந்திய விடலையின் தாயென்றே கருதும் நிலையினைக் காணமுடிகின்றது.

மழை பொழிய வேண்டல்

கற்பு வாழ்வினை நிகழ்த்த தலைவி உடன்போக்கு சென்றதை ‘அறநெறி’ என்கின்றாள் தாய். தன் மகள் சென்ற வழி பாலை நிலமாகும். அங்கு படுமழைப் பொழிந்து வெம்மைத் தணிய வேண்டுமென வேண்டுகின்றாள்.

“மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்

உயர் நெடுங் குன்றம் படுமழை தலைஇச்

சுரம் நன் இனிய ஆகுகதில்ல

அறநெறி இது எனத் தெளிந்த என்

பிறை நுதற் குறுமகள் போகிய சுரனே”          (ஐங்.371)

படுமழை என்று குறிப்பிடப்பெறுவது பருவம் இல்லாக் காலங்களில் பெய்யும் மழையாகும். தான் துயர் கொண்ட நிலையிலும் தள் மகள் துயர் கொள்ளக் கூடாது என்றெண்ணும் தாய்மை உணர்வும் இங்கு வெளிப்படுகின்றது.

விதியினைப் பழித்தல்

மாந்தர்க்கு தனக்கு வரும் நன்றும் தீதும் விதியால் வருவென என்ற நம்பிக்கை உண்டு. தன் மகள் தன்னைப் பிரிந்து சென்றதற்கு பாலது ஆணையாகிய விதியே காரணமென்று கருதுகின்றாள். தமக்குத் தாங்க முடியாத துயர் உற்ற நிலையில் மனம் நொந்து கடவுளையும் விதியையும் நொந்து கொள்ளுவது உலகியல் உணர்வாகும். இந்நிலையில்

“நாள்தொறும் கலிழும் என்னினும் இடை நின்ற

காடு படு தீயின் கனலியர் மாதோ

நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்க

பூப்புரை உண்கண் மடவரற்

போக்கிய புணர்த்த அறன் இல் பாலே”           (ஐங்.375)

நற்றாய் அறம் இல்லாத விதியானது காட்டிலே எழும் தீயில் அகப்பட்டு வெந்தொழிவதாக என்று பழிப்பதைக் காணமுடிகின்றது.

தோழிக்காக வருந்துதல்

உடன்போகிய தலைவிக்குத் துணையாக தலைவன் உள்ளான். அவளோடு உண்டு உறங்கிய தோழிக்கோ தலைவியின்றி வேறு துணையில்லையென்று எண்ணி தோழியின் துயரினை எண்ணி வருந்தினாள்.

“செல்லிய முயலிப் பாஅய சிறகர்

வாவல் உகக்கும் மாலை யாம் புலம்பப்

போகிய அவட்கோ நோவேன் தேமொழித்

துணை இவள் கலிழும் நெஞசின்

இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுவே”                (ஐங். 378)

நற்றாய் தோழிக்காக வருந்தும் நிலையினை இவ்வடிகள் மொழிகின்றன.

நிறைவுரை

தலைவி உடன்போக்கினை  மேற்கொண்ட நிலையில் நற்றாயிடம் தலைவியை சிறுபிள்ளையென்று கருதிக் கலங்குதல்

தலைவி பயன்படுத்திய பொருட்களைக் கண்டு புலம்புதல்

மழை பெய்ய வேண்டுதல்

தோழியினை எண்ணி வருந்துதல்

தலைவனது தாயினைப் பழித்தலென்று எல்லாவற்றிற்கும் மேலானதாக

விதியினைப் பழித்தல்

போன்ற உணர்வுகள் வெளிப்படுகின்றன. இவ்வுணர்வுகள் இன்றும் உலகியல் நியதியோடு ஒப்புமை பெற்றும் காணப்பெறுகின்றன. உடன்போக்கு நற்றாயினால் ‘அறம்’ என்று கருதப்பெற்றது இன்றைய நிலையில் மாறுபட்டு கருதப்பெறுகின்றது. கால மாற்றமே இதற்கு காரணமாக அமைகின்றது.