நாட்டுப்புறப் பாடல்கள்
ஆங்கிலத்தில் குழடமடழசந என்ற வார்த்தையை வில்லியம் ஜான் தாமசு என்ற ஆங்கிலேயர் முதன் முதலில் 1846-ல் உருவாக்கினார். இதற்கு முன்னர் பொதுமக்களைச் சார்ந்த மரபு முறைகள் (Pழிரடயச யுவெஙைரவைநைள) என்ற சொல் வழக்கில் இருந்து வந்தது.
“தமிழ்நாட்டில் நாட்டுப்புறப் பாடலுக்கான கூறுகள் தொல்காப்பியர் காலந்தொட்டே காணப்படினும் இப்பாடல்களைத் தொகுத்தல், பகுத்தல், அச்சிடல், அறிதல், ஆய்தல் என்ற முறையானது பிற்பட்ட காலத்தே தோன்றியது. முறையான வளர்ச்சி இன்னும் ஏற்படவில்லை. முதலில் நாட்டுப்புறப் பாடல்களை அச்சிட்ட பெருமை அறிஞர் மு.அருணாசலம் அவர்களைச் சாரும்.
கொங்கு மண்டல பெயரும் புகழும்
வரலாற்றுக்காலம் தோன்றுவதற்கு முன்பே ‘கொங்கு நாடு’ இப்பெயர் பெற்றிருப்பது கண்கூடான ஒன்றாகும். கொங்கர்கள் வாழ்ந்த நாடாதலால் ‘கொங்கர் நாடு’ பிறகு நாளடைவில் மருவி ‘கொங்கு நாடு’ என வழங்கி வருகிறது.
‘கொங்கு’ என்னும் சொல்லுக்கு தேன், மலை, உலோகத்தாது, பூந்தாது, மேறு, பள்ளம், சீதலம், காடு என்பதாகப் பல பொருள்கள் உண்டு. கொங்கு என்பது சேரநாட்டின் பெயர்களுள் ஒன்று. குடகு என்பதைப் போலவே கொங்கு என்பதும் மேடு பள்ளமான, வளைந்த நிலத்தைக் குறிக்கும். இந்த நில அமைப்பின் காரணமாகவே கொங்கு நாட்டிற்கு ‘கொங்கு’ என்ற பெயர் ஏற்பட்டது என்னும் முறையான கருத்து ஒன்றை பல ஆராய்ச்சியாளர் வலியுறுத்தியுள்ளனர்.
சங்க இலக்கியத்தில் கொங்கு
கொங்கர் பற்றி சங்க நூல்கள் தரும் விளக்கத்துக்கும், கொங்கு நாட்டைச் சேர்ந்த பெருந்தமிழ்ப் புலவர் கச்சியப்ப முனிவர் யாத்துள்ள பேரூர் புராணம் தந்துள்ள விளக்கத்திற்கும் சிறிது மாறுபட்டுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
“……..கொந்கெனென விள்ளுங்
கோதை நனியாண்ட தொரு கொங்கு வளநாடு”
என்று கூறும் அவர் பாடல் கொங்கன் என்ற சேரன் ஆண்ட கொங்கு என்பது தான் மாறுபாடானது.
பதிற்றுப்பத்து ஆகெழுகொங்கர் நாடகப்படுத்த வேல் கெழுதானை வெருவரு தோன்றல் என்றும், “நா ஏறி நறவின் கொங்கர்கோ என்றும், ‘கொங்கு புரம் பெற்ற கொற்றவேந்தே’ என்று சோழனைப் புறநானூறும,; ‘கொங்கர் ஒட்டி நாடு பல தந்த பசும்பூண் பாண்டியன்’ என்று அகநானூறும் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது மட்டுமின்றி, கொங்கர் வேறு, சேரர் வேறு என்பதையும் இவை வலியுறுத்துகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே சங்க இலக்கியங்களில் கொங்கு ஒரு உன்னத நாடாக விளங்கியமை பற்றிய சிற்சில ஆதாரங்களைக் காண இயலுகிறது.
தமிழ்கூறும் உலகின் வயதென்னவோ அதுவே கொங்கு நாட்டுடையதும் என்று உறுதிபடக் கூறலாம். எப்படி? அந்நாட்டின் பல பகுதிகளில் முதுமக்கள் தாழிகள் மிகமிகப் பண்டைய கால மட்பாண்டங்கள்; கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனைமலைக் காடர்கள், மலைப்பகுதி வேடர்கள், குறும்பர்கள், இருளர்கள் ஆகியோரெல்லாம் மிகமிகப் பழைய குடியினர் ஆவர். இவர்கள் யாவரும் தமிழகத்தின் இதர பகுதிகளில் வாழ்ந்த சங்க காலத்திற்கு முந்திய ஆதி தமிழ்க் குடியினர் காலத்தவரே.
கொங்கு நாட்டின் எல்லைகள்
கொங்கு நாட்டின் எல்லைகள், அளவு, இயற்கைநிலை ஆகியன பற்றி நமக்குக் கூறும் பழந்தமிழ்ப் பாடல்கள் சில உண்டு. அவற்றில் முக்கியமாகக் குறிப்பிடப்படும் மூன்று பழந்தமிழ் வெண்பாப் பாடல்கள் உள்ளன.
“வடக்குத் தலை மலையாம் வைகாவூர் தெற்கு
குடக்கு வெள்ளிப் பொருப்புக் குன்று – கிழக்கு
கழித்தண்டலை சூழும் காவிரி சூழ்நாடா
கழித் தண்டலையனவம் கொங்கு”
“வடக்குப் பெரும் பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்பு வெள்ளிக் குன்று – கிடக்கும்
கழித்தண்டலை மேவு காவிரிசூழ் நாட்டுக்
குளித்தண்டலை யளவு கொங்கு”
“வடக்கு பெரும்பாலை வையாறு தெற்கு
குடக்குப் பொருப்பு வெள்ளிக்குன்று – கிடக்கும்
கழித்தண்டலையளவு காவிரி சூழ்நாடா
குளித்தண்டலையளவு கொங்கு”
இம்மூன்று பாடல்களும் கொங்கின் தொன்மையைப் பற்றிக் குறிப்பிடுவதுடன் பண்டைக் கொங்கு நாட்டெல்லைகளையும் உறுதிபடக் கூறுகின்றன. கொங்கின் மேற்கெல்லை வெள்ளிமலை என்பதை மூன்று பாடல்களுமே கூறுகின்றன. எனினும் வடக்கெல்லை தலைமலை என்று ஒரு பாடலும், பெரும்பாலை என்று மற்றொன்றும் கூறுகின்றன. கிழக்கெல்லை குளித்தலை என்றும் தெற்கெல்லை பழனி என்றும் மூன்றுமே உறுதிப்படுத்துகின்றன.
கொங்குநாடுதான் தற்போதைய கோவை, சேலம், தென்பகுதி திருச்சியில் கரூர், குளித்தலை, மதுரையில் பழநி ஆகிய பகுதிகளைக் கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு நாம் இதன் விவரங்களை மேலும் சிறிதளவு தெளிவுபடுத்தி குறிப்பிட விரும்புகிறோம். அதாவது கோவை, நீலகிரி, சேலம், தர்மபரி மாவட்டங்களும், திருச்சி மாவட்டத்தின் கரூர், குளித்தலை, மதுரை மாவட்டத்தின் பழநி, திண்டுக்கல் ஆகிய இன்றைய ஊர்கள் யாவும் அன்றைய கொங்கு நாட்டுப் பகுதிகளாகும்.
கருவூர் வரலாறு
திருச்சி மாவட்டத்திலுள்ள சிறப்புமிக்க நகரங்களில் கருவூரும் ஒன்று. திருச்சிக்கு சுமார் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இவ்வூர் கைத்தறி நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்று விளங்குகிறது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தனித்தன்மை வாய்ந்த வரலாற்றினைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.
“தமிழக வரலாற்றில் கருவூர் இன்றியமையாத இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. இது ‘வஞ்சி’ என்றும் அழைக்கப் பெற்றிருந்தது”. ஆன்பொருதை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கருவூரே சங்ககாலச் சேரமன்னர்களின் தலைநகர் என்று ஒரு கருத்தும் உண்டு. இக்கருத்திற்கு பல சான்றுகள் பல உள்ளன. சங்ககாலத் தொடக்கத்திலிருந்தே கருவூர் – வஞ்சி ஒரு பெருநகராகத் திகழ்ந்தது. இலக்கியங்கள், கல்லெட்டுகள், காசுகள், அகழாய்வு ஆகிய அனைத்துச் சான்றுகளும் கருவூரின் தொன்மையை எடுத்தியம்புகின்றன.
சேரமான் அந்துவஞ்சேரலிரும் பொறை என்ற அரசன் கருவூரை அரசாண்டான். ஒரு சமயம் அவன் ஏணிச்சேரி முட மோசியார் என்ற புலவருடன் வேண்மாடத்தில் அமர்ந்திருந்தான். அப்போது முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி என்ற சோழமன்னன் தன் யானை மீதமர்ந்து கருவூர் நோக்கி வருவதைக் கண்டான். சோழனுடைய யானை மதம்பிடித்து வழி தவறிக் கருவூர் வந்தது. அதைத் தவறாகக் கருதி சேரமன்னன் சோழனைக் கொன்றுவிடப் போகிறான் என்று எண்ணி உடன் இருந்த புலவரான முடமோசியார் உண்மையை எடுத்துரைத்ததாகப் புறப்பாட்டு ஒன்று கூறுகிறது. இதிலிருந்து கருவூர் சோழநாட்டின் எல்லைக்கு அருகாமையில் இருந்ததாகச் சிலர் கருதுகிறார்கள்.
கருவூர், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனால் முற்றுகையிடப்பட்டது. ஆலத்தூர்கிழார் இதைச் சிறக்கப்பாடியுள்ளார். இம்முற்றுகையின் போது சேரன் தன் அரண்மமையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சோழர்படை கருவூர்க் காவற்காடுகளை அழித்தது. அவவாறு வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள் ஆன்பொருநையாற்றின் மணலைச் சிதைத்தன. சோழன் வஞ்சி மாநகரை வாட்டுவதை நேரில் கண்ட ஆலத்தூர்க் கிழார் புறம் 36-ல்,
“சிலம்பின் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய்
கழங்கில் தெற்றியாடும் தண்ணான் பொருநை
வெண் மணல்; சிதைய”
என்று பாடுகிறார்.
சேரன் செங்குட்டுவனின் தலைநகர் வஞ்சியே என்பதற்குப் பல இலக்கியச் சான்றுகள் கூறலாம். செங்குட்டுவன் ஆண்ட வஞ்சி ஆன்பொருநைக் கரையில் இருந்தது எனச் சிலம்பு தெரிவிக்கிறது.
“வாழியாரோ வாழிவரு புனல்
நீர் ஆன்பொருநை
சூழ் தரும் வஞ்சியார் கோமான்
தன் தொல்குலமே”
– சிலம்பு – வாழ்த்து -4
காவிரியாற்றோடு ஆன்பொருநையும் குடவனாறும் கலக்கும் கடல் போன்றவன் செங்குட்டுவன் என்று பரணர் பதிற்றுப்பத்தில் பாடுகின்றார். கடல் என்பது கருவூரின் அருகே உள்ளது. இங்கு ஆன்பொருநையாறு காவிரியாற்றில் கலக்கிறது. தற்பொழுது இவ்வாறு அமராவதி என அழைக்கப்படுகிறது.
கருவூர் ஆன்பொருநைக் கரையில் இருந்தது என்றும், அது சேரரர்களின் தலைநகராயிருந்தது என்றும் அகநானூற்றுப் பாடல் ஒன்று,
“கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
திருமாவியல் நகர் கருவூர் முன்துறை”
என்று கூறுவதிலிருந்து அறியலாம்.
பாலை பாடிய பெருங்கடுங்கோ கருவூரில் இருந்து ஆட்சி செய்தான் எனவும், ஆன்பொருநை ஆற்றங்கரையில் இருந்த வஞ்சி நகரைத் தலைநகராகக் கொண்டவன் எனவும் புறப்பாட்டு 11-ல்,
“தண் பொருநைப் புனல் பாயும்
விண்டிபாரு புகழ் விறல் வஞ்சி”
எனக் கூறப்படுகிறது. இதனால் கருவூர் ஆன்பொருநை எனப்படும். அமராவதி ஆற்றின் கரையில் இருந்தது என்பது புலனாகிறது.
கும்மிப் பாடல்கள்
வட்டமாகச் சுற்றிவந்து தம் இரு கைகளையும் கொட்டி ஆடிப் பாடுவதை கும்மியடித்தல் என்பர். பலர் இணைந்து ஆடிப் பாடுவது. மகிழ்ச்சியினை ஆடியும் பாடியும் பலரோடு கொண்டாடுவது மனித இயல்பு. இதனை “கொம்மி, கொப்பி” எனவும் வழங்குவர். இக்கலை மகிழ்ச்சியின் வெளிப்பாடாகக் காணப்படுவதால் கும்மாளமடித்தல் என்ற வழக்குச் சொல்லிலிருந்திருக்கலாம். கும்முதல் என்பதற்குக் கைகொட்டுதல் என்று பொருள். கும்மாளம் போடுதல் என்பது குதித்தாடுதல் என்ற பொருளில் மக்களிடம் வழங்கப்பட்டு வருகின்றது.
கும்மிப் பாடல்கள் வேளாண்மைச் செய்திகளையும், இறைப்புகழ்ச்சி செய்திகளையும் பாடுபொருளாகக் கொண்டிருக்கும். பொங்கல் போன்ற விழாக்களில் பாடப்படும். கும்மிப்பாடல்களில் வேளாண்மைச் செய்திகளாகவும், நல்ல விளைச்சலைத் தந்தத் தெய்வங்களுக்கு நன்றி காட்டும் பாடல்களாகவும் இடம்பெற்றிருக்கும். பூப்புச் சடங்கு, திருமண விழாக்களில் இடம்பெறும் பாடல்களில் வாழ்வியல் செய்திகளாகவும் இடம்பெற்றிருக்கும்.
பெண் தெய்வ வழிபாட்டில் கும்மி ஒரு முக்கிய பங்கு பெறுகிறது. மாரியம்மன், பகவதி, காளியம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்களின் விழாக்களில் பத்து நாட்கள் தொடர்ந்து பாடப்படுவதுண்டு.
பாடலமைப்பு, ஆடல்முறை ஆகியவற்றுள்ள வேறுபாடுகளைக் கொண்டு “இயற்கும்மி, ஒயிற்கும்மி என்றிரு வகைகளாகக் கொண்டாலும,; ஏலேலக்கும்மி, சந்தக்கும்மி, கீர்த்தனைக்கும்மி, கோலாட்டக்கும்மி, ஓரடிக்கும்மி என்றெல்லாம் வகைப்படுத்திக் பார்க்கலாம். கும்மியடிப்பதிலும் விரல்தட்டு, உள்ளங்கைத் தட்டு, அஞ்சலித்தட்டு, இருகைத்தட்டு என்றெல்லாம் பலவிதம் உண்டு. பெரும்பாலான கும்மி;பாடல்களைப் பெண்களே பாடியாடியதை கும்மியடிக்கவே வாருங்கடி, சேருங்கடி, கும்மியடி பெண்ணே என்ற அடிகள் காட்டுகின்றன.
கும்மிப்பாடல்களை முதலில் குழுவின் தலைவி பாடுவாள். மற்றவர்கள் அவளைப் பின்பற்றி பாடுவர். அனைவரும் சேர்ந்து பாடுவதும் உண்டு. சிலசமயம் எதிர்ப்பாட்டுப் பாடுவர். வட்டமாக நின்று கொண்டு குத்துவிளக்கு, தெய்வச்சிலை, மலர்க்கூடை, பலகாரக்கூடை போன்றவற்றில் ஒன்றை நடுவில் வைத்து அதனைச் சுற்றி வந்தவாறு கைகொட்டி ஆடிப்பாடுவர்.
இறைவனை வேண்டிக் கும்மியடித்தல்
மழை வேண்டியும் திருவிழாக் காலங்களிலும் இறைவனின் பெருமைகளை சொல்லும் விதமாக கும்மிப் பாடல் பாடப்படுகிறது.
“கும்மியடி பெண்ணே கும்மியடி
உங்கள் குடும்பம் விளங்க கும்மியடி
நம்மை ஆளும் களவரதராஜனை நாடி கும்மியடி
பரம்பாடி கும்மியடி
கள்ளக்குறிச்சி நங்கூரராமரை அதை நாடி கும்மியடி
……………………………………………………..
பாவம் தொலையுமடி
நாணிநி சொல்லுவது நாவிது போதாது நங்கையரை
நாழ் கும்மி கொட்டுங்கடி”
என்று பெருமாள் திருவிழாவின் போது பாடப்படும் இறைவனின் பெருமையை சொல்லியும், அவரை நாடி அருள் பெறுக என்று பெண்கள் கும்மிப்பாடல் பாடுகின்றனர். பாவங்கள் தீர நல்லவர்களையும், வல்லவர்களையும் போற்றி மங்கையர்கள் கும்மியடிக்கின்றனர்.
கும்மிப் பாட்டில் காதல்
பெண்கள் கும்மியடிப்பதில் ஒரு பெண் இன்னொரு பெண்ணை கேலி செய்து, அவளின் காதல் உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், அவள் கணவன் மீது கொண்ட பாசத்தை, அன்பை பாடலாகப் பாடி கும்மியடித்து ஆடுகின்றனர். இந்தப்பாடலானது அத்தை முறைவரும் பெண்கள், கேலிக்கார பெண்கள் (மாமன், மச்சினன்) மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.
“அடி அன்னே நன்னா நானே நன்னா
நானே நன்னா நானானே
அடி ஐந்து கையி மோதிரமாம்
அறியா புத்தி ஓசையினாம்
……………………………………
இளைய கொழுந்தநாரே
அடி அன்னே நன்னா நானே நன்னா
நானேன்னா நானானே”
என்று இப்பாடலின் மூலம் ஒருத்தி தனக்கேற்பட்டதை சொல்வதுபோல அமைந்துள்ளமையைக் காணமுடிகிறது. பெண்கள் தன் மனதில் உள்ள அன்பை வெளிப்படுத்தும் போது தன் நினைவில் உள்ளதை அப்படியே பாடிவிடுவாள். கொங்கு மண்டலத்தை சார்ந்து உள்ள கிராமங்களில் ஆணின் சொல்லை மீறி எதும் பேசக் கூடாது. அப்படி பேசும் போது ஏற்படும் சண்டையின் போது தன் மனதில் கணவன் மீது உள்ள அன்பை உணரும் போது சொல்ல முடிவதில்லை. வயல் வேலைக்கு போகும் போது அங்கு பெண்களுடன் சேர்ந்து கும்மியடித்து தன் மனதில் உள்ள அன்பை வெளியில் பாடிவிடுவாள்.
“பாக்குமரத்தடியிலே கண்ணிகள் பந்து விளையாடயிலே
பம்பிபம்பி வந்து கோயிலின் பந்தை களைக்குறாண்டி
தேக்கு மரத்தடியிலே கண்ணிகள் தௌ;ள விளையாடயிலே
தேங்கி தேங்கி வந்து கோயிலின் தொலை களைக்குறாண்டி
………………………………………………………………
பால்கிணறு வெட்டி வெட்டி
எங்கள் அண்ணன் பல்துலக்க போகயிலே
பால் கிணற்றுக் குள்ளாகவோ கண்ணம்மா படியை மறித்தாயோ”
என்று இப்பாடல் இறைவனை சிறு குழந்தையாகக் கொண்டு திருவிழாக் காலங்களில் கும்மியடித்துப் பாடுவதாக அமைந்துள்ளது.
“அடி அன்னே நன்னே நானேன்னனே
தானானே தானேனன்னே
அடியார் கொடுத்த ஏழேடி
சாயச்சீலை எட்ரா பட்டு
……………………………….
……………………………….
அடிசாமக் கருத்து எடுத்துச் சொல்லு
அடி சம்பராயம் போடுதடி ஏழேழ”
என்று தனது மாமன் மகள் மதிக்காமல் இருப்பதையும் அவள் உடுக்கும் உடை, நடக்கும் முறை பற்றியும் பாடி நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்று கணவர் பாடுவதாக மேற்கண்ட பாடல் அமைந்துள்ளது.
“அடி அன்னே நன்னே நானேனன்னே
தானானே தானேனன்னே””
தந்தினத் தானானே நானெனன்னா நந்தினத்தானானே
நானேன்னே நன்னானே நானேனே நன்னேன நானேனே”
மேற்கண்ட வரிகளே கும்மிப் பாடல்களில் தொடக்கமாக அமைந்து இருக்கின்றன.
முடிவுரை
கொங்கு மண்டல மக்களின் வாழ்வியல்நிலை மிகவும் போற்றத்தக்கது. மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்துவதும், நாட்டுப்பற வழக்காறுகளை அதிகமாகப் பின்பற்றுவதிலும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நாட்டுப்புறப் பாடல்கள் பாடி தன் மனக்கருத்தை வெளிக்கொணருகின்றனர்.
கரூர் மாவட்டம் அமராவதி, காவிரி என்ற இரு நீருற்றுப் பாசனம் மூலம் வேளாண்மை செய்கின்றனர் என்பதை சங்கப்பாடல் வழி அறிய முடிகிறது. வயலில் வேலை செய்யும் போது வேலைக் களைப்பு தெரியாமல் இருக்க பாடல் பாடிக் கொண்டு வேலை செய்து வந்தனர். அதன் பின்னர் திருவிழாக் காலங்களில் அவ்வாறான பாடல்களுக்கு கும்மியடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இன்றளவிலும் வைகாசி மாதம் நடைபெறும் கரூர் மகா மாரியம்மன் திருவிழாவில் கம்பம் ஆற்றில் விட எடுத்துச் செல்லும் போது ஒயிலாட்டம், பறையாட்டம், கும்மி என நாட்டுப்புற ஆடலுக்கும்பின் திருவிழா முடிவு பெறும். இன்றும் அங்குள்ள கிராமத்து மாரியம்மன், பகவதியம்மன், செல்லாண்டியம்மன், சோழியம்மன் என்ற அம்மன் கோவில் திருவிழாக்களில் தெருக்கூத்து நிகழ்வு, கும்மிப்பாடல் போன்றவை மிக அதிகமாக நடைபெறுகின்றன.
இன்றைய நவீன காலத்தில் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டு வருகின்றன. அதனை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டாக திருவிழாக் காலங்களில் நடைபெறும் நாட்டுப்புறக்கலைகள் இன்றைய தலைமுறையினருக்கு அழியாமல் நினைவூட்டிக் கொண்டு இருக்கின்றன. இதில் கொங்கு மண்டலங்களில் இன்றும் இக்கலைகள் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சொல்லப்படுகிறது என்பதில் ஐயமில்லை.