எழுத்து என்ற சொல்லிற்கு 1. எழுதப்படுதலின் எழுத்து என்றும் 2. எழுப்பப்படுதலின் எழுத்து என்றும் இருவகைப் பொருள்களைத் தொல்காப்பியம் உணர்த்துவதாக யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது
1 . முதலாவது வரி வடிவத்தையும், இரண்டாவது ஒலி வடிவத்தையும் குறிக்கும். தமிழ் மொழிக்கென்று உருவாக்கப்பட்ட எழுத்து முறைகளைத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியம், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் முதலியன தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
எழுத்து என்ற சொல்லிற்கு வரைதல், செதுக்குதல், பொறித்தல் முதலிய பொருள்களையும் பழைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. `கடவுள் எழுத ஓர் கல்தாரான் எனின்` 2 (சிலம்பு 25.130) என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். எழுத்து – ஓவியம், சிற்பம் என்ற பொருள்களிலும் உரைக்கப்பட்டுள்ளது. எழுத்துநிலை மண்டபம் (19.53), எழுது எழில் அம்பலம் (18.28) என்று பரிபாடல் 3 உரைப்பது நோக்கத்தக்கது.
2 பாலை நிலங்களில் நாட்டப்பெற்றிருந்த நடுகல்லில் வீரனின் பெயரும் புகழும்
தமிழில் பொறிக்கப்பட்டிருந்தன. இந்தத் தமிழ் எழுத்துகளைக் கூரிய உளியைக்
கொண்டு பொறித்துள்ளனர். இவற்றைக் குயில் எழுத்து – குயின்ற எழுத்து
(செதுக்கப்பெற்ற, பொறிக்கப் பெற்ற எழுத்து) என்று அகநானூற்று புலவர் மதுரை
மருதனிளநாகனார் 4 இரு பாடல்களில் குறித்துள்ளார்.
இருங்கவின் இல்லாப் பெரும்புன் நாடிக் கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகல் பெயர்பயம் படரத் தோன்றுகுயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன் ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்
அகம் 297, 5-10 5
இப்பாடலின்வழிக் குயில் எழுத்துகள் சிதைவுற்றதைப் பாடலாசிரியர்
எடுத்துரைக்கிறார்.
மரம்கோள் உமண்மகன் பேரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல் ..
கூர்உளி குயின்ற கோடுமாய் எழுத்(து)அவ்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்
அகம் 343, 4-8 6
இப்பாடலின்வழிக் கூருளியால் வெட்டப்பட்ட கோடு மாய்ந்த எழுத்துகள் புழங்கியதை
உணரமுடிகிறது. வளைந்த கோடுகளையே மிகுதியாகக் கொண்டவை வட்டெழுத்துகள் என்பர் தி.நா.சுப்பிரமணியன். எனவே இப்பாடலின்வழிக் கோடுமாய் எழுத்து என்று சுட்டப்படுவதால் தமிழகத்தின் சங்ககாலத்தில் வட்டெழுத்து வழங்கி
வந்தது உணரப்படுகிறது.
3 1.3 தொல்காப்பியத்தில் எழுத்து முறை
எழுத்து எனப்படுப
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப தொல் – எழுத்து 7
என்று தொல்காப்பியம் தெரிவிப்பதன் வழி தொல்காப்பியர் காலத்தில் எழுத்துகள்
மிகவும் வளர்ச்சி பெற்ற நிலையிலும், வரையறுக்கப்பட்ட நிலையிலும் இருந்ததாலேயே இவ்வாறு இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது.
பதினெட்டு மெய்யும் அகரத்துடன் கூடி உயிர்மெய்யாக உருவம் கொள்ளும்பொழுது புள்ளியில்லாத தம் உருவத்துடன் ஒலிக்கப்படுவன. அவை ஏனைய பதினொரு உயிர்களுடன்கூடித் தம் உருவில் திரிபு பெற்று ஒலிக்கப்பெறுவன. திரிபு பெறுதலாவது, மேலும் கீழும் விலங்கு பெற்றும், கோடு பெற்றும், புள்ளி பெற்றும், புள்ளியும் கோடும் உடன் பெற்றும் உயிர்த்தலாம் என்று முன்னைய உரைவழி நின்று நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். எழுத்துகள் வரிவடிவத்தில் பெற்று வந்துள்ள மாற்றங்களையும் தொல்காப்பியம் (17) சுட்டி நச்சினார்க்கினியர்விவரித்துள்ளார். எனவே தொல்காப்பியர் காலம் (கி.மு 500) முதலாகவே தமிழ் மொழிக்கென்று எழுத்துமுறை வரையறுக்கப்பட்டிருந்ததும், அம்முறை காலந்தோறும் திரிபு பெற்று வந்துள்ளதை உணரமுடிகிறது.
1.4 யாப்பருங்கல விருத்தி, திவாகரத்தில் எழுத்துகள்
கி.பி பதினோராம் நூற்றாண்டில் தோன்றிய யாப்பருங்கலம் எனும் செய்யுள் இலக்கணம் தமிழ் எழுத்து வகைகள் அக்காலத்தில் விளங்கிவந்த வகைமை குறித்துத் தெளிவாக எடுத்துணர்த்துகிறது.
உருவே உணர்வே ஒலியே தன்மையென இருவகை யெழுத்தும் ஈரிரண்டாகும் 8 என்பதன் மூலம் எழுத்தானது உருவம், உணர்வு, ஒலி, தன்மை என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்ததை அறியமுடிகிறது.
4 காணப் பட்ட உருவம் எல்லாம்
மாணக் காட்டும் வகைமை நாடி
வழுவில் ஓவியன் கைவினை போல
எழுதப்படுவது உருவெழுத் தாகும் 9
என்றதன்வழி உருவ எழுத்து எனப்படும் ஓவிய எழுத்துகள் அல்லது படவெழுத்துகள்
(Pictorial Writing) எழுதப்பட்ட வகை புலப்படுகிறது.
கொண்டவோர் குறியாற் கொண்ட வதனை
உண்டென்று உணர்வது உணர்வெழுத் தாகும் 10
என்ற பாடலின்வழி மக்களிடையே உணரப்பட்ட குறியெழுத்தினை உணர்வெழுத்து
என்று குறிப்பிட்டனர்.
இசைப்படு புள்ளின் எழாஅல் போலச்
செவிப்புல னாவது ஒலியெழுத் தாகும் 11
என்ற நூற்பாவின்வழி பறவையின் ஒலியைப் போலச் செவியிற் சென்றடைந்து
பொருள்தரும் ஓசையினை ஒலியெழுத்து என்று உணர்த்தினார்.
முதற்கா ரணமும் துணைக்கா ரணமும்
துணைக்கா ரணத்தொடு தொடரிய வுணர்வும்
அவற்றொடு புணர்ந்த வகத்தெழு வளியின்
மிடற்றுப் பிறந்திசைப்பது தன்மை யெழுத்து 12
என்ற பாடலின்வழி உள்ளிருந்து வெளிப்படும் காற்று, மிடறு உள்ளிட்ட
பேச்சுறுப்புகளில் தொடர்புற்று ஒலிக்கப்படுவது தன்மை எழுத்து எனப்படும் என்பதை
அறியமுடிகிறது.
இதன்மூலம் நூற்பாக்கள் யாவும் யாப்பருங்கலத்திற்கு மிகவும்
முற்பட்டவையாக உரைமரபில் நெடுங்காலம் வழங்கி வந்தவை என்றுணரமுடிகிறது.
தொன்றுதொட்டுத் தமிழகத்தில் வழங்கி வந்துள்ள எழுத்து வகைகள் பற்றிய ஒரு
பழைய மரபினை இந்நூற்பாக்கள் சுட்டுவன ஆகும்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் உருவான தமிழ் நிகண்டான திவாகரம், 5
பெயர்எழுத்து முடிவெழுத்து வடிவெழுத்துத் தன்மை
எழுத்தென வெழுத்தின் பெயர் இயல்பி னாரே 13
என்று குறிப்பிடுவதின்மூலம் பெயர், முடிவு, வடிவு, தன்மை என்ற நால்வகை
எழுத்துகள் புழங்கியதை அறியமுடிகிறது.
சுவாமிநாத தேசிகராயெழுதப்பெற்ற இலக்கண நூலிற்குக் கூறப் பெற்றுள்ள
உரையின் பாயிரத்தில் ஒன்று வடிவு பெயர் தன்மையுண் முடிவு நான்கா
நடைபெறு நாவலர் நாடிய வெழுத்தே 14
என்று உரைப்பதன்வழி வடிவு, பெயர், தன்மை, (உண்)முடிவு என நால்வகை
எழுத்துகள் வழங்கின என்பதைச் சுட்டுகிறது.
மேலும் ஒவ்வொரு வகை எழுத்தையும் விளக்கும் வண்ணம் கீழ்வரும்
நூற்பாக்கள் அமைந்துள்ளன.
கட்புல னில்லாக் கடவுளைக் காட்டும் சட்டகம் போலச் செவிப்புல வொலியை
உட்கொளற் கிடும்உரு பாம்வடி வெழுத்தே
வடிவுமுதன் மும்மையின் வழங்கும் எழுத்திற்
படுபல பகுதிக் கிடுபெயர் பெயரே
தான முயற்சி தரக்கொளச் செவிபுலன்
ஆயவொலி தன்மை யெழுத்தா கும்மே
உருவமுடன் மும்மையோ டொன்றிய வியல்பை
மருவவுளன் துணிவ துண்முடி வெழுத்தே 15
இங்கனம் நால்வகை எழுத்துகளும் இவ்வுரைப் பாயிரத்தின் வழி
விளக்கப்பெற்றுள்ளன. மேலும் மற்றொரு நிகண்டான பிங்கலந்தை வடிவு, பெயர், 6
தன்மை, முடிவு என நான்கெழுத்து என்று மேற்கூறப்பட்ட எழுத்தின் நான்கு கட்ட
வளர்ச்சியைத்தான் தெரிவிக்கின்றது.
எழுத்தில் ஏற்பட்ட நான்கு கட்ட வளர்ச்சியைத் தெரிவிக்கும் நூற்பாக்களையடுத்து யாப்பருங்கவிருத்தியில் “(மகடூஉ, ஆ, பிடி, குமரி, கன்னி, பிணவு, மூடுவன் என்றின்ன சிலவெழுத்தும்) அ, க, ச, ட, த, ப, ய முதலிய ஆயவெழுத்தும், அ, ச, ல வ, ர, ங, ய முதலிய இராசியெழுத்தும், கார்த்திகை முதலிய நாளெழுத்தும், தோப முதலிய நால்வகை எழுத்தும், சாதி முதலிய தன்மையெழுத்தும், உச்சாடன முதலிய உக்கிரவெழுத்தும், சித்திரகாருடன் முதலிய முத்திறவெழுத்தும், பாகியல் முதலிய நால்வகையெழுத்தும், புத்தேள் முதலிய நாற்கதியெழுத்தும், தாது முதலிய வொளியெழுத்தும், மாகமடையம் முதலிய சங்கேதவெழுத்தும், பார்ப்பான் வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் என்று இத்தொடக்கத்தனவும் கட்டுரையெழுத்தும், வச்சிர முதலிய வடிவெழுத்தும் மற்றும் பலவகையாற் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார்வாய்க் கேட்க” என உரைத்து பதினைந்து வகையான எழுத்துகள் குறிக்கப்பட்டுள்ளன எனினும் இவைகளுக்கு இன்னமும் முழுமையான விளக்கம் யாராலும் தரப்படவில்லை. தி.நா.சுப்பிரமணியன் 16 இவை குறித்து எழுதுகையில் தமிழ் எழுத்துக்களுக்கும் இவைகளுக்கும் உள்ள ஒற்றுமை குறித்து விவரித்துள்ளார்.
முடிவுரை
தமிழ் எழுத்துருக்கள் பற்றிய செய்திகள் மிகவும் தெளிவாக சங்க காலத்தில்
எடுத்துரைக்கப்பட்டது மட்டுமின்றி சரியான வகையில் பயன்பாட்டிலும் இருந்தது
இதன் மூலம் நன்கு தெரியவருகிறது. கணினி காலத்திற்கும் ஏற்ற வகையில் தமிழ்
எழுத்துருக்கள் அமைந்திருப்பதற்குக் காரணம் தமிழ் எழுத்துருக்கள் பற்றிய சங்கத்
தமிழ் காலத்தின் சரியான பார்வை மற்றும் தெளிவான இலக்கண, இலக்கியக்
கூறுகளேயாகும் எனப்து இதன் மூலம் நன்கு புலனாகிறது.
REFERENCES:
- https://ta.wikisource.org/wiki/ Page: தொல்காப்பியக்_கட்டுரைகள்.pdf/174
- சிலப்பதிகாரம் 25.130
- பரிபாடல் 19.53, 18.28
- அகநானூறு 297, 343
- மேலது 297
- மேலது 343
- தொல்காப்பியம் எழுத்ததிகாரம் 1
- யாப்பருங்கலம் பக்577
- மேலது பக்577
- திவாகரம்
- இலக்கணக்கொத்து
- https://ta.wikisource.org/wiki/ Page: தொல்காப்பியக்_கட்டுரைகள்.pdf/175
- பண்டைத் தமிழ் எழுத்துகள் பக். 95
- “கணினியில் தமிழ் எழுத்துருக்களும், குறியீட்டு முறைகளும்” வெ.இராமன் (2016) மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடு.
- அகநானூறு, சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும், தொகுதி 10 & 11, (2012), வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
- தமிழ் இலக்கிய வரலாறு (1959), முனைவர். சி. பாலசுப்பிரமணியம், நறுமலர் பதிப்பகம், சென்னை.
- தமிழ் இலக்கிய வரலாறு (1972) – மு.வரதராசன், சாகித்திய அக்காதெமி – புது தில்லி.