தொல்காப்பியரின் மெய்ப்பாடுகள்
நமக்கு கிடைத்த முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.இதன் ஆசிரியர் தொல்காப்பியர்.ஒழிபியல் தொல்காப்பிய மெய்ப்பாடுகள் என வகுத்துள்ளார்.அவை,
“பண்ணை தோன்றிய எண் – நான்கு பொருளும்
கண்ணிய புறனே நால் நான்கு என்ப “
(தொ:1195)
“நால் – இரண்டு ஆகும் பாலுமார் உண்டே”
(தொ:1196)
மெய்ப்பாடுகளை தொல்காப்பியர் எட்டு வகையாக கூறியுள்ளார் அவை,
“நகை,அழுகை,இளிவரல்,மருட்கை
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு என்ப “
(தொ:1197)
என தொல்காப்பியர் மெய்ப்பாடுகளை எட்டு வகையாக கூறியுள்ளார்.எண்வகை மெய்ப்பாடுகள் 32 இடங்களில் தோன்ற கூடியதாக தொல்காப்பியர் கூறியுள்ளார். மெய்ப்பாடுகள் அனைத்தும் உள்ளத்து உணர்ச்சிகளை உடல் வழியாக வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
நகை
மனித உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு நடக்கும்போது அவர்களுடைய உடல் மொழி நகை என்னும் மெய்ப்பாடு தோன்ற கூடிய இடமாக இருக்கும்.
“எள்ளல்,இளமை, பேதமை, மடன் என்று
உள்ளப்பட்ட நகை நான்கு” என்ப
(தொ:1198)
நகை என்னும் மெய்ப்பாடு தோன்ற கூடிய இடங்களாக எள்ளல், இளமை, பேதமை, மடன் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். வளையாபதி காப்பியத்தில் நகை என்னும் மெய்ப்பாடு தோன்றும் இடங்கள்,
“இளமையும் நிலையாவால்;இன்பமும் நின்ற அல்ல;
வளமையும் அஃதேபோல் பைகளும் துன்வெள்ளம்
உறவென நினையாதே செல்கதிக்கு என்றும் என்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்து கொண்மீன்“
(வளை:41)
வளையாபதி நிலையாமை கோட்பாட்டினை பேசினாலும் இளமையில் தோன்றக்கூடிய மகிழ்ச்சி நிலையானது இளமையும் நிலையானது கோட்பாட்டினை வலியுறுத்துகிறது.இளமையில் நகை என்னும் மெய்ப்பாடு தோன்றுகிறது என அறியமுடிகிறது.
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி “
(திரு:226)
இளமையும் செல்வமும் நிலையானது என்று உணர்த்து நல்லறங்களை செய்து வாழ்வதே சிறப்பாகும் என திருவள்ளுவர் கூறுகிறார்.இளமையில் நகை என்னும் மெய்ப்பாடு தோன்றுகிறது என இதன் மூலம் அறியப்படுகிறது.
“நகைநனி தீது துணி நன்றி யார்க்கும்
பகைநனி தீது பணிந்தீ யாரோடும்“
(வளை.68:1-2)
நகையெனும் மெய்ப்பாடு தீங்கினை விளைவிக்க கூடியதாக இருக்கிறது என வளையாபதி உணர்த்துகிறது.
அழுகை
அழுகை என்னும் மெய்ப்பாடு மனதில் துன்பம் நிகழும்போது நம்முடைய உடல் மொழி அழுகையின் வாயிலாக வெளிப்படுகிறது. தொல்காப்பியர் அழுகை மெய்ப்பாடு தோன்ற கூடிய நான்கு இடங்களை குறிப்பிடுகிறார்.அவை,
“இளிவே,இழவே,அசைவே,வறுமை என
விளிவு இல் கொள்கை,அழுகை நான்கே “
(தொ.1199)
“பொய்யன் மின்;புறம் கூறன்மின்
வையன் மின்;வடி வல்லன சொல்லி நீர் “
(வளை.16:1-2)
பொய்,புறங்கூறுதல்,மற்றவர்களை இழிவாக பேசுதல் போன்றவற்றால் துன்பம் நிகழும் அதன் காரணமாக அழுகை என்னும் மெய்ப்பாடு தோன்றும்.
“பெண்ணின் ஆகிய பெயர் அஞர் பூமியுள்
எண்ணம் மிக்கவர் எண்ணினும் எண்ணிலார்
பின்னி நின்ற பெருவினை மேல்வரும்
என்னது ஆயினும் எதில்பெண் நீக்குமின்“
(வளை.15:1-4)
துன்பங்கள் நிறைந்த நரகத்தில் வாழக் கூடிய தகுதி உடையவர்கள் பிறர் மனைவியை விரும்பக் கூடியவர்களாகும்.பிறருடைய பொருளை விரும்பும் காரணத்தினால் துன்பம் மட்டுமே நிகழும் அந்த துன்பத்தின் காரணமாக அழுகை என்னும் மெய்ப்பாடு தோன்றும்.
இளிவரல்
இளிவரல் என்னும் மெய்ப்பாடு தோன்ற கூடிய இடமாக தொல்காப்பியர் கூறுபவை பின்வருமாறு,
“மூப்பே,பிணியே, வருத்தம், மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே“
(தொ:1200)
இளிவரல் என்னும் மெய்ப்பாடு வயது மூப்பு, நோய், வருத்தம்,மென்மை என நான்கு இடங்களில் தோன்றுகிறது என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
“தனிப்பெயல் தண்துளி தாமரையின் மேல்
வளிபபெறு மாத்திரை நின்றது ஒருவன்
அளிப்பவன் காணும் சிறுவரை யல்லால்
துளக்கிலர் நில்லார் துணைவரை கையர்“
(வளை:11:1-4)
மழை பொழிகின்ற போது தாமரை இலையின் மீது தங்கியிருக்கக் கூடிய குளிர்ச்சியான மழைத்துளிகள் சிறிது நேரத்தில் காற்று வீசுகின்ற போது அந்த இடத்தை விட்டு விலகி சென்று விடுகின்றது.அதுபோல வளையல்கள் அணிந்த பெண் ஒருவன் உடன் கூடி வாழ்ந்து மற்றொருவரை தேடி செல்வது இழிவான ஒரு நிலையினை தரும்.அப்பெண்ணின் செயலின் காரணமாக சமுதாயத்தில் இளிவரல் நிலைக்கு அவள் தள்ளப்படுவாள்.
மருட்கை
“புதுமை,பெருமை,சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே“
(தொ:1201)
மருட்கை மெய்ப்பாடு என்பது வியப்பாகும்.இந்த மருட்கை என்னும் மெய்ப்பாடு புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்ற நான்கு இடங்களில் தோன்றுகிறது என தொல்காப்பியர் கூறுகிறார்.
“தாரம் நல்வதம் தாங்கி தலைநின் மின்
ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை
வீர வென்றி விறல்மிகு விண்ணவர்
சீரின் ஏத்திச் சிறப்புஎதிர் கொள்பவே“
(வளை:14:1-4)
ஒருவன் தன் மனைவியை அன்பாக காப்பவனாகவும்,நல்ல ஒழுக்கங்களையும்,நோன்புகளை மேற்கொள்பவர்களும்,இப்படிப்பட்ட ஒருவரை அவர்கள் பெருமை கொள்ள மாட்டார்கள் அவர்களே பெருமை கொள்வார்கள்.வீரமும் வெற்றியும் உடையவர்களை வானில் உள்ள தேவர்கள் பெருமை கொண்டவர்களாக கூறி அவர்களை எதிரில் நின்று போற்றுவார்கள்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்“
(திரு:50)
இல்லற வாழ்வில் நெறிகளைக் கடைப்பிடித்து வாழ கூடியவர்களை ஊரும் மட்டுமின்றி வானில் உள்ளவர்கள் போற்றுவார்கள் என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
அச்சம்
அச்சம் என்னும் மெய்ப்பாடுதோன்றக்கூடிய இடங்களாக தொல்காப்பியர் குறிப்பிடுவது,
“அணங்கே,விலங்கு,கள்வர்,தம் இறை,எனப்
பிணங்கல்சாலா அச்சம் நான்கே“
(தொ:1202)
“கள்ளன் மின்;கள வாயின யாவையும்
கொல்லன் மின்கொலை கூடி வருமறம்
எள்ளன் மின்;இலர் என்றெண்ணி யாரையும்
நள்ளன் மீன்;பிறர் பெண்ணோடு நண்ணன்மின்“
(வளை.17:1-4)
எந்தப் பொருளையும் திருடக் கூடாது.அப்படி திருடுவதின் மூலம் அச்சம் ஏற்படும். கள்வரை பார்த்தால் பிறருக்கு அச்சம் உண்டாகும். ஆகவே தொல்காப்பியர் குறிப்பிட்ட மெய்ப்பாடு பொருந்தும்.
பெருமிதம்
பெருமிதம் என்பது நாம் செய்யும் செயலின் மூலமாக கிடைக்கும் ஒன்றாகும்.தொல்காப்பியர் பெருமிதம் தோன்றக்கூடிய இடங்களாக,
“கல்வி,தறுகண்,புகழ்மை,கொடை,எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே“
(தொ:1203)
பெருமிதம் கல்வி, தறுகண், புகழ்மை, கொடை என நான்கு இடங்களில் தோன்றும் என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
“உண்டியுள் காப்புண்டு:உறுபொருள் காப்புண்டு;
கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு;”
(வளை.9:1-2)
கற்ற கல்வியால் எப்போதும் நமக்கு நன்மைதான் கிடைக்கும். நம்மிடம் உள்ள பொருளை திருடி செல்லக்கூடிய நிலை இருக்கும்.ஆனால் கற்ற கல்வியை எப்போதும் யாரும் திருடிச் செல்ல முடியாது எனது கற்ற கல்வியால் பெருமிதம் எப்போதும் ஏற்படும்.பெருமிதம் என்னும் மெய்ப்பாடு கல்வி என்னும் இடத்தில் தோன்றுகிறது.
வெகுளி
வெகுளி என்னும் மெய்ப்பாடுதோன்றக் கூடிய இடங்கள்,
“உறுப்பறை,குடிகோள்,அலை,கொலை என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே“
(தொ:1204)
வெகுளி மெய்ப்பாடு பற்றிய செய்தி வளையாபதி காப்பியத்தில்,
“வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுதல் தொல்வினை நீங்குக என்று யான்“
(வளை.1:3-4)
மனதில் உள்ள அவா,வெகுளி, பொறாமை என்ற அழுக்குகளை நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
குடிகோள் பற்றி வளையாபதி குறிப்பிடுவது,
“உயர்குடி நனிஉள் தோன்றல்
ஊனமில் யாக்கை ஆதல்“
(வளை.6:1-2)
நற்பண்பு கொண்டு விளங்கக்கூடிய மக்கள் அனைவரும் உயர்குடியில் பிறந்த மக்களாவர் என வளையாபதி காப்பியம் குறிக்கோள் பற்றிய குறிப்பிடுகிறது.
உவகை
உவகை என்பது மனதில் தோன்றும் மகிழ்ச்சியாகும்.உவகை என்னும் மெய்ப்பாடு தோன்ற கூடிய இடங்கள்,
“செல்வம், புலனே, புணர்வு, விளையாட்டு என்று
அல்லல் நீத்த உவகை நான்கே“
(தொ:1205)
உவகை என்னும் மெய்ப்பாடு செல்வத்தின் வழி தோன்றியது என வளையாபதி காப்பியத்தில்,
“மனிதரின் அரிய தாகும்
தோன்றுதல்;தோன்றி னாலும்
இனியவை நுகர எய்தும்
செல்வமும் அன்ன தேயாம்.”
(வளை.5:5-8)
செல்வம் கிடைத்தால் மகிழ்ச்சி மட்டும் அடையாமல் கிடைத்த செல்வத்தை வைத்து அரைச் செயல்களையும் செய்ய வேண்டும் என வளையாபதி காப்பியம் வலியுறுத்துகிறது.
REFERENCES:
- திருக்குறள் – சாரதா பதிப்பகம், பதிப்பு ஆண்டு : 2002, ஜி-4 சாந்தி அடுக்கம், 3,ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை -14.
- தொல்காப்பியம் தெளிவுரை – மணிவாசகர் பதிப்பகம் பத்தாம் பதிப்பு : அக்டோபர்,2009 31,சிங்கர் தெரு பாரி முனை சென்னை – 600108
- வளையாபதி, குண்டலகேசி மூலமும் உரையும் – சாரதா பதிப்பகம், ஆறாம் பதிப்பு – 2018, ஜி-4 சாந்தி அடுக்கம், 3,ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை -14